January 29, 2009

தமிழ் சினிமா எதிர் நாயகர்கள் - 1

பண்டைய காப்பியங்களில் இருந்து தற்கால சினிமா வரை நாயகனை நல்லவனாக, வல்லவனாக சித்தரிக்க எதிர் நாயகர்கள் தேவைப் படுகிறார்கள். எதிர் நாயகர்கள் இல்லாத கதையில் என்ன சுவராசியம் இருந்துவிட முடியும்?. நாயகர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து இயங்கும் தமிழ் சினிமா, அந்த நாயகர்களை அவதாரமாக காட்ட வித விதமான எதிர் நாயகர்களை பயன்படுத்தி வந்திருக்கிறது. தன் பிம்பமாக நாயகனை பார்க்கும் ரசிகன், தன் பிரச்சினைகளுக்கு காரணமானவர்களை எதிர் நாயகனின் ரூபத்தில் காட்சிப்படுத்துகிறான்.



காதலியின் தந்தையை, பெண் கொடுக்காத தாய்மாமனை, சொத்து பிரித்தலில் ஏமாற்றிய பங்காளியை, துரோகம் செய்த சினேகிதனை, தன்னால் தட்டி கேட்க முடியாத சமூக விரோத செயல்களை செய்பவனை, தப்பான அரசியல்வாதியை அவன் எதிர் நாயகனின் உருவத்தில் ஏற்றுகிறான். அவனை கதாநாயகன் வெல்லும் போது தானே வென்றதாய் மகிழ்கிறான். கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும், நாயகனுக்கும் ஏற்ப பல எதிர் நாயகர்கள் தேவைப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.



உலக தரத்திற்க்கு நடிப்பை வெளிக்காட்டிய எம் ஆர் ராதா, பாலையா உருவத்திலேயே மிரட்டும் பி எஸ் வீரப்பா, செய்கைகளிலும் பேச்சிலும் மிரட்டிவிடும் நம்பியார், அசோகன், மனோகர், நாயகனாக அறிமுகமாகி வில்லனாக மாறிய ஜெய்சங்கர், ரவிசந்திரன், வில்லனாக நடித்து பின் கதாநாயகனாக மாறிய கமல்ஹாசன்,ரஜினிகாந்த், சத்யராஜ்,சரத்குமார். மாறுபட்ட நடிப்பை வழங்கும் நாசர், ரகுவரன், பிரகாஷ்ராஜ், தற்போது கலக்கிவரும் கிஷோர் (ஜெயம் கொண்டான், பொல்லாதவன்), டேனியல் பாலாஜி (வேட்டையாடு விளையாடு), சமுத்திரக்கனி (சுப்ரமணியபுரம்) என ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமாவில் கதை பஞ்சம் ஏற்பட்டாலும் வில்லன் பஞ்சம் ஏற்பட்டதே இல்லை.


கேரளாவில் இருந்து திலகன்,முரளி,கலாபவன் மணி, ஆந்திரத்தில் இருந்து ராமிரெட்டி, கோட்டா சீனிவாசராவ், கன்னடத்தில் இருந்து தேவராஜ், உபேந்திரா என அண்டை மாநிலங்கள் நமக்கு தண்ணீர் தராவிட்டாலும் நாயகிகளையும், வில்லன்களையும் மட்டும் தாராளமாய் தந்து கொண்டிருக்கின்றன. இந்தித் திணிப்பும் இதில் ஒரு பொருட்டே கிடையாது. அம்ரீஷ் பூரி, ஆசிஷ் வித்யார்த்தி என சகலரையும் ஏற்றுக் கொன்டிருக்கிறோம். பால் தாக்கரே கோபித்துக் கொள்வாரே என்று, மராத்தி நாடகங்களில் கலக்கி திரையுலகில் புகுந்த அதுல் குல்கர்னி, சாயாஜி ஷின்டே போன்றோரையும் தமிழ் சினிமா ஏற்றுக் கொண்டது.


நரசிம்மராவும் மன்மோகனும் 91ல் தான் உலகமயமாக்கலை கொண்டு வந்தார்கள். ஆனால் அதை 80 களிலேயே பாப் கிரிஸ்டோ மூலம் (விடுதலை,காக்கி சட்டை) தமிழ் சினிமா கொண்டு வந்து விட்டது.
யாரை விடுவது யாரை எழுதுவது?


