March 04, 2009

ஐமேக்ஸ் தமிழ்சினிமாவுக்கு சாத்தியமா – பகுதி -3




ஐமேக்ஸ்க்கு முன்னாடியாக கருதப்படுவது சினிராமா என்னும் தொழில்நுட்பம். இது சினிமாஸ்கோப் வருவதற்க்கு முன் அகலத்திரையில் படம் காண்பிக்க உபயோகப் படுத்தப்படுத்தப் பட்டது. இந்த முறைப்படி ஒரு குறிப்பிட்ட காட்சியை மூன்று 35 எம் எம் பிலிம் உள்ள கேமிராக்கள் கொண்டு படம் எடுத்து பின் மூன்று புரஜெக்டர்களின் மூலம் அதை திரையில் காட்டுவது.

எடுத்துக்காட்டுக்கு வல்லவன் படத்தில் சிம்பு, நயன்தாரா மற்றும் ரீமா சென் ஆடும் அம்மாடி ஆத்தாடி என்னும் பாடலை எடுத்துக் கொள்வோம். இதில் ஒரு காட்சியில் சிம்பு நடுவிலும், நயன்தாரா அவருக்கு இடதுபுறத்திலும், ரீமா வலது புறத்திலும் ஆடுவார்கள். சினிராமா முறைப்படி மூன்று கேமராக்களில் நடு கேமிரா சிம்புவையும், வலப்பக்க கேமிரா இடதுபுறத்தில் ஆடும் நயனையும், இடப்பக்க கேமிரா வலது புறத்தில் ஆடும் ரீமாவையும் படமெடுக்கும். அவர்கள் ஆடும் செட் ஒன்பது அடி அகலம் என வைத்துக் கொள்வோம். இதை மூன்று, மூன்று அடியாக பிரித்துக் கொள்வார்கள். இடப்பக்க மூன்றடியை வலப்பக்க கேமிரா படமெடுக்கும். அதைப்போலவே வலப்பக்க மூன்றடியை இடப்பக்க கேமிரா படமெடுக்கும். திரையரங்கிலும் இடதுபக்க புரஜெக்டரில் இருந்து வலதுபக்கத்திற்க்கான படம் ஒளிபரப்பாகும். முதல் படத்தில் இந்த முறை காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு படமெடுக்கும் போது இடது மற்றும் வலப்புற காமிராக்களுக்கு இடையேயான கோணமானது 146டிகிரி இருக்குமாறு வைத்துக் கொள்வார்கள். புரஜெக்டர்களின் கோணமும் அவ்வாறே வைத்துக் கொள்ளப்படும். இதற்க்குக் காரணம் நம்மைச் சுற்றியுள்ள 360 டிகிரி யில் நம்மால் பார்க்க முடிவது 146 டிகிரி மட்டுமே. இரையாகும் விலங்குகளான மான், மாடு போன்றவை 180 டிகிரி பார்க்கும் சக்தி கொண்டவை. காரணம் பக்கவாட்டில் இருந்து தன்னைக் கொல்லவரும் விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள அதன் தகவமைப்பு அவ்வாறு உள்ளது. (வேட்டையாடும் விலங்குகளுக்கு கண்கள் முன்னால் மட்டுமே பார்க்கும் வகையில் அமைந்திருக்கும்). பச்சோந்தி 360 டிகிரி பார்க்கும் சக்தி கொண்டது. ஆனால் அவை நயன், ரீமாவை பார்க்க விரும்புவதில்லை. எனவே 146 டிகிரி யில் படமெடுத்தால் மட்டும் போதும்.

அடுத்து ஒலி. சினிராமா தொழில்நுட்பம் ஏழு டிராக்குகள் ஒலிஅமைப்பைக் கொண்டது. இதில் ஐந்து டிராக்குகள் திரைக்குப் பின் உள்ள ஒலிபெருக்கி மூலமும், இரண்டு டிராக்குகள் தியேட்டரின் பக்கச் சுவர்களில் அமைக்கப் பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மூலமும் ஒலிபரப்பப்படும். இந்த ஒலியானது தனியாக இன்னொரு 35 எம் எம் பிலிமில் பதிவு செய்யப்பட்டிருக்கும். படம் ஆரம்பிக்கும் போது இதுவும் சரியாக ஓட ஆரம்பிக்கும். இதுவே தற்கால டிடிஎஸ் தொழில் நுட்பத்திற்க்கு முன்னோடி எனலாம்.

