March 07, 2009

பெண் வாசனை

இரண்டாம் ஆண்டு மாணவன் நான்காமாண்டு மாணவிக்கு காதல் கடிதம் கொடுக்க, தொடர்ந்த வகுப்பு மோதலில் எழுவருக்கு காயம். ஒழுங்கு கமிட்டி உறுப்பினர் என்ற முறையில் என்னையும் நான்கு பேரை விசாரிக்க துறைத் தலைவர் கேட்டுக் கொள்ள, ஒரு பகலை வீணாக்கிக் கொண்டிருந்தேன்.

அப்போது டிபார்ட் மெண்ட் பியூன் ஒருவனை அழைத்து வந்து,
“ சார், நியூ அப்பாயிண்ட்மெண்ட், ஹெச் ஓ டி உங்க கிட்ட அனுப்பி வைக்கச் சொன்னார்” என ஒப்படைத்தார்.

விசாரித்துக் கொண்டிருந்த மாணவனை அனுப்பிவிட்டு பியூனிடம் புலன் விசாரணையை தொடங்கினேன்.

என்னய்யா நடக்குது இங்க? அந்தப் பொண்ணு யாரு? எப்படி இருக்கும்? நான் கவனிச்சதே இல்லையே என பியூனிடம் கேட்டேன்.

அதற்க்கு பியூன் அது பீமி சார். இவன் எதப்பார்த்து லெட்டர கொடுத்தான்னு தெரியல என்றார்.

ஓ அதான் நம்ம கண்ல படல என்று சமாதானப் படுத்திக் கொண்டு நியூ அப்பாயிண்ட்மெண்ட்டிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினேன்.

செல்வம் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவன் அது என்ன சார் பீமி என கேட்டான். பீமனுக்கு பெண்பால் என நான் சொல்ல, சந்தேகமும் தயக்கமும் தீர்ந்து சகஜமாக பேசத் தொடங்கினான்.

வசதியான விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் அதிக முறைப் பெண்கள் உடையவன் என்றும் உரையாடலில் தெரியவந்தது. தொடர்ந்த பழக்கத்தில் என் அறைக்கு வந்தவன் நல்லா நீட்டா இருக்கே, நான் வேணும்னா உங்க ரூம் மேட்டா வரட்டுமா? எனக் கேட்டான். வாடகை குறையும் என்பதால் நானும் சம்மதிக்க, இரண்டு நாட்களில் நாலைந்து அட்டைப் பெட்டி சகிதம் வந்துவிட்டான்.

நல்லா கிளாஸ் எடுக்க ஏகப்பட்ட புக்கு ரெஃபர் பண்ணுவ போலிருக்கே என கேட்க, அப்படி யெல்லாம் என்னப் பத்தி தப்பா நினச்சுறாதீங்க என்று பெட்டியை பிரித்தான். பாதி பர்மா பஜார் அளவுக்கு அதில் வாசனைத் திரவியங்கள், டியோடரண்டுகள், பாடி ஸ்பிரே என குவிந்திருந்தன.

எங்க வீட்டில எல்லா ரூமும் கெட்ட வாசனைங்க. சமயக்கட்டுல எப்பவும் தூக்குச் சட்டியில கருவாடும், உப்புக் கண்டமும். மீதமான மீன்,கறி குழம்பு எல்லாம் ரெண்டு நாளைக்கு வச்சு சாப்பிடுவாங்க. வீட்டு ஹால்ல, அப்பா எப்பவும் குடிக்கிற கத்திரி சிகரட்டு வாசம். திண்ணையில உட்காரலாம்னா அங்க பாட்டி குடிக்கிற சுருட்டு வாசம். கக்கூஸ் வேற எடுப்பு கக்கூஸ். காலையில அவங்க வந்து எடுத்துப் போடுற வரைக்கும் நாறிக்கிட்டேயிருக்கும். மாடி ரூமில நெல்லு காயப்போட்டு ஒரு அவியல் வாசம் எப்பவும் இருக்கும். சின்ன வயசில இதெல்லாம் தெரியல. பதினொன்னாவதுக்கு ஹாஸ்டல்ல தங்கியிருந்துட்டு திரும்பும்போதுதான் இதெல்லாம் உறைச்சது. கறியா தின்னு தின்னு என் உடம்பில கூட வேர்வை வாடை அதிகமாயிருச்சு. அதான் இப்போ சைவத்துக்கு மாறிட்டேன். அப்படியும் ஒரு சேஃப்டிக்கு இதெல்லாம் என நீண்ட விளக்கமளித்தான்.

மேலும் இதற்க்கு முன் தங்கியிருந்த ரூமின் வாடை பிடிக்காமல்தான் இங்கு வந்ததாகவும் கூறினான்.

நாங்கள் வழக்கமாய் ரீ சார்ஜ் செய்யும் எஸ் டீ டி பூத்தில் மாலை வேளைகளில் ஒரு பெண் தென்படத் தோன்றினாள். ஏர் ஹோஸ்டஸ் ரேஞ்சில இருக்கா, எஸ் டீ டி பூத்தில போய் வேலை பார்க்கிறாளே என விசனப் பட்டேன். நாங்கள் செல்லும் சமயங்களில் கலகலப்பாக பேசுவாள். பின் ஒரு நாள் அவள் அந்த பூத் உரிமையாளரின் மகள்தான் என்றும், வசதி எனவும் தெரிய எனக்குள் காதல் துளிர்விட்டது. வீட்டில் இருந்த ஸ்பீட் பிரேக்கர்களை நினைத்து என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன். செல்வமோ பொண்ணுன்னா அடக்கமா இருக்கனுங்க இவ என்னா வள வளன்னு பேசுறா என அவளை ஏற்கனவே நிராகரித்திருந்தான்.

அவனது வீட்டில் எந்த ஸ்பீட் பிரேக்கரும் இல்லை. எனவே கல்யாணத்துக்கு வற்புறுத்த ஆரம்பித்தார்கள்.

ஒருத்தி தலையில் வேப்பெண்ணை வைக்கிறா, இன்னொருத்திக்கு பொடுகு, ஒரு அத்தை வீடு எங்க வீட்டை விட நாறும் என ஏற்கனவே எல்லா முறைப் பெண்களையும் ரிஜக்ட் செய்திருந்தான். இந்த ஊரிலும் சில ஜாதகங்கள் வர அங்கே பெண் பார்க்கப் போகும் போது என்னையும் சில சமயம் அழைத்துச் செல்ல ஆரம்பித்தான். பெண் காப்பி கொடுக்க வரும்போது பெண் முகத்தைப் பார்க்கிறானோ இல்லையோ அவள் வாசனையை நுகர்ந்தான். பெண்கள் பெரும்பாலும் இந்த வைபவத்தின் போது பவுடர், செண்ட் போட்டு மல்லிகையும் சூடிக் கொள்வதால் அவனால் பிரித்தறிய முடியவில்லை. பெண் ஓரளவு பிடித்திருந்தால் காப்பியை லேசாக சட்டையில் தட்டி விட்டு அதைக் கழுவப் போவது போல வீட்டுக்குள் புகுந்து நுகர ஆரம்பித்தான்.

தரகர் சந்தேகப்படுவாரே என்று ஒருமுறை என் சட்டையை கறைப்படுத்தினான். எனக்கு உதவி செய்வது போல வீட்டிற்க்குள் திக் விஜயம் செய்தான். ஆத்திரத்தில் நான் இதுக்கு ஒரு மோப்ப நாயை கூட்டிக்கிட்டு வர வேண்டியதுதானடா என்று கடுப்படித்தேன்.

செமெஸ்டர் ஆரம்பித்தவுடன் எல்லோருக்கும் எக்ஸாம் டியூட்டி போட ஆரம்பித்தார்கள். சிலருக்கு வரமாகவும், சிலருக்கு சாபமாகவும் அமையும் அது. முழுக்க முழுக்க பையன்களே உட்கார்ந்திருந்த ஹாலில் கடு கடுவென கடமையை ஆற்ற தொடங்கிய போது, சாபத்தை வரமாக்க வருகை தந்தாள் பிசிக்ஸ் டிபார்ட்மெண்டில் புதிதாக சேர்ந்திருந்த ஆனந்தி. ஏழாம் நம்பர் செருப்பு சரியாகப் பொருந்தும் உயரம், எக்செல் சுடிதார் இதமாக பொருந்தும் உடல்வாகு, ஐந்து ரூபாய் டிக்கெட்டுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தாலும் கண்டக்டர் கோபப் படாத முகம். வோட்டர் ஐடிக்கு போட்டோ எடுப்பவன் கூட நல்லா சிரிங்கம்மா என்று கேட்கும் படியான பல்வரிசை என அவளை ரசித்திக் கொண்டிருந்ததில் மூன்று மணி நேரம் முப்பது வினாடிகளாய் கழிந்தது.

கல்லூரி அலுவலகத்தில் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி அவள் பயோடேட்டாவை பார்த்த போது வேறு ஜாதி எனத் தெரிய வந்தது. எப்படிப் பார்த்தாலும் தந்தை சொத்தில் இருந்து என் பங்குக்கு 20 லட்சம் வரும். வைதீக குடுக்கையான என் தந்தையை பகைத்துக் கொள்வதா என யோசித்தேன். ஆனந்தி இல்லையின்னா ஒரு தமயந்தி. ஆனா 20 லட்சம்?.

செல்வத்துக்கு சூட் ஆகிப் போனது இந்த விஷயம். எப்படியும் இவளை மணந்து கொள்ள வேண்டுமென்ற வெறியே ஏற்பட்டது அவனுக்கு. அவள் அவ்வளவாக யாருடனும் பேசுவது இல்லை என்பதும் அவனுக்கு பிடித்துப் போனது. ரெண்டு சம்பளம் நீட்டா செட்டில் ஆயிரலாம்னு பொருளாதார அட்வாண்டேஜ் வேறு. என்னிடம் அவன் கெஞ்சவே, காதலை வளர்க்க உதவி செய்வதாய் வாக்களித்தேன்.

சீனியர் என்பதால் செல்வாக்கை பயன்படுத்தி அவள் இருக்கும் எல்லா கமிட்டியிலும் இவனையும் பங்கு பெற வைத்தேன். ஆண்டு விழா, தமிழ் மன்றம் என எது நடந்தாலும் இருவரும் அருகருகே நின்று கடமையாற்றுமாறு நான் பார்த்துக் கொண்டேன்.

செல்வத்தின் வீட்டார் நாசூக்கு இல்லாதவர்களாய் இருந்தாலும் அவன் உடல் வளர்ச்சியில் நன்கு அக்கறை காடியிருந்தனர். வாட்ட சாட்டமாய் ஒருவன் சும்மா சும்மா சுற்றி வந்தால் ஒரு இரக்கம் வந்து காதலாய் மாற வாய்ப்பிருக்கிறதல்லவா? சில மாதங்களில் கண்ணால் பேசத் தொடங்கி காதலை வளர்க்க ஆரம்பித்தார்கள் இருவரும்.

எனக்கு திடீரென ஒரு நாள் சந்தேகம் வந்தது.

இந்த ஊர்ல நெறையா பொண்ணுககிட்ட கத்தாழை வாடை அடிக்குதின்னு பொலம்புவேயடா? இவகிட்ட ஏதும் பிரச்சினையில்லையேன்னு கேட்டேன்.

நீங்க வேற, இயற்கையான பொம்பளை வாசம் இவகிட்டதாங்க இருக்கு. அதிகமா பவுடர் போடுறதில்ல, செண்ட் அடிக்கிறதில்ல, பூகூட ரோஸ்தான். சாயங்காலம் கூட வேர்வை வாடை இல்லாம பிரெஷ்ஷா இருக்குறா. நான் சின்ன வயசில பட்ட கஷ்டத்துக்கு கடவுள் கண்ண தொறந்திட்டாரு என பதிலளித்தான்.

பின் ஏற்பட்ட முன்னேற்றங்களில் இருவருக்கும் திருமணம் முடிந்தது. வயிற்றெரிச்சலோடு வாழ்த்திவிட்டு இன்னும் எவ்வளோ வருசத்துக்கு தனியாவே போயி எல்லோரையும் வாழ்த்துறதுன்னு புலம்பிக்கொண்டே ரூமுக்கு வந்து சேர்ந்தேன். 15 நாள் லீவ் கழித்து சுரத்தே இல்லாமல் கல்லூரிக்கு திரும்பினான் செல்வம். தனியே கூட்டிச் சென்று விசாரித்தபோது சொன்னான் “ அவ வாய் ரொம்ப நாறுதுங்க. முத்தம் கொடுக்கப் போனா மூச்சே நின்னுறுது”.

34 comments:

Cable சங்கர் said...

//தனியே கூட்டிச் சென்று விசாரித்தபோது சொன்னான் “ அவ வாய் ரொம்ப நாறுதுங்க. முத்தம் கொடுக்கப் போனா மூச்சே நின்னுறுது”.//

கலக்கல் தலைவரே..

narsim said...

//பின் ஏற்பட்ட முன்னேற்றங்களில் //

நல்ல வார்த்தைப் பிரயோகம் முரளி.. புனைவு.. கல்லூரி நினைவு..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ட்ரிபிள் ஈ டிபார்ட்மெண்டில் புதிதாக சேர்ந்திருந்த ஆனந்தி. ஏழாம் நம்பர் செருப்பு சரியாகப் பொருந்தும் உயரம், //

இப்படியெல்லாம் வர்ணித்தால் எங்களுக்கு புரியாதே பாஸ்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//“ அவ வாய் ரொம்ப நாறுதுங்க. முத்தம் கொடுக்கப் போனா மூச்சே நின்னுறுது”.//


வாய் துர்நாற்றம் சாதாரணப் பிரச்சனை. விளம்பரம் கூட தொலைக் காட்சியில் வருகிறதே தலை

அத்திரி said...

,// ஐந்து ரூபாய் டிக்கெட்டுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தாலும் கண்டக்டர் கோபப் படாத முகம்.//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........... கலக்கிட்டீங்க தல...

Unknown said...

கதையில் நல்ல flow.நன்று.வாழ்த்துக்கள்!

கதைய உங்க முடிவு ஊகிக்க முடிஞ்சுது என்னால்.இப்படி முடிச்ச்ருக்கனும்.முடிச்சிருந்தா நச் என்று இருக்கும். எப்படி?

“என்ன செல்வம்... ஹ்னிமூன் எப்படி இருந்தது?”

“ஒன்னும் சரியில்ல சார்!கிட்டயே வர
மாட்டேன்றா! ஒரு கிஸ் கூட இல்ல.

“ஏன் செல்வம்?”

“என் வாயில ஒரு புளிச்ச கூழ் ஸ்மெல் வருதுன்றா!

...................................

முரளி கண்ணன் சார் ஒரு வேண்டுகோள்.

கதை உரையாடல்களை மேல் எழுதின மாதிரி இடம் விட்டு எழுதினால் படிப்பதற்கு அலுப்பு இல்லாமல் இருக்கும்.

மூச்சு விடாமல்
பாடுவது போல் நீங்கள் மூச்சு விடாமல் எழுதுவதை தவிர்க்கலாம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

கலக்கல் பதிவு நண்பா.. இதுல எனக்கு ரொம்ப பிடிச்சது..

//எப்படியும் இவளை மணந்து கொள்ள வேண்டுமென்ற வெறியே ஏற்பட்டது அவனுக்கு. அவள் அவ்வளவாக யாருடனும் பேசுவது இல்லை என்பதும் அவனுக்கு பிடித்துப் போனது. ரெண்டு சம்பளம் நீட்டா செட்டில் ஆயிரலாம்னு பொருளாதார அட்வாண்டேஜ் வேறு. //

இன்னைக்கு பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள்கிட்ட இருக்கற விஷயத்த அப்பட்டமா எழுதி இருக்கீங்க..

புருனோ Bruno said...

// ஏழாம் நம்பர் செருப்பு சரியாகப் பொருந்தும் உயரம், எக்செல் சுடிதார் இதமாக பொருந்தும் உடல்வாகு, ஐந்து ரூபாய் டிக்கெட்டுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தாலும் கண்டக்டர் கோபப் படாத முகம். வோட்டர் ஐடிக்கு போட்டோ எடுப்பவன் கூட நல்லா சிரிங்கம்மா என்று கேட்கும் படியான பல்வரிசை என அவளை ரசித்திக் கொண்டிருந்ததில் மூன்று மணி நேரம் முப்பது வினாடிகளாய் கழிந்தது.//

நச்

முரளிகண்ணன் said...

