20 வருடங்களுக்கு
முன்னர், சரியாகச் சொல்வதென்றால் 1993 ஆம் வருடம், மதுரையின் மீரான் சாகிப் தெருவான
தானப்ப முதலி தெருவின் முனையில் ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸில் நின்று கொண்டிருந்த போது,
எங்கள் ஊர் தியேட்டர் ஒன்றின் மேனேஜரை தற்செயலாக சந்தித்தேன். அப்போது, அவர் தன் உதவியாளருடன் ”என்ன, ரொம்ப பிகு
பண்ணுறான்” என்பது மாதிரி பேசிக் கொண்டிருந்தார். ஏதாவது ரஜினி அல்லது விஜயகாந்த் படத்தைப்
பற்றி பேசிக்கொள்கிறார்கள் போலும் என நினைத்தேன். தொடர்ந்த அவர்களுடைய பேச்சின் மூலம் அவர்கள் சரத்குமார் நடித்த “கட்டபொம்மன்”
படத்தை வாங்குவதற்காக முயற்சி செய்கிறார்கள் எனத் தெரியவந்தது.
அதற்கு முந்தைய
வருடத்தில் சூரியன், சாமுண்டி என இரண்டு வணிகரீதியான வெற்றிப்படங்களில் சரத்குமார்
நடித்திருந்தாலும் 93ல் வெளியான ஆதித்யன், பேண்ட்மாஸ்டர், தசரதன், முன் அறிவிப்பு மற்றும்
பெரிய பட்ஜெட் படமான ஐ லவ் இந்தியா ஆகியவை மண்ணைக் கவ்வியிருந்தன. அப்படி இருந்தும்
கட்டபொம்மனுக்காக ஏன் சண்டை போடுகிறீர்கள்? எனக் கேட்டேன். சரத்குமாருக்காக இல்லை மணிவாசகத்துக்காக
என்றார் தியேட்டர் மானேஜர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
தொடர்ந்த அவர்,
மணிவாசகத்தோட முதல் படம் “நம்ம ஊரு பூவாத்தா”, அடுத்து எடுத்த பெரிய கவுண்டர் பொண்ணு,
பட்டத்து ராணி எல்லாமே நம்ம தியேட்டர்ல ரெண்டு வாரம் ஓடுச்சுப்பா. ரேட்டும் கம்மியா
சொல்லுவாங்க. லாபம் கையில நிக்கும். கட்டபொம்மன்ல பாட்டெல்லாம் நல்லா இருக்கு. நேத்து
மெட்ராஸ்ல படம் பார்த்தவங்க நல்லாயிருக்குன்னு வேற சொன்னாங்க. அதான் புக் பண்ணீரலாம்னு
வந்தேன் என்றார். அவர் கணித்தது போலவே படம் எங்கள் ஊரில் மூன்று வாரங்கள் ஓடி, அவர்களுக்கு
நல்ல லாபத்தை தந்தது.
இப்படி தியேட்டர்காரகளும்
நம்பிக்கை வைக்கும் இயக்குநராக இருந்தவர் மணிவாசகம். பெரும்பாலும் அவர் கிராமிய கதைகளங்களையே
கையாண்டார். பெரும்பாலான கிராமியப் படங்களின் பேக் டிராப்பாக உழவு மற்றும் அதைச் சார்ந்த
தொழில்களே இருக்கும், இல்லையென்றால் கிராமியக் கலைவடிவங்கள் இருக்கும். கரகாட்டக்காரன்,
வில்லுப்பாட்டுக்காரன், தெம்மாங்கு பாட்டுக்காரன், நாடோடி பாட்டுக்காரன், நாட்டுப்புற
பாட்டு, என் ஆச ராசாவே என உதாரணங்கள் ஏராளம். மிக குறைவாகவே வேறு தொழில் சார்ந்த களங்கள்
கையாளப்படும்.
மணிவாசகம் தன்னுடைய
படங்களில் முழுக்க முழுக்க இம்மாதிரி வேறு தொழில் சார்ந்த களங்களையே தன்னுடைய படங்களில்
பயன்படுத்தினார். பாதிக்கும் மேலான காட்சிகள் அந்த இடத்திலேயே நடைபெறும். அவரின் முதல்
படமான நம்ம ஊரு பூவாத்தாவில் முரளி நாயகன், கௌதமி நாயகி. கௌதமி தையல் வேலை செய்யும்
ஏழைப்பெண். அப்போதெல்லாம் கிராமங்களில் பெண்கள் வயதுக்கு வந்த உடன் படிப்பை நிறுத்தி
விடுவார்கள். திருமணம் ஆகும் வரை அவர்கள் ஏதாவது வேலை செய்து வருவார்கள். பெரும்பாலான
பெண்கள், தையல் கற்றுக்கொண்டு, வீட்டில் ஒரு தையல் மெஷினை வைத்து வீட்டிற்கு பொருளாதார
பலம் சேர்ப்பார்கள். அந்த மாதியான தையல் பெண் கேரக்டரில் கௌதமி நடித்திருந்தார். முரளியின்
மீது அவருக்கு வரும் காதல், அதனால் ஏற்படும் பிரச்சினைகள் என எளிமையான கதை. கவுண்டமணியின்
நகைச்சுவை, தேவாவின் கதைக்குப் பொருத்தமான இசை என படம் 50 நாட்கள் ஓடியது. அந்தப் படத்தின்
குறைவான பட்ஜெட்டினால் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் லாபம் கிடைத்தது.
உடனே அடுத்து சரத்குமார்-கௌதமி
காம்பினேஷனில் பெரிய கவுண்டர் பொண்ணு படத்தை தொடங்கினார். அப்போது சரத்குமார் நாயகனாக
மாறியிருந்த நேரம். அவரை முழு நாயகனாக மாற்றிய சூரியன் வராத காலகட்டம். கதை நடக்கும்
இடமாக மணிவாசகம் தேர்வு செய்தது இரும்பு பட்டறை. முதலாளி கம் தொழிலாளியாக சரத்குமார்,
துணைக்கு கவுண்டமணி-செந்தில். இசைக்கு தேவா. சரத்குமாரின் அம்மா மனோரமா, தன் தம்பிக்கு
தன் சொத்தைக் கொடுத்து, அவர் மகளை தனக்கு மருமகளாக்க வேண்டும் என சத்தியம் வாங்கியிருப்பார்.
தம்பி மகள் கௌதமி, பட்டணத்துக்கு படிக்கச் சென்று, வந்தபின் திருமணம் செய்ய ஒத்துக்
கொள்ள மாட்டார். எப்படி கௌதமியை சரத் திருமணம் செய்கிறார் என்பதே கதை. படத்தின் ஹைலைட்
கவுண்டமணி-செந்திலின் காமெடி காட்சிகள் தான். மிகக்குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட
இந்தப்படமும் அனைவருக்கும் லாபம் தந்தது. கிராமப்புற பகுதிகளில் சரத்குமாருக்கு ஒரு
இமேஜைத் தந்தது.
முதல் இரண்டு படங்களிலும்,
தனக்கு கைகொடுத்த காமெடியை அடுத்த படத்தில் முழுவதுமாக எடுத்துக் கொண்டார் மணிவாசகம்.
அதுதான் பட்டத்து ராணி. கவுண்டமணியின் காம்பவுண்டில் வசிக்கும் யாரும் அவருக்கு வாடகை
தருவதில்லை. எனவே செந்தில் ஒரு ஐடியா தருகிறார். வயதானவரை திருமணம் செய்து கொண்ட இளம்
பெண்ணை இங்கே குடிவைத்தால், அந்தப் பெண்ணை வசீகரிப்பதற்காக எல்லா ஆண்களும் நல்லவராக
நடிக்க முயற்சிப்பார்கள். வாடகையை ஒழுங்காகக்
கொடுப்பார்கள் என. இளம்பெண்ணாக கௌதமியும், வயதானவராக விஜயகுமாரும் நடித்திருந்தார்கள்.
ஜனகராஜ், மணிவாசகம், டெல்லி கணேஷ் ஆகியோர் குடித்தனக்காரர்களாக நடித்திருந்தார்கள்.
காட்சிக்கு காட்சி நகைச்சுவை இழையோடிய படம். ஆனால் பெரிய வெற்றியைப் பெறவில்லை. விஜயகுமாருக்குப்
பதிலாக அப்போதைய நாயக நடிகர்களில் ஒருவரே வயதான கெட்டப்பில் நடித்திருந்தால் படம் நன்கு
கவனிக்கப்பட்டு இருந்திருக்கும்.
