January 15, 2025
புலன் விசாரனை
புலன் விசாரனை படத்தின் அறிவிப்பு வந்த போது, மிகப்பெரிய ஆர்வத்தூண்டல் எல்லாம் ஏற்படவில்லை. அப்போது விஜயகாந்த் ஆண்டிற்கு குறைந்தது ஆறு படங்கள் கொடுப்பார். எண்பதுகளில், ஆண்டுக்கு பத்துப் படங்கள் என்பது விஜய்காந்திற்கு சர்வ சாதாரணம். தீபாவளிக்கு விஜய்காந்த் படம் வருகிறதா என்றெல்லாம் கேட்க மாட்டார்கள். ஒன்னா ரெண்டா எனக் கேட்பார்கள். வருகின்ற எல்லாப் படங்களுமே மினிமம் கியாரண்டிதான்.
அதனால் பூஜை போட்டாலே, படம் வியாபாரமாகி விடும். அதிர்ஷ்டம் இருந்தால் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட் அடித்து விடும். ஊமை விழிகள், உழவன் மகன், செந்தூரப்பூவே போன்ற ஆக்ஷன் படங்களை விடுங்கள். வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம், பூந்தோட்ட காவல்காரன் போன்ற படங்கள் எல்லாம், தயாரிப்பாளர் துவங்கி, வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், சார்பு தொழில்கள் செய்பவர்கள் வரை அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியைக் கொடுத்த படங்கள்.
எனவே 1989 ஆம் ஆண்டு, புலன் விசாரனை அறிவிப்பு வந்த போது பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் இல்லை. எல் பி ரெக்கார்ட் வந்த போதும் வெறும் மூன்று பாடல்கள் தானாம் என கேசட் ரெக்கார்டிங் கடைகளில் சலித்துக் கொண்டார்கள். ஆனால் அந்த எல் பி ரெக்க்கார்ட் கவரில் இருந்த விஜய்காந்தின் ஸ்டில் ஆர்வத்தை தூண்டியது. ஒரு லாங் கோட், முழங்கால் வரை அணிந்திருந்த கம் பூட்ஸ், கைகளில் கிளவுஸ், மழைத் தொப்பி சகிதம் ஒரு கேட்டை திறந்து கொண்டே பின்னால் திரும்பிப் பார்ப்பது போன்ற ஒரு ஃபோஸ்.
1990 ஆம் ஆண்டு, பொங்கலுக்கு படம் வெளியானது. ரஜினிகாந்தின் பணக்காரன், பிரபுவின் இரண்டு படங்களும் உடன் வெளியாகின. பணக்காரன் சத்யா மூவீஸ் தயாரிப்பு. பி வாசு இயக்கம், இளையராஜாவின் இசையில் பாடல்கள் நல்ல ஹிட். எங்கள் ஊர்காரர்கள் எல்லாம், திண்டுக்கலுக்கு சென்று பணக்காரன் பார்த்து விட்டு வந்தார்கள். வழக்கப்படி அப்படியே அடுத்த ஷோ விஜய்காந்திற்கு.
அவர்களுக்கு மட்டுமல்ல, திரையரங்கில் இருந்த எல்லோருக்கும் புலன் விசாரனை திரைப்படம் ஒரு புது அனுபவமாக இருந்தது. அதற்கு முன்னர் தமிழ் சினிமாவில் வந்த, அரசியல் படங்களாகட்டும், போலிஸ் படங்களாகட்டும் ஒரு பொதுவான டெம்பிளேட்டில் தான் இருக்கும். அரசியல் வாதிகள் கெட்டவர்கள், நாயகன், குணாசித்திர நடிகர்கல் அந்த கேரக்டரில் நடித்தால் போலிஸ் நல்லவர். வில்லன் நடித்தால் கெட்டவர். அவ்வளவு தான். சம்பங்களும் பொதுவான, கற்பனையான சம்பவங்கள்.
ஆனால் புலன் விசாரனை படம், என்னடா, தரையில பார்த்ததெல்லாம் திரையில வருது என்னும் அளவிற்கு செய்தித்தாள்களில் படித்த, பதட்டப்பட்ட சம்பவங்களை தன் கதையில் மைய இழையாக வைத்திருந்தது. எண்பதுகளில் தமிழ் மக்களை அதிர்ச்சியடைய வைத்திருந்த ஆட்டோ சங்கர் சம்பவம். அந்தக் கூட்டத்தின் அரசியல் தொடர்பு, அந்த அரசியல் தொடர்பு நீளும் மெடிக்கல் மாஃபியா என பிரம்மாண்டமான கேன்வாஸ்.
கதை மட்டுமல்லாமல், வசனங்களும் ஷார்ப்பாக இருந்தன. தமிழ்சினிமாவின் அரசியல் வசனங்களில் பெஞ்ச்மார்க் என்றால் பராசக்தி. அதற்கடுத்து பல படங்களை மைல்கல்லாக அமைத்தார் கலைஞர். இளங்கோ, எஸ் ஏ சாமி ஆகியோரின் வசனங்களும் அமைப்புக்கு எதிராக ஷார்ப்பாக இருக்கும்.
ஆனால், திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைந்த உடன், அதுவரை பெரிதாக அரசியல் வசனங்கள் எழுதாத பலர், திராவிட ஆட்சிக்கு எதிராக வசனங்கள் எழுத ஆரம்பித்தார்கள். இதில் என்ன பிரச்சினை என்றால், அவர்கள் அமைப்பிற்கோ, கொள்கைக்கோ எதிராக இல்லாமல், அரசியல்வாதிகளை குறி வைத்தே வசனங்களை எழுதினார்கள். பத்திரிக்கைகளும் சரி, சினிமாக்களும் சரி, அரசியல் வாதிகள் என்றாலே கெட்டவர்கள் என்ற பிம்பத்தை விதைத்தார்கள். விகடன்,கல்கி போன்ற பத்திரிக்கைகள் விசு, கோமல் சுவாமிநாதன் போன்ற எழுத்தாளர்களும் இதை தொடர்ந்து செய்தார்கள்.
carried by the wind என்பதைப் போல, எஸ் ஏ சந்திரசேகர், மணிவண்ணன் போன்றவர்களும் அரசியல் வாதிகளை கெட்டவர்களாக சித்தரித்தே எழுதினார்கள். லியாகத் அலிகானும் அதில் ஒருவர். ராம நாராயனன் போன்ற வெகு சிலர் தான் கொஞ்சம் சமநிலையில் எழுதினார்கள்.
ஆனால் விஜய்காந்த் போன்ற பவர்ஃபுல் நடிகரின், படங்களில் அது போன்ற காட்சி வருவது இன்னும் அரசியல்வாதிகளின் இமேஜை டேமேஜ் செய்யும். அதுவும் லியாகத் அலிகான் போன்றவர்களின் வசனங்கள் இன்னும் இம்பாக்ட் கொடுக்கும்.
புலன் விசாரனை படத்தில், நிகழ்காலத்திற்கு நெருக்கமான காட்சிகள், அதில் அரசியல் தொடர்பு, கூர்மையான வசனங்கள் என படம் இன்னொரு தளத்திற்குச் சென்றது.
கதை, வசனம் மட்டுமல்ல, நல்ல பொருட்செலவில் அமைக்கப்பட்ட காட்சிகளும் படம் பார்த்தவர்களை பிரமிப்பில் ஆழ்த்தின. ஆர் கே செல்வமணி, இந்தப் படக் காட்சிகளை ஓவியமாக தீட்டி, அதை ஒரு ஆல்பமாக ஆக்கி, அதை வைத்து கதை சொல்லி, வாய்ப்பு பெற்றேன் என்று சொல்லியிருப்பார். அந்த உழைப்பு பட உருவாக்கத்தில் பலன் கொடுத்தது. ஆங்கில படங்களில் இருந்து இன்ஸ்பிரேஷன் எடுத்திருந்தாலும், துப்பாக்கி தோட்டா ஒன்று ஸ்லோ மோஷனில் செல்லும் காட்சியில் தியேட்டர் அதிர்ந்தது.
ட்ரான்ஸ்பர்மேஷன் காட்சிகளைப் பற்றி, இப்போது அதிகம் சிலாகிக்கிறார்கள். இந்தப் படத்தில், மனித உறுப்புகளை எடுத்து விற்கும் டாக்டராக, கண்ணாடி போட்டு, சாதாரணமாக இருக்கும் சரத்குமார், கிளைமாக்ஸ் காட்சியில், சட்டையைக் கழட்டி போட்டு விட்டு, சிக்ஸ் ஃபேக் உடம்புடன் சண்டையிடும் ட்ரான்ஸ்பர்மேஷன் காட்சி பேசு பொருளானது. அடுத்து ஒரு ஆண்டுக்கு புலன்விசாரனை டாக்டர் என்றே அவர் தமிழ்நாட்டில் அறியப்பட்டார்.
தமிழ்சினிமாவில், அன்றாட நிகழ்வுகளைக் கொண்டு, அரசியல், சமூக விமர்சனப் படங்களை எடுக்கலாம் என்கிற ஒரு ட்ரெண்டை பவர்ஃபுல்லாக கொண்டு வந்த படம் புலன் விசாரனை என்று சொல்லலாம்.
எனக்கு தற்போது ஆச்சரியமாக இருப்பது எல்லாம், இந்தப் படத்திற்கு இயக்குநராக ஒப்பந்தமாகும் போது செல்வமணிக்கு 24 வயது. படம் துவங்கி, ஏகப்பட்ட கிரியேட்டிவ் டிஃபரன்ஸ். என் படக் காட்சிகள் இப்படித்தான் அமைய வேண்டும் என்கிற அவரது அடம். அதனால் ஆறு மாதங்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை.
எதிர்பக்கத்தில் இப்ராஹிம் ராவுத்தர் தலைமையில் பவர்ஃபுல் புரடக்ஷன் டீம், எல்லாத் தொழிலாளர்களும் அவர்களின் அன்பிற்கு கட்டுப்பட்டவர்கள். தயாரிப்பு டீம் சார்பில் படச் செலவை சுருக்கச் சொல்லி அழுத்தம், அத்தனையையும் மீறி செல்வமணி, தான் நினைத்த அவுட்புட்டை கொண்டு வந்தார். அவரது தைரியம், தன் மேல் இருந்த நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம்.
இதோடு இந்தப் பக்கமே வராதே என்று தயாரிப்பு தரப்பால் செட்டில் செய்து அனுப்பப்பட்ட அவர், படம் வெளியானதும், மரியாதையாக அழைத்துச் செல்லப்பட்டு விஜய்காந்தின் 100வது படத்தை இயக்குங்கள் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது வரலாறு. இன்றளவும் விஜய்காந்திற்கு கேப்டன் என்கிற பெயரை தமிழ்நாட்டில் நிலை நிறுத்தியதற்கு கேப்டன் பிரபாகரன் படமும், இயக்குநர் செல்வமணியும் முக்கிய காரணம்.
புது வசந்தம்
ஒரு திரைப்படத்தின் வெற்றியை எத்தனையோ வழிகளில் அளவிடலாம். அத்தனை வழிகளிலும் வென்று காட்டிய ஒரு திரைப்படம் புது வசந்தம்.
தொண்ணூறுகள் என்பது இந்தியாவின் முக்கியமான ஒரு ட்ரான்ஸ்பர்மேஷன் டெக்கேட். எண்பதுகளுக்கும் தொண்ணூறுகளுக்கும் இடையே மக்களின் வாழ்வியல், பொருளாதாரம், சிந்தனைகள், ரசிப்புத்தன்மை இவற்றில் பல வேறுபாடுகள் உண்டு. தொண்ணூறுகளை இந்தியாவின் வளர்ச்சியை நோக்கிய பத்தாண்டுகளாகவே பொதுவாக காணலாம். அந்த தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பெயரிலேயே ஒரு பாஸிட்டிவ் தன்மையுடன் வந்த படம் புது வசந்தம்.
1990, ஏப்ரல் 14 ஆம் தேதி படம் வெளியானது. அதற்கு முன்னரே வித்தியாசமான பத்திரிக்கை விளம்பரங்களின் மூலம் நிறைய பேருக்கு படம் அறிமுகமாகி இருந்தது. குட்நைட் கொசுவிரட்டிகளின் தயாரிப்பாளர் மோகனும், ஆர் பி சவுத்ரியும் இணைந்து தயாரித்த படம். குட் நைட்டில் இருந்து குட் எடுத்து சூப்பர் குட் ஆக்கி, படம் எடுத்தார்கள்.
இது வழி தவறிய மேகங்களும்
ஒரு பறவையும் நடுவானில்
சந்தித்திக் கொண்ட கதை
என்பது போன்ற கேப்ஷன்களோடு விளம்பரங்கள். எல்லா விளம்பரங்களிலும் ஆடு மேய்த்த மாதிரியும் ஆச்சு, அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு என்பது போல குட்நைட் விளம்பரங்களும் இருக்கும்.
படத்தின் முதல் வெற்றி, இது முதன் முதலாய் வரும் பாட்டு பாடல் ஒளியும் ஒலியுமில் ஒளிபரப்பான போது தெரிந்தது. வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய டிவியில் கூட்டமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட நூறு பேர். எல்லா வயதிலும் ஆண், பெண்கள். பாட்டு துவங்கிய போது அசுவராசியமாக பார்க்கத் துவங்கியவர்கள், பாடல் முடியும் போது, பாடலில் ஐக்கியமாகி இருந்தார்கள்.
மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா. வந்த எல்லோருக்கும் புது வசந்தம் பார்த்தே ஆக வேண்டும் என்கிற ஆவல். அந்த அளவிற்கு வாய்மொழியாக பரவி இருந்தது படத்தின் சிறப்பு. தல்லாகுளத்துல கள்ளழகர் எதிர் சேவைக்கு நிக்கிற கூட்டத்த விட சக்தி தியேட்டர்ல ஜனம் நிக்கிதப்போ என பேசிக் கொண்டார்கள்.
படத்தின் இசை அமைப்பாளர், எஸ் ஏ ராஜ்குமார்க்கு, அவரின் முதல் படமான சின்ன பூவே மெல்ல பேசு படத்தின் வெற்றிக்குப் பிறகு, 36 படங்கள் புக் ஆகின. ஆனால் அதன்பின் எந்த வெற்றியும் இல்லாமல், சோர்ந்து போனார். அவருக்கு இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் அதே போல நடந்தது. இம்முறை சுதாரித்துக் கொண்டார்.
பட நாயகன் முரளியும் தன் கேரியரின் மோசமான காலத்தில் இருந்தார். இந்தப் படத்திற்கு முன் வந்த பாலம் திரைப்படம் அவரை மூச்சு விட வைத்தது. இந்தப் படத்தின் வெற்றி அவரை மூச்சு கூட விட முடியாமல் இடைவிடாமல் நடிக்கும் படி செய்தது. ஏராளமான புது இயக்குநர்கள், தங்கள் முதல் படத்தில் முரளி நடித்தால் பெட்டர் என அவரை தேடி ஓடினார்கள். தமிழ் திரையுலகில், அதிகமான இயக்குநர்களின் முதல் படத்தில் நடித்தவர் என்ற பெருமையையும் முரளிக்கு பெற்றுக் கொடுத்தது. ஏராளமான புது இயக்குநர்களுக்கு முதல் படம் இசை அமைத்துக் கொடுத்தவர் இளையராஜா என்பார்கள். அதுபோல நடிகர்களில் முரளி.
கிட்டத்தட்ட தமிழ்நாட்டு மக்கள் மறந்திருந்த ஆனந்தபாபுவிற்கும் இந்தப் படம் ஒரு புது வசந்தம். மிகப்பெரிய கிரானைட் தொழிலதிபரான ராஜாவிற்கும் மீண்டும் ஒரு அறிமுகத்தைக் கொடுத்தது இந்தப்படம்.
புதுக்கணக்கு எழுதும் போது, முதல் வரவாக,தங்கள் குலதெய்வத்தின் பெயரில் ஒண்ணே கால் ரூபாயை வணிகர்கள் எழுதுவது போல, நண்பர்கள் பற்றிய கதை என்றாலே சார்லிக்கு ஒரு கேரக்டர் என்று எழுதிவிட்டுத்தான் கதை டிஸ்கஷனுக்கே இயக்குநர்கள் உட்கார்ந்தார்கள்.
நாயகி சித்தாராவிற்கு தேவதை ஸ்டேட்டஸை உடனடியாக வழங்கினார்கள் தமிழ்நாட்டு மக்கள். அவர் தங்களை கொல்ல வந்தால் கூட, தங்களின் நன்மைக்காகத்தான் இருக்கும் என நம்பும் அளவிற்கு, அப்படி ஒரு மதிப்பு அவரின் மேல் எல்லோருக்கும் ஏற்பட்டது.
படத்தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி, 50 படங்களுக்கும் மேல் தயாரித்து, அவரது இரு மகன்கள் ஹீரோக்களாகும் அளவிற்கு வலுவான அடித்தளத்தை கொடுத்தது இந்தப்படம்.
