February 20, 2012

அக்கிரிடிடேசன் – பகுதி 2 [வாஷிங்டன் அக்கார்ட்]

முதல் பகுதியை வாசிக்க

சென்ற பகுதியில் பொறியியல் கல்லூரிகளுக்கான அக்கிரிடிடேசன் பற்றிப் பார்த்தோம். அதில் பாடப்பிரிவுகளுக்குத்தான் [டிபார்ட்மெண்ட்] தர நிர்ணயம், கல்லூரிக்கு அல்ல என்பதைப் பார்த்தோம்.

ஒரு டிபார்ட்மெண்டில் இருந்து குறைந்தது இரண்டு பேட்ச் வெளியில் சென்றிருந்தால்தான் தர நிர்ணயக் கமிட்டிக்கு அப்ளை செய்யமுடியும்.

தரநிர்ணயம் என்பது தன்னார்வத்தில் [வாலண்டரி] செய்யக்கூடியது. கட்டாயமில்லை. பொறியியியல் கல்லூரிகளுக்கு ஏ ஐ சி டி ஈயின் அனுமதிதான் கட்டாயம்.

அந்த அப்ரூவலானது, கல்லூரியில் குறைந்த பட்ச கட்டுமானம் இருக்கிறதா, நடத்த பணம் இருக்கிறதா? தகுதியான ஆசிரியர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை பரிசோதித்து கொடுக்கப்படுவது. ஆனால் என் பி ஏ தர நிர்ணயமானது, படித்து முடித்து வெளியேறும் மாணவரிடத்தில் தரம் இருக்கிறதா என்று பரிசோதித்து அளிக்கப்படுவது.

எனவே தர நிர்ணயத்துக்கு அப்ளை செய்யும் கல்லூரிகள் இரண்டு பகுதிகளாக ரிப்போர்ட் தயார் செய்ய வேண்டும்.

முதல் பகுதியில் கல்லூரியின் அடிப்படை கட்டுமானங்கள், ஆசிரியர் தகுதி, எண்ணிக்கை, அவர்களில் சம்பள பட்டியல், ஆடிட்டோரியம், பிளேஸ்மெண்ட் செல், விடுதி வசதி, உடற்பயிற்சி வசதி, மினரல் வாட்டர், வங்கி, தபால் அலுவலக வசதி (கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயேயிருந்தால்) போன்றவற்றைச் சொல்லவேண்டும்.

பகுதி 2ல் தரநிர்ணயம் கோரும் துறையின் ஆசிரியர் தகுதி, அவர்களின் சாதனைகள், ஆசிரியர் மாணவர் விகிதம், ஆய்வுச்சாலை வசதிகள், நடத்தப்பட்ட சிறப்பு சொற்பொழிவுகள், தேர்ச்சி விகிதம் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.

இந்த தகவல்களை ஆராயும் என் பி ஏ அலுவலகம், திருப்தியடைந்தால் ஆய்வுக்கு வரும் தேதியை கல்லூரிக்குத் தெரியப்படுத்தும்.

இதற்கான குழுவிற்கு ஒரு சேர்மன் இருப்பார். எந்த டிபார்ட்மெண்ட் தர நிர்ணயம் கோருகிறதோ, அதில் எக்ஸ்பர்ட்டான இருவர் (கல்விப்பணியில் இருந்து ஒருவர், தொழிற்சாலை பணியில் இருந்து ஒருவர்) குழுவில் இருப்பர். இவர்கள் யாரென வந்து சேரும் வரை தெரியாது.


அவர்கள் வந்து, இரண்டு பகுதிகளில் கொடுத்துள்ள விவரங்கள் சரியாக இருக்கிறதா என சரி பார்ப்பார்கள். இதற்காக கல்லூரியின் முதல்வர் முதல் பகுதிக்கும், துறைத்தலைவர் இரண்டாம் பகுதிக்கும் பிரசண்டேஷன் கொடுக்க வேண்டும். பின்னர் வளாகத்தையும், குறிப்பிட்ட துறையையும் நேரடியாக ஆய்வு செய்வார்கள்.

இதன் பின்னர் அந்தத்துறையின் ஆசிரியர்களை தனியே சந்திப்பார்கள்.

பின்னர் மாணவர்களை தனியே சந்தித்து கிராஸ் செக் செய்வார்கள்

பின்னர் மாணவர்களின் பெற்றோர்களைச் சந்திப்பார்கள்.

முந்தைய பேட்ச் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பளித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் (எம்ப்ளாயர்ஸ் மீட்) விசாரணை செய்வார்கள்.



இதன் அடிப்படையில் தான் தர நிர்ணய சான்றிதழ் வழங்கப்படும்.


இதில் வாசிங்டன் அக்கார்ட் ஒப்பந்தப்படி ஒரு டிபார்ட்மெண்டுக்கு இரண்டு ஆண்டுகள் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு தர நிர்ணயம் தரப்படும்.

அவர்கள் 1000 மதிப்பெண்களுக்கு பரிசோதிப்பார்கள். அதில் 10 பிரிவுகள் இருக்கும். ஆசிரியர் தகுதி, தேர்ச்சி விகிதம் இப்படி. ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தது 60 மதிப்பெண்கள் வாங்க வேண்டும். மொத்தமாக 750 மதிப்பண்கள் வாங்க வேண்டும். 750க்கு மேல் வாங்கினால் ஐந்தாண்டுகள் கிடைக்கும். அதற்கு குறைந்தால் இரண்டாண்டுகள் கிடைக்கும்.

பின்னர் ரீ-அக்கிரிடிடேஷசன் (அதாவது இரண்டோ, அல்லது ஐந்தோ காலம் முடிந்தவுடன்) செல்லும் போது, சென்ற முறையை விட சற்றேனும் கூடுதல் மதிப்பெண்கள் பெற வேண்டும்.

இந்த முறையில் ஆசிரியர்களின் தகுதிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

1. படிப்பு
2. ஆராய்ச்சி கட்டுரைகள்
3. கலந்து கொண்ட கருத்தரங்குகள்
4. வெளியில் அளித்த சிறப்பு சொற்பொழிவுகள்
5. இண்டஸ்ட்ரியல் கன்சல்டன்சி
6. அறிவுசார் உரிமைகள்
7. பதிப்பித்த புத்தகங்கள்

என பல அளவுகோலின்படி ஆசிரியரின் தரம் எடை போடப்படுகிறது.

பின்னர் அந்த துறையில் எத்தனை பேர் நீண்ட காலமாக பணியாற்றுகிறார்கள் (எம்பிளாயி ரிடன்சன்) என்பதும் முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.


மாணவர்களின் தரத்திற்கு

1. தேர்ச்சி விகிதம்
2. பல்கலைகழக ரேங்குகள்
3. பெற்றுள்ள வேலை வாய்ப்புகள்
4. வேலையின் உயர்ந்தபட்ச, குறைந்தபட்ச சம்பளம்
5. கலந்துகொண்ட கருத்தரங்குகள்

ஆகியவை அளவுகோலாக பார்க்கப்படுகின்றன.


(தொடரும்)

February 19, 2012

தீப்பொறி ஆறுமுகம் பொதுக்கூட்டம் – ஒரு பார்வை

பிப்ரவரி 18, 2012 அன்று மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திமுகவின் பொதுக்குழுத் தீர்மானங்களை விளக்கி தீப்பொறி ஆறுமுகம் உரையாற்றினார். அந்த பொதுக்கூட்டம் குறித்த ஒரு பார்வை.

கூட்டம் நடந்த இடத்தில் சென்ற மாதம் தான் எம்ஜியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. எண்ணி பத்து பேர்தான் பார்வையாளர்கள்.

ஆனால் நேற்று இரவு 7.30 மணிக்கு மேல் கூட்டம் சிறுக சிறுக வர ஆரம்பித்தது. கிடைக்கும் கேப்பில் எல்லாம் தங்கள் டூ வீலர்களை பார்க் செய்துவிட்டு ஆங்காங்கே பொதுமக்கள் நின்று கொண்டிருந்தார்கள். மேடைக்கு எதிரே உள்ள சேர்களில் கட்சியினர் அமர்ந்திருந்தனர். கட்சியினரைவிட பொதுமக்கள் கூட்டம் 10 மடங்கு இருக்கும்.

முதலில் பேசிய ஒருவர் சொன்னது.

விஜயகாந்த் மாதிரியே நாங்களும் கேட்குறோம். இன்னைக்கு நிலமைக்கு கவர்னர் ஆட்சியை கொண்டு வந்திட்டு திருமங்கலம் நகராட்சி தேர்தல நடத்து, நாங்க அசால்டா ஜெயிப்போம் என்று.

மாவட்ட துணை செயலாளர் எம் எல் ராஜ் பேசும் போது,
கப்பலூர் தொழில் பேட்டை மின்வெட்டால் கடுமையாய் பாதிக்கப்பட்டு இருப்பதையும், விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் இருப்பதையும் குறிப்பிட்டு, இன்னும் ஆறு மாதங்களில் விலைவாசி உயர்வு எங்கோ போய்விடும் என்று புளியை கரைத்தார்.

சரியாக ஒன்பது மணி அளவில் தீப்பொறியார் பேச்சைத் தொடங்கினார்.

தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார், குரேஷி, தற்போது தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி முதற்கொண்டு தமிழக மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், சட்டங்கள், தீர்ப்புகள் என ஏகப்பட்ட தகவல்களுடன் ஒன்றரை மணி நேரம் உரையாற்றினார்.


பேச்சில் இருந்து

ஜெ, சங்கரன்கோவிலுக்கு 26 மந்திரிகளை அனுப்புகிறார். ஆனால் தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூருக்கு எத்தனை பேரை அனுப்பினார்?

இப்ப சங்கரன் கோவிலுக்கு வந்திருக்கிற 26 பேர் கிட்டயும் கேளுங்க, யாராவது தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா மாவட்டத்தையும் சொல்லிட்டா நான் அரசியல் இருந்தே விலகிக்கிறேன்.

இந்த ஊர் நகரச்செயலாளர் கிட்ட இரவு 9.50க்கு மேல பேசக்கூடாதுன்னு எழுதி வாங்குனாங்களாம். முந்தா நாள் கரூரில் பத்தரை வரைக்கும் பேசினேன்.

கரூருக்கு ஒரு சிஎம், திருமங்கலத்துக்கு ஒரு சி எம்மா? ஒரே சட்டம்தானே?

பை எலெக்‌ஷன் நடக்குற தொகுதியில கட்டுப்பாடு வை. இல்ல அந்தத் தொகுதி இருக்குற நெல்லை மாவட்டத்துக்கு வை. அத்வும் இல்லையா முந்தி ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில இருந்ததால தூத்துக்குடி மாவட்டத்துக்கும் கட்டுப்பாடு வை. திருமங்கலத்துல ஏன் கட்டுப்பாடு?


அண்ணா கிட்ட என்விஎன் வந்து சொல்லுறாரு, 67ல, அண்ணா ”நாம தனி மெஜாரிட்டியில ஜெயிச்சுட்டோம்”னு. உடனே அண்ணா அழுதார். ஆட்சி வந்திருச்சு. கட்சி போயிருச்சுன்னு.

எப்பல்லாம் நாம ஆட்சிக்கு வர்றோமோ அப்ப எல்லாம் கட்சி போயிறுது.
விஜயகாந்தை மிகவும் புகழ்ந்தார். (கூட்டணி வரும் போலிருக்கே?]

பஸ் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு பற்றியும் பேசினார்.

நாலு மணி நேரம் இருந்த மின்வெட்டு, அப்புறம் கஷ்டப்பட்டு மூணு மணி நேரமா குறைச்சோம், அப்புறம் இரண்டு மணி நேரம். அதுக்கே பொறுக்காம மாத்தீட்டிங்க. இப்ப அனுபவீங்க. (அவருக்கு முன் பேசிய அனைத்து உள்ளூர் பேச்சாளர்களும் இதையேதான் பேசினார்கள்]

மின்வெட்டு பற்றிய அவரின் பஞ்ச்

ராத்திரியில ஒரு மணி நேரம் அணைக்கிறான், ஒரு மணி நேரம் போடுறான் (இதையே பலமுறை சொல்லிக்காட்டி]

7 கோடியா இருக்குற தமிழ்நாட்டு ஜனத்தொகை 12 கோடியா ஆயிடும் போலிருக்கே.



19 வயதில் மேடை ஏறி தற்போது 72 வயது வரை 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக பட்டி தொட்டிகளில் எல்லாம் பேசியும் தீப்பொறிக்கு இன்னும் கரிஸ்மா குறையாமல் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு நேற்று விடை கிடைத்தது. ஏகப்பட்ட விசயங்களை அப்டேட் செய்து கொண்டேயிருக்கிறார். எத்தனை பேரூராட்சி, இப்போது மாநகராட்சியில் இணைந்தது, அவை என்ன என்றெல்லாம் லிஸ்ட் போடுகிறார்.

பேப்பரே படிக்காத ஆட்களுக்கு மட்டுமல்ல, என்னேரமும் இணைய செய்திகளை மேய்ந்து கொண்டிருப்பவர்களுக்குக் கூட அவரிடம் தகவல்கள் இருக்கிறது.


கூட்டத்துக்கு வந்தவர்களின் குறைந்த வயது 35. பெரும்பாலும் 45+ தான் கண்ணில் பட்டார்கள். திமுக விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. 25 வயது ஆட்கள் யாருகே இல்லை. அழகிரி பிறந்த நாளான ஜனவரி 30க்கு அவரை வாழ்த்தி வைக்கப்பட்ட பேனர்களில் நகரபொறுப்பில் உள்ள பலரது மகன்களின் படம் பட்டத்தோடு இருந்தது. ஆனால் அவர்கள் யாரையும் கூட்டத்தில் காணவில்லை. தீப்பொறியின் 90 நிமிட பேச்சில் அவர்கள் பல தகவல்களை உள் வாங்கியிருக்கலாம்.

நான் சிறுவனாக இருந்தபோது, பார்த்த கூட்டங்களில் எல்லாம் இளவயதினர் தான் அதிகம் இருப்பார்கள். அவர்கள் தான் இன்னும் வருகிறார்களோ என்ற எண்ணமே ஏற்பட்டது.

ஆசைத்தம்பி, மதியழகன், என்விஎன் பற்றி எல்லாம் சொன்னார். ராஜாஜி, மவுண்ட் பேட்டன், மோதிலால், ஜவஹர்லால் என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. ஆனால் இவர்களின் பெயர்கள் எல்லாம் பேனரில் சிரித்துக் கொண்டிருக்கும் பி ஏ, பி எஸ்ஸி, பி ஈ க்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்காது.

பொதுஜனத்தின் ஆதரவு அமோகமாக இருந்தது. மின் வெட்டு அவர்களை சிந்திக்க வைத்திருக்கிறது. (மின் வெட்டினால் கூட இவ்வளவு கூட்டம் கூடியிருக்கலாம்].

இன்றைய நிலையில் நியாயமாக ஒரு இடைத்தேர்தல் நடந்தால் அது நிச்சயம் ஆளுங்கட்சிக்கு கசப்பான முடிவையே தரும் என்பது மட்டும் நிதர்சனம்.

February 17, 2012

அக்கிரிடிடேசன் – ஒரு அறிமுகம்

இந்தப் பதிவு அக்கிரிடிடேசன் பற்றி அறிந்தவர்களுக்கானது அல்ல. மன்னிக்கவும்.


மார்ச் மாத துவக்கத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. தேர்வு முடிந்தவுடன் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான கல்லூரியை தேர்வு செய்ய தொடங்குவர்கள். (பலர் ஏற்கனவே நிச்சயித்திருப்பார்கள்).

