May 31, 2016

விடுதியில் மாணவர்களை சேர்ப்பதன் அவசியம்

பத்தாண்டுகளுக்கு முன்போடு ஒப்பிடுகையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை விடுதியில் சேர்ப்பது குறைந்து கொண்டு வருகிறது. –பெரும்பாலானவர்களுக்கு அவரவர் வசிக்கும் இடங்களில் இருந்து பேருந்தில் சென்று திரும்பும் தூரத்திலேயே கல்வி நிறுவனங்கள் அமைந்திருப்பதும் ஒரு காரணம். என்னைப் பொறுத்தவரையில் கல்லூரியில் படிக்கும் போது விடுதியில் சேர்ந்து படிப்பது நல்ல பலனைத் தரக்கூடிய ஒன்று.

நம்முடைய மூளையின் உள்வாங்கும் திறன், கற்றுக்கொள்ளும் வேகம் ஆகியவை 21 வயது வரை மிகச் சிறப்பாக இருக்கும். அதன்பின்னர் சற்று குறையத் துவங்கும். எனவே இந்த 21 வயதிற்குள் நேரத்தை வீணடிக்காது பாடங்களைக் கற்றுக்கொள்வது அந்தத்துறையில் விற்பன்னராவதற்கு உதவும். விடுதியில் இருந்தால் நாம் கற்றுக் கொள்வதற்கான நேரம் அதிகமாகக் கிடைக்கும்.

இப்பொழுது மாணவர்கள் தங்கள் கல்லூரிக்கு பேருந்தில் சென்றுவர சராசரியாக இரண்டு மணி நேரம் ஆகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் மூன்று முதல் நான்கு மணிநேரமும் ஆகின்றது. இந்த பயண நேரத்தில் ஆக்கபூர்வமாக படிக்க முடியாது. இந்த பயணத்தினால் உண்டாகும் உடல் அலுப்பால் வகுப்பில் பாடங்களை கவனித்தலும் குறையும், மாலையில் கவனமாகப் படிக்கவும் முடியாது.

மேலும் இந்த வயதுதான் நன்றாகப் பசியெடுக்கும் வயதும் கூட. இதில் காலை வேளையில் அவசர அவசரமாக சாப்பிட்டு ஓடுவதாலும், மதியம் டப்பாவில் கொண்டு சென்ற சாப்பாட்டை சாப்பிடுவதாலும் மாலையில் பயங்கர பசியெடுக்கும். இந்த நேரத்தில் அதிகமான நொறுக்குத்தீனிகளை மாணவர்கள் சாப்பிடுகிறார்கள். மேலும் இரவில் அதிக அளவு உணவினைச் சாப்பிடுகிறார்கள். இது அனைத்துமே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்கள். உடலை உறுதி செய்ய வேண்டிய வயதில் இதைச் செய்வது, நாற்பது வயதிற்கு மேல் அவர்களை நோயாளியாக்கி விடும். மாறாக விடுதியில் இருக்கும் போது மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் ஒழுங்கான கால வேளையில் சரியான உணவினைச் சாப்பிட்டு வருவது ஜீரண மண்டலத்தை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வந்து விடும்.

அடுத்ததாக பல வீடுகளில் பிள்ளைகள் அடிப்படை வேலைகளைக் கற்றுக்கொள்வது கூட இல்லை. என் பொண்ணு சாப்பிட்ட தட்டைக் கூட தூக்கி வைக்க மாட்டா என்பதை பெருமையாகக் கூட சிலர் சொல்லுகிறார்கள். சில விவாகாரத்தான திருமணங்களிலோ கணவன் ஒரு டம்ளர் தண்ணி கூட தானே பிடிச்சுக் குடிக்காத சோம்பேறி போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. விடுதியில் இருக்கும் போது நமக்கான சில வேலைகளையாவது நாமே செய்து கொள்ளும் படி இருக்கும். முக்கியமாக ஆண்களுக்கு. அடிப்படை வேலைகளை செய்து, இந்த வயதில் முதுகு வளையாவிட்டால் பின் எந்த வயதிலும் முதுகு வளையாது.

விட்டுக் கொடுத்தல் என்பதும் இப்போது அருகிவரும் பழக்கமாக இருக்கிறது. நான் ஏன் விட்டுக் கொடுக்கணும்? என்ற மனப்பான்மையிலேயே பலரும் இருக்கிறார்கள். விடுதியில் ஒரே அறையில் இரண்டு மூன்று பேருடன் தங்கி இருக்கும் போது மற்றவர்களைப் பார்த்து விட்டுக் கொடுக்கும் மனோபாவம் வரும். மற்றவர்களின் குடும்ப நிலை, பழக்க வழக்கங்கள் தெரியவரும் போது அதனுடன் நம் குடும்பத்தை ஒப்பிட்டு நாம் எதில் பின் தங்கியிருக்கிறோம்? எந்த குணநலம் நம்மிடம் இல்லை என்ற ஆத்ம பரிசோதனை செய்து கொள்ளலாம். நாம் தனியே இருக்கும் போது நம் மூளை நம்மை அறியாமலேயே இதைச் செய்யும். இந்த சிந்தனைக்கான நேரம், வாய்ப்பு எல்லாம் டேஸ்காலராக இருக்கும் போது கிடைக்காது.

பையன்களுக்கு இன்னொரு வகையிலும் விடுதி வாழ்க்கை ஒரு நன்மையைக் கொடுக்கும். பதின்பருவத்தில் தந்தையின் மீது ஒரு இனம்புரியாத வெறுப்பு வரும். அது வளர்ந்து கொண்டே செல்லும். திருமணத்திற்குப் பின் மனைவி, என்ன உங்க வீட்டுல இப்படி பண்ணுறாங்க என்பது போன்ற கமெண்டுகள் அடிக்கும் போது அந்த வெறுப்பு இன்னும் அதிகமாகும். திருமணத்திற்கு முன்னால் பெற்றோரிடம் இருந்து சில ஆண்டுகள் பிரிந்திருப்பது நல்லது அது கல்லூரி காலகட்டமாயிருந்தால் இன்னும் நல்லது. ஏனென்றால் வேலை பார்க்கும்போது பிரிந்திருந்தால் கூட வேலை பார்க்கும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம், பணிச்சுமை போன்றவற்றாலும் நம் காசில் நாம் வாழ்கிறோம் என்ற எண்ணம் வருவதாலும் பெற்றோர்களைப் பற்றி அதிகமாக சிந்தனை செய்யமாட்டார்கள். ஆனால் கல்லூரி விடுதியில் இருக்கும் போது அவர்கள் மீதான புரிதல் வரும். எந்த உறவிலுமே சிறு பிரிதல்கள் உறவை வலுவாக்க அவசியம்.

எல்.கே.ஜி தொடங்கி பணி ஓய்வு பெறும் வரை கூட காலையும் மாலையும் ஒரு செவ்வகத்தின் வழியாகவே உலகைப் பார்த்துக் கொண்டு போகிறவர்கள் அதிகம். பள்ளி வேன் தொடங்கி, கல்லூரி பேருந்து, அலுவலகப் பேருந்து, பெரிய பதவிக்கு வந்த பின்னர் கார் என அந்த ஜன்னலின் வழியாகப் பார்த்தே நாம் பல ஆண்டுகளைத் தொலைத்து விடுகிறோம். சில ஆண்டுகளாவது பிரயாணம் இல்லாமல் நடந்து கொண்டு 360 டிகிரியிலும் சூழலை அனுபவித்துக் கொண்டு வாழ்வது நல்லதுதானே?

May 26, 2016

தமிழ்சினிமா நடனம் - 90களில்

தமிழ்சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து பல ஆண்டுகள் வரை கதாநாயகனுக்கு தேவையான முக்கிய தகுதியாக நடனம் இருந்ததில்லை. எம்.கே.தியாகராஜா பாகவதர், பி யூ சின்னப்பா, டி ஆர் மகாலிங்கம் என ஆரம்ப காலகட்டத்தில் பாடல்களைப் பாடுவது தகுதியாகவும், பின்னர், எம்ஜியார், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன்,எஸ் எஸ் ராஜேந்திரன் காலத்தில் நடிப்பு, தோற்றம், வாள் வீச்சு போன்ற சண்டைக்காட்சிகள் அறிந்திருத்தல் ஆகியவை தகுதியாகவும் பார்க்கப்பட்டன. நடனத் திறமையானது ஒரு நடிகனுக்கு தேவையான முக்கிய திறமையாக பார்க்கப்படவில்லை. கதாநாயகி ஆடும்போது தேவையான முக பாவனைகளை காட்டினால் போதும் என்ற நிலை இருந்தது.

வைஜெயந்தி மாலா, லலிதா- பத்மினிராகினி என நன்கு நடனம் ஆடத்தெரிந்த கதாநாயகிகள் திரையுலகில் இருந்த போது அவர்களுக்கு ஈடாக நடனம் ஆடத் தெரிந்த நடிகர்கள் அப்போது இல்லை. சந்திரபாபு, நாகேஷ் போன்ற நகைச்சுவை நடிகர்கள் மட்டும்  மேற்கு உலக நடன பாதிப்பில் நடனமாடி வந்தார்கள்.
அடுத்து வந்த கமல்ஹாசன்ரஜினிகாந்த் காலகட்டத்தில் பொதுவாக நடனத்தை நாயகிகளுக்கும், சண்டைக்காட்சிகளை நடிகர்களுக்கும் பிரித்துக் கொடுத்திருந்தார்கள் அப்போதைய இயக்குநர்கள். இந்தச் சூழ்நிலையில் நன்கு நடனம் ஆடத்தெரிந்த கமல்ஹாசன் போன்றோர் கூட அதை ஒரு தனித் திறமையாக புரஜெக்ட் செய்ய முடியவில்லை. சலங்கை ஒலி போல ஓரிரு படங்களில் மட்டும் அதைக் காட்ட முடிந்தது. சுற்றியுள்ள அனைத்து நடிகர்களும் நாயகி ஆடிக் கொண்டிருக்கும் போது  நடந்து கொண்டோ,உடற்பயிற்சி செய்து கொண்டோ அல்லது முகத்தால் மட்டும் நடனமாடிக் கொண்டிருக்கும் போது, அவரும் தன் எல்லையை சுருக்கிக் கொண்டார்.

80களின் இறுதி வரை இந்தப் போக்குதான் இருந்தது. புலியூர் சரோஜா, தாரா, கிரிஜா, கலா மாஸ்டர் போன்றவர்கள் ஹீரோயின் ஆடும் நடனத்திற்குத்தான் பெரும்பாலும் ஸ்பெசலிஸ்டாக இருந்தார்கள். ஜோதி லட்சுமி, ஜெயமாலினி,சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி என கவர்ச்சி நடனம் ஆடும் நடிகைகள் தொடர்ந்து பீல்டில் இருந்து கொண்டே இருந்தார்கள். சின்னா போன்ற மாஸ்டர்கள் கூட கதாநாயகிகளுக்கு நடனம் அமைக்க முயற்சி எடுத்துக் கொண்ட அளவுக்கு நாயகர்களுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. ஜான் பாபு, சுந்தரம் மாஸ்டர் மட்டும் ஓரளவு நாயகர்களுக்கும் சிரத்தை எடுத்துவந்தனர்.

இந்நிலையில் தான் 90கள் துவங்கியது. சுந்தரம் மாஸ்டரின் மகன்கள் பிரபுதேவாவும், ராஜு சுந்தரமும் நடனம் அமைக்கத் தொடங்கினார்கள்.

