October 18, 2008

ரஜினியும் ரீமேக் படங்களும்

ரஜினி நடித்த பல ரீமேக் படங்கள் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் அவருடைய இமேஜையும் உயர்த்தின.
தில்லுமுல்லு (கோல்மால்)
பில்லா (டான்)
குப்பத்து ராஜா (தோ யார்)
நான் வாழ வைப்பேன் (மஜ்போர்)
தீ (தீவார்)
விடுதலை (குர்பானி)
அடுத்தவாரிசு ( ராஜாராணி)
நான் மகான் அல்ல (விஸ்வனாத்)
நான் சிகப்பு மனிதன் (ஆஜ் கி ஆவாஸ்)
நான் அடிமை இல்லை (பியார் ஷுக்தா நஹின்)
தர்மத்தின் தலைவன் (கஷ்மே வாடெ)
குரு சிஷ்யன் ( இன்சாஃப் கி புகார்)
வேலைக்காரன் (நமக் ஹலால்)
மாவீரன் (மர்த்,இந்தி)
மிஸ்டர் பாரத் (திரிசுல்)
படிக்காதவன் (குத்தார்)
பணக்காரன் (லாவரிஸ்)
சிவா (கூன் பசினா)
அண்ணாமலை (குத் கர்ஸ்)
பாட்ஷா (ஹம்)
ஆகியவை இந்தியிலிருந்தும்,

போக்கிரிராஜா (சுட்டலுனாரு ஜாக்ரதா)
நல்லவனுக்கு நல்லவன் (தர்மத்முடு)
மாப்பிள்ளை (அத்தகி எமுடு அம்மகி மொகுடு)
அதிசயபிறவி (யெமுடுகி மொகுடு)
வீரா (அல்லரி மொகுடு)
ஆகியவை தெலுங்கில் இருந்தும்

பொல்லதவன் (பிரமதே கனிகெ)
புதுகவிதை (நா நினா மரியலரே)
கை கொடுக்கும் கை (கத சஙகமா)
மன்னன் (அனூரகா அரலித்)
பாண்டியன் (பாம்பே தாதா)
தர்மதுரை (தேவா)
ஆகியவை கன்னடத்தில் இருந்தும்

முத்து (தேன்மாவின் கொம்பத்)
சந்திரமுகி (மணிசித்ர தாழ்)
குசேலன் (கதபறயும் போல்)
ஆகிய படங்கள் மலையாளத்தில் இருந்தும் ரீமேக் செய்யப்பட்டவை.

வெற்றி சதவிகிதம் என்று பார்த்தால் இவற்றில் பெரும்பாலான படங்கள் பெருவெற்றி பெற்றவை. வெகு சில படங்கள் மட்டுமே தோல்வி அடைந்தவை. ரஜினியின் இமேஜை உச்சிக்கு கொண்டு சென்ற பல படங்கள் ரீமேக் படங்களே.இந்த அபார வெற்றி சதவிகிதத்துக்கு காரணம் என்று பார்த்தால்

1. பெரும்பாலும் வெற்றி அடைந்த படங்களே ரீமேக் செய்யப்படும். அவற்றிலும் தனக்கு சூட் ஆகும் படங்க்ளை மட்டுமே ரஜினி கவனமாக தேர்ந்தெடுத்தார். பெரும்பாலான அமிதாப்பின் வெற்றி படங்களை ரீமேக் செய்த ரஜினி அக்காலத்தில் வெளியான கபி கபி போன்ற படங்களை தவிர்த்திருப்பார். பைரவி,முள்ளும் மலரும் போன்ற படங்களின் மூலம் கிடைத்த ஆக்‌ஷன் இமேஜை கெடுத்துவிடாத படங்களை மட்டும் தெரிவு செய்தார். இப்போது கூட பிளாக்,சர்க்கார்,சீனிகம்,ஏகலைவா போன்ற அமிதாப்பின் படங்களை கண்டும் காணாதது போல் தவிர்த்துவிட்டார்.

