November 21, 2008

காதலர் ஈகோவை மையமாக கொண்ட காதல் திரைப்படங்கள்

பெருநகர காதலர்களுக்கு ஜாதி,மதம்,பெற்றோர் போன்ற டிரடிசனல் வில்லன்கள் எல்லாம் இப்போது இல்லை. பல புதிய வில்லன்கள் வந்துவிட்டார்கள். அவர்களில் முக்கியமானவராக இருப்பவர் திருவாளர் ஈகோ. ஈகோவை அடிப்படையாக கொண்டு வந்த திரைப்படங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
அன்பே வா

பீல் குட் படம் என்றாலே ஞாபகத்துக்கு வரும் படம். எம் ஜி யார், சரோஜா தேவி நடித்த இப்படத்துக்கு பல சிறப்புகள். ஏவிஎம் நிறுவனத்தில் எம்ஜியார் நடித்த ஒரே படம், காதலுக்காக எம்ஜியார் வருந்திய படம், ஏ சி திருலோகசந்தர் இயக்கத்தில் எம்ஜியார் நடித்த ஒரே படம், காதலர் ஈகோவை காட்சிப்படுத்திய முதல் படம் என.

பல திறமைகள் கொண்ட நாயகனை நாயகி வியக்கிறாள். ஆனால் காதலைச் சொல்லவிடாமல் ஈகோ தடுக்கிறது. நாயகனும் சொல்வதாய் இல்லை. ஒரு கட்டத்தில் நாயகி தனது முறைப்பையனை மணக்க ஒத்துக்கொள்கிறாள். பின்னர் அனைவருக்கும் உண்மை தெரிய சுபம்.

இப்படத்தில் எம்ஜியார் பேசும் காதல் தோல்வி வசனம் " இதுவரை நான் அடைந்த வெற்றிகளெல்லாம் இந்த ஒரே தோல்வியில் அர்த்தமற்றதாகிப் போய்விட்டதே" . பாடல்களும், நாகேஷின் நகைச்சுவையும் மிகவும் ரசிக்கப்பட்ட ஒன்று. லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் என்று சரோஜா தேவி பாடுவதும், அதற்க்கு எம்ஜியாரின் ரியாக்ஷன்களும் கலக்கலாக இருக்கும். ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்,அன்பே வா போன்ற காதல் பாடல்களும், ஏ நாடோடி என்ற கலாட்டா பாடலும் இப்பொழுதும் கேட்கத் தூண்டுபவை.
எதிர்பாராத விபத்தாக அஜித்தின் ஆழ்வார் படத்தை ஒரு முறை பார்க்க நேர்ந்தது. அப்பொழுது எனக்கு தோன்றியது "இந்த கதையை எடுத்ததுக்கு பதிலா அன்பே வா படத்தை ரீமேக் பண்ணியிருக்கலாமெ இவங்க என்று?" நாகேஷ் வேடத்துக்கு விவேக், அசோகன் வேடத்துக்கு அப்பாஸ் இல்லையென்றால் வினீத். புண்ணாக்கு புண்ணியகோடி யாக (நாயகியின் அப்பா) மணிவண்ணன் அல்லது வேறு காமெடியன் என போட்டு எடுத்திருக்கலாம். லவ் பேர்ட்ஸ் பாட்டை யுவனை வைத்து ரீமிக்ஸ் செய்து, அசின் அபினயம் பிடிக்க, அதை அஜீத் கலாய்க்க அடடா.
ஏவிஎம் கூட திருப்பதி படம் எடுத்ததற்க்கு பதிலா இப்படி ஒரு படம் எடுத்திருக்கலாம்.
நிழல் நிஜமாகிறது

கமல்,சுமித்ரா,சரத்பாபு, அனுமந்து நடித்து எம் எஸ் விஸ்வனாதன் இசையமைத்த இந்தப்படத்திலும் நாயகியின் ஈகோவே காதலுக்கு தடையாய் அமைகிறது. சுமித்ராவின் அண்ணன் சரத்பாபு, அவரின் நண்பர் கமல். சுமித்ரா தனக்குத்தானே விதித்துக்கொண்ட கட்டுப்பாடுகளுடன் வாழும் பெண். அவளுக்கு கமலின் யதார்த்தமான வாழ்க்கைமுறை பிடிக்காமல் வீட்டுக்கு வரும் போதெல்லாம் அவமானப்படுத்துகிறாள். காலப்போக்கில் கமலின் திறமைகளைக் கண்டு (பரதனாட்டியம், பாடல்) காதலிக்க நினைக்கிறாள். ஆனால் ஈகோ. பின் தான் நல்லவனாக நினைக்கும் தன் அண்ணனைவிட கமல் நல்லவன் என உணர்ந்து ஈகோவை தூக்கியெறிந்துவிட்டு வாழ்க்கையில் இணைகிறாள்.

