June 21, 2013

குற்றாலமும் நட்புச் செல்வமும்

சின்ன வயதில் இருந்தே எனக்கு இருந்த ஒரு பழக்கம் வாய் பார்த்தல். கேட்டல் என்றுதான் சொல்ல வேண்டும் .ஊரில் அப்படிச் சொல்வார்கள் என்பதால் நானும் அதையே பாலோ செய்து கொள்கிறேன். நான் ஐந்தாவது படிக்கும் காலத்தில் என் தெரு பிளஸ் டூ, கல்லூரி மாணவர்களின் அரட்டையை கேட்பதுதான் என் பொழுதுபோக்கே.

கல்லூரி விடுதியில், விடுமுறை நாட்களில் மதிய உணவுக்கு பின், யாராவது ஒரு நண்பனின் அறையில் எல்லோரும் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது, அனந்த சயன நிலையில் இருந்து கொண்டே அதைக் கேட்பதைதான் அந்நாளில் சுகமாக நினைத்து வந்தேன்.
பின்னர் பல ஆண்டுகளுக்கு அந்த சுகம் கிடைக்கவில்லை. 

இணையத்திற்கு வந்த பின் சென்னையில் அப்துல்லா, புருனோ,கேபிள் சங்கர், மணிஜி, கார்க்கி, யுவகிருஷ்ணா, அதிஷா, அகநாழிகை வாசுதேவன், பபாஷா ஷங்கர்,சிவராமன் அண்ணன், ஜியோவ்ஜி, தாமிரா ஆதி  முதலியோரின் நட்பு கிடைத்தபின் அம்மாதிரி அடிக்கடி வாய்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் கோவை செல்லும்போது செல்வேந்திரன், சஞ்சய், வேலன் அண்ணாச்சி. மதுரையில் கார்த்திகை பாண்டியன்,பாலகுமார், ஸ்ரீ ஆகியோர். மாயவரத்தில் அபிஅப்பா, சௌமியன்.

கடந்த ஓராண்டாக அம்மாதிரி வாய்ப்பு அமையவில்லை. கடந்த வாரம் மணிஜி அழைத்து குற்றாலத்துக்கு வர்றோம். வந்திருங்க. என்றார்.
இதோ என்று கிளம்பினேன். செல்லும் வழியிலேயே சில ட்விட்கள் போட நண்பர்கள் நட்ராஜ், கலீஸ் ஆகியோரும் ட்விட்டர் வழியாக என்னுடன் பேருந்தில் பயணித்தார்கள்.

சென்று இறங்கியதும் அங்கே மணிஜி, அகநாழிகை, பபாஷா,கும்கி ஆகியோர் வரவேற்றனர். ஈரோடு சங்கமத்தின் தூணான அண்ணன் தாமோதர் சந்துரு அவர்களும், அவரின் நண்பர் அண்ணன் விஸ்வேஸ்வரன் அவர்களும் வந்திருந்தார்கள்.
மணிஜி சொன்னார், : “நாம, சூது கவ்வும் மாதிரி ஒரு லோ பட்ஜெட் படம் எடுக்கலாம்னு வந்தோம். சந்துரு அண்ணன் ஷங்கர் படம் மாதிரி அதை பிரம்மாண்டம் ஆக்கிட்டார்” என்று சொன்னார். அது மிகையில்லை. அருமையான கெஸ்ட் ஹவுஸ்.

