February 20, 2015

தியாகராஜன் - மகனுக்காக

தமிழ் சினிமாவில் எதிர்நாயகனாக நடிப்பவர்கள், ஒரு புள்ளியில் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நாயகனாக மாறுவார்கள். 

ரஜினிகாந்த்,சத்யராஜ்,சரத்குமார், நெப்போலியன் என பல உதாரணங்கள் உண்டு. எவ்வளவு கொடூர வில்லனாக நடித்தாலும், அதில் மக்களைக் கவரும்படி அவர்களுக்கென்று ஒரு பாணியை பின்பற்றி இருந்தால், எளிதில் ஹீரோவாக ஏற்றுக்கொண்டு விடுவார்கள். அப்படி ஏதும் பிரத்யேக பாணி இல்லாவிட்டால், ஏதாவது ஒரு ராபின்ஹூட் டைப்பிலான கதையில், திருடனாகவோ அல்லது கொலைகாரனாகவோ இருந்து மக்களுக்கு நன்மை செய்யும் வேடத்தில் நடித்துவிட்டால் தமிழ்நாட்டு மக்கள் முழுமனதாக நாயகனாக ஏற்றுக்கொள்வார்கள்.
ரஜினிகாந்த், சத்யராஜ் எல்லாம் வில்லனாக இருக்கும்போதே நாயகன் ரேஞ்சுக்கு ரசிக்கப்பட்டவர்கள். சரத்குமார் அவருடைய தோற்றப்பொலிவு காரணமாக ஓரிரு படங்களில் நல்லமனிதர் கேரக்டர் பண்ணியவுடன் நாயகனாக பிரமோட் ஆகிவிட்டார். நெப்போலியனுக்கு நிறைய படங்களுக்குப் பின்னரே அந்த திருப்புமுனை ஏற்பட்டது. சீவலப்பேரி பாண்டி எனும் மக்களுக்கு உதவும்படியான கேரக்டர் அமைந்து நாயகனாக மாறினார்.

தியாகராஜனும் இப்படித்தான். 1981ல் “அலைகள் ஓய்வதில்லை” படத்தில் நாயகியின் அண்ணனாக ஒரு நெகட்டிவ் ரோலில் தன் திரைப்பயணத்தை துவக்கினார். பின்னர் டிக் டிக் டிக், நேரம் வந்தாச்சு, கல்யாண காலம், நெஞ்சங்கள், பாயும்புலி போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். பெரும்பாலும் நெகடிவ் கேரக்டர்கள் தான்.

இந்த நேரத்தில் தான் ராஜசேகர் இயக்கத்தில்  “மலையூர் மம்பட்டியான்” படத்தில் நடித்தார். யாருமே எதிர்பாராத வெற்றியைப் பெற்றது இந்தப்படம். அதற்கு முன்னால் ராஜசேகர் தமிழில் இயக்கிய கண்ணீர் பூக்கள், அம்மா இரண்டுமே தோல்விப்படங்கள். ஆனால் கதையிலும், படமாக்கப்பட்ட விதத்திலும் கவனிக்கப்பட்ட படங்கள். மலையூர் மம்பட்டியான் இந்த இரண்டு படங்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்ட படம். ஊர் பெரியமனிதரால் பாதிக்கப்பட்ட இளைஞன் அவரை பழிவாங்கி, பணம் உள்ளவர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் கதை. இளையாராஜா கொடுத்திருந்த பாடல்களில் சின்னப் பொண்ணு சேலையும், காட்டு வழி போற பொண்ணே பாடலும் மிகப்பெரிய ஹிட் ஆகியது. அந்த காலகட்டத்தில் இந்தப் படம் பி மற்றும் சி செண்டர்களில் எம்ஜியார் படங்களுக்கு இணையாக வசூலித்ததாகக் கூறுவார்கள். ஒரு படம் பெற்ற வெற்றியை அப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு அடுத்து கிடைக்கும் வாய்ப்புகளில் இருந்தே அறிந்து கொள்ளலாம். 

எப்படி நாட்டாமை படத்தின் வெற்றிக்குப் பின்னர் கே எஸ் ரவிகுமாருக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களை தொடர்ந்து இயக்கும் வாய்ப்பு கிடைத்ததோ, அதுபோல ராஜசேகருக்கு மலையூர் மம்பட்டியான் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, கமல் படங்கள் தொடர்ச்சியாகக் கிடைத்தன.

தியாகராஜன், வில்லனாக இருந்து நாயகனாக மாறியவர்களுடன் ஒப்பிடுகையில் சற்று முக வசீகரம் குறைந்தவர். அம்மைத் தழும்புகள் கொண்ட முகம் கொண்டவர். அவர் அறிமுகமான அலைகள் ஓய்வதில்லை படமானது தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வெற்றிகரமாக ஓடிய படம். அதன் மூலம் மக்களுக்கு நல்ல பரிட்சியமானவராக இருந்தார். தங்கையின் காதலுக்கு எதிரானவராக, வேறொரு பெண் தொடர்பு கொண்டவராக, மதப்பித்து கொண்டவராக அப்படத்தில் சித்தரிக்கப்பட்டு, கிராம மக்களிடம் திட்டு வாங்கியவர்.  இருந்தாலும் மக்களால் நாயகனாக இரண்டே ஆண்டுகளால் ஏற்றுக்கொள்ளப் பட்டார் என்றால் அதுதான் மலையூர் மம்பட்டியான் திரைப்படத்தின் வெற்றி.

இப்படி நாயகனாக மாறுபவர்கள், சில சமயம் தங்களுக்கு சற்றும் பொருந்தாத கதைகளில் நடித்து அகலக்கால் வைப்பார்கள். ஆனால் தியாகராஜன் சற்று தெளிவானவர். எந்த மாதிரி படங்கள் தன் உடல் மற்றும் முக அமைப்புக்கு ஏற்றதாக இருக்குமோ, அந்த மாதிரி கதைகளாகவே தேர்ந்தெடுத்து நடித்தார். பெரும்பாலும் ஆக்‌ஷன் கதைகளாக இருந்தாலும், சில நல்ல கதை அம்சம் உள்ள படங்களிலும் அவர் நடித்தார். ஜெயகாந்தனின் கதையில் பி லெனின் இயக்கத்தில் உருவான “எத்தனை கோணம் எத்தனை பார்வை” யில் சுயமரியாதை இயக்கத்தில் பற்றுள்ள கதாபாத்திரத்தில் நடித்தார். பாலுமகேந்திராவின் இயக்கத்தில் நடித்த ”நீங்கள் கேட்டவை” அவருக்கு அவ்வளவு பொருந்தாத படமென்றாலும், பாலுமகேந்திராவின் இயக்கம் அதை சரிசெய்து விட்டது.
தியாகராஜனுக்கு ஆக்‌ஷன் கதைகள் மட்டுமே பொருத்தமாய் இருக்கும். ஆக்ரோஷம், கோபம் ஆகியவற்றை வெளிக்காட்டும் சிறிய கண்களோடு கூடிய இறுக்கமான முகம், மாநிறத்துக்கும் சற்று குறைவான நிறம். எனவே அவருக்கு காவல்துறை அதிகாரி, ராணுவ அதிகாரி அல்லது சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டு பழிவாங்கும் இளைஞன் போன்ற ரோல்கள் நன்கு பொருந்தும். அவர் ஏற்று நடித்த திரைப்படங்களின் பெயரே பாதி கதையை சொல்லிவிடும். கொம்பேறி மூக்கன், எரிமலை, கருப்பு சட்டைக்காரன், நெருப்புக்குள் ஈரம், சேலம் விஷ்ணு, தீச்சட்டி கோவிந்தன் என.

இந்த காலகட்டத்தில் தியாகராஜன் நடித்த முக்கியமான படம் “காவல்”. 1983 ஆம் ஆண்டு கோவிந்த் நிஹ்லானி இயக்கத்தில் ஓம்பூரி நடித்து, நடிப்புக்காக தேசிய விருது பெற்ற  “அர்த் சத்யா” வின் ரீமேக். நேர்மையாக இருக்கும்  சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தன் துறையில் இருப்பவர்களால் சிரமத்துக்கு உள்ளாவதும், பின் சூழல் காரணமாக குற்றம் சாட்டப்படுபவராக கதையமைப்பு கொண்ட படம். இந்தப் படம் தமிழில் நன்றாக போகவில்லை என்றாலும், தியாகராஜனுக்கு நல்ல மதிப்பைக் கொடுத்த படம்.

ஒருவர் ஆக்சன் ஹீரோவாக பரிமளித்துவிட்டார் என்பதற்கு இன்னொரு அளவுகோல் இரட்டை வேடம் கொண்ட கதை அம்சப்படங்களில் நடிப்பது. தியாகராஜனுக்கு எரிமலை படத்தில் மூன்று வேடங்கள். கொத்தடிமையான தந்தை கொல்லப்பட, பழிவாங்கும் இரண்டு மகன்களாகவும் தியாகராஜனே நடித்தார். கொம்பேறி மூக்கனில் தந்தை கொல்லப்பட, கொன்றவர்களைப் பழிவாங்க, மகனுக்கு சண்டைப் பயிற்சிகள் கொடுத்து அம்மாவே வல்லவனாக உருவாக்குவார். அந்த அம்மா கேரக்டரில் சரிதா நடித்தார். கொம்பேறி மூக்கன் பாம்பு போல பகையை மறக்காமல் பழிவாங்குபவராக தியாகராஜன் நடித்தார். மேலும் அவர் நடித்த கறுப்பு சட்டைக்காரன், ராஜா யுவராஜா, நெருப்புக்குள் ஈரம், மச்சக்காரன், ஊமைத்துரை போன்ற திரைப்படங்களும் இதே மாதிரியான ஆக்‌ஷன் மசாலாக்கள்தான். ராஜசேகர் இயக்கத்திலேயே செவன் சாமுராய், ஷோலே போன்ற படங்களின் பாணியில் எடுக்கப்பட்ட முரட்டுக்கரங்கள் என்ற படத்திலும் நாயகனாக நடித்தார். பின்னர் பூவுக்கள் பூகம்பம் படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்தார்.

தியாகராஜன் அவ்வப்போது மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்து வந்தார். மலையாளத்தில் அவர் நடித்ததில் ஒரு முக்கியமான படம் ”நியூ டெல்லி”. ஜோஷி இயக்கத்தில் மம்முட்டி, சுரேஷ் கோபி நடித்த இப்படத்தில் “சேலம் விஷ்ணு” என்னும் கொலைகாரன் வேடத்தில் தியாகராஜன் நடித்தார். மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற படம் இது. இந்தப் படத்தில் வரும் சேலம் விஷ்ணு கேரக்டர் எப்படி வந்தது என இதன் பிரிக்வெல்லாக “சேலம் விஷ்ணு” படத்தை தமிழில் தானே இயக்கி நடித்தார். அஜித் நடித்த பிரிக்வெல்லான பில்லா 2 வுக்கு தியாகராஜன் தான் முன்னோடி. தொடர்ந்து அதோலோகம், மனு அங்கிள், அப்காரி போன்ற படங்களில் நடித்தார். பிரியதர்ஷன் இயக்கத்தில் ஒரு முத்தசி கதா மற்றும் ஜோஷி இயக்கத்தில் மோகன்லால் நடித்த நம்பர் 20 மெட்ராஸ் மெயில் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் நாயகனாக எதிலும் நடிக்கவில்லை. எல்லாமே சிறிய கதாபாத்திரங்கள்தான்.

தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஸ்டேட் ரவுடி என்ற படத்தில் நடித்தார். இதே ஆண்டில் சில்க் நாயகியாக நடித்த “மிஸ் பமீலா” என்ற படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்தார்.