இப்பொழுது தமிழகத்தில் +2 தேர்வு எழுதுபவர்களில் பெரும் விழுக்காட்டினர் தனியார் பொறியியல் கல்லூரிகளில் தான் சேர்கிறார்கள். இவர்கள் தங்களுக்கான கல்லூரியை தேர்வு செய்யும் அடிப்படை புவியியல் சார்ந்ததாகவே இருக்கிறது.

அதன்பின் அக்கல்லூரியில் நடப்பு ஆண்டில் எவ்வளவு பேர் வளாகத்தேர்வு மூலம் பணி ஆணை பெற்றிருக்கிறார்கள் என்ற காரணி. அதன்பின்னரே அக்கல்லூரியின் கற்பிப்பு தரம் வருகிறது. பின்னர் அதில் தங்களுக்கு ஏற்ற பாடப்பிரிவுகள் உள்ளதா என பார்த்து பின் தெரிவு செய்கிறார்கள்.

இதில் கல்லூரியின் கற்பிப்பு தரம் என்பது எதைப் பொறுத்தது?


ஐஐடிகளில் பி எச் டி, எம் எஸ் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் வைவா முடிந்ததும் கொடுக்கும் தேநீர் விருந்து பிரசித்தி பெற்றது. தங்கள் ஆய்வுக்கு உதவிய பேராசிரியர்கள், டெக்னீசியன்கள் மற்றும் சக மாணவர்களுக்கு நன்றி கூறும் விதமாக அதனை அளிப்பார்கள். அப்போது அங்கு வரும் பேராசிரியர்கள் கலகலப்பாக தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

அன்று விருந்து கொடுத்தவர், தீஸிஸ் சப்மிட் செய்துவிட்டு தற்போது பெரிய அளவில் இருக்கும் தனியார் பல்கலையில் வேலை பார்ப்பவர். அவர் அப்பொழுது ஐஐடியில் இல்லாத இன்பராஸ்ட்ரக்சர் கூட தன் பலகலையில் இருப்பதாகக் கூறினார்.

அப்போது அங்கு இருந்த பேராசிரியர் ஒருவர் சொன்னார் “ காலேஜுக்கு இன்பிராஸ்டிரக்சர் என்பது அங்கு இருக்கும் ஆசிரியர்கள் தான்” என்று. எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டோம்.

ஆனால் ஆசிரியர்களின் தகுதியை எப்படி வரையறுப்பது? அதே போல் ஒரு கல்லூரியின் கற்பிப்பு தரத்தை எப்படி குவாண்டிஃபை செய்வது?

இங்குதான் வருகிறது அக்கிரடிடேசன்.

இந்தக்கல்லூரியில் படித்து முடித்து வெளிவரும் மாணவரிடத்தில் குறைந்தபட்ச தரம் நிச்சயம் இருக்கும் என்று உறுதி கொடுப்பதே அக்கிரடிடேசனின் முக்கிய பணியாகும். எனவே பெற்றோர் தங்கள் பிள்ளைகள் சேரும் கல்லூரி அக்கிரடிடேசன் பெற்றிருக்கிறதா? என்பதை கற்பிப்பு தரத்திற்கான அளவுகோலாக கொள்ளலாம். இதில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியது, அக்கிரடிடேசன் என்பது கல்லூரியில் உள்ள பாடப் பிரிவுகளுக்கு தனித்தனியாகக் கொடுப்பது. முழுக்கல்லூரிக்கு அல்ல.

தங்கள் பிள்ளை சேரும் குறிப்பிட்ட பாடப்பிரிவு அக்கிரடிடேசன் பெற்றுள்ளதா? என பார்த்துக் கொள்ளவும்.


முதலில் இந்தியாவில் என்னென்ன அக்கிரடிடேசன் முறைகள் உள்ளன? எனப் பார்ப்போம். பின்னர் உலகளவில் உள்ள முறைகள் பற்றிப் பார்ப்போம்.

தேசிய கல்விக் கொள்கை (1986)ன் வழிகாட்டுதல் படி உருவானது நாக் எனப்படும் நேசனல் அசெஸ்மெண்ட் மற்றும் அக்கிரடிடேசன் கவுன்சில் (NAAC). இது நாட்டில் உள்ள கல்லூரி, பல்கலைகள் போன்ற உயர் கல்வி அளிக்கும் நிறுவனங்களுக்கு தரச் சான்றிதழ் அளிக்கிறது. ஆனால் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகளுக்கு என் பி ஏ எனப்படும் நேசனல் போர்ட் ஆப் அக்கிரடிடேசன் (NBA) தரச் சான்றிதழ் வழங்குகிறது.


இது தவிர மருத்துவம், பல்மருத்துவம் போன்ற பல பிரிவுகளுக்கும் கவுன்சில்கள் உள்ளன.

நாம் இங்கே என் பி ஏ அக்கிரடிடேசன் பற்றி மட்டும் பார்ப்போம்.

இந்த என் பி ஏ வானது ஏ ஐ சி டி யுடன் (All India Council for Technical Education) இணைந்த ஒன்று. இது ஒரு தனித்தியங்கக் கூடிய அமைப்பு (அட்டானமஸ் பாடி).

இந்த என் பி ஏ வானது கல்லூரிகளை தற்போது வாசிங்டன் அக்கார்ட் என்னும் முறைப்படி தர நிர்ணயம் செய்கிறது.

வாசிங்டன் அக்கார்ட் என்றால் வேறொன்றுமில்லை. அந்த ஒப்பந்தம் வாஷிங்டனில் நடைபெற்ற மாநாட்டில் கையெழுத்தான ஒன்று. இதே போல் சிட்னி அக்கார்ட், டப்ளின் அக்கார்ட் போன்றவையும் உள்ளன.


இதில் வாசிங்டன் அக்கார்ட் என்பது இளநிலை பொறியியல் பிரிவுகளுக்கு மட்டும் தர நிர்ணயம் செய்வது.

சிட்னி அக்கார்ட் தொழில்நுட்பத்திற்கு செய்வது. வித்தியாசம் என்னவென்றால் பொறியியலில் தியரி, உயர் கணிதம் ஆகியவை அதிகமாக இருக்கும். தொழில்நுட்பத்தில் பிராக்டிகல்ஸ் அதிகமாக இருக்கும். அவர்கள் படிப்பை விட செய்முறைக்கே அதிக கவனம் செலுத்துவார்கள். (நம் நாட்டில் இம்முறை இல்லையென்றே சொல்லலாம்)

டப்ளின் அக்கார்ட் என்பது டெக்னீசியன்களை தர நிர்ணயம் செய்யும் அமைப்பு.

நம் நாட்டு பொறியியல் கல்லூரிகளுக்கு வாசிங்டன் அக்கார்ட் முறை மட்டுமே இனிமேல் கடைபிடிக்கப்படும்.

இந்த வாசிங்டன் அக்கார்ட் அமைப்பானது 14 உறுப்பு நாடுகளைக் கொண்டது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவர்கள் அதில் உள்ளார்கள். நமது நாடு புரவிஷனல் மெம்பர். தற்போது உறுப்பு நாடாக மாற பெரு முயற்சி செய்து வருகிறோம்.

ஏனென்றால் இது ஐ நா சபை பாதுகாப்பு கவுன்சிலின் வீட்டோ அதிகாரம் போன்றது. ஐ நா விலாவது ஐந்து நாடுகள் தான். ஆனால் இங்கோ 14.

இந்த முறைப்படி தர நிர்ணயம் பெற்ற கல்லூரி பாடப் பிரிவில் படித்த மாணவர்களை மற்ற உறுப்பு நாடுகள் அங்கீகரிக்கும். எனவே தான் என் பி ஏ தர நிர்ணயம் பெற்ற கல்லூரி பாடப் பிரிவில் படிப்பது எதிர்காலத்துக்கு நல்லது.


அடுத்த பகுதியில் வாசிங்டன் அக்கார்ட் பற்றி விரிவாகப் பார்ப்போம்.