91 ஆம் ஆண்டு வெளியான இதயம் படத்தில்ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லேபாடலுக்கு பிரபுதேவாவும் ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான் பாடலுக்கு ராஜு சுந்தரமும் ஆடியிருந்தார்கள். ஏப்ரல் மேயிலே பாடலில் வந்த நடனம் எல்லோருக்கும் பிடித்தமானதாய், புதிதாய் இருந்த்து. பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதுதான் அப்போது பேச்சாய் இருந்த்து.

92 ஆம் ஆண்டு சுதந்திர தினத்துக்கு வெளியான சூரியன் மற்றும் ரோஜா ஆகிய படங்கள் புதுவிதமான மூவ்மெண்ட்களோடு வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தின. அதிலும் குறிப்பாக சூரியனின்லாலாக்கு டோல் டப்பி மாபாடலில் பிரபுதேவா ஆடிய நடனம் எல்லோரையும் கவர்ந்தது. சூரியன் படத்தின் ஹைலைட்டாக அந்த நடனம் அமைந்தது. ரோஜாவில் ராஜு சுந்தரம் ஆடிய ருக்கு மணியே ருக்கு மணியேவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த பாடலில் பாட்டிகளை ஆட வைத்த்தாக பலர் முகம் சுளித்தாலும் இளைஞர்கள் ஆடிய  ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது.

இதற்கடுத்த வெளியான வால்டேர் வெற்றிவேலில் பிரபுதேவா ஆடிய சின்ன ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது பாடலும், ஜெண்டில்மேனில் ஆடிய சிக்கு புக்கு ரயிலேவும் தமிழ்சினிமாவின் ஆட்டத்தரத்தை ஒரு படி உயர்த்திவிட்டன. அதன் பின்னர் தமிழ் ரசிகர்களுக்கு நடனத்தில் நளினமும், வேகமும் அத்தியாவசியமாகின.

பெண்கள் நடனம் ஆடும் போது நளினம் தான் முக்கியம் அங்கே வேகத்துக்கு பெரிய முக்கியத்துவம் கிடையாது. அதி வேகத்துடன் ஆடினால் சில அசைவுகள் விரசமாகக் கூட முடியும். ஆனால் ஆணின் ஆட்டத்தில் வேகம் அதிகமாக அதிகமாக பார்ப்பவரும் எழுந்து ஆடிவிடுவார்கள். பிரபுதேவா ஆண்களின் ஆட்டத்தின் வேகத்தை கூட்டினார். பெண்களின் ஆட்டத்
திலும் நளினம் கெடாது வேகத்தைக் கூட்டினார்.

இந்து மற்றும் காதலன் ஆகிய படங்கள் பிரபுதேவாவின் நடனப் புகழை இன்னும் ஒரு படி உயர்த்திய படங்கள். இந்தப் படங்களில் கிளாசிக்கல், கானா உள்ளிட்ட எல்லா விதமான நடனங்களையும் ஆடியிருப்பார். அப்போதைய கல்லூரி விழாக்களில் கடவுள் வாழ்த்து கூட இருக்குமோ என்னவோ தெரியாது ஆனால் முக்காபுலா கண்டிப்பாய் இருக்கும்.

இதனால் அதுவரை டான்ஸ் என்று பெயர்பண்ணிக்கொண்டிருந்த பல நடிகர்கள் கேலிக்குள்ளானார்கள். மிமிக்ரி செய்யும் கலைஞர்கள் அவ்வாறு மெதுவாக ஆடுபவர்களை மேடையில் கிண்டல் செய்யத் துவங்கினார்கள். ஒரு நாயகன் வந்தால் அவனுக்கு நடனம் ஆடத் தெரியுமா என்று பார்க்கும் நிலையும் இவர்களால் வந்தது.

90கள் ஆரம்பித்த போது இன்னொரு மாற்றமும் நடந்தது. அதுதான் 35 எம் எம்மில் படம் எடுத்துக் கொண்டிருந்த பலரும் சினிமாஸ்கோப்புக்கு மாறினார்கள். அகன்ற திரையில் நாயகனும் நாயகியும் ஆடினால் ஏகப்பட்ட காலியிடம் மீதமிருக்கும். நன்கு நடனம் ஆடத்தெரிந்தவர்கள் என்றால் அதெல்லாம் கண்ணுக்குத் தெரியாது.  ஆனால் ஆவரேஜாக ஆடினால் கூட பிரேம் நன்றாக வராது. எனவே இடைவெளியை நிறைக்க குரூப் டான்சர்களைப் பயன்படுத்தினார்கள். 90களை குரூப் டான்சர்களின் பொற்காலம் என்று கூடச் சொல்லலாம். படத்திற்கு குறைந்தது மூன்று பாடல்களாவது குரூப் டான்சர்கள் உள்ள பாடல்களாக அமைந்து விடும்.

இந்த 90களில் ரஹ்மான் அறிமுகமாகி வேகமான பீட் உள்ள பல பாடல்களை அளித்தார். அந்த பாடல்களுக்கு நல்ல நடனம் ஆடத்தெரிந்த  நடிகர்கள் தேவைப்பட்டார்கள். அதே போல தேவாவும் வேகமான பீட்கள் உடைய கானா பாடல்களை தொடர்ந்து கொடுத்து வந்தார். இதற்கும் நன்றாக நடனம் ஆடத் தெரிந்தவர்கள் தேவைப்பட்டார்கள், இதனால் நாயகனுக்கு இடது புறத்திலும் வலது புறத்திலும் நன்கு நடனம் ஆடும் நடன உதவியாளர்கள் ஆட்த் தொடங்கினார்கள், இந்த காலகட்டத்தில் சாட்டிலைட் தொலைக்காட்சிகளும் வந்துவிட்ட படியால் மீண்டும் மீண்டும் அந்தப் பாடல்கள் ஒளிபரப்பாகத் துவங்கின, இதனால் மக்கள் மனதில் உதவியாளர்களின் முகம் பதியத்துவங்கியது. அந்தப் பாட்டுல ஆடினானே அவன் தான் இதுலயும் ஆடுறான் என்றெல்லாம் பேசத் துவங்கினார்கள்.

