உழவு, நெசவு ஆகிய
தொழில்கள், கலை, இலக்கியம் எல்லாம் மனிதன் சிந்திக்க ஆரம்பித்த உடன் தான் வந்திருக்கும்.
ஆனால் பொறியியலும், மருத்துவமும் மனித இனம் உருவான உடனேயே உருவான ஒன்று. பிரசவம், மருத்துவம்
என்றால், மழை, மின்னல், வெள்ளத்துக்கு பயந்து மனிதன் குகைகளில் ஒதுங்கியது பொறியியல்.
குறிப்பாக சிவில் எஞ்சினியரிங்.
அனுபவ பாடமாக விளங்கிய
இந்த படிப்பு, பரம்பரை பரம்பரையாக பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. கிரேக்க கட்டடக் கலை,
காந்தாரக் கட்டட கலை, மொகலாய கட்டட கலை என ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர்கள் பல நூற்றாண்டுகளாக
இருந்து வந்திருக்கின்றன. கல்விச் சாலை ரீதியிலான படிப்பு என்றால் கிறிஸ்து பிறப்பதற்கு
முன்னரே நாலந்தா பல்கலைகழகத்தில் ஆர்க்கிடெக்சர் படிப்பு இருந்திருக்கிறது.
தஞ்சை பெரிய கோயில்,
கல்லணை என பல அற்புத கட்டமைப்புகள் தமிழ்நாட்டில் இருந்தாலும், இப்படிப்பு கலாசாலையாக
அமைத்து நுட்பங்கள் சொல்லிக்கொடுக்கப்படாமல் அனுபவ மற்றும் பரம்பரை பாடமாகவே இருந்து
வந்தது.
ஆங்கிலேயர்களின்
வருகைக்குப் பின் அவர்கள் ஆட்சி புரிய ஏதுவாக இங்கே பல கட்டமைப்புகள் ஏற்படுத்தப் பட்டன.
அதில் ஒன்றுதான் நில அளவை துறை. அதற்கு ஆட்களை பயிற்றுவிப்பதற்காக “ஸ்கூல் ஆஃப் சர்வேயிங்”
1794ல் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1859ல் இது சென்னை பல்கழைகழகத்துடன்
இணைக்கப்பட்டது. இதுவே “கிண்டி எஞ்சினியரிங் காலேஜ்” என்று இன்றளவும் தமிழ்நாட்டில்
தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
1919ல் தொடங்கப்பட்டு
தற்போது ஐ ஐ டி வாரணாசி என தற்போது அழைக்கப்படும் “பனாரஸ் இந்து யுனிவர்சிடி” அதற்குப்பின்,
முன்னால் பாரத பிரதமர் நேரு அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் உருவான ஐ ஐ டி க்கள்,
என் ஐ டிக்கள், டாடா, பிர்லா ஆகியோர் தன்முனைப்பில்
உருவாக்கிய ஐ ஐ எஸ் சி, பிட்ஸ் பிலானி,என எந்த உயர் கல்லூரி நிறுவனங்களை எடுத்துக்
கொண்டாலும் அதில் சிவில் துறை பிரதான பங்கு வகிக்கும்.
தமிழகத்தை மட்டும்
எடுத்துக் கொண்டால்,
1929ல் தொடங்கப்பட்டு,
தற்போது தமிழக அரசு தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டுள்ள அண்ணாமலை பல்கழைகழகத்திலும் சிவில்
இஞ்சினியரிங் படிப்பு பிரதானமாக இருந்து வந்திருக்கிறது. அதன்பின் 1950-60 களில் தொழில்
அதிபர்களால் தொடங்கப்பட்ட கல்லூரிகளான பி எஸ் ஜி, சி ஐ டி, தியாகராஜா மற்றும் அரசால்
தொடங்கப்பட்ட கோவை, சேலம், திருநெல்வேலி பொறியியல் கல்லூரிகள் எல்லாவற்றிலும் சிவில்
துறை சிறப்பாக இயங்கி வந்தது
1984 ல் தமிழ்நாட்டில்
சுயநிதி பொறியியல் கல்லூரிகள் தொடங்க மறைந்த முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள்
அனுமதி கொடுத்தபோது, உருவான எல்லா கல்லூரிகளிலும் இரண்டு துறைகள் நீக்கமற இருந்தன.
அவை சிவில் மற்றும் மெக்கானிக்கல் எஞ்சினியரிங்.
இந்த இரண்டு துறைகளுக்கு
சிறந்த பேராசிரியர்களும் கிடைத்தார்கள். அதற்கு காரணம் மேற்சொன்ன கல்லூரிகளின் ஓய்வு
பெற்ற பேராசிரியர்கள்.