இந்த பதிவு எழுத எனக்கு தூண்டுகோலாகவும் ஊக்கமருந்தாகவும் இருக்கும் கார்பொரெட் கம்பர் நர்சிம் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு ஆரம்பிக்கிறேன்.

பி எஸ் வீரப்பா

சென்ற தலைமுறை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வில்லன் என்றாலே நினைவுக்கு வருபவர் பி எஸ் வீரப்பாதான். வில்லனுக்கு ஏற்ற உடல் வளமும், குரல் வளமும் ஒருங்கே அமையப் பெற்றவர் இவர். 1948 ஆம் ஆண்டு வெளியான ராஜமுக்தி என்னும் திரைப்படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமான இவர் பின்னாளில் சிறந்த வில்லன் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கினார்.

லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் இருந்து விடுபட்ட எம் கே தியாகராஜ பாகவதர் தன் செல்வாக்கை நிலைநிறுத்த ஆரம்பித்த படம் ராஜமுக்தி. இதில் வி என் ஜானகி, பானுமதி, சிறு வேடத்தில் எம்ஜியார், எம் ஜி சக்கரபாணி, திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை (நாகஸ்வரம்) ஆகியோரும் நடித்திருந்தனர். புதுமைப்பித்தன் வசனம் எழுத, எம் எல் வசந்தகுமாரி தன் முதல் திரைப்பாடலை பாட பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் தோல்வி அடைந்தது. ஆனால் பி எஸ் வீரப்பாவின் திரைப் பிரவேசத்துக்கு காரணமாய் அமைந்தது. இதன்பின் கருணாநிதி கதை வசனத்தில் வெளியான எம்ஜியார்,வி என் ஜானகி நடித்த மருத நாட்டு இளவரசியில் (1950) நடித்தார்.

1953 ஆம் ஆண்டு எம்ஜியார்,கருணாநிதி,காசிலிங்கம் ஆகியோருடன் இணைந்து நாம் என்னும் படத்தை பி எஸ் வீரப்பா தயாரித்தார். இது மேகலா பிக்சர்ஸ் பேனரில் வெளியானது. இதில் பி எஸ் வீரப்பா வீட்டு வேலைக்காரன் வேடத்தில் எம்ஜியார் நடித்திருப்பார். எம்ஜியாரை காலால் எட்டி உதைப்பதுபோல கூட காட்சி அமைப்பு இருக்கும். அதன்பின் வெளியான எம்ஜியார் படங்களில் இது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டதில்லை. இந்த காலகட்டத்தில் எம்ஜியார் உச்ச நட்சத்திரமாக மாறி பல சரித்திர படங்களில் நடித்தார். அவற்றில் பெரும்பாலான படங்களில் பி எஸ் வீரப்பா வில்லனாக நடித்தார். இயல்பாகவே இவரின் உடல்கட்டும்,முகவெட்டும் ராஜா, மந்திரி,ராஜகுரு போன்ற வேடங்களுக்கு பொருத்தமாய் இருக்கும். லேசாக முகத்தை இறுக்கினாலே வில்லன் தோரனை வந்துவிடும்.

அலிபாபாவும் 40 திருடர்களும் (1956)

சக்கரவர்த்தி திருமகள் (1957)

மகாதேவி (1957)

பூலோக ரம்பை (1958)

நாடோடி மன்னன் (1958)

வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)

சிவகங்கை சீமை (1959)

மன்னாதி மன்னன் (1960)

ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

அலிபாபாவும் 40 திருடர்களில் திருடர்கள் தலைவனாக குதிரையில் அவர் பவனி வரும் காட்சி கண்களை விட்டு அகலாதது. மகாதேவியில் அவர் பேசிய "அடைந்தால் மகா தேவி அடையாவிட்டால் மரண தேவி" வசனமும் வஞ்சிக்கோட்டை வாலிபனில் அவர் பேசிய " சபாஷ் சரியான போட்டி" வசனமும் தமிழ் சினிமா டாப் டென் பஞ்ச் டயலாக்குகளில் எப்போதும் இடம் பிடிக்கும். நாடோடி மன்னனில் வஞ்சக ராஜ குருவாக அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். சிவகங்கை சீமை திரைப்படத்தில் சின்ன மருதுவான எஸ் எஸ் ராஜேந்திரன் தன் அண்ணனான டி கே பகவதியிடம் இவரை நம் படையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார். அப்போது அவையினர் சந்தேகமாகப் பார்க்க உடனே எஸ் எஸ் ஆர் இவரது வீரத்தை பரிட்சை செய்து பார்க்க வேண்டுமா என்று கேட்பார். அதற்க்கு டி கே பகவதி சொல்வார் "வேண்டாம் இவரைப் பார்த்தாலே இவரது வீரம் தெரிகிறது" என்பார்.

1960 க்குப் பின் சரித்திர கதைகளை தயாரிப்பது குறைந்து போனது. இந்த காலகட்டத்தில் வந்த ஸ்ரீதர், பாலசந்தர் ஆகியோரது படங்களில் பெரும்பாலும் சம்பவங்களே வில்லன்களாய் அமைந்தன. மற்ற சமூக கதையமைப்புள்ள படங்களிலும் பண்னையார், உள்ளூர் நகரசபைத் தலைவர் போன்ற உப்பு சப்பில்லாத திறமைக்கு அதிகம் வேலை வைக்காத வேடங்களே வில்லன்களுக்கு வாய்த்தன. இதுபோன்ற கேரக்டர்களுக்கு பி எஸ் வீரப்பா தேவையேயில்லை. ஐந்தையும் ஐந்தையும் கூட்ட ஆப்பிள் கம்ப்யூட்டர் எதற்க்கு?

1977க்குப் பின் பாரதிராஜா,பாலுமகேந்திரா,மகேந்திரன் படங்களிலும் வில்லனுக்கு பெரிய தேவை ஏற்படவில்லை. இவர்கள் சித்தரித்த வில்லன்களுக்கு 40க்கும் குறைவான வயதுள்ளவர்களே தேவைப்பட்டர்கள். இக்காலத்தில் அலாவுதீனும் அற்புத விளக்கு படத்தில் (1979) நடித்தார்.முரட்டுக்காளைக்கு பின் ஜெய்சங்கர், அதன்பின் சத்யராஜ் என அடுத்த தலைமுறை வில்லன்கள் வந்த பின்னர் பி எஸ் வீரப்பாவின் தேவை குறைந்து போனது. பின் சுபாஷ் இயக்கத்தில் கலியுகம் (1988), வி சேகர் இயக்கத்தில் நீங்களும் ஹீரோதான் (1990) ஆகிய படங்களில் கடைசியாக நடித்தார்.

நீங்களும் ஹீரோதான் படம் சினிமா துறையை எள்ளல் செய்து எடுத்த படம். அதில் ஒரு காட்சியில் படபிடிப்புக்காக வரும் பி எஸ் வீரப்பாவையும் நம்பியாரையும் மக்கள் சபிப்பார்கள். நம்பியார் கூட தூறல் நின்னு போச்சு படத்துக்ப் பின் குணசித்திர நடிகராக மாறினார். ஆனால் வீரப்பா வீரப் பா தான். வீரப்பாவின் இன்னொரு முகம் தயாரிப்பாளர். தனது பி எஸ் வி பிக்சர்ஸ் மூலம் ஆனந்த ஜோதி,ஆண்டவன் கட்டளை, ஆலயமணி, ஆத்மி(இந்தி),வீரக்கனல்,பிள்ளைக்கனியமுது ஆகிய படங்களை தயாரித்தார். 1980 களில் சாட்சி,வெற்றி,கடமை,நட்பு ஆகிய படங்களை தயாரித்தார்.


