மூன்று உலகங்களில் இரண்டாவது உலகமான பொருள் உலகத்தில் அன்று குறை தீர்ப்பு
நாள். மூவுலகத்தின் தலைமை அதிகாரி அன்று குறை கேட்க வந்திருந்தார். அவ்வளவு
சாதாரணமாக எல்லாம் அவரை உலகின் குடிமக்கள் சந்தித்து விட முடியாது. அவரவர்
உலகின் தலைமை அதிகாரியின் ஒப்புதல் வேண்டும். இரண்டாவது உலகமான பொருள்
உலகிலும் சரி, மூன்றாம் உலகமான ஆற்றல் உலகிலும் சரி தலைமை அதிகாரிகள் சில
கட்ட ஆற்றுப்படுத்தலுக்கு பின்பு அனுமதி வழங்கி விடுவார்கள். முதல் உலகமான
அறிவுலகில், நாமே பிறருக்கு குறை தீர்க்க வேண்டியவர்கள், நாம் குறை தீர்க்க
இன்னொருவரிடம் போவதா என அந்த தலைமை அதிகாரி மறுத்து விடுவார்.
பொருள் உலகில் இருந்த வடிவங்கள் நாட்டைச் சேர்ந்த சதுரத்திற்குத்தான் பெரும் மனக்குறை. இரு பரிமாண வடிவங்களில் சிறந்த வடிவமாக வட்டத்தைச் சொல்லி, இந்த மூவுலகங்களின் பயனாளி உலகமான பூமியில் எல்லோரும் உபயோகித்துக் கொண்டே இருக்கிறார்கள். நானும் செவ்வகமும் இரண்டாம் நிலையில் இருந்தோம். ஆனால் இப்போது பூமியில் செவ்வகத்தையே எல்லோரும் பயன்படுத்துகிறார்கள், என்னை மதிப்பாரில்லை என.
முதலில் சக வடிவமான முக்கோணத்திடம் புலம்ப ஆரம்பித்தது. இங்கிருந்து அந்த பூமியைப் பார். நீக்கமற செவ்வகமே நிறைந்திருக்கிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அதிகபட்சம் காட்சியாகப் பார்ப்பது எல்லாமே செவ்வகமாகவே இருக்கிறது. கையில் இருக்கும் அலைபேசி, வேலை செய்ய உபயோகிக்கும் கணித்திரை, பொழுதுபோக்க உதவும் தொலைக்காட்சி, திரையரங்கத் திரை என எல்லாமே செவ்வகம் தான்.
வீட்டின் கதவு, சாளரம், உபயோகிக்கும் மேஜை, படுக்கும் கட்டில், வாகனங்கள் என நீக்கமற செவ்வகமே ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறது.
விளையாட்டு மைதானங்களைப் பார்த்தாலும் கால்பந்து, ஹாக்கி, பேட்மிட்டன், கூடைப்பந்து என எல்லாமே செவ்வகங்கள் தான். செஸ் விளையாட்டில் மட்டும்தான் என் உபயோகம். அதை இம்மாதிரி ஆரவாரத்துடன் யார் பார்க்கிறார்கள் என்றது.
ஒரு மனிதன் பிறந்ததில் இருந்து போடும் தொட்டில் முதல், இறுதியில் அவன் உறங்கும் கல்லறை வரை செவ்வகம் தான். விளம்பரப் பலகைகள், வீட்டின் அறைகள், பீரோ என எங்கெங்கெலாம் மனிதன் புழங்குகிறானோ அங்கெல்லாம் செவ்வகமே என அங்கலாய்த்துக் கொண்டது.
முக்கோணத்திற்கு இதில் பெரிய குறையொன்றும் இல்லை. என்னை அடிக்கடி பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். கணித சமன்பாடுகள் இருக்கும் காலம் வரை என் பயன்பாடு இருந்து கொண்டுதான் இருக்கும். உனக்கு மட்டும் என்ன? எத்தனை இடங்களில் நீ பயன்பட்டுக் கொண்டு இருக்கிறாய்? என சதுரத்திடம் கேட்டது.
நீ மூன்று பக்கம் உடையவன், அதனால் உனக்கு நான்கு பக்கக் காரனான செவ்வகத்திடம் போட்டி இல்லை. ஆனால் நானும் அவனும் ஒரே இனம். என்னை விட அவன் அதிகளவு பயன்படுவதை என்னால் தாங்க முடியவில்லை என சதுரம் முக்கோணத்திடம் கூறியது.
இது போல தொடர்ந்த நச்சரிப்பால் பொருள் உலக தலைமை அதிகாரி, சதுரத்திற்கு குறை தீர்க்கும் நாளில் ஒரு வாய்ப்பு வழங்கினார். மூவுலகத்தின் தலைமை அதிகாரியிடம் நேர்காணலுக்குச் சென்றது சதுரம்.
தன் மன வருத்தங்களையெல்லாம் அவரிடம் கொட்டியது சதுரம். நான் இருவருக்கும் சமமாக கூட முக்கியத்துவம் கேட்கவில்லை. செவ்வகப் பயன்பாட்டில் பாதியாவது எனக்கு கிடைக்குமாறு செய்யலாமே என வேண்டியது. அறிவுலகத்தில் சொல்லி, என் வடிவத்தில் மிகப் பிரபலமாகும் இரண்டு விளையாட்டுக்கள், என் வடிவத்தில் சிறப்பாக இயங்கும் சாதனங்கள் என ஏதாவது உருவாக்கி என் முக்கியத்துவத்தை அதிகரிக்கலாமே என கேட்டது சதுரம்.
பொறுமையாக சதுரத்தின் தரப்பை கேட்டுக் கொண்ட மூவுலகத்தின் தலைமை அதிகாரி, சிறிது யோசனைக்குப் பின் பேச ஆரம்பித்தார். வட்டம் ஆதியில் இருந்து மனிதர்களால் நீக்கமற உபயோகப்படுத்தப் பட்டு வருகிறது. அதில் கூர்மையான முனை ஏதும் இல்லை. யார் அதை அணுகினாலும் காயப்படுத்தாது. எங்கும் யாருடனும் உரசல் இல்லாமல் நழுவிவிடும். அதனாலேயே அதை எங்கும் உபயோகப்படுத்தி வந்தார்கள்.
செவ்வகம் இருவேறு அளவுகளைக் கொண்டது. மனிதர்கள் இப்போது ஒவ்வோர் இடத்திற்கு ஏற்றவாறு தங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிற காலகட்டம். ஒருவரிடத்தில் ஒரு விதமாகவும், இன்னொரு இடத்தில் இன்னொரு விதமாகவும் தங்கள் முகங்களைக் காட்ட வேண்டி இருக்கிறது. எனவே அவர்களின் மனதிற்கு நெருக்கமான செவ்வகத்தை இப்போது அதிக அளவில் உபயோகிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். நீ எல்லாப் பக்கமும் ஒரே அளவு கொண்டவன். இப்போதைய மனித மனம் எல்லோரிடத்திலும் ஒரே மாதிரி நடக்க தயாரில்லை. உன் கட்டுக் கோப்பு அவர்களை பயமுறுத்துகிறது. எனவே அவர்கள் உன்னை தவிர்க்கிறார்கள். மேலும் இன்னும் சிக்கலான மனநிலைக்கு அவர்கள் மாறும் போது சமமில்லா பக்கம் கொண்ட முக்கோணம், ஐங்கோணம், அறுகோணம் என்றெல்லாம் தாங்கள் உபயோகிக்கும் பொருட்களை அமைத்துக் கொள்வார்கள் என்று முடித்தார்.
சதுரம் ஆதங்கத்துடன் மூவுலகத்தின் தலைமை அதிகாரியிடம் கேட்டது, “அப்படியென்றால் எதிர்காலத்தில் என் உபயோகம்?”.
நீ மட்டுமல்ல, எல்லோரிடம் ஒரே மாதிரி நடக்கும் எந்த அறிவுக்கும், பொருளுக்கும், ஆற்றலுக்கும் பூமியில் தேவை குறைந்து கொண்டேதான் போகும். எல்லோரிடமும் ஒரே மாதிரி நடக்க கூடியவர்களால் மட்டுமே நீ பயன்படுத்தப்படுவாய். அது தான் இன்றைய நியதி என பதிலளித்தார்.

1 comment:
அருமையான சிந்தனை!!!
Post a Comment