தியாகராஜன் நாயகனாக நடித்துக் கொண்டிருந்தபோது அவர் விஜயகாந்த், அர்ஜூன் போல ஒரு மினிமம் கியாரண்டி ஆக்‌ஷன் ஹீரோவாக இருந்தார். அந்த காலகட்டத்தில் படங்கள் அதிகபட்சமாக 60 பிரிண்டுகள் தான் போடப்படும். தியாகராஜன் படங்கள் அதைவிட குறைவான பிரிண்டுகளே போடப்படும். வெளியாகும் செண்டர்களில் படம் நாலு வாரங்கள் ஓடி, பின்னர் அடுத்தடுத்த செண்டர்களில் ஒரு வாரம் ஓடினாலே தயாரிப்பாளர் தப்பித்து விடுவார். ஒரளவு குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தியாகராஜன் படங்கள் ஆக்சன் படங்களாக இருந்ததால், மக்களால் பெரிதும் சிலாகிக்கப் படாமல் இருந்தாலும், தயாரிப்பாளர்களைக் காப்பாற்றியதால் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றார். இதில் புரியாத விஷயம் என்னவென்றால், தமிழில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும்போதே, ஏன் அதைவிட சம்பளம் குறைவாக கிடைக்கக்கூடிய கேரள திரையுலகில், அதுவும் முக்கியமில்லாத ரோல்களில் நடித்தார் என்பது. தெலுங்கிலும் அப்போதைய காலகட்டத்தில் எந்த நிர்ப்பந்தத்தில் வில்லனாக நடித்தார் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் தெலுங்கில் நடிகர்,இயக்குநராக இருந்த பெக்கட்டி சிவராம் இவரது மாமனார்.

இப்படி ஓரளவுக்கு செட்டான ஒரு நடிகர், திடீரென திரையுலகில் இருந்து ஒதுங்கி பிண்ணனிக்கு போகக் காரணம், அவரது மகன் பிரசாந்தின் அறிமுகமே. தியாகராஜன் மகன் பிரசாந்த் அறிமுகமான “வைகாசி பொறந்தாச்சு” வெள்ளி விழா படமாக அமையவும், பிரசாந்தின் கேரியருக்கு உறுதுணையாக தன்னுடைய திரைப் பங்களிப்பை குறைத்துக் கொண்டார்.

சத்யராஜ் போன்றவர்கள் தங்கள் மகன் நாயகனாக நடித்த போதும், விடாமல் படங்களில் நாயகனாக நடித்து வந்தார்கள். தியாகராஜனும் தொடர்ந்திருந்தால் இன்னும் சில வருடங்கள் நாயகனாக இருந்திருக்கலாம். ஏனென்றால் 1995 வரை அவர் மாதிரியான ஹீரோக்களுக்கு தமிழ்சினிமாவில் இடம் இருந்தது.
பொதுவாக ஹீரோவாக நடிப்பவர்கள், தங்கள் மார்க்கெட் தொய்வுறுவது போல் தெரிந்தால், சொந்தப்படம் எடுத்து தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்வார்கள். அர்ஜூன் தன் வாய்ப்புகள் குறைந்த போது, சேவகன் என்னும் படத்தை எடுத்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அதுபோல தன்னை நிலைநிறுத்தும் அளவுக்கு படமெடுக்கவும் தியாகராஜனால் முடிந்த ஒன்றுதான்.

1991ல் அறிமுகமான பிரசாந்தும், 2000 ஆவது ஆண்டு வரை, குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் அஜீத் ஒரு முக்கிய நாயகனாக மாறும் வரை, லைம்லைட்டில் இருந்தார். அதன் பின்புலமாக தியாகராஜனின் உழைப்பும் இருந்தது.

பின்னர் பிரசாந்தின் கேரியரை புதுப்பிப்பதற்காக ஷாக், ஜெய், பொன்னர் சங்கர், மம்பட்டியான் ஆகிய படங்களை இயக்கினார். ஆனால் எதிலும் வெற்றி கிட்டவில்லை.


சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் “பெஸ்ட் டாட் ஆஃப் மில்லினியம்” என்னும் விருதை தியாகராஜனுக்கு ஒரு நிறுவனம் கொடுத்தது. தன் மகனின் வளர்ச்சிக்காக தன் கேரியரை பாதியில் நிறுத்திய ஒருவருக்கு கிடைத்த சிறப்பு அது.


February 18, 2015

விருதுநகர்

ஓல்ட் எம் ஆர் என்று தமிழ்சினிமா வினியோக வட்டாரங்களில் அழைக்கப்படும் பழைய மதுரை,ராமநாதபுரம் மாவட்டங்கள் இன்று மதுரை,திண்டுக்கல்,தேனி,ராமநாதபுரம்,சிவகங்கை,விருதுநகர் என ஆறு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுவிட்டன. விருதுநகர் மாவட்டத்தைத் தவிர மற்ற ஐந்து மாவட்டக்காரர்களும் விருதுநகர் என்னும் ஊருக்குள் நுழைந்தாலே சற்று அன்னியமாகத்தான் உணர்வார்கள். அவ்வளவு ஏன் விருதுநகர் மாவட்டத்திலேயே விருதுநகரைத் தவிர மற்ற ஊர்க்காரர்களும் கூட அவ்வூருக்குள் நுழைந்தாலே சற்று அன்னியமாகத்தான் உணர்வார்கள்.

முக்கியமாக மதுரை,திண்டுக்கல் பகுதிகளில் தங்கள் இளமைக்காலத்தை கழித்தவர்கள் விருதுநகருக்கு முதன்முதலாக வந்தால் பல வித்தியாசங்களை உணர்வார்கள்.91 ஆம் ஆண்டு நான் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டு இருந்தபோது,என் தந்தை பணியிடமாறுதல் காரணமாக விருதுநகருக்கு குடிபுகுந்தோம். இரண்டு நாட்கள் கழித்து இரவு உணவு பார்சல் வாங்க சற்று தொலைவில் இருந்த கடைக்குப் போனேன். வாங்கும் போது, கடை கல்லாவில் இருந்தவர், புதுசா குடிவந்திருக்கீங்களா? என்று கேட்டார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. ஏதாவது சின்ன ஊரில் ஒரு கடைக்காரர் அப்படிக் கேட்டால் பரவாயில்லை. ஆனால் ஒரு மாவட்டத்தலைநகரில், தமிழ்நாட்டில் பருப்பு, எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் கேந்திரங்களில் ஒன்றான விருதுநகரில் எப்படி கண்டுபிடித்தார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.

வீட்டிற்கு வந்து பொட்டலத்தைப் பிரித்ததும் வீட்டிலுள்ளவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. என்னடா புரோட்டா வாங்கிட்டு வரச் சொன்னா வரிக்கி வாங்கிட்டு வந்திருக்க என்றார்கள். நான் முழிக்க, பின்னர் தான் தெரிந்தது இங்கே புரோட்டா என்றாலே எண்ணையில் முக்குளிப்பாட்டிய புரோட்டாதான் என்றும், சாதா புரோட்டா கிடைப்பது அரிது என்றும். அடுத்த நாள் காலை காட்சிக்கு மன்னன் திரைப்படத்திற்கு போனேன். அதற்கு முதல்நாள் மதுரையில் பயங்கர கூட்டம் இருந்ததை பஸ்ஸில் வரும்போது பார்த்திருந்தேன். ஆனால் இங்கே ஓரிருவர்தான் தென்பட்டார்கள். இத்தனைக்கும் படம் வெளியான முதல் வாரம்.ஆனால்  படம் பார்க்கும் போது பாடல் காட்சிகள் வரும்போதெல்லாம் திரையைச் சுற்றி வண்ண விளக்குகளை ஒளிரவிட்டார்கள். படம் முடிந்து வெளியே வந்து பார்த்தால் சனி,ஞாயிறு 5 காட்சிகள் என்று போஸ்டரில் துண்டு போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். எங்கள் வீட்டில் உள்ளவர்கள், சனிக்கிழமை படத்துக்கு போய்விட்டு வந்து எவ்வளோ கூட்டம் என அலுத்துக் கொண்டார்கள்.

பின்னர் தான் தெரியவந்தது, அங்கே எந்தப் படம் என்றாலும், சனி ஞாயிறு 5 காட்சிகளும், மற்ற நாட்களில் 4 காட்சிகளும் என்று. எல்லோருமே சனி, ஞாயிறுகளில் தான் படத்துக்கு வருவார்கள், அந்த ஊரின் ஒரே பொழுதுபோக்கு அதுதான். குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வருவார்கள். திங்கட் கிழமை காலைக் காட்சி புல் ஆனால் அந்தப் படம் அந்த ஆண்டின் பிளாக் பஸ்டராக விநியோக வட்டாரத்தால் கருதப்படும்.

ஒரு மாதம் கழித்து, பக்கத்து வீட்டுக்காரரின் பெண் திருமணத்திற்கு அழைத்தார்கள். காலை மண்டபத்திற்கு போனோம். தேவையற்ற சடங்குகள் இன்றி, சமுதாயப் பெரியவர் ஒருவர் தாலி எடுத்துக் கொடுக்க மணமகன் தாலி கட்டினார். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மண்டபம் பாதி காலியானது. காலை உணவு முடிந்ததும் மண்டபத்தில் மணமக்கள் உட்பட பத்துப் பேர்தான் இருந்தோம். பெண் வீட்டிற்கு, மாப்பிள்ளை வீட்டிற்கு என்று தனித்தனியாக மண்டபம், சாப்பாடு எனத் தெரியவந்தது. அப்படி பிரிந்து சென்ற பின்னும் சாப்பிட்டுவிட்டு உடனே கிளம்பி விடுவார்கள்,மதிய சாப்பாட்டிற்கு என்று தனியாக வீட்டில் போய் அழைத்தால்தான் வருவார்கள் என்று கேள்விப்பட்டபோது, அதிர்ச்சியாக இருந்தது.

திருமண விழாக்களை எல்லாம் கொண்டாட்டமாக அனுபவித்த மதுரை மாவட்டத்துக்காரனுக்கு இது ஜீரணிக்க முடியாததுதான். ஓரளவு பழக்கமானவர்களாக இருந்தால் கூட முதல் நாளே மண்டபத்திற்கு சென்று, கூடமாட ஒத்தாசையாக இருந்து, பந்தி பரிமாறி, சேரை இழுத்துப் போட்டு வட்ட சேர் மாநாடு கூட்டி, பாடல்களைக் கேட்டுக் கொண்டே வம்பு வளர்த்து, மண்டபத்தை ஒரு சேர காலி செய்து கிளம்பும் கலாச்சாரம் எங்கே? மணமக்கள் வீட்டார் தனித்தனியாக சாப்பிடும் கலாச்சாரம் எங்கே?. நல்ல வேளை மணமக்களாவது ஒரே மண்டபத்தில் சாப்பிட்டுக்கொள்கிறார்களே என்று ஆறுதல் பட்டுக் கொள்ளத்தான் முடிந்தது. அதற்கடுத்த மாதத்தில் பங்குனி பொங்கல் என்னும் விருதுநகரின் பிரசித்தி பெற்ற திருவிழா வந்தது. நாங்கள் குடியிருந்த தெருவில் இருந்த இரண்டு திருமணமாகாத பெண்கள் சர்வ அலங்காரத்துடன்  கழுத்து நிறைய நகையுடன் குடும்பத்தார் சூழ கிளம்பினார்கள். நம்ம பக்கமும் இப்படித்தானே பொண்ணுங்க, திருவிழான்னாலே புல் கோட்டிங்கோட கிளம்புவாங்க, ஆனா இங்க இவ்ளோ நகையை போட்டுகிட்டு போறாங்களே என லேசாக சந்தேகம் வந்தது. பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்த போது, இங்க பொண்ணு பார்க்க வீட்டுக்கு வர மாட்டாங்கப்பா, இன்ன தேதிக்கு கோவிலுக்கு இல்லாட்டி திருவிழாக்கு கூட்டிட்டு வாங்க, நாங்க பார்க்குறோம்னு பேசி வச்சிக்குவாங்க. அங்க வச்சு பொண்ண பார்த்திட்டு பின்னர் முடிவு சொல்லுவாங்கப்பா என்றார். பெண்ணுக்கு எவ்வளவு நகை போட உத்தேசித்திருக்கிறார்களோ, அந்த அளவு நகையை பெண் அணிந்து திருவிழாவுக்குச் செல்வார் என்றும்,வியாபாரத்தில் ஈடுபடும் மாப்பிள்ளைக்கு 100 பவுன் என்றால், அரசு அல்லது தனியார் வேலையில் இருப்பவருக்கு 50 பவுனுக்கு குறைவாகத்தான் போடுவார்கள் என்றும் சொன்னார்.

அடுத்த நாள் திருவிழாவுக்குச் சென்ற போது, ஜமுக்காளத்தை விரித்து, சுற்றத்தார் நடுவே பெண் அமர்ந்திருப்பதைப் பார்க்கும் போது, என்னையறியாமல் மெல்லிய புன்முறுவல் ஏற்பட்டது.
ஒரு ஊரில் இருந்து இன்னோரு ஊருக்குச் செல்லும் போது, வீட்டுப் பெண்களுக்கு எளிதில் சிநேகிதம் அக்கம் பக்கத்தில் கிடைத்துவிடும். பள்ளி,கல்லூரி பையன்களுக்கும் அப்படியே. 30 வயதுக்கு மேற்பட்ட குடும்பத்தலைவர்களுக்கு பணியிடத்தில் சிநேகிதம் கிடைத்தால்தான். மற்றபடி வெளியிடங்களில் ஆத்மார்த்த நட்பு கிடைப்பது கடினம். கல்லூரி மாணவனான எனக்கே எங்கள் தெருவிலும், சுற்றுவட்டாரத்திலும் நட்பு கிடைக்கவில்லை. பெரும்பாலும் பையன்கள் குழுவாகவே இயங்கினார்கள். அந்தக் குழுவில் இடம்பிடிப்பது மிகக் கடினமாக இருந்தது. மிகவும் கன்சர்வேடிவ்வாக இருப்பார்கள். எனக்கே இப்படியென்றால், என் தந்தையின் நிலையோ படு மோசம். விருதுநகர் சம்சாரிகளின் சொற்கோவையில் அதிகபட்சம் ஐம்பது வார்த்தைகள் தான் இருக்கும். அதிலும் சரக்கு, கொள்முதல்,டிடி கமிசன், கலெக்‌ஷன், சிட்டை, செக் ரிட்டர்ன் போன்ற சில வார்த்தைகளே அதிகப்படியாக உச்சரிக்கப்படும். அப்போது சாட்டிலைட் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் வராத காலம் வேறு. வேறு வழியில்லாமல் என்னுடன் அவர் நெருக்கமாக நண்பனைப் போல் உரையாட ஆரம்பித்தார். நாங்கள் விருதுநகர் சென்றதால் எனக்கு கிடைத்த போனஸ் அது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, கோவை,திருப்பூர்,சிவகாசி ஆகிய இடங்கள் பிழைக்கச் செல்லும் இடங்களில் முதலிடம் வகிப்பவை. மற்ற மாவட்ட தலைநகரங்களுக்கு ஓரளவுக்கு மக்கள் இடம் பெயருவார்கள். ஆனால் நூற்றுக்கணக்கான கோடிகளுக்கு வர்த்தகம் நடக்கும் விருதுநகருக்கு யாரும் பிழைப்பு தேடி வருவதில்லை. மத்திய, மாநில அரசு பணியாளர்கள், வங்கி ஊழியர்கள் போன்றோர்கள் இட மாறுதலுக்கு உட்பட்டு வருவார்கள். அதனால்தான் புதிதாக குடிவரும் ஆட்களை உள்ளூர்க்காரர்களால் அப்போது எளிதில் கண்டுபிடிக்க முடிந்தது.

விருதுநகரைப் பொறுத்த வரையில் பெரும்பாலும் கமிஷன் வியாபாரம்தான். பல எண்ணெய் தொழிற்சாலைகளும், சில நூற்பாலைகளும் உண்டு. கமிஷன் கடைக்கு பத்துக்கு பத்தடி இடமும், ஒரு டேபிளும், போனும் போதும். பெரும்பாலும் உள்ளூர்காரர்களே குமாஸ்தா மற்றும் குடோனுக்கான லோடு மேனாக இருப்பார்கள். தொழிற்சாலைகளிலும் பெரும்பாலும் உள்ளூர் ஆட்கள்தான் இருப்பார்கள். அந்தமாதிரி வேலைகளுக்கு வெளியூரில் இருந்து வந்து, வீடுபார்த்து குடித்தனம் இருக்கும் படி சம்பளம் இருக்காது. அவ்வளவு பெரிய ஊரில் நல்ல டேபிள் போட்டு சாப்பிடும்படி ஒரே ஒரு சைவ ஹோட்டல்தான் இன்னும் இருக்கிறது என்பதில் இருந்தே அந்த ஊருக்கு ஒரு நாளில் உத்தியோக பூர்வமாக  வரும் வெளியூர் பயணிகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளலாம்.

விருதுநகர் மக்கள் பணத்தைச் செலவு செய்வதில் மிகச் சிக்கனமாக இருப்பார்கள். நகை வாங்கினால் கூட நல்ல உருட்டாக, பெரிய நகையாக, அதிக சேதாரம் வராத டிசைனாக வாங்குவார்கள். லைட் வெயிட் கலெக்‌ஷன் அவர்களிடம் இருக்காது. வீட்டிலும் கூட ஆடம்பரப் பொருட்கள் இருக்காது. பர்னிச்சர்கள் கூட நல்ல ரீ சேல் வேல்யூ உள்ள மர பர்னிச்சர்களாகத்தான் வாங்குவார்கள். மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் சாதாரணமாகக் கிடைக்கும் காஸ்மெட்டிக் அயிட்டங்கள், பிஸ்கட் வகைகள் கூட விருதுநகரில் அரிதாகத்தான் கிடைக்கும். பணம் ஒரு குறிப்பிட்ட சாராரிடமே சுற்றி வருவதால் மற்றவர்கள் திடீரென உள்ளே வந்து பெரிய அளவில் சம்பாதிக்க முடியாத நிலை இருந்தது.
மூன்றாண்டுகள் கழித்து என் தந்தைக்கு மீண்டும் பணியிட மாறுதல். மற்ற ஊர்களில் எல்லாம் வீடு மாற்றும் போது, கூடவே வண்டியில் வரும்வரை நண்பர்களைக் கொண்டிருந்த எனக்கு கையைசைத்து வழியனுப்பக் கூட யாருமில்லாத நிலை.

அடுத்து பத்தாண்டுகள் கழித்து, சில மாதங்கள் விருதுநகரில் தங்கும் சூழல். பெரிய அளவில் மாற்றத்தை உணரமுடியவில்லை. சுற்றிலும் உருவாகியிருந்த பொறியியல் கல்லூரிகளால் கல்லூரி ஆசிரியர்கள் புதிதாக குடிவர ஆரம்பித்து இருந்தார்கள். தாவணி அணிந்த பெண்கள் குறைந்து சுடிதார், நைட்டி அதிகம் தென்பட்டது. ஆனால் ஒரு நல்ல துணிகளுக்கான ஷோ ரூமோ, ஸ்டைலான சலுனோ தென்படவில்லை.
சில வாரங்களுக்கு முன்பும் விருதுநகரில் ஒருநாள் தங்கும் வாய்ப்பு ஏற்பட்டது.  சனி, ஞாயிறு 5 காட்சிகளுக்குப் பதிலாக ஞாயிறு மட்டும் 5 காட்சிகள்,ஒன்றிரண்டு புதிய பேக்கரிகள், விருதுநகரின் பிரதான அசைவ உணவு கடையான பர்மா ஹோட்டலுக்கு புதிய பிராஞ்ச் என சில மாற்றங்கள் தான். உத்தியோக பூர்வமாக நட்பாகியிருந்த விருதுநகர்காரரிடம் “இப்பவும் முன்ன மாதிரி வெளி ஆட்கள் வர்றதில்லையா” ? என கேட்டேன்.

நீங்க வேற, வியாபாரத்துல இருக்குறவங்க தவிர மத்த ஆளுகள்ல நிறைய பேரு  ஐடி இண்டஸ்ட்ரிக்கு போயிட்டாங்க என்றார். அப்படியும் இன்னும் ஊர் மார்டன் ஆகலையேப்பா என்றேன். விருதுநகர்ல பிறந்து வளர்ந்தவன் விருதுநகர்காரனாத்தான் எங்கயுமே இருப்பான். எந்த மெண்டாலிட்டியில இங்க இருந்து கிளம்பி போனானோ அதே மெண்டாலிட்டிலதான் இங்க பொங்கலுக்கு வருவான் என்றார்.

இப்போதும் கூட வீட்டில் தந்தை-மகன் சுமுக உறவு இல்லாதவர்கள், அண்ணன் – தம்பிக்கு இடையே சுமுக உறவு இல்லாதவர்கள் விருதுநகர் சென்று குடியேறலாம். ஆறு மாதத்தில் அவர்கள் நண்பர்களாகிவிடும் வாய்ப்பு மிக அதிகம்.

(”தமிழ்” மின்னிதழில்  வெளியான என்னுடைய கட்டுரை. நன்றி தமிழ் மின்னிதழ்) 

January 22, 2015

சுதாகர்


திரையுலகில் எந்தப் பின்புலமும் இல்லாமல் அண்டை மாநிலத்தில் இருந்து நடிக்க வந்த ஒருவர் இரண்டே ஆண்டுகளில் நான்கைந்து வெற்றிப்படங்களைக் கொடுப்பது, பல வித்தியாசமான கதைகளில் நடிப்பது என்பது எல்லாம் ஆச்சரியமான விஷயம் இல்லை. ஆனால் அந்த இரண்டே ஆண்டுகளுக்குப் பின்னால் அவர் கண்காணாமல் போய்விடுவதும், யாரும் அவரைப்பற்றி கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதும் சற்று ஆச்சரியமான விஷயம்தான்.

சுதாகர் 1979 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயிலில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்தின் அபார வெற்றியினால் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அறியப்பட்டார். தொடர்ந்து பாக்யராஜ் இயக்குநராக அறிமுகமான “சுவரில்லாத சித்திரங்கள்”, பாரதிராஜாவின் “நிறம் மாறாத பூக்கள்”, தேவராஜ் மோகன் இயக்கத்தில் அம்பிகா அறிமுகமான “சக்களத்தி”, பி மாதவன் இயக்கத்தில் “குருவிக்கூடு” , ஜி என் ரங்கராஜனின் ”ருசி கண்ட பூனை” என முக்கிய இயக்குநர்களின் படங்களில் நடித்தார்.

சுதாகர் நடித்த படங்களின் தலைப்புகளைப் பார்த்தால் படத்தின் தலைப்பே கதையைச் சொல்லும் அளவுக்கு தனித்துவமாக இருக்கும். ஒருத்தி மட்டும் கரையினிலே, நதி ஒன்று கரை மூன்று, தரையில் வாழும் மீன்கள், நிறம் மாறாத பூக்கள், சுவரில்லாத சித்திரங்கள், ஆயிரம் வாசல் இதயம், கரை கடந்த ஒருத்தி, பெண்ணின் வாழ்க்கை, கல்லுக்குள் ஈரம், கரும்புவில், அழைத்தால் வருவேன்,அன்னப் பறவை என அழகிய தமிழ் தலைப்புகள்.

