July 06, 2009

நண்பன் சார்லி

ஒரு வீடு இரு வாசல் என்னும் படத்தில் சார்லிக்கு துணை நடிகர் வேடம். அவர் நடிக்க வந்திருக்கும் காட்சி ஒரு துக்க வீட்டுக் காட்சி. இறந்தவர் கிடத்தப்பட்டிருக்க சுற்றி நின்று அழ வேண்டும்.

இயக்குநர் அழுங்கள் என்று சொல்லிவிடுவார்.

சார்லி உடனே கேட்பார்.

சார், இறந்தவர் எந்த மொழிக்காரரு?, நாங்கள்ளாம் அவருக்கு என்ன உறவு முறை வேணும்?, இறந்தவன் நல்லவனா? கெட்டவனா? இதெல்லாம் தெரிஞ்சாத்தானே நாங்க கரெக்டா பீல் பண்ணி அழ முடியும்?

கேமராவ டாப் ஆங்கிள்ல வச்சாத்தானே எங்க பீலிங்லாம் ஆடியண்சுக்கு கன்வே ஆகும்?

எனக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு துளைப்பார்.

உண்மையிலேயே சார்லி தான் நடிக்க வந்த இந்த 26 வருடங்களில் நடித்த 550க்கும் அதிகமான படங்களில் சில படங்களைத்தவிர பெரும்பாலான படங்களில் இதே மாதிரிதான் இயக்குநர்களிடம் கதறியிருப்பார் என நினைக்கிறேன். அந்த அளவுக்கு எந்த விதமான கேரக்டரைசேஷனும் இல்லாமல் நாயகனின் நண்பன், நாயகனின் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவர் , நாயகனின் உருப்படாத அண்ணன், மச்சினன் என பொதுப்படையான கேரக்டர்களைக் கொடுத்தே அவரை நோகடித்தது தமிழ்த்திரையுலகம்.

இதனால்தான் 40 வயதிலும் கல்லூரி மாணவனாக நடிக்க வேண்டிய கட்டாயம் சார்லிக்கு ஏற்பட்டது. 40 வயதுக்குமேற்பட்ட நாயகன் திருமணம் ஆகாதவனாக நடிக்கும் போது, அவனை இளமையாகக் காட்ட அவனை விட வயது கூடியவர்களை துணைக்கு வைக்க வேண்டிய கட்டாயம். ரஜினியின் படையப்பாவில் அவரை வயது குறைந்தவராகக் காட்ட நண்பர் குழாமில் நாலைந்து பெரியப்பாக்களை இறக்கி விட்டிருப்பார்கள்.
அதுபோல கார்த்திக்,முரளி,சரத்குமார்களின் இளமைக்காக இவர் நண்பனாகவே நடிக்க வேண்டி வந்தது.

சார்லி நடிக்க வந்ததே ஒரு விபத்துதான். தகவல் ஒலிபரப்புத் துறையின் நாடகப் பிரிவில் நடிகராக பணியாற்றிக் கொண்டிருந்த சார்லி, ரஷ்யன் கல்சுரல் சென்டரின் நூலகத்தில் உறுப்பினர். தான் எடுத்துப் படித்த புத்தகத்தை திரும்பக் கொடுக்கச் சென்ற சார்லி, அங்கு நடந்து கொண்டிருந்த ஹுயுமர் கிளப்பின் கூட்டத்தை வேடிக்கை பார்த்தார். இங்கே தன் திறமையையும் காண்பிக்கலாமே என் நினைத்து அமைப்பாளர்களை அணுகிணார். வாய்ப்பு கிடைத்தது. அவர் செய்த மோனோ ஆக்டிங்கையும் மிமிக்ரியையும் அங்கே பார்த்த கலாகேந்திரா கோவிந்தராஜன் பாலசந்தரிடம் சிபாரிசு செய்ய பொய்க்கால்
குதிரை பட வாய்ப்பு சார்லிக்கு கிடைத்தது. அதன்பின் பாலசந்தர்,பாசில்,விக்ரமன் ஆகியோரது படங்களில் தொடர்ந்து வாய்ப்புக் கிடைக்கப் பெற்றார்.

சத்யராஜ் அடிக்கடி சொல்லுவார், ”நமது திறமை என்ன என்பதை மற்றவர்களுக்கு காட்டும் வரையில் தான் தமிழ் சினிமாவில் கஷ்டப்படவேண்டும். ஒருமுறை நமது திறமை வெளியே தெரிந்துவிட்டால் பின் நமக்கேற்ற கேரக்டர்களை அவர்களே உருவாக்கித் தந்துவிடுவார்கள்” என்று.

ஆனால் இது சார்லி விஷயத்தில் மட்டும் பொய்த்துப் போனது. தன்னால் என்னவெல்லாம் முடியும் என்று முடிந்தவரை அவரும் திறமையைக் காட்டிப்பார்த்தார். ஆனால் அவருக்காக என்றுமே கேரக்டர்களை தமிழ்சினிமா உருவாக்கவில்லை. அவரை ஒரு ஆயத்த ஆடையாகவே தமிழ்சினிமா இன்றுவரை உபயோகித்து வருகிறது. அறிமுகமோ, முடிவோ தேவையில்லாத நண்பன் வேடமா, வயது 30 சமீபமா?
சார்லியை போட்டுக்கிருவமா? சரியா இருப்பாருல்ல? அவர் நம்பர் என்னா? இதுதான் பெரும்பாலும் நடந்து வந்திருக்கிறது.

புதுப் புது அர்த்தங்களில் தோண்டித் துருவும் நிருபன் வேடம். கேள்வியைக் கேட்கும் விதம், பதிலில் இருந்து இன்னொரு கேள்வியைக் கேட்கும் விதம், வேடத்துக்குப் பொருத்தமாக நாலு நாள் தாடி, சோடா புட்டிக் கண்ணாடி என இரண்டு சீனில் வரும் கேரக்டருக்கு அவ்வளவு மெனக்கெட்டிருப்பார்.

வண்ணக் கனவுகள் வேடம்,ஜெயபாரதி இயக்கி சந்திரசேகருக்கு துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த நண்பா நண்பா திரைப்படத்தில் படுக்கையில் இருக்கும் நண்பனுக்க ஆறுதல் காட்டுபவன், வெற்றிக் கொடி கட்டில் துபாய் செல்ல பணம் கட்டி ஏமாந்த கிராமத்தான்,என்னவளே திரைப்படத்தில் தன் உடல் ஊனத்தை மறைத்து நடிக்கும் இசைக் கலைஞன்,ஜெமினியில் பாலியல் தொழில் ஏற்பாட்டாளான், அமர்க்களத்தில் குருடன்,
கோபாலா கோபாலா செட்டியார் என அவ்வப்போது வித்தியாச வேடங்களில் தன் திறமையை நிரூபித்து வந்தாலும் நாயகனின் நண்பன் கூட்டம் என்னும் வட்டத்தை தாண்டுவது அவருக்கு பெரும்பாடாகவே இருக்கிறது. அன்னியன் போன்ற திரைப்படங்களில் அவருக்கு வேறு வகை வேடம் கொடுத்தலும் அரை ரீலுக்கு மேல் அவர் வராமல் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள்.

சார்லி, தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் நகைச்சுவை நடிகர்களின் பங்கு : 1937 முதல் 1967 வரை என்ற தலைப்பில் எம் பில் ஆய்வு செய்துள்ளார். வருங்காலத்தில் அவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளாமல் இருக்கும் வரையில் அவருக்கு ஏற்ற வேடங்களை தமிழ்சினிமா கொடுக்கட்டும்.

புதுவசந்தம் திரைப்படத்தில் அவர் பேசும் பிரபல வசனம்

“எனக்கு நிலாச் சோறு சாப்பிடமும்னு ஆசை. வாழ்க்கை பூராம் நிலா இருந்துச்சு, ஆனா சோறுதான் இல்லை”

அதுபோல நல்ல ரோல்ல நடிக்க ஆசை. நடிப்பு மட்டும்தான் இருந்துச்சு, ஆனா வாய்ப்புதான் கிடைக்கலை என்று மாற்றி அவர் புலம்பிவிடாமல் இருக்க தமிழ்சினிமா ஏதாவது செய்யட்டும்.