2. இந்த படங்களை கவனித்தால், ரஜினிக்கு முழுவதும் சூட்டாகாத படமெனில் எஸ்ஸென்ஸை மட்டுமே பயன்படுத்தியிருப்பார்கள். தேன்மாவின் கொம்பத் படத்தையும் முத்து படத்தையும் இதைப்பற்றி அறியாத ஒருவர் பார்த்தால் இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத படங்கள் என்றே சொல்லுவார். நல்லவனுக்கு நல்லவன் படமும் பல மாற்றம் செய்யப்பட்டதே.

3. பல இந்திப்படங்கள், முண்னனி நாயகர்கள் இணைந்து நடித்ததே. ஆனால் தமிழில் இதை கவனமாக தவிர்த்திருப்பார்கள். இரண்டாவது கதானாயகன் பெரும்பாலும் டம்மிதான்.வேலைக்காரன் - சரத்பாபு, படிக்காதவன்- தம்பி கேரக்டர்,பணக்காரன் - சரண்ராஜ், தீ - தம்பி சுமன் டம்மி. இவையெல்லாம் அங்கே நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டர்கள். இதையெல்லாம் விட மிஸ்டர் பாரத் படத்தில் எஸ் வி சேகரை படு டம்மியாக்கி இருப்பார்கள். திரிசூல் என அப்பா, இரு மகன்களுக்கும் சம்மான ஸ்கோப் உள்ள படம் அது. படப்பிடிப்பில் சேகர் சத்யராஜிடம் சொன்னாராம் இது தோசூல் என. சில நாள் கழித்து சத்யராஜ் சொன்னாராம், படம் ஏக்சூல் என. ஆனால் படம் பெப் குறைவாக இருந்ததால் சத்யராஜின் சீன்களை அதிகப்படுத்தினார்கள். தமிழ்னாட்டில் இது சகஜம் தான். வணிக மதிப்புள்ள முண்ணனி நாயகர்கள் சேர்ந்து நடிப்பது இங்கு அரிதே. கடைசியாக அப்படி வந்த படமென்றால் பிதாமகனை சொல்லலாம். இவ்வாறு டம்மியாக்கப்படும் நடிகர்களின் நல்ல சீன்கள் ரஜினி கணக்கில் வரவு வைக்கப்பட்டு அவரது இமேஜ் உயர காரணமாய் அமைந்தது.

4. இவ்வாறு சில கேரக்டர்களை குறைத்தாலும், நடிக நடிகையர் தேர்வில் ரஜினி மிக கவனமாக இருப்பார். அப்போது உச்சத்தில் இருக்கும் வில்லன்,நாயகிகளை மட்டுமே தேர்வு செய்தார். ஆன்ஸ்ட் ராஜ் ல் தூள்கிளப்பிய தேவனை பாட்ஷா க்கு தேர்வு செய்ததை உதாரணமாக கொள்ளலாம். முத்து படத்திற்க்கு முதலில் அரவிந்த்சாமியை கேட்டனர். அவர் மறுக்கவே சரத்பாபு.

5. இப்படங்களின் பின்னால் இருந்த திரைக்கதை,இயக்குனர்கள் நல்ல அனுபவம் பெற்றவர்கள். பஞ்சு அருணாசலம்,எஸ் பி முத்துராமன்,ராஜசேகர்,சுரேஷ்கிருஷ்ணா,குகனாதன்,பாலசந்தரின் உதவியாளர்கள் போன்றோரின் உழைப்பு இவற்றை மெருகேற்றியது

6. தமிழ் மக்களின் ரசனை மற்ற மாநிலங்களை விட சற்று வேறுபட்டது. இதை ரஜினி நன்கு உணர்ந்திருந்தார். அதனால்தான் இந்தி படங்களின் நீளம்,மலையாள படங்களின் தளர்வேகம்,தெலுங்கின் எதிலும் அதிகப்படி போன்ற கூறுகள் தமிழில் தலைகாட்டாமல் பார்த்து கொண்டார்.

7. தனக்கு ஏற்ற பில்டப் காட்சிகளை கவனமாக அமைத்திருப்பார். ஹம் மில் அமிதாப் முதன்முறையாக கோபப்படும் காட்சியை விட இங்கே ரஜினிக்கு அமைக்கப்பட்ட காட்சி பலமடங்கு பவர்புல்லானது.