அடுத்து மணிவாசகம்
இயக்கிய படம்தான் “கட்டபொம்மன்”. வழக்கமான பழிவாங்கும் கதைதான். சரத்குமார் ஜோடியாக
வினிதா. முக்கிய வேடம் ஒன்றில் நாகேஷ். தேவாவின் இசை. கிராமத்து ரைஸ்மில் பேக்டிராப்.
சரத்குமார் முதலாளி. கவுண்டமணி சூப்பர்வைசர், செந்தில் உதவியாளர். இன்றுவரை இந்தப்படத்தின்
காமெடி காட்சிகள் ரசிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய இளைஞர்களின் கலாச்சாரமான மீம்களிலும்
இந்தப் படத்தின் காமெடி காட்சிகள் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. கூடுதல் கவர்ச்சிக்கு
இந்தி நடிகை பூனம் தாஸ் குப்தாவும் நடித்திருந்தார். இந்தப் படம் பி மற்றும் சி செண்டர்களில்
நல்ல வசூலைத் தந்தது. சரத்குமாரை ஒரு வணிக மதிப்புள்ள நாயகனாக மாற்றியதில் இந்தப் படத்திற்கும்
ஒரு பங்கு உண்டு.
அடுத்து மணிவாசகம்
ரைஸ்மில்லில் இருந்து ஆயில் மில்லுக்கு மாறினார். பிரபுவை நாயகனாகவும்,கனகாவை நாயகியாகவும்
கொண்டு வழக்கம் போல கவுண்டமணி-செந்தில் காமெடி, தேவாவின் இசை. கனகா மில் முதலாளியின்
மகள், பிரபு, கவுண்டமணி அங்கே சூப்பர்வைசர்கள். பல தடைகளுக்குப் பின்னர் பிரபு, கனகாவை
திருமணம் செய்து கொள்வார். பெண்ணாசை கொண்ட ஆனந்த்ராஜ், கனகாவை அடையவேண்டும் என நினைப்பார்.
அதுவும் கன்னியாக. அதனால் பல குழப்பங்களைச் செய்வார். இறுதியில் வழக்கம்போல எல்லாச்
சதிகளையும் முறியடித்து நாயகன் வெல்வார். ஒரு வகையில் வாலி படத்துக்கு இது இன்ஸ்பிரேஷனாக
இருக்குமோ என நான் நினைத்ததுண்டு. இந்தப் படத்திலும் கவுண்டமணி அமர்க்களப் படுத்தி
இருப்பார். இப்போது, படங்களில் காமெடி கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் ஷகிலா தன் தங்கை
ஷீத்தலுடன் இணைந்து இந்தப் படத்தில் கவுண்டமணியின் ஜோடியாக நடித்திருப்பார். இந்தப்
பட காமெடி காட்சிகளும் மீம் தயாரிப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இந்தப்
படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும் முதலுக்கு மோசமில்லாமல் போனது.
அடுத்ததாக மீண்டும்
டெய்லர் கடைக்கே வந்தார் மணிவாசகம் “மருமகன்” திரைப்படத்தின் மூலமாக. இம்முறை ஆண் டெய்லர்.
பாம்பேயில் நவீன டெய்லரிங் கற்று வந்தவராக, கார்த்திக் நடித்தார். கார்த்திக்கை காதலிக்கும்
எம்.பியின் மகளாக மீனா. வழக்கம் போல் தேவாவின் இசை,மனோரமா, கவுண்டமணி, செந்தில் ஆகியோரும்
உண்டு. இதிலும் கவுண்டமனி-செந்தில் காமெடி நன்கு ஒர்க் அவுட் ஆனது. ஆனால் படம் எதிர்பார்த்த
அளவு ஓடவில்லை.
நாட்டாமை படத்தின்
வெற்றிக்குப் பின்னர், சரத்குமார் தன் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக எடுத்த படம்
”நாடோடி மன்னன்”. செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருந்து, கோடீஸ்வரரின் மகள் மீனாவை
மணந்து, பின் தன்னுடைய உழைப்பால் முன்னேறி சென்னை நகரின் ஷெரிப் ஆக மாறும் பாத்திரம்
சரத்குமாருக்கு. எம்ஜியாரின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாகவும், அரசியல் வாழ்க்கைக்கு
அடித்தளமாகவும் இருந்த படம் நாடோடி மன்னன். அதே போல தன்னுடைய கேரியரும் மாற வேண்டுமென
சரத்குமார் நினைத்து இந்தப் படத்தை எடுக்கச் சொல்லி இருப்பார் போலும்.
பழைய கதை, செருப்பு
தைக்கும் இடம், அங்கு வரும் காதல், மீனா தன் காதலை சரத் ஏற்றுக் கொள்ள எடுக்கும் முயற்சி
என நகரும் கதையில் காமெடி அவ்வளவாக எடுபடவில்லை. நாடோடி மன்னனில் இரண்டு எம்ஜியார்
என்றால் இங்கே இரண்டு மீனா. மகள் மீனாவை காதலிக்கும் கேரக்டரில் விக்னேஷ். பாரின் லொக்கேஷனில்
எடுத்த பாடல் காட்சிகள் ரசிக்கப்பட வில்லை. மணிவாசகம் இயக்கிய படங்களிலேயே அதிக செலவு
செய்த படம் இதுதான். தோல்வி அடைந்ததால் பெரிய நஷ்டத்தை அனைவருக்கும் கொடுத்தது.
இந்தப் படத் தோல்விக்குப்
பின்னர் மணிவாசகம் இயக்கிய படம் மாப்பிள்ளை கவுண்டர். பிரபு நாயகனாகவும், ஷாக்சி, சுவாதி
நாயகிகளாகவும் நடித்தனர். படிக்க வைத்தால் நம் குழந்தைகள் வேறு ஒருவரை காதலித்து விடுவார்கள்.
எனவே படிக்க வைக்க வேண்டாம் என அக்காவும், தம்பியும் முடிவெடுக்கிறார்கள். அக்கா, தன்
மகன் பிரபுவை படிக்க வைக்காமல் இருக்கிறார். ஆனால் தம்பியோ தன் மகள் ஷாக்ஷியை படிக்க
வைத்து விடுகிறார். ஷாக்ஷிக்கு பிரபுவை பிடிக்காமல் போக, தன் வீட்டிற்கு பஞ்சம் பிழைக்க
வந்த சுவாதியை திருமணம் செய்து கொள்கிறார் பிரபு. 1997ல் ஏற்றுக் கொள்ள முடியாத கதை.
அரதப் பழசான காட்சி அமைப்புகள். இந்தப் படத்தில் இரண்டு மாறுதல்கள். ஒன்று கதையின்
பேக் டிராப்பாக விவசாயம். மற்றொன்று கவுண்டமணிக்குப் பதிலாக வடிவேல். இந்தப் படமும்
தோல்விப்படமே.
மணிவாசகம் தனக்கென
ஒரு டெம்பிளெட் வைத்திருந்தார். அதன்படியே படங்களை அவர் இயக்கினார். பெரும்பாலும் கொங்கு
பாஷை, அக்கா-தம்பி பாசம், தொழிற் கூடம் ஒன்றைச் சுற்றி நடக்கும் கதை, நிறைய நகைச்சுவை,
எந்த விதத்திலும் தனித்து தெரிந்திராமல் பழக்கப்பட்ட சிட்சுவேசன்களுக்கான பழக்கப்பட்ட
டியூனில் பாடல்கள் என்ற வட்டத்தை விட்டு வெளியே வரவில்லை. வர முடியவில்லை என்றும் சொல்லலாம்.
இப்போது நீங்கள்
பார்க்கும் ஆறு, சென்ற வினாடி நீங்கள் பார்த்த ஆறு அல்ல என்ற புகழ்பெற்ற கவிதை வரிதான்
ஞாபகம் வருகிறது. மக்களின் ரசனை நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வருகிறது. சில படங்கள்,
அடுத்து வரும் படங்களின் படமாக்கலில், மக்களின் எதிர்பார்ப்பில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி
விடுகின்றன. 1990 ஆம் ஆண்டு படத்தைப் பார்த்தவர்கள் 1997ல் எவ்வளவு ரசனை மாற்றம் கொண்டிருப்பார்கள்?
நிச்சயம் ஒரு கூடுதலான அனுபவத்தையே எதிர்பார்ப்பார்கள். அதைக் கணக்கில் கொள்ளாமல் ஓரிடத்திலேயே
சுணங்கி நிற்கும் போது, நாம் தோற்று விடுகிறோம்.
அடுத்து சில ஆண்டுகள்
கழித்து மணிவாசகம் உடல் நலக் கோளாறால் அவதியுற்று காலமானார்.
காட்சிப்பிழை பிப்ரவரி’15 இதழில் வெளியான என்னுடைய கட்டுரை. நன்றி காட்சிப்பிழை ஆசிரியர் குழு.