(தொடரும்)

January 28, 2009

கார்த்திக் என்றொரு கலைஞன் - நிறைவுப் பகுதி

முதல் பகுதி


இரண்டாம் பகுதி

கார்த்திக்கின் மூன்றாம் பிறவி


நாயகிகளை அழகாக காட்டுவது கேமராமேனின் திறமை என்றாலும் அதில் இயக்குனர்களின் பங்கையும் மறுக்க முடியாது. சில இயக்குனர்கள் அந்த அழகியலில் கரை கண்டவர்கள். அதுவரை ஹோம்லி பிகராக பார்க்கப்பட்ட அமலாவுக்கு நீச்சல் உடையை மாட்டி ஜீவா திரைப்படத்தில் கவர்ச்சியாக காட்டியவர் பிரதாப் போத்தன். இன்னொரு பாத்திரத்தில் நடித்த சில்க் ஸ்மிதாவுக்கு குறைந்த அளவு உடைகளை கொடுத்து அதிக அளவு கோணங்களில் அவரது அழகை காட்டினார். தர்மத்தின் தலைவன், வருஷம்16, வெற்றிவிழா ஆகிய படங்களில் கவர்ச்சியானவர் என்ற எண்ணமே தோன்றாமலிருக்கும் வண்ணம் வலம் வந்த குஷ்புவை மைடியர் மார்த்தாண்டன் என்னும் படத்தின் மூலம் கவர்ச்சி கன்னியாக மாற்றியவரும் பிரதாப் போத்தனே. தற்போது கூட ஐயா,சந்திரமுகி ஆகிய படங்களில் கவர்ச்சி இல்லாமல் நடித்த நயந்தாராவை சிம்பு வல்லவனில் கவர்ச்சியாக காட்டினார். பின் விஷ்ணுவர்த்தன் பில்லாவில் மெருகேற்றினார்.

இயக்குனர் சுந்தர் சியும் இந்த வகையறாவை சேர்ந்தவரே. அகால மரணமடைந்த நடிகை திவ்யபாரதி பாதியில் விட்டுச் சென்ற படங்களை முடிக்க தெலுங்கு தேசத்தவர்கள் உபயோகப்படுத்திய ரம்பாவை கதிர் தான் இயக்கிய உழவன் படத்தில் இரண்டாம் கதானாயகியாக நடிக்க அழைத்துவந்தார். அப்படத்தில் சாதாரணமாக தோற்றமளித்த ரம்பாவை அந்த தேவலோக ரம்பையே இவள்தானோ என்னும் அளவுக்கு அழகாக காட்டினார் சுந்தர் சி தன் உள்ளத்தை அள்ளித் தா படத்தில்.


ஆம் கார்த்திக்குக்கு மூன்றாம் பிறவியாக அமைந்த அதே உள்ளத்தை அள்ளித் தாவில் தான். இந்தப்படம் தயாரிப்பில் இருந்தபோது இதில் பணியாற்றிய அனைவருமே இது சராசரி படம்தான் என்ற மனதோடுதான் இருந்தார்கள். சுந்தர் சி யின் முதல் படமான முறை மாமன் ஒரு சராசரி வெற்றிப் படம். இரண்டாவது படமான இதை அவர் இயக்கும் போது சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு இவ்வாறு பேட்டியளித்திருந்தார் "இதுவும் முறைமாமன் போல காமெடி படம். எப்படியாவது 50 நாள் ஓடிவிடும். தயாரிப்பாளருக்கு நஷ்டம் வராது". படம் வெளிவந்து தமிழ் சினிமா வரலாற்றின் சிறந்த 10 காமெடி படங்களுல் ஒன்றாக இடம் பிடித்தது.

உள்ளத்தை அள்ளித்தாவின் வெற்றியை அடுத்து கார்த்திக் நடித்த அடுத்த படம் கோகுலத்தில் சீதை. காதல் கோட்டை அகத்தியனின் அடுத்த படமான இது கார்த்திக் நடிப்பின் இன்னொரு பரிமாணத்தை காட்டியது. இதைத் தொடர்ந்து கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான பிஸ்தாவும் வெற்றிப்படமே. தொடர் வெற்றிகளோடு இருந்த விக்ரமனுடன் கார்த்திக் இணைந்த உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படமும் கார்த்திக்கிக்கு பெரிய வெற்றிப் படமானது.

