February 20, 2012

அக்கிரிடிடேசன் – பகுதி 2 [வாஷிங்டன் அக்கார்ட்]

முதல் பகுதியை வாசிக்க

சென்ற பகுதியில் பொறியியல் கல்லூரிகளுக்கான அக்கிரிடிடேசன் பற்றிப் பார்த்தோம். அதில் பாடப்பிரிவுகளுக்குத்தான் [டிபார்ட்மெண்ட்] தர நிர்ணயம், கல்லூரிக்கு அல்ல என்பதைப் பார்த்தோம்.

ஒரு டிபார்ட்மெண்டில் இருந்து குறைந்தது இரண்டு பேட்ச் வெளியில் சென்றிருந்தால்தான் தர நிர்ணயக் கமிட்டிக்கு அப்ளை செய்யமுடியும்.

தரநிர்ணயம் என்பது தன்னார்வத்தில் [வாலண்டரி] செய்யக்கூடியது. கட்டாயமில்லை. பொறியியியல் கல்லூரிகளுக்கு ஏ ஐ சி டி ஈயின் அனுமதிதான் கட்டாயம்.

அந்த அப்ரூவலானது, கல்லூரியில் குறைந்த பட்ச கட்டுமானம் இருக்கிறதா, நடத்த பணம் இருக்கிறதா? தகுதியான ஆசிரியர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை பரிசோதித்து கொடுக்கப்படுவது. ஆனால் என் பி ஏ தர நிர்ணயமானது, படித்து முடித்து வெளியேறும் மாணவரிடத்தில் தரம் இருக்கிறதா என்று பரிசோதித்து அளிக்கப்படுவது.

எனவே தர நிர்ணயத்துக்கு அப்ளை செய்யும் கல்லூரிகள் இரண்டு பகுதிகளாக ரிப்போர்ட் தயார் செய்ய வேண்டும்.

முதல் பகுதியில் கல்லூரியின் அடிப்படை கட்டுமானங்கள், ஆசிரியர் தகுதி, எண்ணிக்கை, அவர்களில் சம்பள பட்டியல், ஆடிட்டோரியம், பிளேஸ்மெண்ட் செல், விடுதி வசதி, உடற்பயிற்சி வசதி, மினரல் வாட்டர், வங்கி, தபால் அலுவலக வசதி (கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயேயிருந்தால்) போன்றவற்றைச் சொல்லவேண்டும்.

பகுதி 2ல் தரநிர்ணயம் கோரும் துறையின் ஆசிரியர் தகுதி, அவர்களின் சாதனைகள், ஆசிரியர் மாணவர் விகிதம், ஆய்வுச்சாலை வசதிகள், நடத்தப்பட்ட சிறப்பு சொற்பொழிவுகள், தேர்ச்சி விகிதம் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.

இந்த தகவல்களை ஆராயும் என் பி ஏ அலுவலகம், திருப்தியடைந்தால் ஆய்வுக்கு வரும் தேதியை கல்லூரிக்குத் தெரியப்படுத்தும்.

இதற்கான குழுவிற்கு ஒரு சேர்மன் இருப்பார். எந்த டிபார்ட்மெண்ட் தர நிர்ணயம் கோருகிறதோ, அதில் எக்ஸ்பர்ட்டான இருவர் (கல்விப்பணியில் இருந்து ஒருவர், தொழிற்சாலை பணியில் இருந்து ஒருவர்) குழுவில் இருப்பர். இவர்கள் யாரென வந்து சேரும் வரை தெரியாது.


அவர்கள் வந்து, இரண்டு பகுதிகளில் கொடுத்துள்ள விவரங்கள் சரியாக இருக்கிறதா என சரி பார்ப்பார்கள். இதற்காக கல்லூரியின் முதல்வர் முதல் பகுதிக்கும், துறைத்தலைவர் இரண்டாம் பகுதிக்கும் பிரசண்டேஷன் கொடுக்க வேண்டும். பின்னர் வளாகத்தையும், குறிப்பிட்ட துறையையும் நேரடியாக ஆய்வு செய்வார்கள்.

இதன் பின்னர் அந்தத்துறையின் ஆசிரியர்களை தனியே சந்திப்பார்கள்.

பின்னர் மாணவர்களை தனியே சந்தித்து கிராஸ் செக் செய்வார்கள்

பின்னர் மாணவர்களின் பெற்றோர்களைச் சந்திப்பார்கள்.

முந்தைய பேட்ச் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பளித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் (எம்ப்ளாயர்ஸ் மீட்) விசாரணை செய்வார்கள்.இதன் அடிப்படையில் தான் தர நிர்ணய சான்றிதழ் வழங்கப்படும்.


இதில் வாசிங்டன் அக்கார்ட் ஒப்பந்தப்படி ஒரு டிபார்ட்மெண்டுக்கு இரண்டு ஆண்டுகள் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு தர நிர்ணயம் தரப்படும்.

அவர்கள் 1000 மதிப்பெண்களுக்கு பரிசோதிப்பார்கள். அதில் 10 பிரிவுகள் இருக்கும். ஆசிரியர் தகுதி, தேர்ச்சி விகிதம் இப்படி. ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தது 60 மதிப்பெண்கள் வாங்க வேண்டும். மொத்தமாக 750 மதிப்பண்கள் வாங்க வேண்டும். 750க்கு மேல் வாங்கினால் ஐந்தாண்டுகள் கிடைக்கும். அதற்கு குறைந்தால் இரண்டாண்டுகள் கிடைக்கும்.

பின்னர் ரீ-அக்கிரிடிடேஷசன் (அதாவது இரண்டோ, அல்லது ஐந்தோ காலம் முடிந்தவுடன்) செல்லும் போது, சென்ற முறையை விட சற்றேனும் கூடுதல் மதிப்பெண்கள் பெற வேண்டும்.

இந்த முறையில் ஆசிரியர்களின் தகுதிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

1. படிப்பு
2. ஆராய்ச்சி கட்டுரைகள்
3. கலந்து கொண்ட கருத்தரங்குகள்
4. வெளியில் அளித்த சிறப்பு சொற்பொழிவுகள்
5. இண்டஸ்ட்ரியல் கன்சல்டன்சி
6. அறிவுசார் உரிமைகள்
7. பதிப்பித்த புத்தகங்கள்

என பல அளவுகோலின்படி ஆசிரியரின் தரம் எடை போடப்படுகிறது.

பின்னர் அந்த துறையில் எத்தனை பேர் நீண்ட காலமாக பணியாற்றுகிறார்கள் (எம்பிளாயி ரிடன்சன்) என்பதும் முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.


மாணவர்களின் தரத்திற்கு

1. தேர்ச்சி விகிதம்
2. பல்கலைகழக ரேங்குகள்
3. பெற்றுள்ள வேலை வாய்ப்புகள்
4. வேலையின் உயர்ந்தபட்ச, குறைந்தபட்ச சம்பளம்
5. கலந்துகொண்ட கருத்தரங்குகள்

ஆகியவை அளவுகோலாக பார்க்கப்படுகின்றன.


(தொடரும்)

5 comments:

shortfilmindia.com said...

முரளி இந்த பதிவுகளுக்கு பின்னூட்டம் வரவில்லையே என்று எழுதாமல் விட்டு விடாதீர்கள். சினிமா தவிர முக்கிய பதிவுகளுக்கு பெரிய வரவேற்பிருக்காமல் வாய்ப்பிருக்கிறது. பட் லாங் லாஸ்டிங்காக இருக்கும். இதை நீங்கள் எழுதினால் தான் சரியாக இருக்கும் கீப் கோயிங்

முரளிகண்ணன் said...

Thanks Cableji

தராசு said...

தொடருங்கள். அருமையான பதிவு.

இங்கு இன்னொரு சந்தேகத்தையும் முன்வைக்கிறேன். இந்த தர நிர்ணய பரிசோதனையில் கற்றுத் தரப்படும் பாடத்திட்டங்களைப் பற்றிய மதிப்பீடு இருக்கிறதா??

தற்போது மெக்கானிகல் இன்ஜினீயரிங் படிக்கும் ஒரு மாணவனின் புரடக்ஷன் டெக்னாலஜி பாடப் புத்தகத்தை பார்த்தேன். நாங்கள் 1985 ம் வருடம் ஐ.டி.ஐ படிக்கும் பொழுது இருந்த அதே பாடங்கள் இன்ஜினீயரிங் முதலாண்டு மாணவனுக்கும் இருக்கிறது. இந்த பாடங்களில் போதிக்கப்படும் விஷயங்கள் மாற்றமடைந்து, தொழில் யுகம் இந்தியாவிலும் மிக நவீனமடைந்து விட்டது. ஆனால் இன்னமும் கப்போலா ஃபர்னசும், பழைய கால மோல்டிங் முறைகளுமே பயிற்றுவிக்கப் படுகிறது. இது அண்ணா பல்கலைக் கழக பாடத்திட்டத்தில் நான் கண்டதை சொல்லுகிறேன்.

இதைப் படித்து வெளிவரும் மாணவன் உண்மையில் இன்றைய தொழிற்சாலைகளில் நடப்பில் உள்ள தொழில் நுணுக்கங்களை கண்டால் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதைப் போல் தடுமாறிப் போவது நிச்சயம்.

பாடத்திட்டங்களை யார் வரையருக்கிறார்கள்??

முரளிகண்ணன் said...

நன்றி தராசு.

அடிப்படையான விஷயங்கள் (டர்பைன், எஞ்சின் போன்றவற்றின் வொர்கிங் பிரின்சிபிள்) மாணவனுக்குத் தேவையே.

தற்போதைய நுட்பங்கள் மூன்றாமாண்டு மட்டும் நான்காமாண்டில் கற்பித்தால் போதுமானது.

குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பல்கலையின் செனட்,சிண்டிகேட் கூடி ஒரு கமிட்டி அமைத்து பாடத்திட்டங்களை ரிவைஸ் செய்யும்.

அதனால் தான் தர நிர்ணயித்தின் போது, மாணவனுக்கு பாடத்திட்டத்தை விட புதியதாக, அவன் அறிவை என்ஹான்ஸ் செய்யுமாறு என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்பார்கள்.

ஆக்யுமெண்டேஷன் கோர்ஸ் போன்றவை நிச்சயம் இருக்க வேண்டும், பாடத்திட்டத்தில் இல்லாத எக்ஸபரிமெண்ட்ஸும் தேவை என்கிறார்கள்.

இன்பிளாண்ட் ட்ரைனிங் போன்றவற்றிற்கு மாணவர்கள் சென்றிருக்கிறார்களா? எனவும் பார்ப்பார்கள்.

Giridaran said...

Good Information. Thanks Murali..Keep Going. Good Luck