8. செண்டிமெண்ட் காட்சிகளிலும் கவனமாக இருப்பார். இந்தி படங்களில் இருக்கும் அண்ணியுடன் சகஜமாக பழகும் காட்சிகள்,தெலுங்கில் இருக்கும் மாமியாரை சைட் அடிக்கும் காட்சிகள் இவை இங்கு நடக்காது.

9. அந்த பாத்திரங்களை உள்வாங்கி தன் ஸ்டைலில் நடிப்பை வழங்குவதும் வெற்றிக்கு முக்கிய காரணம். இரண்டு மூன்று நாயகர்கள் சேர்ந்து கொண்டுவரும் ரிச்னெஸ்ஸை தன் பாடி லாங்குவேஜாலும்,புதுவகை மேனரிஸங்களாலும், ஸ்டைலான மேனரிசத்தாலும் ஒருவராகவே கொண்டுவரும் திறமை ரஜினிக்கே உண்டு.

October 16, 2008

இயக்குனர் ராஜசேகர் - சில நினைவுகள்

அல், ரஜினிக்கு முக்கியமான தருணங்களில் கமர்ஷியல் வெற்றிப்படங்களை தந்தவர் இயக்குனர் ராஜசேகர். தர்மதுரை என்னும் வெற்றிப்படத்தை கொடுத்துவிட்டு, நம்மிடம் இருந்து விடைபெற்று சென்ற அவரது சில முக்கிய படங்களை பார்க்கலாம்.



மலையூர் மம்பட்டியான்



தியாகராஜன் தமிழ்திரையில் நிலைபெற காரணமாய் இருந்த படம். சூழ்நிலையால் வழிப்பறி கொள்ளையனாக மாறி மக்களுக்கும் உதவும் பாத்திரத்தில் தியாகராஜனும், வழிப்பறிக்கு ஆளாகி பின்னர் மம்பட்டியானையே காதலிக்கும் பெண்ணாக சரிதாவும் நடித்திருந்தார்கள். செந்தில் இதில் நகைச்சுவைக்கு மட்டுமின்றி கதைக்கும் பயன்பட்டிருந்தார். (சுப்ரமணியபுரம் - கஞ்சா கருப்பு டைப் துரோகம் ) . இளையராஜாவின் இசையில் காட்டு வழி போற பொன்னே கவலைப்படாதே, சின்னபொன்னு சீலை போன்ற் கிளாசிக் பாடல்களும் வெள்ளரிக்காய் பிஞ்சு ஒன்னு என்னும் குத்துப்பாடலும் உண்டு. பி சி சென்டர்களில் அமோக வெற்றி அடைந்த படம். இது ரஜினி நடிக்க இந்தியில் கங்குவா என்னும் பெயரில் வெளியானது. பின்னர் கரிமேடு கருவாயன், சீவலெப்பேரி பாண்டி ஆகிய படங்கள் வர இப்படம் ஆரம்பமாக அமைந்தது.


தம்பிக்கு எந்த ஊரு?


பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும்,தில்லு முல்லு போன்ற படங்களில் சிறந்த நகைச்சுவை நடிப்பை ரஜினி காட்டியிருந்தாலும் பின்னர் பாயும் புலி,சிகப்பு சூரியன், தனிக்காட்டு ராஜா போன்ற ராவான ஆக்‌ஷன் படங்களில் நடித்த ரஜினிக்கு ஆக்‌ஷன்+காமெடி என்ற புது பாதையை காட்டிய படம் இது. இப்படத்திற்க்கு பின்னரே ரஜினிக்கு மாபெரும் குடும்ப ஆடியன்ஸ் உருவானது எனலாம். இந்த பாணி விஜய் வரை தொடருகிறது. இப்பட்த்தின் மூலம் பாம்புக்கும் ரஜினிக்கும் உருவான பந்தம் அண்ணாமலை,முத்து,அருணாசலம்,படையப்பா வரை தொடருகிறது. காதலின் தீபமொன்று பாடல் இல்லாத சிஸ்டம் ஏதும் தமிழ்னாட்டில் இருக்குமா என்பது சந்தேகமே. மாதவி காதலியாகவும். சுலக்‌ஷனா ஒரு தலையாய் காதலிப்பவராகவும் நடித்தனர்.


காக்கிசட்டை


சகலகலாவல்லவனுக்கு பிறகு கமலுக்கு அமைந்த அதிரடி மசாலா. இப்பட்த்தின் தாக்கம் சமீபத்திய போக்கிரி வரை தொடருகிறது. சத்யராஜுக்கு பெரும் புகழை தந்த படம். தகடு தகடு என கமலை தூக்கி சாப்பிட்டிருப்பார் சத்யராஜ் இந்தபடத்தில். அம்பிகா,மாதவி,ராஜீவ் நடித்த இப்பட்த்தில் பாடல்களும் அருமை. வானிலே தேனிலா, சிங்காரி சரக்கு, பட்டு கண்ணம் தொட்டுக் கொள்ள, பூப்போட்ட தாவணி போன்ற க்மர்ஷியல் படத்துக்கு தேவையான பாடல்கள்.


விக்ரம்


தமிழில் நீண்ட இடைவெளைக்கு பின் வந்த அறிவியல்+ சாகசம் தொடர்பான படமிது. (ஜெனோவா போன்ற படங்களை கருத்தில் கொண்டால்). இப்பட்த்தின் கதை குமுதத்தில் சுஜாதா அவர்களால் எழுதப்பட்டது. இப்படம் உருவான கதை பின்னர் கமலால் எழுதப்பட்டு புத்தகமாக வந்தது, ஒரு கோடி ரூபாய் கனவு என்ற பெயரில். அம்ஜட்கான்,டிம்பிள் கபாடியா,லிசி போன்றோர் தமிழில் அறிமுகமான படம். வனிதாமணி வனமோகினி, என் பேரு மஞசக்குருவி, விக்ரோம் போன்ற பாடல்கள். இப்படத்தின் முதல் பாதி வெகுவேகமாகவும் பிற்பாதி மெதுவாகவும் செல்லும். ஓடும் நேரமும் பிற்பாதியில் அதிகம். ஏவுகணை, கம்ப்யூட்டர் போன்ற வார்த்தைகளை தமிழகம் முழுவதும் பரப்பிய படம். இப்படம் உருவாகும் போது கமல் கொடுத்த பேட்டியில் ஆப்பிள் கம்ப்யூட்டரைப்பற்றி சொல்லி இருப்பார். வர்த்தக ரீதியில் இது தோல்விப்படமே.


மாவீரன்


அமிதாப் நடித்த மர்த் என்னும் படத்தின் ரீமேக். சமஸ்தான மன்னரும், ரஜினியின் தந்தையுமான தாராசிங்கை சிறைபிடிக்கிறார்கள். ரஜினி எப்படி போராடுகிறார் என போரடிக்க வைத்து விட்டார்கள். படம் உருவான போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ரஜினி ரசிகர்களுக்கும் கூட இப்படம் பிடிக்கவில்லை எனலாம். பட இடைவேளையில் அவர்கள் விக்ரோம் கல்லமுட்டாய் விக்ரோம் என பாடி கிண்டல் செய்தால் நாங்கள் பதிலுக்கு மாவீரன் நொண்டி வருது விலகு விலகு என எதிர்ப்பாட்டு பாடுவோம். அம்பிகா இணை, நாகேஷ் துணை.

படிக்காதவன்

அண்ணன் தம்பி பாசக்கதை. சிவாஜி ,ரஜினி, அம்பிகா,வடிவுக்கரசி,நாகேஷ், ஜெய்சங்கர் நடித்தது. ஊர தெரிஞ்சுக்கிட்டேன், ராஜாவுக்கு ராஜா நாண்டா, ஜோடிக்கிளி எங்கே போன்ற பாடல்கள். ஜனகராஜின் என் தங்கச்சிய நாய் கடிச்சிருசுப்பா காமெடி இன்னும் காமெடி ஷோக்களில் பயன்படுகிறது.

மாப்பிள்ளை


இப்பட்த்திற்க்கு ரஜினிக்கு அப்போது பெருந்தொகையான 43லட்சம் வெள்ளையில் கொடுக்கப்பட்டது. தெலுங்கில் வெற்றிபெற்ற படத்தின் ரீமேக் இது. சிரஞ்சீவியின் மைத்துனர் தயாரிப்பில் வெளியான இப்பட்த்தில் சிரஞ்சீவி கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். ஸ்ரீவித்யா மாமியாராகவும், அமலா காதலியாகவும் நடித்திருந்த நல்ல நகைச்சுவை படம் இது. மானின் இருகண்கள் கொண்ட மானே மானே, வேறு வேலை உனக்கு இல்லையே, என்னதான் சுகமோ போன்ற இனிமையான பாடல்கள் இப்படத்தின் பலம்.

தர்மதுரை

நல்ல அண்ணன், ஏமாற்றுக்கார தம்பிகளைப் பற்றிய கதை. இப்படத்தில் இருந்துதான் நீங்க மனுசனே இல்ல, தெய்வம் போன்று ரஜினியை புகழ்பாடும் வசனங்கள் அதிகரிக்க ஆரம்பித்தன. செம்மீன் புகழ் மது இதில் ரஜினியின் தந்தையாக நடித்தார். மாசிமாசம் ஆளான பொண்ணு, அண்ணன் என்ன தம்பி என்ன போன்ற பாடல்கள், ரஜினியின் நடிப்பு, கௌதமி,வைஷ்ணவி நடிப்பு ஆகியவற்றால் நன்கும் ஓடிய படம்.

இப்படத்திற்க்கு பின் அவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார். இவரது படங்கள் பெரும்பாலும் பீல்குட் மசாலா என்னும் வகையில் இருக்கும். ரஜினியை வைத்து நிறைய படங்கள் (பெரும்பாலும் ரீமேக்) கொடுத்தார். மலையூர் மம்பட்டியான் தவிர மற்ற படங்கள் நடிகர்களுக்கு ஏற்ப எடுத்ததால் இவரது தனித்தன்மையாக எதையும் கூறமுடியவில்லை. நல்ல கதை, நடிகர்கள் கிடைத்தால் அசத்திவிடுவார்.

இதுதவிர ஏவிஎம் தயாரிப்பில் அம்மா,பாட்டி சொல்லை தட்டாதே போன்ற படங்களை இயக்கினார். சரிதா நடித்த அம்மாவில் வரும் மழையே மழையே என்னும் பாடல் புகழ்பெற்றது. பாட்டி சொல்லை தட்டாதே நல்ல காமெடி படம்.

ராபர்ட் ராஜசேகர் இணை வேறு. இவர்கள் ஒளிப்பதிவாளராக திரை வாழ்க்கையை துவங்கி இயக்குனரானவர்கள். ஒருதலை ராகம் இவர்களது ஒளிப்பதிவில் வந்தது. பாலைவன சோலை, சின்ன பூவெ மெல்ல பேசு ஆகிய படங்களை இயக்கியவர்கள்.

ராஜசேகர் இயக்கிய படவரிசை

1981

கண்ணீர் பூக்கள்

1982
அம்மா

1983

மலையூர் மம்பட்டியான்
1984

தம்பிக்கு எந்த ஊரு

1985

காக்கிசட்டை, படிக்காதவன்

1986

விக்ரம்,முரட்டு கரங்கள், மாவீரன், காலமெல்லாம் உன் மடியில், கண்மணியே பேசு, லட்சுமி வந்தாச்சு

1987

கூலிக்காரன்

1988

கழுகு மலை கள்ளன் பாட்டி சொல்லை தட்டாதே

1989மாப்பிள்ளை

1990காளிச்சரன்

1991

தர்மதுரை


October 12, 2008

தமிழ்சினிமாவில் குழந்தை தொழிலாளர் சித்தரிப்பு

குழந்தை தொழிலாளர் பிரச்சினையை கதைகருவாக கொண்ட படங்கள் தமிழ்சினிமாவில் மிக குறைவு. அப்படங்களையும், இப்பிரச்சினையை அடிநாதமாக கொண்டு வெளிவந்த சில படங்களையும் பார்ப்போம்.