இப்படத்தில் கம்பன் ஏமாந்தான், இலக்கணம் மாறுதோ போன்ற அருமையான பாடல்களை எம் எஸ்வி அமைத்திருந்தார்.
கமல் பாடுவதாக வரும் "ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம் அடுப்படி வரைதானோ, ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானே" போன்ற வரிகள் கதானாயகியை கடுப்பேற்றும்.
கம்பன் ஏமாந்தான் பாடலில் " இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே" எனவும் வெறுப்பேற்றுவார்.

குஷி

ஜோதிகாவுக்கு நட்சத்திர அந்துஸ்து வழங்கிய படம். மும்தாஜ்க்கு கவர்ச்சிப் பாதையை உறுதிப்படுத்திய படம். என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சார கண்ணா, கண்ணுக்குள் நிலவு என வீழ்ச்சியை நோக்கி போய் கொண்டிருந்த விஜய்யை நிமிர்த்திய படம்.

சூர்யாவின் குறும்பான வசனம்,இயக்கம், ஜீவாவின் ஒளிப்பதிவு, வெளி நாட்டு பாடல்களை சுட்டு தேவா அமைத்த துள்ளலான இசை என இளைமைத்துடிப்போடு வந்த படம்

நாயகன்,நாயகி சந்திக்கிறார்கள். தவறான புரிதல்கள் பின்னர் அதை உணர்ந்து நேசிக்கத் தொடங்குகையில், நாயகியின் ஈகோ குறுக்கே வருகிறது. தங்களின் நண்பர்களான காதல் ஜோடியை சேர்த்துவைக்க முயலுகையிலும் சண்டை. இறுதியில் இணைகிறார்கள்.

படத்தின் கதையை முதலில் சொல்லி ஆரம்பிக்கும் படம் இது. பின்னர் தெலுங்கில் பவன் கல்யாண், பூமிகா நடிக்க வெற்றி பெற்றது. இந்தியில் கரீனா கபூர் நாயகி. ஆனால் படம் வெற்றி பெறவில்லை.
இயக்குனர் மகேந்திரனின் புதல்வர் ஜான் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையில் விஜய்,ஜெனிலியா நடிப்பில் உருவான சச்சின் படத்திலும் ஈகோவே காதல் தடையாக வருமாறு அமைக்கப்பட்டிருந்தது.

உன்னாலே உன்னாலே

ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் வந்த படம். வினய் நாயகனாகவும், கஜோலின் கஸின் தனுஷா இணை நாயகியாகவும் அறிமுகமானார்கள். சதா நாயகி. இப்படத்தில் காதல் வந்த பின்னர் ஈகோ வருகிறது.

கதாநாயகி பொசசிவ் கேரக்டர் உள்ளவரா?, இல்லை ஈகோ அதிகமானவரா? அல்லது பெண்களுக்கே உண்டான இன்செக்யூரிட்டி மனப்பானமை கொண்டவரா என குழம்புமாறு காட்சி அமைப்புகள் இந்த படத்தில். எது எப்படியோ ஈகோவும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
கதாநாயகியால் நாயகனை புரிந்துகொள்ள முடியவில்லை. காம்ப்ளக்ஸ் இல்லாத மற்றொரு நாயகி அவனை புரிந்து கொள்கிறாள்.

நாயகியின் எந்த குணம் காதலனை புரிந்து கொள்ள விடாமல் தடுக்கிறது?
கதாநாயகி பொசசிவ் கேரக்டர் உள்ளவரா?, இல்லை ஈகோ அதிகமானவரா? அல்லது பெண்களுக்கே உண்டான இன்செக்யூரிட்டி மனப்பானமை கொண்டவரா என குழம்புமாறு காட்சி அமைப்புகள் இந்த படத்தில். எது எப்படியோ ஈகோவும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
உன்னாலே உன்னாலே, ஜுன் போனால், ஒரு நாள் இன்றுன் போன்ற சிறப்பான பாடல்களும், எஸ் ராமகிருஷ்ணனின் வசனங்களும் படத்தின் பலம்.

November 16, 2008

ஐ ஐ டியில் எம் எஸ் படிப்பு - வாய்ப்புகள்

ஐ ஐ டி களில் எம் எஸ் (ஆராய்ச்சி) முதுகலை படிப்புகள் எல்லாத்துறைகளிலும் (பொறியியல்,அறிவியல்,கணிதம்) கற்பிக்கப்படுகின்றன. இதைல் பயில்வோருக்கு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் உதவித் தொகை (ரூ 8000) மாதம் தோறும் வழங்கப்படுகிறது.


இதற்கும் எம் டெக்குக்கும் உள்ள வித்தியாசம்


எம் டெக் கில் துறை சம்பந்தமான பாடங்கள் முதல் மூன்று செமெஸ்டெர்கள் இருக்கும். மூன்றாவது மட்டும் நான்காவது செமெஸ்டரில் ப்ராஜக்ட் ஒர்க் இருக்கும்.
எம் எஸ்சில் நாம் தேர்ந்தெடுக்கும் ஆய்வுக்கு தொடர்பான பாடங்கள் (இது ஆய்வு வழிகாட்டியும், பொதுத் தேர்வு கமிட்டியும் தேர்ந்தெடுக்கும்) முதல் செமெஸ்டரில் கற்பிக்கப்படும். பின்னர் ஆராய்ச்சி மட்டுமே.
எம் டெக் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. எம் எஸ் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள், அதிகபட்சம் 3- 3.5 ஆண்டுகள்.

அடிப்படை தேவைகள்


1. கேட் தேர்வில் நடப்பு மதிப்பெண் வைத்திருக்க வேண்டும்.
அல்லது
2. இளங்கலை முடித்தபின் தொழிற்சாலை அனுபவம்


எப்பொழுது விண்ணப்பிக்க வேண்டும்?
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான நேர்முக தேர்வுகள் முறையே நவம்பரிலும், ஏப்ரலிலும் நடைபெறும். விண்ணப்பங்கள் முறையே செப்டெம்பெர் மற்றும் பிப்ரவரியில் வழங்கப்படும்.

கேட்டில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் முதலில் எம் டெக் கில் அக்கறை காட்டுவார்கள்


காரணம்

1. வேலைவாய்ப்பில் எம் டெக் கிற்க்கெ அதிக வாய்ப்பு

2. குறிப்பிட்ட கால அளவு (2 ஆண்டுகள்)

3. எங்கும் வேலை கிடைக்காவிட்டாலும் விரிவுரையாளராகும் வாய்ப்பு உள்ளது. (எம் எஸ் படிப்பு, விரிவுரையாளர் பணிக்கான தகுதியாக இந்திய தொழில் நுட்ப கவுன்சிலால் அங்கீகரிக்கப்படவில்லை)
எனவே எம் டெக் கிடைக்காத மாணவர்கள் (மதிப்பெண் 94 முதல் 97 வரை உள்ளவர்கள் ) எம் எஸ் படிப்பிற்க்கு வருவார்கள்.

சரி, என்னால் கேட்டில் அவ்வளவு மதிப்பெண் பெற முடியாது. என்ன செய்யலாம்?

ஐ எஸ் ஆர் ஓ, டி ஆர் டி எல், டி எஸ் ஓ போன்ற அரசு நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சிகளை பல பிரிவுகளாக பிரித்து உயர் கல்வி நிறுவங்களுக்கு வழங்கும். (இதற்க்கு பல காரணங்கள் உள்ளன. அவை தனிப்பதிவில்). இந்த ஆராய்ச்சிகள் பேராசிரியர்களிடம் ஒப்படைக்கப் படும். அவர்கள் தங்களிடம் உள்ள ஆய்வுக்கூட வசதிகள், ஆய்வுக் கட்டுரைகள், மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் (எம் எஸ் மற்றும் பி எச் டி) உதவியுடன் அதற்க்குறிய தீர்வை அளிப்பார்கள்.

