January 15, 2025

புது வசந்தம்

ஒரு திரைப்படத்தின் வெற்றியை எத்தனையோ வழிகளில் அளவிடலாம். அத்தனை வழிகளிலும் வென்று காட்டிய ஒரு திரைப்படம் புது வசந்தம். தொண்ணூறுகள் என்பது இந்தியாவின் முக்கியமான ஒரு ட்ரான்ஸ்பர்மேஷன் டெக்கேட். எண்பதுகளுக்கும் தொண்ணூறுகளுக்கும் இடையே மக்களின் வாழ்வியல், பொருளாதாரம், சிந்தனைகள், ரசிப்புத்தன்மை இவற்றில் பல வேறுபாடுகள் உண்டு. தொண்ணூறுகளை இந்தியாவின் வளர்ச்சியை நோக்கிய பத்தாண்டுகளாகவே பொதுவாக காணலாம். அந்த தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பெயரிலேயே ஒரு பாஸிட்டிவ் தன்மையுடன் வந்த படம் புது வசந்தம். 1990, ஏப்ரல் 14 ஆம் தேதி படம் வெளியானது. அதற்கு முன்னரே வித்தியாசமான பத்திரிக்கை விளம்பரங்களின் மூலம் நிறைய பேருக்கு படம் அறிமுகமாகி இருந்தது. குட்நைட் கொசுவிரட்டிகளின் தயாரிப்பாளர் மோகனும், ஆர் பி சவுத்ரியும் இணைந்து தயாரித்த படம். குட் நைட்டில் இருந்து குட் எடுத்து சூப்பர் குட் ஆக்கி, படம் எடுத்தார்கள். இது வழி தவறிய மேகங்களும் ஒரு பறவையும் நடுவானில் சந்தித்திக் கொண்ட கதை என்பது போன்ற கேப்ஷன்களோடு விளம்பரங்கள். எல்லா விளம்பரங்களிலும் ஆடு மேய்த்த மாதிரியும் ஆச்சு, அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு என்பது போல குட்நைட் விளம்பரங்களும் இருக்கும். படத்தின் முதல் வெற்றி, இது முதன் முதலாய் வரும் பாட்டு பாடல் ஒளியும் ஒலியுமில் ஒளிபரப்பான போது தெரிந்தது. வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய டிவியில் கூட்டமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட நூறு பேர். எல்லா வயதிலும் ஆண், பெண்கள். பாட்டு துவங்கிய போது அசுவராசியமாக பார்க்கத் துவங்கியவர்கள், பாடல் முடியும் போது, பாடலில் ஐக்கியமாகி இருந்தார்கள். மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா. வந்த எல்லோருக்கும் புது வசந்தம் பார்த்தே ஆக வேண்டும் என்கிற ஆவல். அந்த அளவிற்கு வாய்மொழியாக பரவி இருந்தது படத்தின் சிறப்பு. தல்லாகுளத்துல கள்ளழகர் எதிர் சேவைக்கு நிக்கிற கூட்டத்த விட சக்தி தியேட்டர்ல ஜனம் நிக்கிதப்போ என பேசிக் கொண்டார்கள். படத்தின் இசை அமைப்பாளர், எஸ் ஏ ராஜ்குமார்க்கு, அவரின் முதல் படமான சின்ன பூவே மெல்ல பேசு படத்தின் வெற்றிக்குப் பிறகு, 36 படங்கள் புக் ஆகின. ஆனால் அதன்பின் எந்த வெற்றியும் இல்லாமல், சோர்ந்து போனார். அவருக்கு இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் அதே போல நடந்தது. இம்முறை சுதாரித்துக் கொண்டார். பட நாயகன் முரளியும் தன் கேரியரின் மோசமான காலத்தில் இருந்தார். இந்தப் படத்திற்கு முன் வந்த பாலம் திரைப்படம் அவரை மூச்சு விட வைத்தது. இந்தப் படத்தின் வெற்றி அவரை மூச்சு கூட விட முடியாமல் இடைவிடாமல் நடிக்கும் படி செய்தது. ஏராளமான புது இயக்குநர்கள், தங்கள் முதல் படத்தில் முரளி நடித்தால் பெட்டர் என அவரை தேடி ஓடினார்கள். தமிழ் திரையுலகில், அதிகமான இயக்குநர்களின் முதல் படத்தில் நடித்தவர் என்ற பெருமையையும் முரளிக்கு பெற்றுக் கொடுத்தது. ஏராளமான புது