குட்டி

ஜானகி விஸ்வனாதன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம், சிறு குழந்தைகளை வீட்டு வேளைக்கு வைப்பதை பற்றி பேசியது. கிராமத்தில் மண்பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வறுமையில் வாடும் நாசர் தன் மகளை படிக்க வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் சென்னையில் உள்ள ஒரு வீட்டிற்க்கு பணிக்கு அனுப்புகிறார். அவ்வீட்டில் உள்ள இளம் தம்பதியர் (ரமேஷ் அர்விந்த்- கௌசல்யா) ஓரளவு நடத்தினாலும், பெரியவர்கள் கொடுமைப்படுத்துகிறார்கள். கடைக்கார அண்ணாச்சி (விவேக்) மூலம் வீட்டிற்க்கு செய்தி அனுப்புகிறாள் குட்டி. என்ன நட்க்கிறது?

இப்படத்தில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாது என ஒரு அலுவகத்தில் விவாதித்துக்கொன்டிருக்கும் போது டீக்கடை சிறுவன் டீ கொண்டு வரும் காட்சி இயக்குனரின் திறமைக்கு சான்று. நாசர் தன் மகளுக்கு மண் பொம்மை செய்து தரும் காட்சியில் நம்மையறியாமல் நம் கண்ணில் தண்ணீர்.

கருவேலம் பூக்கள்

கரிசல் குளம் என்னும் ஊரில் குழந்தைகளை தீப்பெட்டி/பட்டாசு தொழிலுக்கு அனுப்பிவிட்டு தகப்பன்கள் சந்தோசமாக இருக்கிறார்கள். இளம் பெண்களையும் அனுப்புகிறார்கள் வேளைக்கு. நாசர்,ராதிகா தம் குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது என உறுதியாக இருக்கிறார்கள். படிக்க வைக்க துடிக்கிறார்கள். அந்த நிலை தொடர்ந்ததா?. சார்லீ வேளைக்கு ஆள் பிடிக்கும் தரகர். அவர் ஊர் ஆண்களை மூளைச்சலவை செய்யும் காட்சியும், குழந்தைகள்/பெண்கள் காலை 5 மணிக்கு தூக்ககலக்கத்தில் பேருந்தில் ஏறிச்செல்லும் காட்சியும் இயக்குனர் பூமணியின் திறமைக்கு சான்று. என் எப் டி சி ஆதரவில் தயாரிக்கப்பட்ட படம் இது.

திருமதி பழனிச்சாமி

ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் சத்யராஜ்,கவுண்டமணி,சுகன்யா நடித்து வெளியான இந்தப்படம், நகைச்சுவைக்காக மனதில் நின்றாலும் படத்தின் அடிநாதம் குழந்தை தொழிலாளர் ஒழிப்பே. இதிலும் பட்டாசு தொழில். அதனால் குடும்பத்தை இழக்கும் சத்யராஜ், அங்கு விழிப்புணர்வு ஏற்படுத்த டீச்சரை மணக்க நினைக்கிறார். இடைவேளை வரை பெண்தேடும் கலாட்டாதான். பின்னர் தான் படம் ஆரம்பிக்கும். பல சோதனைகளை கடந்து குழந்தைகளுக்கு கல்வி தருகிறார்கள். பாலசந்தர் இயக்கிய உன்னால் முடியும் தம்பியிலும் தீப்பெட்டி முதலாழிகள் படிப்புக்கு தடை போடும் காட்சி உண்டு.

திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் சுமங்கலி திட்டம் என்ற பெயரில் நடக்கும் கொத்தடிமை முறை திரைப்படங்களில் பதிவு செய்யப்படவில்லை. மேற்கு மண்டலத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் அதை செய்வார் என எதிர்பார்க்கலாம்.

காதல் கொண்டேன்

செல்வராகவனின் அபிசியல் முதல் படமான இதில் குணா டைப் காதல் சொல்லப்பட்டாலும், குழந்தை தொழிலாளர் பிரச்சினை சிறப்பாக எடுத்தாளப் பட்டிருந்தது. மார்பிள் கல் வேளை செய்யும் குழந்தைகள், அவர்களின் துயரங்கள் மட்டுமில்லாது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையையும் பேசியது. இப்பிரச்சினையை தமிழ்சினிமாவில் பேசிய முதல் படம் இதுவே.