உள்ளத்தை அள்ளித் தாவுக்கு பின் சுந்தர் சி யுடன் இணைந்த மேட்டுக்குடியும் ஓரளவு வெற்றிப்படமே. இன்னும் கூட சன் குழும தொலைக்காட்சிகளில் சனி, ஞாயிறுகளில் மதிய நேரத்தில் இப்படம் போடப் படுகிறது.


பின்னர் வழக்கம் போல் சரிவு ஆரம்பமானது. சின்ன ராஜா, நிலவே முகம் காட்டு, குபேரன், கண்ணன் வருவான், அழகான நாட்கள், லவ்லி என பல தோல்விப் படங்கள். உனக்காக எல்லாம் உனக்காக மட்டும் நஷ்டம் இல்லாமல் தப்பித்தது.


இந்த சமயத்தில் கார்த்திக் சில படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்தார். ராஜ்கபூர் இயக்கத்தில் அஜீத் நாயகனாக நடித்த ஆனந்தப் பூங்காற்றே, சுந்தர் சி இயக்கத்தில் பிரபுதேவா நடித்த உள்ளம் கொள்ளை போகுதே, பிரபுவுடன் தை பொறந்தாச்சு, அருண் பாண்டியனின் தேவன் ஆகிய படங்களில் சிறிது நேரமே வந்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நடித்திருப்பார்.

கடைசி மூன்று ஆண்டுகளில் அவர் நடித்து வந்த படங்கள் என்றால் குஸ்தி, கலக்குறே சந்துரு ஆகியவை.


இந்த மூன்றாம் சரிவுக்கும் முந்தைய காரணங்களே பொருந்தும். தொப்பி, ஊட்டி, பிளேசர் ஆகியவை கார்த்திக்கின் டிரேட் மார்க் ஆகின. சுந்தர் சி மட்டும் இவரை தாக்குப் பிடித்து ஆறு படங்களை இயக்கினார். ராஜ்கபூரும் இவரை நன்கு சமாளிக்க கூடியவர்.


மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவ்வளவு அடிபட்ட பின்னும், மூன்றாவது ரவுண்டிலும் கூட சில விஷயங்களை கார்த்திக் மாற்றிக் கொள்ளாததே. ஒரு வெற்றிப் படத்தை கொடுத்த உடன் சுதாரிக்காமல் குப்பையான கதையில் நடிப்பது கார்த்திக்குக்கு மிகப் பிடித்த விஷயம். ஒரு எடுத்துக் காட்டை பார்ப்போம்.

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படம் வெளிவந்து பெரிய வெற்றி. அடுத்து என்ன படத்தில் நடிப்பார் இவர் என எல்லோரும் எதிர்பார்த்த போது விழுந்தது இடி. உப்புமா கூட, இவர் எடுக்கும் படங்களுக்கு என் பெயரை உபயோகப் படுத்துகிறீர்களே என கோபப்படும் அளவுக்கு படமெடுக்கும் ராம நாராயனன் இயக்கத்தில் குபேரன் என்னும் படத்தில் அடுத்து நடிக்கப் போகிறார் என்ற செய்திதான் அது.
சிவலிங்கம் என்னும் படத்தில் சத்யராஜுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின் அப்படம் கிடப்பில் போடப்பட்டது. இப்பொழுது மணிரத்னத்தின் அசோக வனத்தில் வில்லனாக நடிக்கிறார், ஜெயம் ரவிக்கு ஒரு படத்தில் தந்தையாக நடிக்கிறார் என செய்திகள் வருகின்றன. கார்த்திக்கின் மகன் ராதாவின் மகளுடன் இணைந்து நடிக்கப் போவதாகவும் செய்திகள் வருகின்றன.

பிரகாஷ்ராஜ் நடித்த மொழி,வெள்ளித்திரை கதாபாத்திரங்களை கார்த்திக் செய்திருக்கலாமோ என எனக்கு சில சமயம் தோன்றும். சுஜாதாவின் கணேஷ் பாத்திரத்துக்கு பல முறை கார்த்திக்கை பொருத்திப் பார்த்திருக்க்கிறேன்.