இவ்வாறு ஆய்வு செய்யும் பேராசிரியர்களை சந்தித்து, வாய்ப்பு கேட்டால் அவர்கள் இணைத்துக் கொள்வார்கள். பின் நம்மிடம் ஓரளவு கேட் ஸ்கோர் இருந்தாலும் நேர்முகத்தேர்வில் நம்மை நிருபித்தால் எம் எஸ் படிக்க அனுமதிப்பார்கள். ஆய்வுக்கு தேவையான பாடங்களை அங்கு படிக்க வேண்டும். பின் ஆராய்ச்சி, அது முடியும் போது எம் எஸ் வழங்கப்படும். இம்முறை துரு ப்ராஜெக்ட் எனப்படும்.

சரி, என்னிடம் கேட் ஸ்கோர் இல்லை. ஆனால் அனுபவம் இருக்கிறது. என்ன செய்யலாம்? நீங்கள் பணிபுரியும் தொழிற்சாலையில் ஆய்வு செய்யுமளவுக்கு வசதிகள் இருந்து, உங்கள் மேலாளர் அனுமதித்தால் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம். வெற்றி பெற்றால் உங்கள் ஆய்வுக்கு தேவையான பாடங்களை மட்டும் ஒரு செமெஸ்டெர் படித்துவிட்டு, பின் கம்பெனிக்கு திரும்பிச்சென்று வழிகாட்டி உதவியுடன் ஆய்வை தொடரலாம். இதற்க்கு எக்ஸ்டெர்னல் ரெஜிஸ்ட்ரேஷன் முறை என்று பெயர். ஆனால் இவர்கள் வளாக வேலைவாய்ப்பில் பங்கு பெற முடியாது.

இம்முறையில் டி வி எஸ், ஜி ஈ, லேலண்ட் போன்ற தனியார் நிறுவஙகளில் இருந்தும், ஐ எஸ் ஆர் ஓ, டி ஆர் டி எல் போன்ற அரசு பணியில் இருப்பவர்களும் இடம் பெற முடியும்.

எம் எஸ் சாதகங்கள்
1. நன்கு ஆய்வு செய்து இரண்டு,மூன்று ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தவ்ர்கள் வெளிநாட்டு பல்கலை கழகங்களில் பி எச் டி படிக்கும் வாய்ப்பு எளிதில் கிடைக்கும். அங்கு உதவித்தொகை அதிகமாக இருக்கும். அதை முடிப்பவர்களுக்கு உச்ச பட்ச வாய்ப்புகள் கிடைக்கும்

2. இந்திய அரசு நிறுவன்ங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் ஐ ஐ டி எம் டெக் கிற்க்கு அடுத்து எம் எஸ் க்கே முன்னுரிமை கொடுக்கும். அதன் பின்னரே மற்ற கல்லூரி எம் டெக், எம் ஈ க்கு வாய்ப்பு கொடுக்கும்

3. தற்போது பெரும்பாலான மாணவர்கள் மென்பொருள் துறைக்கே செல்கின்றனர். இதனால் கோர் துறைகளில் திறைமை பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஏற்படும் என கணிக்கிறார்கள். பல பெரிய நிறுவனங்களில் நிபுணர்கள் இல்லாததால் தங்கள் சப் காண்டிராக்டர்கள்/ வெண்டார்கள் ஆகியோரிடம் இருக்கும் திறமையான்வர்களை டெபுடேஷனில் எடுத்துக்கொள்கிறார்கள். எனவே ஒரு பிரிவில் நன்கு ஆய்வு செய்து நிபுணத்துவம் பெற்றுவிட்டால் அருமையான வாய்ப்புகள் கிடைக்கும்.
மென்பொருள் துறைக்கு பல துறைகளில் இருந்து ஆட்கள் வருகிறார்கள். சர்வைவ் ஆகிறார்கள். ஆனால் கோர் துறைகளுக்கு மற்றவர்கள் எளிதில் வர இயலாது. போட்டி குறையும். ஆயிரம் வேலையிடம் எனில் இரண்டாயிரம் நபர்கள் தான் திறமையுடன் இருப்பார்கள். ஆனால் மென்பொருள் துறையில் வேலையிடம் குறைந்தால், அந்த வேலை இடங்களுக்கு போட்டியிட அதிகம் பேர் இருப்பார்கள். பின்னாட்களில் கடினம்.

எனவே இயந்திரவியல், அமைப்பியல், மின்னியல், மிண்ணனுவியல், தகவல் தொடர்பு, கணிப்பொறி அறிவியல் போன்றவற்றில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளவர்கள் இத்ற்கு முயற்சி செய்யலாம். பெரும்பாலோனரை தடுப்பது குறைந்த உதவித்தொகையே. முன்பு ரூபாய் 5000 ஆக இருந்தது தற்போது 8000ம் ஆக உயர்ந்துள்ளது. எனினும் மென்பொருள் துறையில் கொடுக்கப்படும் சம்பளத்துடன் ஒப்பிட்டு யாரும் தமிழ்னாட்டில் முயற்சி செய்வதில்லை. ஆந்திர,கேரள,வட மாநில மானவர்களே இந்த பயனை அனுபவிக்கிறார்கள்.

இயற்பியல், வேதியியல், உயிரியல் தொழில்னுட்பம், கணிதம்,மேலாண்மை போன்ற பிரிவுகளிலும் எம் எஸ் வழங்கப்படுகிறது.

November 13, 2008

வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் ஆவது சுலபமா – பகுதி 2

தமிழ்சினிமாவில் நடைமுறையில் இருக்கும் வினியோக முறைகள்.

நேரடி வெளியீடு

தயாரிப்பாளரே நேரடியாக திரையரங்குகளில் வெளியிடுவது. இதற்க்கு தயாரிப்பாளரிடம் பெரிய நெட்வொர்க் இருக்க வேண்டும். தமிழக திரையரங்குகள், அவற்றின் கேட்ச்மெண்ட் ஏரியா [அந்த குறிப்பிட்ட திரையரங்குக்கு வரக்கூடிய பார்வையாளர்கள் – எங்கெல்லாம் இருந்து? எவ்வளவு பேர்? அவ்ர்களின் பொருளாதார பலம்?] போன்ற விபரங்கள் தெரிய வேண்டும்.

உதாரணமாக சென்னை – சத்யம் எனில் – அர்பன் பேமிலி ஆடியன்ஸ், நல்ல வேலை பார்ப்பவர்கள், கல்லூரி மாணவர்கள், காதலர்கள் என பணத்தை பற்றி கவலைப்படாதவர்கள். நகரம் முழுவதிலும் இருந்து வருவார்கள்.

சென்னை – கமலா எனில், வடபழனி,கே கே நகர், சாலிகிராமம், கிண்டி,அசோக் நகர் ஆகியவற்றில் உள்ள நடுத்தர வகுப்பினர், மேன்ஷனில் தங்கியுள்ள வேலை பார்க்கும்/படிக்கும் மாணவர்கள்

அம்பத்தூர் – ராக்கி எனில் அம்பத்தூர்,ஆவடி,அண்ணா நகர்,திருமங்கலம் பகுதி மக்கள், தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள்.

அருப்புக்கோட்டை – மகாராணி என்றால் அந்த ஊர் மக்களும், சுற்றியுள்ள கிராம மக்களும்.

இதுபோல தமிழக திரையரங்குகளின் ஜாதகத்தை அறிந்திருந்தால் தான் தங்களின் படத்திற்க்கேற்ற திரையரங்கில் படத்தை வெளியிடமுடியும். இதில் சங்கரிடம் இணை இயக்குனராக இருந்து பின் சாக்லேட் படத்தை தயாரித்தவரும், மதுர, அரசாங்கம் படங்களின் இயக்குனருமான மாதேஷ் கில்லாடி. முதல்வன் படத்தை இவ்வாறு வெளியிட்டு நல்ல லாபம் பெற்றனர். பாபா,சிவாஜி படங்களுக்கும் இவரிடம் ஆலோசனை பெறப்பட்டது என்பார்கள். பெரிய நடிகர், இயக்குனர் படங்களை இம்முறையில் வெளியிடுவது எளிது. சிறிய/புதுமுகங்கள் நடிக்கும் படமெனில் தியேட்டர் கிடைக்காது. தயாரிப்பாளர் தியேட்டர் வாடகையை கொடுத்து படத்தை ஓட்டிக் கொள்ள வேண்டும்.

கமிஷன் முறை

இதில் இருந்து தான் வினியோகஸ்தர்கள் வருகிறார்கள். தயாரிப்பாளரிடம் இருந்து பெட்டியை வாங்கிச் சென்று அவர்கள் ஏரியாவில் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவார்கள். தியேட்டர் உரிமையாளர் பங்கு போக மீத தொகையை தயாரிப்பாளரிடம் சேர்ப்பிப்பார்கள். தயாரிப்பளாரிடம் கமிஷன் பெற்றுக்கொள்வார்கள்.

இன்னொரு முறையில், பட தயாரிப்பின் போதோ அல்லது லேபில் படம் இருக்கும் போதோ குறிப்பிட்ட தொகையை தயாரிப்பாளருக்கு கொடுத்து பெட்டியை வாங்கிச் செல்வார்கள். பின் தியேட்டர் உரிமையாளர் பங்கு, தன் பணம் போக மீத தொகையை மட்டும் தயாரிப்பாளரிடம் கொடுப்பார்கள். பின் தயாரிப்பு, அவர்களுக்கு கமிஷன் தொகையை கொடுக்கும். இம்முறையில் முன்னதை விட கமிஷன் சதவீதம் அதிகம். ஏனெனில் முன்னதாக பணம் கொடுத்து உதவுவதால்.

எம்ஜி - மினிமம் கேரண்டி

இம்முறையில் வினியோகஸ்தர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு, குறிப்பிட்ட ஏரியாவுக்கு எம்ஜி கொடுத்து பெட்டிகளை வாங்கிக் கொள்வார். உதாரணமாக ஏகன் படம் கோவை ஏரியாவுக்கு 2 கோடி, 5 வருடத்திற்க்கு என்று வைத்துக் கொள்வோம். படத்தை திரையரங்கில் வெளியிட்டு விளம்பரம் செய்து வசூலான தொகையை கணக்கெடுத்துக் கொண்டே வருவார்கள். தியேட்டர் பங்கு போக வரும் வசூலில் வினியோகஸ்தர் கொடுத்த எம்ஜி+ அவரது கமிஷனை முதலில் எடுத்துக்கொள்வார். அதற்க்குப் பின் வரும் வசூலில் [வசூல் ஆனால்] தயாரிப்பாளரும், வினியோகஸ்தரும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் பிரித்துக் கொள்வார்கள். படம் படுத்துக்கொண்டால் தயாரிப்பாளர் எம்ஜி யில் இருந்து ஒரு பைசா கூட கொடுக்கத் தேவையில்லை. எல்லா ரிஸ்க்கும் வினியோகஸ்தருக்கே. இம்முறையில் ரஜினியின் பல படங்களை வாங்கி லாபம் சம்பாதித்தவர்கள், குசேலன் படம் ஊற்றிக்கொண்டதும் எம்ஜியை கவர் செய்ய வில்லை யென நெருக்கடி கொடுத்தார்கள். அவர்களின் முக்கிய வாதம் தவறான தகவலை கொடுத்தார்கள் என்பதே.

எம்ஜியார் அவர்களை மினிமம் கேரண்டி ராமச்சந்திரன் என்றே சொல்வார்கள். அவரது படங்கள் எம்ஜியை எளிதாக கவர் செய்து விடும். சிலர் விளையாட்டாக சொல்வார்கள் அவர் மேக்ஸிமம் கேரண்டி ராமசந்திரன் என்று. அது உண்மைதான் என இப்பொழுதும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

அவுட்ரைட்

இம்முறையில் வினியோகஸ்தர் படத்தை பார்த்தோ/ பார்க்காமலோ ஒரு தொகையை கொடுத்து குறிப்பிட்ட ஏரியாவுக்கு, குறிப்பிட்ட காலத்துக்கு படத்தை வாங்குவது. இதில் எவ்வளவு லாபம் வந்தாலும் வினியோகஸ்தருக்கே. நஷ்டமும் அவருக்கே. பெரும்பாலான படங்கள் இம்முறையில் தான் வினியோகம் செய்யப்படுகின்றன. சின்னதம்பி,கரகாட்டக்காரன்,காதலுக்கு மரியாதை,வாலி,காதல் கோட்டை, உள்ளத்தை அள்ளி தா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற எதிர்பார்ப்பு இல்லாத படங்களை இம்முறையில் வாங்கிய வினியோகஸ்தர்கள் பண மழையில் நனைந்தார்கள். இம்முறையில் படம் வாங்க நல்ல அனுபவம் தேவை. கணிப்பு சரியாக செய்பவர்கள் உச்ச்த்திற்கு செல்வார்கள். ஏரியா தியேட்டர் உரிமையாளர்களிடம் நல்ல தொடர்பும், மக்கள் ரசனையை கணிக்கும் ஆற்றலும் தேவை.


இனி வினியோகஸ்தர்கள் படத்தை கணிக்கும் விதத்தைப் பார்ப்போம். இதற்க்கு முக்கிய கருவியாய் இருப்பது டிசிஆர் [டெய்லி கலெக்‌ஷன் ரிப்போர்ட்].

ஒரு திரையரங்கில் தினமும் ஆகும் கலெக்‌ஷன் பற்றிய ரிப்போர்ட் இது. எந்த காட்சியை எவ்வளவு பேர் பார்த்தார்கள், எந்த வகுப்பு நிறைந்தது? பெண்கள்/ஆண்கள் டிக்கெட் எவ்வளவு? போன்ற விபரங்கள் இதில் இருந்து கிடைக்கும்.

இதில் நமக்கு கிடைக்கும் விபரங்கள்

1. ஒரு குறிப்பிட்ட நடிகரின் படம் இந்த ஏரியாவில் எவ்வளவு நாள் ஓடும்?
2. படத்திற்க்கு முதல் வகுப்பு கலெக்‌ஷன் எந்த நடிகருக்கு நன்றாக இருக்கும், பெண்கள் கூட்டம் யாருக்கு வருகிறது?, கீழ் வகுப்பு ரசிகர்கள் யாருக்கு வருகிறார்கள்?
3. ஒரு நடிகரின் தோல்வி பட கலெக்‌ஷன்/ வெற்றி பட கலெக்‌ஷன் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?. இந்த வித்தியாசம் குறைவாக உள்ளவர்களுக்கு நல்ல மதிப்பு இருக்கும் [அஜீத்].
4. நகரத்தில் யார் படம் [கமல்,மணிரத்னம்], கிராமத்தில் யார் படம் [விஜயகாந்த்,ராமராஜன், ஹரி, கே எஸ் ரவிகுமார்] நல்ல கலெக்‌ஷன் கொடுக்கும்?.
5. கவர்ச்சி [பத்து பத்து, வேள்வி, மேகம்], ஹாரர் (சிவி, மை டியர் லிசா], பக்தி [பாளையத்தம்மன், ஆடிவெள்ளி] போன்ற படங்களுக்கு குறிப்பிட்ட ஏரியாவில் எவ்வளவு பொடென்ஷியல்?
6. ஜாதி போன்ற காரணங்களால் (கார்த்திக், சரத்குமார்] குறிப்பிட்ட ஏரியாவில் வசூல் எப்படி?

ஷிஃப்டிங்

ஒரு ஏரியாவில் மொத்தம் 200 தியேட்டர் எனில் ஊருக்கு ஒன்று அல்லது இரண்டு வீதம் அதிக பட்சம் 30-40 தியேட்டர்களில் மட்டுமே படம் போடப்படும். இதில் முதலில் அதிக கேட்ச்மெண்ட் ஏரியா உள்ள 10 தியேட்டர்களில் ஓட்டப்பட்டு, பின்னர் குறைவான கேட்ச்மெண்ட் உள்ள ஏரியாவுக்கு மாற்றப்படும். இதுவே ஷிஃப்டிங் எனப்படும். முதலில் பெரிய ஊர்களில் திரையிடப்பட்டு பின்னர் சிறு ஊர்களுக்கு மாற்றப்படும்.

எந்த நடிகர், எந்த கதை, எவ்வளவு செலவு செய்து எடுத்தால் லாபம் கிடைக்கும் என வினியோகஸ்தருக்கு அனுபவ அறிவு இருப்பதால் அவர் தயாரிப்பாளர் ஆவது எளிதாக இருக்கிறது. ஆனாலும் சினிமாவின் வெற்றி விதியை யாராலும் சுலபமாக கணிக்க முடியாததால் அவர்கள் தோல்வியும் அடைகிறார்கள்.