கேபிள் சங்கர். நர்சிம் தொடரும் ஆதரவுக்கு நன்றி

சுரேஷ் இனி கவனமாக இருக்கிறேன்

அத்திரி.. நன்றி

ரவிசங்கர் சார் முயலுகிறேன்.

கார்த்திகை பாண்டி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

முரளிகண்ணன் said...

புருனோ ரசிப்புக்கு நன்றி

தமிழன்-கறுப்பி... said...

புனைவா!! சும்மாதானே..;)

மாசற்ற கொடி said...

வர்ணனைகள் அருமை ! ஆனாலும் செல்வம் ரொம்ப நல்ல பையன் போல இருக்கு !!


அன்புடன்
மாசற்ற கொடி

மங்களூர் சிவா said...

கலக்கல்!

Thamiz Priyan said...

ரசித்துப் படித்தேன்.. வாசமா இருந்தது.

anujanya said...

அட்டகாசம் முரளி. எனக்குப் பிடித்த வரிகளை புருனோ குறிப்பிட்டு விட்டார். ரவி சொல்வதும் சரிதான். ஆனால், மொத்தத்தில் படு இயல்பான நடை. சுவாரஸ்யம். இது என்ன 'கல்லூரி' போட்டிக்கான பதிவா?

அனுஜன்யா

வெட்டிப்பயல் said...

Excellent flow...

இதுவும்

//வீட்டு ஹால்ல, அப்பா எப்பவும் குடிக்கிற கத்திரி சிகரட்டு வாசம். திண்ணையில உட்காரலாம்னா அங்க பாட்டி குடிக்கிற சுருட்டு வாசம். கக்கூஸ் வேற எடுப்பு கக்கூஸ். காலையில அவங்க வந்து எடுத்துப் போடுற வரைக்கும் நாறிக்கிட்டேயிருக்கும். மாடி ரூமில நெல்லு காயப்போட்டு ஒரு அவியல் வாசம் எப்பவும் இருக்கும்.//

இதுவும்
//ஏழாம் நம்பர் செருப்பு சரியாகப் பொருந்தும் உயரம், எக்செல் சுடிதார் இதமாக பொருந்தும் உடல்வாகு, ஐந்து ரூபாய் டிக்கெட்டுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தாலும் கண்டக்டர் கோபப் படாத முகம். வோட்டர் ஐடிக்கு போட்டோ எடுப்பவன் கூட நல்லா சிரிங்கம்மா என்று கேட்கும் படியான பல்வரிசை//

எக்சலண்ட்...

Mahesh said...

முடிவு... கொஞ்சம் சுஜாதா டைப்ல இருக்கு... கலக்கல் !!!

முரளிகண்ணன் said...

தமிழன் கறுப்பி, மாசற்ற கொடி தங்கள் வருகைக்கு நன்றி.

மங்களூர் சிவா ரொம்ப நாளாச்சு நீங்க வந்து.

நன்றி தமிழ்பிரியன்

அனுஜன்யா, இந்த கதை போட்டிக்கு இல்லை. ஒரு கவிதை எழுதி உங்களோட போட்டி போடப் போறேன். :-))))

வெட்டிப்பயல், மகேஷ் மிக்க நன்றி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஏழாம் நம்பர் செருப்பு சரியாகப் பொருந்தும் உயரம், //

இப்படியெல்லாம் வர்ணித்தால் எங்களுக்கு புரியாதே பாஸ்.///

//சுரேஷ் இனி கவனமாக இருக்கிறேன்//


ஆமாம். எங்கள மாதிரி ஸ்கூல் கோயிங் பாய்ஸ்க்கு அப்பத்தான் பொண்ணுகலப் பத்திப் புரியும்

பரிசல்காரன் said...