இப்படிப்பட்ட சிறப்பு
இருந்தாலும், நல்ல பேராசிரியர்கள் இருந்தாலும், மாணவர்கள் சுயநிதி கல்லூரிகளில் சிவில்
படிப்பை ஏற்கத் தயங்கினார்கள். ஏனென்றால் அந்தக் காலத்தில் அருகியிருந்த வேலை வாய்ப்பு.
அரசுத்துறைகளில் அப்போது போதிய அளவு ரெக்ரூட்மெண்ட் இல்லை. தொழிற்சாலைகளிலும் அனுபவமிக்க
டிப்ளமோ பொறியாளர்களையே பயன்படுத்தினார்கள்.
தற்போது இருப்பது
போல் கவுன்சிலிங்கில் துறையை தேர்வு செய்யும் முறை முன்னர் கிடையாது. கல்லூரியைதான்
தேர்வு செய்ய முடியும். முதலாமண்டு (இரண்டு செமெஸ்டர்கள் இல்லாமல் – ஒரே பருவமாக பாடங்கள்
நடத்தப்படும்) முடியும்போது, கல்லூரிகளில் விருப்பம் கேட்டு துறையை ஒதுக்குவார்கள்.
ஒவ்வொரு கல்லூரியும் ஒவ்வொரு முறை வைத்திருப்பார்கள். இதில் பெரும்பாலும் சிவிலை யாரும்
விரும்பமாட்டார்கள். வேறுவழியில்லாமல் தான் எடுப்பார்கள்.
95க்கு பின்னர்,
சாப்ட்வேர் துறையின் வளர்ச்சிக்குப் பிறகு, வேலை வாய்ப்புகள் பெருக, ஏராளமான பொறியியல்
கல்லூரிகள் தொடங்கப்பட்டன.. அகில இந்திய தொழில்நுட்ப கழக விதிகளின் படி, கல்லூரி தொடங்கும்
போது, மூன்று துறைகளுக்கு அனுமதி கொடுக்கப்படும். ஒரு துறைக்கு 60 மாணவர்கள் வீதம்
சேர்த்துக் கொள்ளலாம். இந்தக் கல்லூரிகளில் பெரும்பாலும் சிவில் துறை தொடங்கப்படவில்லை.
ஒரு காரணம் மாணவர்
விருப்பச் சேர்க்கை குறைவு என்றாலும், இன்னொன்று இந்தப் பிரிவு தொடங்க ஆகும் செலவு.
ஸ்ட்ரெங்த் ஆஃப் மெட்டிரியல்ஸ் லேப், புளுயிட் டைனமிக்ஸ் லேப், கான்கிரீட் லேப், சாயில்
மெக்கானிக்ஸ் லேப், என்விரான்மெண்ட் லேப், கேட் லாப், சர்வே லேப் என அண்ணா பல்கழைகழக
விதிமுறைப்படி பத்து லேபுகள் குறைந்த பட்சம் இருக்க வேண்டும். இவற்றின் உபகரணங்கள்
விலையும் மிக அதிகம்.
ஆனால் கம்பியூட்டர்
சைன்ஸ், ஐ டி போன்ற துறைகள் தொடங்க கம்ப்யூட்டர்கள், சாப்ட்வேர்கள், நெட்வொர்க் உபகரணங்கள்
மட்டும் போதும். இவற்றின் விலை, சிவிலுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு.
1996ல் மு.கருணாநிதி
முதல்வராய் ஆனவுடன் அரசாங்க வேலைகள் பலருக்கும் சிபாரிசு இன்றி கிடைத்தன, இடைநிலை ஆசிரியர்கள்
பலருக்கு வீட்டுக்கதவை தட்டி அப்பாயிண்மெண்ட் ஆர்டர்கள் கொடுத்தார்கள். அப்போது பொதுப்பணித்துறை,
நெடுஞ்சாலைத்துறை போன்றவற்றில் உதவிப் பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதில்
ஏராளமான சிவில் இஞ்சினியர்கள் பலன் அடைந்தார்கள்.
காலம் செல்லச்
செல்ல, பல தொழிற்சாலைகள் வந்தன. சென்னை, கோவை போன்ற நகரங்களில் ஏராளமான அடுக்கு மாடி
குடியிருப்புகள் வந்தன. இந்தியாவை பொருளை உற்பத்தி செய்யும் நாடாக மட்டுமில்லாமல் பொறியியல்
டிசைன்/கன்சல்டிங் நாடாகவும் மற்ற உலக நாடுகள் பார்க்க ஆரம்பித்தன.