சுதாகர் தன்னுடன் கிழக்கே போகும் ரயிலில் அறிமுகமான ராதிகாவுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ராதிகா நடிக்கிறார் என்றாலே சுதாகர் மெயினா? என்று அக்காலத்தில் கிராமப்புறங்களில் கேட்பார்கள். நிறம் மாறாத பூக்கள், சின்னஞ் சிறு கிளியே, எங்க ஊர் ராசாத்தி, தை பொங்கல், ஆயிரம் வாசல் இதயம், நதி ஒன்று கரை மூன்று, இனிக்கும் இளமை, சந்தன மலர்கள், எதிர் வீட்டு ஜன்னல் என பல படங்களில் இணைந்து நடித்தார்கள்.

அப்பொழுது மிகப் பிரபலமாக விளங்கிய, வானொலிகளில் அடிக்கடி ஒலிபரப்பபடும் பாடல்களில் பெரும்பான்மை சுதாகர் நடித்த படங்களில் இருந்து இருக்கும். கிழக்கே போகும் ரயிலில் இருந்து மாஞ்சோலை கிளிதானோ, நிறம் மாறாத பூக்களில் இருந்து ஆயிரம் மலர்களே மலருங்கள், சுவரில்லாத சித்திரங்களில் இருந்து “காதல் வைபோகமே”, கரும்புவில்லில் இருந்து ”மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்” எங்க ஊரு ராசாத்தியில் இருந்து ”பொன் மானைத் தேடி நானும் ஊர்கோலம் வந்தேன்” ஆகிய பாடல்கள் சுதாகர் தமிழ்ப்படங்களில் நடிப்பதை விட்டுச் சென்ற பின்னும் ஒலித்துக்கொண்டிருந்தன.
அதிலும் குறிப்பாக மீன் கொடித் தேரில் பாடலின் புகழ்பெற்ற ஹம்மிங்கான ஓலா ஒலா ஓலலல்லா ஒலிக்கத் தொடங்கிய பின்னர், கரும்புவில் படத்தில் இருந்து உங்கள் அபிமான பாடல் என தொகுப்பாளர் சொல்வதற்குள் மக்கள் பாடல் வரிகளை முணுமுணுக்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இவற்றை விட கிராமப்புற பகுதிகளில் பெரும் ஹிட்டான பாடலென்றால் பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில் இடம்பெற்ற ஓரம்போ ஒரம்போ ருக்குமணி வண்டி வருது பாடல்தான். சிறுவர்கள் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ளும் போதும், இளம் பெண்கள் சைக்கிளில் வரும் போது கிண்டல் செய்யவும் இந்தப் பாடல் பயன்பட்டது. ஒரு பெண் சைக்கிளில் வரும் போது பையன்கள் இந்தப் பாடலைப் பாடினால் அது ஈவ் டீசிங்கிற்கு இணையாக கருதப்பட்டது.
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இப்படி பட்டி தொட்டி எங்கும் அறிமுகமான நடிகர் திடீரென்று திரையுலகில் இருந்து காணாமல் போவதும் அதை யாரும் பொருட்படுத்தாமல் இருப்பதும். சுஜாதா திரையில் எழுதிய வசனங்களில் முக்கியமான “மரணத்தை விட கொடுமையானது, மறக்கப்படுவது” தான் ஞாபகம் வருகிறது. தமிழை விட்டு தன் தாய் மாநிலமான ஆந்திராவிற்குச் சென்ற சுதாகர் மிகச் சில படங்களில் நாயகனாக நடித்துவிட்டு முழுநேர காமெடியனாக மாறினார். ரஜினியின் அதிசயப்பிறவியிலும், 90களின் ஆரம்பத்தில் தெலுங்கில் இருந்து டப்பாகி வந்த படங்களிலும் சுதாகரைப் பார்க்க முடிந்தது. அதில் எல்லாம் வித்தியாசமான வாய்ஸ் மாடுலேசன்களை கொண்டு காட்சிகளை சுவராசியப்படுத்துவார்.

சுதாகர் நடிக்க வந்த காலகட்டம் புதிய கிராமம் சார்ந்த கதைகளை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்த காலகட்டம். அந்த கதைகளுக்கு திராவிட முகமும் உருவமும் கொண்ட சுதாகர் பொருத்தமாக இருந்தார். அப்போதைய கிராமங்களில் இரண்டு விதமான இளைஞர்களைப் பார்க்கலாம். ஒன்று கடுமையான உடல் உழைப்பைக் கோரும் விவசாயம் சார்ந்த பணிகள், கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவர்கள். இன்னொன்று கடின உடல் உழைப்பு தேவைப்படாத சிறு கடைகள் நடத்துவோர், சிறு தொழில்கள் செய்வோர், படித்து விட்டு அரசு/தனியார் வேலைக்குச் செல்லும்/எதிர்பார்த்திருக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகள். இந்த இரண்டாவது வகையறா இளைஞர்களைப் பிரதிபலிக்கும் முகமாக சுதாகர் இருந்தார்..

அப்பொழுது வந்த படங்களும் இம்மாதிரியான இளைஞர்களை பாத்திரமாகக் கொண்ட கதைகளாக இருந்தன. அவற்றிற்கு ஏற்ற வகையில் சுதாகர் பொருந்தினார். கிழக்கே போகும் ரயிலில் பாடலாசிரியனாக விரும்பும் நாவிதர் மகன், நிறம் மாறாத பூக்கள், மாந்தோப்பு கிளியேவில் அப்பாவி இளைஞன் என பெரும்பாலும் கிராமத்து இளைஞன் வேடம்தான். சுவரில்லாத சித்திரங்கள், ருசி கண்ட பூனை போன்ற சில படங்களில் தான் நகரத்து இளைஞனாக நடித்தார்.
சுவரில்லாத சித்திரங்களில் வசதியான சிறு நகர இளைஞன் கதாபாத்திரம். தான் காதலிக்கும் பெண்ணைக் கவர அந்தத் தெருவில் இருக்கும் தையல் கடையில் டேரா போடும் இளைஞன். அந்தக் கடையில் நுழைய தயக்கம், பின்னர் அங்கு செட்டிலாவது என நுணுக்கமாக பாக்யராஜ் காட்சிப் படுத்தலுக்கு ஏற்ப நன்கு நடித்திருப்பார்.

