June 17, 2015

இயக்குநர் ஆர் வி உதயகுமார்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், ஆர் வி உதயகுமார் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் கார்த்திக்,குஷ்பூ, ரேவதி நடிப்பில் ”கிழக்கு வாசல்” என்று கேள்விப்பட்ட போது உதயகுமாரின் வழக்கமான ஆக்‌ஷன் திரில்லர் வகைப் படமாகவே இதுவும் இருக்கும் என்றே தோன்றியது. பாடல்கள் வெளியானபோது, என்ன இது முந்தைய உதயகுமார் படங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்காது போலயே என்ற எண்ணம் ஏற்பட்டது.

ஏனென்றால் திரைப்பட கல்லூரி மாணவரான ஆர் வி உதயகுமாரின் முதல் படமான உரிமை கீதம் ஒரு நல்ல ஆக்‌ஷன் திரில்லர். பிரபு, கார்த்திக் காம்பினேஷன். பத்திரிக்கை விமர்சனங்களால், படத்திற்கான பார்வையாளர்களை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடிந்த காலம். பெரும்பாலான பத்திரிக்கைகளில் நேர்மறையான விமர்சனங்கள் வர படம் வெற்றி பெற்றது. அதையடுத்து சிவாஜி கணேசன், சத்யராஜ், ரூபிணி,கௌதமி என்ற நட்சத்திர பட்டாளத்துடன் இணைந்து செய்த ”புதிய வானம்” பெரிய அளவில் அளவில் பேசப்படவில்லை. தொடர்ந்து அவர் பிரபு, சிவக்குமாரை வைத்து இயக்கிய “உறுதி மொழி” ரசிகர்களை ஈர்க்கவில்லை.

இந்த நிலையில் தான் கிழக்கு வாசல் வெளியானது. பொதுவாக திரைப்பட கல்லூரி மாணவர்கள் கிராமிய கதைகளை எடுக்க மாட்டார்கள் என்ற சூழல் நிலவிய நேரம். உழவன் மகன், செந்தூரப் பூவே போன்ற படங்களை அவர்கள் எடுத்திருந்தாலும், அவையெல்லாம் கிராமத்தை பிண்ணனியாகக் கொண்ட வழக்கமான பழிவாங்கும் கதைகள் தானே ஒழிய, கிராமிய மனிதர்களை, அவர்களின் உணர்வுகளைச் சித்தரித்த படங்கள் அல்ல. கிழக்கு வாசலும் அப்படித்தான் ஆரம்பித்தது. ஆனால் அதில் ரேவதி கேரக்டர் எண்டரி ஆனவுடன் படத்தின் நிறமே மாறியது.
படம் முடிந்து வெளியே வந்தபோது, தாயம்மாவும், வள்ளியூரானும், சின்ன புள்ளயும், பெரிய கருப்பத் தேவரும்தான் மனதில் இருந்தார்கள். எம் எஸ் மதுவின் கதையை தான் பழகிய சூழலின் மாந்தர்களால் சிறப்புப் படுத்தி இருந்தார். நிர்ப்பந்தத்தால் ஊர் பெரிய மனிதருக்கு சின்ன வீடாக வரும் இளம் பெண், ஊரில் உள்ள கூத்துக் கலைஞனுடன் அவளுக்கு வரும் காதல்,அதைத் தொடர்ந்து எழும் பிரச்சினைகள் என ஒரு நிறைவான அனுபவத்தை கொடுத்த படம்.

அடுத்ததாக உதயகுமார் இயக்கிய “சின்ன கவுண்டர்” தமிழ்சினிமாவில் ஜாதியை அப்பட்டமாக, பெருமையோடு காண்பிக்கும் ட்ரெண்டுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம். அதற்கு முன்னால் வந்த நட்சத்திர நடிகர்கள் நடித்த கிராமியப் படங்களை எடுத்துக் கொண்டால், இலை மறை காயாகவே ஜாதி சொல்லப்பட்டிருக்கும். சிவாஜி கணேசன், கார்த்திக் நடித்த சில படங்களில் அவர்கள் தேவர் பிரிவைச் சேர்ந்தவர்களாக பெயரோடு சேர்த்து சொல்லப்படும். ஆனால், அவர்கள் சாமானியர்களாகவே காட்சிப் படுத்தப்பட்டிருப்பார்கள். ஊர்ப் பெரியவர், மரியாதைக்காரர் என பெரிய சிலாகிப்புகள் இருக்காது. ஊர்ப் பெரிய மனிதர்/நிலச் சுவான் தாரராக மூக்கையாத் தேவர் என்ற கதாபாத்திரத்தில் சிவாஜி நடித்த “பட்டிக்காடா பட்டணமா”வில் கூட அவர் மனைவியுடன் தோற்றுப் போகும், சண்டையிடும் ஆசாபாசம் கொண்டவராகவே இருப்பார்.
எம்ஜியாரோ, சமூகப் படங்களில் ஊர்ப் பெரிய மனிதராகவோ, ஏதாவது ஜாதிக்காரராகவோ நடித்ததில்லை. அவர் படங்களில் பண்ணையார்களை, ஊர்ப் பெரிய மனிதர்களை மோசமானவர்களாகத்தான் கட்டமைப்பார். சங்கிலி முருகன் தயாரித்த படங்களில் நாயகனின் ஜாதியைச் சொன்னாலும், அந்த நாயகன் பெரும் தலைவனாக எல்லாம் காட்சிப்படுத்தி இருக்க மாட்டார்கள்.

