May 03, 2013

கோட்ஸ் கோவிந்து மாமா


டாடி, இப்போ இன்வர்டரோடயே ஏஸி வருதே? என் ரூமுக்கு அத வாங்கி மாட்டுப்பா என்று ஆறாம் வகுப்பு படிக்கும் மகன் சொல்லிக்கொண்டிருக்கும் போது காலிங்பெல் சத்தம் கேட்டது.
வந்தது கோவிந்தராஜன். என் அம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரர். மதுரை கோட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஆயிரக்கணக்கானோரில் ஒருவர். பெத்தானியாபுரத்தில் ஒண்டுக்குடித்தன வரிசை வீட்டில் இருந்துவிட்டு இப்போது அது காம்ப்ளக்ஸாக மாற்றப்பட்டதால் சமயநல்லூரை நோக்கி புலம் பெயர்ந்தவர்.


என்னுடைய பள்ளிப்பருவ கோடை விடுமுறைகள் குதூகலமாக இருக்க இவரும் ஒரு காரணம். சைக்கிள் என்பது லக்சுரியாக இருந்த காலகட்டம் அது. மதுரையில் சென்ட்ரல், நியூசினிமா தியேட்டர்களில் சைக்கிள் பார்க்கிங் டோக்கன் போடுபவர்களுக்குத்தான் டிக்கட் கொடுப்பதில் முன்னுரிமை. கோவிந்து மாமா டே ஷிஃப்டுக்கு போகும்போது, அவரை கொண்டு போய் கோட்ஸ் வாசலில் இறக்கிவிட்டு, அவர் சைக்கிளை எடுத்துக்கொண்டு சுற்றுவேன். பின் சரியாக ஷிஃப்ட் முடியும் நேரத்தில் பிக்கப்.

கோவிந்து மாமா மட்டுமல்ல. அவர் வம்சமே தொழிலாளர்களாக வாழ்ந்து முடிக்க சபிக்கப்பட்டிருந்தது. லீடர்ஷிப் குவாலிட்டி என்பது அவர்களின் ஜீனில் இல்லை. மதுரை கோட்ஸ், ஃபென்னர், டி வி எஸ், ஜெயவிலாஸ், சௌந்தர்ராஜா என சுற்று வட்டார மில்களிலும், ஐ டி சி, பிராக்டர் அண்ட் கேம்பிள், ஸ்மித்கிளைன் பீகம் போன்றோரின் டீலர்களிடம் அவர்கள் வேலை செய்து வந்தார்கள்.

கோட்ஸின் எல்லா பிரிவுகளுக்கும் தேவையான சக்தியை வழங்கிக்கொண்டிருந்த பெரிய பிளைவீல் நின்றதும், துடித்துப்போன பல குடும்பங்களில் கோவிந்து மாமாவின் குடும்பமும் ஒன்று. அத்தனை வருடம் வேலை பார்த்தும் சேமிப்பு என்றெல்லாம் அவரிடம் ஏதும் இல்லை. அவுட்டரில் ரெண்டு செண்டு நிலம் கூட வாங்கி வைக்கவில்லை.

அவர்கள் பரம்பரையே அப்படித்தான். அவசியம், அவசரம் என்கின்ற இரண்டு பதத்துக்குள் அவர்கள் பொருளாதாரத்தை அடக்கி விடலாம். மாத தேவைகள் – அவசியம். அதற்கு மாத சம்பளம் வந்துவிடும். எதிர்பாரா மருத்துவ செலவு – அவசரம். அதற்கு வீட்டில் இருக்கும் நகைகளை அடகு வைத்து சமாளிப்பார்கள்.

வேலை போனாலும், கிடைத்த காம்பன்சேஷன் பணத்தை வைத்து சமாளித்துக் கொண்டிருந்தார் கோவிந்து மாமா. அப்போது கைகொடுத்தான் அவர் மகன் வெங்கடேசன். அவனுக்கு இன்னொரு வெங்கடேசன் மூலம் ஐ டி சி டீலர் ஒருவரிடம் வேலை கிடைத்தது. .

குமாஸ்தா வேலை கிடைத்தால், குமாஸ்தா அளவுக்குச் சிந்தித்தால் அந்த வேலையில் தாக்குப்பிடிக்கலாம்.மானேஜர் போல சிந்தித்தால் பிரமோஷன் வாங்கி உயராலாம். முதலாளி போல சிந்தித்தால் வாழ்க்கையில் மிக உயரலாம். ஆனால் இந்த வெங்கடேசன் துப்புரவு பணியாளர் அளவுக்குத்தான் சிந்திப்பான். எப்படியோ காலம் அவர்களுக்கும் ஓடிக்கொண்டிருந்தது.

”நம்ம வெங்கடேஷனுக்கு பொண்ணு தகைஞ்சிருக்கு. சமயநல்லூர்ல ஒரு ஜெராக்ஸ் கடையில வேலை பார்க்கிறா, வர்ற ஞாயித்துக்கிழமை வெத்தலை பாக்கு மாத்தறோம், அவசியம் வரணும்” என்பதுதான் கோவிந்து மாமாவின் செய்தி.

காப்பி ஆனவுடன், கிளம்பும் போது,

வெங்கடேசன் முதலாளி, உனக்கு நல்ல பழக்கமாமே? இப்போ இவன் அண்ணாநகர் பிராஞ்சுல இருக்கான். சமயநல்லூர்ல இருந்து போய் வரவே நேரமாயிடுதுங்கிறான். விளாங்குடி பக்கத்துல ஒரு பிராஞ்சு இருக்கில்ல, அங்க மாத்தி வாங்கிக் கொடுத்தா சௌக்கியமா இருக்கும். என்று கேட்டுவிட்டுச் சென்றார்.

”அவனே ஒரு கூறு இல்லாத பைய, அவன சொந்தக்காரன்னு சொல்லி அசிங்கப்படணுமா? இந்த கலெக்டரு எங்க வேலை பார்த்தா, என்னவாம்? என மனைவியிடம் பொரிந்தேன்.

விடுங்க. நல்ல மனுஷன். மூத்தவன் பிறந்திருந்தப்ப அவர் சம்சாரம் ஆஸ்பத்திரிக்கி வந்து எவ்வளோ  ஒத்தாசையா இருந்தாங்க?. இதச் செய்யுறதுல என்ன குறைஞ்சிறப் போறீங்க? என்று சமாதானப் படுத்தினாள் என் மனைவி.

வெங்கடேசனின் முதலாளி, நான் ரீஜனல் மானேஜராக இருக்கும், நிறுவனத்தின் பிராடக்டுகள் சிலவற்றை டீலர்ஷிப் எடுத்திருக்கிறார். அவ்வகையில் நல்ல பழக்கம். போனில் அழைத்து, பார்க்க வரவேண்டும் என்று கேட்ட போது, இரவு உணவுக்கு வீட்டிற்கு வரச் சொன்னார்.
லௌகீக விஷயங்கள் பேசி முடித்ததும், வெங்கடேசன் விபரத்தைச் சொன்னேன். உங்கள் உறவினரா என்று ஆச்சர்யப்பட்டவர், நாளைக்கே மாறிக்கச் சொல்லுங்க என்றார்.

இரவு உணவு முடிந்ததும், வெளியில் வந்து காற்றோட்டமாய் நின்று சிகரெட் புகைப்பது அவர் வழக்கம். பக்கத்து பிளாட்டுகளில் இரவு எட்டரை மணிக்கும் ஜேசிபி வைத்து வேலை நடந்து கொண்டிருந்தது ஆச்சரியமாய் இருந்தது. எங்கள் இருவருக்குமிடையேயான பேச்சு பல கோணங்களில் சென்று கொண்டிருந்தது. மீண்டும் எப்படியோ வெங்கடேசனுக்கு வந்தது.

ஆட்டிடியூட், கோல் அப்படின்னு எதுவுமே இல்லை சார் அவனுக்கு. அதான் வருத்தமாயிருக்கு. ஏன் அவங்கப்பாவும் அப்படித்தான். ஆஸ்பெஸ்டாஸ் போட்ட ஒண்டிக்குடித்தனத்துல இருக்கமேயின்னு முப்பது வருஷத்துல ஒரு நாள் கூட அவர் சிந்திச்சதேயில்லை. என்றேன்.
ரவி, இந்த உலகம் ஓரளவாவது நல்லாயிருக்குன்னா, நீயோ நானோவா காரணம்? இல்லப்பா. உங்க கோவிந்து மாமா மாதிரி ஆளுகளாலதான். என்றார்.

உனக்கு எத்தனை வீடு இருக்கு? என்றார்.

“மூணு இருக்கு. இப்போ புதூர்ல ஒரு பிளாட் சொல்லியிருக்கேன். என்றேன்.

உனக்கு ரெண்டு பசங்க. பின்னாடி உனக்கொண்ணு, பிள்ளைங்களுக்கு ஆளுக்கொண்ணுன்னு பார்த்தாலும், மூணு வீடு போதும். எதுக்கு நாலாவது? என்று கேட்டார்.

ஒரு வீடு கட்டணுமின்னா, எவ்வளோ மணல்? ஒருநாள்ல உருவாகுறதா, அது? எத்தனை ஆயிரம் வருஷம் ஆகணும் மணலா மாற?, சோபிஸ்டிகேட்டடா கட்டுறேன்னு, கிரானைட்டுக்கு எத்தனை மலையை அழிச்சிருக்கோம்?, எவ்வளோ மரம் வெட்டிருக்கோம்? ஏஸி, பிரிட்ஜு,டிவின்னு எவ்வளோ கரண்ட வேஸ்ட்பண்ணுறோம்?. அதக்கூட விடு. எவ்வளோ தண்ணிய வேஸ்ட் பண்ணுறோம்? வீடுகட்ட, அதை மெயிண்டெயின் பண்ண? புதுசா ஒரு வீடு வரணுமின்னா எவ்வளோ இயற்கை வளம் அழியும், தெரியுமா? தேவைக்கதிகமா அதிக இடத்தோட வீடு கட்டிக்கிறதும் குத்தம்தான். நான் என்னையும் சேர்த்துத்தான் சொல்லுறேன்.

முன்னேறனும்னு நாம பேசிக்கிறோம். எவ்வளோ பெட்ரோல் , டீசல அழிக்கிறோம்? ட்ராவல் பண்ண.

அதிகமா ஆசப்படமா, கிடைக்கிறத வச்சு திருப்தி பட்டுக்கிட்டு இருக்குற கோவிந்து, வெங்கடேசன் மாதிரி ஆளுகளோட கோட்டாவத்தான் நாம யூஸ் பண்ணி அழிச்சுக்கிட்டு இருக்கோம். என்று நீளமாக பேசி முடித்தார்.

வெங்கடேசன் கல்யாணத்துக்கு நிச்சயம் போய்வர வேண்டும் என மனதில் நினைத்துக்கொண்டேன்.

20 comments:

எல் கே said...

Very true

Shankar G said...

Factu Factu Factu..

முரளிகண்ணன் said...

நன்றி எல் கே

நன்றி சங்கர்ஜி

வி.பாலகுமார் said...

யதார்த்தம்.

முரளிகண்ணன் said...

நன்றி பாலகுமார்

Vasu Balaji said...

good one

முரளிகண்ணன் said...

நன்றி வாசு சார்

BHARATHIDHASAN VELLAICHAMY said...

நண்பரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். நல்ல சிந்தனை. என்னால் இப்படி எழுத இயலாது. உங்கள் எழுத்து நடையில் இறந்த சுஜாதாவின் சாயல் தெரிகிறது.உண்மை தானே?

BHARATHIDHASAN VELLAICHAMY said...

நண்பரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். நல்ல சிந்தனை. என்னால் இப்படி எழுத இயலாது. உங்கள் எழுத்து நடையில் இறந்த சுஜாதாவின் சாயல் தெரிகிறது.உண்மை தானே?

BHARATHIDHASAN VELLAICHAMY said...

என் வலைதளத்தில் " என் பார்வையில்" நீங்களும் உண்டு. விரைவில் எதிர்பார்கலாம். ஆனால் நேரம் தான் இல்லை.

முரளிகண்ணன் said...

பாரதிதாசன் அண்ணே

நன்றி.

புதுகை.அப்துல்லா said...

குட்.

King Viswa said...

ஒன்றுமே சொல்ல தோணவில்லை என்பதால் ..........


கிங் விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகம்

Carpe Diem!

சுஜாதாவின் காமிக்ஸ் கதைகள் - சுஜாதா பிறந்த நாள் சிறப்பு பதிவு

முரளிகண்ணன் said...

நன்றி அப்துல்லா அண்ணே

நன்றி விஸ்வா

பால கணேஷ் said...

வித்தியாசமான சிந்தனை! சரியான சிந்தனையும் கூட... வசதி உள்ளவர்கள் தேவைக்கும் அதிகமாக வசதிகளை உருவாக்கிக் கொள்வதும் ஒரு தவறுதானே என்ற கருத்தை மனசில ஆழமாப் பதியனிட்டுட்டீங்க. நல்வாழ்த்துக்கள்!

butterfly Surya said...

யதார்தமும் உண்மையும்.

அருமையான எழுத்து நடை. Love you Murali.

அன்புடன் அருண் said...

அருமையான சிந்தனை! மிகவும் சுடுகின்ற உண்மை!!

அன்புடன் அருண் said...

அருமையான சிந்தனை! மிகவும் சுடுகின்ற உண்மை!!

ஓஜஸ் said...

நல்லா இருக்கு. உங்கள் தளத்தில் ரஜினி, கமல் என நண்பர் சொல்லி சில பதிவுகள் படித்தேன். இதுவும் சேர்த்து அனைத்தும் அருமை. நல்ல நடை. fluid n smooth writeup.

Unknown said...

Nice