July 03, 2009

டெல்லி கணேஷின் வித்தியாச வேடங்கள்

93ஆம் ஆண்டு, தனியார் தொலைக்காட்சிகள் தமிழ் வானில் தடம் பதித்திராத நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர்வாசிகளுக்கு பொழுதுபோக்குக்கு துணையாய் விளங்கியது தூர்தர்ஷனின் டிடி 2 மெட்ரோ அலைவரிசையே. அதில் ஒரு மணி நேரம் நல்ல சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அதில் புகழ் பெற்றவர்தான் மெட்ரோ பிரியா. இவர்தான் தமிழ் சின்னத்திரையின் முதல் நட்சத்திர தொகுப்பாளினி. நடிகர் ராதாரவி அவர்களும் ஒரு 13 வார ஸ்லாட் வாங்கி வாராந்திர நிகழ்ச்சி ஒன்றை அளித்தார். அதில் கதாநாயக, நாயகியர் தவிர்த்த திரைஉலக புள்ளிகளின் பேட்டியை ஒளிபரப்பினார். இதன் விசேஷம் பேட்டி அந்த பிரபலங்களின் வீட்டில்தான். கலைப்புலி தாணு, டிஸ்கோ சாந்தி ஆகியோரது பேட்டிகள் மிக சுவராசியமாய் அமைந்திருந்தன. டிஸ்கோ சாந்தி தன் வீட்டு வேலைகளை செய்த படியே கொடுத்த பேட்டி மிகப் பிரபலம்.

அதில் ஒருவாரத்தில் இடம் பெற்றது, டெல்லி கணேஷின் பேட்டி. அவர் வீட்டில் காய்கறி நறுக்கிக் கொண்டே பேட்டியளித்தார், அவரது திரை இமேஜுக்கு ஏற்றபடியே.


பாலசந்தர் மற்றும் அவர் சிஷ்யர் விசு ஆகியோரது படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றவர்.

டெல்லி கணேஷ் என்றாலே நமக்கு தோன்றும் பிம்பம் ஒரு மிடில் கிளாஸ் சாதுவின் பிம்பம். அவர் நடித்த பெரும்பாலான படங்களில் ஸ்டீரியோ டைப்பாக இந்த வேடத்தைக் கொடுத்து மக்கள் மனதில் அப்படி பதியவைத்து விட்டார்கள். நாடக பின்புலம் கொண்ட டெல்லி கணேஷால் எந்த வேடத்தையும் சிறப்பாக செய்ய முடியுமென நம்பி வித்தியாச வேடங்களை அவருக்கு கொடுத்த சிலரில் கமல்ஹாசனும் ஒருவர்.

அருமையான காமெடி டைமிங் உடைய டெல்லிகணேஷுக்கு தமிழ் சினிமா கொடுத்த ட்ரேட்மார்க் வேடங்களை முதலில் பார்ப்போம்.


சமையல்காரர் வேடங்கள்

இந்த வேடம் இவருக்கு அல்வா போல. புன்னகை மன்னன் படத்தில் கமலின் தந்தை. ஆனால் வேலைக்குச் செல்லும் இடங்களிலெல்லாம் வேலையைக் காட்டி சித்திகளை அதிகப்படுத்துவார். மைக்கேல் மதன காமராஜனில் பாலக்காட்டு சமையல் காரராக அசத்தியிருப்பார். ஆஹா படத்திலும் நிஜ சமையல்காரராகவே மாறியிருப்பார்.

குருக்கள் வேடம்

இந்த வேடமும் இவருக்கு பொருத்தமாக அமையும் ஒன்று. ராகவேந்திரர் படத்தில் இயல்பாக நடித்திருப்பார். அரசு படத்தில் வரும் வேணு சாஸ்திரிகள் வேடமும் இவரைத் தவிர யாருக்கும் பொருந்தாது.

கணக்குப் பிள்ளை/ நியாயமான பிஏ

இதுவும் இவரது கோட்டை. நாயகனில் இந்தி மொழிபெயர்ப்பாளராக கமலிடம் சேர்ந்து அவருடனே காலம் கழிப்பவர். கமலைக் காட்டிக் கொடுக்காமல் போலிஸிடம் அடி வாங்கி விட்டு, எவ்வளவோ அடிச்சாங்க நாயக்கரே, ஆனா நான் சொல்லலை என குழறியபடி இவர் பேசும் வசனம் அபாரம்.

நடுத்தர குடும்ப அப்பா

இதுதான் அவரது ஆஸ்தான வேடம். எண்ணற்ற படங்களில் இந்த கேரக்டரில் நடித்திருந்தாலும், எதிரி படத்தில், தன் மகளை யாரும் காதலித்து விடக்கூடாது என்ற நடுத்தர வர்க்க மனபாவத்தை அருமையாக திரையில் கொண்டு வந்திருப்பார்.மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் இவருக்கு அமைந்த அப்பா வேடமும் நல்ல ஒன்று.


இவற்றில் இருந்து விலகி அவர் ஏற்று நடித்த சில வித்தியாச வேடங்கள்

சிதம்பர ரகசியம்

இதில் வில்லன் வேடம். ஒரே நாள் இரவில் ஒரு கொலை, கற்பழிப்பு, சிலை திருட்டு ஆகியவை நடை பெறுகின்றன. இந்த மூன்றிலும் சம்பந்தப்பட்டவர் என ஒரு அப்பாவியை (எஸ் வி சேகர்)போலிஸ் கைது செய்கிறது. அதை துப்பு துலக்க வருகிறார் விசு. அவருக்கு துணையாக இருக்கிறார் அருண்பாண்டியன். இவர் டெல்லி கணேசின் மகன். விசு போடும் திட்டங்களையெல்லாம் முறியடிக்கிறார் டெல்லி. இறுதியில் மாட்டிக் கொள்கிறார்.

அபூர்வ சகோதரர்கள்

இதிலும் வில்லன் வேடம். நேர்மையான போலிஸ் அதிகாரியைக் கொன்று, பின் அவரது மகனால் பழி வாங்கப்படும் வேடம். முதல் பலி இவர்தான். சத்யா திரைப்படத்திலும் வில்லனுக்கு துணை போகும் அரசாங்க வக்கீல் வேடம்.

பட்டத்து ராணி

கவுண்டமணியின் குடியிருப்பில் யாரும் அவருக்கு வாடகை தருவதில்லை. செந்தில் கொடுக்கும் ஐடியாவின் படி வயதான விஜயகுமாரைத் திருமணம் செய்திருக்கும் கௌதமி தம்பதியனரை குடிவைக்கிறார். முதல் தேதிக்கு முன்னதாகவே அலறியடித்து அனைத்து ஆண்களும் வாடகை தருகிறார்கள், இமேஜ் பில்டப் செய்ய. கவுண்டரும் விதிவிலக்கல்ல. டெல்லியும் இந்த லிஸ்டில் அடக்கம். கௌதமிக்காக உருகுவதையும், காதல் வசனம் பேசுவதையும் சிறப்பாக செய்திருப்பார். ஜனகராஜ்,கவுண்டமணி, இயக்குநர் மணிவாசகம் ஆகியோர் கௌதமியைக் கவிழ்க்க கொடைக்கானல் டூர் போவதும், அங்கே
மனைவிகளிடம் சிக்கிக் கொள்வதும் நான் ஸ்டாப் காமெடி.

அவ்வை சண்முகி

சபல புத்தியுடைய பி ஏ. இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆனபோது இந்த கேரக்டரை செய்தவர் ஓம்பூரி என்ற ஒன்றே போதும், இந்தக் கேரக்டரின் அருமை தெரிய. அனாயாசமாக செய்திருப்பார். ஒரு காதில் பூவும், கையில் செல்போனுமாக அவர் செய்யும் சேட்டைகள் அழகு.

டௌரி கல்யாணம்

ஏழ்மையின் காரணமாக, ஏதாவது திருமண மண்டபத்துக்கு சென்று, ஏதாவது உறவு முறை சொல்லி புகுந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து ஒரு வேளை சாப்பிடும் பாத்திரம். இந்த கௌரியின் திருமணத்திலும் மாடாக உழைக்கிறார். ஆனால் டௌரி பிரச்சினையால் பெண் வீட்டார் பிரச்சினையில் இருக்கும் போது குட்டு வெளிப்பட அந்த ஒரு வேளையும் சாப்பிடாமல் வெளியேறுகிறார். முடிவில் திருமணம் சுபமாக முடிகிறது. இவர் நிலை தான் கண்ணீரில்.

தெனாலி

மனநோய்க்கு மருத்துவம் பார்க்கும் வைத்தியர் பஞ்சபூதம் வேடம். தன் சக மருத்துவர் ஜெயராமுக்கு கிடைக்கும் புகழைப் பார்த்து கொதிப்படைந்து அவரை கவிழ்க்க சிக்கலான நோயாளியான தெனாலியை அங்கே அனுப்பும் வேடம். படாத் பாடு பட்டு கோர்த்து விடுகிறார். எதிர்பார்த்தது நடந்ததா?