இதன் குறைபாடுகள்

திரையும் 146 டிகிரி கோணத்தில் அமைக்கப்படும் எனவே திரையின் ஒருபக்கத்தில் இருந்து எதிரொளிக்கும் ஒளியானது திரையின் இன்னொரு பக்கத்தில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே திரை அமைப்பில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். திரையானது பல ஸ்ட்ரிப்களாக செய்யப்பட்டு ஒன்று சேர்க்கப்பட்டது. புரஜெக்டர்களையும் சரியான கோணத்தில் அமைக்க வேண்டும். எனவே திரையரங்கை நிர்மாணிப்பதே கடினமான பணியாக இருந்தது. மேலும் பிம்பங்கள் சேரும் இடத்தில் கோடுகள் தெரிந்தன. (சீம்லெஸ் ஆக இல்லை). எனவே படப்பிடிப்பு செலவு, திரையரங்கு கிடைக்காமை ஆகியவற்றால் இது வழக்கொழிந்து போனது. 1952 ல் நடை முறைக்கு வந்த இம்முறை பல மாற்றங்களை சந்தித்து 72 வரை இருந்தது.




ஐமேக்ஸ்

மூன்று கேமிராவில் பதிவு செய்வதற்குப் பதில் பெரிய பிலிமில் படமெடுத்து அதை திரையில் விரியச் செய்தால் எப்படி இருக்கும்? இதற்க்காக புதுசாவா பிலிம் தயாரிக்கணும்? புழக்கத்தில் இருக்கும் 70 எம் எம் பிலிமையே கிடைமட்டமாக உபயோகித்தால் என்ன? இந்த யோசனையில் உருவானதுதான் இப்பொதைய ஐமேக்ஸ் பிலிம் பார்மட். இம்முறைப்படி 70 எம் எம் அகலம் 48.5 எம் எம் உயரம் உடைய ஏரியாவில் படம் பதிவு செய்யப் படுகிறது. 70 எம் எம் படச்சுருளை கிடை மட்டமாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இரண்டாவது படத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு பிரேமுக்கு 15 துளைகள் இருக்கும். அதனால் இந்த பிலிம் 15/70 என்றும் அழைக்கப்படும். பிலிமின் மொத்த பகுதியிலும் படத்தை பதிவு செய்துவிடுவதால் ஆறு டிராக்குகள் கொண்ட ஒலியானது தனி 35 எம் எம் சுருளில் பதிவு செய்யப்படும். சரி படமெடுத்து விட்டோம். இதை அவ்வளவு பெரிய திரையில் தரமாக காட்ட வேண்டுமே?

ஐமேக்ஸ் திரையரங்கில் பயன்படுத்தப் படும் புரஜெக்டரானது 1.8 டன் எடை உள்ளது. பிலிமை வினாடிக்கு 24 பிரேம்கள் வீதம் ஓட்ட ஒரு மெக்கானிசம், பிலிமில் உள்ள காட்சியை புரஜெக்ட் செய்ய அதி நவீன விளக்குகள் (ஜெனான் ஆர்க்) என பிரமாண்டமாக இருக்கும்.

இந்த வினாடிக்கு 24 பிரேம் என்பது என்ன கணக்கு?. நம்முடைய பார்வை என்பது கண்ணை மட்டுமே சார்ந்தது இல்லை. மூளையையும் சார்ந்தது. பார்த்த காட்சியானது மூளைக்கு சென்று அதை நாம் உணர ஒரு குறிப்பிட்ட கால அளவு தேவைப்படுகிறது. இது ஒருவருக்கு ஒருவர் வேறுபட்டாலும் பெரிய வித்தியாசம் இருக்காது.