இந்த கியுரியாசிட்டியை அறிந்த பத்திரிக்கைகள் கூட அவர்களைப் பேட்டி எடுத்து போடத்துவங்கினார்கள்., மிஸ்டர் ரோமியோ, ராசய்யா, நினைவிருக்கும் வரை என பிரபுதேவாவின் நடனங்கள் தொடர்ந்து ஹிட்டாக எல்லா நடிகர்களும் நடனம் கற்றுத்தான் ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. நினைவிருக்கும் வரையில் திருப்பதி ஏழுமலை வெங்கடேசா பாடலும், காத்தடிக்குது காத்தடிக்குது பாடலும், படச் சூழலில் கற்பனையைக் கலந்து படமாக்கப்பட்டிருந்தது.

இந்த மாற்றத்தை பி சி ஸ்ரீராமால் ஒளிப்பதிவுத் துறைக்கு 80களின் மத்தியில் ஏற்பட்ட மாற்றத்துடன் ஒப்பிடலாம். பாலுமகேந்திரா, அசோக் குமார் போன்ற திறமையான கேமிராமேன்கள் இருந்தும் ஸ்ரீராமின் வருகைக்குப் பின்னரே யார் காமிரா என்று பார்க்கும் வழக்கம் ஏற்பட்ட்து. பட ஒளிப்பதிவின் தரமும் படிப்படியாக கூடியது. அதே போலத்தான் கமல்ஹாசன் போன்றோர் இருந்தாலும் பிரபுதேவாவின் வருகைக்குப் பின்னரே நடன இயக்குநர்களும் தமிழக வீடுகள் அறிந்த பெயரானார்கள்.
90களின் மத்தியில் இன்னொரு போக்கும் தொடங்கியது. அதுதான் கிளைமாக்ஸுக்கு முன்னால் வரும் பாடலை வேகமான தாளக்கட்டில்  வைப்பது. மெதுவான தாளக்கட்டாய் இருந்தால் எந்தரித்து புகை பிடிக்க போய்விடுவார்கள் என இந்த தந்திரத்தைக் கையாண்டார்கள் இயக்குநர்கள். இந்தப் பாடலை நாயகனே ஆடினால்தான் ரசிகர்களை உட்கார வைக்க முடியும் என்ற நிலையில் நாயகனுக்கு நடனத்திறமை அவசியமாகிப் போனது.

இந்த நடன மறுமலர்ச்சியை நன்கு பயன்படுத்திக் கொண்டு மக்கள் மனதில் பதிந்த நாயகர்களில் விஜய் முக்கியமானவர். வேகமான நடனமே அவருக்கு ஆரம்பகாலத்தில் ஒரு அடையாளத்தைத் தந்தது. இந்த மாஸ்டர்களால் நடந்த இன்னொரு மாற்றம், கவர்ச்சிப் பாடல்களுக்கு ஆட என இருந்த நடிகைகள் குறைந்தது. 80களில் எல்லாம் கமர்சியல் படங்களில் நிச்சயம் ஒரு கவர்ச்சி நாயகி ஆடும் பாடல் இருக்கும். படம் இரண்டாம், மூன்றாம் ரவுண்ட் ஓடும் இடங்களில் ஒட்டப்படும் போஸ்டர்களில் அவர்களின் படமே பிரதானமாய் இருக்கும். ஆனால் 90களில் நாயகிகளே அவர்களுக்கு இணையாக கவர்ச்சியாக ஆட ஆரம்பித்ததால் கவர்ச்சி நாயகிகளுக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. ரம்பா,சிம்ரன் போன்ற நாயகிகளுக்கு இவ்வகை நடனம் மூலம் நல்ல புகழ் கிடைத்தது.
இந்த நடனங்கள் சமூகத்தில் எல்லாப் பகுதியிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். கல்லூரி கலைவிழாக்களில் போக் டான்ஸ், வெஸ்டர்ன் டான்ஸ் போன்றவை மிக முக்கியம் என்ற நிலை ஏற்பட்ட்து. அதற்கு முன் நாடகம்,இசை நிகழ்ச்சி, பட்டி ம்ன்றம், வழக்காடு மன்றம்,கரகாட்டம் என இருந்த கோவில் திருவிழாக்களில் ஆட்லும் பாடலும் நிகழ்ச்சி அத்தியாவசியமான ஒன்றாயிற்று. திருவிழாக்களின் ஹைலைட்டே ஆடல் பாடல் நிகழ்ச்சிதான் என மாறியது. நாயகர்களைப் போல வேடமிட்டு அவர்களின் மேனரிசங்களோடு ஆடினாலும், நல்ல நடனங்களை ஆட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது

இந்த நடன மறுமலர்ச்சியால் பல பாதிப்புகளும் உண்டு. முந்தைய கால கட்டப் படங்களில் நாயகனுக்கும் நாயகிக்கும் ஆடும் போது சிறு இடைவெளி இருக்கும். 90களுக்குப் பிறகு அது வெகுவாக குறைந்தது. ஏன் இல்லாமல் கூடப் போனது. அங்கங்கள் உரசுதல் போன்றவை மட்டுமல்லாது ஏராளமான விரசமான அசைவுகளும் புகுத்தப்பட்டன. தொலைக்காட்சியில் சத்தமில்லாமல் இந்த நடனங்களைப் பார்க்கும் போது விரசம் அதிகரித்துத் தோன்றும். தொடர்ச்சியாக இந்நடனங்களைப் பார்க்கும் சமுதாயத்தில் கலாச்சார மதிப்பீடு சற்று குறைந்து விடுகிறது. உதாரணத்திற்கு ஆண்/பெண்களின் பின்புறத்தை பார்வையாளனை நோக்கி ஆபாசமாக அசைக்கும் நடனங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

பிரபுதேவா, ராஜு சுந்தரத்தின் உதவியாளர்களான திணேஷ், ஏபெல். ஜான் மட்டுமல்லாது  ராகவேந்திரா லாரன்ஸ், கல்யாண் என தொடர்ச்சியாக புது நடன இயக்குநர்கள் தொடர்ந்து அறிமுகமாகி, அதை ஒரு பாரம்பரியமாகவே ஆக்கிவிட்டார்கள். தற்போது தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் நடனத்தின் அடிப்படையிலான ரியாலிட்டி ஷோக்களுக்கும் இந்த 90களில் நடனத்துறையில் ஏற்பட்ட மாற்றமும்தான் காரணம்.

May 14, 2016

தங்கம் தென்னரசு

திருச்சுழி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் திரு.தங்கம் தென்னரசு அவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?

ஒரு சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடுபவருக்கு தொகுதியில் உள்ள அடிப்படைத் தேவைகள். மக்களின் பிரச்சினைகள் பற்றிய தெளிவு இருக்க வேண்டும். அதுபோலவே அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் மற்றும் தொகுதியை தற்போதைய நிலையில் இருந்து முன்னேற்றிச் செல்வதற்கான திட்டங்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வையும் இருக்க வேண்டும்.


தங்கம் தென்னரசு அவர்களுக்கு தொகுதியில் உள்ள மூன்று ஒன்றியங்களின் அடிப்படைத் தேவைகள் பற்றி தெளிவாகத் தெரியும். கடந்த 10 ஆண்டுகளாக அவற்றை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறார்.

1. 2006-11 ல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது திருச்சுழி தொகுதியில் இருந்த ஏராளமான நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தினார். நிறைய பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் உறைவிடப்பள்ளிகள் கொண்டுவந்தார்.

2. குடிநீர் பிரச்சினை தீர தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டுவந்தார்.

3. ஆரம்ப சுகாதார நிலையங்கள் பலவற்றைக் கொண்டுவந்தார் சில ஆரம்ப சுகாதார நிலையங்களை அரசு மருத்துவமனைகளாக தரம் உயர்த்தினார்.

4. தொகுதி முழுவதும் சாலை வசதி, சமூகக் கூடம், புதிய அரசு கட்டிடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள் என உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினார்.

5. 2011-16லும் தன் கட்சி ஆட்சியில் இல்லாத போதும் தொகுதி உறுப்பினர் நிதி மற்றும் தன்னால் இயன்ற அளவு போராடி பல வசதிகளைக் கொண்டுவந்தார்.

மேலும் இன்னும் தேவையான வசதிகளை எப்படி நிறைவேற்றுவது என்ற செயல்திட்டமும் அவரிடம் உண்டு.

இயல்பாகவே நீர்ப்பாசன வசதி மற்றும் மண் தன்மை காரணமாக வளமில்லாத பூமி திருச்சுழி தொகுதி. அதை முன்னேற்ற கல்வி மற்றும் தொழிற்சாலைகளே வேண்டும் என்பதால் அதற்கான முன்னெடுப்புகளைத் துவங்கினார். ஆனால் அவர்களால் தொகுதிக்கு கொண்டுவரப்பட இருந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரி அதிமுக அரசால் வேறு தொகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கும் செயல்படாமல் இருக்கிறது. மேலும் ஒரு மருத்துவக்கல்லூரி கொண்டுவரவும் அடிப்படை வேலைகள் பூர்த்தியாகி ஆட்சி மாற்றத்தால் அது கிடப்பில் போடப்பட்டது.

தங்கம் தென்னரசு அவர்களால் பல வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் தொகுதி இளைஞர்களின் கல்வித்தகுதி பற்றி எடுக்கப்பட்டுள்ள சர்வேயின் படி ஏராளமான வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. தொழில் துறை வளர்ச்சிக்கும் பல முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளது. சில நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளது.

ஆனால் போட்டியிடும் மற்ற கட்சி வேட்பாளர்கள் யாருக்கும் இதுபோல எந்தவிதமான அடிப்படைப் புரிதலும் தொகுதியைப் பற்றி கிடையாது. என்ன செய்தால் தொகுதி முன்னேறும் என்று அவர்களிடம் திட்டம் ஏதும் கிடையாது. பரிசுச்சீட்டு குலுக்கலில் அதிர்ஷ்டத்தால் வாய்ப்பு கிடைத்தது போல் சீட் கிடைத்து போட்டி போடுபவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

எனவே தொகுதியின் ஆதார பிரச்சினைகளைப் பற்றி அறிந்த, அவற்றை தீர்க்க செயல் திட்டம் உள்ள, மேலும் தொகுதியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல தொலை நோக்கு திட்டமும் உடைய தங்கம் தென்னரசு அவர்களுக்கு வாக்களியுங்கள்.

அவர் தன்னை கடந்த 10 ஆண்டுகளாக செயல்பாடுகளின் மூலம் தன்னை நிரூபித்திருக்கிறார். இன்னும் ஆக்கபூர்வமாகச் செயல்பட உங்களின் ஆதரவை அளியுங்கள்.

May 05, 2016

ஸ்ரீகாந்த்

ஐபிஎல்-லில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாண்டுகளுக்கு விலக்கப்பட்டதில் அந்த அணியின் உரிமையாளர், ஸ்பான்ஸர்கள், பயிற்சியாளர்கள், வீரர்களை விட மிக அதிகமாக கவலைப்பட்ட ஓர் ஆத்மா இருக்குமென்றால் அது சென்னை நகரின் கிரிக்கெட் ரசிக ஆத்மாவாகத்தான் இருக்க முடியும். கிரிக்கெட் விளையாடும் நாடுகளிலேயே இந்த விளையாட்டைப்பற்றி அதிகமான தகவல்களும், நுணுக்கங்களும் அறிந்த ஏராளமான ரசிகர்கள் ஒரு ஊரில் இருக்கிறார்களென்றால் அது சென்னையாகத்தான் இருக்கும்.

2001-ம் ஆண்டில் கொல்கத்தாவில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில், பாலோஆன் வாங்கி, டெஸ்ட் மட்டுமல்லாது சீரிஸையையே இழக்கும்நிலையில், விவிஎஸ் லக்ஸ்மன் 281 ரன்களும், ராகுல் டிராவிட் 180 ரன்களும் குவித்து ஒருநாள் முழுவதும் ஆட்டமிழக்காமல் இருந்த நாளில்தான் சென்னை கிரிக்கெட் ரசிகர்களின் மகத்துவத்தை நான் புரிந்து கொண்டேன்.

அன்று வேலை நாள். இந்த அபார ஆட்டம் பற்றி கேள்விப்பட்ட, வேலைக்குச் சென்றிருந்த எல்லோரும் ஹைலைட்ஸ் பார்க்க பெரும் ஆவலுடன் இருந்தார்கள். நாங்கள் இருந்த மேன்சனில் டிவி பார்க்க பிளாக் டிக்கெட் கொடுக்கும் அளவுக்குக் கூட்டம். கிட்டத்தட்ட திருவல்லிக்கேணி மேன்சன் முழுவதும் இதே கதைதான். ஹைலைட்ஸ் முடிந்ததும் எல்லோரும் பேசிக்கொண்டே டீ குடிக்க கிளம்பினோம். அந்த ஏரியா முழுவதுமே அந்த ஆட்டத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். டீக்கடையில் இருந்த சிலர் இதற்குமுன் இதுபோல நடந்த நிகழ்வு, இம்மாதிரியான ஆட்டங்கள், லக்ஸ்மனின் ஷாட் செலக்ஷன் என சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். அடுத்தநாள் வந்த எல்லா முன்னணி ஆங்கில நாளிதழ்களிலும் அவர்கள் பேசிக் கொண்டிருந்த பழைய ஆட்டங்கள், நுணுக்கங்கள் எல்லாம் அப்படியே பிரபல ஆட்டக்காரர்கள்/நிபுணர்கள் எழுதும் பத்திகளில் வந்திருந்தது.

இந்த 20-20 மேட்சுகளை விட்டுவிடுங்கள். அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது பேச நேரமிருக்காது. கூச்சலும் அதிகம் இருக்கும். போதாக்குறைக்கு இசை, நடனம் வேறு. சேப்பாக்கத்தில் ஒருநாள் ஆட்டம் பார்க்க வேண்டும். நம் கண்களை ஆட்டத்துக்கும் காதுகளை அருகில் இருப்பவர்களுக்கும் கொடுத்து விடவேண்டும். எவ்வளவு தகவல்கள் கிடைக்கும் தெரியுமா? இந்த பிளேயர், எந்த ரஞ்சி அணிக்கு ஆடினார், அவரின் பலவீனம் என்ன? பலம் என்ன? என பேசிக் கொண்டே இருப்பார்கள். உலகின் அத்தனை பிளேயர்களின் ரெக்கார்டும் அத்துபடி அவர்களுக்கு.

அதுபோக பெரும்பாலான ஐபிஎல் டீம்களில் கோச்சிங் ஸ்டாப்பாக இருப்பது சென்னை பிளேயர்கள் தான். இதன்மூலம் சென்னை கிரிக்கெட் பிளேயர்களின் கிரிக்கெட் தொடர்பான அறிவை தெரிந்து கொள்ளலாம். டெல்லி அணிக்கு சேகர், பெங்களூரு அணிக்கு பரத் அருண், மும்பை அணிக்கு ராபின் சிங், ஐதரபாத் அணிக்கு கன்சல்டண்டாக ஸ்ரீகாந்த் என தங்கள் பங்கை ஆற்றிவருகிறார்கள். ஸ்ரீதரன் ஸ்ரீராம் டெல்லி அணிக்கு முன்பு துணை கோச்சாக இருந்தார். அது மட்டுமல்ல உலகுக்கே கோச்சுகளை சப்ளை செய்யும் ஆஸ்திரேலியா அணிக்கே பங்களாதேஷ் பயணத்திற்கு கோச்சாகவும், மற்றும் ஆஸ்திரேலிய ஏ அணியின் இந்திய பயணத்திற்கு கோச்சாகவும் இருந்த பெருமைக்குரியவர்.

இவ்வளவு இருந்தும் பெரும் சோகம் என்னவென்றால், சுதந்திரத்துக்குப் பின் சில ஆட்டக்காரர்கள் மட்டுமே இந்திய அணியில் தொடர்ச்சியாக ஆடும் வாய்ப்பை தமிழ்நாட்டின் சார்பில் பெற்றிருக்கிறார்கள். தலைசிறந்த ஆஃப் ஸ்பின்னர் வெங்கட்ராகவன், அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஸ்ரீகாந்த், ஆல்ரவுண்டர் ராபின்சிங், இப்போது அஸ்வின். லெக் ஸ்பின்னர் சிவராமகிருஷ்ணன், டபிள்யூ.வி.ராமன், குமரன் என அவ்வப்போது இடம்பெற்று காணாமல் போனவர்களும் அதிகம்.