அழகான நாட்கள்


மிக அரிதாகக் கிடைத்த பணக்கார அப்பா வேடம். மகளாக மும்தாஜ். கேட்ட போதெல்லாம்
மணிவண்ணனுக்கு பணம் கொடுத்து விட்டு அவர் மகன் கார்த்திக் தன் மகளை திருமணம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார். மிரட்டுகிறார். முடிவில் விட்டுக் கொடுக்கிறார்.

சிந்து பைரவி

குடிப்பழக்கம் உடைய மிருதங்க வித்வான் வேடம். கச்சேரிக்கும் குடித்து விட்டு வந்து ஜாதிக்காயை வைத்து சமாளிக்கும் வேடம். வித்வான் கோபப் பட்டு வெளியேற்றிவிட, வித்வான் வீட்டு முன்னால் உட்கார்ந்து அவர் அனுமதிக்கும் வரை மிருதங்கம் வாசிக்கும் காட்சியில் பின்னியிருப்பார்.


மூன்று முகம்


ரஜினி டி எஸ் பி. இவர் எஸ் ஐ. ரஜினிக்கு துணையாக நேர்மையான போலிஸ் வேடம்.

தமிழன்

விஜயின் சீனியர் வக்கீல் வேடம்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா

தன் மகன் பிறந்ததில் இருந்து ஆன செலவை கணக்கு வைத்து கேட்கும் தந்தை வேடம்.

தற்போது பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். வருங்கால இயக்குநர்களாவது ஸ்டீரியோ டைப் வேடங்களை இவருக்கு கொடுக்காமல் வித்தியாசமான வேடங்களைக் கொடுத்தால் நன்றாயிருக்கும்.

July 01, 2009

நீங்க எங்கேயோ போயீட்டீங்க சார் - ஜனகராஜ் - பகுதி 2

80களில் தமிழ்சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த காமெடி நடிகர்களை அவர்கள் நடித்த படங்களின்
வழியாக இப்படியும் பிரிக்கலாம்.

கவுண்டமணி

ஆர் சுந்தர்ராஜன், ரங்கராஜன், பாலு ஆனந்த்,ராமராஜன் போன்று பெரிய நடிகர்களை நம்பாமல் ஓரளவு கதை
மற்றும் இளையராஜாவின் இசையை நம்பி படம் எடுத்தவர்கள். இவர்களது படங்களின் மூன்றாவது
தூணாக கவுண்டமணியின் நகைச்சுவை டிராக் இருந்து வந்தது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு பின்னரே
இவர் கதாநாயகனின் நண்பன் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.


எஸ் எஸ் சந்திரன்


திராவிட முன்னேற்ற கழகத்தின் அறிவிக்கப்படாத திரையுல கொ ப செ வாக அக்காலத்தில் இருந்தவர்.
அதனால் திமுக சார்புள்ள இயக்குநர்கள், நடிகர்களின் படங்களில் தவறாமல் இடம்பிடித்து வந்தார்.
ராம நாராயணன் மற்றும் அவர் இணை,துணை இயக்குநர்களின் படங்களிலும், டி ராஜேந்தர்,
கலைப்புலி தாணு,விஜயகாந்த் ஆகியோரின் படங்களிலும் தொடர்ந்து இடம் பெற்று வந்தார்.

ஜனகராஜ்

ஜினி,கமல் ஆகிய முண்ணனி நடிகர்கள், முண்ணனி இயக்குநர்களின் தேர்வாக இருந்தவர் ஜனகராஜ்தான்.
கவுண்டமணி 89க்குப் பின் பெரிய நடிகர்களின் படங்களில் இடம்பிடித்ததும் ஜனகராஜின் இடம் ஆட்டம்
கண்டது. ஆனாலும் ரஜினிகாந்த் அவரை விட்டுக்கொடுக்கவில்லை. அதனால்தான் 80களிலும் பின் 90
களின் மத்தி வரையிலும் வந்த பல பிளாக் பஸ்டர்களில் ஜனகராஜ் இடம்பிடித்திருந்தார்.

இந்தப் பகுதியில் ஜனகராஜ் இடம்பெற்றிருந்த சில பிளாக் பஸ்டர்களைப் பார்ப்போம்.

நாயகன்

ஒரு காட்பாதர் உருவாவதில் இருந்து அவரின் இறப்புவரை உடனிருக்கும் பாத்திரம். கமலுக்கு கெட்டப்
மாற்றுவது போலவே ஜனகராஜுக்கும் கெட்டப், பாடி லாங்குவேஜ் எல்லாம் மாற்றி மெனக்கெட்டுருப்பார்கள்.
ஒரு பிரச்சினையில் கமலின் மகள் கன்னத்தில் அறைந்ததும் நீயா அடித்தாய் என்பது போல ஒரு
கேள்வியுடன் தன் இயலாமையையும், குற்ற உணர்ச்சியையும் சேர்த்து ஒரே ரியாக்‌ஷனாக காட்டியிருப்பார்.

அபூர்வ சகோதரர்கள்

இடைவேளைக்குப் பின்னால்தான் படத்தில் எண்ட்ரி. இப்போது படத்தைப் பார்த்தால் இடைவேளைக்குப்
பின்னால் உள்ள சுவராசியமே ஜனகராஜ்தான். இவரும் ஆர் எஸ் சிவாஜியும் சேர்ந்து அடிக்கும் லூட்டி
மறக்க முடியாதது. ஆர் எஸ் சிவாஜி சொல்லும் நீங்க எங்கியோ போயிட்டீங்க சார் இருபதாண்டு
கழித்தும் எங்கேயாவது யாராலாவது உச்சரிக்கப் பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. வெற்றி விழா, விக்ரம்
ஆகிய படங்களிலும் பெயர்சொல்லும் படியான வேடமே. குணாவில் அபிராமியைப் பற்றி ஏற்றி
விடுவதே ஜனகராஜ்தான்.

அண்ணாமலை

ரஜினியின் ஒன்றுவிட்ட அண்ணன் பாத்திரம். அரைகுறை ஆங்கில டீகடை ஓணர். ஒரு காட்சியில்
வெளிநாட்டுக்காரர் ஒருவரிடம் “நவ் ஐயாம் கோயிங் டு எக்ஸ்பிளைன் வாட் ஆர் த ஐட்டம்ஸ் வீ ஆர்
ஹேவின் இன் அவர் .....” எனத் தொடங்கி ஒரு சொற்பொழிவே ஆற்றி முடிக்க, வெளிநாட்டுக் காரரோ
ஒரு மசால் வடை என தூய தமிழில் ஆர்டர் கொடுக்க, ஜனகராஜ் கொடுக்கும் ரியாக்‌ஷன் இருக்கிறதே?

பாட்ஷா

தாதா ரஜினியின் முக்கிய கை வேடம்.படத்தி ஆரம்ப காட்சிகளில் மட்டும் நகைச்சுவையை காட்டி விட்டு
பின்னர் சீரியஸ் ஆக மாறும் பாத்திரம். இதுதவிர வீரா,அருணாசலத்திலும் ஜனகராஜின் பங்கு உண்டு.

ராஜாதிராஜா

ரஜினியின் தோழன். பணக்கார ரஜினிக்கு மாற்றாக நடிக்கப் போனாலும் தன் சென்னைத் தமிழை மறக்க
முடியாமல் சிக்கலில் மாட்டும் வேடம். சைனா டீ மசால் வடையை மறக்க முடியுமா?. இதே
ஆண்டு வெளிவந்த சிவாவிலும் ஜனகராஜ்தான் காமெடி. ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கிடைத்தபின்
அவரது படங்களில் மற்றவர்களுக்கு தனிப்பாடல் வைப்பது இல்லை.

நல்லவனுக்கு நல்லவனில் கார்த்திக், இணை வேடத்தில் நடித்ததால் சில படங்களில் பிரபுவுக்கு,
தயாரிப்பாளர் மட்டும் இணை நடிகர் என்பதால் ரவிசந்திரன் (கன்னடம்) ஆகியோருக்கு மட்டும் ரஜினி
படங்களில் தனிப்பாடல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சிவாவில் ஜனகராஜுக்கு டிஸ்கோ சாந்தியுடன்
ஒரு டூயட்டே கொடுத்தார்கள் என்றால் அண்றைய நிலையில் ஜனகராஜின் மார்க்கெட்டை நாம்
கணக்கிட்டுக் கொள்ளலாம்.

வருஷம் 16

ஒரு பெரிய குடும்பம். ஈகோ பிரச்சினைகளால் சிதறுண்டு போகிறது. அதைக் கட்டி காக்கத் துடிக்கும்
நாயகனுக்கு உதவியாய் வேலைக்காரர் ஜனகராஜ். வி கே ராமசாமியுடன் சேர்ந்து அடிக்கும் கூத்தாகட்டும், உணர்ச்சிகர
காட்சிகளில் வெளிப்படுத்தும் பாவனைகளாகட்டும் கிளாஸ்.

சிந்து பைரவி

கர்நாடக இசை வித்வானுக்கு பக்க வாத்தியம். ஆனால் மெயின் வேலை பொய் சொல்வது. ஒரு கட்டத்தில்
பொய் சொல்ல மாட்டேன் என சத்தியம் செய்கிறார். அதனால் உண்மையையும் மறைக்கக்கூடாது. விதி
துரத்துகிறது. சொல்லும் உண்மை திருப்பு முனையாகிறது. பக்க வாத்தியக்காரரின் பாவங்கள் பாடகரையே
தூக்கிச் சாப்பிட்டுவிட்டன இந்தப் படத்தில்.

படிக்காதவன்

துப்புரவுத் தொழிலாளி கபாலி கள்ளக்கடத்தல் செய்து கே பாலி யாக மாறுகிறார். நண்பனான கார் ட்ரைவர்
ரஜினிக்கு டிப்பு கொடுக்கிறார். பின்னர் பேக் டு பெவிலியன். இப்படத்தில் ஜனகராஜ் பேசும் என்
தங்கச்சிய நாய் கடிச்சிடுப்பா வசனம் மிமிக்ரி ஆட்களின் பேவரைட். பணக்காரன் திரைப்படத்திலும்
ரஜினிக்கு நண்பன் வேடம்.

முதல் மரியாதை

இங்கும் கயிறு திரிக்கும் வேடம். மனைவியை யாரும் சீண்டாமல் பாதுகாக்கும் வெள்ளந்தித்தனம் வேறு.
சொல்லியா கொடுக்க வேண்டும் ஜனகராஜுக்கு?. அடுத்து வந்த பாரதிராஜாவின் கடலோரக் கவிதைகளில்
நாயகியின் அப்பா வேடம். எங்கே சம்பாதிக்கும் தன் மகளை ரவுடி திருமணம் செய்து கொள்வானோ என
அஞ்சுவதும் அதற்க்கு இறைஞ்சும் காட்சியிலும் சொல்லும் படி நடித்திருப்பார்.

ஆண்பாவம்

அண்ணனைக் கண்டு பொறாமைப்பட்டு தொழில் தொடங்கும் தம்பி. செய்யும் தொழிலெல்லாம்
ஊற்றிக் கொள்ள அல்லல்படுகிறார். பந்த் அன்று கடை திறப்பதும் அதைத் தொடரும் நகைச்சுவைக்
காட்சிகளும் பாதாம் அல்வா.


நான் புடிச்ச மாப்பிள்ளை


முதல் படம் ஓடாத வி.சேகருக்கு கை கொடுத்த படம். பின்னர் இம்மாதிரி படங்களே அவர் அடையாளம்
ஆகியது. தரகரின் நேர்மைக்காகவே அவர் மகளை மணமுடிக்கிறார் பண்னையார். முறைப் பெண்
வைத்திருக்கும் அக்கா வீட்டுக்காரர் முறைக்கிறார். தரகரின் மகள் இறந்துவிட குழப்பம். ஆனால் இவரின்
அருமையை உணர்ந்த முறைப்பெண் இவரையே தந்தையாக தத்தெடுக்கிறார். இந்தப் படத்தின்
கதாநாயகன் தரகர் வேடத்தில் நடித்த ஜனகராஜே.

வாய்க்கொழுப்பு

இளைய சகலைகள் இருவர் மூதத சகலையால் சொல்லொண்ணா துன்பம் அடைகிறார்கள். அவனை கொலை
செய்துவிட வேண்டும் என வாய்க்கொழுப்பாக பேச, அவர் உணமையிலேயே கொல்லப் படுகிறார்.
இளைய சகலைகளான ஜனகராஜும், பாண்டியராஜனும் பதறி ஓடுகிறார்கள் வாழக்கையின் எல்லைக்கே.
நான் ஸ்டாப் காமெடி படம்.

மற்றவை நிறைவுப் பகுதியில்