முதன் முதலில் ஒரு ஆதிக்க ஜாதி, ஊர் பெரிய மனிதராக,நல்லவர், வல்லவராக ஒரு பெரிய ஹீரோ நடித்து வந்த படமென்றால் தயங்காமல் சின்ன கவுண்டரைச் சொல்லலாம். இந்தப் படத்திற்கு தமிழர்கள் கொடுத்த வெற்றி, தாராளமாக ஜாதியின் பெயரில், ஜாதிக்காரர்களின் பெருமையை தூக்கிப் பிடிக்கும் வகையில் படமெடுக்கலாம் என பலருக்கும் தைரியம் தந்தது. இந்தக் கால கட்டத்தில் டப்பின் படங்களின் ராணியாக விளங்கிய விஜயசாந்தி கூட, தான் நடித்த ஒரு தெலுங்குப்படத்தை “கவுண்டர் பொண்ணா கொக்கா” என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்.

”புதிய பாதை” படத்தைப் பார்த்துவிட்டு, ரஜினிகாந்த் பார்த்திபனிடம் இப்படிச் சொன்னாராம் “எங்களுக்கு 40 படத்துக்கு அப்புறம் கிடைத்த ஆக்‌ஷன் ஹீரோ இமேஜ்” உங்களுக்கு முதல் படத்திலேயே கிடைத்து விட்டது என்று. அது போல விஜயகாந்துக்கு இப்படத்தின் மூலம் கிடைத்த இமேஜ் அளவிட முடியாதது. எப்படி “நாடோடி மன்னன்” படத்திற்குப் பின்னர் இவரால் நாட்டை ஆளமுடியும் என்ற நம்பிக்கை தமிழக மக்களுக்கு வந்ததோ, அதைப் போல ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாகவே இருந்த விஜயகாந்துக்கு தலைவன் என்ற இமேஜைக் கொடுத்தது சின்ன கவுண்டர்.

இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி, இளையராஜாவின் தயாரிப்பில், கமல்ஹாசன் நடித்த ”சிங்காரவேலன்” பட வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. இது அவர் இயக்கிய முந்தைய படங்களில் இருந்து மாறுபட்ட முழு நீள நகைச்சுவைத் திரைப்படம். அடுத்ததாக ஏவிஎம் தயாரிப்பில், ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது. படம் ஏவிஎம்மின் பிரத்யேக விளம்பரங்களால் சில திரையரங்குகளில் நீண்ட நாள் ஓடியது. நிலப்பிரபுத்துவத்தை தூக்கிப் பிடிக்கும் ஏராளமான காட்சிகள் இந்தப் படத்தில் இருந்தது. அதில், பண்ணையார் நடந்துபோன பாதையில் இருந்து மண்ணை அள்ளி நெற்றியில் பூசிக் கொள்வது, அவர் காலடித் தடத்தைக் கூட மற்றவர்கள் மிதிக்காமல் இருப்பது போன்ற காட்சிகளை வைத்திருந்தார்.

ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்ற ஏராளமான ரசிகர் கூட்டம் உடைய, ஒரு தலைமுறையை கவர்திழுக்கக் கூடிய அளவுக்கு சக்தி உள்ள நடிகர்கள் இம்மாதிரியான காட்சிகளில் நடிப்பது, மக்களின் மனதில் நிலப்பிரபுத்துவச் சினதனையை மங்காமல்  வைத்திருக்க முக்கியப் பங்காற்றும்.

அடுத்து உதயகுமார் இயக்கிய பொன்னுமணியிலும் முதலாளியின் மீதான விசுவாசம் பிரதான பங்கு வகித்தது. அடுத்து, பிரபுவின் 100வது படமான “ராஜகுமாரன்”. பெயரே சொல்லிவிடும். இந்தப் படத்திலும் மீண்டும் பண்ணையார், பொய் சொல்லாதவர், ஊர்ப் பெரிய மனிதர், பகை என காட்சிகள். போலிஸ் கதை அல்லது வில்லன்களை பழிவாங்கும் கதை என்பது ஒன்றுதான், ஆனால் அதை ஒரே நடிகரே செய்து கொண்டிருந்தால் மக்கள் அலுப்படைந்து விடுவார்கள். வேறு வேறு நடிகர்கள் அடுத்தடுத்த தலைமுறையில் அந்த வேடங்களில் நடிக்கும் போது மக்கள் அதை ரசிப்பார்கள் என்று சொல்வார்கள். காதல் படங்களும் கூட அப்படித்தான். உதயகுமார் தன்னிடம் இருந்த நல்லவரான ஊர்ப் பெரிய மனிதர் கதையை வெவ்வேறு நடிகர்களை வைத்து எடுத்தார். மக்களுக்கு அந்த சட்டகத்தில் அலுப்பேற்பட்டதும் அவரின் இடம் பறிபோனது. ராஜகுமாரனின் தோல்வியால்  உதயகுமார் மீண்டும் பாதை மாறினார். கார்த்திக் நடிப்பில் நந்தவன தேரு, அர்ஜூனுடன் இணைந்து சுபாஷ் ஆகிய படங்களை இயக்கினார். பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பின் கற்க கசடற என்னும் படத்தை இயக்கினார்.