தியேட்டரில் இடைவேளையில் போடப்படும் விளம்பர ஸ்லைடுகளை பார்த்திருப்பீர்கள். முன் சீட்டில் காலை வைக்காதீர்கள், தினமும் நான்கு காட்சிகள், புகைக்கச் சிறந்தது சொக்கலால் பீடி என பல ஸ்லைடுகள் காட்டப்படும். இது ஒரு வினாடிக்கு மூன்று நான்கு காட்டப்படும். எனவே தொடர்ச்சியில்லாமல் தனித்தனியே தெரிகிறது. ஆனால் இதையே ஒரு வினாடிக்கு 20 அல்லது 24 முறை காட்டினால் நமக்கு அது தொடர்ச்சியாக தெரியும். ஸ்லைடை மாற்றுவதே தெரியாது. இதன் அடிப்படையில்தான் ஒரு வினாடிக்கு 24 பிரேம் மாறினாலும் நமக்கு அது மாறுவது தெரியாமல் காட்சி மட்டுமே தெரிகிறது.

இன்னொரு உதாரணம் பார்ப்போம். தொலைக்காட்சியில் ஆனது வினாடிக்கு 20 பிரேம்கள் வீதம் காட்டப்படுகிறது. செய்திகள் நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். நமக்கு செய்தி வாசிக்கும் பெண் ஒரு ப்ரேமாக மட்டுமே தெரியும். ஆனால் வினாடிக்கு 20 பிரேம் வீதம் அது ஓடிக்கொண்டு இருக்கும். 80-90 களில் வெளியான பல திரைப்படங்களில் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். திரையில் டிவியைக் காட்டும் போது டிவியின் காட்சிகளுக்கு இடையே கிடைமட்ட கோடு தெரியும். இரண்டு ஊடகங்களுக்கு இடையேயான பிரேம் ரேட் வித்தியாசத்தால் தான் இவ்வாறு தெரிகிறது. சார்லி சாப்ளின் படங்கள் 1வினாடிக்கு 18 பிரேம்களை உபயோகித்தது. தற்கால் வீடியோ கேம்களில் கம்பெனிக்கு தக்கவாறு பிரேம் ரேட் மாற்றுகிறார்கள். வினாடிக்கு 48 பிரேம்வரை நம் கண் சிறப்பாக செயலாற்றும். அதற்க்கு மேலான வேகத்தில் பிம்பங்களை உணராது. 24 பிரேம் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. இதற்க்கு மேல் என்றாலும் அதிக பிலிம் செலவாகும்.

ஐமேக்ஸ் பிலிமின் அகலம் அதிகம் என்பதால் வினாடிக்கு 24 என்ற அளவில் அதை வேகமாக இழுக்க 35 எம் எம் புரஜெக்டரில் உள்ள தொழில்நுட்பம் போதாது. எனவே வேக்யூம் உதவியுடன் அதை செயல் படுத்துகிறார்கள். இது ஒரு ஆஸ்திரேலியர் கண்டுபிடித்த தொழில்நுட்பம். முன்பு படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஆன படங்களைப் பார்த்தால் (இப்பல்லாம் அப்படி ஓடுதா என்ன?) ஒளி குன்றி தெரியும். அதைப் போலவே சில சராசரி திரையரங்குகளில் புது படம் கூட மங்கலாக தெரியும். இரண்டுக்கும் காரணம் ஒளிக்காக உபயோகப்படுத்தும் எலெக்ரோடுகளே. அவற்றில் இருந்து வரும் புகை பிலிமில் படிவதால் நாள்பட்ட உபயோகத்துக்குப் பின் படம் மங்கலாகிறது. சிலசமயம் சில கஞ்ச தியேட்டர் உரிமையாளர்கள் சரியான நேரத்தில் எலெக்ரோடை மாற்றாமல் பயன்படுத்துவதாலும் இது நேரிடுகிறது. ஐமேக்ஸ் புரஜெக்டர்களில் 12 முதல் 18 கிலோ வாட்ஸ் சக்தியுள்ள விளக்குகள் பயன்படுத்தப் படுகின்றன. பிலிமில் தூசு படியாமல் இருக்க கூட தொழில்நுட்பம் உபயோகிக்கப் படுகிறது.

ஐமேக்ஸில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்

ஐமேக்ஸ் டோம்


இம்முறையில் படமானது 1800 கோணத்துக்கு ஒளிபரப்பாகும். பார்வையாளருக்கு பிரேமுக்குள் தானே இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். மும்பையில் இருக்கும் ஐமேக்ஸ் தியேட்டர் இந்த வகையே. பிளானடோரியங்கள், அறிவியல் மையங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ற அமைப்பு இது. உணமையில் ஒரு அறிவியல் மையத்திற்க்காக உருவாக்கப்பட்ட அமைப்பு இது.

