March 07, 2009

பெண் வாசனை

இரண்டாம் ஆண்டு மாணவன் நான்காமாண்டு மாணவிக்கு காதல் கடிதம் கொடுக்க, தொடர்ந்த வகுப்பு மோதலில் எழுவருக்கு காயம். ஒழுங்கு கமிட்டி உறுப்பினர் என்ற முறையில் என்னையும் நான்கு பேரை விசாரிக்க துறைத் தலைவர் கேட்டுக் கொள்ள, ஒரு பகலை வீணாக்கிக் கொண்டிருந்தேன்.

அப்போது டிபார்ட் மெண்ட் பியூன் ஒருவனை அழைத்து வந்து,
“ சார், நியூ அப்பாயிண்ட்மெண்ட், ஹெச் ஓ டி உங்க கிட்ட அனுப்பி வைக்கச் சொன்னார்” என ஒப்படைத்தார்.

விசாரித்துக் கொண்டிருந்த மாணவனை அனுப்பிவிட்டு பியூனிடம் புலன் விசாரணையை தொடங்கினேன்.

என்னய்யா நடக்குது இங்க? அந்தப் பொண்ணு யாரு? எப்படி இருக்கும்? நான் கவனிச்சதே இல்லையே என பியூனிடம் கேட்டேன்.

அதற்க்கு பியூன் அது பீமி சார். இவன் எதப்பார்த்து லெட்டர கொடுத்தான்னு தெரியல என்றார்.

ஓ அதான் நம்ம கண்ல படல என்று சமாதானப் படுத்திக் கொண்டு நியூ அப்பாயிண்ட்மெண்ட்டிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினேன்.

செல்வம் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவன் அது என்ன சார் பீமி என கேட்டான். பீமனுக்கு பெண்பால் என நான் சொல்ல, சந்தேகமும் தயக்கமும் தீர்ந்து சகஜமாக பேசத் தொடங்கினான்.

வசதியான விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் அதிக முறைப் பெண்கள் உடையவன் என்றும் உரையாடலில் தெரியவந்தது. தொடர்ந்த பழக்கத்தில் என் அறைக்கு வந்தவன் நல்லா நீட்டா இருக்கே, நான் வேணும்னா உங்க ரூம் மேட்டா வரட்டுமா? எனக் கேட்டான். வாடகை குறையும் என்பதால் நானும் சம்மதிக்க, இரண்டு நாட்களில் நாலைந்து அட்டைப் பெட்டி சகிதம் வந்துவிட்டான்.

நல்லா கிளாஸ் எடுக்க ஏகப்பட்ட புக்கு ரெஃபர் பண்ணுவ போலிருக்கே என கேட்க, அப்படி யெல்லாம் என்னப் பத்தி தப்பா நினச்சுறாதீங்க என்று பெட்டியை பிரித்தான். பாதி பர்மா பஜார் அளவுக்கு அதில் வாசனைத் திரவியங்கள், டியோடரண்டுகள், பாடி ஸ்பிரே என குவிந்திருந்தன.

எங்க வீட்டில எல்லா ரூமும் கெட்ட வாசனைங்க. சமயக்கட்டுல எப்பவும் தூக்குச் சட்டியில கருவாடும், உப்புக் கண்டமும். மீதமான மீன்,கறி குழம்பு எல்லாம் ரெண்டு நாளைக்கு வச்சு சாப்பிடுவாங்க. வீட்டு ஹால்ல, அப்பா எப்பவும் குடிக்கிற கத்திரி சிகரட்டு வாசம். திண்ணையில உட்காரலாம்னா அங்க பாட்டி குடிக்கிற சுருட்டு வாசம். கக்கூஸ் வேற எடுப்பு கக்கூஸ். காலையில அவங்க வந்து எடுத்துப் போடுற வரைக்கும் நாறிக்கிட்டேயிருக்கும். மாடி ரூமில நெல்லு காயப்போட்டு ஒரு அவியல் வாசம் எப்பவும் இருக்கும். சின்ன வயசில இதெல்லாம் தெரியல. பதினொன்னாவதுக்கு ஹாஸ்டல்ல தங்கியிருந்துட்டு திரும்பும்போதுதான் இதெல்லாம் உறைச்சது. கறியா தின்னு தின்னு என் உடம்பில கூட வேர்வை வாடை அதிகமாயிருச்சு. அதான் இப்போ சைவத்துக்கு மாறிட்டேன். அப்படியும் ஒரு சேஃப்டிக்கு இதெல்லாம் என நீண்ட விளக்கமளித்தான்.

மேலும் இதற்க்கு முன் தங்கியிருந்த ரூமின் வாடை பிடிக்காமல்தான் இங்கு வந்ததாகவும் கூறினான்.

நாங்கள் வழக்கமாய் ரீ சார்ஜ் செய்யும் எஸ் டீ டி பூத்தில் மாலை வேளைகளில் ஒரு பெண் தென்படத் தோன்றினாள். ஏர் ஹோஸ்டஸ் ரேஞ்சில இருக்கா, எஸ் டீ டி பூத்தில போய் வேலை பார்க்கிறாளே என விசனப் பட்டேன். நாங்கள் செல்லும் சமயங்களில் கலகலப்பாக பேசுவாள். பின் ஒரு நாள் அவள் அந்த பூத் உரிமையாளரின் மகள்தான் என்றும், வசதி எனவும் தெரிய எனக்குள் காதல் துளிர்விட்டது. வீட்டில் இருந்த ஸ்பீட் பிரேக்கர்களை நினைத்து என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன். செல்வமோ பொண்ணுன்னா அடக்கமா இருக்கனுங்க இவ என்னா வள வளன்னு பேசுறா என அவளை ஏற்கனவே நிராகரித்திருந்தான்.

அவனது வீட்டில் எந்த ஸ்பீட் பிரேக்கரும் இல்லை. எனவே கல்யாணத்துக்கு வற்புறுத்த ஆரம்பித்தார்கள்.

ஒருத்தி தலையில் வேப்பெண்ணை வைக்கிறா, இன்னொருத்திக்கு பொடுகு, ஒரு அத்தை வீடு எங்க வீட்டை விட நாறும் என ஏற்கனவே எல்லா முறைப் பெண்களையும் ரிஜக்ட் செய்திருந்தான். இந்த ஊரிலும் சில ஜாதகங்கள் வர அங்கே பெண் பார்க்கப் போகும் போது என்னையும் சில சமயம் அழைத்துச் செல்ல ஆரம்பித்தான். பெண் காப்பி கொடுக்க வரும்போது பெண் முகத்தைப் பார்க்கிறானோ இல்லையோ அவள் வாசனையை நுகர்ந்தான். பெண்கள் பெரும்பாலும் இந்த வைபவத்தின் போது பவுடர், செண்ட் போட்டு மல்லிகையும் சூடிக் கொள்வதால் அவனால் பிரித்தறிய முடியவில்லை. பெண் ஓரளவு பிடித்திருந்தால் காப்பியை லேசாக சட்டையில் தட்டி விட்டு அதைக் கழுவப் போவது போல வீட்டுக்குள் புகுந்து நுகர ஆரம்பித்தான்.

தரகர் சந்தேகப்படுவாரே என்று ஒருமுறை என் சட்டையை கறைப்படுத்தினான். எனக்கு உதவி செய்வது போல வீட்டிற்க்குள் திக் விஜயம் செய்தான். ஆத்திரத்தில் நான் இதுக்கு ஒரு மோப்ப நாயை கூட்டிக்கிட்டு வர வேண்டியதுதானடா என்று கடுப்படித்தேன்.

செமெஸ்டர் ஆரம்பித்தவுடன் எல்லோருக்கும் எக்ஸாம் டியூட்டி போட ஆரம்பித்தார்கள். சிலருக்கு வரமாகவும், சிலருக்கு சாபமாகவும் அமையும் அது. முழுக்க முழுக்க பையன்களே உட்கார்ந்திருந்த ஹாலில் கடு கடுவென கடமையை ஆற்ற தொடங்கிய போது, சாபத்தை வரமாக்க வருகை தந்தாள் பிசிக்ஸ் டிபார்ட்மெண்டில் புதிதாக சேர்ந்திருந்த ஆனந்தி. ஏழாம் நம்பர் செருப்பு சரியாகப் பொருந்தும் உயரம், எக்செல் சுடிதார் இதமாக பொருந்தும் உடல்வாகு, ஐந்து ரூபாய் டிக்கெட்டுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தாலும் கண்டக்டர் கோபப் படாத முகம். வோட்டர் ஐடிக்கு போட்டோ எடுப்பவன் கூட நல்லா சிரிங்கம்மா என்று கேட்கும் படியான பல்வரிசை என அவளை ரசித்திக் கொண்டிருந்ததில் மூன்று மணி நேரம் முப்பது வினாடிகளாய் கழிந்தது.

கல்லூரி அலுவலகத்தில் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி அவள் பயோடேட்டாவை பார்த்த போது வேறு ஜாதி எனத் தெரிய வந்தது. எப்படிப் பார்த்தாலும் தந்தை சொத்தில் இருந்து என் பங்குக்கு 20 லட்சம் வரும். வைதீக குடுக்கையான என் தந்தையை பகைத்துக் கொள்வதா என யோசித்தேன். ஆனந்தி இல்லையின்னா ஒரு தமயந்தி. ஆனா 20 லட்சம்?.

செல்வத்துக்கு சூட் ஆகிப் போனது இந்த விஷயம். எப்படியும் இவளை மணந்து கொள்ள வேண்டுமென்ற வெறியே ஏற்பட்டது அவனுக்கு. அவள் அவ்வளவாக யாருடனும் பேசுவது இல்லை என்பதும் அவனுக்கு பிடித்துப் போனது. ரெண்டு சம்பளம் நீட்டா செட்டில் ஆயிரலாம்னு பொருளாதார அட்வாண்டேஜ் வேறு. என்னிடம் அவன் கெஞ்சவே, காதலை வளர்க்க உதவி செய்வதாய் வாக்களித்தேன்.

சீனியர் என்பதால் செல்வாக்கை பயன்படுத்தி அவள் இருக்கும் எல்லா கமிட்டியிலும் இவனையும் பங்கு பெற வைத்தேன். ஆண்டு விழா, தமிழ் மன்றம் என எது நடந்தாலும் இருவரும் அருகருகே நின்று கடமையாற்றுமாறு நான் பார்த்துக் கொண்டேன்.

செல்வத்தின் வீட்டார் நாசூக்கு இல்லாதவர்களாய் இருந்தாலும் அவன் உடல் வளர்ச்சியில் நன்கு அக்கறை காடியிருந்தனர். வாட்ட சாட்டமாய் ஒருவன் சும்மா சும்மா சுற்றி வந்தால் ஒரு இரக்கம் வந்து காதலாய் மாற வாய்ப்பிருக்கிறதல்லவா? சில மாதங்களில் கண்ணால் பேசத் தொடங்கி காதலை வளர்க்க ஆரம்பித்தார்கள் இருவரும்.

எனக்கு திடீரென ஒரு நாள் சந்தேகம் வந்தது.

இந்த ஊர்ல நெறையா பொண்ணுககிட்ட கத்தாழை வாடை அடிக்குதின்னு பொலம்புவேயடா? இவகிட்ட ஏதும் பிரச்சினையில்லையேன்னு கேட்டேன்.