உதயகுமாரின் சினிமா வாழ்க்கை ஆச்சரியமானது. குறைந்த படங்களே இயக்கியிருந்தாலும் அதில் சிவாஜி கணேசன்,ரஜினிகாந்த்,கமல்ஹாசன், விஜய்காந்த், கார்த்திக்,பிரபு, அர்ஜூன் என நட்சத்திர நடிகர்களை இயக்கி இருக்கிறார். அவர் இயக்கத்தில் வெளியான கற்க கசடற மட்டுமே அன்றைய தேதிக்கு மார்க்கட் மதிப்பு இல்லாத நாயகனைக் கொண்டு எடுக்கப்பட்டது.

மேலும் முதல் மூன்று படங்கள் ஆக்சன், திரில்லர் வகையில் கொடுத்துவிட்டு எல்லோராலும் ரசிக்கும் படியான கிராமத்து கதைக்களன் கொண்ட படங்களை அடுத்தடுத்து கொடுக்க முடிந்தவர் இவர். உதயகுமார் தன்னுடைய படங்களில் பல பாடல்களை எழுதியுள்ளார். இளையராஜாவின் இசையில் பல நல்ல பாடல்களை தன் படத்துக்கு வாங்கினார்.

உதயகுமாரிடம், நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளைத் தாங்கிப் பிடிக்கும் மனம் இருந்தது. அது முதலில் வெளிப்படாவிட்டாலும், சமயம் கிடைக்கும் போது வெளிப்பட்டது. பின்னர் பெரிய அளவிலான தோல்வி அடையும் வரை அதை அவர் கைவிடவில்லை. தன் முதல் படமான, உரிமை கீதத்தில் பிரபு பணத்திற்காக ரத்ததானம் செய்வார். அப்போது சலவைத் தொழிலாளியான ஜனகராஜ் ”என் ரத்தத்துக்கு எல்லாம் கொஞ்சம் பணம் தான் கொடுத்தாங்க. ஆனா உன்னது ராஜ பரம்பரை ரத்தம், நிறைய கொடுத்தாங்க” என்பார். கிழக்கு வாசலில் பண்ணையாரின் சின்ன வீடாக இருந்தாலும், அவள் கற்போடுதான் இருக்கிறாள், கன்னி கழியவில்லை எனவே அவளை நீ திருமணம் செய்து கொள்ளலாம் என்ற பொருளில் “தாயம்மா கறந்த பால விட சுத்தமானவ” என்னும் வசனம் வரும். சின்ன கவுண்டர், எஜமான் எல்லாம் படம் முழுவதுமே ஆணாதிக்க, நிலப்பிரபுத்துவ சிந்தனை உடைய காட்சிகள் தான்.

பொன்னு மணியில், பன்ணையாரிடம் வேலை செய்யும் வேலையாள் அவருக்காக உயிரை விடும் தருவாயில் கூட, தன் மகனிடம் (சிறுவன்) பண்ணையாரின் கையைப் பிடித்துக் கொடுத்து,அவரை பத்திரமாக பார்த்துக் கொள் என்பார். 


ஆர் வி உதயகுமார் சின்ன கவுண்டர், எஜமான் மூலம் செய்ததை கே எஸ் ரவிகுமார் நாட்டாமை, முத்து, நட்புக்காக என்று தொடர்ந்தார். பெயரிலேயே ஜாதிப் பெயரை அப்பட்டமாக வைக்கும் வழக்கம் சின்ன கவுண்டரில் ஆரம்பித்து, தேவர் மகனில் வலுவடைந்து இன்று சுந்தர பாண்டியன், குட்டிப்புலி, கொம்பன் என வலுவடைந்து நிற்கிறது. இந்த போக்கிற்கு ஆரம்பம் கொடுத்தவர் ஒரு திரைப்பட கல்லூரி மாணவர் என்பதுதான் நெருடலான விஷயம்.

June 15, 2015

வாடகை வீடு

மகனின் ஸ்கூல் அப்ளிகேஷனை சரசரவென நிரப்பிக் கொண்டே வந்தேன். பெர்மனெண்ட் அட்ரஸ் என்பதை கண் கண்டுகொண்டதும் கையின் வேகம் குறைந்தது. திருமணமாகி ஆண்டுகள் கழிந்தவர்கள், ஏதாவது அப்ளிகேஷனை பில் செய்ய நேர்கையில் சில்ரன்ஸ் என்ற கேள்வியைப் பார்த்ததும் வருத்தப்படுவார்களே அதற்கு ஈடானதுதான் இதுவும்.

என் 40 ஆண்டுகால வாழ்க்கையில் இதுவரை சொந்த வீட்டில் இருந்ததே இல்லை. பிறந்ததில் இருந்தே வாடகை வீடுதான். என் தந்தை, தாத்தாவும் சொந்த வீட்டில் இருந்ததே இல்லையாம். நான் கூட கிண்டலாகச் சொல்வதுண்டு, நம் முன்னோர்கள் குகை மனிதர்களாக இருந்தபோது கூட குகைக்கூலி கொடுத்துத்தான் தங்கியிருப்பார்கள் என.

என் தாத்தா ஒரு கடையில் சிப்பந்தியாய் இருந்து நான்கைந்து வீடுகள் மட்டும் மாறி தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர். என் தந்தை அரசு அலுவலராய் இருந்தும் 20 வீடுகளுக்கு மேல் பார்த்தவர். அவர் இருந்தது நல்ல மேல் வரும்படி உடைய டிபார்ட்மெண்ட்தான். அவரும் சபலப்படக்கூடியவர்தான். ஆனால் சபலத்தை அவரின் பயம் வென்றுவிட்டது. சஸ்பெண்ட் ஆனாலோ, வேலை போய்விட்டாலோ என்ன செய்வது என்ற அச்சத்திலேயே அவர் நல்லவராக நடந்து கொண்டார். அவரின் இருப்பு மற்றவர்களுக்கு இடைஞ்சலாய் இருந்தது. அந்த இடத்திற்கு போட்டி போடுபவர்களால் அதிகபட்சம் இரண்டாண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் அவரால் இருக்க முடியவில்லை.
எங்கள் வீட்டில் எந்தப் பொருள் வாங்கினாலும், இதை எளிதாக, உடையாமல் எடுத்துச் செல்ல முடியுமா என்றுதான் பார்த்து வாங்குவோம். கட்டிலை பிரித்து எடுத்துச் சென்று விடலாம், ஆனால் பீரோவை அப்படி சுலபமாக தூக்கமுடியாது என்பதற்காகவே அதை வாங்குவதைத் தவிர்த்தோம். இல்லையென்றாலும் அதில் வைக்கும் அளவுக்கு எங்களிடம் மதிப்பான பொருள் எதுவும் இல்லை. என்னையும், என் அண்ணனையும் படிக்க வைப்பதற்கே என் தந்தை கரணம் அடிக்க வேண்டி வந்தது.

அண்டை அசலில் யாராவது நீங்கள் டூர் போயிருக்கீங்களா என்று கேட்டால், என் அம்மா விரக்தியுடன் சொல்லுவார். நாங்க ரெண்டு வருசத்துக்கு மொத்தமா புதுப் புது இடத்துக்கு டூர் போவோம் என.
என் அண்ணனுக்கு சொந்தத்தில் ஒரு பெண் அமைந்து தப்பித்தான். எனக்கு அப்படி எதுவும் இல்லாததால் வீடில்லாத கொடுமை முகத்தில் அறைந்தது. வேலை சுமார்தான் அது பரவாயில்லை. ஆனா சொந்தமா கையலக நிலம் கூட இல்லை. எங்க பொண்ணுலாம் சொந்த வீட்டுல வசதியா இருந்தவ. எப்படிக் கொடுக்கிறது? என தரகரிடம் கேட்டார்கள். சரி, பிறந்ததில் இருந்தே காம்பவுண்டு, ஒண்டிக்குடித்தனங்களில் காலம் தள்ளிய பெண்ணைப் பிடிக்கலாம் என்றால், இவ்ளோ காலம் கஷ்டப்பட்டுட்டா, எலி வளையா இருந்தாலும் தனி வளையா கிடச்சா பரவாயில்லை என்றார்கள்.

என் தந்தையின் தரகரிடம், முதல் தாரத்துப் பொண்ணு, இப்போ ரெண்டாம் தாரத்துக்கிட்ட கஷ்டப்படுற மாதிரி இருந்தா, தள்ளி விட்டாப் போதும்னு கொடுத்துடுவாங்க, அது மாதிரிப் பாருங்க என்றார். இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆனது. திருமணத்தின் போது என் அண்ணனின் மாமனார், “உங்க அப்பன் இப்ப காமிச்ச விவரத்த அந்தக் காலத்துல காமிச்சு ஒரு வீட்டக் கட்டியிருந்திருக்கலாம்” என்று கமெண்ட் அடித்தார்.

இது போன்ற குத்தல்களை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்ததால், திருமணத்திற்கு முன்னர் இடம் வாங்கி விட வேண்டும் என நினைத்திருந்தேன். திருமண செலவுகள், வைத்திய செலவு என அது கைகூடாமல் போனது. குழந்தை பிறப்பதற்குள், அவன் ஸ்கூலில் சேர்வதற்குள் என அந்த நினைப்பு நினைப்பாகவே தள்ளி தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

தனியாரில் வேலை செய்தாலும் வேலை இழப்பு, வேலை மாற்றம், பொருளாதார நெருக்கடி என நானும் இப்போதே நாலைந்து வீடுகள் மாறிவிட்டேன். கடைசியாய் ஒரு ஹால் மற்றும் கிச்சன் உடைய வீட்டில் இருக்கிறேன். நான் சிறு வயதாய் இருந்த போது, தெரு அண்ணன்களுடன் செகண்ட் ஷோ போக ஏன் தாராளமாய் அனுமதித்தார், ஞாயிறு மதியம் விளையாடப் போக ஏன் ஊக்கப்படுத்தினார் தந்தை என இப்போது புரிந்தது.

மனதில் ஓடிய எண்ணங்களை கட்டுப்படுத்திக் கொண்டு, என்னடா, பிரண்ட்ஸ விட்டுட்டு வர்றது கஷ்டமா இருக்கா? என பையனிடம் கேட்டேன். அதுனால என்னப்பா? புதுப்புது பிரண்ட்ஸ் கிடைச்சிட்டே இருக்காங்களே? என்றான் வயதுக்கு மீறிய மெச்சூரிட்டியுடன்.
யோசித்துப் பார்த்தால் அவனை குழந்தையாகவே இருக்க விட வில்லை நானிருந்த வாடகை வீடுகள். இரவில் ஒரு பூச்சி கடித்து, அவன் அழுதால் கூட அருகாமை வீடுகளில் இருந்து கேட்கும் உச் உச் ஒலிகளுக்கு பயந்து அவன் வாயை மூடி வெளியில் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறேன். சுவரில் கிறுக்கக் கூடாது என்பதற்காக கையை துண்டால் கட்டிப் போட்டிருக்கிறேன். ஒருமுறை காலில் சூடான பால் கொட்டி, இரவில் அவன் அழுவானே என்பதற்காக இருமல் மருந்து நாலு மூடி ஊற்றி தூங்க வைத்திருக்கிறேன். ஒரு முறை மாடியில் இருந்த போது எந்நேரமும் டங் டங் என சத்தம் கேட்கிறது என சலித்துக் கொண்ட வீட்டு உரிமையாளருக்காக அவனை பிளாஸ்டிக் சேரை விட்டு இறங்க விடாமல் செய்திருக்கிறேன்.

இதெல்லாம் போய்த் தொலையட்டும். விவரமில்லா வயதில் அவன் அனுபவித்த வேதனைகள். திருமணத்திற்குப் பிறகாவது, அவன் மன சாந்தியுடன் வாழவேண்டும். எங்கே மகன் விழித்து விடுவானோ என பயந்து கொண்டே தாம்பத்யம் அனுபவிக்கும் கொடுமை  வேண்டாம், அவன் குழந்தையை பிறந்த உடனேயே பெரியவனாக வளர்க்க வேண்டாம்.


மனதில் சொல்லிக் கொண்டேன். மகனே இன்னும் கடுமையாக உழைப்பேன், 15 வருடம் ஊண்,உறக்கம் இல்லாமல் உழைப்பேன் என்று. 

June 06, 2015

இயக்குநர் மணிவண்ணன்

இரண்டாண்டுகளுக்கு முன்னர், உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்வில் இருந்தபோது, அந்த தகவல் வந்தது. இந்த, காமெடியா நடிப்பாரே மணிவண்ணன் அவரு இறந்துட்டாராம் என்று. பெரிய அதிர்ச்சி எனக்கு. மணிவண்ணன் இறந்ததை விட, 50 படங்கள் இயக்கிய ஒரு இயக்குநரை காமெடி நடிகர் என்ற வட்டத்தில் அடைத்து விட்டார்களே என்று. 90களுக்குப் பின் பிறந்த தலைமுறை வேண்டுமானால் அவரை காமெடி நடிகர் என்றோ அல்லது எங்கள் கிராமப் பகுதிகளில் வழங்கப்படும் “சைடு ஆக்டர்” என்ற பதம் கொண்டோ அழைத்துக் கொள்ளட்டும். ஆனால் 80களைச் சேர்ந்தவர்கள் கூட அவர் ஒரு இயக்குநர் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

30 வருடங்களுக்கு முன்னால், பொழுது போக்கிற்கு திரைப்படங்களை மற்றுமே நம்பியிருந்த சிற்றூரில் இருந்த எனக்கு இரண்டு வகையான திரைப் படங்கள் மட்டுமே காணக்கிடைத்தன.

ஒரு வகையில் பாரதிராஜா, பாலசந்தர் போன்ற இயக்குநர்களின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள். கதைக்களன் நன்கு அமைந்திருக்கும் இந்த வகைத் திரைப்படங்களில் நாயகர்களுக்கு பெரிய வேலை இருக்காது. இன்னொரு முனையில் நாயகர்களை உயர்த்திப் பிடிக்கும் மசாலா படங்கள். இந்த இரண்டும் வகையும் எனக்குப் பிடித்தமில்லை. கலைப் படங்களுக்கும் வணிகப் படங்களுக்கும் இடையில் பேரலல் சினிமா என்று ஒன்று இருப்பதுபோல, வணிகப் படங்களிலேயே கதையை அடிப்படையாக கொண்ட படங்களுக்கும், ஹீரோயிச படங்களுக்கும் நடுவில் இருக்கும் படமே அந்த வயதில் எனக்கு தேவைப்பட்டது.

அப்பொழுது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒட்டப்பட்டிருந்த ஒரு திரைப்பட சுவரொட்டி கவனத்தை ஈர்த்தது. பாக்யராஜும் தாடி வைத்திருந்த ஒருவரும் கம்புகளை வைத்து சண்டை போட்டுக் கொண்டிருப்பது போலவும், அதை பாரதிராஜா பார்த்துக் கொண்டிருப்பதைப் போலவும் அடியில் சிறந்த சிஷ்யன் யார் என்ற போட்டிக்கே சண்டை என்பதைப் போலவும் ஒரு வாசகம் இடம் பெற்றிருந்தது. அது மணிவண்ணன் இயக்கிய முதல் படமான “கோபுரங்கள் சாய்வதில்லை”க்கான விளம்பரம். எங்கள் ஊருக்கு, வெளியாகி 100 நாட்கள் கழித்தே எந்தப் படமும் வரும். இந்தப் போஸ்டர் 100 நாட்கள் ஓடியபின்  அடிக்கப்பட்ட போஸ்டர் என்பதாலும் அப்போது எந்த சமூக வலைத்தளமும் இல்லாததாலும் யாரும் அதை கிண்டல் செய்யவில்லை. அந்த போஸ்டருக்கான நியாயத்தை சிறப்பாகவே செய்தவர் மணிவண்ணன். ஆனாலும் படம் பார்க்கும் ஆவல் வரவில்லை. அதன்பின் அவர் இயக்கி வெள்ளி விழா கண்ட “இளமைக் காலங்கள்” படத்தையும் பார்க்கவில்லை.

சத்யராஜுக்கு அடையாளம் கொடுத்த நூறாவது நாள் திரைப்படம் வந்தபோது, இடைவேளைக்கு பிந்தைய காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டது. சில தியேட்டர்களில் பெண்கள் மயங்கி விழுந்தார்கள், எனவே இடைவேளை முடிந்து படம் ஆரம்பித்து சிறிது நேரம் கழித்து ஒரு சோடாவை உடைத்து ரெடியாக வைத்துக் கொள்வார்கள் என்றெல்லாம் செய்தி பரவியது. படம் பிடித்திருந்தது. தொடர்ந்து வந்த 24மணி நேரமும் ஓக்கே ரகம். அதன்பின் மணிவண்ணன் படங்கள் என்றாலே ஒரு ஆவல் பிறந்தது.

பாரதி ராஜாவின் படத்தைப் புகழ்ந்து கடிதம் எழுதி, அவரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தவர் மணிவண்ணன். ஐந்து பெரிய வெற்றிப்படங்களுக்குப் பின் நிழல்கள் படத்தில் தான் தன் முதல் தோல்வியைச் சந்தித்தார் பாரதிராஜா. அது மணிவண்ணனின் கதை. இருந்தும் தன் அடுத்த படத்திற்கு மணிவண்ணன் சொன்ன கதையையே எடுத்தாண்டார். அதுதான் பெரிய வெற்றி அடைந்த அலைகள் ஓய்வதில்லை. காதல் ஓவியம் வரை பாரதிராஜாவிடம் பணியாற்றினார்.  அதன்பின்னர் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தை இயக்கினார்.
மணிவண்ணனின் சிறப்பே எல்லா வகையான கதைக் களங்களையும் கையாண்டு எல்லாவற்றிலும் வெற்றியைக் கண்டவர் என்பதுதான். காதல் என்றால் இளமைக் காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை. குடும்பக் கதைகள் எனில் கோபுரங்கள் சாய்வதில்லை,அம்பிகை நேரில் வந்தாள். திரில்லர் என்றால் நூறாவது நாள், 24 மணி நேரம், விடிஞ்சா கல்யாணம், மூன்றாவது கண். சமூக சீர்திருத்தம் என்றால் முதல் வசந்தம், வாழ்க்கைச் சக்கரம்.  ஜனரஞ்சகமான படங்கள் எனில் ஜல்லிக்கட்டு, சின்ன தம்பி பெரிய தம்பி, சந்தனக்காற்று. அவர் எக்காலத்திலும் நினைவு கொள்ளப்படும் அரசியல் விமர்சனப் படங்கள் எனில் பாலைவன ரோஜாக்கள், இனி ஒரு சுதந்திரம், அமைதிப்படை. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,இந்தியிலும் படங்களை இயக்கியவர் மணிவண்ணன்.

மணிவண்ணன் இயக்கிய படங்களில் தொழில் நுட்பம் ஆச்சர்யமூட்டுவதாக இருக்காது. நடனம், சண்டைக்காட்சிகள் மனதை கவராது. அவருடைய பலமே சுவராசியமான கதை. நல்ல கதாசிரியர்களை அவர் தனது படங்களில் தொடர்ந்து உபயோகித்துக் கொண்டார். கோபுரங்கள் சாய்வதில்லை,முதல் வசந்தம், இங்கேயும் ஒரு கங்கை போன்ற படங்களில் கலைமணி, சின்ன தம்பி பெரிய தம்பி, உள்ளத்தில் நல்ல உள்ளம் ஆகிய படங்களில் ஷண்முகபிரியன், ஜல்லிக்கட்டு படத்தில் வியட்நாம் வீடு சுந்தரம் என தேர்ந்த கதாசிரியர்களின் துணையோடு படங்களை இயக்கினார்.

 அந்தக் கதைக்கு ஏற்றார் போல அன்றாட வாழ்வில் இருந்து எடுக்கப்படும் கேரக்டர்கள், அந்த கேரக்டர்கள் பேசும் சமூகத்தை கேள்வி கேட்கும் வசனங்கள் தான் மணிவண்ணனின் சிறப்பு. அந்த கேரக்டர்களும் மணிவண்ணனின் குரலாகவே ஒலிக்கும். மணிவண்ணனின் இன்னொரு பிளஸ் பாயிண்ட் நகைச்சுவை. அவரின் முதல் படமான கோபுரங்கள் சாய்வதில்லை தொடங்கி கடைசிப்படமான நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ வரை மீண்டும் மீண்டும் ரசிக்கும் படியான நகைச்சுவை அமைந்திருந்தது. சில த்ரில்லர் படங்களைத் தவிர. கவுண்டமணியுடன் இணைந்து அவர் பணியாற்றிய வாழ்க்கைச் சக்கரம், புது மனிதன், தெற்கு தெரு மச்சான் ஆகிய படங்களில் சிறப்பான நகைச்சுவை காட்சிகள் அமைந்திருக்கும்.

மணிவண்ணின் இயக்கிய சமூக கருத்துள்ள படங்களில் முக்கியமானது முதல் வசந்தம். அதுவரை வந்த படங்களில் பெரும்பாலும் பிராமணர், முதலியார்,செட்டியார் போன்ற எளிதில் தெருவில் இறங்கி சண்டைக்கு வந்துவிடாத வகுப்பினரே தங்களை விட ஜாதி அடுக்கில் குறைவானவர்களுடன் ஏற்படும் காதலை எதிர்ப்பதாக காட்சிப்படுத்துவார்கள். சில திரைப்படங்களில் தேவர் சமூகத்தினரை காட்சிப்படுத்தி இருப்பர். மிக அரிதாக ”மனிதரில் இத்தனை நிறங்களா” என்ற படத்தில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு உள்ளேயே அடுக்குகளில் இருக்கும் தீண்டாமையைக் காட்டி இருப்பார்கள். கவுண்டர் சமூகத்தினரின் தீண்டாமையை நேரடியாக பெயர்களுடன் பதிவு செய்தது ”முதல் வசந்தம்” படம்தான். வேட்டைக்கார கவுண்டர் (மலேசியா வாசுதேவன்) , குங்குமப் பொட்டுக் கவுண்டர் (சத்யராஜ்) என நேரடியான பெயர்களுடன் குறிப்பிடப்பட்டிருக்கும். இருவரும் எதிரிகள்.  இருந்தாலும் வேட்டைக்கார கவுண்டர், தன் வேலையாட்கள் குங்குமப் பொட்டு கவுண்டரை திட்டுவதை பொறுத்துக் கொள்ளாத அளவுக்கு ஜாதிப்பாசம் கொண்டவர். தன் மகள் தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரனை காதலிக்கிறார் என்று தெரிந்ததும் எதிரியான குங்குமப் பொட்டுக் கவுண்டருக்கே மணமுடிக்க திட்டமிடுவார். 
வாழ்க்கைச் சக்கரம் படத்தில் வரதட்சினை பிரச்சினையை தொட்டு இருப்பார். இப்பொழுது வரதட்சினைப் பிரச்சினை என்பது குறைந்து விட்டது. பெண் கிடைத்தால் போதும் என பலரும் சொல்ல கேட்க நேரிடுகிறது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் அந்தப் பிரச்சினை வெகுவாக இருந்தது. மற்ற இயக்குநர்கள் எல்லாம் வரதட்சினைப் பிரச்சினையை மார்க்கட் இழந்த நடிகர்களை வைத்து, நாடக பாணியில்  எடுப்பார்கள். ஆனால் மணிவண்ணன் ஆக்சன் ஹீரோவாக அப்போது இருந்த சத்யராஜை வைத்து இந்த படத்தை எடுத்து, மக்களிடம் கொண்டு சேர்த்தார். வீட்டில் காசு இல்ல, ஆனாலும் கவுரவத்துக்காக கடன் வாங்கி பெட்ரோல் போட்டு லயன்ஸ் கிளப் போறேன் என்று வாழ்ந்து கெட்டவர்களை காட்சிப்படுத்தி இருப்பார்.

மணிவண்ணன் ஒரு தீவிர வாசிப்பாளர். பொது உடைமை தத்துவங்களிலும், பெரியாரின் கருத்தியலிலும் ஆழ்ந்த பற்றுள்ளவர்.  இது அவரது அரசியல் படங்களில் வெளிப்படும். பாலைவன ரோஜாக்களில் சத்யராஜ் நேர்மையான, அரசியல் தவறுகளை எதிர்க்கும் பத்திரிக்கை ஆசிரியர், லட்சுமி மாவட்ட ஆட்சியர். வசனம் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த கருணாநிதி. 80களில் வெளிவந்த அரிதான அரசியல் படங்களில் இந்தப்படமும் ஒன்று. அடுத்த ஆண்டில் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியின் அவலத்தைச் சொல்லிய “இனி ஒரு சுதந்திரம்”. இப்படம் கோமல் சுவாமிநாதனின் நாடகம் ஒன்றை தழுவியது. 94ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கிய “அமைதிப்படை” தமிழ்சினிமாவில் அரசியல் பேசிய மிகச்சிறந்த படங்களில் ஒன்று. படம் வெளியாகி 20 ஆண்டுகள் கழிந்த பின்னும் இக்கால சூழ்நிலைக்கு பொருந்தும்படி இருக்கிறது இந்தப் படம். அடுத்து மணிவண்ணன் இயக்கிய தோழர் பாண்டியன், வீரப்பதக்கம் ஆகிய படங்களிலும் பொது உடைமை மற்றும் சுயமரியாதை கருத்துகள் இடம்பெற்று இருந்தன.

மணிவண்ணன் இயக்கிய ஜல்லிக்கட்டு (சிவாஜி,சத்யராஜ்), சின்ன தம்பி பெரிய தம்பி (பிரபு,சத்யராஜ்), சந்தனக்காற்று (விஜயகாந்த்) ஆகிய படங்கள் நல்ல வசூலைத் தந்த படங்கள். சத்யராஜை வைத்து அவர் தொடர்ந்து இயக்கிய புது மனிதன்,தெற்கு தெரு மச்சான் ஆகியவையும் முதலுக்கு மோசமில்லாத படங்கள். கனம் கோர்ட்டார் அவர்களே என்னும் படம் மட்டும்தான் வர்த்தக ரீதியாக அந்நாட்களில் தோல்வி அடைந்தது. இந்தப் படங்களிலும் மணிவண்ணன் தன்னுடைய அரசியல் கருத்துக்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சொல்லிவந்தார். தெற்கு தெரு மச்சான் படத்தில் காவிரி நதி நீர் பிரச்சினையை லேசாக தொட்டுக் காட்டி இருப்பார்.

விஜயகாந்த், மோகன்,சத்யராஜ், பிரபு ஆகியோர் மணிவண்ணனின் படங்களில் தொடர்ந்து நடித்தவர்கள். சிவகுமார், சந்திர சேகர் ஆகியோரும் தவறாமல் மணிவண்ணன் படங்களில் இடம் பிடிப்பார்கள். சிவாஜி கணேசனையும் இயக்கிய மணிவண்ணன் ஏனோ கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் கார்த்திக்குடன் இணைந்து பணியாற்றவில்லை. இத்தனைக்கும் ரஜினிகாந்துடன் கொடிபறக்குதுவில் வில்லனாகவும் நடித்து நல்ல அறிமுகமும் கொண்டவர். மணிவண்ணன், ஹீரோக்களை நம்பி படம் எடுத்தவர் அல்ல. அவர் ஸ்கிரிப்டை நம்பி படம் எடுத்தவர். அதனால்தான், தான் எடுக்கப்போகும் கதைக்கு தோதான நடிகர்களையே உபயோகப்படுத்தினார். அதனால்தான் அவர் உருவாக்கிய அருக்காணி, அம்மா வாசை, ஆபாயில் ஆறுமுகம், வேட்டைக்கார கவுண்டர், குங்குமப் பொட்டு கவுண்டர் எல்லாம் அனைவர் நினைவிலும் நிற்கிறார்கள்.
மணிவண்ணனிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்களும் சோடை போனவர்கள் அல்ல. திரைப்பட கல்லூரியில் படித்துவிட்டு வந்த ஆர்  கே செல்வமணி, விக்ரமன், வைகாசி பொறந்தச்சு ராதா பாரதி, சுந்தர் சி, செல்வ பாரதி, சீமான், ஈ ராமதாஸ், மாயாண்டி குடும்பத்தார் ராசு மதுரவன் என குறிப்பிடத்தக்க இயக்குநர்கள் மணிவண்ணனின் பிரதான உதவியாளர்களாக இருந்தவர்கள்.  மணிவண்ணன் படங்கள் எப்படி வெரைட்டியாக இருக்குமோ அப்படித்தான் அவர் உதவியாளர்களும். பீல்குட் குடும்பப் படங்கள் எனில் விக்ரமன், அரசியல் பின்புலம் எனில் செல்வமணி,சீமான், ஈ ராம்தாஸ், டப்பிங் படங்கள் எனில் செல்வபாரதி, கிராமத்து குடும்பத்துக் கதைகள் எனில் ராசு மதுரவன், சுந்தர் சியைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

மணிவண்ணன் 1994 வரை பிஸியான இயக்குநராகவே இருந்தார். அந்த ஆண்டிலேயே அவருடைய நான்கு படங்கள் வெளிவந்தன. பின் 95ல் கங்கைக்கரை பாட்டு படத்தை இயக்கிய பின்னர், உடல்நிலை பாதிப்பின் காரணமாக தற்காலிகமாக படங்களை இயக்குவதை நிறுத்திக் கொண்டார்.
மணிவண்ணன் ஈழ போராட்டத்தின் மீதும், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதும் ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால்தான், வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்த போது அதில் இணைந்தார். மதிமுக, 98ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக உடன் கூட்டணி வைத்த உடன் சற்று மனம் தளர்ந்தார். 2007க்குப் பின் தமிழ்நாட்டில் ஈழ போராட்டத்துக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தது. பாரதிராஜா, சீமான்,அமீர் ஆகியோர் சில போராட்டங்களை நடத்தினார்கள். இவர்களுக்கு மணிவண்ணன் தார்மீக ஆதரவை அளித்தார்.
பிரசாந்த், ஜெயா ரே, மும்தாஜ் நடித்த சாக்லேட் படம் வெற்றிபெற்ற பின்னர் ஜெயாரே வுக்கு வாய்ப்பே வரவில்லை. மலை மலை பாட்டுல எல்லா கல்லையும் மும்தாஜே எடுத்துட்டுப் போயிட்டாங்க, எனக்கு கூழாங்கல் கூட கிடைக்கல என்று அவர் நிருபர்களிடம் வருத்தப்பட்டாராம். அதுபோல இந்த போராட்டங்களில் புகழ் பெரும்பாலும் சீமானுக்கே சேர்ந்தது. இதில் பாரதிராஜா சற்று மனவருத்தம் கொண்டு விலகிக்கொண்டார். ஆனால் மணிவண்ணன், சீமான் அணியினருடனே இருந்தார். இதன் காரணமாக பாரதிராஜாவுக்கும், மணிவண்ணனுக்கும் இடையே சற்று மனவிலக்கம் ஏற்பட்டது.

பிஸியான இயக்குநராக இருந்து, குணச்சித்திர, நகைச்சுவை நடிகராக மாறிய மணிவண்ணன்  அதிலும் தன் முத்திரையைப் பதித்தார். முதலில் கூறியதைப் போல 90களில் பிறந்தவர்களுக்கு அவரை ஒரு இயக்குநராக தெரிவதை விட நடிகராகத்தான் தெரியும். தான் நம்பிய அரசியலுக்கு மாறாக நிஜ வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி நடக்காத மணிவண்ணன் ஒரு சமூகப் போராளிக்கு உரிய மரியாதையோடு வழியனுப்பப்பட்டார்.

தமிழ் மின்னிதழ் (மே-1)ல் வெளியானது. நன்றி தமிழ் மின்னிதழ்