இரண்டு நாட்களின் மெனு (இது தீனி தின்னி குரூப்புக்காகவே)
முதல் நாள்
காலை – கவுண்டமனி பிரம்மாவில் கேட்ட பேப்பர் ரோஸ்ட், 

(உண்மையிலேயே அது காற்றில் பறந்தது நேநோ மீட்டர் தடிமனில் இருந்தது), முட்டை தோசை, விரால் மீன் குழம்பு, விரால் மீன் பொறியல்
மதியம் – தலைக்கறி வருவல், ஈரல் வருவல்

இரவு – தோசை, புதினா சட்னி, நாட்டுக்கோழி குழம்பு, வருவல்
இரண்டாம் நாள்

காலை
முட்டை பணியாரம், குடல் குழம்பு, நிலக்கடலை சட்னி

மதியம்

மட்டன் பிரியாணி, சாப்ஸ். தால்சா. மணிஜி அண்ணன் சொன்னார். “ இந்த நளபாகஸ்தர், தன் விரலை மட்டும் தான் வெட்டிப்போட்டு சமைக்கவில்லை, எல்லா வகை கறியையும் வெட்டி போட்டு விட்டார்” என்று.

இது மட்டுமில்லை. காலை எழுந்ததும் நுங்கு போட்ட பதனீர், பின்னர் சுக்கு காபி, காரமான காலை உணவு முடிந்ததும் தித்திப்பாக்க பலாச்சுளைகள், ஒரு மணி நேரம் கழித்து உணவு செரிக்க சுக்கு மிளகு திப்பிலி ரசம்.

மதிய உணவுக்குப்பின் பிளாக் டீ, லெமன் டீ வகையறாக்கள்.  இன்றும் தொடர்கிறது. நான் தான் தவிர்க்க இயலாத சூழலால் நேற்றிரவே திரும்ப வேண்டிய சூழல்.

அருமையான சீசன். ஆயிரக்கணக்கில் மக்கள் வந்தாலும் அருவியின் வேகம் சமாளிக்கிறது. இரண்டு நிமிடத்திற்கு மேல் நிற்கமுடியவில்லை, யாராலும். குப்புற படுக்கப்போட்டு யானைக்கூட்டம் தன் கால்களால் மிதித்து ஓடுவதைப் போல முதுகில் விழுகிறது அருவி நீர். கோபமான மருமகள் தன் மாமியாரை நினைத்து உலக்கையை குத்துவது போல நங் என தலையில் விழுகிறது அருவி. அழகை காண கண்கோடி வேண்டுமென்பார்கள். குற்றால அருவியின் சுகத்தை அனுபவிக்க டபுள் எக்செல் பாடியாவது மினிமம் வேண்டும். குண்டாக இருப்பதற்காக ஆனந்தப்பட்ட அபூர்வ நேரங்களில் இதுவும் ஒன்று. ஒல்லிக்குச்சி காரர்களே உங்களை விட எங்கள் மேல் தான் அதிக சர்பேஸ் ஏரியாவில் அருவி விழுகிறது.

 ஆனால் இதையெல்லாம் அனுபவிக்காமல் ஹமாம் சாம்பிள் சோப்பை உடம்பு முழுவதும் போட்டுக்கொண்டு ஒரு கூட்டம் குளிக்கிறது. ஷாம்பு வேறு. டேய், அதத்தான் வீட்டில் செய்கிறீர்களேடா, இங்கு வந்து ஏண்டா என்று கேட்கத் தோன்றுகிறது.

பத்து லட்ச ரூபாயை பிச்சைக்காரனுக்கு தர்மம் செய்தால் அவன் தங்கத்தில் திருவோடு செய்து சிங்கப்பூரில் போய் பிச்சை எடுப்பான் என்பது போலத்தான் இவர்களும்.

டாபிக் மாறிட்டேன். இந்த முறை வாய்பார்த்தலும் மிகச் சிறப்பாக இருந்தது. மணிஜியிடம் இருந்து சினிமா நுட்பங்கள், பபாஷாவிடம் இருந்து தொழில் நுட்பம், அகநாழிகையிடம் இருந்து இலக்கியத்தகவல்கள்.
அண்ணன் தாமோதர் சந்துரு அவர்களும், அவர் நண்பர் விஸ்வேஸ்வரன் அவர்களும் ஏராளமான விஷயங்களை சொல்லிக்கொண்டிருந்தார்கள். விஸ்வேஸ்வரன் அவர்கள் தமிழகத்தின் சூப்பர் ஹிட் வாகனங்களில் ஒன்றான டிவிஎஸ் எக்செல்லை வடிவமைத்தவர். விரலி விடு தூதுவில் ஆரம்பித்து, கூளப்ப நாயக்கன் காதல் கதை வழியாக ஏராளமான விஷயங்கள் அலசப்பட்டன. இறைவன் நான்கு காதுகள் வைத்திருக்கலாம் என ஒரு ஆசையும் அப்போது வந்தது.

அருவி இருக்கும். உணவு கிடைக்கும். ஆனால் இந்த ஒத்த அலைவரிசை கொண்டவர்களுடனான உரையாடல்? அதற்கு பாக்கியம் செய்திருக்க வேண்டும். அனுஷ்கா வந்து முத்தம் தருகிறேன் என்று அழைத்தால் கூட அப்பாலிக்கா என்று மறுக்கும் மனதுடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.

குற்றாலம் குடும்பத்தோடு வருபவர்களை விட நட்புக்கூட்டத்தோடு வருபவர்களுக்கேயானது. கவலை மறந்து நம்மை சார்ஜ் ஏற்றிக்கொள்ள சரியான இடம். 35+ ஆண்கள் அடே புடே என்று பேசிக்கொண்டு, குளித்து, சாப்பிட்டு தங்கள் கவலைகளை மறக்கும் இடம். நயாகராவெல்லாம் உலக அழகி போல. தூரமிருந்து பார்க்கத்தான் முடியும். குற்றாலம் நம் அத்தை மகள் போல. எவ்வளவு (நமக்கு) வயசானாலும், அவர்கள் நல்லாயிருக்கீங்களா? எனக் கேட்டதும் மனதில் ஒரு இனம் புரியா மகிழ்ச்சி பரவுமே? அது போல குற்றாலமும் உங்கள் மனதிற்கு இதமளிக்கும் இடம்.


முடித்து கிளம்பும் போது, இந்த சுகத்திற்காக இன்னும் உழைக்க வேண்டும் என்ற ஒரு வைராக்கியமும் ஒவ்வொரு ஆணின் மூளையிலும் ஒரு பைட் அளவுக்காவது ஏறும்.

June 08, 2013

ரஜினியின் கடந்த 20 வருடங்களும் கோச்சடையானும்

தங்கையை நம்பி விட்டுச் செல்லலாம் போன்ற முகம் – சுஜாதா 80களில் ரஜினி பற்றி

பி சி செண்டர்களின் முடி சூடா ராஜா ரஜினியும் ஏ செண்டரின் ஹாட் மணிரத்னமும் இணையும் படம் இது. – தளபதி படம் பற்றிய ”மார்டன் மகாபாரதம்” என்ற விகடன் கட்டுரை.

என்னடா பெரிய ஹைகிளாசு. ரஜினி தங்கச்சி சாகிறப்போ அழுதாக்கூட முறைக்கிறாங்க. வாடா நாம கீழ போயியே உட்கார்ந்துக்கலாம். -குமுதத்தில் 80களின் ஆரம்பத்தில் வந்த ஒரு சிறுகதையில் இருந்து.

இக்கதையில் கூலி அதிகம் கிடைத்துவிட்ட இரு தொழிலாளர்கள், ரஜினி படத்தை பால்கனியில் உட்கார்ந்து பார்க்கச் செல்வார்கள். அவர்கள் படத்தை ரசிப்பதை பால்கனியில் உள்ளவர்கள் அசூசையாக பார்ப்பார்கள். அதனால் இடைவேளையில் அவர்கள் தரைக்கு சென்றுவிடுவார்கள்.

இன்றைய நிலையில் இருக்கும் ரஜினியின் இமேஜோடு மேற்கூறியவற்றை பொருத்திப்பாருங்கள். ஏ செண்டர் என்ன?, ஏ++ ஆன அமெரிக்கா வரை ரஜினி தான் முடிசூடா மன்னர்.
அதுவும் கடந்த 20 ஆண்டுகளில் ரஜினிக்கு கிடைத்திருக்கும் இமேஜ் மேக் ஓவரானது அசாத்தியமானது. எப்படி ஆங்கிரி யங் மேன் இமேஜ் வேலைக்காகாது என அமிதாப் 2000ல் மாறினாரோ, அதையும் தாண்டியது ரஜினியின் மேக் ஓவர்.
முதலில் ரஜினி பி சி ரசிகர்களை வசீகரித்தது பாட்டாளிகளின் காவலன், ஏழைகளின் தோழன் போன்ற கேரக்டர்களில் நடித்து தான். ஊர்காவலன், மனிதன்,சிவா, மன்னன், என பெரும்பாலான படங்களில் அவர் ஏழைப் பங்காளனாகவே இருப்பார்.

ஆனால் கடந்த 20 வருடங்களில் வெளியான பாட்ஷா, முத்து, அருணாசலம், படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் ஆகிய படங்களில் அவர் பெரும் பணக்காரராகத்தான் நடித்திருப்பார். பாட்ஷாவில் ஆட்டோ ஓட்டினாலும் அவர் டான். நன்றாக கவனித்துப் பார்த்தால், இந்தப்படங்களில் ஏழைப்பங்காளன், பாட்டாளி என்ற வசனங்களே இருக்காது.

இந்து மதத்துக்கும் அதிக முக்கியத்துவம் இந்தப் படங்களில் கொடுக்கப்பட்டிருக்கும். நாயகன் கடவுள் நம்பிக்கையுடைய, பெரியோர்களை மதிக்கும் பணக்காரனாகவே இருப்பான். சனாதான தர்மங்களில் நம்பிக்கை உடையவனாக இருப்பான். எந்திரனில் ரோபோவுக்கு ஆயுத பூஜை, சிவாஜியில் ”தமிழ்க் கலாச்சாரப் பெண் வேண்டும்”, சந்திரமுகியில் ”ஐயப்பன் கோவிலுக்கு போய்விட்டு வந்தேன்”, பாபா பற்றி சொல்லவே வேண்டாம். படையப்பாவில் “பொம்பளை கோபப் படக் கூடாது, புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரில் ஒருத்தர் படிச்சிருந்தா போதும்”, அருணாசலத்தில் ருத்ராட்சம், என எல்லாப்படங்களிலும் இது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.


ஒருவகையில் பார்த்தால், தங்கள் பிள்ளைகள் ரஜினி ரசிகராய் இருப்பதை பெற்றோர்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதைவிட தற்போது 35+ல் இருப்பவர்கள் அனைவரும் திருமணத்துக்குப் பின் ரஜினி இப்போது காட்டும் வழியே சிறந்தது என நினைக்கிறார்கள். சிவாஜியில் தன் லட்சியம் நிறைவேறுவதற்காக கூட்டிக் கொடுப்பதைப் போல (வேண்டா வெறுப்பாக) ஒரு காட்சி இருக்கும். இன்றைய 35+ மக்களை கேளுங்கள். பெரும்பாலோனோர் (நான் உட்பட) காரியம் ஆக அதுமாதிரி செய்வதில் தவறில்லை என்ற கருத்தையே சொல்வார்கள். தற்போதைய 20+ இளைஞர்களும் பணம் சம்பாதித்தால் போதும், அதில் எதிக்ஸ் பார்க்கத்தேவையில்லை என்ற கருத்தோடுதான் இருக்கிறார்கள். அதனால் தான் மங்காத்தா போன்ற படங்கள் வெற்றி பெறுகின்றன.


ரஜினி, இந்த சமூகத்தை உன்னிப்பாக கவனித்து வருபவர். (அல்லது அவர் இயக்குநர்கள்) அதனால் தான் மக்களின் மனவோட்டத்திற்கு ஏற்ப தன் பாத்திரங்களை செலக்ட் செய்துகொள்கிறார்.


இதே எந்திரனை 20 ஆண்டுகளுக்கு முன்னால் எடுத்திருந்தால், ரஜினி ஏழை பெற்றோருக்கு பிறந்து, படித்து முன்னேறிய விஞ்ஞானியாக காட்டப்பட்டிருப்பார். பெரும் கோடீஸ்வரராக நிச்சயம் காட்டப்பட்டிருக்க மாட்டார். (சிவாஜியில் கதை அமைப்பு அப்படி. பிறப்பிலேயே பெரும் பணக்காரர் என்றால், திரைக்கதை சுவராசியப்பட்டிருக்காது.)
ஒவ்வொரு காலகட்டத்திலும், நடிகர்கள் புதிதாக படம் பார்க்க வரும் ரசிகர்களை தக்க வைக்க சிரமப்படுவார்கள். கமல்ஹாசனை 80களில் படம் பார்க்க வந்தவர்களில் 40 சதவிகிதம் பிடித்தது என்றால், 90களில் 30 சதவிகிதத்திற்கும், 2000ல் 20% க்கும், 2010ல் 10%க்கும்  குறைவான பேருக்கே பிடித்திருக்கிறது. ஆனால் ரஜினி இப்போது படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கும் ஏற்றபடி படம் கொடுக்கிறார். அவர் புகழ், பழைய ரசிகர்களோடு, புதியவர்களும் அதிக அளவில் கூடுவதால் எக்ஸ்பொனென்சியலாக கூடுகிறது.


மேலும் ரஜினியாவனவர் பத்திரிக்கைகளுக்கும், டிவி மீடியாக்களுக்கும், , இந்து மதத்தவர்க்கும், பரம்பரை பணக்காரர்களுக்கும், புதுப் பணக்காரர்களுக்கும், குடும்ப அமைப்பு கலையாமல் இருக்கவேண்டும் என நினைப்பவர்களுக்கும் வசதியான ஐகானாக இருக்கிறார். இந்த அமைப்புகளுக்கு எதிரான சங்கடப்படுத்தும் கருத்துகளை அவர் சொல்லுவதில்லை. எனவே இவர்கள் யாவரும் அவரை புரமோட் செய்வதில் பலன் அடைகிறார்கள். இப்படி எல்லாப் பக்கமும் அவர் முன்னிறுத்தப்படுவதால் புதிதாக உலகைப் பார்ப்பவர்களுக்கு அவரின் மேல் கிரேஸ் வருகிறது.


மேலும் அவர் வில்லங்கமான கருத்துகளைக் கூறினாலும், அது பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஒரு விழாவில், “விவேக் நல்ல அறிவாளி, அவர் தேவர் இனத்தைச் சேர்ந்தவர் என்றதும் ஆச்சரியப்பட்டேன்” என்றார். இதே ஸ்டேட்மெண்டை வேறு யாராவது கொடுத்திருந்தால் தென் மாவட்டமே கொதித்தெழுந்திருக்கும். ஆனால் இதை யாரும் பொருட்படுத்தவில்லை.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல்தான் கோச்சடையானை நான் எதிர்பார்க்கிறேன். முதலில் அனிமேஷன் படம் என்றதும், இந்தப் படம் எப்படி ஓடும்? என நினைத்தேன். ஆனால் இக்கால நடுத்தர வர்க்க குழந்தைகள் பெரும்பாலும் சோட்டா பீமையும், நிஞ்சா ஹட்டோரியையும் ஆதர்சமாக கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு வேகமாக அசையும் படங்களே மிகப் பிடிக்கின்றன. இசையும் வேகமாக துள்ளலுடன் இருக்க வேண்டியிருக்கிறது. சாதாரண படங்களை விட அனிமேசனை மிகவும் விரும்புகிறார்கள்.


