August 30, 2016

தலைவாசல் விஜய்


92 ஆம் ஆண்டு தலைவாசல் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியான நேரத்தில் 40க்கும் குறைவான பொறியியல் கல்லூரிகளே தமிழகம் முழுவதும் இருந்தன. ஆனால் முன்னூறுக்கும் அதிகமான கலை அறிவியல் கல்லூரிகள் இருந்தன. தலைவாசல் திரைப்படமானது கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஏற்படும் போதைப் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. படம் வெளிவரும் முன்பே அப்போது வெளியாகிக் கொண்டிருந்த சினிமா சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளில் ஏராளமான விளம்பரங்களைக் கொடுத்தார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம். முழுக்க முழுக்க இளைஞர்களைக் கொண்டு உருவாகும் படம் என்றே விளம்பரம் செய்திருந்தார்கள். அறிமுக இசை அமைப்பாளர் பாலபாரதியின் இசையில் பாடல்களும் ஹிட்டாகி இருந்தன. இந்தப் படத்தில் தான் ஒரிஜினல் கல்லூரி கானா முதன் முதலாய் தமிழ்சினிமாவில் இடம் பெற்றது என்று கூடச் சொல்லலாம். எனவே இந்தத் திரைப்படமானது முற்றிலும் புது முகங்களைக் கொண்டிருந்தாலும் கல்லூரி மாணவர்களின் ஆதரவால் நல்ல ஓப்பனிங்கைப் பெற்றது. எஸ் பி பாலசுப்பிரமணியம், நாசர் போன்ற சீனியர்கள் நடித்திருந்தாலும், கானா பாடல் பாடும் முன்னாள் கல்லூரி மாணவர் வேடத்தில் நடித்திருந்த விஜய்யும், மடிப்பு அம்சா என்ற கேரக்டரில் நடித்திருந்த விசித்ராவும் உடனடியாகப் புகழ் பெற்றார்கள். விஜய், ஏற்கனவே தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி புகழ் அடைந்திருந்த நீலா மாலா என்னும் தொடரில் வேறு நடித்திருந்ததால் தமிழக மக்களிடையேயும் நன்கு அறிமுகமாகி இருந்தார்.

அடுத்த இரண்டு மாதங்களில் வெளியான தேவர் மகனில் கமல்ஹாசனின் குடிகார அண்ணன் பாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்குள் விஜய் தலைவாசல் விஜய்யாக பெயர் பெற்றிருந்தார். அடுத்ததாக தலைவாசல் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், இசை அமைப்பாளர்  கூட்டணியில் அஜித்-சங்கவி நடித்த அமராவதியிலும் ஒரு நல்ல கேரக்டர் செய்தார். மணிரத்னத்தின் திருடா திருடா, அடுத்ததாக கமல்ஹாசனின் மகாநதி,  ராஜ்கமல் புரடக்‌ஷனில் மகளிர் மட்டும் என தொடர்ந்து முண்ணனி நிறுவனங்கள், நடிகர்களின் படங்களில் நல்ல வாய்ப்பு கிடைக்கப் பெற்றார்.

அடுத்து முரளியின் அதர்மம், விஜயகாந்தின் பெரிய மருது திரைப்படங்களிலும் நல்ல வேடங்கள் கிடைத்தன.
இதற்கடுத்து அவர் ஏராளமான படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்தார். பெரும்பாலான கேரக்டர்கள் அவரின் நடிப்புத் திறமையை பறைசாற்றிய கேரக்டர்கள் தான். ஆனாலும் அவரால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான, படத்தையே தாங்கி நிற்கும் படியான கேரக்டர்களில் நடிக்க வில்லை அல்லது கிடைக்கவில்லை.

அவருக்கு முன்னால் நடிக்க வந்திருந்த ரகுவரன், நாசர் மற்றும் அவருக்குப் பின்னால் வந்த பிரகாஷ் ராஜ் ஆகியோருக்கு இணையான நடிப்புத்திறன் கொண்டிருந்தவர் தலைவாசல் விஜய். ஆனால் அவர்களுக்கு இணையான பெயரை தமிழ் சினிமாவில் அவரால் பெற முடியவில்லை. தொடர்ந்து முக்கியத்துவம் இல்லாத சிறு சிறு வேடங்களே அவருக்குக் கிடைத்தன. இத்தனைக்கும் அவர் முதல் படமான தலைவாசலில் இளைஞர்கள் தங்களை அவருடன் அடையாளப் படுத்திப் பார்க்கும்படியான கேரக்டர். கல்லூரி படிப்பு முடித்தும், கல்லூரி வளாகத்திலேயே சுற்றி, கானா பாடிக்கொண்டிருக்கும் கேரக்டர். ஆனால் அதற்கடுத்து உடனடியாக அவர் நல்ல பாஸிட்டிவ்வான கேரக்டர்களில் நடிக்கத் தலைப்படவில்லை.

வேலை செய்யும் இடங்களிலும் சரி, தமிழ் சினிமாவிலும் சரி, ஒருவர் ஒரு வேலையை திறம்பட செய்துவிட்டால் போதும், அது சம்பந்தமான வேலை வரும் போதெல்லாம் அவர் தான் முதல் சாய்ஸாக இருப்பார். இதனால் உடனடி பலன்கள் இருந்தாலும், நாளடைவில் அந்த வேலையை சிறப்பாக செய்யக்கூடியவர் இன்னொருவர் வந்து விட்டாலோ அல்லது அந்த மாதிரியான வேலைகளுக்கான தேவை குறைந்து விட்டாலோ அவரைச் சீந்த மாட்டார்கள். எனவே தான் மற்ற வேலைகளையும் அவ்வப்போது செய்து கொண்டே இருக்க வேண்டும்.

தலைவாசல் விஜய், அறிமுகமான படத்தில் கஞ்சாவிற்கு அடிமையாகி, பின்னர் திருந்தும் வேடம், அதற்கடுத்த தேவர் மகனில் குடிக்கு அடிமை. பின் வந்த மகளிர் மட்டும்மில் குடிகார கணவன். எனவே தமிழ்சினிமாவில் அதற்கடுத்து எந்த வித குணச்சித்திர குடிகார வேடம் என்றாலும் இயக்குநருக்கு தலைவாசல் விஜய் தான் முதல் சாய்ஸாகத் தெரிவார்.
மகாநதி மற்றும் பேரழகனில் கழைக்கூத்தாடி, காதல் கோட்டையில் ஆட்டோ டிரைவர், கோகுலத்தில் சீதையில் பெண் புரோக்கர், துள்ளுவதோ இளமையில் நடைபாதை மீன் வியாபாரி, சண்டக் கோழி படத்தில் மாற்றுத் திறனாளி  என வித்தியாச வேடங்களும் அவ்வப்போது கிடைத்து வந்தன. இந்த வேடங்களில் எல்லாம் அவர் அப்படியே பொருந்திப் போயிருப்பார். இவர் நடித்த காட்சிகளுக்கான வசனங்கள் கூட அதற்குரிய வார்த்தைக் கோவையில், அந்தக் கேரக்டர்க்கு உரிய உச்சரிப்போடு அமைந்திருக்கும்.

ஆனாலும் அவர் நடித்த பெரும்பாலான வேடங்களை போதைக்கு அடிமையானவர்/நய வஞ்சக கோழை/விளிம்பு நிலை மனிதர் என்ற வகைகளுக்கு உள்ளேயே அடக்கி விடலாம். இந்த மாதிரியான கேரக்டர்கள் என்றாலே தலைவாசல் விஜய்யை கூப்பிடுங்க என்னும் படி நாளடைவில் ஆகிப்போனார்.
காதலுக்கு மரியாதை படத்தில் நடித்த சற்று கோழையான இன்ஸ்பெக்டர் வேடம்.   ஹரிசந்திரா, என்னம்மா கண்ணு, உன்னை நினைத்து,அனேகன் போன்ற படங்களில் நடித்த நல்லவன் போல் நடித்து ஏமாற்றும் வேடம் போன்றே அடுத்தடுத்து தலைவாசல் விஜய்க்கு வாய்ப்புகள் கிடைத்தன. இந்த கேரக்டர்கள் எல்லாமே படத்துக்கு தேவையானதாக இருந்ததே தவிர அவருக்கு என பெரிய மரியாதையை தமிழ்சினிமாவில் பெற்றுத்தரவில்லை.

நடிக்க வந்த மூன்றாண்டுகளிலேயே விஷ்ணு படத்தில், நாயகன் தந்தையின் நண்பனாக இருந்து பின் எதிரியாக மாறும் வயதான வேடம். அதுதான் பரவாயில்லை என்று பார்த்தால் அடுத்து பிரபுவிற்கு தந்தை வேடம். இளவயதிலேயே வயதான வேடங்களில் நடித்த குணசித்திர நடிகர் என்றால் வி.கே. ராமசாமியைச் சொல்வார்கள். அவர் தன் இருபதுகளில் அறுபது வயது வேடம் பூண்டவர். வி கே ராமசாமி என்றாலே யாருக்கும் அவருடைய வயதான தோற்றம்தான் ஞாபகம் வரும். அவரும் அப்படியே தன்னை மெயிண்டெயின் செய்து கொண்டார். அடுத்து நெப்போலியன். அவர்  அறிமுகமான புது நெல்லு புது நாத்திலேயே வயதான கேரக்டர்தான். அதற்கடுத்து அவரை விட மூத்தவரான கார்த்திக்கிற்கு தந்தையாக நாடோடித் தென்றலில் நடித்தார். ஆனால் அவரது  ஆஜானுபாகுவான உருவத்தால் இளவயது வில்லனாக, பின் நாயகனாகவும் பல படங்களில் நடித்தார். ஆனால் தலைவாசல் விஜய் ஏற்ற வயதான வேடத்தால் பின்னர் அவருக்கு கிடைக்க வேண்டிய தாக்கம் தரக்கூடிய இளவயது வேடங்கள்  கிடைக்கவில்லை. வி கே ராமசாமி தன் நகைச்சுவை நடிப்பாலும், நெப்போலியன் தன் மிடுக்கான உருவத்தாலும் ஏற்றம் பெற்றது போல் தலைவாசல் விஜய்க்கு முன்னேற்றம் அமையவில்லை.

தமிழ்சினிமாவில் கொடூர வில்லன்களைத் தவிர எல்லோருமே ஒரு காலகட்டத்தில்  நகைச்சுவை காட்சிகளில் நடித்து விடுவார்கள். இப்போதெல்லாம் கோட்டா சீனிவாசராவ், ஆசிஷ் வித்யார்த்தியில் இருந்து நான்கடவுள் ராஜேந்திரன் வரை பெரிய வில்லன்கள் தான் காமெடியனாகவே நடிக்கிறார்கள். ஹீரோக்களும் கூட அவ்வப்போது காமெடி சீன்களில் நடித்தே ஆகவேண்டி இருக்கிறது. ஆனால் தலைவாசல் விஜய் அவ்வளவாக காமெடி காட்சிகளில் நடிக்கவில்லை. ஒரு வேளை, அர்த்தமில்லாத நகைச்சுவைக் காட்சிகளில் நடிக்க அவர் மனதுக்கு பிடிக்க வில்லையோ என்னவோ? மேலும் அவரின் ஆரம்ப காலப் படங்களினால் அவர் மேல் விழுந்த சீரியஸான ஆள் என்ற இமேஜால் மற்றவர்கள் தயங்கினார்களோ என்னவோ?.
தலைவாசல் விஜய்யின் உடல் அமைப்பு காரணமாக ஹீரோவாகவோ அல்லது முழுநேர வில்லனாகவோ அவரை ஏற்றுக்கொள்ள மக்கள் தயங்குவார்கள் என இயக்குநர்கள் நினைத்தார்கள். எனவே அவர் பெரிய அளவிலான கேரக்டர்கள் வாங்க வேண்டுமானால் அவரே தனக்கான ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கி தன்னை நிரூபித்திருக்கலாம்.

கோகுலத்தில் சீதையில் குடும்பப் பெண்ணை விபச்சாரத் தொழிலுக்கு வற்புறுத்தி அழைக்கும் கதாபாத்திரம் அவருக்கு. அதில் பெண்கள் விபச்சாரம் செய்வதால் அவர்களின் வழக்கமான கடினமான வாழ்வில் இருந்து விடுபட்டு எப்படி சொகுசாக வாழலாம் என மூச்சு விடாமல் பேசுவார். நிச்சயமாக அந்த வசனம் எல்லாம் அவரே மெருகேற்றியிருப்பார் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவருக்கு வாசிப்பும், சினிமா பற்றிய புரிதலும் உண்டு. 

உதவி இயக்குநர், கதாசிரியர், வசனகர்த்தாவாக இருந்த லிவிங்ஸ்டன் ஆரம்பத்தில் கிடைத்த வில்லன் வேடங்களுடன் திருப்தி அடைந்து விடாமல், தனக்கேற்ப ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்து போராடி சுந்தர புருசன் திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். அதன் பின்னர் சில வாய்ப்புகள் கிடைத்தன. அது போல ஒரு தீவிர முயற்சியை தலைவாசல் விஜய் மேற்கொள்ளவே இல்லை.


அவர் பணியாற்றிய பெரும்பாலான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுடன் அவர் தொடர்ந்து பணிபுரிந்து கொண்டே வந்திருக்கிறார் என்பதில் இருந்து அவர் எவ்வளவு அணுக்கமாக நடந்து கொள்வார் என்று தெரிகிறது. கமல்ஹாசன் மற்றும் விஜய்காந்த் படங்களிலும் சரி,
பாஸில்,விக்ரமன்,அகத்தியன்,சரண்,லிங்குசாமி,ஹரி ஆகிய இயக்குநர்களின் படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வந்து இருக்கிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் பெயர் சொல்லும் படியான படங்கள் எதிலும் நடிக்கவில்லை. ஹரியின் இயக்கத்தில் நடித்த சிங்கம் 2 மற்றும் பூஜையில் கூட்டத்தோடு கூட்டமாக இருக்கும் கதாபாத்திரம் தான். கே வி ஆனந்தின் அனேகனிலும் அவருக்கே உரித்தான கதாநாயகியின் தந்தை வேடம். சொல்லப் போனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏராளமான புது இயக்குநர்கள் வந்திருக்கிறார்கள். ஓரளவு யதார்த்தமான படங்களையும் அவர்கள் எடுத்து வருகிறார்கள். இம்மாதிரி படங்களில் இருக்கும் கேரக்டர்களில் அவரால் சிறப்பாக நடிக்க முடியும். 90களில் வந்த புது இயக்குநர்கள் எல்லோருமே ரகுவரனுக்கு என ஒரு ரோல் வைத்திருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் இந்த தலைமுறை இயக்குநர்களிடம் சில கேரக்டர்களுக்கு முதல் சாய்ஸாக வைக்கும் படி பெரிய தாக்கத்தை தலைவாசல் விஜய் ஏற்படுத்தவில்லை.

தமிழ் தவிர்த்துப் பார்த்தால் தலைவாசல் விஜய் போன்ற குணச்சித்திர நடிகர்களுக்கு ஏற்ற மாநிலம் ஆந்திரா. நாசரோ பிரகாஷ் ராஜோ இல்லாமல் ஒரு படத்தை எடுக்கவே தயங்கும் நிலையெல்லாம் அங்கு ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இவருக்கு அம்மாதிரி வாய்ப்புகள் அங்கும் அமையவில்லை.

மலையாளத்தில் யுகபுருசன் என்னும் திரைப்படத்தில் நாராயன குருவாக நடித்தார். அவருக்கு அட்டகாசமாக அந்த வேடம் பொருந்தியது. அதன்பின்னர் அங்கும் பல வாய்ப்புகள் கிடைத்தன. இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக அங்கும் பெரிய அளவில் அவர் நடிக்கவில்லை.

அவரது மகள் நீச்சலில் இந்திய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அதனால் அவரது கேரியரில் கவனம் செலுத்தக்கூட தற்போது அதிக படங்களில் தலைவாசல் விஜய் நடிக்காமல் இருக்கலாம். ஆனால் மிக இயல்பாக கொடுத்த கேரக்டருக்கு ஏற்ற உடல் மொழியுடன் நடிக்கக் கூடிய ஒரு நடிகரை சமீப கால புது இயக்குநர்கள் இழந்து கொண்டிருக்கிறார்கள்

4 comments:

Unknown said...

Nice review about actor தலைவாசல் விஜய்.

க கந்தசாமி said...

உண்மையான ஆதங்கம்

Unknown said...

agood analysis ji strikanth prasanna abbas are the other good actors who could not get many roles.....in films...

Anbazhagan Ramalingam said...

Really a complete analysis..simply superb..