March 12, 2009

திருப்புமுனை ஆண்டு

1931ல் காளிதாஸ் என்ற ஒருபடத்தை மட்டுமே தந்த தமிழ்சினிமா சிறிது சிறிதாக முன்னேறி 37ஆம் ஆண்டு 38 படங்களை தந்தது. இதில் குறிப்பிடத்தக்க படங்களையும், இந்த ஆண்டு நிகழ்ந்த முக்கிய சம்பவங்களையும் பார்ப்போம்.

முக்கிய நிகழ்வுகள்
சிந்தாமணி, அம்பிகாபதி ஆகிய படங்களின் வெற்றிகாரணமாக எம் கே தியாகராஜா பாகவதர் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்னும் அந்தஸ்தைப் பெற்றார்.

இங்கிலாந்தின் லீட்ஸில் துகிலியல் (டெக்ஸ்டைல் டெக்னாலஜி) படித்திருந்த டி ஆர் சுந்தரம் தனது மார்டன் தியேட்டர்ஸ் என்னும் திரைப்பட நிறுவனத்தைத் துவங்கினார். முதல் படமாக சதி அகல்யாவை தயாரித்தார். இந்த நிறுவனத்தின் மூலமாக பின்னர் 117 படங்களைத் தயாரித்தார்.


தமிழ் சினிமா இயக்குனர்களின் தந்தை எனப் போற்றப்படும் கே சுப்ரமணியம் குழைந்தகளுக்கான படமான பாலயோகினியை இயக்கினார். இதுவே தமிழின் முதல் குழந்தைகளுக்கான படம் எனலாம்.

தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக் கன்னி தவமணிதேவி இந்த ஆண்டு சதி அகல்யா மூலமாக அறிமுகமானார்.

முதன்முறையாக படத் தலைப்பு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டது. தஞ்சாவூர் ரவுடி என்னும் படத்தின் தலைப்பு தஞ்சைப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக பக்கா ரவுடி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

முதல் இருமொழி திரைப்படம் பக்த புரந்ததாஸ், தமிழிலும் கன்னடத்திலும் தயாரிக்கப் பட்டது.

முதன் முறையாக ஒரு திரைப்படம் 52 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது (சிந்தாமணி).

இனி இந்தப் படங்களைப் பார்ப்போம்.


சிந்தாமணி

சிந்தாமணி என்னும் தாசியின் மீது கொண்ட காதல் காரணமாக செல்வந்த வீட்டு இளைஞன் தன் மனைவியையும் மறந்து அவள் வீட்டிலேயே இருக்கிறான். இளைஞனின் தந்தை நோய் வாய்ப்பட, தன்னை கவனிக்கும் மருகமகளுக்கே அத்தனை சொத்தையும் எழுதிவைத்து விட்டு இறக்கிறார். ஆனால் மனைவியோ கணவனின் காலடியே சரணம் என மீண்டும் அவனிடமே செல்கிறாள். அப்படியும் கணவன் திருந்தவில்லை. மனைவி ஆற்று வெள்ளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். தாசியை தேடிச் செல்லும் கணவணோ இருளில் அவள் உடலையே படகாக வைத்து ஆற்ரைக் கடக்கிறான். உண்மை தெரிந்த பின் அந்த இளைஞனும், தாசி சிந்தாமனியும் மனம் திருந்தி கிருஷ்ண பக்தர்கள் ஆகிறார்கள்.

இளைஞன் பில்வமங்களனாக எம் கே தியாகராஜ பாகவதரும், சிந்தாமணியாக கன்னட நடிகை அஸ்வத்தம்மா நடித்த இந்தப் படம் மதுரை ராயல் பிக்சர்ஸ்சாரின் தயாரிப்பு. இயக்கம் ஒய் வி ராவ். இவர் நடிகை லட்சுமியின் தந்தை. இந்தப் படம் மதுரை நியு சினிமா தியேட்டரில் வெற்றிகரமாக ஓடி லாபத்தைக் குவித்தது. ராயல் பிக்சர்ஸார் இந்த லாபத்தைக் கொண்டு ஒரு திரையரங்கை மதுரையில் கட்டி அதற்க்கு சிந்தாமணி என்று பெயர் சூட்டினார்கள். பாடல்கள் இசைத்தட்டுக்களாக வந்து விற்பனையில் சாதனை படைத்தன.

அம்பிகாபதி
கம்பரின் மகனுக்கு இளவரசியின் மேல் காதல். காதல் இல்லாமல் தொடர்ந்து 100 பாடல்களைப் பாடினால் இளவரசியை மணம் முடித்து தருகிறேன் என மன்னர் நிபந்தனை விதிக்கிறார். அம்பிகாபதி பாட ஆரம்பிக்கிறார். முதல் பாடல் கடவுள் வாழ்த்து. ஆனால் இளவரசி அதையும் ஒரு பாடலாக கணக்கெடுத்துக் கொள்கிறாள். 99 பாடல் முடிய இளவரசி அமராவதியோ 100 முடிந்தது என சைகை காண்பிக்கிறார். 100 அடித்த பேட்ஸ்மேன் அடுத்த பந்தை சிக்ஸருக்கு அடிக்க நினைப்பது போல அம்பிகாபதி காதல் பாடலைப் பாட, மன்னர் மரண தண்டனை விதிக்கிறார். நமக்கும் அழியாக் காதலுக்கு எடுத்துக் காட்டு சொல்ல இன்னொரு ஜோடி கிடைத்தது.