நீங்க வேற, இயற்கையான பொம்பளை வாசம் இவகிட்டதாங்க இருக்கு. அதிகமா பவுடர் போடுறதில்ல, செண்ட் அடிக்கிறதில்ல, பூகூட ரோஸ்தான். சாயங்காலம் கூட வேர்வை வாடை இல்லாம பிரெஷ்ஷா இருக்குறா. நான் சின்ன வயசில பட்ட கஷ்டத்துக்கு கடவுள் கண்ண தொறந்திட்டாரு என பதிலளித்தான்.

பின் ஏற்பட்ட முன்னேற்றங்களில் இருவருக்கும் திருமணம் முடிந்தது. வயிற்றெரிச்சலோடு வாழ்த்திவிட்டு இன்னும் எவ்வளோ வருசத்துக்கு தனியாவே போயி எல்லோரையும் வாழ்த்துறதுன்னு புலம்பிக்கொண்டே ரூமுக்கு வந்து சேர்ந்தேன். 15 நாள் லீவ் கழித்து சுரத்தே இல்லாமல் கல்லூரிக்கு திரும்பினான் செல்வம். தனியே கூட்டிச் சென்று விசாரித்தபோது சொன்னான் “ அவ வாய் ரொம்ப நாறுதுங்க. முத்தம் கொடுக்கப் போனா மூச்சே நின்னுறுது”.

March 04, 2009

ஐமேக்ஸ் தமிழ்சினிமாவுக்கு சாத்தியமா – பகுதி -3




ஐமேக்ஸ்க்கு முன்னாடியாக கருதப்படுவது சினிராமா என்னும் தொழில்நுட்பம். இது சினிமாஸ்கோப் வருவதற்க்கு முன் அகலத்திரையில் படம் காண்பிக்க உபயோகப் படுத்தப்படுத்தப் பட்டது. இந்த முறைப்படி ஒரு குறிப்பிட்ட காட்சியை மூன்று 35 எம் எம் பிலிம் உள்ள கேமிராக்கள் கொண்டு படம் எடுத்து பின் மூன்று புரஜெக்டர்களின் மூலம் அதை திரையில் காட்டுவது.

எடுத்துக்காட்டுக்கு வல்லவன் படத்தில் சிம்பு, நயன்தாரா மற்றும் ரீமா சென் ஆடும் அம்மாடி ஆத்தாடி என்னும் பாடலை எடுத்துக் கொள்வோம். இதில் ஒரு காட்சியில் சிம்பு நடுவிலும், நயன்தாரா அவருக்கு இடதுபுறத்திலும், ரீமா வலது புறத்திலும் ஆடுவார்கள். சினிராமா முறைப்படி மூன்று கேமராக்களில் நடு கேமிரா சிம்புவையும், வலப்பக்க கேமிரா இடதுபுறத்தில் ஆடும் நயனையும், இடப்பக்க கேமிரா வலது புறத்தில் ஆடும் ரீமாவையும் படமெடுக்கும். அவர்கள் ஆடும் செட் ஒன்பது அடி அகலம் என வைத்துக் கொள்வோம். இதை மூன்று, மூன்று அடியாக பிரித்துக் கொள்வார்கள். இடப்பக்க மூன்றடியை வலப்பக்க கேமிரா படமெடுக்கும். அதைப்போலவே வலப்பக்க மூன்றடியை இடப்பக்க கேமிரா படமெடுக்கும். திரையரங்கிலும் இடதுபக்க புரஜெக்டரில் இருந்து வலதுபக்கத்திற்க்கான படம் ஒளிபரப்பாகும். முதல் படத்தில் இந்த முறை காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு படமெடுக்கும் போது இடது மற்றும் வலப்புற காமிராக்களுக்கு இடையேயான கோணமானது 146டிகிரி இருக்குமாறு வைத்துக் கொள்வார்கள். புரஜெக்டர்களின் கோணமும் அவ்வாறே வைத்துக் கொள்ளப்படும். இதற்க்குக் காரணம் நம்மைச் சுற்றியுள்ள 360 டிகிரி யில் நம்மால் பார்க்க முடிவது 146 டிகிரி மட்டுமே. இரையாகும் விலங்குகளான மான், மாடு போன்றவை 180 டிகிரி பார்க்கும் சக்தி கொண்டவை. காரணம் பக்கவாட்டில் இருந்து தன்னைக் கொல்லவரும் விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள அதன் தகவமைப்பு அவ்வாறு உள்ளது. (வேட்டையாடும் விலங்குகளுக்கு கண்கள் முன்னால் மட்டுமே பார்க்கும் வகையில் அமைந்திருக்கும்). பச்சோந்தி 360 டிகிரி பார்க்கும் சக்தி கொண்டது. ஆனால் அவை நயன், ரீமாவை பார்க்க விரும்புவதில்லை. எனவே 146 டிகிரி யில் படமெடுத்தால் மட்டும் போதும்.

அடுத்து ஒலி. சினிராமா தொழில்நுட்பம் ஏழு டிராக்குகள் ஒலிஅமைப்பைக் கொண்டது. இதில் ஐந்து டிராக்குகள் திரைக்குப் பின் உள்ள ஒலிபெருக்கி மூலமும், இரண்டு டிராக்குகள் தியேட்டரின் பக்கச் சுவர்களில் அமைக்கப் பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மூலமும் ஒலிபரப்பப்படும். இந்த ஒலியானது தனியாக இன்னொரு 35 எம் எம் பிலிமில் பதிவு செய்யப்பட்டிருக்கும். படம் ஆரம்பிக்கும் போது இதுவும் சரியாக ஓட ஆரம்பிக்கும். இதுவே தற்கால டிடிஎஸ் தொழில் நுட்பத்திற்க்கு முன்னோடி எனலாம்.