சுதாகர் நடித்த படங்கள் எல்லாமே ஓரளவு நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் தான். அதை அவரது படங்களின் தலைப்பில் இருந்தே அறியலாம். கதை இருந்தால்தான் நல்ல தலைப்பே வைக்க முடியும். அப்படி கதையிருந்த, சிறு முதலீட்டுப் படங்கள் உருவான காலகட்டத்தில் அவருக்கான இடம் தமிழில் இருந்தது. 80களுக்குப் பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்காந்த் பாதிப்பில் நாயகன் தொடர்பாக திரை உலகம் மாறிய போது சுதாகருக்கு இடமில்லாமல் போய்விட்டது. ஆக்ரோசமாக சண்டை போடத் தெரிந்திருக்க வேண்டும் அல்லது நளினமாக ஆடுவது போல் நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்ட போது சுதாகரிடத்தில் அதற்கான பதில் இல்லை.  

இப்போதைய விமலை இந்த இடத்தில் வைத்துப் பார்க்கலாம். சுதாகர் பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர், விமல் கூத்துப் பட்டறைக்காரர். சுதாகருக்கு கதை அம்சமுள்ள கிராமியப் படங்கள் என்றால் விமலுக்கு காமெடி அதிகமுள்ள சிறு நகரப் படங்கள். இருவருமே குறுகிய இடைவெளியில் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர்கள், சிறு முதலீட்டுப் படங்களின் நாயகர்கள், சம்பள விஷயத்தில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாதவர்கள் மேலும் தங்களால்தான் இந்தப் படம் வெற்றியடைந்தது என்று சொல்ல முடியாதவர்கள். இப்படி படமெடுக்கும் போக்கு மாறும் போதோ அல்லது இவர்களை விட நல்ல சாய்ஸ் கிடைக்கும் போதோ இவர்களின் வாய்ப்புகள் திடீரென காலாவதியாகிவிடும். அதனால்தான் சுதாகர் தமிழில் இருந்து தெலுங்குக்கு ஒதுங்கினார்.  

சுதாகர் நடித்த ”மாந்தோப்பு கிளியே” சுருளிராஜனின் லேண்ட் மார்க் படம். இன்றளவும் காமெடிக்காக பேசப்படும் படம். கஞ்சத்தனம் என்றால் என்ன? என்பதற்கு வரையறையாய் சுருளிராஜன் வாழ்ந்து காட்டிய படம். அப்போது வானொலி ஒலிச்சித்திரங்களில் அடிக்கடி இந்தப் படத்தின் காமெடி காட்சிகள் ஒலிபரப்பப்படும். அந்தப் படத்தில் சுதாகர்,  பின்னாளில் ஒரு காமெடி நடிகராக பரிமளிப்பார் என்பதற்கு எந்த அத்தாட்சியுமில்லாமல் பிரேமில் வருவார்.

முழுநேர காமெடி நடிகராக நடிக்க வந்து பின்னாட்களில் நாயகர்களாக மாறியவர்கள் தமிழில் அதிகம். ஆனால் ஒரு வெற்றிப்பட நாயகனாக அறிமுகமாகி நான்கு வருடங்களுக்குள் முழு நேர காமெடி நடிகனாக மாறியது சுதாகராகத்தான் இருக்கும். மக்கள் அவரை மறந்து விட்டிருந்த நிலையில் திடீரென ரஜினிகாந்தின் அதிசயப்பிறவி படத்தில் காமெடியனாக தோன்றினார். ஏய் இவர் சுதாகருல்ல? என்றே பலரின் புருவங்களும் ஆச்சரியத்தில் உயர்ந்தன. ”இதுதாண்டா போலிஸ்” திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற உடன் ஏராளமான தெலுங்கு மசாலாப் படங்கள் டப்பாகி தமிழுக்கு வந்தன. அப்பொழுதுதான் அவர் தெலுங்கின் முக்கிய காமெடியனாக மாறி இருந்தது பெரும் பாலோனோர்க்கு தெரிய வந்தது.

நன்றாக வாழ்ந்த இடத்தில் அதை விட சுமாரான வாழ்க்கையை வாழ்வது யாருக்குமே மனச் சங்கடத்தைத் தரும். அதனால் சம்பளம் குறைவாகக் கிடைத்தால் கூட வேறு ஊருக்குச் சென்று வாழ்வை பலர் அமைத்துக் கொள்வார்கள். புகழ் போதையும், அது தரும் ஈகோவும் நிறைந்த சினிமா உலகில் இது அதிகமாகவே இருக்கும். எனவே வாய்ப்பில்லாத போது, உடனடியாக தங்கள் நிலையை விட்டு இறங்காமல் சில காலம் கழித்து,  எல்லா வித ரோல்களையும் ஏற்றுக் கொள்வார்கள். சுதாகர் ஆந்திராவிற்குச் சென்று தன்னை காமெடியனாக நிலை நிறுத்திக் கொண்டார். அதியசப் பிறவியின் ஒரிஜினலான ”யமுடுக்கி மொகுடு” படத்தின் தயாரிப்பாளர்களில் சுதாகரும் ஒருவர். அதனால் தான் அந்தப் படத்தில் தலை காட்டினார். அதன்பின்னர் தமிழ் படங்களில் நடிக்க எந்த முயற்சியும் அவர் செய்யவில்லை.


காலம் தனக்கேற்றவனை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்பதைப் போல திரை உலகமும் தன் போக்கிற்கு ஏற்ப சிலருக்கு வாய்ப்பை அளிக்கிறது. அந்த வாய்ப்பைப் பெறுபவர்கள் அதை பயன்படுத்திக் கொள்வதுடன், அடுத்த கட்ட போக்கை உன்னிப்பாய் கவனித்து, அதற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொண்டால் நிலைக்க முடியும். இல்லையென்றால் விலக்கப்பட்டு நினைவுகளாகத்தான் தங்கி இருக்க முடியும் என்பதற்கு சுதாகர் ஒரு உதாரணம்.