இவர்களில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்த ஸ்ரீகாந்த் தனிரகம். பெரும்பாலானோர் ஆரம்ப ஓவர்களில் அதிரடியாக ஆடுவதை ஜெயசூர்யா - கலுவித்தரன இணை தொடங்கியதாகவே நினைப்பார்கள். அது 1995-ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இலங்கை கேப்டன் ரணதுங்காவால் கட்டமைக்கப்பட்டது. கீழ்வரிசை ஆட்டக்காரரான ஜெயசூர்யாவை ஓப்பனிங் இறங்கி ஆட வைத்தார். அது 96 உலகக் கோப்பையில் வெற்றிகரமான வியூகமானது. ஆனால், அதற்கு முன்னரே 92 உலகக் கோப்பையில் நியூசிலாந்து கேப்டன் மார்ட்டின் குரோ, மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் கிரேட் பாட்சை அதுபோல ஆட வைத்திருந்தார். அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றிருந்தார். நம் ஸ்ரீகாந்த் தான் இதற்கு முன்னோடி. அவர் 80-களிலேயே இந்தமுறையில் ஆடிவந்தார். அதை அப்போது ‘ஓவர் தி ஹெட்ஸ்’ ஆடுதல் என்று அழைப்பார்கள். ஓரிருவரைத் தவிர எல்லோரும் உள்வட்டத்தில் நிற்கும்போது, ஸ்ரீகாந்த் பந்துகளை அவர்களின் தலைக்கு மேல் அடித்து ஆடுவார்.

90-களில் எப்படி சச்சின் அவுட்டானால் டிவியை அணைத்து விடுவார்களோ, அதுபோல 80-களில் ஸ்ரீகாந்த் அவுட்டானால் பார்த்துக்கொண்டிருப்பவர்களில் முக்கால் வாசிப்பேர் எழுந்து வெளியே சென்று விடுவார்கள். அப்போது அவர்தான் பேட்டிங்கில் ஒரே எண்டர்டெயினர். அடுத்து மொஹிந்தர் அமர்நாத், திலீப் வெங்சர்க்கார், அசாருதீன், ரவிசாஸ்திரி என நிதானமான ஆட்டக்காரர்கள் வந்துவிடுவார்கள். கபில்தேவ் வேண்டுமானால் மக்கள் ரசிக்கும்படி அடித்து ஆடுவார். எனவே ஸ்ரீகாந்த் அவுட்டானால் டிவி ரூம் காலியாகிவிடும். சச்சின் தன் முதல் சில மேட்சுகளில் அடித்து ஆடும்போது அவரை அடுத்த ஸ்ரீகாந்த் என்றுதான் சொல்லிக் கொள்வார்கள். ஆஸ்திரேலிய பெர்த்தில் சச்சின் சதம் அடித்த பின்னர்தான் அடுத்த ரிச்சர்ட்ஸ், அடுத்த பிராட்மென் என படிப்படியாக நகர்ந்தார்.

ஸ்ரீகாந்த் ஸ்கொயர் கட் அடிப்பதில் கில்லாடி. கவர் ட்ரைவ், ஸ்ட்ரெயிட் ட்ரைவ், மிட் விக்கெட் திசையில் அடிக்கப்படும் புல் எல்லாம் சிறப்பாக ஆடுவார். அவரது பலமே அற்புதமான கண் மற்றும் கை ஒருங்கிணைப்புத்தான். ஆட்டத்தில் பெரிய டெக்னிக் எல்லாம் இருக்காது. ஆப் ஸ்டம்புக்கு சற்று தள்ளி விழுந்து அவுட்ஸ்விங் ஆகும் பந்துகளுக்கு திணறுவார். அதேபோல ஷாட் செலெக்ஷன் அவ்வளவு சிறப்பாக இருக்காது. தேவையில்லாத பந்துகளில் கூட அவுட்டாகி வெளியே சென்றுவிடுவார். சேவாக்கை ஸ்ரீகாந்தின் வாரிசு என்று கூடச் சொல்லலாம். ஸ்பின்னரை நன்கு ஆடக்கூடியவர் ஸ்ரீகாந்த். சென்னையில் விளையாட்டாகச் சொல்வார்கள், ‘இங்க ஒரு தாத்தா கூட வாக்கிங் ஸ்டிக்கால ஸ்பின்னரை ஆடிவிடுவார்’ என்று. சென்னைக்காரர் ஸ்ரீகாந்த் ஆடாமல் இருப்பாரா? 87 உலகக்கோப்பை பைனலில் கேட்டிங் ரிவர்ஸ் ஸ்விப் ஆடி அவுட் ஆகி கோப்பையை இழந்து புகழ்பெறுவதற்கு முன்னரே, அந்தத் தொடரில் நியுசிலாந்து ஸ்பின்னர் தீபக் பட்டேலுக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப் எல்லாம் ஆடியவர் ஸ்ரீகாந்த். ஆனால், ஸ்பின்னர்கள் வரும்போது பெரும்பாலான மேட்சுகளில் அவர் இருக்கமாட்டார்.

களத்தில் ரிலாக்ஸாக இருக்கமாட்டார் ஸ்ரீகாந்த். தடுத்தாடுவதில் அவருக்கு நம்பிக்கை கிடையாது. ஸ்ட்ரைக் ரொட்டேட் ஆகிக்கொண்டே இருந்தால்தான் அவரும் ரிதத்துடன் விளையாடுவார். பந்து வீச்சுக்கு இடையிலும் கூட ஸ்கொயர் லெக் திசையை நோக்கி நடப்பதும் திரும்புவதுமாக இருப்பார்.
பேட்ஸ்மென்களின் சொர்க்கமான இந்தியாவில் ஒரே ஒரு டெஸ்ட் செஞ்சுரிதான் ஸ்ரீகாந்த் அடித்திருக்கிறார் என்றால் அவரின் பொறுமையை நாம் அறிந்து கொள்ளலாம். இன்னொரு சதம் ஆஸ்திரேலியாவின் சிட்னியில். அப்போதைய கிரிக்கெட் பீல்டிங் தரத்துக்கு அவர் ஒரு நல்ல பீல்டர், பார்வர்ட் ஷாட் லெக்கில் நின்று பல நல்ல கேட்சுகளைப் பிடித்துள்ளார். அவ்வப்போது பந்து வீசி விக்கெட் எடுக்கவும் செய்வார்.