இயக்குநர்களுக்கு முதல் படம் இசை அமைத்துக் கொடுத்தவர் இளையராஜா என்பார்கள். அதுபோல நடிகர்களில் முரளி. கிட்டத்தட்ட தமிழ்நாட்டு மக்கள் மறந்திருந்த ஆனந்தபாபுவிற்கும் இந்தப் படம் ஒரு புது வசந்தம். மிகப்பெரிய கிரானைட் தொழிலதிபரான ராஜாவிற்கும் மீண்டும் ஒரு அறிமுகத்தைக் கொடுத்தது இந்தப்படம். புதுக்கணக்கு எழுதும் போது, முதல் வரவாக,தங்கள் குலதெய்வத்தின் பெயரில் ஒண்ணே கால் ரூபாயை வணிகர்கள் எழுதுவது போல, நண்பர்கள் பற்றிய கதை என்றாலே சார்லிக்கு ஒரு கேரக்டர் என்று எழுதிவிட்டுத்தான் கதை டிஸ்கஷனுக்கே இயக்குநர்கள் உட்கார்ந்தார்கள். நாயகி சித்தாராவிற்கு தேவதை ஸ்டேட்டஸை உடனடியாக வழங்கினார்கள் தமிழ்நாட்டு மக்கள். அவர் தங்களை கொல்ல வந்தால் கூட, தங்களின் நன்மைக்காகத்தான் இருக்கும் என நம்பும் அளவிற்கு, அப்படி ஒரு மதிப்பு அவரின் மேல் எல்லோருக்கும் ஏற்பட்டது. படத்தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி, 50 படங்களுக்கும் மேல் தயாரித்து, அவரது இரு மகன்கள் ஹீரோக்களாகும் அளவிற்கு வலுவான அடித்தளத்தை கொடுத்தது இந்தப்படம். அப்போது, ஒரு படம் ஹிட்டானால், அந்தப் பட இயக்குநரையும், நாயகியையும் வைத்து கிசுகிசுக்கள் கிளம்பும். ஆனால் இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னார், இயக்குநர் விக்ரமனையும் அப்போது, இந்தியில் நம்பர் 1 ஆக இருந்த ஸ்ரீதேவியையும் இணைத்து கிசுகிசு கிளம்பியது. இந்தப் படத்தை விக்ரமன் இந்தியில் இயக்கப் போவதாகவும், அதில் சித்தாரா கேரக்டரில் ஸ்ரீதேவி நடிக்கப் போவதாகவும், கதையைக் கேட்டு, ஸ்ரீதேவி விக்ரமனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும் பத்திரிக்கைகளில் செய்தி. என்னைப் பொறுத்த வரையில் அதுதான் விக்ரமனுக்கு அவர் வாழ்வில் கிடைத்த அதிக பட்ச அவார்ட். படத்தில், தீபாவளி தினத்தன்று, சித்தாரா, நண்பர்களுக்கு ஒரு உடை பரிசளிப்பார். மஞ்சள் நிற சட்டை, கறுப்பு பேண்ட். அந்தத் தீபாவளிக்கு எல்லா டெய்லர் கடைகளிலும் மஞ்சள் சட்டைகள் சரம் சரமாகத் தொங்கின. அப்போது, மயூர் ஷர்ட்ஸ்என்கிற ஒரு பிராண்ட் இருந்தது. அதில் நீலம், பச்சை, சிகப்பு, மஞ்சள் போன்ற அடர் வண்ணங்களில் சட்டை துணிகள் கிடைக்கும். அந்த தீபாவளிக்கு தமிழ்நாட்டில் மஞ்சள் நிற சட்டைத்துணிகள் அவுட் ஆஃப் ஸ்டாக் ஆகி, புதிதாக வரவழைக்கும் படி ஆனது. தெருவில் வெடி வெடிக்கும் போது, நீயுமா நீயுமா என்ற குரல்கள். தீபாவளி முடிந்து, வகுப்புகளுக்கு, தீபாவளி ட்ரஸ் அணிந்து செல்லும் கலர்புல் வைபவம், சீருடை அணிந்து செல்வது போல மாறி, உப்புச் சப்பில்லாமல் போனது. இது முதன் முதலாய் வரும் பாட்டு பாடலில் ஒரு வரி வரும். ஏக போக அரசர்கள் எல்லாம் இருக்கும் உலகிலே இந்த ஏகலைவன் பாட்டும் கூட ஜெயிக்கும் நடுவிலே என்று.. உண்மையில் அந்தக் சமயத்தில் நடிகர்களிலும், இயக்குநர்களிலும், இசை அமைப்பாளர்களிலும் அத்தனை திறமைசாலிகள் இருந்தார்கள். அவர்களுக்கு இடையே நின்று விளையாடியது இந்தப் படம். போட்டிகளால் சோர்வுறும் நேரங்களில் எல்லாம் குடிக்கக்கூடிய ஹார்லிகஸ் ஆக இருந்து கொண்டிருக்கிறது இந்த வரிகள்.

No comments: