மென்பொருள்
துறையில், மனித
வள மேம்பாட்டு பிரிவில் பணியாற்றும் நண்பரிடம் கேட்டேன் “டெக்னிக்கல்
இண்டர்வியூ ஓக்கே. ஆனா பர்சனல் இண்டர்வியூவில எப்படி ஆள செலக்ட்
பண்ணுவீங்க” என்று.
கிட்டத்தட்ட
பாதி கேண்டிடேட்டுகள அவங்க உள்ள நுழையும் போதே செலக்ட் பண்ணிவிடுவோம் என்றார். எனக்கு அதிர்ச்சி.
தொடர்ந்து அவர், சிலர் பரபரப்பாக உள்ளே நுழைவார்கள்,
வழியெல்லாம் இடித்துக் கொண்டு வருவார்கள், சிலர்
வலிந்து வரவழைக்கப்பட்ட புன்னகையோடு கால்குலேட்டிவ்வாக அளந்து நடந்து வருவார்கள்.
ஆனால் யார் ரிலாக்ஸாக உள்ளே நுழைகிறார்களோ அவர்களை எங்களுக்கு உடனே பிடித்துவிடும்
என்றார்.
தன் திறமைக்கு
ஏற்ற இடம் இது, இதற்கான முன் தயாரிப்புகள் என்னிடம் உண்டு. இங்கே என்னால்
பெரிய அளவில் சாதிக்க முடியும். என்னை எடுக்காவிட்டால் இழப்பு
இவர்களுக்குத்தான் என்ற எண்ணம் உடையவர்களே ரிலாக்ஸாக இண்டர்வியூ அறைக்குள் நுழைய முடியும்.
உண்மையாகவே அப்படி இல்லாமல் நடித்துக்கொண்டு நுழைபவர்களை இரண்டு மூன்று
கேள்விகளில் கண்டுபிடித்துவிடுவோம் என்றார்.
இதைப்
பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பேட்ஸ்மெனின் ஞாபகம் மனதிற்குள் வந்தது. ஒவ்வொரு பேட்ஸ்மெனும் பேட்டிங்
செய்ய மைதானத்திற்குள் புகும் போது ஒவ்வொரு மாதிரி உள்ளே வருவார்கள். சிலர் பேட்டை கையால் சுழட்டி காற்றில் வட்டம் போட்டுக்கொண்டு வருவார்கள்.
சிலர் குடுகுடுவென ஓடி வருவார்கள். சிலர் பேட்பிடிக்கும்
முன் பலவகையான உடற்பயிற்சிகளையும் செய்து காண்பிப்பார்கள். நமது
ஸ்ரீகாந்த் சூரியனைப் பார்த்துவிட்டு வருவார். டே நைட் போட்டிகளின்
சேஸிங்கில் அவர் எதைப்பார்த்து விட்டு வருவார் எனத் தெரியவில்லை.
ஆனால்
அவரோ, வேலை ஏதுமில்லாத
ஞாயிற்றுக்கிழமையில் மிக லேட்டாக எழுந்தரித்து பல் துலக்க பிரசுடன் ஒரு சோம்பல் நடை
நடப்போமே அதுபோலத்தான் மைதானத்துக்குள் நுழைவார். என்ன எதிரணி
கேப்டனுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும்தான் பதட்டமாய் இருக்கும். மைதானத்துக்குள் நுழைவதை விடுங்கள். அடுத்து விக்கெட்
விழுந்த உடன் இறங்குவதற்கு தயாராக இருக்கும் பேட்ஸ்மென்கள் எல்லாவிதக் கவசங்களையும்
அணிந்து ஸ்டிஃப்பாக உட்கார்ந்து ஆட்டத்தைக் கவனித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவரோ மதிய சாப்பாடு முடிந்த கல்யாண வீட்டில் சேர்களை வட்டமாக எடுத்துப்போட்டு
சோம்பலாக அரட்டையடித்துக் கொண்டிருப்பார்களே அது போல கேசுவலாகத் தான் உட்கார்ந்திருப்பார்.
அவர் அறிமுகமான
நாள் துவங்கி ஓய்வு பெறும் வரையிலும் எந்த பந்துவீச்சாளருக்கு எதிராகவும் ஆடுவதற்கு
சிறப்பு பயிற்சி எடுத்துக்கொண்ட்தில்லை.
அவருக்கு பந்து வீச பவுலர்களும், பீல்டிங் வியூகம்
அமைக்க கேப்டன்களும் தான் ஓவர்டைம் எடுத்து யோசித்தார்கள்.
அவர்தான்
இந்த நூற்றாண்டின் சிறந்த ஐந்து கிரிக்கெட் பிளேயர்களுள் ஒருவராக
கிரிக்கெட் வல்லுநர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், விஸ்டனால்
இந்த நூற்றாண்டின் சிறந்த ஒரு நாள் ஆட்டக்காரராக
தேர்ந்தெடுக்கப்பட்டவரும், சர் பட்டம் பெற்றவரும், தன் அபார ஆட்டத்தால் முதல் இரண்டு ஒருநாள் உலக கோப்பை பைனல்களில் அணியை வெற்றிப்பாதைக்கு
அழைத்துச் சென்றவரும், 50 டெஸ்டுகளுக்கு கேப்டனாக பணிபுரிந்து
ஒரு தொடரைக் கூட இழக்காதவருமான சர் ஐசக் விவியன் அலெக்ஸாண்டர் ரிச்சர்ட்ஸ்.
உண்மையில்
மேற்கூறிய பாரா ஏற்படுத்தும் பிரமிப்பை விட விவியன் ரிச்சர்ட்ஸின் ஒரு அருமையான ஆப்
ட்ரைவ் ஏற்படுத்தும் பிரமிப்பு அதிகமாக இருக்கும் என்பதே அவரின் சிறப்பு.
ரிச்சர்ட்ஸ் 1974ல் மேற்கிந்தியத் தீவுகளுக்காக
களமிறங்கி ஓய்வு பெற சில ஆண்டுகள் இருக்கும் வரை கிரிக்கெட் உலகின் சிறந்த பேட்ஸ்மெனாக
இருந்தார். 1975ல் நடைபெற்ற முதல் ஒருநாள் உலக்கோப்பை பைனலில்
மூவரை ரன் அவுட் செய்தும், அடுத்த் 79 உலக
கோப்பை பைனலில் சதமடித்தும் வெற்றிக்கு காரணமாக இருந்தார். 83 உலக்கோப்பையிலும் இந்தியாவின் 183 ரன்களை சேஸ் செய்யும்
போது 33 ரன்களுடன் ஆடிக்கொண்டிருக்கும் போது அப்போதைய காலகட்டத்தின்
சிறந்த கேச்சாக கருதப்பட்ட கபில்தேவி கேச்சால் ஆட்டமிழந்தார்.
ரிச்சர்ட்ஸின்
பேட்டிங் ஸ்டைலானது மிக சிம்பிளானது.
வெகு ரிலாக்ஸாக கிரீஸில் நிற்பார். பந்தைக் கணித்து
அதற்கேற்ற கிரிக்கெட் ஷாட்டை ஆடுவார். ரிச்சர்ட்ஸின் உடல் வலு
அபாரமானது. அந்த வலு கரெக்டான ஷாட்டுடன் இணையும் போது பந்து தெறித்துப்
பறக்கும்.
ரிச்சர்ட்ஸ்
பெரும்பாலும் ஸ்ட்ரெயிட் பாட்டால் தான் ஆடுவார். ரன் சேர்ப்பதற்காக அன் கன்வென்சனல் ஷாட்டுகளை
ஆடியதில்லை. ஏன் ஸ்வீப் ஷாட்கூட ஆடமாட்டார். தான் ஆடிய எந்த மேட்சிலும் ஹெல்மெட் அணியாத ரிச்சர்ட்ஸ் துளிக்கூட தயங்காமல்
புல் மற்றும் ஹூக் ஷாட்டுகளை ஆடுவார்.
அதுவும்
ரிச்சர்ட்ஸ் ஆடிய காலத்தில் டென்னிஸ் லில்லி,
ஜெஃப் தாம்சன், ஹேட்லி, இம்ரான்
கான், போத்தம் என சிறப்பாக பவுன்சர்கள் வீசும் பவுலர்கள் இருந்தார்கள்.
அவர்கள் கூட ரிச்சர்ட்ஸ்க்கு பவுன்சர் வீச பயப்படுவார்கள்.
ரிச்சர்ட்ஸ்
ஸ்பின்னர்களை ஆடும் விதமும் சிறப்பாக இருக்கும். ஆப் ஸ்பின் எனில் பந்தை சுழலச் செய்து,
உள்ளே வரும் போது லெக் ஸ்டெம்பிற்கு வெளியே பேக் புட்டில் கால்களை கொண்டு
வந்து, பந்தை ஓங்கி ஒரு அறை அறைவார். அதற்கடுத்து
சில்லி பாயிண்ட், சில்லி மிடாப் பீல்டர்கள் எல்லாம் தெறித்து
ஓடி விடுவார்கள். லெக் ஸ்பின்னர்களை அழகாக ஆன் ட்ரைவ் ஆடுவார்.
ஷார்ட் ஆம் புல் ஷாட்கள் அவரது ஸ்பெசாலிட்டி.
ரிச்சர்ட்ஸின்
ஷாட்டுகளிலேயே பிடித்தமான ஷாட் என்றால் நடராஜா ஷாட் தான். ஷார்ட் பிட்ச்சாக விழுந்து
இடுப்பு வரை எகிறும் பந்துகளை தன் வலதுகாலை தரையில் திடமாக ஊன்றி இடது காலை நடராஜரைப்
போல மடக்கி முழு உடல் ஆற்றலையும் பேட்டிற்கு தோள்கள் மூலம் கடத்தி ஒரு வீசு வீசினார்
என்றால், எங்கே பந்து உடைந்து விடுமோ என்று தோன்றும்.
ரிச்சர்ட்ஸின்
பலமே எந்த சூழ்நிலையிலுமே தன்னுடைய ஆட்டத்தைத் தான் ஆடுவாரே தவிர சிச்சுவேசனுக்கு ஏற்றார்
போல ஆடமாட்டார். இரண்டு ரன்னுக்கு இரண்டு விக்கெட் என்ற நிலையில் இறங்கினாலும் சரி,
200 ரன்னுக்கு இரண்டு விக்கெட் என்ற நிலையில் இறங்கினாலும் சரி பபுள்கம்மை
மென்றுகொண்டே ரிச்சர்ட்ஸ் தன்னுடைய வழக்கமாக ஆட்டத்தைத் தான் ஆடுவாரே தவிர ஓவர் டிபன்சிவ்வாகவோ,
ஓவர் அக்ரசிவ்வாகவோ ஆடமாட்டார்.
கிளைவ்
லாயிட் கேப்டனாக இருந்த காலம் மேற்கு இந்திய தீவுகள் அணியின் கடைசிக்கட்ட பொற்காலம்
எனலாம். ஜோயல்
கார்னர், மைக்கேல் ஹோல்டிங், ஆண்டி ராபர்ட்ஸ்,
மால்கம் மார்ஷல் என அதி பயங்கர வேகப்பந்து வீச்சாளர்கள், ஆல்வின் காளிச்சரன், கிரினீட்ஜ், ஹெய்ன்ஸ் என பேட்ஸ்மென்கள் ஜெஃப் துஜான் போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்
என ஜாம்பவான்களால் ஆன டீம். அந்த டீமிலேயே ரன் மெஷின் என அன்போடு
அழைக்கப்பட்டவர் விவியன் ரிச்சர்ட்ஸ். கிளைவ் லாயிட் வைத்திருந்த
ஆயுதங்களிலேயே வஜ்ராயுதம் ரிச்சர்ட்ஸ்தான்.
ரிச்சர்ட்ஸ்
மேற்கு இந்திய தீவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற போது அந்த அணி வெல்ல முடியாத அணியாக இருந்தது. மற்ற அணிகள் டெஸ்டில் ட்ராவுக்குத்தான்
முயற்சி செய்யும். ஆனால் தொடர்ந்து அணியின் சிறந்த வீரர்கள் முக்கியமான
கார்னர், ஹோல்டிங்,ராபர்ட்ஸ் ஆகியோரின்
ஓய்வும் கிரினீட்ஜ் போன்றோரின் வயது முதிர்வும் அணிக்கு சற்று இறக்கத்தை ஏற்படுத்தியது.
ரிச்சி ரிச்சர்ட்சன், கார்ல் ஹூப்பர், லோகி, வால்ஸ், பேட்ரிக் பேட்டர்சன்
ஆகியோரது வருகை டெஸ்ட் அணியைத் தாங்கிப் பிடித்தது என்றாலும் ஒரு நாள் போட்டிகளில்
அணிக்கு வெற்றி சதவிகிதம் குறையத் தொடங்கியது.
இந்த காலகட்டத்தில்
மேற்கிந்திய தீவிலிருந்து ஏன் முன்பு போன்று மிகச்சிறந்த பவுலர்கள் வரவில்லை என்பதற்கு
காரணம் உண்டு. மேற்கிந்திய தீவுகளின் திறமைசாலிகள் எல்லாம் பணம் கொழிக்கும் விளையாட்டான பேஸ்பால்
மற்றும் பேஸ்கட் பால் விளையாடப் போனார்கள். ஒரு சிறிய இடைவேளைக்குப்
பின்புதான் கர்ட்லி அம்புரோஸ் என்ற மிகச்சிறந்த பவுலர் வெஸ்ட் இண்டீஸுக்கு கிடைத்தார்.
ரிச்சர்ட்ஸ்
கேப்டனாக இருந்த 10 ஆண்டுகளில் அணி தேய்ந்து கொண்டே வந்தது. இன்றும் கூட
அது தன்னுடைய 1960,70களிலும் 80களின் ஆரம்பத்திலும்
அடைந்த சிறப்பை கனவு கூட காண முடியவில்லை. ஆனால் இன்றும் கூட
அந்த அணியை வெறுப்பவர் யாருமில்லை. இதற்கு பல ஆண்டுகளாகவே அந்த அணியினர் அரகண்டாக
எதிர் அணிகளிடம் நடந்து கொள்ளாததும் ஒரு காரணம். ஸ்லெட்ஜிங் போன்றவற்றை
அவர்களாக எப்போதும் ஆரம்பிப்பதில்லை. எங்கள் விளையாட்டை நாங்கள்
அனுபவித்து விளையாடுகிறோம் என்ற உணர்வுடன் மட்டுமே அவர்கள் விளையாடி வந்தார்கள்.
அணி வெற்றி
நடை போட்டுக்கொண்டிருந்த போது கண்ணியமாக நடந்து கொள்வது ஒன்றும் பெரிதில்லை. ஆனால் இறங்குமுகத்தில் இருக்கும்
போதும் அதே கண்ணியத்துடன் அவர்கள் நடந்து கொண்டார்கள். அந்தப்
பாரம்பரியத்தைக் காக்கும் கண்ணியாக ரிச்சர்ட்ஸ் இருந்தார். விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்ப்போம்.
அதுதான் எங்கள் கொள்கை என்பதில் உறுதியாக இருந்தார். அதற்கு ஒரு மிக முக்கிய எடுத்துக்காட்டு 1987 உலக கோப்பைப்
போட்டிகள்.
அதில்
பி பிரிவில் பாகிஸ்தான்,இங்கிலாந்து,மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகள்
இடம்பெற்றிருந்தன. ஒரு முக்கியமான போட்டியில் பாகிஸ்தானும் மேற்கு
இந்திய தீவுகளும் மோதின. ஆட்டத்தின் கடைசி ஓவர். பாகிஸ்தான் வெற்றிபெற சில ரன்களே தேவை. ஆனால் அப்போது
களத்தில் பேட்டிங் பிடித்துக் கொண்டிருந்தவர்களில் திறமைசாலியான அப்துல் காதிர் மறுமுனையில்
இருந்தார். அவர் பந்து வீசும் முன்பே பல அடிகள் ஓடிவந்து விடுவார்.
கோர்ட்னி வால்ஸ் பந்து வீச வந்தபோது அப்துல் காதிர் கிட்டத்தட்ட பாதி
பிட்ச் வரை ஓடி வந்துவிட்டார். வால்ஸ் நினைத்திருந்தால் அந்தப்
பந்தை வீசாமல் எளிதாக ரன் அவுட் செய்திருக்க முடியும். ஆனால்
அவர் அப்படி செய்யாமல் ஸ்போர்ட்மென் ஸ்பிரிட்டுடன் உள்ளே வந்து நில் என கண்ணால் சொல்லிவிட்டு
அடுத்த பந்தை வீசினார். அதை ஆமோதித்தார் ரிச்சர்ட்ஸ்.
அந்தப் போட்டியில் இதனால் மேற்கு இந்தியத்தீவுகள் தோல்வி அடைந்து அரை
இறுதிக்கு தகுதி பெற முடியாமல் போனது. அப்போதும் எந்த உணர்ச்சியும்
வெளிக்காட்டாமல் சூயிங்கத்தை மென்று கொண்டே நிதானமாக களத்தை விட்டு வெளியேறினார் ரிச்சர்ட்ஸ்.
எல்லோரும்
வேகப்பந்து வீச்சாளர்களாக இருந்த அணியில் பகுதிநேர ஸ்பின்னராக இருந்தவர் ரிச்சர்ட்ஸ். ஆப் ஸ்பின் வீசுவார்.
தேவையில்லாமல் அம்பயரிடம் அப்பீல் செய்ய மாட்டார். அதே போல எல்பிடபிள்யூ தவிர, அவருக்கு அவுட் எனத் தெரிந்து
விட்டால் களத்தை விட்டு வெளியேறி விடுவார்.
வேலை/தொழிலைப் பொறுத்தவரை கட்டாயம்
ஜெயிக்க வேண்டிய அவசியம் உண்டு. ஆனால் விளையாட்டில் வெற்றி முக்கியமா?
ஆட்டம் முக்கியமா? வெற்றி மற்றுமே முக்கியம் எனும்
போது நாளடைவில் அந்த விளையாட்டின் தனிப் பண்புகள் மாறிவிடும். எப்போதும் தோல்வி அடைந்து கொண்டிருந்தாலும் அந்த விளையாட்டே சலிப்புத் தட்டிவிடும்.
அது ஒரு சிக்கலான கேள்விதான். வெற்றியை மட்டுமே
நோக்கிய ஆட்டம், சூதாட்டம் போன்றவை 90க்குப்
பின்னால் கிரிக்கெட்டை ஆக்ரமித்தன. ரிச்சர்ட்ஸ் அந்த காலகட்டத்திற்கு
முன்னரே ஓய்வு பெற்றுக்கொண்டார்.
ஒரு ராஜாவுக்குரிய
மரியாதையை அப்போதைய கிரிக்கெட் உலகமும் ரசிகர்களும் ரிச்சர்ட்ஸ்க்கு கொடுத்து வந்தார்கள். இப்போதும் கூட கிரிக்கெட்டின்
ராஜா என்றால் அந்த செட் மக்கள் அனைவருக்கும் ரிச்சர்ட்ஸ்தான் ஞாபகம் வருவார்.
4 comments:
Arumaiga irundhadhu. apadiye namma indian players patriyum ezhudhungalen
Arumaiga irundhadhu. apadiye namma indian players patriyum ezhudhungalen
Ethavida yarum Richards pathi yarum ezutha mudiyathu. Awesome
//ஒரு ராஜாவுக்குரிய மரியாதையை அப்போதைய கிரிக்கெட் உலகமும் ரசிகர்களும் ரிச்சர்ட்ஸ்க்கு கொடுத்து வந்தார்கள். இப்போதும் கூட கிரிக்கெட்டின் ராஜா என்றால் அந்த செட் மக்கள் அனைவருக்கும் ரிச்சர்ட்ஸ்தான் ஞாபகம் வருவார்.
Epothum The King of Cricket endral athu one and only Vivian than. No one can be close to Him.
இவருடைய ஆட்டத்தை பார்த்தபின், இன்றைக்கு T20ல் ஆடப்படும் 360 deg shotகளை பார்த்தால் வேதனையாக உள்ளது.... இப்படிபட்டவர் இனி உருவாகவே முடியாதோ??.....
Post a Comment