இதன் குறைபாடுகள்

திரையும் 146 டிகிரி கோணத்தில் அமைக்கப்படும் எனவே திரையின் ஒருபக்கத்தில் இருந்து எதிரொளிக்கும் ஒளியானது திரையின் இன்னொரு பக்கத்தில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே திரை அமைப்பில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். திரையானது பல ஸ்ட்ரிப்களாக செய்யப்பட்டு ஒன்று சேர்க்கப்பட்டது. புரஜெக்டர்களையும் சரியான கோணத்தில் அமைக்க வேண்டும். எனவே திரையரங்கை நிர்மாணிப்பதே கடினமான பணியாக இருந்தது. மேலும் பிம்பங்கள் சேரும் இடத்தில் கோடுகள் தெரிந்தன. (சீம்லெஸ் ஆக இல்லை). எனவே படப்பிடிப்பு செலவு, திரையரங்கு கிடைக்காமை ஆகியவற்றால் இது வழக்கொழிந்து போனது. 1952 ல் நடை முறைக்கு வந்த இம்முறை பல மாற்றங்களை சந்தித்து 72 வரை இருந்தது.




ஐமேக்ஸ்

மூன்று கேமிராவில் பதிவு செய்வதற்குப் பதில் பெரிய பிலிமில் படமெடுத்து அதை திரையில் விரியச் செய்தால் எப்படி இருக்கும்? இதற்க்காக புதுசாவா பிலிம் தயாரிக்கணும்? புழக்கத்தில் இருக்கும் 70 எம் எம் பிலிமையே கிடைமட்டமாக உபயோகித்தால் என்ன? இந்த யோசனையில் உருவானதுதான் இப்பொதைய ஐமேக்ஸ் பிலிம் பார்மட். இம்முறைப்படி 70 எம் எம் அகலம் 48.5 எம் எம் உயரம் உடைய ஏரியாவில் படம் பதிவு செய்யப் படுகிறது. 70 எம் எம் படச்சுருளை கிடை மட்டமாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இரண்டாவது படத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு பிரேமுக்கு 15 துளைகள் இருக்கும். அதனால் இந்த பிலிம் 15/70 என்றும் அழைக்கப்படும். பிலிமின் மொத்த பகுதியிலும் படத்தை பதிவு செய்துவிடுவதால் ஆறு டிராக்குகள் கொண்ட ஒலியானது தனி 35 எம் எம் சுருளில் பதிவு செய்யப்படும். சரி படமெடுத்து விட்டோம். இதை அவ்வளவு பெரிய திரையில் தரமாக காட்ட வேண்டுமே?

ஐமேக்ஸ் திரையரங்கில் பயன்படுத்தப் படும் புரஜெக்டரானது 1.8 டன் எடை உள்ளது. பிலிமை வினாடிக்கு 24 பிரேம்கள் வீதம் ஓட்ட ஒரு மெக்கானிசம், பிலிமில் உள்ள காட்சியை புரஜெக்ட் செய்ய அதி நவீன விளக்குகள் (ஜெனான் ஆர்க்) என பிரமாண்டமாக இருக்கும்.

இந்த வினாடிக்கு 24 பிரேம் என்பது என்ன கணக்கு?. நம்முடைய பார்வை என்பது கண்ணை மட்டுமே சார்ந்தது இல்லை. மூளையையும் சார்ந்தது. பார்த்த காட்சியானது மூளைக்கு சென்று அதை நாம் உணர ஒரு குறிப்பிட்ட கால அளவு தேவைப்படுகிறது. இது ஒருவருக்கு ஒருவர் வேறுபட்டாலும் பெரிய வித்தியாசம் இருக்காது.


தியேட்டரில் இடைவேளையில் போடப்படும் விளம்பர ஸ்லைடுகளை பார்த்திருப்பீர்கள். முன் சீட்டில் காலை வைக்காதீர்கள், தினமும் நான்கு காட்சிகள், புகைக்கச் சிறந்தது சொக்கலால் பீடி என பல ஸ்லைடுகள் காட்டப்படும். இது ஒரு வினாடிக்கு மூன்று நான்கு காட்டப்படும். எனவே தொடர்ச்சியில்லாமல் தனித்தனியே தெரிகிறது. ஆனால் இதையே ஒரு வினாடிக்கு 20 அல்லது 24 முறை காட்டினால் நமக்கு அது தொடர்ச்சியாக தெரியும். ஸ்லைடை மாற்றுவதே தெரியாது. இதன் அடிப்படையில்தான் ஒரு வினாடிக்கு 24 பிரேம் மாறினாலும் நமக்கு அது மாறுவது தெரியாமல் காட்சி மட்டுமே தெரிகிறது.

இன்னொரு உதாரணம் பார்ப்போம். தொலைக்காட்சியில் ஆனது வினாடிக்கு 20 பிரேம்கள் வீதம் காட்டப்படுகிறது. செய்திகள் நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். நமக்கு செய்தி வாசிக்கும் பெண் ஒரு ப்ரேமாக மட்டுமே தெரியும். ஆனால் வினாடிக்கு 20 பிரேம் வீதம் அது ஓடிக்கொண்டு இருக்கும். 80-90 களில் வெளியான பல திரைப்படங்களில் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். திரையில் டிவியைக் காட்டும் போது டிவியின் காட்சிகளுக்கு இடையே கிடைமட்ட கோடு தெரியும். இரண்டு ஊடகங்களுக்கு இடையேயான பிரேம் ரேட் வித்தியாசத்தால் தான் இவ்வாறு தெரிகிறது. சார்லி சாப்ளின் படங்கள் 1வினாடிக்கு 18 பிரேம்களை உபயோகித்தது. தற்கால் வீடியோ கேம்களில் கம்பெனிக்கு தக்கவாறு பிரேம் ரேட் மாற்றுகிறார்கள். வினாடிக்கு 48 பிரேம்வரை நம் கண் சிறப்பாக செயலாற்றும். அதற்க்கு மேலான வேகத்தில் பிம்பங்களை உணராது. 24 பிரேம் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. இதற்க்கு மேல் என்றாலும் அதிக பிலிம் செலவாகும்.

