August 01, 2016

கமல் ரஜினி



நான் முன்னர் பணியாற்றிய இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் டிசைன் பிரிவில் இருந்த மேலாளரை பெரும்பாலான பணியாளர்களுக்குப் பிடிக்காது. திறமையானவர். ஆனால் யாரிடமும் முகஸ்துதியாகப் பேசமாட்டார். அதற்கு நேர்மாறாக புரடக்ஷன் பிரிவில் இருந்த மேலாளரை அனைவருக்கும் பிடிக்கும். எல்லோரிடமும் சுமுகமாக பழகுவார். சிறிய செயல்களைக் கூட பாராட்டிவிடுவார். டிசைன் பிரிவு மேலாளர், ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்ற ஆவலுடனே இருப்பார். ஆனால் புரடக்சன் மேலாளரோ அதான் நல்லாப் போயிக்கிட்டு இருக்கில்ல, அப்படியே மெயிண்டையின் பன்ணுவோம் என்று சொல்லிவிடுவார்.

டிசைன் பிரிவில் எந்நேரமும் புது முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கும். ஐந்துக்கு ரெண்டு பழுதில்லை என்பது போலத்தான் வெற்றி விகிதமும் இருக்கும். எப்பொழுதாவது ஜாக்பாட் போல அவர்கள் டிசைனில் உருவான இயந்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றுவிடும். சில சமயம் அவர்கள் மிக அட்வான்ஸாக டிசைன் செய்து, அங்கிருக்கும் குறைவான தொழில்நுட்பத்தால்  சரியாக பெர்பார்மன்ஸ் கொடுக்காமல் தோல்வி அடைவதும் உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழ்நாட்டின் பல கிராமங்களில் மின் வசதி கூட இல்லாத காலத்தில், சிறிய ஜெனெரேட்டர்களை தயாரிப்பதற்கு டிசைன் எல்லாம் செய்தார். இதற்கு இப்போது என்ன தேவை என போர்டு மீட்டிங்கில் நிராகரித்து விட்டார்கள்.

இந்த டிசைன் மேனேஜரால அப்பப்ப நஷ்டம் வந்துவிடுகிறது என பேச்சாக இருந்தாலும், அவர்கள் எடுக்கும் முயற்சிகளால் மற்ற தொழிலாளர்களுக்கு கூடுதல் அறிவு கிடைத்தது. வெற்றியடைந்த சில பிராடக்ட்களால் கம்பெனிக்கு நல்ல பிராண்ட் நேம் கிடைத்தது. எனவே கம்பெனி அவருக்கு பெரிய தொந்தரவு கொடுக்கவில்லை. இந்த நேரத்தில் புரடக்ஷன் மேனேஜருக்கு நல்ல பெயர் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருந்தது. நிர்வாகத்திடமும். தொழிலாளர்களிடமும் தன்மையாக நடந்து கொண்டதால் இருந்த மேலாளர்களிலேயே சிறந்தவர் என பெயர் கிடைத்தது

அந்த சமயத்தில் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த பலர் வெவ்வேறு நிறுவனங்களுக்குச் சென்றார்கள். நிறுவனமும் விரிவடையத் தொடங்கியிருந்ததால் ஏராளமான புதுமுகங்கள் உள்ளே வந்தார்கள். வந்த அனைவருக்குமே புரடக்ஷன் மேலாளர் ஏற்கனவே பெற்றிருந்த நற்பெயரால் அவர் மீது ஒரு நல் அபிப்ராயம் இருந்தது. அவரும் என்னப்பா எப்படி இருக்கீங்க என புதியவர்களைச் சந்திக்கும் போது அளாவளாவ அவருக்கு இன்னும் மரியாதை கூடியது. டிசைன் மேலாளரோ திறமையானவர்கள், நல்ல உழைப்பாளிகள் என்றால் ஒரளவு பேசுவார். மற்றவர்களிடம் பாராமுகமாய் இருப்பார். நான் சில காலம் அவரிடம் இருந்தேன். நிறைய கற்றுக்கொண்டேன்

அடுத்த தலைமுறை உதவி மேலாளர்கள் எல்லாம் புரடக்ஷன் மேலாளரைப் போலவே வேலை பார்க்கத் துவங்கினார்கள். இருக்கும் தொழில்நுட்பத்தை அப்படியே வைத்துக் கொள்வோம். புதிய முயற்சிகள் வேண்டாம். நம்மால் நஷ்டம் வந்தது என்ற பேச்சு வரக்கூடாது என்ற எண்ணத்திலேயே வேலை பார்த்து அவர்களும் மேலாளர்களானார்கள். டிசைன் பிரிவுக்கு போவதற்கு மிகவும் தயக்கம் காட்டினார்கள். ஓரிரு பிராஜக்ட்களில் இருந்துவிட்டு பின்னர் வேறு பிரிவிற்கு மாறிக்கொண்டார்கள்.