அப்போது, ஒரு படம் ஹிட்டானால், அந்தப் பட இயக்குநரையும், நாயகியையும் வைத்து கிசுகிசுக்கள் கிளம்பும். ஆனால் இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னார், இயக்குநர் விக்ரமனையும் அப்போது, இந்தியில் நம்பர் 1 ஆக இருந்த ஸ்ரீதேவியையும் இணைத்து கிசுகிசு கிளம்பியது. இந்தப் படத்தை விக்ரமன் இந்தியில் இயக்கப் போவதாகவும், அதில் சித்தாரா கேரக்டரில் ஸ்ரீதேவி நடிக்கப் போவதாகவும், கதையைக் கேட்டு, ஸ்ரீதேவி விக்ரமனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும் பத்திரிக்கைகளில் செய்தி. என்னைப் பொறுத்த வரையில் அதுதான் விக்ரமனுக்கு அவர் வாழ்வில் கிடைத்த அதிக பட்ச அவார்ட்.
படத்தில், தீபாவளி தினத்தன்று, சித்தாரா, நண்பர்களுக்கு ஒரு உடை பரிசளிப்பார். மஞ்சள் நிற சட்டை, கறுப்பு பேண்ட். அந்தத் தீபாவளிக்கு எல்லா டெய்லர் கடைகளிலும் மஞ்சள் சட்டைகள் சரம் சரமாகத் தொங்கின. அப்போது, மயூர் ஷர்ட்ஸ்என்கிற ஒரு பிராண்ட் இருந்தது. அதில் நீலம், பச்சை, சிகப்பு, மஞ்சள் போன்ற அடர் வண்ணங்களில் சட்டை துணிகள் கிடைக்கும். அந்த தீபாவளிக்கு தமிழ்நாட்டில் மஞ்சள் நிற சட்டைத்துணிகள் அவுட் ஆஃப் ஸ்டாக் ஆகி, புதிதாக வரவழைக்கும் படி ஆனது.
தெருவில் வெடி வெடிக்கும் போது, நீயுமா நீயுமா என்ற குரல்கள். தீபாவளி முடிந்து, வகுப்புகளுக்கு, தீபாவளி ட்ரஸ் அணிந்து செல்லும் கலர்புல் வைபவம், சீருடை அணிந்து செல்வது போல மாறி, உப்புச் சப்பில்லாமல் போனது.
இது முதன் முதலாய் வரும் பாட்டு பாடலில் ஒரு வரி வரும்.
ஏக போக அரசர்கள் எல்லாம்
இருக்கும் உலகிலே
இந்த ஏகலைவன் பாட்டும் கூட
ஜெயிக்கும் நடுவிலே
என்று..
உண்மையில் அந்தக் சமயத்தில் நடிகர்களிலும், இயக்குநர்களிலும், இசை அமைப்பாளர்களிலும் அத்தனை திறமைசாலிகள் இருந்தார்கள். அவர்களுக்கு இடையே நின்று விளையாடியது இந்தப் படம்.
போட்டிகளால் சோர்வுறும் நேரங்களில் எல்லாம் குடிக்கக்கூடிய ஹார்லிகஸ் ஆக இருந்து கொண்டிருக்கிறது இந்த வரிகள்.
December 15, 2023
கலைஞர் பெண்ணுக்கு சொத்து
நாங்கள் திருமணமான புதிதில் சென்னையில் வசித்து வந்தோம். அப்போது எங்கள் வீட்டிற்கு பணிகள் செய்ய உதவியாக வந்தவர் குப்பம்மா. அப்போது அவர் மூன்று வீடுகளில் வேலை செய்து வந்தார். ரொம்ப கரெக்டாக இருப்பார் என்று அவரை சிபாரிசு செய்தவர் சொன்னார். அது போலவே அவர் சொன்ன நேரத்திற்கு சரியாக வருவார். வேறு எதுவும் பேச்சுகள் எதுவும் இல்லாது பணிகளை முடித்து விட்டு, சென்று விடுவார். ஒரு ஞாயிறு மாலை அவர் வேலை முடித்து விட்டுச் செல்ல யத்தனிக்கும் போது பெரு மழை பிடித்துக் கொண்டது. மழை நிற்கும் வரை இங்கே இருங்கள் எனச் சொல்லிவிட்டு டிவி பார்க்கத் துவங்கினோம். விளம்பர இடைவேளையில் சேனல் மாற்றும் போது ஒரு எம்ஜியார் பாட்டு வந்தது. அது வரை அசுவராசியமாகிய டிவி பார்த்தவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். நானும் எதுவும் கேட்காதவர் விரும்பி பார்க்கிறாரே என சேனல் மாற்றவில்லை.