ஐமேக்ஸ் பிலிமின் அகலம் அதிகம் என்பதால் வினாடிக்கு 24 என்ற அளவில் அதை வேகமாக இழுக்க 35 எம் எம் புரஜெக்டரில் உள்ள தொழில்நுட்பம் போதாது. எனவே வேக்யூம் உதவியுடன் அதை செயல் படுத்துகிறார்கள். இது ஒரு ஆஸ்திரேலியர் கண்டுபிடித்த தொழில்நுட்பம். முன்பு படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஆன படங்களைப் பார்த்தால் (இப்பல்லாம் அப்படி ஓடுதா என்ன?) ஒளி குன்றி தெரியும். அதைப் போலவே சில சராசரி திரையரங்குகளில் புது படம் கூட மங்கலாக தெரியும். இரண்டுக்கும் காரணம் ஒளிக்காக உபயோகப்படுத்தும் எலெக்ரோடுகளே. அவற்றில் இருந்து வரும் புகை பிலிமில் படிவதால் நாள்பட்ட உபயோகத்துக்குப் பின் படம் மங்கலாகிறது. சிலசமயம் சில கஞ்ச தியேட்டர் உரிமையாளர்கள் சரியான நேரத்தில் எலெக்ரோடை மாற்றாமல் பயன்படுத்துவதாலும் இது நேரிடுகிறது. ஐமேக்ஸ் புரஜெக்டர்களில் 12 முதல் 18 கிலோ வாட்ஸ் சக்தியுள்ள விளக்குகள் பயன்படுத்தப் படுகின்றன. பிலிமில் தூசு படியாமல் இருக்க கூட தொழில்நுட்பம் உபயோகிக்கப் படுகிறது.

ஐமேக்ஸில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்

ஐமேக்ஸ் டோம்


இம்முறையில் படமானது 1800 கோணத்துக்கு ஒளிபரப்பாகும். பார்வையாளருக்கு பிரேமுக்குள் தானே இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். மும்பையில் இருக்கும் ஐமேக்ஸ் தியேட்டர் இந்த வகையே. பிளானடோரியங்கள், அறிவியல் மையங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ற அமைப்பு இது. உணமையில் ஒரு அறிவியல் மையத்திற்க்காக உருவாக்கப்பட்ட அமைப்பு இது.

ஐமேக்ஸ் 3டி

மற்ற இரு பரிமாணங்கள் பிரமாணடம் என்பதால் மூன்றாவது பரிமாணம் எதிர்பார்க்கும் அளவுக்கு கிடைப்பதில்லை என்ற குற்ரச்சாட்டு இருக்கிறது.

ஐமேக்ஸ் டிஜிடல்

டிஜிடல் கேமிராவால் படம் எடுக்கப்படுவதல்ல. எடுக்கப்பட்ட ஐமேக்ஸ் படத்தை டிஜிடலுக்கு மாற்றி பிரத்யேக புரஜெக்டர் மூலம் திரையிடுவது. எதிர்பார்த்த தரம் இன்னும் கிடைக்கவில்லை.


தமிழ்சினிமாவிற்க்கு இது சாத்தியமா?

70 களின் மத்தியில் இந்த தொழில்நுட்பம் பயன் பாட்டுக்கு வந்தாலும் இதுவரை 300 திரையரங்குகளே உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் இன்னும் இரண்டாண்டு கழித்து பார்த்தாலும் மொத்தமாக 10 தியேட்டர் இருந்தால் ஆச்சரியம் தான். ஹாலிவுட்டில் கூட இப்பொது ஐமேக்ஸ் முறையில் படம் எடுப்பதில்லை. எடுத்த படத்தை ஐமேக்ஸ் பிலிமுக்கு மாற்றி திரையிடுகிறார்கள். ஏனெனில் ஆகும் செலவு அப்படி. இந்த வகையில் பார்த்தால் முதலில் இந்திப் படங்களை ஐமேக்ஸுக்கு மாற்றி திரையிடவே முதலில் முயற்சிப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு நம்மை விட பெரிய மார்க்கட். ஆனால் அதற்க்கே பெரிய தயக்கம் இருக்கிறது. போட்ட காசை எடுக்க் முடியுமா? என்று. ஷோலே,டைட்டானிக், பென்ஹர்,மம்மி, டென் கமான்மெண்ட்ஸ், டிராய் போன்ற படங்களை ஐமேக்ஸில் பார்க்க எனக்கு ஆசை.

வரும் ஐந்து ஆண்டுகளில் அதிகபட்சம் இரண்டு ஐமேக்ஸ் தியேட்டர்கள் தமிழ் நாட்டில் வரலாம். அதற்க்காக படத்தை மாற்றி வெளியிட்டால் முதலுக்கு மோசம் தான். எந்திரன் திரைப்படத்தை வேண்டுமானால் செலவோடு செலவாக சன் பிக்சர்ஸ் ஐமேக்ஸ் பிலிமுக்கு மாற்றலாம். இல்லையெனில் மர்மயோகியோ, மருதநாயகமோ ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டால் ஒரு வாய்ப்பு இருக்கிறது. நாளை நடப்பதை யார் அறிவார்?

March 02, 2009

ஐமேக்ஸ் தமிழ்சினிமாவுக்கு சாத்தியமா? பகுதி – 2


முதல் பகுதியில் ஹாலிவுட் திரைத் துறையினர் தொலைக்காட்சியின் தாக்கத்தினால் அகலத் திரையை நோக்கிச் சென்றனர் எனப் பார்த்தோம். 1950களின் நடுவில் இது நிகழ்ந்தது. இந்த நிலை நம் தமிழ்சினிமாவுக்கு 90களில் தான் ஏற்பட்டது.