ஐமேக்ஸ் 3டி

மற்ற இரு பரிமாணங்கள் பிரமாணடம் என்பதால் மூன்றாவது பரிமாணம் எதிர்பார்க்கும் அளவுக்கு கிடைப்பதில்லை என்ற குற்ரச்சாட்டு இருக்கிறது.

ஐமேக்ஸ் டிஜிடல்

டிஜிடல் கேமிராவால் படம் எடுக்கப்படுவதல்ல. எடுக்கப்பட்ட ஐமேக்ஸ் படத்தை டிஜிடலுக்கு மாற்றி பிரத்யேக புரஜெக்டர் மூலம் திரையிடுவது. எதிர்பார்த்த தரம் இன்னும் கிடைக்கவில்லை.


தமிழ்சினிமாவிற்க்கு இது சாத்தியமா?

70 களின் மத்தியில் இந்த தொழில்நுட்பம் பயன் பாட்டுக்கு வந்தாலும் இதுவரை 300 திரையரங்குகளே உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் இன்னும் இரண்டாண்டு கழித்து பார்த்தாலும் மொத்தமாக 10 தியேட்டர் இருந்தால் ஆச்சரியம் தான். ஹாலிவுட்டில் கூட இப்பொது ஐமேக்ஸ் முறையில் படம் எடுப்பதில்லை. எடுத்த படத்தை ஐமேக்ஸ் பிலிமுக்கு மாற்றி திரையிடுகிறார்கள். ஏனெனில் ஆகும் செலவு அப்படி. இந்த வகையில் பார்த்தால் முதலில் இந்திப் படங்களை ஐமேக்ஸுக்கு மாற்றி திரையிடவே முதலில் முயற்சிப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு நம்மை விட பெரிய மார்க்கட். ஆனால் அதற்க்கே பெரிய தயக்கம் இருக்கிறது. போட்ட காசை எடுக்க் முடியுமா? என்று. ஷோலே,டைட்டானிக், பென்ஹர்,மம்மி, டென் கமான்மெண்ட்ஸ், டிராய் போன்ற படங்களை ஐமேக்ஸில் பார்க்க எனக்கு ஆசை.

வரும் ஐந்து ஆண்டுகளில் அதிகபட்சம் இரண்டு ஐமேக்ஸ் தியேட்டர்கள் தமிழ் நாட்டில் வரலாம். அதற்க்காக படத்தை மாற்றி வெளியிட்டால் முதலுக்கு மோசம் தான். எந்திரன் திரைப்படத்தை வேண்டுமானால் செலவோடு செலவாக சன் பிக்சர்ஸ் ஐமேக்ஸ் பிலிமுக்கு மாற்றலாம். இல்லையெனில் மர்மயோகியோ, மருதநாயகமோ ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டால் ஒரு வாய்ப்பு இருக்கிறது. நாளை நடப்பதை யார் அறிவார்?

36 comments:

கார்க்கிபவா said...

இந்த 1460 என்பது 146, 3600 என்பது 30 டிகிரியோ? ஏனெனில் வட்டத்துக்கே 360 டிகிரிதானே? எப்படி 1460 சாத்தியமாகும்?

தேவையில்லாத பி.கு: நான் கணிதத்தில் 99, மற்றும் அறிவியலில் 97 மார்க் எடுத்தவன்.

முரளிகண்ணன் said...

கார்க்கி 146 டிகிரி என டைப் செய்து (மாத் கேடில் டைப் செய்தேன்) தவறாக வந்து விட்டது. மாற்றிவிடுகிறேன் நன்றி.

புருனோ Bruno said...

1460 கோணத்தில்

146 டிகிரி என்று நினைக்கிறேன்

narsim said...

//புழக்கத்தில் இருக்கும் 70 எம் எம் பிலிமையே கிடைமட்டமாக உபயோகித்தால் என்ன? இந்த யோசனையில் உருவானதுதான் இப்பொதைய ஐமேக்ஸ் பிலிம் பார்மட்.//

அற்புதமான விளக்கம் முரளி..

மிக நல்ல விளக்கங்கள்.. தொடருங்கள்

முரளிகண்ணன் said...

146 டிகிரி, 360 டிகிரி என மாற்றிவிட்டேன்.

