February 17, 2012

அக்கிரிடிடேசன் – ஒரு அறிமுகம்

இந்தப் பதிவு அக்கிரிடிடேசன் பற்றி அறிந்தவர்களுக்கானது அல்ல. மன்னிக்கவும்.


மார்ச் மாத துவக்கத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. தேர்வு முடிந்தவுடன் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான கல்லூரியை தேர்வு செய்ய தொடங்குவர்கள். (பலர் ஏற்கனவே நிச்சயித்திருப்பார்கள்).

இப்பொழுது தமிழகத்தில் +2 தேர்வு எழுதுபவர்களில் பெரும் விழுக்காட்டினர் தனியார் பொறியியல் கல்லூரிகளில் தான் சேர்கிறார்கள். இவர்கள் தங்களுக்கான கல்லூரியை தேர்வு செய்யும் அடிப்படை புவியியல் சார்ந்ததாகவே இருக்கிறது.

அதன்பின் அக்கல்லூரியில் நடப்பு ஆண்டில் எவ்வளவு பேர் வளாகத்தேர்வு மூலம் பணி ஆணை பெற்றிருக்கிறார்கள் என்ற காரணி. அதன்பின்னரே அக்கல்லூரியின் கற்பிப்பு தரம் வருகிறது. பின்னர் அதில் தங்களுக்கு ஏற்ற பாடப்பிரிவுகள் உள்ளதா என பார்த்து பின் தெரிவு செய்கிறார்கள்.

இதில் கல்லூரியின் கற்பிப்பு தரம் என்பது எதைப் பொறுத்தது?


ஐஐடிகளில் பி எச் டி, எம் எஸ் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் வைவா முடிந்ததும் கொடுக்கும் தேநீர் விருந்து பிரசித்தி பெற்றது. தங்கள் ஆய்வுக்கு உதவிய பேராசிரியர்கள், டெக்னீசியன்கள் மற்றும் சக மாணவர்களுக்கு நன்றி கூறும் விதமாக அதனை அளிப்பார்கள். அப்போது அங்கு வரும் பேராசிரியர்கள் கலகலப்பாக தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

அன்று விருந்து கொடுத்தவர், தீஸிஸ் சப்மிட் செய்துவிட்டு தற்போது பெரிய அளவில் இருக்கும் தனியார் பல்கலையில் வேலை பார்ப்பவர். அவர் அப்பொழுது ஐஐடியில் இல்லாத இன்பராஸ்ட்ரக்சர் கூட தன் பலகலையில் இருப்பதாகக் கூறினார்.

அப்போது அங்கு இருந்த பேராசிரியர் ஒருவர் சொன்னார் “ காலேஜுக்கு இன்பிராஸ்டிரக்சர் என்பது அங்கு இருக்கும் ஆசிரியர்கள் தான்” என்று. எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டோம்.

ஆனால் ஆசிரியர்களின் தகுதியை எப்படி வரையறுப்பது? அதே போல் ஒரு கல்லூரியின் கற்பிப்பு தரத்தை எப்படி குவாண்டிஃபை செய்வது?

இங்குதான் வருகிறது அக்கிரடிடேசன்.

இந்தக்கல்லூரியில் படித்து முடித்து வெளிவரும் மாணவரிடத்தில் குறைந்தபட்ச தரம் நிச்சயம் இருக்கும் என்று உறுதி கொடுப்பதே அக்கிரடிடேசனின் முக்கிய பணியாகும். எனவே பெற்றோர் தங்கள் பிள்ளைகள் சேரும் கல்லூரி அக்கிரடிடேசன் பெற்றிருக்கிறதா? என்பதை கற்பிப்பு தரத்திற்கான அளவுகோலாக கொள்ளலாம். இதில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியது, அக்கிரடிடேசன் என்பது கல்லூரியில் உள்ள பாடப் பிரிவுகளுக்கு தனித்தனியாகக் கொடுப்பது. முழுக்கல்லூரிக்கு அல்ல.

தங்கள் பிள்ளை சேரும் குறிப்பிட்ட பாடப்பிரிவு அக்கிரடிடேசன் பெற்றுள்ளதா? என பார்த்துக் கொள்ளவும்.


முதலில் இந்தியாவில் என்னென்ன அக்கிரடிடேசன் முறைகள் உள்ளன? எனப் பார்ப்போம். பின்னர் உலகளவில் உள்ள முறைகள் பற்றிப் பார்ப்போம்.

தேசிய கல்விக் கொள்கை (1986)ன் வழிகாட்டுதல் படி உருவானது நாக் எனப்படும் நேசனல் அசெஸ்மெண்ட் மற்றும் அக்கிரடிடேசன் கவுன்சில் (NAAC). இது நாட்டில் உள்ள கல்லூரி, பல்கலைகள் போன்ற உயர் கல்வி அளிக்கும் நிறுவனங்களுக்கு தரச் சான்றிதழ் அளிக்கிறது. ஆனால் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகளுக்கு என் பி ஏ எனப்படும் நேசனல் போர்ட் ஆப் அக்கிரடிடேசன் (NBA) தரச் சான்றிதழ் வழங்குகிறது.


இது தவிர மருத்துவம், பல்மருத்துவம் போன்ற பல பிரிவுகளுக்கும் கவுன்சில்கள் உள்ளன.

நாம் இங்கே என் பி ஏ அக்கிரடிடேசன் பற்றி மட்டும் பார்ப்போம்.

இந்த என் பி ஏ வானது ஏ ஐ சி டி யுடன் (All India Council for Technical Education) இணைந்த ஒன்று. இது ஒரு தனித்தியங்கக் கூடிய அமைப்பு (அட்டானமஸ் பாடி).

இந்த என் பி ஏ வானது கல்லூரிகளை தற்போது வாசிங்டன் அக்கார்ட் என்னும் முறைப்படி தர நிர்ணயம் செய்கிறது.

வாசிங்டன் அக்கார்ட் என்றால் வேறொன்றுமில்லை. அந்த ஒப்பந்தம் வாஷிங்டனில் நடைபெற்ற மாநாட்டில் கையெழுத்தான ஒன்று. இதே போல் சிட்னி அக்கார்ட், டப்ளின் அக்கார்ட் போன்றவையும் உள்ளன.


இதில் வாசிங்டன் அக்கார்ட் என்பது இளநிலை பொறியியல் பிரிவுகளுக்கு மட்டும் தர நிர்ணயம் செய்வது.

சிட்னி அக்கார்ட் தொழில்நுட்பத்திற்கு செய்வது. வித்தியாசம் என்னவென்றால் பொறியியலில் தியரி, உயர் கணிதம் ஆகியவை அதிகமாக இருக்கும். தொழில்நுட்பத்தில் பிராக்டிகல்ஸ் அதிகமாக இருக்கும். அவர்கள் படிப்பை விட செய்முறைக்கே அதிக கவனம் செலுத்துவார்கள். (நம் நாட்டில் இம்முறை இல்லையென்றே சொல்லலாம்)

டப்ளின் அக்கார்ட் என்பது டெக்னீசியன்களை தர நிர்ணயம் செய்யும் அமைப்பு.

நம் நாட்டு பொறியியல் கல்லூரிகளுக்கு வாசிங்டன் அக்கார்ட் முறை மட்டுமே இனிமேல் கடைபிடிக்கப்படும்.

இந்த வாசிங்டன் அக்கார்ட் அமைப்பானது 14 உறுப்பு நாடுகளைக் கொண்டது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவர்கள் அதில் உள்ளார்கள். நமது நாடு புரவிஷனல் மெம்பர். தற்போது உறுப்பு நாடாக மாற பெரு முயற்சி செய்து வருகிறோம்.

ஏனென்றால் இது ஐ நா சபை பாதுகாப்பு கவுன்சிலின் வீட்டோ அதிகாரம் போன்றது. ஐ நா விலாவது ஐந்து நாடுகள் தான். ஆனால் இங்கோ 14.

இந்த முறைப்படி தர நிர்ணயம் பெற்ற கல்லூரி பாடப் பிரிவில் படித்த மாணவர்களை மற்ற உறுப்பு நாடுகள் அங்கீகரிக்கும். எனவே தான் என் பி ஏ தர நிர்ணயம் பெற்ற கல்லூரி பாடப் பிரிவில் படிப்பது எதிர்காலத்துக்கு நல்லது.


அடுத்த பகுதியில் வாசிங்டன் அக்கார்ட் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

12 comments:

வி.பாலகுமார் said...

நல்ல அறிமுகம்.

முரளிகண்ணன் said...

நன்றி பாலகுமார்

கோபிநாத் said...

நல்ல அறிமுகம் அண்ணே...தொடருங்கள் ;-)

முரளிகண்ணன் said...

நன்றி கோபிநாத்

தராசு said...

மிகவும் அவசியமான ஒரு தகவல் தலைவரே.

தொடருங்கள். வாழ்த்துக்கள்.

முரளிகண்ணன் said...

நன்றி தராசு

சிநேகிதன் அக்பர் said...

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம். பகிர்வுக்கு நன்றி.

முரளிகண்ணன் said...

நன்றி அக்பர்

KSGOA said...

அவசியமான பதிவு.அடுத்த பகுதியை
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றாக உள்ளது. தொடருங்கள் நண்பரே !

முரளிகண்ணன் said...

நன்றி KSGOA

நன்றி திண்டுக்கல் தனபாலன்

முரளிகண்ணன் said...
This comment has been removed by the author.