சுனாமி, பூகம்பம்
போன்ற இயற்கைப் பேரழிவுகள் சிவில் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தின. இவற்றைச்
சமாளிக்க மேம்பட்ட தொழில் நுட்பங்கள் தேவை என்பதால் சிவிலுக்கு டிமாண்ட் அதிகரிக்கத்
தொடங்கியது.
எனவே தற்போது பல
கல்லூரிகளும் சிவில் பாடப்பிரிவை துவுக்கியுள்ளன. சிவில் பிரிவு உள்ள கல்லூரிகள் தங்கள்
மாணவர் சேர்க்கை அனுமதியை (அப்ரூவ்ட் இன்டேக்) அதிகபடுத்தியுள்ளன.
ஆனால் இப்போது
சிவில் துறைக்கு தகுதியான பேராசிரியர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. காரணம் சிவில் முதுகலை
பட்டப்படிப்பில் சேர யாரும் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. சில கல்லூரிகளின் வேலை வாய்ப்பு
விளம்பரங்களில், சிவில் துறையை சேர்ந்த பேராசிரியர்களுக்கு அதிக சம்பளம் தருவதாக கூட
அறிவிப்பு தென்படுகிறது.
டி சி எஸ் போன்ற
சாஃப்ட்வேர் நிறுவனங்களும் இத்துறையைச் சேர்ந்தவர்களை பணிக்கு அமர்த்திக் கொள்கிறார்கள்.
மாநில அரசு, மத்திய அரசின் பொதுப்பணி, நெடுஞ்சாலை துறை பணிகள், உள்ளாட்சி பணிகள், மேம்
பாலங்கள், சேது சமுத்திர திட்டம், தங்க நாற்கர சாலை திட்டம் ரயில்வே துறை, மெட்ரோ ரயில்
திட்டங்கள், தொழிற்சாலை கட்டுமானம், வணிகவளாகங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள் என
சிவிலுக்கு வாய்ப்புகள் எங்கும் உள்ளன.
இது போல் வளைகுடா
நாடுகளிலும் நல்ல வாய்ப்புகள் தற்போது உள்ளன. கத்தார்,ஓமன், சவுதி அரேபியாவில் வாய்ப்புகள்
அதிகரித்துள்ளன. குறிப்பாக கத்தாரில் 2020ல் ஒலிம்பிக் பந்தயங்களும், 2022ல் உலக் கோப்பை
கால்பந்து போட்டிகளும் நடக்கப் போவதால் ஏராளமான ஸ்டேடியங்கள், தங்குமிடங்கள் உருவாக்கப்
பட்டு வருகின்றன. துபாயிலும் 2008ல் இருந்த தேக்க நிலை மெதுவாக மாறிவருகிறது.
வளைகுடாவைப் பொறுத்த
வரையில் இந்தியர்களால் நடத்தப்படும் கட்டுமான நிறுவனங்கள் அனுபவமில்லாதவர்களையும் பணியில்
அமர்த்திக்கொள்கிறார்கள். அரபு நிறுவனங்கள் அனுபவத்தையும், ஐரோப்பியர்களால் நடத்தப்படும்
நிறுவனங்கள் கம்யூனிகேசன் ஸ்கில்லுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மேலும் சிவில்
இஞ்சினியரிங் தொடர்புடைய ஸ்டேட்புரோ, எல் எஸ் டைனா, நாஸ்ட்ரான், பேட்ரான் போன்ற சாஃப்ட்வேர்
கற்பதும் வேலை வாய்ப்பை அதிகரிக்கும்.
எனவே முன் எப்போதும்
இல்லாத வரையில் இத்துறை எழுச்சி கண்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் நான் சிவில்டா என்று
பெருமையாக சொல்லிக்கொள்ளும்படி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தரவுகள்
விக்கி பீடியா
இணையதளம் (கல்லூரிகள் தொடர்பான விபரங்கள்)
பதிவர் வெங்கடேஷ்
(வளைகுடா தொடர்பான விபரங்கள்)
5 comments:
As usual , well written - thanks
நன்றி நண்பரே.
நல்ல விளக்கம் நண்பரே...
நான் சிவில் தான்...
நானும் ஒரு பதிவிடறேன்..
2022 ல் கத்தாரில் ஒலிம்பிக் நடக்காது.. அதற்கான போட்டியில் தோற்று விட்டது. ஆனால் 2022 ல் உலகக் கோப்பை கால்பந்து நடக்கின்றது..
கடைசி வரை படிப்போம்ல.. ;-)
Thanks for the info and reading up to end Tamiz Priyan
Post a Comment