முதலில் இந்த படத்தை இயக்க ஒய் வி ராவை அணுகினார்கள். ஆனால் அவர் கேட்ட சம்பளம் அதிகம் என தயாரிப்பாளர்கள் நினைத்தார்கள். எனவே அதற்க்கு முந்தைய ஆண்டு சதிலீலாவதி (எம் ஜி யார், பாலையா அறிமுகமான படம்) படத்தை இயக்கிய எல்லிஸ் ஆர் டங்கனை இயக்க அழைத்தார்கள். படம் நல்ல வெற்றி பெற்றது. எம் கே தியாகராஜ பாகவதர் அம்பிகாபதியாகவும், எம் எஸ் சந்தான லக்‌ஷ்மி அமராவதியாகவும் நடித்தனர். இசை பாபனாசம் சிவன். இந்தப்படத்தின் வசனங்களை இளங்கோவன் எழுதினார். பின்னர் இதே படம் சிவாஜிகணேசன் அம்பிகாபதியாக நடிக்க ரீமெக் ஆனது.

பாலயோகினி

ஆரம்ப காலத்தில் புராண,பக்திப் படங்களே பெரும்பாலும் வந்து கொண்டிருந்தன. சமூக கதைகள் மிகக் குறைவே. அதிலும் சிறுவர்களுக்கான படங்கள் இல்லையென்றே சொல்லலாம். இந்த கால கட்டத்தில் மேலை நாட்டு படங்கள் இங்கே இறக்குமதியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தன. அதில் குழந்தைகளுக்கான படங்களும் அடக்கம். ஷெர்லி டெம்பிள் அப்போது அங்கு பிரபலமான குழந்தை நட்சத்திரம். சமூக கதைகளை இயக்கி புகழடைந்த கே சுப்ரமணியம் குழந்தைகளைக் கவரும் படியான பாலயோகினி படத்தை பேபி சரோஜா என்னும் குழந்தையை வைத்து இயக்கினார்.

மனைவியை இழந்த வேலை இல்லா எம் ஏ பட்டதாரி (அந்தக்காலத்தில்) மகளைப் (சரஸா) படிக்க வைக்க கடன் படுகிறார். அந்தப் பிரச்சினையில் சிறை செல்கிறார். அவரது நண்பர் சப் கலெக்டர் கள்ளத் தொடர்பின் காரணமாக தன் மகள் பேபி சரோஜவை வெறுக்கிறார். இதனால் சப் கலெக்டரின் சகோதரி ஜானகி, சரஸா, பேபி சரோஜா ஆகியோர் முனுசாமி என்னும் தாழ்த்தப்பட்டவரின் வீட்டில் அடைக்கலம் ஆகிறார்கள். முனுசாமியும் இறந்துவிட அவரின் குழந்தைகளையும் ஜானகி அண்ட் கோ வளர்க்க ஆரம்பிக்கிறது. இதனை மேல்ஜாதியினர் எதிர்க்க பேபி சரோஜா தன் பேச்சால் எல்லோர் மனதையும் மாற்றுகிறாள்.

இந்தப் படத்தில் பேபி சரோஜாவின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப் பட்டது. தமிழ்நாட்டின் ஷெர்லி டெம்பிள் என்று பாராட்டப் பட்டார். அந்தக்காலத்தில் பிறந்த பல பெண்குழந்தைகளுக்கு சரோஜா என்று பெயர் சூட்டினார்களாம். இப்போது பிட் படம் பார்த்த எந்த தந்தையும் தன் மகளுக்கு ஷகிலா என்னும் பெயர் வைக்க அனுமதிப்பதில்லை.

மின்னல் கொடி [1]

ரம்னிக்லால், மோகன்லால் ஆகியோர் இந்தக் கால கட்டத்தில் தொடர்ந்து சமூக மற்றும் கமர்சியல் சண்டைப் படங்களை தயாரித்து வந்தனர். இவர்கள் சில நட்சத்திரங்களை தொடர்ந்து தங்கள் படங்களில் பயன்படுத்தி வந்தார்கள்.

பி எஸ் சீனிவாசராவ் – கதாநாயகன்
கே டி ருக்மணி, ஆர் பி லட்சுமி தேவி – கதாநாயகிகள்
எஸ் எஸ் கொக்கோ – நகைச்சுவை / ஸ்டண்ட் நடிகர்
சுலைமான் பாஷா – வில்லன்/குணசித்திர நடிகர்

இவர்களின் ஆஸ்தான இயக்குநர் கே அமர்நாத்.

மின்னல்கொடி என்னும் புரட்சியாளன் தான் சாகும் தருவாயில் மோகினி (கே டி ருக்மணி) என்னும் பெண்ணிடம் தன் லட்சியங்களைக் கூறி விட்டு இறக்கிறான். அவள் மின்னல்கொடி போலவே மாறு வேடம் தரித்து அவன் லட்சியங்களை நிறைவேற்றுகிறாள். மோகினியின் காதலனாக பி எஸ் சீனிவாசராவ் காவல்துறை அதிகாரியாகவும், பாஷா வில்லனாகவும், கொக்கோ நாயகனின் நண்பனாகவும் நடித்த இந்தப் படம் நல்ல் வெற்றியைப் பெற்றது.

பக்கா ரவுடி [1]
கே டி ருக்மணி நாயகியாகவும், சீனிவாசராவ் நாயகனாகவும் நடித்த படம். நாயகியின் தந்தை ராபின் ஹூட் போல கொள்ளையடித்து மக்களுக்கு உதவுகிறார். நிறைய செல்வங்களை ஒரு தீவில் புதைத்து, ஒரு படத்தில் குறித்து வைக்கிறார். கொள்ளையனின் ஆசைநாயகியும், அவளது காதலனும் அதை அபகரிக்க முயற்சிக்கிறார்கள். பின் எப்படி அவர்களை நாயகனும் நாயகியும் வெற்றி கொள்கிறார்கள் என்பதே கதை. இந்தப் படம் முதலில் தஞ்சாவூர் ரவுடி என்னும் பெயரில் வெளியானது. தஞ்சை மக்களின் எதிர்ப்பின் காரணமாக பக்கா ரவுடி என நீதி மன்றத்தின் மூலம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

டேஞ்சர் சிக்னல் [1]

குதிரை, நாய் போன்றவையும் மேற்கூறிய நாயகர்களுடன் நடித்த படம் இது. ஸ்டண்ட் காட்சிகள் சிறப்பாக அமைந்த படம். கொக்கோ நகைச்சுவை காட்சிகள் மட்டுமின்றி, வீர தீர சண்டைக் காட்சிகளில் நடிப்பதிலும் புகழ்பெற்றவர். இதிலும் அவர் தன் கைவண்ணத்தை காட்டியிருந்தார். பின்னட்களில் அவர் இது போன்ற சண்டைக்காட்சியில் நடிக்கும் போது விபத்துக்குள்ளாகி இறந்தார்.

சதி அகல்யா [2]
மார்டன் தியேட்டர்ஸாரின் முதல் படம். பின்னாட்களில் அவர்கள் ஆங்கிலப் படங்களின் இன்ஸ்பிரேசனில் பல படங்கள் தயாரித்தனர். இந்தப் படம் ராமாயான அகலிகை கதையை அடிப்படையாகக் கொண்டது. இந்திரன் மேல் ஆசை கொண்டதற்க்காக அகலிகையின் கணவர் அவளை கல்லாக மாறும்படி சபிக்கிறார். பின் ராமன் கால் பட்டதும் சாப விமோசனம் பெறுகிறாள். அகலிகையின் கேரக்டரில் நடித்தவர் தவமணி தேவி. இவர் தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னி ஆவார். இந்தப் படத்திற்க்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கொடுக்கப்பட்ட தவமணியின் படங்களைப் பார்த்து அனைவரும் மெய்மறந்தனர். நீச்சல் உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்திருந்தார் தவமணி. இதுவே படத்துக்கு பெரும் விளம்பரமாக அமைந்தது. பட வெற்றிக்கு கேட்க வேண்டுமா?


இந்தக் கட்டுரைக்கான ஆதாரங்கள்

[1] பிரபல தமிழ் சினிமா ஆராய்ச்சியாளர் மற்றும் இலக்கியவாதியான திரு விட்டல் ராவ் எழுதிய “தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்” என்னும் நூல். 1930களில் தொடங்கி 1950 வரையிலான தமிழ் படங்களைப் பற்றி மிக நுட்பமாக இதில் விவரித்து எழுதியுள்ளார்.

[2] ராண்டார் கை ஒரு இணைய இதழில் எழுதிய கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது. ( சுட்டி கிடைத்தவுடன் இணைக்கிறேன்)


மேலும் சில இணைய தளங்களில் இருந்து கிடைக்கப் பெற்ற செய்திகளின் மூலமே இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. நான் இந்தப் படங்களின் சில காட்சிகளை மட்டுமே பர்த்துள்ளேன்.

March 10, 2009

1987ன் திரைப்படங்கள் – இரண்டாம் பகுதி

முதல் பகுதி இங்கே

சின்னப்பூவே மெல்லப் பேசு

காதல் படங்களுக்கு எப்பொழுதுமே மவுசு குறையாது. காதல் படங்களின் முக்கிய தேவை, காதல் உருவாவதற்க்கான அபத்தமில்லாத அழுத்தக் காட்சிகள். அதிலும் இனிமையான பாடல்களும், ஒரளவு நல்ல நகைச்சுவைக் காட்சிகளும் அமைந்து விட்டால் படம் ஓடு ஓடு என ஓடித் தீர்த்துவிடும். ராபர்ட்- ராஜசேகரன் இயக்கத்தில் மேற்கொண்ட அம்சங்களுடன் வெளியான இப்படத்தின் மூலம் திரைப்படக் கல்லூரி மாணவர் ராம்கி நாயகனாகவும், பல்லவி நாயகியாகவும் அறிமுகமானார்கள். எஸ் ஏ ராஜ்குமாரும் இப்படத்தில் தான் அறிமுகமாகி சின்னப் பூவே மெல்லப் பேசு, ஏ புள்ள கருப்பாயி போன்ற இனிமையான பாடல்களைக் கொடுத்தார்.. கை கொடுக்கும் கையில் அறிமுகமான சின்னி ஜெயந்துக்கு இந்தப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் ஐந்து,ஆறு வருடங்களுக்கு கல்லூரி மாணவராகி காதலர்களை சேர்த்தார், தமிழாசிரியர்களை கலாய்த்தார். பின்னர் விவேக் அந்த ஜோதியை எடுத்துக் கொண்டு சில ஆண்டுகள் ஓடினார். இப்போது அது சந்தானம் கையில் வந்து சேர்ந்திருக்கிறது. அடுத்து யாரோ?. இந்தப் படத்தில் பிரபுவுக்கு சப்போர்டிங் ரோல். மாணவர்கள் மாறுவார்கள், ஆசிரியர்கள் மாறுவார்கள் ஆனால் கல்லூரியும் காதலும் தொடர்ந்து அங்கேயே இருக்கும் என்ற கருத்தில் வந்து நல்ல வெற்றியைப் பெற்ற படம்.

ஆண்களை நம்பாதே

ஆனந்த விகடனில் ஸ்டெல்லா புரூஸ் எழுதிய தொடர்கதை அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் பாண்டியன் நடிப்பில் வெளியானது. இந்தத் தொடர் விகடனில் வந்த போது பலராலும் ரசிக்கப் பட்டது. ஆனால் படம்?. சென்னையில் ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும் சற்று குண்டான வைத்தியநாதன் என்பவனுக்கு தன் சக பெண் அதிகாரி மேல் காதல். அவனுக்கு காதலை சொல்ல தயக்கம். அவனது இமேஜை உயர்த்தி அதன் மூலம் காதல் வளர அவன் நண்பர்கள் முயற்சிக்கிறார்கள். முடிவு என்ன என்பதே? கதை. இந்தத் தொடருக்கு மணியம் செல்வன் அசத்தலான ஓவியங்கள் வரைந்திருந்தார். வைத்தி என்பவனின் தோற்றம் எல்லோர் மனதிலும் படிந்திருந்தது. பாண்டியன் அந்த கேரக்டருக்கு ஒட்டவேயில்லை. திரைப்படமாக்கும் போது சென்னையை ஊட்டியாக மாற்றியிருந்தார்கள். ஸ்டெல்லா புரூஸ் இயல்பான நகைச்சுவையை கதையில் கொடுத்திருந்தார். படத்தில் கதையோட்டத்திற்க்கு பொருத்தமில்லாத (செந்தில்) நகைச்சுவைக் காட்சிகள் கதையின் பீலைக் குலைத்துவிட்டன. பாடல்களும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

நன்கு காதலித்த பெண்ணை கல்யாணம் செய்தபின் அந்தக் காதலே வெறுப்பாய்த் தோன்றும். பேசாமல் நம் காதல் தோற்றிருக்கலாமே, இனிமையான நினைவுகளாவது மிஞ்சியிருக்கும் என்ற எண்ணம் தோன்றும். அது போல நல்ல கதையை படமாக எடுத்துக் கெடுக்காமல் இருந்தால் அந்தக்கதையின் உணர்வாவது மனதை சுகப்படுத்திக் கொண்டிருக்கும்.

இலங்கேஸ்வரன்

ராமாயனத்தின் இன்னொரு வடிவமான ஆனந்த ராமாயனத்தில் ராவணன் சீதைக்கு தந்தை என்றும், மகள் பாசத்தின் காரணமாகவே அவளை சிறையெடுத்து சென்றார் என்றும் கதை இருக்கும். இதை ஆர் எஸ் மனோகர் நாடகமாக நடத்திவந்தார். பின் அவரே ராஜேஷை நாயகனாக (ராவணனாக) வைத்து இந்தப் படத்தை தயாரித்தார். எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. மேலும் அப்போது ஆர் எஸ் எஸ் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் வளர்ந்து கொண்டிருந்தது. பஜ்ரங் தள், ராம சேனா போன்ற இயக்கங்கள் இங்கு இல்லை. பி ஜே பியோ இந்திராகாந்தி அனுதாப அலையில் சிக்கி இந்தியா முழுவதற்க்குமே இரண்டு எம் பிக்களை மட்டும் பெற்றிருந்தது. அப்ப்டியென்றால் தமிழ்நாட்டில்? அதனால் இந்தப் படத்திற்க்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ குரல் எழும்பி விளம்பரம் கிடைக்கவில்லை. எம் ஆர் ராதா படைத்த இன்னொரு வடிவமான கீமாயாணம் படமாக எடுக்கப்பட்டால் இப்போதுள்ள சூழ்நிலைக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும்.

அன்புள்ள அப்பா

அபியும் நானும் படத்தின் முன்னோடி என்று சொல்லலாமா? முடியாது நிறைய வித்தியாசங்கள். அபியில் தாய் இருக்கும் போதும் மகளிடம் ஏற்படும் பாசம், குழந்தைப் பருவம் முதல் காட்டப்பட்டிருக்கும். அன்புள்ள அப்பாவில் மனைவி இறந்துவிட்டதால் மகளின் மேல் காட்டும் அதீத பாசம். இள வயதில் இருந்துதான் கதை ஆரம்பிக்கும். முதல் மரியாதை, படிக்காதவன் படங்களில் மிக குண்டாக தோற்றமளித்த சிவாஜி, இப்படத்தில் உடல் இளைத்து ட்ரிம்மாக காணப்படுவார். மகள் திருமணம், பிரிவு ஆகியவற்றால் வருந்தி சிவாஜி அம்ம்ம்ம்மாமா என்று இழுத்து பேசும் வசனமே இன்றும் மிமிக்ரி கலைஞர்கள் வாய்க்கு அல்வாவாக இருந்து வருகிறது. நதியா போன்ற மகள் பிரிந்தால் சோகம் வராதா என்ன?

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

கமலின் விக்ரம் படத்தை இயக்கிக் கொண்டிருந்த ராஜசேகர் இடையில் ரஜினியின் மாவீரன் படத்தை இயக்க சென்றுவிட கமல் தன் நண்பர் சந்தான பாரதி உதவியுடன் படத்தை முடிக்க வேண்டியதாயிற்று. அந்த அன்பில் சந்தான பாரதிக்கு கொடுத்த படம் தான் இது. விக்ரமில் வில்லனாக நடித்த சத்யராஜே இதில் நாயகன். பாடல்கள் இல்லாத மிகச்சில தமிழ்படங்களில் (அந்தநாள், குருதிப்புனல்) ஒன்றாகவும் இந்தப்படம் விளங்குகிறது.

இந்தப்படத்தின் சிறப்பு காவல்துறை அதிகாரியை இயல்பாய் காட்டியது. தியாகராஜன் நடித்த காவல், ரஞ்சித் நடித்த பீஷ்மர், அமீரின் ராம், மிஷ்கினின் அஞ்சாதே ஆகிய சில படங்களில் தான் காவல்துறையை இயல்பாக சித்தரித்திருப்பார்கள். ஹீரோ காவல்துறை அதிகாரியாய் இருந்தால் சூப்பர் ஹீரோவாகவும், வில்லன் போலீஸாய் இருந்தால் கொடூரமானவனாகவும் காட்டுவதே நம் பண்பாடு.

இந்த ஆண்டு சத்யராஜுக்கு மிக மிக முக்கியமான ஆண்டு. வேதம் புதிதுவில் பாலுத்தேவர், மக்கள் என் பக்கத்தில் சாராய அதிபர் சாம்ராஜ், பூ விழி வாசலிலேவில் மண வாழ்க்கையில் தோல்வியுற்று, அனாதை ஊமைச் சிறுவனை வளர்க்கும் பாத்திரம், சின்னத்தம்பி பெரிய தம்பியில் இயல்பான கிராமத்தான், ஜல்லிக்கட்டில் கோபக்கார இளைஞன், முத்துக்கள் மூன்றில் எதிர் நாயகன் என ஒன்றுக் கொன்று வித்தியாச வேடங்கள்.

சத்யராஜ் சமீபத்திய பேட்டியொன்றில் விஜய் பூ விழி வாசலிலே பட ரீமேக்கில் நடித்தால் நன்றாக இருக்கும் என சொல்லியிருந்தார். நிச்ச்யம் விஜய்க்கு இந்த வேடம் பொருந்தாது. பல்வேறு உணர்ச்சிகளை சத்யராஜ் அனாயாசமாக இப்படத்தில் வெளிப்படுத்தியிருப்பார். விஜய்க்கு மனிதன், வேலைக்காரன் போன்ற ரஜினி படங்கள்தான் பொருத்தமாய் இருக்கும்.

காணிநிலம்

அருண் மொழி என்பவர் இயக்கத்தில் வெளியான படம். இதுதவிர இவர் ஏர்முனை என்னும் படத்தையும் இயக்கியிருந்தார். விவசாயிகளின் பிரச்சினையை பேசிய இந்தப் படம் வெற்றி பெறவில்லை.

ஆனந்த்

பிரபு, ராதா நடிப்பில் இளையராஜா இசையில் சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான படம். பணக்கார இளைஞனுடன் (பிரபு) முதலில் ஈகோ மோதல், அப்புறம் காதல், பின் தன்னை சந்தேகப் பட்டுவிட்டானே என்று காதலை தூக்கியெறிந்து விட்டு இன்னொருவனை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கும் வேடத்தில் ராதா அசத்தியிருப்பார். இந்தப்படத்திற்க்குப் பின் ராதா அழகாக ஆகிவிட்டார். ஆமாம் அதற்க்கு முன்னால் அவர் மிக அழகாக இருந்த கடைசி சில படங்களில் இதுவும் ஒன்று. படம் வெற்றி பெறாவிட்டாலும் இளைஞர்களை கவர்ந்தது.

கூட்டுப்புழுக்கள்

ரகுவரன், அமலா நடிக்க ஆர் சி சக்தி இயக்கிய படம். அமலா மங்கா என்னும் கேரக்டரில் நடித்திருந்தார். தற்கால மெகா சீரியலுக்கு கதைக்கருக்களை தரும் படங்களில் இதுவும் ஒன்று. (இன்னொன்று : அவள் ஒரு தொடர்கதை)

மனைவி ரெடி

ஆண்பாவத்தின் பெரு வெற்றிக்குப் பின் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளிவந்த படம். ரசிக்கும் படியான காட்சிகள் பல இருந்தாலும் பெரிய வெற்றி இல்லை.

பூக்கள் விடும் தூது


இளவயதிலேயெ மரணமடைந்த மோனிஷா அறிமுகமான படம். கவுண்டமணிக்கும் முக்கிய வேடம். டி ராஜேந்தர் இசையில் நல்ல பாடல்கள். இளவயது காதலை சொல்லிய படம். இதுதவிர கூலிக்காரன் படத்திற்க்கும் இந்த ஆண்டு டி ஆர் இசை அமைத்திருந்தார்.

இந்த ஆண்டில் எல்லாவகைப் படங்களும் வந்து அவற்றின் தரத்திற்க்கேற்ப வெற்றியும் பெற்றன.

