January 15, 2025

புலன் விசாரனை

புலன் விசாரனை படத்தின் அறிவிப்பு வந்த போது, மிகப்பெரிய ஆர்வத்தூண்டல் எல்லாம் ஏற்படவில்லை. அப்போது விஜயகாந்த் ஆண்டிற்கு குறைந்தது ஆறு படங்கள் கொடுப்பார். எண்பதுகளில், ஆண்டுக்கு பத்துப் படங்கள் என்பது விஜய்காந்திற்கு சர்வ சாதாரணம். தீபாவளிக்கு விஜய்காந்த் படம் வருகிறதா என்றெல்லாம் கேட்க மாட்டார்கள். ஒன்னா ரெண்டா எனக் கேட்பார்கள். வருகின்ற எல்லாப் படங்களுமே மினிமம் கியாரண்டிதான். அதனால் பூஜை போட்டாலே, படம் வியாபாரமாகி விடும். அதிர்ஷ்டம் இருந்தால் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட் அடித்து விடும். ஊமை விழிகள், உழவன் மகன், செந்தூரப்பூவே போன்ற ஆக்‌ஷன் படங்களை விடுங்கள். வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம், பூந்தோட்ட காவல்காரன் போன்ற படங்கள் எல்லாம், தயாரிப்பாளர் துவங்கி, வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், சார்பு தொழில்கள் செய்பவர்கள் வரை அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியைக் கொடுத்த படங்கள். எனவே 1989 ஆம் ஆண்டு, புலன் விசாரனை அறிவிப்பு வந்த போது பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் இல்லை. எல் பி ரெக்கார்ட் வந்த போதும் வெறும் மூன்று பாடல்கள் தானாம் என கேசட் ரெக்கார்டிங் கடைகளில் சலித்துக் கொண்டார்கள். ஆனால் அந்த எல் பி ரெக்க்கார்ட் கவரில் இருந்த விஜய்காந்தின் ஸ்டில் ஆர்வத்தை தூண்டியது. ஒரு லாங் கோட், முழங்கால் வரை அணிந்திருந்த கம் பூட்ஸ், கைகளில் கிளவுஸ், மழைத் தொப்பி சகிதம் ஒரு கேட்டை திறந்து கொண்டே பின்னால் திரும்பிப் பார்ப்பது போன்ற ஒரு ஃபோஸ். 1990 ஆம் ஆண்டு, பொங்கலுக்கு படம் வெளியானது. ரஜினிகாந்தின் பணக்காரன், பிரபுவின் இரண்டு படங்களும் உடன் வெளியாகின. பணக்காரன் சத்யா மூவீஸ் தயாரிப்பு. பி வாசு இயக்கம், இளையராஜாவின் இசையில் பாடல்கள் நல்ல ஹிட். எங்கள் ஊர்காரர்கள் எல்லாம், திண்டுக்கலுக்கு சென்று பணக்காரன் பார்த்து விட்டு வந்தார்கள். வழக்கப்படி அப்படியே அடுத்த ஷோ விஜய்காந்திற்கு. அவர்களுக்கு மட்டுமல்ல, திரையரங்கில் இருந்த எல்லோருக்கும் புலன் விசாரனை திரைப்படம் ஒரு புது அனுபவமாக இருந்தது. அதற்கு முன்னர் தமிழ் சினிமாவில் வந்த, அரசியல் படங்களாகட்டும், போலிஸ் படங்களாகட்டும் ஒரு பொதுவான டெம்பிளேட்டில் தான் இருக்கும். அரசியல் வாதிகள் கெட்டவர்கள், நாயகன், குணாசித்திர நடிகர்கல் அந்த கேரக்டரில் நடித்தால் போலிஸ் நல்லவர். வில்லன் நடித்தால் கெட்டவர். அவ்வளவு தான். சம்பங்களும் பொதுவான, கற்பனையான சம்பவங்கள். ஆனால் புலன் விசாரனை படம், என்னடா, தரையில பார்த்ததெல்லாம் திரையில வருது என்னும் அளவிற்கு செய்தித்தாள்களில் படித்த, பதட்டப்பட்ட சம்பவங்களை தன் கதையில் மைய இழையாக வைத்திருந்தது. எண்பதுகளில் தமிழ் மக்களை அதிர்ச்சியடைய வைத்திருந்த ஆட்டோ சங்கர் சம்பவம். அந்தக் கூட்டத்தின் அரசியல் தொடர்பு, அந்த அரசியல் தொடர்பு நீளும் மெடிக்கல் மாஃபியா என பிரம்மாண்டமான கேன்வாஸ். கதை மட்டுமல்லாமல், வசனங்களும் ஷார்ப்பாக இருந்தன. தமிழ்சினிமாவின் அரசியல் வசனங்களில் பெஞ்ச்மார்க் என்றால் பராசக்தி. அதற்கடுத்து பல படங்களை மைல்கல்லாக அமைத்தார் கலைஞர். இளங்கோ, எஸ் ஏ சாமி ஆகியோரின் வசனங்களும் அமைப்புக்கு எதிராக ஷார்ப்பாக இருக்கும். ஆனால், திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைந்த உடன், அதுவரை பெரிதாக அரசியல் வசனங்கள் எழுதாத பலர், திராவிட ஆட்சிக்கு எதிராக வசனங்கள் எழுத ஆரம்பித்தார்கள். இதில் என்ன பிரச்சினை என்றால், அவர்கள் அமைப்பிற்கோ, கொள்கைக்கோ எதிராக இல்லாமல், அரசியல்வாதிகளை குறி வைத்தே வசனங்களை எழுதினார்கள். பத்திரிக்கைகளும் சரி, சினிமாக்களும் சரி, அரசியல் வாதிகள் என்றாலே கெட்டவர்கள் என்ற பிம்பத்தை விதைத்தார்கள். விகடன்,கல்கி போன்ற பத்திரிக்கைகள் விசு, கோமல் சுவாமிநாதன் போன்ற எழுத்தாளர்களும் இதை தொடர்ந்து செய்தார்கள். carried by the wind என்பதைப் போல, எஸ் ஏ சந்திரசேகர், மணிவண்ணன் போன்றவர்களும் அரசியல் வாதிகளை கெட்டவர்களாக சித்தரித்தே எழுதினார்கள். லியாகத் அலிகானும் அதில் ஒருவர். ராம நாராயனன் போன்ற வெகு சிலர் தான் கொஞ்சம் சமநிலையில் எழுதினார்கள். ஆனால் விஜய்காந்த் போன்ற பவர்ஃபுல் நடிகரின், படங்களில் அது போன்ற காட்சி வருவது இன்னும் அரசியல்வாதிகளின் இமேஜை டேமேஜ் செய்யும். அதுவும் லியாகத் அலிகான் போன்றவர்களின் வசனங்கள் இன்னும் இம்பாக்ட் கொடுக்கும். புலன் விசாரனை படத்தில், நிகழ்காலத்திற்கு நெருக்கமான காட்சிகள், அதில் அரசியல் தொடர்பு, கூர்மையான வசனங்கள் என படம் இன்னொரு தளத்திற்குச் சென்றது. கதை, வசனம் மட்டுமல்ல, நல்ல பொருட்செலவில் அமைக்கப்பட்ட காட்சிகளும் படம் பார்த்தவர்களை பிரமிப்பில் ஆழ்த்தின. ஆர் கே செல்வமணி, இந்தப் படக் காட்சிகளை ஓவியமாக தீட்டி, அதை ஒரு ஆல்பமாக ஆக்கி, அதை வைத்து கதை சொல்லி, வாய்ப்பு பெற்றேன் என்று சொல்லியிருப்பார். அந்த உழைப்பு பட உருவாக்கத்தில் பலன் கொடுத்தது. ஆங்கில படங்களில் இருந்து இன்ஸ்பிரேஷன் எடுத்திருந்தாலும், துப்பாக்கி தோட்டா ஒன்று ஸ்லோ மோஷனில் செல்லும் காட்சியில் தியேட்டர் அதிர்ந்தது. ட்ரான்ஸ்பர்மேஷன் காட்சிகளைப் பற்றி, இப்போது அதிகம் சிலாகிக்கிறார்கள். இந்தப் படத்தில், மனித உறுப்புகளை எடுத்து விற்கும் டாக்டராக, கண்ணாடி போட்டு, சாதாரணமாக இருக்கும் சரத்குமார், கிளைமாக்ஸ் காட்சியில், சட்டையைக் கழட்டி போட்டு விட்டு, சிக்ஸ் ஃபேக் உடம்புடன் சண்டையிடும் ட்ரான்ஸ்பர்மேஷன் காட்சி பேசு பொருளானது. அடுத்து ஒரு ஆண்டுக்கு புலன்விசாரனை டாக்டர் என்றே அவர் தமிழ்நாட்டில் அறியப்பட்டார். தமிழ்சினிமாவில், அன்றாட நிகழ்வுகளைக் கொண்டு, அரசியல், சமூக விமர்சனப் படங்களை எடுக்கலாம் என்கிற ஒரு ட்ரெண்டை பவர்ஃபுல்லாக கொண்டு வந்த படம் புலன் விசாரனை என்று சொல்லலாம். எனக்கு தற்போது ஆச்சரியமாக இருப்பது எல்லாம், இந்தப் படத்திற்கு இயக்குநராக ஒப்பந்தமாகும் போது செல்வமணிக்கு 24 வயது. படம் துவங்கி, ஏகப்பட்ட கிரியேட்டிவ் டிஃபரன்ஸ். என் படக் காட்சிகள் இப்படித்தான் அமைய வேண்டும் என்கிற அவரது அடம். அதனால் ஆறு மாதங்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை. எதிர்பக்கத்தில் இப்ராஹிம் ராவுத்தர் தலைமையில் பவர்ஃபுல் புரடக்‌ஷன் டீம், எல்லாத் தொழிலாளர்களும் அவர்களின் அன்பிற்கு கட்டுப்பட்டவர்கள். தயாரிப்பு டீம் சார்பில் படச் செலவை சுருக்கச் சொல்லி அழுத்தம், அத்தனையையும் மீறி செல்வமணி, தான் நினைத்த அவுட்புட்டை கொண்டு வந்தார். அவரது தைரியம், தன் மேல் இருந்த நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம். இதோடு இந்தப் பக்கமே வராதே என்று தயாரிப்பு தரப்பால் செட்டில் செய்து அனுப்பப்பட்ட அவர், படம் வெளியானதும், மரியாதையாக அழைத்துச் செல்லப்பட்டு விஜய்காந்தின் 100வது படத்தை இயக்குங்கள் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது வரலாறு. இன்றளவும் விஜய்காந்திற்கு கேப்டன் என்கிற பெயரை தமிழ்நாட்டில் நிலை நிறுத்தியதற்கு கேப்டன் பிரபாகரன் படமும், இயக்குநர் செல்வமணியும் முக்கிய காரணம்.

No comments: