சின்ன வயதில் இருந்தே
எனக்கு இருந்த ஒரு பழக்கம் வாய் பார்த்தல். கேட்டல் என்றுதான் சொல்ல வேண்டும் .ஊரில்
அப்படிச் சொல்வார்கள் என்பதால் நானும் அதையே பாலோ செய்து கொள்கிறேன். நான் ஐந்தாவது
படிக்கும் காலத்தில் என் தெரு பிளஸ் டூ, கல்லூரி மாணவர்களின் அரட்டையை கேட்பதுதான்
என் பொழுதுபோக்கே.
கல்லூரி விடுதியில்,
விடுமுறை நாட்களில் மதிய உணவுக்கு பின், யாராவது ஒரு நண்பனின் அறையில் எல்லோரும் அரட்டை
அடித்துக் கொண்டிருக்கும் போது, அனந்த சயன நிலையில் இருந்து கொண்டே அதைக் கேட்பதைதான்
அந்நாளில் சுகமாக நினைத்து வந்தேன்.
பின்னர் பல ஆண்டுகளுக்கு
அந்த சுகம் கிடைக்கவில்லை.
இணையத்திற்கு வந்த பின் சென்னையில் அப்துல்லா, புருனோ,கேபிள்
சங்கர், மணிஜி, கார்க்கி, யுவகிருஷ்ணா, அதிஷா, அகநாழிகை வாசுதேவன், பபாஷா ஷங்கர்,சிவராமன்
அண்ணன், ஜியோவ்ஜி, தாமிரா ஆதி முதலியோரின்
நட்பு கிடைத்தபின் அம்மாதிரி அடிக்கடி வாய்பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் கோவை
செல்லும்போது செல்வேந்திரன், சஞ்சய், வேலன் அண்ணாச்சி. மதுரையில் கார்த்திகை பாண்டியன்,பாலகுமார்,
ஸ்ரீ ஆகியோர். மாயவரத்தில் அபிஅப்பா, சௌமியன்.
கடந்த ஓராண்டாக
அம்மாதிரி வாய்ப்பு அமையவில்லை. கடந்த வாரம் மணிஜி அழைத்து குற்றாலத்துக்கு வர்றோம்.
வந்திருங்க. என்றார்.
இதோ என்று கிளம்பினேன்.
செல்லும் வழியிலேயே சில ட்விட்கள் போட நண்பர்கள் நட்ராஜ், கலீஸ் ஆகியோரும் ட்விட்டர்
வழியாக என்னுடன் பேருந்தில் பயணித்தார்கள்.
சென்று இறங்கியதும்
அங்கே மணிஜி, அகநாழிகை, பபாஷா,கும்கி ஆகியோர் வரவேற்றனர். ஈரோடு சங்கமத்தின் தூணான
அண்ணன் தாமோதர் சந்துரு அவர்களும், அவரின் நண்பர் அண்ணன் விஸ்வேஸ்வரன் அவர்களும் வந்திருந்தார்கள்.
மணிஜி சொன்னார்,
: “நாம, சூது கவ்வும் மாதிரி ஒரு லோ பட்ஜெட் படம் எடுக்கலாம்னு வந்தோம். சந்துரு அண்ணன்
ஷங்கர் படம் மாதிரி அதை பிரம்மாண்டம் ஆக்கிட்டார்” என்று சொன்னார். அது மிகையில்லை.
அருமையான கெஸ்ட் ஹவுஸ்.
இரண்டு நாட்களின்
மெனு (இது தீனி தின்னி குரூப்புக்காகவே)
முதல் நாள்
காலை – கவுண்டமனி
பிரம்மாவில் கேட்ட பேப்பர் ரோஸ்ட்,
(உண்மையிலேயே அது காற்றில் பறந்தது நேநோ மீட்டர்
தடிமனில் இருந்தது), முட்டை தோசை, விரால் மீன் குழம்பு, விரால் மீன் பொறியல்
மதியம் – தலைக்கறி
வருவல், ஈரல் வருவல்
இரவு – தோசை, புதினா
சட்னி, நாட்டுக்கோழி குழம்பு, வருவல்
இரண்டாம் நாள்
காலை
முட்டை பணியாரம்,
குடல் குழம்பு, நிலக்கடலை சட்னி
மதியம்
மட்டன் பிரியாணி,
சாப்ஸ். தால்சா. மணிஜி அண்ணன் சொன்னார். “ இந்த நளபாகஸ்தர், தன் விரலை மட்டும் தான்
வெட்டிப்போட்டு சமைக்கவில்லை, எல்லா வகை கறியையும் வெட்டி போட்டு விட்டார்” என்று.
இது மட்டுமில்லை.
காலை எழுந்ததும் நுங்கு போட்ட பதனீர், பின்னர் சுக்கு காபி, காரமான காலை உணவு முடிந்ததும்
தித்திப்பாக்க பலாச்சுளைகள், ஒரு மணி நேரம் கழித்து உணவு செரிக்க சுக்கு மிளகு திப்பிலி
ரசம்.
மதிய உணவுக்குப்பின்
பிளாக் டீ, லெமன் டீ வகையறாக்கள். இன்றும்
தொடர்கிறது. நான் தான் தவிர்க்க இயலாத சூழலால் நேற்றிரவே திரும்ப வேண்டிய சூழல்.
அருமையான சீசன்.