24 மணி நேரம் சோட்டா பீம் டிவியில் இருந்தாலும், சமீபத்தில் வெளியான “சோட்டா பீம் : த தோர்ன் ஆஃப் பாலி” க்கு மல்டிபிளக்ஸ்களில் விடுமுறை நாட்களில் நல்ல கூட்டம்.



கோச்சடையானை, வழக்கமான ரஜினி ரசிகர்கள் எப்படியும் பார்ப்பார்கள். சிவன் போன்ற போஸ் எல்லாம் ஃபர்ஸ்ட் லுக்கில் இருப்பதால் கொஞ்சம் ஆன்மீகமும் இதில் தூவப்பட்டிருக்கும். அடிசனலாக, மூன்று வயது முதல் எட்டு வயது வரை உள்ள குழந்தைகள் இந்தப் படத்தை நிச்சயம் பார்க்கும். ரஜினியின் அடுத்த பத்தாண்டுக்கான புது ரசிகர்களை உருவாக்கும் படமாக இது அமையும். 

June 07, 2013

சுந்தரபாண்டியனும் குட்டிப்புலியும்


வடக்கே வன்னியர், தெற்கே தேவர், மேற்கே கவுண்டர் போன்ற சாதியினரே சுய சாதி அபிமானம் மிகக் கொண்டுள்ளார்கள் என ஊடகங்களில் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. நாயுடு, வேளாளர், நாடார்,யாதவர் என எந்த சாதியை எடுத்தாலும் அவர்கள் சுய சாதி மோகம் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஆனால் இவர்கள் தாங்கள் எங்கே பெரும்பான்மையாக அல்லது குழுவாக வசிக்கிறார்களோ அங்கேதான் தங்கள் சாதிக்குரிய கர்வத்துடன் இருக்கிறார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் தங்கள் சாதிக்காரர் அருகில் இல்லா சூழ்நிலையில்/ ஆதரவு தர இயலா சூழலில் தான், ”யார் சார் இப்போல்லாம் சாதி பார்க்குறாங்க?” என்று சொல்லிக்கொள்வார்கள்.
காதல் ஒன்றுதான் ஜாதி வேறுபாடுகளை களையவல்ல மருந்து என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். வசதி வாய்ப்பும் ஜாதி வேறுபாடுகளை குறைக்கவல்லது என்பது என் அனுபவம்.

என்னுடைய நெருங்கிய உறவினர்கள் இருவர். அவர்களில் மூத்தவர் சென்னையிலும், தம்பி கிராமத்திலும் இருக்கிறார். இருவருமே நல்ல வசதியானவர்கள். அண்ணனின் பெண் வேற்று சாதி பையனை காதலித்தார். அந்தஸ்து சமமாக இருக்கவும் ஒக்கே சொல்லிவிட்டார். தம்பியின் மகளும் அதே போலத்தான். அந்தஸ்தும் பிரச்சினையில்லை. ஆனால் தம்பியின் வீட்டைச்சுற்றி முழுவதும் உறவுக்காரர்கள். அதனால் என்னவோ வீண் ஜம்பத்திற்காக தம்பி அந்தக் காதலை ஒப்புக்கொள்ளவில்லை. ஜோடி எஸ்கேப். உறவுக்காரர்கள் படை திரண்டு போய் ஜோடியை கண்டுபிடித்து பிரித்து விட்டுத்தான் மறு வேலை பார்த்தார்கள்.

நாங்கள் குடியிருக்கும் பகுதியில் எல்லா சாதிக்காரர்களும் இருக்கிறார்கள்.  பல காதல் திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பெற்றோர்கள் அந்தஸ்தை மட்டும்தான் பார்க்கிறார்கள். ஆனால் எங்கே ஒரே ஜாதிக்காரர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்களோ அங்கேதான் கௌரவம், அது இதுவென வெட்டியாக காதலை எதிர்க்கிறார்கள்.  அதேபோல் நாலு பேர் மதிக்க அந்தஸ்தான பதவி/வசதியில் இருப்பவர்களும் அப்படியே.

கோவை புறநகர் ஒன்றில் வசிக்கும் சைவ பிள்ளைமாரோ, திண்டிவனத்தில் வசிக்கும் தேவரோ, சிவகங்கையில் இருக்கும் வன்னியரோ தங்கள் பிள்ளை காதலித்தால் வசதியை மட்டும் பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் முறையே நெல்லை, சிவகங்கை, திண்டிவனத்தில் இருந்தால் அதை ஒத்துக்கொள்வார்களா என்பது சந்தேகம்.

ஏதோ, அப்படி வெளியூரில் வசிப்பவர்களாவது காதலை அவ்வளவாக எதிர்ப்பதில்லை என்று பார்த்தால், சில திரைப்படங்கள் வந்து அதைக் கெடுத்து விடுகின்றன.

சமீபகாலமாக மதுரை ஏரியாவைச் சுற்றி எடுக்கப்பட்ட படங்கள் பெரும்பாலும் சாதிப்பெருமை பேசும் திரைப்படங்களாகவே எடுக்கப்பட்டன. சுந்தரபாண்டியன் திரைப்படம் தொடங்கும் போதே, தங்கள் ஜாதிப் பெண்களை காதலிப்பவர்களை எப்படி கொல்வோம் எனத்தான் ஆரம்பிக்கும். இப்போது குட்டிப்புலியிலும் அப்படித்தான். தங்கள் தெரு/ஜாதி பெண்ணை கையை பிடித்து இழுத்தால் என்ன நடக்கும்? என்ன செய்வோம்? என ஒரே பெருமை பீற்றல்கள்.

கல்லூரி செல்லும் வயதில் இம்மாதிரிப் படங்களைப் பார்க்கும் இளைஞனுக்கு, சாதிப்பற்றை ஊட்டும் வகையில்தான் இது இருக்கின்றது. எங்கள் ஏரியாவில் புதனன்று நடந்த காதணி வைபவத்தில் “குட்டிப்புலி குரூப்ஸ்” என்று ஒரு பிளக்ஸ். ”சாதி விட்டு சாதி காதலித்தால் சங்கறுப்போம்” என கேப்ஷன்  வேறு. இதற்குப் பின்னால் நான்கு கல்லூரி மாணவர்கள் மட்டும். அவர்களிடம் நான் பலமுறை பேசியிருக்கிறேன். இதற்கு முன்னால் அவர்கள் இப்படி இருந்தது இல்லை. இந்தப் போஸ்டர் பார்த்துவிட்டு இன்னொரு குரூப் மன்னர் திருமலை நாயக்கர் பேரவை என இன்று ஒரு நிகழ்வுக்கு பிளக்ஸ் வைத்துள்ளார்கள். இதிலும் கல்லூரி மாணவர்களே சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

ஆறாம் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் மனதில் கூட ஒரே ஜாதி பொண்ணதான் லவ் பண்ணனும்போல என்ற செய்தி இதனால் கடத்தப்படுகிறது.

மொக்கைப்படங்களை இப்படி ஒரு கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டுமா? என்ற ஒரு கேள்வியும் எழலாம். இரானிய திரைப்படங்களையோ அல்லது மற்ற உலக திரைப்படங்களையோ தமிழகத்தில் 15 வயதுக்கு உட்பட்டோர் பார்ப்பதில்லையே? அவர்கள் சுந்தர பாண்டியனையும், குட்டிப்புலியையும் தானே பார்க்கிறார்கள்? தனக்கான நாயக பிம்பத்தையும் அவற்றில் இருந்து தானே வரித்துக் கொள்கிறார்கள்?.