புரடக்சன் மேலாளர் இப்போது சீனியர் வைஸ் பிரசிடெண்ட் ஆகிவிட்டார். டிசைன் மேலாளர் வைஸ் பிரசிடெண்ட். அந்த நேரத்தில், நான் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி இன்னொரு நிறுவனத்தில் சேர்ந்து விட்டேன். பெண்கள் திருமணமாகி வேறு ஊருக்குச் சென்றாலும், தங்கள் தெரு வம்புகளை அடிக்கடி கேட்டுத் தெரிந்து கொள்வது போல, நானும் எனக்கு நெருக்கமாய் இருந்த அக்கவுண்ட்ஸ் மேலாளரிடம் நிறுவனத்தில் என்ன நடக்கிறது என அடிக்கடி கேட்டுத் தெரிந்து கொள்வேன்,
சில ஆண்டுகளில், டிசைன் சாப்ட்வேர்கள் எல்லாம் கம்பெனியில் வாங்கி இருப்பதாகவும், முன்போல பேப்பரில் வரைவது போல் சிரமப்படாமல் இப்போது டிசைன் டீம் எளிதாக வேலை செய்வதாகவும் சொன்னார். புதிதாக வேலைக்குச் சேர்ந்த சிலர் டிசைன் பிரிவில் இப்போது ஆர்வம் காட்டுவதாகவும்  சொன்னார். டிசைன் மேலாளர் முன்னர் செய்து வைத்திருந்த ஏராள முயற்சிகளால் புதிதாய் வந்தவர்கள் எளிதில் அதை கற்றுக் கொண்டு அவருக்கு இணையாகவும். ஏன் அவரைவிட சிறப்பாகவும் பணியாற்றத் துவங்கினார்கள். தற்போது வைஸ் பிரசிடெண்ட் ஆக இருந்தாலும், அவர்களுக்கு இணையாக அவரும் சில முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டே தான் இருந்தார்

இப்போது புரடக்சன் துறையிலும் புது முயற்சிகளை செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகி இருந்தது. வழக்கமான முறையிலேயே செயல்பட்டால் லாபம் குறையும் நிலை இருந்தது. எனவே இப்போது சீனியர் வைஸ் பிரசிடெண்ட், புது முயற்சிகளை மேற்கொள்ளும் உதவி மேலாளர்களுடன் இணைந்து சில முயற்சிகளைச் செய்தார். அதிக லாபம் கிடைக்கவும் அவருக்கு இன்னும் பெரிய பேர் கிடைத்தது.
நிறுவனத்தில் உள்ளவர்களிடம் எல்லாம் இதேதான் பேச்சாக இருக்கிறதாம். இவர் மட்டும் ஆரம்பத்திலேயே டிசைன் பிரிவுக்கு போயிருந்தால் இந்நேரம் இந்த நிறுவனத்தின் டிசைன் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும் என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்களாம்.

கால ஓட்டத்தில் நானும் மேலாளர் ஆகிவிட்டேன்.  சென்ற வாரம் நந்தனம் ட்ரேட் செண்டரில் ஒரு இண்டஸ்டிரியல் எக்ஸ்போவுக்குப் போயிருந்தேன். சுற்றி வந்து கொண்டிருந்த போது,  பழைய நிறுவனத்தில் என்னிடம் பணியாற்றிய ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவரும் தற்போது இன்னொரு நிறுவனத்தில் மேலாளர். தொழில்துறை பற்றி பொதுவாக பேசிக் கொண்டிருந்தோம். எங்களின் டிசைன் மற்றும் புரடக்ஷன் மேலாளர்கள் பற்றித்தான் அதிகம் பேசிக் கொண்டோம். விடைபெறும் போது அவர், நீயும் இப்போது மேலாளர் ஆகிவிட்டாய், யார் பாணியை பின்பற்றுகிறாய்? உனக்குப் பிடித்த டிசைன் மேலாளரைப் போலத்தானே நீயும் இருப்பாய் எனக் கேள்வியையும் கேட்டு பதிலையும் அவரே சொல்லிக் கொண்டார். நான் சிரித்த படியே, அவரைப் பிடிக்கும் தான் ஆனால் நான் வேலையில் பின்பற்றுவது புரடக்சன் மேலாளரின் வழி என்று சொல்லிவிட்டு அவரின் ஆச்சரியப் பார்வையுடன் விடை பெற்றேன்.   

சொல்ல மறந்துவிட்டேன் பாருங்கள். டிசைன் பிரிவு மேலாளரின் பெயர் கமல்ஹாசன். புரடக்‌ஷன் பிரிவு மேலாளரின் பெயர் ரஜினிகாந்த்.
 

4 comments:

வருண் said...

எனக்கு நெஜம்மாவே புரியலை, திரைமணத்தில் கமல்ரஜினினு தலைப்பில் இந்தப் பதிவு இருக்கு!!

Post-modernest-writer ஆ நீங்க் முரளிகண்ணன்? :))

Avargal Unmaigal said...

நடிகர்களின் பெயர் வந்திருந்தால் அதுஆட்டோ மேட்டிக்காக திரைமணத்தில் சென்றுவிடும்

yesterday.and.tomorrow said...

கபாலி என்ற குப்பையை குப்பை என்று சொன்ன உங்களுக்கு நன்றி!

ravikumar said...

I think you had forgotten to add one more valid point as Design Manager is an Atheist and Production Manager strong devotee of God