அது எங்களுக்குள்ளான ஒரு பாசப் பிணைப்பு துவங்க ஒரு புள்ளி எனச் சொல்லலாம். டிவியில் எம்ஜியார் படம் ஒளிபரப்புவதாக தெரிந்தால் எங்கள் வீட்டில் வந்து பார்ப்பார். எங்கள் முதல் குழந்தை பிறந்த போது அவராகவே பணிகளை எடுத்துப் போட்டு செய்தார். அதே போல அவருக்கு காபி தான் பிடிக்கும். மற்ற வீடுகளில் அப்போது என்ன செய்கிறார்களோ அதைத் தருவார்கள். எங்களிடத்தில் அவரே உரிமையாக காபி போட்டுக் கொள்வார். போதாக்குறைக்கு நான் பிறந்த ஊருக்கு அருகே தான் அவர் ஊரும்.இப்படியாக எங்களிடையேயான இறுக்கம் தளர்ந்த நாட்களில் தன் குடும்பக்கதையை பகிர்ந்து கொண்டார்.
அவர் நல்ல வசதியான விவசாயக் குடும்பத்தில் நான்கு அண்ணன்களுடன் பிறந்தவர். அவர் திருமணத்தின் போது அவருக்கு 5 பவுன், மாப்பிள்ளைக்கு 1 பவுன், ஒரு சைக்கிள், ஒரு வாட்ச், மற்றும் பாத்திர பண்டங்கள் கொடுத்து ஊர் கோவிலில் திருமணம் செய்து வைத்துள்ளனர். அவர் கணவரும் தன்மையானவர். அவருடன் பிறந்தவர்கள் அக்கா, தம்பியென நால்வர். பெரிய வசதி இல்லாத குடும்பம். இவர்களுக்கு மணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லை. குப்பம்மாவின் திருமணத்திற்குப் பின் அவர் அப்பா, அம்மா இருவரும் நான்காண்டு கால இடைவெளியில் இறந்து போய் விட்டனர். பேரிடியாக அவர் கணவர் விவசாய வேலைக்குப் போன போது பாம்பு கடித்து இறந்து விட நிர்க்கதியானார் குப்பம்மா. புகுந்த வீட்டில் அவர் இருக்க முடியாத சூழல் நிலவியது. பிறந்த வீட்டிலும், அவரை ஏற்றுக் கொள்ள யாரும் விரும்பவில்லை. எனினும் சம்பளமில்லா வேலைக்காரியாக அங்கே தன்னை மாற்றிக் கொண்டார். அத்தனை வேலைகள் செய்தாலும், அத்தனை பேருக்கு சமைத்தாலும் கடைசியாக மிஞ்சும் உணவையே உண்ணும் நிலை.
அதெல்லாம் கூடப்பரவாயில்லை தம்பி, எனக்கு என்னவோ சின்ன வயசில் இருந்தே எம்ஜியார் படம்னா பிடிக்கும். எங்க ஊர்ல எப்ப எம்ஜியார் படம் வந்தாலும் ரெண்டு மூணு வாட்டி பார்த்திடுவேன். என் வீட்டுக்காரருக்கும் எம்ஜியார்னா உசுரு. மதுரைக்கு போனா படம் பார்த்துட்டு கிளப் கடையில் ஒரு காப்பி சாப்பிட்டுத்தான் வருவோம் தம்பி. அப்படித்தான் எனக்கு காப்பி பழக்கம் வந்துச்சு. அது என்னமோ காப்பி எனக்கு பிடிச்சுப் போச்சு. இவங்க கிட்ட எதுவுமே கேட்க மாட்டேன். எப்பவாச்சும் எம்ஜியார் படம், என்னைக்காச்சும் அர வாய் காப்பி. மூளியா வந்தவ மூலையில உட்காராமா என்ன படம் வேண்டிக்கிடக்கு? நாக்கு ருசி கேட்குதோன்னு நாத்தனார் காரிக கரிச்சுக் கொட்டுவாங்க. அண்ணன்களும் ஏதும் சொல்ல மாட்டாங்க. ஏன் எனக்குன்னு என்னதான் அப்புறம்னு ஒரு நாள் பஸ் ஏறி இங்க வந்துட்டேன். இங்க பொழைச்சுக்கிலாம்னு. மகராசனை நேரில பார்க்கனும்னு ஒரு ஆசையும் இருந்துச்சு. நான் வந்து கொஞ்சநாள்ல அவரும் போய்ச் சேர்ந்துட்டார். அப்படியே இங்க மிச்ச காலத்த கழிச்சிருவோம்னு இருந்துட்டேன். மனசு சரியில்லன்னா பீச்சுக்கு போயி அவர் சமாதியைப் பார்த்துட்டு வருவேன். அப்ப என் வீட்டுக்காரர்கிட்ட சொல்லுவேன், பாருய்யா உன் கூட வாழவும் எனக்கு கொடுத்து வைக்கல, நீ வாழ்ந்த இடம், உன்னைய பொதச்ச இடம் எதுக்குமே நான் போய் பொழங்க கொடுத்து வைக்கல, என் மூலமா உனக்குப் பிடிச்ச எம்ஜியாரைப் பாருன்னு.
ஆற்றாமையில் கொட்டிவிட்டு, சொன்னார், எங்க அப்பாக்கு எங்க ஊர் சாமிக்கு பூ அலங்காரம் விசேசத்துக்கு செய்யனும்னு ஆசை. அவர் இருந்தவரைக்கும் திருவிழா தவறாம கொடுத்துடுவார். இப்ப அண்ணன்க செய்யுறாங்களான்னு தெரியாது, நீங்க உங்க ஊருக்குப் போகும் போது, ஒரு எட்டுப் போயி, எங்க ஊர் கோயில்ல எங்க அப்பா பேரைச் சொல்லி பூ அலங்காரத்துக்குன்னு நான் கொடுக்கிறத கொடுங்க என்பார். அதன்படி அவ்வப்போது கொடுப்பேன்.
2006 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்தது. திமுக வெற்றி பெற,பெற மகிழ்ச்சியோடு இருந்து கொண்டிருந்தேன். ஸ்வீட் வாங்கி வந்து சாப்பிட்டு கொண்டிருந்த போது குப்பம்மா வீட்டுக்கு வந்தார். அம்மா ஸ்வீட் சாப்பிடுங்க என்ற உடன் என்ன இவ்வளோ சந்தோஷம் என்றார்? எங்க கட்சி ஜெயிச்சிருச்சு என்றேன். அவர் முகம் களை இழந்தது. என்ன தம்பி, நீங்க கலைஞர் கட்சியா என்றார். ஆமா அவரை ரொம்ப பிடிக்கும் என்றேன். அவருக்கு நிறைய சம்சாரம், எங்க எம்ஜியாருக்கு அவரைப் பிடிக்காதே என்றார். சம்சாரம் அவங்க குடும்ப பிரச்சினை. மக்களுக்கு நல்ல நல்ல திட்டம்லாம் கொண்டு வந்திருக்கார் என்றேன். எனக்கு என்னவோ அவரைப் பிடிக்காது தம்பி என முடித்துக் கொண்டார்.
ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு, வண்ணத் தொலைக்காட்சி பெட்டி என கலைஞரின் திட்டங்கள் குப்பம்மாவுக்கும் நன்மை அளித்தன. பார்த்தீங்களா எங்க ஆட்சியை?, இப்ப எம்ஜியார் படத்தை நீங்க எப்ப வேணுமுன்னாலும் பார்க்கலாம் என கிண்டலடித்தேன். அவரோ போங்க தம்பி, எங்க அம்மா வந்திருந்தாலும் கொடுத்திருக்கும் என முடித்துக் கொண்டார்.
அடுத்த சில ஆண்டுகளில் வேறு ஊருக்கு செல்ல வேண்டிய சூழல். எங்க கூட வந்திருங்க என்று சொல்லிப் பார்த்தோம். அவருக்கோ சென்னை தான் மனதுக்கு உகந்ததாய் இருந்தது. என் மனைவிக்கு குப்பம்மாவை விட்டு பிரியவே மனம் இல்லை. நான் எங்க வீட்டுல இருந்த மாதிரியே இங்க இருந்தேன் உங்கனால என கண்ணீர் சிந்தினார். மகன் கூட பாட்டி நம்ம கூட வரல்லையா எனக் கேட்டான்.
அவர் அப்போது பணிபுரிந்து கொண்டிருந்த வீட்டுக்காரர்களின் எண்களை வாங்கிக் கொண்டேன். தீபாவளி போன்ற விசேச நாட்களில் அவருக்கு பேசுவோம். ஊருக்குப் போகும் போது அவர் அப்பா பெயர் சொல்லி பூ அலங்கார காணிக்கையும் அவ்வப்போது கொடுப்பதுண்டு.
திடீரென ஒரு நாள் சிலர் என்னைத் தேடி வந்தார்கள். குப்பம்மாவின் உறவினர்களாம். கோவில் பூசாரி மூலம் நான் குப்பம்மா தந்தை பெயரில் பூவுக்கு காசு கொடுப்பது அறிந்து என் ஊரில் விசாரித்து இங்கே வந்துவிட்டார்கள். வேறு ஒன்றும் இல்லை. அவர்கள் தந்தை இறந்த உடன் வீடு, சொத்துக்களை தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். அவரிடம் அப்போது இருந்த நாப்பது ஏக்கர் நஞ்சை, நாலு வீடுகளை சமமாக பங்கிட்டுக் கொண்டார்கள். அப்போது ஊரை விட்டு வெகு தொலைவில் இருந்த இரண்டரை ஏக்கர் வானம் பார்த்த பூமியை பேச்சு வார்த்தை சரி வராமல் விட்டு வைத்திருந்திருக்கிறார்கள். அதில் உடனடி வருமானமும் இல்லாததால் அப்படியே போட்டு வைத்து விட்டார்கள். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு அதிகமாகிக் கொண்டே வர, அது அப்படியே பொதுச் சொத்தாக இருந்து கொண்டே இருந்தது.
இப்போது அந்தப் பக்கம் ஒரு மேம்பாலம், நான்கு வழிச் சாலை, ஏராள கேட்ட் கம்யூனிட்டி குடியிருப்புகள் வர வர அந்தப் பகுதியின் நில மதிப்பு விண்ணைத் தொட்டது. புகழ்பெற்ற ஒரு கட்டுமான நிறுவனம் அந்தப் பகுதியில் கால் பதிக்க இவர்களின் இடத்தை தேர்வு செய்தது. 500 கோடிக்கும் மேற்பட்ட பிராஜக்ட் எனவே பத்திரம் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டுமென அவர்கள் லீகல் டிபார்ட்மெண்ட் ஒப்பீனியன் கொடுக்க, உள்ளூரில் விசாரித்தது அவர்கள் டீம். ஒரு பெண் வாரிசு இருக்கிறார். அவர் கையெழுத்து இருந்தால் தான் அது செல்லும் என கலைஞர் 1989ல் போட்ட பெண்ணுக்கு சொத்தில் உரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி சொல்ல. அவரைத் தேட ஆரம்பித்து என்னிடம் வந்து சேர்ந்தார்கள்.
அந்தப் பகுதியில் இப்போதைய செண்ட் மதிப்பு பத்து லட்சம். ரெண்டரை ஏக்கருக்கு 25 கோடி வரும். ஐந்தாகப் போட்டு 5 கோடி கொடுங்கள் எனக் கேட்டேன். இதை குப்பம்மாவிடமும் தெரிவித்தேன். அவரோ அதிர்ச்சி அடைந்தே விட்டார். பின்னர் ஊர்காரர்கள், அவங்க கொடுக்குறத வாங்கிக் கொடு தம்பி, இல்லேன்னா வண்டி ஏத்தி தூக்கி விட்டுருவாங்க அவங்க அண்ணன் பிள்ளைக என்றார்கள். இறுதியில் 3 கோடி என முடிவானது.
பத்திரப்பதிவு நாளும் வந்தது. கம்பெனி பணத்தை, நேரடியாக குப்பம்மாவிடம் கொடுத்தது. சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நானும் அவருடன் சென்றேன். சார்பதிவாளர் முன்னிலையில் போட்டோ எடுத்து கையெழுத்து இடும்போது தான் கவனித்தேன் குப்பம்மாவின் உண்மையான பெயர் குபேர லட்சுமி. சார்பதிவாளரின் தலைக்கு மேல் மஞ்சள் சால்வை அணிந்த கலைஞர் சிரித்துக் கொண்டிருந்தார்.
Subscribe to:
Posts (Atom)