இந்தியா வென்ற 83 உலகக் கோப்பையிலும் சரி, 85 உலகத் தொடர் கோப்பையிலும் சரி அவரின் சிறப்பான பங்கு இருந்தது. 1987 உலகக் கோப்பை போட்டியில், 83-ல் பெற்ற கோப்பையை தக்கவைக்க வேண்டுமென்ற முனைப்புடனும், சொந்த நாட்டில் விளையாடும் அனுகூலத்துடனும் விளையாடிய இந்திய அணி, செமி பைனலில் இங்கிலாந்துடன் தோல்வி அடைந்ததும் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து கபில்தேவ் நீக்கப்பட்டார். மும்பையின் திலீப் வெங்சர்க்கார் அணித் தலைவரானார். அவரும் ஓரிரு வருடங்கள்தான் நீடித்தார். அதன்பின் அந்தப் பொறுப்பு ஸ்ரீகாந்த்துக்கு வந்து சேர்ந்தது.

ஸ்ரீகாந்த்துக்கு முதல் சோதனையாக வந்தது பாகிஸ்தான் சுற்றுப்பயணம். இம்ரான், வாசிம், வக்கார் யூனுஸ் என பந்து வீச்சாளர்களும், மியாண்டட், சலிம் மாலிக், இஜாஸ், ரமீஸ் என பேட்ஸ்மென்களும் நல்ல பார்மில் இருந்த அணி. இந்திய அணியில் 16 வயது நிரம்பியிருந்த சச்சின் ஆச்சர்யகரமாக சேர்க்கப்பட்டிருந்தார். நல்ல பவுலர்களும் இல்லை. மனோஜ் பிரபாகர்தான் முக்கிய பந்து வீச்சாளராக அந்த அணியில் ஆடினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த டீமை வைத்துக் கொண்டு டெஸ்ட் தொடரை இழக்காமல் நாடு திரும்பினார் ஸ்ரீகாந்த். இது அந்தக் காலத்தில் பெரும் சாதனையாகக் கருதப்பட்டது.

அதற்குப் பின் பெரிய காரணம் ஏதுமின்றி ஸ்ரீகாந்த் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு அசாருதீன் கேப்டன் ஆக்கப்பட்டார். அதன்பின் இரண்டாண்டுகள் ஆடி ஸ்ரீகாந்த் ஓய்வு பெற்றுக்கொண்டார். பின் இந்திய அணியின் செலக்டராக, மேனேஜராக பல பொறுப்புகள் வகித்து, தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆலோசகராக இருக்கிறார்.
ஸ்ரீகாந்த் ஆடிய காலகட்டத்தில் தொடக்க ஆட்டக்காரருக்கு அவ்வளவு போட்டி கிடையாது. மத்திய வரிசையில் இடம்பிடிக்க பெரிய போட்டியே இருக்கும். தொடக்க ஆட்டத்தில் கவாஸ்கருக்கு ஓரிடம் நிரந்தரம். இன்னொரு ஆட்டக்காரருக்கு பெரிய போட்டி இல்லாமல் இருந்தது. சித்து, ராமன் லம்பா ஆகியோர் 80-களின் பிற்பகுதியில்தான் வந்தார்கள் என்றாலும் அவர்களும் மூன்றாம் இடத்துக்கும் கருத்தில் கொள்ளப்பட்டார்கள். இவ்வளவு ஏன் கவாஸ்கர் 87-ல் ஓய்வு பெற்றதும் தொடக்க ஆட்டக்காரருக்கு ஆள் இல்லாமல் அருண்லாலை எல்லாம் இறக்கிப் பார்த்தார்கள். அதன் பின்னரும்கூட பல ஆண்டுகள் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் நமக்கு அமையவே இல்லை. சேவாக் கூட மத்திய வரிசை ஆட்டக்காரராக நுழைந்து, பின் தொடக்க ஆட்டக்காரர் ஆனவர்தானே? ஏன், இன்றும் கூட டெஸ்ட்மேட்சுகளில் பலமான தொடக்க ஜோடி நமக்கு இல்லையே?

ஸ்ரீகாந்த்துக்குக் கிடைத்ததெல்லாம் அருமையான வாய்ப்புகள். இப்போது போல தொடர்ச்சியாக போட்டிகள் நடைபெறும் காலமல்ல. இப்போது ஒரு பேட்ஸ்மெனின் டெக்னிக் தவறாக இருந்தால் அதை திருத்தக்கூட நேரமில்லாமல் போட்டிகள் நடைபெறுகின்றன. ஆனால், அப்போது போட்டித் தொடர்களுக்கு இடையே நல்ல இடைவெளி இருக்கும். ஸ்ரீகாந்த் தன் பலவீனங்களை திருத்த முயற்சி எடுத்ததே இல்லை. சில நடிகர்கள் நடிக்க வந்தது முதல் மார்க்கெட் அவுட்டாகும் வரை நடிப்பில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதைப் போல ஆரம்பக் காலத்தில் இருந்த திறமையுடனேயே ஓய்வுபெறும் வரையில் இருந்தார்.

சென்னைக்காரர், ஆகையால் அவருக்கு நல்ல கிரிக்கெட் மூளை. தேர்வாளராக, மேனேஜராக அதை அவர் நிரூபித்துள்ளார். நல்ல கவனிப்பாளர். பல பேட்டிகளில் அவர் சொன்ன விஷயங்கள் எல்லாம் பின்னர் நடந்துள்ளன. தன் இடத்துக்குப் பெரிய போட்டி இல்லாததாலோ என்னவோ தன் ஆட்டத்திறனை மேம்படுத்துவதில் அவர் பெரிய கவனம் எடுத்துக் கொள்ளவில்லை போலும்.