நன்றி

narsim said...

//மருதநாயகமோ ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டால் ஒரு வாய்ப்பு இருக்கிறது. நாளை நடப்பதை யார் அறிவார்?//

நல்லதே நடக்கும்.. நம்புவோம்..

புருனோ Bruno said...

எந்த ஒரு தொழிற்நுட்பமும் ஆரம்ப காலத்தில் அதிக பணம் தேவைப்படுவதாகவே இருக்கும்

போக போக சரியாகிவிடும்

உதாரணம் - கருப்பு வெள்ளை x வண்ண திரைப்படங்கள்

மஞ்சள் ஜட்டி said...

சன் டிவி நாக்க முக்க பாட்ட ஐமாக்ஸ் ல பாக்கிறதவிட கொடுமை வேற இல்லை..

முரளி..

ஆடியோ பற்றியும் கொஞ்சம் எழுதுங்களேன்..மோனோ, ஸ்டீரியோ முறையில் ரெக்கார்டிங் செய்வது, தமிழ் திரையுலகில் இவை எப்படி வந்தன என்று விளக்கினால் நன்றாக இருக்கும்..

புருனோ Bruno said...

பின் குறிப்பு

ஆண்களை விட பெண்களுக்கு பக்க வாட்டு பார்வை அதிகம் (கடைக்கண் பார்வை !!)

அதற்கு காரணம் மண்டைஓட்டு எலும்புகளின் அமைப்பு

ஆணின் மண்டையோட்டிற்கும் பெண்ணின் மண்டையோட்டிற்கும் உள்ள வித்தியாசங்களில் இது ஒன்று

நையாண்டி நைனா said...

மீ த பத்தாவது போட்டுகிறேன். பதிவை படிச்சிட்டு வரேன்

நையாண்டி நைனா said...

/*ஷோலே,டைட்டானிக், பென்ஹர்,மம்மி, டென் கமான்மெண்ட்ஸ், டிராய் போன்ற படங்களை ஐமேக்ஸில் பார்க்க எனக்கு ஆசை.*/

சாதாரண படத்தை, சாதாரண தியேட்டரில், சாதாரண விலையில் பார்கவே எனக்கு ஆசை, இதுவே நிறைவேற மாட்டேங்குது... ஹூம்... !

நையாண்டி நைனா said...

/*ஆண்களை விட பெண்களுக்கு பக்க வாட்டு பார்வை அதிகம் (கடைக்கண் பார்வை !!)*/

அருமையான ரகசியத்தை சொன்ன.... எங்கள் டாக்டர் வாழ்க ..வாழ்க .

சரவணகுமரன் said...

செம இன்ரெஸ்டிங்கா இருந்தது...

சரவணகுமரன் said...

//பச்சோந்தி 360 டிகிரி பார்க்கும் சக்தி கொண்டது. ஆனால் அவை நயன், ரீமாவை பார்க்க விரும்புவதில்லை.//

:-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

அற்புதமான விளக்கம்

Vidhya Chandrasekaran said...

\\பச்சோந்தி 360 டிகிரி பார்க்கும் சக்தி கொண்டது. ஆனால் அவை நயன், ரீமாவை பார்க்க விரும்புவதில்லை.\\

ROTFL:)
கலக்கலான பதிவு. தொடருங்கள் உங்கள் மகத்தான சேவையை;)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கர்ணன் படங்கள் எல்லாம் மிக பிரமாண்டமாய் தெரியும். ராஜ்மல்லிகா மாதிரி ஆட்களையே சூப்பராய் காட்டியவர். ஒரு ஓடையில் குதிரை ஓடுவதையே ஏதோ சேது சமுத்திரத்தில் குதிரை ஓடுவது காட்டுபவர். அவர் உபயோகித்த தொழில்நுட்பங்களை உபயோகப் படுத்தவே செலவு பிடிக்கும் என்று கணக்குப் பார்ப்பவர்களால் இந்த மாதிரி டிகிரி கணக்கெல்லாம் பார்த்து செலவு செய்யச் சொன்னால்........

Unknown said...

//சார்லி சாப்ளின் படங்கள் 18 வினாடிக்கு 18 பிரேம்களை உபயோகித்தது//

1 விநாடிக்கு?

Unknown said...