கொஞ்சம் லேட்டா வந்துட்டேன். தப்புதான். வேணும்னா அடிங்க. அதுக்காக சிரமப்பட்டு விமர்சனம் பண்றதுக்காக கட் பேஸ்ட் பண்ணி கொண்டு வந்த பத்தியை எல்லாம் ப்ரூனோ, வெட்டிப்பயலெல்லாம் சொல்லீட்டா நான் என்ன பண்றது?

சரி.. வந்ததுக்கு நர்சிம்மோட ஃப்ரெண்டு வழுக்கை டப்பா வசந்தோட கோரிக்கைக்காக ஒரு கருத்து சொல்லீட்டு போறேன்..

கதையை ரெண்டு மூணு வாட்டி படிச்சு கொஞ்சம் எடிட் பண்ணியிருந்தா சூப்பர் ஹிட்டுக்கு பதிலா, சூப்பர் டூப்பர் ஹிட்டாயிருக்கும்!

சொன்னது தப்பா இருந்தா..
.
.
.
..
.
.
.
.
.
.
..
.

.
..

..
.
.
.
.
.
அப்படித்தான் அடிக்கடி சொல்லுவேன்!

முரளிகண்ணன் said...

பரிசல் கருத்துக்கு நன்றி.

இனி நீங்கள் சொன்ன விஷயத்தை பாலோ செய்கிறேன்

நவநீதன் said...

உங்க கதையும் நன்றாக இருந்தது...!

கே.ரவிஷங்கரின் முடிவும் நன்றாக இருந்தது...!

இருவருக்கும் வாழ்த்துக்கள்....!

முரளிகண்ணன் said...

நன்றி நவநீதன்

கோபிநாத் said...

:))))

Unknown said...

தாங்க்ஸ்! இப்ப பாத்தீங்களா,இடம் விட்டு எழுதின பிறகு tidel park road மாதிரி லட்சணம் வந்துடிச்சி!

நன்றி! வாஙக நம்ம வலைக்கு.”இவள்
என் மனவி”ன்னு ஒரு கவிதை எழுதியிருக்கேன்.கருத்தச் சொல்லுங்க.

ராஜ நடராஜன் said...

//அதற்க்கு பியூன் அது பீமி சார்//

இதென்ன புதுசா இருக்குதேன்னு யோசிச்சிகிட்டே ரெண்டு எட்டு வெச்சா விடை கிடைச்சிருச்சு:) தொடர்கிறேன்.

முரளிகண்ணன் said...

கோபிநாத் தங்கள் ஆதரவுக்கு நன்றி

ரவிசங்கர் சார் உங்களின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றுகிறேன்

ராஜ நடராஜன் வருகைக்கு நன்றி.

Unknown said...

ஹி ஹி ஹி ஹி ...
செம கதை முரளி சார்.....
நல்லா சிரிச்சேன் முடிவ படிச்சுட்டு :))))))))))

முரளிகண்ணன் said...

கமல் தங்களின் வருகைக்கு நன்றி

ஜியா said...

//ஐந்து ரூபாய் டிக்கெட்டுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தாலும் கண்டக்டர் கோபப் படாத முகம்//

Ulti...

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி ஜி

மந்திரன் said...

//ஏழாம் நம்பர் செருப்பு சரியாகப் பொருந்தும் உயரம், எக்செல் சுடிதார் இதமாக பொருந்தும் உடல்வாகு, ஐந்து ரூபாய் டிக்கெட்டுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தாலும் கண்டக்டர் கோபப் படாத முகம்.//
கண்டிப்பாக இது மாதிரி எழுத ஆசை ...
எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

முரளிகண்ணன் said...

மந்திரன் தங்கள் வருகைக்கும் கருத்துக்கம் நன்றி

நந்தா said...

முரளி கலக்கி இருக்கீங்க. நல்ல வர்ணனை. சரியான ஃப்ளோ. கலக்கலா கொண்டு போய் இருக்கிறீர்கள்.

பை த பை கடைசி வரிகள் எனக்கு பாலகுமாரனின் ஏதோ ஒரு புத்தகத்தை ஞாபகப்படுத்துகிறது. இனிது இனிது காதல் இனிதுன்னு நினைக்கிறேன்.

எப்படியோ. பின்னறீங்க போங்க. கலக்குங்க.