கார்த்திக் உங்களுக்கு திறமை இன்னும் குறையவில்லை. மோகன்லாலின் தன்மந்திரா, அமீர்கானின் தாரே ஜமின் பர் போன்ற பாத்திரங்களில் நடித்தால் இன்னும் கூட ஒரு பிறவியை நீங்கள் காண முடியும். அதை தக்க வைத்துக் கொள்ளவும் முடியும். நான்கு பிறவி கண்ட நவரச நாயகன் என்னும் பதிவை எழுத எனக்கு வாய்ப்பளிப்பீர்கள் என நம்புகிறேன்.
கார்த்திக் தொடங்கிய சரணாலய அமைப்பு, பார்வர்ட் பிளாக், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி ஆகியவை பிறிதொரு சந்தர்ப்பத்தில்
கார்த்திக் பற்றி சக பதிவர் அருண்மொழிவர்மன் எழுதிய அட்டகாச பதிவு

பதிவு எழுத ஐடியா கொடுத்த ச்சின்னப்பையன் அவர்களுக்கு நன்றிகள்

கார்த்திக் என்றொரு கலைஞன் - இரண்டாம் பகுதி

முதல் பகுதிக்கு இங்கே செல்லவும்

நாடோடி தென்றல், கோபுர வாசலிலே, அமரன், விக்னேஷ்வர் ஆகிய நான்கு படங்களின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட ஏக காலத்தில் நடந்து கொண்டிருந்தது. நான்கும் எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பிய படங்கள்.

பாரதிராஜாவின் இயக்கம், கதையில் சுஜாதாவின் பங்களிப்பு, பீரியட் பிலிம்,இளையராஜவின் இசையில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்த பாடல்கள் என நாடோடி தென்றல்.

மலையாள சினிமாவில் அப்போது உச்சத்தில் இருந்த ப்ரியதர்ஷன் இயக்கத்தில் கோபுர வாசலிலே (இதிலும் இளையராஜவின் பாடல்கள் அட்டகாசம்),

ஆதித்யன் இசையில் ராஜேஷ்வர் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வந்த அமரன். இப்படத்தில் டான் வேடம். முதன்முதலாக கார்த்திக் இப்படத்தில் வெத்தல போட்ட ஷோக்குல என்ற கானாவை பாடியிருந்தார். தற்கால கானாவுக்கான விதை இப்படாலின் மூலமும் , இதன் சம காலத்தில் வெளியான தலைவாசல் படத்தின் மூலமே தூவப்பட்டது. ஸ்ரீவித்யாவும் இப்படத்தில் சண்ட பஜாரு என்னும் பாடலை பாடியிருந்தார். எம் எல் வசந்தகுமாரியின் மகளுக்கு திரைப்பாடல் பாட என்ன கஷ்டம் இருக்கும்?

குஷ்பு ஜோடியாக நடித்த விக்னேஷ்வர் முதன் முறையாக காவல் துறை அலுவலகத்தை நவீனமாக காட்டிய படம். சென்னை எக்மோரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் இருந்த ஹட்கோ அலுவலகத்தை காவல்துறை அலுவலகமாக காட்டி அசத்தியிருப்பார்கள்.

இந்த நான்கு படங்களிலும் நான்கு வித கதாபாத்திரங்கள். நாடோடி தென்றலில் அந்தக்கால ப்ளேபாய், கோபுர வாசலிலே இந்த கால காதலன், அமரனில் டான், விக்னேஷ்வரில் காவல்துறை அதிகாரி. மிக சிறப்பாக இந்த நான்கு கேரக்டர்களிலும் அசத்தியிருப்பார். என்ன ஒரு துரதிர்ஷ்டம், நான்கும் தோல்வி அடைந்தன்.

இந்தப் படங்களை அவர் ஒப்புக்கொண்ட 90- 91 காலகட்டத்தில் மணிரத்னம் தன் தளபதி படத்தின் கலெக்டர் கேரக்டருக்கு கார்த்திக்கை அணுகினார். ஆனால் அதிக சம்பளம் கேட்டதாகவும் அதனால் அர்விந்த் சாமியை மணி அறிமுகப்படுத்தியதாகவும் கூறுவார்கள். சிலரோ அந்த வாய்ப்பை தவிர்க்கவே அவ்வாறு கார்த்திக் கேட்டதாகவும் கூறுவார்கள்.

இதன் பின் இவர் நடித்த உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன், நாடோடி பாட்டுக்காரன், இது நம்ம பூமி,தெய்வ வாக்கு, ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் பொன்னுமணி, காத்திருக்க நேரமில்லை, சின்ன கண்ணம்மா ஆகிய படங்கள் அனைத்தும் வணிக ரீதியில் தோல்வியைத் தழுவின.

இந்தக்காலத்தில் ராஜ்கபூர் இயக்கத்தில் கார்த்திக் நடித்த சின்ன ஜமீன், சீமான் ஆகிய படங்கள் மட்டுமே வணிகரீதியில் தப்பித்தன. பின் வெளியான முத்துக்காளை, நந்தவனத் தேரு ஆகியவையும் தோல்விப் படங்களே.

86ல் மறுவாழ்வு பெற்று 90 வரை உச்சத்தில் இருந்த கார்த்திக் பின் 95 வரை சரிவையே சந்தித்தார். இதற்க்கு முக்கிய காரணங்கள்.

1. சரியான நேரத்திற்க்கு படப்பிடிப்புக்கு வராமல் டபாய்ப்பது. காத்திருக்க நேரமில்லை, சக்கரவர்த்தி ஆகிய படங்கள் படப்பிடிப்பு தொடங்கி சில ஆண்டுகள் கழித்தே திரைக்கு வந்தன. இவரால் பல தயாரிப்பாளர்கள் டரியலானார்கள். பெரிய இயக்குனர்களும் இவரை தவிர்க்க தொடங்கினார்கள்.

2. முடி கொட்டத் துவங்கியதால் விக் அணிந்து நடித்தார். அது ஒத்துக் கொள்ளாமல் தோல் அலர்ஜி ஏற்பட்டது. எனவே பல காட்சிகளில் தொப்பி அணிந்து நடிக்கத் தொடங்கினார். வெயிலில் நின்று நடிக்க முடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப் பட்ட போது ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பை வைத்துக் கொள்ள வற்புறுத்தினார். இதனால் பல இயக்குனர்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். நல்ல கதை வைத்திருந்த பலர் இவரை அணுக பயந்தார்கள்.

3. சோலைக்குயில் படத்தில் இணைந்து நடித்த ராகினியை திருமணம் செய்து கொண்டார். பின் அவரது தங்கையையும் மணந்து கொண்டார். இதனால் வீட்டிலும் சிக்கல்கள்.

4. கார்த்திக்கின் ப்ளேபாய்தனம் உலக புகழ்பெற்றது. பலருடனும் கோயிங் ஸ்டெடியாக இருந்தால் கேரியர் எப்படி ஸ்டெடியாக இருக்கும்?

5. இவருக்காகவே என ஸ்பெஷலாக இருக்கும் கதைகள் கூட இவரை வந்து அடையவில்லை. ஒரே எடுத்துக்காட்டு பார்க்கலாம். மலையாளத்தில் பெருவெற்றி அடைந்த சித்ரம் படத்தை தமிழில் ரீமேக் செய்தார்கள் எங்கிருந்தோ வந்தான் என்ற பெயரில். பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் பட்டையை கிளப்பிய படம். இங்கே கார்த்திக் அதை செய்திருந்தால் படம் அசத்தலாய் வந்திருக்கும். ஆனால் நடித்தது சத்யராஜ். சத்யராஜ் நல்ல நடிகர் தான். மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் அந்த கேரக்டரை அவரால் சரியாக் செய்யமுடியவில்லை. கடைசியில் அப்படி ஒரு படம் வந்ததா என எல்லோரும் கேட்கும் படி ஆனது.

6. 90க்குப் பின் வந்த அர்விந்த் சுவாமி (தாலாட்டு, மறுபடியும்) இவருக்கு வரவேண்டிய நல்ல படங்களை எடுத்துக் கொள்ள, இளமையான வேடங்களுக்கு பிரசாந்த்,அஜீத் போன்றோர் பங்குக்கு வர நிலைமை இன்னும் சிக்கலானது.

மேலும் சில காரணங்கள், மூன்றாம் பிறவி அடுத்த பதிவில்