//தேவையில்லாத பி.கு: நான் கணிதத்தில் 99, மற்றும் அறிவியலில் 97 மார்க் எடுத்தவன்.//

கார்க்கி, ஒன்றாம் வகுப்பிலா?

Unknown said...

ரொம்ப அருமையான பதிவு முரளிகண்ணன் சார்.....
நீங்கள் நிஜமாவே ஒரு சினிமா என்சைக்ளோபீடியா :))))

Cable சங்கர் said...

வழக்கம் போல என்ன சொல்ல.. கலக்கல் முரளி..

Cable சங்கர் said...

ஜமேக்ஸ் படமெடுக்கும் முறையைபற்றிய விளக்கம் சூப்பர்ப்.. மிக அருமையான எளிதான விளக்கம்.

சின்னப் பையன் said...

அற்புதமான விளக்கம்...

சின்னப் பையன் said...

சில பேருக்காக (எனக்கில்லேப்பா!!!) நமீதா பாட்டுகளை மட்டுமாவது ஐ-மேக்ஸில் மாற்றி வெளியிடுங்கப்பா!!!

Indian said...

Thanks for the detailed information.

The best IMAX experience I got was in Paris where I saw the movie 'Mysteries of the river Nile'. Wow, when the helicopter flew over Nile, I felt as though I was flying. B'coz the screen covers the entire 146 degree of the vision range. Amazing experience.

However, other IMAX movies in Grand Canyon and in Zion national park were not so great.

அக்னி பார்வை said...

அதெல்லாம சரி முரளி ஆனால் அதில் பார்க்க தமிழில் நல்ல படங்கள் வர வேண்டுமே...

பட்டு குஞ்சல்மே கட்டி வச்சாலும் * அது அதுதானே

முரளிகண்ணன் said...

புருனோ, நர்சிம், கிடிக்கி, நையாண்டி நைனா வருகைக்கு நன்றி

முரளிகண்ணன் said...

சரவணகுமரன், டிவி ராதாகிருஷ்ணன், வித்யா வருகைக்கு நன்றி.

சுரேஷ் நான் ஆரம்பத்தில் கர்ணனின் ஒளிப்பதிவு பற்றி ஒரு பதிவு எழுதினேன். பல பதிவர்கள் மகிழ்ந்து பின்னூட்டம் இட்டனர். இன்னும் கர்ணனுக்கான ரசிகர்கள் குறையவே இல்லை

முரளிகண்ணன் said...

கேவிஆர் மாற்றி விடுகிறேன். அது வினாடிக்கு 18 பிரேம்தான்.

கமல்,கேபிள் சங்கர்,சின்னப்பையன்,இந்தியன், அக்னிப்பார்வை தங்களின் வருகைக்கு நன்றி

Thamira said...

அட்டகாசம்.. எப்படி இவ்வளவு தகவல்கள் சேகரிக்கிறீர்கள், பிரமிப்பு.! இஞ்சினியரிங்க விட்டுட்டு சினிமா பத்தி தீஸிஸ் சப்மிட் பண்ணிறப்போறீங்க.. பாத்து..!

கோபிநாத் said...

தூள் கிளப்புரிங்க அண்ணாச்சி ;)

Darmaraj (எ) Darma said...

WATCHMAN என்கிற திரைப்படம் நாளை வியாளன்(06-03-2009) இங்கிலாந்தில் IMAXஇல் வெளியாகிறதாம்.... நண்பா் சொன்னார்...

MSATHIA said...

நல்ல தொடர்.

Madhu Ramanujam said...

//WATCHMAN என்கிற திரைப்படம் நாளை வியாளன்(06-03-2009) இங்கிலாந்தில் IMAXஇல் வெளியாகிறதாம்.... நண்பா் சொன்னார்...//

அது watchman இல்லை watchmen. ஒரு சூப்பர் ஹீரோ படமே ஒரு ரேஞ்சா இருக்கும். இதுல பல பேரு இருக்காங்க. நானும் இதை சான் பிரான்ஸிஸ்கோ ஐமேக்ஸில் பார்க்க உள்ளேன்.

ஆதவா said...

amazing......

முரளிகண்ணன் said...

தாமிரா, கோபிநாத், தர்மராஜ், சாத்தியா,மதுசூதனன் ராமானுஜம், ஆதவா

தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் தகவல்களாஉக்கும் நன்றி