இதற்க்கு காரணங்கள்


கொடைக்கானலில் தொலைக்காட்சி சிக்னலை ஒளிபரப்பும் நிலையம் ஆரம்பிக்கப்பட்டதும் தான் தமிழகத்தில் பரவலாக தொலக்காட்சிப் பெட்டிகளை மக்கள் வாங்கத் துவங்கினர். பெரும்பாலோனோர் முதலில் பார்த்த நிகழ்ச்சியே இந்திராகாந்தி அம்மையாரின் (1984) இறுதிச்சடங்கு நிகழ்ச்சிதான். பின்னர் தமிழ் ஒளிபரப்பு துவங்கப்பட்டது (அமைச்சர் : அஜீத் பாஞ்சா). அப்போது வழங்கப்பட்ட நிகழ்ச்சிகள் மக்களின் திரைப்பட ஆர்வத்தை குலைக்கும் வகையில் இல்லை. தனியார் தொலைக்காட்சிகள் வருகையும், திருட்டி விசிடியும் தான் அந்த புண்ணியத்தை கட்டிக்கொண்டன.

தொலைக்காட்சியை கட்டிக் கொண்டு அழுத அமெரிக்கர்களை திரையரங்குக்கு அழைத்துவர அகலத்திரையை ஆயதமாக பயன்படுத்த தொடங்கினர். அவர்கள் கையில் அப்பொழுது இருந்தது 70 எம் எம். ஆனால் அதை அவர்கள் உபயோகிக்க வில்லை.

காரணங்கள்

70 எம் எம் பிலிம் விலை அதிகம். போடப்படும் பிரிண்டுகளின் எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

படப்பிடிப்பில் அதற்க்குரிய கேமிரா, அது கூட பிரச்சினை இல்லை. எல்லாத் திரையரங்குளுக்கும் புரஜெக்டரை மாற்ற வேண்டும். அது மிகவும் செலவுபிடிக்கும்.

70 எம் எம் திரையை நிரப்ப நிறைய மெனக்கெட வேண்டும். திரையில் வெற்றிடம் இல்லாமல் அழகாய் நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பும் போது அது காட்சியின் தாக்கத்தை குறைத்துவிடக் கூடாது.

இது போன்ற காரணங்களால் பல இயக்குநர்கள் 35 எம் எம் முடன் திருப்திப் பட்டுக்கொண்டனர்.

ஆனால் தொலைக்காட்சி போட்டியை சமாளிக்க யோசித்ததன் விளைவாக 3 டி, 55 எம் எம் பிலிம், சினிராமா ஆகியவை கண்டுபிடிக்கப் பட்டன. ஆனால் அவையும் அதிக செலவு பிடித்தவையாகவும், எளிதில் எல்லோராலும் மாற்ற முடியாததாகவும் இருந்தன.


அவர்களுக்கு அருமருந்தாக வந்தது, பிரான்சு நாட்டு பேராசிரியர் ஹென்ரி கண்டுபிடித்திரிந்த அனமோர்போஸ்கோப் என்னும் தொழில்நுட்பம். இதை அவர் 1920லேயே கண்டுபிடித்து பேடண்ட் வாங்கியிருந்தலும் சீந்துவாரின்றி கிடந்தது. இந்த முறைப்படி ஒரு லென்ஸை கேமிராவின் முன்னால் வைத்து அகலமான படக்காட்சியை குறுக்கி 35 எம் எம் பிலிமில் பதிவு செய்வது. பின்னர் புரஜெக்டரின் முன் அதற்க்கு மற்றொரு (ஒளிப்பதிவுக்கு உபயோகிக்கப்பட்ட லென்ஸின் காம்ப்ளிமெண்ட்) லென்ஸை வைத்து விரியச்செய்வது. இதன் மூலம் அகலமான பிம்பம் நமக்கு கிடைக்கும். படமெடுக்கும் கேமிராவை மாற்றத் தேவையில்லை. புரஜெக்டரை மாற்றத் தேவையில்லை. பின்னர் கேமிராவிலேயெ இந்த அனமோர்போஸ்கோப் லென்ஸ் பொருத்தப்பட்டது. முதல் படத்தில் அது எவ்வாறு திரையில் விரிகிறது என காட்டப்பட்டுள்ளது. இரண்டாவது படத்தில் உள்ள நான்காவது பிலிமே அனமோர்ஸ்கோப் முறையில் பதிவு செய்யப்பட்ட பட்ட பிலிம்.


இன்னொரு வகையிலும் இந்த அகலத் திரை உணர்வை கொண்டுவரலாம். இது மேட் டெக்னிக் எனப்படும். 35 எம் எம் பிலிமின் மேலும் கீழும் சிறிது இடத்தை மறைத்துக் கொண்டு (அந்த பகுதியை எக்ஸ்போஸ் செய்யாமல்) படமெடுப்பது. இரண்டாவது படத்தில் உள்ள மூன்றாவது பிலிம் இதற்க்கு உதாரணம். ஜேம்ஸ் கேமரூன் தனது டெர்மினேட்டர் 2 மற்றும் டைட்டானிக் ஆகிய படங்களை இம்முறையிலேயே படமாக்கினார். ஆனால் இது பலரால் உபயோகப் படுத்தப் படுவதில்லை.



நீங்கள் கூட தமிழ்நாட்டில் பார்த்திருக்கலாம். முதல் சினிமாஸ்கோப் படம் 1973 ல் இங்கு எடுக்கப்பட்டிருந்தாலும், அதற்க்கு முன்னரே நன்கு அகலமான திரையே பெரும்பாலான திரையரங்குகளில் பயன்படுத்தப் பட்டு வந்தது. 1962 ல் ஜி. உமாபதி அவர்கள் ஆனந்த் 70 எம் எம் திரையரங்கை சென்னையில் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அது போலவே அமெரிக்காவிலும் பெரும்பாலான திரையரங்குகளில் அகலத் திரை இருந்தது. (80களுக்குப் பின் வந்த மல்டிபிளெக்ஸ் கலாச்சாரத்தால் தான் குறைவான இருக்கை, சிறிய திரை அமைப்பு ஏற்படுத்தப் பட்டது). எனவே சினிமாஸ்கோப் நுட்பத்தை பயன்படுத்துவது எளிதாகிப் போனது. தேவை புதிய லென்ஸுகள் மட்டுமே.

இதனால் உற்சாகமடைந்த டுவெண்டியத் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம் இந்த நுட்பத்தை உபயோகப் படுத்த துவங்கியது. கூடுதல் கவர்ச்சியாக நான்கு டிராக் ஸ்டீரியோ சப்தத்தையும் இணைத்தது. அதற்க்கு முன்னால் இருந்த 35 எம் எம் பிலிம்களில் இரண்டு டிராக்குகள் மட்டுமே (இடது,வலது) இருந்தன. பின்னர் மூன்று டிராக்குகளை உபயோகிக்க ஆரம்பித்திருந்தனர். நான்கு டிராக்குகள் (இடம், வலம், மையம், சுற்றுப்புறம்) கொண்ட சப்தமானது பார்வையாளருக்கு நல்ல கேட்டல் இன்பத்தை கொடுக்கக்கூடியது. இதில் மைய டிராக் வசனத்திற்க்காக்வும், இடம்,வலம் ஆகியவை வாத்தியங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டது. சிறப்பு சப்தம் நான்காவது டிராக்குக்கு. இந்த டிராக்குகளை இரண்டாம் படத்தின் நான்காவது பிலிமில் பார்க்கலாம்.


எனவே புரஜெக்டரில் இந்த ஒலியை மீட்டெக்கும் உபகரணத்தையும், சுவர்களில் ஸ்பீக்கர்களையும் பொருத்தி விட்டால் சுலபமாக ஸ்டீரியோ சப்தத்தைக் கேட்கலாம். இதை பொருத்தாவிட்டாலும் பரவாயில்லை, சப்தம் ஒற்றை டிராக்கில் (மோனோ) திரைக்குப் பின்னால் உள்ள ஸ்பீக்கர்களின் வழியாக கேட்கும். தமிழ்நாட்டில் பெரும்பாலான தியேட்டர்களில் திரைக்குப் பின்னால் இருக்கும் ஒரே ஸ்பீக்கரில் இருந்து தான் சப்தம் கேட்கும். 1990க்குப் பின்தான் இது மாறிவருகிறது. இந்த நான்கு டிராக்குகளையும் பிலிமில் நான்கு காந்த நாடா வடிவில் ஒட்டி விடுவார்கள். (டப்பிங், இசைக்கோர்ப்பு முடிந்தபின்). அதனால் எளிதில் இசையானது ஸ்பீக்கர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும்.

இந்த தொழில்நுட்பம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் சில குறைபாடுகளும் இருந்தன. நாள்பட்ட உபயோகத்துக்குப் பின் காந்த நாடா சேதமுற்று தரம் குறைந்த ஒலியையே வழங்கியது. இதன் அடுத்த கட்டமாக வந்தவையே டால்பி ஸ்டிரீயோ, டிடிஎஸ் ஆகியவை.

டால்பி ஸ்டீரியோ

70களின் பிற்பகுதியில் இருந்து இவர்கள் இந்த நுட்பத்தை வழங்கி வந்தாலும், 90களின் ஆரம்பத்தில் பல முன்னேற்றங்களைக் கொண்டு வந்தார்கள். அமெரிக்காவில் பெரும்பாலான திரையரங்குகள் டால்பி எஸ் ஆர் முறை ஒலி வழங்கியையே கொண்டுள்ளன. இந்த முறையில் பிலிமில் உள்ள துவாரங்களுக்கு இடையே ஒலி சேமிக்கப்படுகிறது. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தன் படங்களுக்கு இன்னும் மேம்பட்ட ஒலி வேண்டுமென்பதற்க்காக பண உதவி செய்து உருவாக்கப் பட்ட தொழில் நுட்பமே டிஜிடல் தியேட்டர் சவுண்ட் எனப்படும் டிடிஎஸ்.

டிடிஎஸ்

இந்த முறைப்படி ஒலியானது பிலிமில் பதியப்படாது. தனி சிடியில் பதியப்படும். படம் திரையிடப்படும்போது, இந்த சிடியும் ஆன் செய்யப்படும். இந்தக் குறியீட்டிற்க்கு ஏற்ற ஒலியே தியேட்டரில் ஒலிபரப்பாகும்.

இப்போது ஒரு சந்தேகம் வரலாம். ஆப்பரேட்டர் சில காட்சிகளை வெட்டிவிட்டால் என்ன ஆகும்?. உதாரணமாக ஒரு பாடலை வெட்டிவிடுவதாக கொள்வோம். அடுத்து வரும் வசனக் காட்சிக்கு பாடல் பாடினால் ரசிகர்கள் தியேட்டர் சீட்டை கிழித்து விடுவார்களே? இந்தக் கவலையே வேண்டாம். பிலிமில் டைம்கோட் என்ப்படும் குறியீடு இருக்கும். இந்தக் குறியீட்டிற்க்கு ஏற்ற ஒலியே தியேட்டரில் சிடி மூலம் ஒலிபரப்பாகும் எந்தக் குழப்பமும் நேராமல் காட்சிக்கு தகுந்த வசனமே நமக்கு கேட்கும்.

சில திரையரங்குகளில் காலை ஒரு படம், மற்ற மூன்று காட்சிகள் வேறு படம் என திரையிடுவார்கள். (அந்த காலைக்காட்சி டிடிஎஸ் ஸில் இருக்காது, அது வேறு விஷயம்). காலைக்காட்சி பிரிண்டுக்கான சிடியை தவறுதலாக மாலைக்காட்சிக்கு உபயோகப் படுத்திவிட்டால்?. அந்தக் கவலையும் வேண்டாம். அதற்க்கும் பிரத்தியேக குறியீடு இருக்கும். எனவே காட்சிக்குத் தகுந்த வசனம் மட்டுமே ஒலிபரப்பாகும்.
இரண்டாம் படத்தில் முதல் பிலிம் ஊமைப் படத்துக்கானது. இரண்டாவது அனலாக் ஒலி அமைப்புடைய எடிசன் தயாரித்த பிலிம். ஐந்தாவது பிலிமில் எல்லா ஒலி அமைப்புகளும் எவ்வாறு இடம் பெறும் என மொத்தமாக காட்டப்பட்டுள்ளது. பிங் நிறத்தில் இருப்பது சோனி சரவுண்ட் சவுண்ட், துளைகளுக்கு இடையே இருப்பது டால்பி ஸ்டிரீயோ, கரும்பச்சை நிறத்தில் இருக்கும் இரண்டு கோடுகள் அனலாக் டிராக்குகள். விட்டு விட்டுத் தெரியும் கறுப்பு நிற கோடு டிடிஎஸ் டைம் கோட்.


தற்போது உபயோகிக்கும் முறையான 5.1 ல் இடம்,வலம்,மையம், இடது சுற்றுப்புறம், வலது சுற்றுப்புறம் என ஐந்து மெயின் டிராக்குகளும், குறைந்த அலைவரிசை ஒலியை தரும் (LEF – low frequency effect ) என்னும் டிராக்கும் இதுவெ .1 என்று குறிக்கப்படுகிறது. (மூன்று முதல் 200 ஹெர்ட்ஸ் வரையிலான ஒலி). இதில் மைய டிராக் பெரும்பாலும் வசனத்துக்கே பயன்படுகிறது. நம் கண்களைப் போலல்லாமல் (146 டிகிரி பார்வை), காதுகள் 360 டிகிரியிலும் கேட்கும் சக்தி உள்ளதால் நல்ல கேட்டல் அனுபவம் கிடைக்கும். அதனாலேயே தற்போது 7.1 வரை வந்துவிட்டது.

நாம் டிராக் மாறி வந்து விட்டோம் என நினைக்கிறேன்.

நம் நோக்கம் ஏன் தமிழ் சினிமாவுக்கு சினிமாஸ்கோப் நுட்பம் வர 20 ஆண்டு தாமதம் ஏன்? என்பது.

1950களின் பிற்பகுதியில் எம்ஜியார், சிவாஜி ஆகிய நாயகர்கள் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்தார்கள். ஸ்ரீதர் போன்ற இயக்குநர்கள் ரசமான படங்களை கொடுத்தார்கள். 70 களின் பிற்பகுதியில் பாரதிராஜா,மகேந்திரன், ரஜினி,கமல் என திரைத்துறை தொய்வில்லாமல் சென்றது. டிவியோ 90 வரை சிறப்பாக இல்லை.

அன்றைய கால கட்ட மக்கள் ஒரு ஸ்பீக்கருடன், 35 எம் எம் திரையுடன் திருப்தியடைந்து கொண்டனர். தியேட்டர் அதிபர்களும் புது நுட்பங்களை, உபகரணங்களை வாங்குவதில் தயக்கம் காட்டினர். மேலும் அன்றைய காலகட்டத்தில் கேமிரா போன்ற உபகரணங்களை சில கம்பெனியினர் மட்டுமே வாடகைக்கு கொடுத்து வந்தார்கள். அவர்கள் புது முதலீடுகளில் தயக்கம் காட்டினர். தற்போது எந்த தொழில்நுட்பம் வந்தாலும் உடனே இங்கு வந்துவிடுகிறது.

தமிழ் சினிமாக்கும் செண்டிமெண்டுக்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்தது. ராஜ ராஜ சோழன் வெற்றி பெற்றிருந்தால் பலர் சினிமாஸ்கோப்புக்கு தாவியிருப்பார்கள். தோல்வி அடைந்ததால் பலரும் தயக்கம் காட்டினர். இன்னொன்று பட்ஜெட். 50களின் நடுவிலேயே கலர் படம் வந்திருந்தாலும் 80 வரை கறுப்பு வெள்ளையிலும் பல படங்கள் வந்தன்.

90 வரை பெரும்பாலான படங்கள் 35 எம் எம் மிலேயே வந்தன. 92ல் கூட சின்னக் கவுண்டர் படம் 35 எம் எம்தான். பாலு மகேந்திரா சதிலீலாவதி, ராமன் அப்துல்லா என 35 எம் எம் படங்களையே எடுத்து வந்தார்.

சினிமாஸ்கோப் எல்லாப் படங்களுக்கும் உபயோகப்பட்டதில் மிகவும் சந்தோஷ மடைந்தது நடனக் குழுவினர்தான். இருவர் மட்டுமே திரையில் ஆடினால் நிறைய வெற்றிடம் இருக்கும். நன்கு நடிப்பு, நடனம் தெரிந்தவர்கள் என்றால் குளோசப், நல்ல நடன அசைவு என்று ஒப்பேற்றிவிடலாம். மற்றவர்களை தனியாக திரையில் காட்டமுடியுமா?. எனவே இந்தப் பக்கம் 20 பேர் அந்தப் பக்கம் 20 பேர் என ஆட விட்டனர். மேலும் பில்டப் காட்சிகளுக்கு அதிகமான வாகனங்கள், ஆட்கள் தேவைப்பட ஆரம்பித்தனர். கலை இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கு நல்ல தீனியும் கிடைத்தது. ஆனால் மொக்கைப் படங்களை சினிமாஸ்கோப்பில் பார்ப்பது கொடூரமானது.


அடுத்த பகுதியில் சினிராமா, ஐமேக்ஸ்.