ஆயிரக்கணக்கில் மக்கள் வந்தாலும் அருவியின் வேகம் சமாளிக்கிறது. இரண்டு நிமிடத்திற்கு
மேல் நிற்கமுடியவில்லை, யாராலும். குப்புற படுக்கப்போட்டு யானைக்கூட்டம் தன் கால்களால்
மிதித்து ஓடுவதைப் போல முதுகில் விழுகிறது அருவி நீர். கோபமான மருமகள் தன் மாமியாரை
நினைத்து உலக்கையை குத்துவது போல நங் என தலையில் விழுகிறது அருவி. அழகை காண கண்கோடி
வேண்டுமென்பார்கள். குற்றால அருவியின் சுகத்தை அனுபவிக்க டபுள் எக்செல் பாடியாவது மினிமம்
வேண்டும். குண்டாக இருப்பதற்காக ஆனந்தப்பட்ட அபூர்வ நேரங்களில் இதுவும் ஒன்று. ஒல்லிக்குச்சி
காரர்களே உங்களை விட எங்கள் மேல் தான் அதிக சர்பேஸ் ஏரியாவில் அருவி விழுகிறது.
ஆனால் இதையெல்லாம் அனுபவிக்காமல் ஹமாம் சாம்பிள்
சோப்பை உடம்பு முழுவதும் போட்டுக்கொண்டு ஒரு கூட்டம் குளிக்கிறது. ஷாம்பு வேறு. டேய்,
அதத்தான் வீட்டில் செய்கிறீர்களேடா, இங்கு வந்து ஏண்டா என்று கேட்கத் தோன்றுகிறது.
பத்து லட்ச ரூபாயை
பிச்சைக்காரனுக்கு தர்மம் செய்தால் அவன் தங்கத்தில் திருவோடு செய்து சிங்கப்பூரில்
போய் பிச்சை எடுப்பான் என்பது போலத்தான் இவர்களும்.
டாபிக் மாறிட்டேன்.
இந்த முறை வாய்பார்த்தலும் மிகச் சிறப்பாக இருந்தது. மணிஜியிடம் இருந்து சினிமா நுட்பங்கள்,
பபாஷாவிடம் இருந்து தொழில் நுட்பம், அகநாழிகையிடம் இருந்து இலக்கியத்தகவல்கள்.
அண்ணன் தாமோதர்
சந்துரு அவர்களும், அவர் நண்பர் விஸ்வேஸ்வரன் அவர்களும் ஏராளமான விஷயங்களை சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
விஸ்வேஸ்வரன் அவர்கள் தமிழகத்தின் சூப்பர் ஹிட் வாகனங்களில் ஒன்றான டிவிஎஸ் எக்செல்லை
வடிவமைத்தவர். விரலி விடு தூதுவில் ஆரம்பித்து, கூளப்ப நாயக்கன் காதல் கதை வழியாக ஏராளமான
விஷயங்கள் அலசப்பட்டன. இறைவன் நான்கு காதுகள் வைத்திருக்கலாம் என ஒரு ஆசையும் அப்போது
வந்தது.
அருவி இருக்கும்.
உணவு கிடைக்கும். ஆனால் இந்த ஒத்த அலைவரிசை கொண்டவர்களுடனான உரையாடல்? அதற்கு பாக்கியம்
செய்திருக்க வேண்டும். அனுஷ்கா வந்து முத்தம் தருகிறேன் என்று அழைத்தால் கூட அப்பாலிக்கா
என்று மறுக்கும் மனதுடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.
குற்றாலம் குடும்பத்தோடு
வருபவர்களை விட நட்புக்கூட்டத்தோடு வருபவர்களுக்கேயானது. கவலை மறந்து நம்மை சார்ஜ்
ஏற்றிக்கொள்ள சரியான இடம். 35+ ஆண்கள் அடே புடே என்று பேசிக்கொண்டு, குளித்து, சாப்பிட்டு
தங்கள் கவலைகளை மறக்கும் இடம். நயாகராவெல்லாம் உலக அழகி போல. தூரமிருந்து பார்க்கத்தான்
முடியும். குற்றாலம் நம் அத்தை மகள் போல. எவ்வளவு (நமக்கு) வயசானாலும், அவர்கள் நல்லாயிருக்கீங்களா?
எனக் கேட்டதும் மனதில் ஒரு இனம் புரியா மகிழ்ச்சி பரவுமே? அது போல குற்றாலமும் உங்கள்
மனதிற்கு இதமளிக்கும் இடம்.
முடித்து கிளம்பும்
போது, இந்த சுகத்திற்காக இன்னும் உழைக்க வேண்டும் என்ற ஒரு வைராக்கியமும் ஒவ்வொரு ஆணின்
மூளையிலும் ஒரு பைட் அளவுக்காவது ஏறும்.
8 comments:
வாய்ப்பே இல்லை தோழர் ,காலச்சக்கரத்தில் ஏற்றி 23 வருடங்கள் பின்னோக்கி அழைத்து சென்றதுக்கு நன்றி
//எவ்வளவு (நமக்கு) வயசானாலும், அவர்கள் நல்லாயிருக்கீங்களா? எனக் கேட்டதும் மனதில் ஒரு இனம் புரியா மகிழ்ச்சி பரவுமே? //
visualise செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது. visualise மட்டும்தானே செய்து பார்க்க முடியும்!
வாய் பாத்திருங்கள் ....
நன்றி துரை
நன்றி தருமி அண்ணே.
நல்லா இருங்க !
(வயிற்றெரிச்சலுடன்)
அடுத்த சீசன் பிளான் பண்ணி வாங்க இளா. ஜமாய்ச்சிடுவோம்
குற்றாலம் தங்களுடன் வந்த உணர்வு..
உங்க அத்தை மகள் நல்ல இருக்காங்களா?!
நன்றி சங்கவி
நன்றி ராஜி. ம்ம் இருக்காங்க.
Post a Comment