March 08, 2009

சிறு நகரங்களைக் குஷிப்படுத்திய 1987 பகுதி -1

கிராமத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு ஆறு,குளம்,பொங்கல், திருவிழா என்று ஓரளவுக்கு பொழுது போய்விடும். சென்னை போன்ற நகரவாசிகளுக்கோ பல பொழுது போக்குகள். சிறு நகர ஆட்கள்தான் பாவம், சினிமாவைத் தவிர வேறு நாதியில்லாமல் இருந்தார்கள் 80களின் மத்திவரை. 1987 ஆம் ஆண்டை தமிழர்களை, குறிப்பாக சிறுநகர தமிழர்களை மிகவும் குஷிப்படுத்திய ஆண்டு எனலாம். சென்னைத் தொலைக்காட்சி மூலம் தமிழ் ஒளிபரப்பு துவங்கப்பட்ட உடன் பலரும் தொலைக்காட்சி பெட்டியை வாங்க ஆரம்பித்தனர். அதற்க்கு முன் சென்னையில் மட்டுமே தமிழ் ஒளிபரப்பு இருந்தது. அந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய விமர்சனம் சாவி பத்திரிக்கையில் வரும் போது அதைப் படித்து வயிறு எரிந்ததுண்டு. பின்னர் நிகழ்ச்சிகளைப் பார்த்து வயிறு எரிந்தது இதுக்காடா டிவி வாங்கினோம் என்று.

இந்த ஆண்டில் தான் ரிலையன்ஸ் உலக கோப்பை போட்டி இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நடைபெற்றது. 1986ல் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியும், இங்கு வந்த ஆஸ்திரேலியர்களை ஒரு நாள் தொடரில் வென்றும் எல்லோர் மனதிலும் நம்பிக்கையை வளர்த்திருந்தது இந்திய அணி. ஆண்டுத் தொடக்கத்தில் இருந்தே அதைப்பற்றிய பேச்சுகள் ஆரம்பித்திருந்தன. அரை இறுதிப் போட்டியில் நாம் தோற்றாலும் அந்த நேரடி ஒளிபரப்பு பட்டி தொட்டியெல்லாம் கிரிக்கெட்டை விதைத்து விட்டு சென்றது. இதன் பின்னர் சிறு நகரங்களின் தேசிய விளையாட்டாக மாறியது கிரிக்கெட்.

இந்த ஆண்டில் அரசியலிலும் சலசலப்புகள் தோன்றிக் கொண்டே இருந்தன. எம்ஜியார் மறைந்த இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதா, அதிமுக அமைச்சர்கள் ஆகியோரைப் பற்றி செய்திகள் புலனாய்வுப் பத்திக்கைகளில் வந்து கொண்டிருந்தன. ஜூனியர் விகடனின் வெற்றியைத் தொடர்ந்து பல புலனாய்வுப் பத்திக்கைகள் வந்த காலம் அது. ராஜீவ் காந்தி மேலிருந்த ஆரம்ப மோகம் குறைந்து பல குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருந்தன. இது போன்ற செய்திகள் படிக்க சுவராசியமாக இருக்கும். அதற்க்கு முன்னால் அரசியல் பத்திரிக்கை என்றால் அது துக்ளக் மட்டும்தான். ஆனால் ஜூவி,நக்கீரன்,தராசு ஆகியவற்றின் வருகை இளைஞர்களுக்குத் தேவையான அரசியலுடன், கவர்ச்சி, கிசுகிசுக்கள் என கலந்து கொடுக்க அந்த வகையிலும் கொஞ்சம் பொழுது போக ஆரம்பித்தது. இவற்றுக்கெல்லாம் உச்சமாக இந்த ஆண்டில் பல சுவராசியமான தமிழ் படங்கள் வெளிவந்து வாழ்க்கையை கலகலப்பாக்கின.

நாயகன்

தெருவிற்க்கு இரண்டோ மூன்றோ தொலைக்காட்சிப் பெட்டி இருந்த ஆண்டு. ஒலியும் ஒளியும் பார்த்துவிட்டு தெருமுனையில் நின்று அதைப் பற்றி விவாதிப்பது தான் வெள்ளிக்கிழமை அஜெண்டா. தீபாவளிக்கு படம் வெளியானபின் அடுத்து வந்த வெள்ளிக்கிழமையன்று முதலில் மனிதன் படப் பாடல் ஒளிபரப்பப்பட்டது. பின்னர் இப்படத்தின் நான் சிரித்தால் தீபாவளி பாடல் ஒளிபரப்பப்பட்டது. முதல் தடவை பார்க்கும் போது காதில் பாடல் நுழையவே இல்லை. நான் வேறு கமல் ரசிகனாக ஏரியாவில் பார்ம் ஆகி இருந்ததால் அன்று என்னை மக்கள் கலாய்த்து விட்டார்கள். சிரிச்சா தீபாவளி அழுதா பொங்கலாடா? என ஆரம்பித்தவுடன் அப்பீட் ஆனேன். எங்கள் ஊருக்கு எந்தப்படமும் 50 நாள் கழித்தே வரும் என்பதால் தெரு இளவட்டங்கள் திண்டுக்கல்லுக்கு சென்று படம் பார்த்து வந்து மனிதன் தான் சூப்பர் என்று செய்தியைப் பரப்பினர்.

ஆனந்த விகடன் இப்போது விழா நாட்களில் எத்தனைப் படங்கள் வந்தாலும் அடுத்த வாரத்திலேயே விமர்சனங்களை வைத்துவிடுகிறது. ஆனால் அப்போது இரண்டு வாரம் கழித்துத்தான் விமர்சனங்களை ஆரம்பிப்பார்கள். அதுவும் வாரத்துக்கு ஒன்றுதான். நாயகனுக்கு 60 மார்க் கொடுத்ததைப் பார்த்த பின்பு தான் எங்கள் ரசிகர் மன்றத்திற்க்கு மூச்சே வந்தது. அது இப்பொழுது டைம்ஸ் சிறந்த 100 வரை அலைகளை எழுப்பிக் கொண்டே இருக்கிறது. இந்த இரண்டு வாரத்தில் படமும் எல்லா சென்டர்களிலும் பிக் அப் ஆக ஆரம்பித்திருந்தது.

நாயகன் படம் பல வகைகளில் திருப்புமுனை படமாக அமைந்திருந்தது. அதற்க்கு முன் மங்கம்மா சபதம், காதல் பரிசு,பேர் சொல்லும் பிள்ளை என மொக்கைகளை வழங்கிய கமல்ஹாசன் இப்படத்திற்க்குப் பின் சாதாரண படங்களில் இருந்து தன்னை வலுக்கட்டாயமாக விலக்கிக் கொண்டார். சிங்கார வேலன், கலைஞன் என அவ்வப்போது ஏற்படும் விபத்துக்களைத் தவிர. நடிப்புக்காக கமலுக்கும், கலை இயக்கத்துக்காக தோட்டா தரணிக்கும், ஒளிப்பதிவிற்க்காக பி சி ஸ்ரீராமிற்க்கும் இப்படத்தின் மூலம் விருது கிடைத்தது இயக்குனர் மணிரத்னத்துக்கு நட்சத்திர அந்த்ஸ்து இப்படத்தின் மூலமே கிடைத்தது. இதற்கடுத்து இவர் இயக்கிய அக்னி நட்சத்திரம் படத்திற்க்கு இவர் பெயரை வைத்துத்தான் வியாபாரம் நடந்தது. பட போஸ்டர்களில் மணிரத்னம்,இளையராஜா, பி சி ஸ்ரீராம் என டெக்னீசியன்களின் பெயரும் பெரிய அளவில் இடம்பெற்றது. பாலகுமாரனின் வசனங்களும் பேசப்பட்டன.


எங்க சின்ன ராசா

பாக்யராஜ் இயக்கத்தில் கடைசியாக பெரிய வெற்றி பெற்ற படம் எனலாம். (இதற்கடுத்து வந்து வெற்றி பெற்ற இது நம்ம ஆளுவில் இயக்கம் பாலகுமாரன் என்று இருக்கும்). இதையடுத்து அவர் இயக்கியவற்றில் சுந்தரகாண்டம், ராசுகுட்டி ஆகியவை ஓடியிருந்தாலும் இந்தப் பட அளவுக்கு பெரிய வெற்றி இல்லை. இந்தப்படத்தில் ஆடிமாதம் – காண்டம் என ஒரு கிளுகிளுப்பு மேட்டரை வைத்திருந்தார். ஜோதியில ஐக்கியமாகிறது என்னும் தமிழர்களின் வாழ்வில் அழியா இடம் பெற்ற வசனம் இந்தப் படத்தில்தான் பிரபலமானது. சங்கர் கணேஷ் இசையில் பாடல்கள் கலக்கல்.

கேசட் விற்பனையில் பெரும் பணம் சம்பாதிக்க முடியும் என டி சீரிஸ் குல்ஷன் குமார் (ரூபாய் 20க்கு ஓரளவு தரமான கேசட்) காட்டியிருந்ததால் அவருக்கு இந்தி பட அதிபர்கள் பாடல் கேசட் உரிமை தராமல் டபாய்த்தனர். அதனாலென்ன நாமே படம் தயாரிப்போம் என களத்தில் இறங்கிய அவர் இந்தப் படத்தை ரீமேக் செய்தார். படமும் பாடல்களும் சூப்பர் ஹிட். (இசை அமைப்பாளர் : ஆனந்த் மிலிந்த்). இந்தப் படம் மாதுரி தீக்சித்தை அங்கே நம்பர் 1 ஆக்கியது. இந்தப் படத்தில் இடம் பெற்ற தக் தக் தர்ணே லகா பாடலுக்கு அவர் ஆடிய மூவ்மெண்டுகளின் மூலம் தக் தக் கேர்ள் என்று வட இந்திய பத்திரிக்கைகளால் அழைக்கப் பட்டார். தக் தக் பாடலின் மூலம் இளையராஜா. ஜெகதேக வீருடு அதிலோக சுந்தரி என்ற சிரஞ்சீவி,ஸ்ரீதேவி நடித்த படத்தில் இடம் பெற்ற பாடல் இது. (இந்தப்படம் காதல் தேவதை என தமிழிலும் டப்பானது). தற்போதைய சிவாஜி (தெலுங்கு) படத்தில் கூட அதிரடிக்காரன் பாடலுக்கு என் டி ஆர், சிரஞ்சீவி போல ரஜினி ஆடும் போது சிரஞ்சீவி வேடத்துக்கு இந்தப் பாடலைத்தான் பயன்படுத்தி இருந்தார்.

ஒரு தாயின் சபதம்

இந்தக் கால கட்டத்தில் தூர்தர்ஷன் ஒளியும் ஒலியுமில் பட பாடல்களை காட்ட வேண்டுமானால் ரூ 20,000 பணம் தயாரிப்பாளர் கட்ட வேண்டும் என்ற விதி இருந்தது. கஷ்டப்பட்டு படம் எடுத்து, அதை கொடுத்தால் அவர்கள் ஒளிபரப்பி விளம்பர வருவாய் பார்ப்பார்கள். அடிசனலாக இந்தப் பணம் வேறு. ஆனால் பட விளம்பரத்திற்க்காக எல்லா தயாரிப்பாளர்களும் இதற்க்கு உடன்பட்டிருந்தனர். சன் டிவி வந்த பின்னால் தான் இந்த நிலை மாறியது. டி ராஜேந்தர் தன் பாடல்களை முதல் பாடலாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தார். கிட்டத்தட்ட 10 வாரங்கள் இந்தப் படத்தின் பாடல்கள் முதல் பாடலாக ஒளிபரப்பப்பட்டு நல்ல விளம்பரம் கிடைத்தது. டீ ஆர் வக்கீல் வேடத்தில் நடித்திருந்தார். நன்கு ஓடிய படம்.

மனதில் உறுதி வேண்டும்

பெண்கள் தின சிறப்பு திரைப்படமாக ஒரு 10 ஆண்டுகள் இந்தப் படம் தொலைக்காட்சி சேனல்களில் கொலுவீற்றிருந்தது. சுஹாசினியின் தம்பியாக விவேக் இந்தப் படத்தில் தான் அறிமுகமானார். கிட்னி தானம் பற்றிய விழிப்புணர்வு, பெண் செவிலியர்களின் தியாகம் என சிறந்த கருத்துக்களைக் கொண்டிருந்த படம். எஸ் பி பி தலைமை மருத்துவராக அசத்தியிருப்பார்.

பருவராகம்

அப்பொதைய மிஸ் இந்தியா ஜூஹி சாவ்லா அறிமுகமான மியூசிகல் ஹிட் படம். அம்சலேகாவின் இசை அசத்தல். ரவிசந்திரன் (கன்னடம்) நாயகன். இவரின் தந்தை என் வீராச்சாமி தான் ரஜினி நடித்த படிக்காதவன் படத்தின் தயாரிப்பாளர். தமிழிலும் தன் மகனை நிறுத்த இப்படத்தை தயாரித்திருந்தார்.

ரெட்டை வால் குருவி

பாலு மகேந்திராவின் பேவரைட்டான இரண்டு பொண்டாட்டி கதைக் கரு. சாஃப்ட்வேர் எஞ்சினியர் என்ற வார்த்தை ஒலித்த முதல் தமிழ் படம். இளையராஜா இசையில் கே ஜே ஜேசுதாஸ் பாடிய ராஜ ராஜ சோழன் நான் பாடல் 30ஐ கடந்தவர்களின் ஐபாடில் டீபால்ட்.

எங்க ஊரு பாட்டுக்காரன்

ராமராஜனுக்கு ”டவுசர்” என்ற பெயரை வாங்கித் தந்த கங்கை அமரனின் படம். இந்தப் படத்தின் பல காட்சிகளில் அவர் அணிந்து வந்த கோடு போட்ட டவுசரே அவரது அடையாளங்களில் ஒன்றாகிப் போனது. ஆஷா போன்ஸ்லே பாடிய செண்பகமே செண்பகமே அப்போதைய ஆர்கெஸ்ட்ராக்களில் தவறாத ஒன்று.

தீர்த்தக் கரையினிலே

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நம்பர் 1 நாயகியாக திகழ்ந்த ரூபிணி அறிமுகமான படம். மோகன், சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரங்கள். இளையராஜாவின் இசையில் அருமையான பாடல்கள், ஓரளவு கதை என தப்பித்த படம்.

சங்கர் குரு

இளையராஜாவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் சந்திர போஸை ஆதரித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த வெற்றிப்படம். அர்ஜூனுக்கு நல்ல அந்தஸ்தைக் கொடுத்த படம். இப்பட இயக்குனர் ராஜா முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

சத்யராஜ்

1986ல் கதாநாயகனாக அரிதாரம் பூசத் தொடங்கிய சத்யராஜ் தன் காலை அழுத்தி ஊண்டியது இந்த ஆண்டில்தான். கடமை கண்ணியம் கட்டுப்பாடு, பூ விழி வாசலிலே, வேதம் புதிது, சின்ன தம்பி பெரியதம்பி, மக்கள் என் பக்கம், ஜல்லிக்கட்டு, முத்துக்கள் மூன்று, ஆளப்பிறந்தவன் என சத்யராஜின் நடிப்புக்கு சான்றாக சொல்லப்படும் படங்கள் எல்லாம் இந்த ஆண்டில் தான் வெளிவந்தன.

ரஜினிகாந்த்

மனிதன், ஊர்க்காவலன், வேலைக்காரன் என குடும்பத்தோடு போய் பார்க்கும் படியான இன்றும் ரீ ரிலிஸ் வேல்யு உள்ள ரஜினியின் படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்தன.

விஜயகாந்த்

உழவன் மகன், உள்ளம் கவர் கள்வன், வீரபாண்டியன், பூ மழை பொழியுது, நீதிக்கு தண்டனை, நினைவே ஒரு சங்கீதம், கூலிக்காரன், சிறைப் பறவை என கலவையான படங்கள்.

(தொடரும்)