நிலாக்காலம்

இந்தியன் பட இணை இயக்குனர் ஏ ஆர் காந்திகிருஷ்னா முதலில் எஞ்சினியர் (அர்விந் சுவாமி, மாதுரி தீட்சித் நடிக்க) என்னும் படத்தை இயக்கவிருந்தார். பலகாரணங்களால் அப்படம் கைவிடப்பட இப்படத்தை எடுத்தார். வசதியான பெற்றோர்களின் குழந்தைகள் மீதான அக்கறையின்மையை இப்படம் பேசியது. ஆனால் இதில் ஒரு முக்கிய பாத்திரம் மெக்கானிக் ஷெட்டில் வேலைபார்க்கும் ஒரு சிறுவன். அவன் மூலமாக குழந்தை தொழிலாளர் பிரச்சினை சொல்லப்பட்டது. காதல் படத்திலும் மெக்கானிக் ஷெட்டில் சிறுவன் வேலை பார்ப்பது காட்டப்பட்டுள்ளது, அது சகஜம் எனும் தொனியில். பிரச்சினையை சொல்லாவிட்டலும் பரவாயில்லை ஆனால் அது சகஜம் என காட்டுவது ஆபத்தே.

வில்லன்

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜீத் நடித்த இப்படத்தில் குழந்தைகளை ஊனமுற்றவர்களாக மாற்றி பிச்சை எடுக்க வைக்கும் கொடூரம் சொல்லப்பட்டது. காதலர் தினம் படத்தில் ஒரு குழந்தை படிக்க மற்றோரு குழந்தையை பிச்சை எடுக்க வைப்பது சொல்லப்பட்டது. காதலா காதலா, மற்றும் விவேக்கின் பல படங்களில் இது நகைச்சுவைக்காக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

சினிமாவில் குழந்தைகள் நடிப்பது பற்றி அவ்வை சண்முகியில் சொல்லப்பட்டுள்ளது. சூப்பர் குடும்பம் போன்ற படங்களில் நகைச்சுவைக்காக இவ்விஷயம் எடுத்தாளப்பட்டுள்ளது.

பல திரைப்படங்களில் டீக்கடையில் சிறுவர்கள் வேலை பார்ப்பது சகஜம் என காட்டப்படுகிறது. சிவாஜி திரைப்படத்தில் கட்டிட வேலையில் சிறுவன் ஈடுபடுவது சொல்லப்பட்டு அது கண்டிக்கப்பட்டது. அதே வேளையில் ரஜினி, சுமன் இடையேயான பஜ்ஜி காட்சியில் சிறுவன் டீ கொடுப்பது இயல்பாக காட்டப்பட்டுள்ளது.

இம்மாதிரி பெரிய நடிகர்/இயக்குனர் படங்களில் பல காட்சிகளில் குழந்தை தொழிலாளர் இயல்பே என காட்டப்படுகிறது. இது சமூகத்தில் தவறான கருத்தை விதைக்கிறது. பிரச்சாரபடம் எடுக்க வேண்டாம், இது இயல்பு என சித்தரிக்காமல் இருந்தாலே போதும். முடிந்தால் சில காட்சிகளில் இதை கண்டியுங்கள். (சிவாஜி போல).

October 11, 2008

சச்சின் - ரஜினி, டிராவிட் - கமல், கங்குலி - விஜயகாந்த்

சச்சின் - ரஜினி

இருவருக்கும் ரசிகர்கள் அதிகம். ஒருவர் களத்தில் இறங்கினால் மைதானம் அலறும், மற்றொருவருக்கு தியேட்டர். பெரியவர் முதல் குழந்தை வரை கவர்ந்தவர்கள். ஒருவருக்கு விளம்பரபட தயாரிப்பாளர்கள், மற்றொருவருக்கு பட தயாரிப்பளார்கள் கொட்டிக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இருவருக்கும் கடவுள் பக்தி அதிகம். ரஜினிக்கு பாபா, சச்சினுக்கு சாய்பாபா, இங்கே காளிகாம்பாள் அங்கே சித்திவினாயகர்.

இருவரும் அர்ஜுனனை போன்றவர்கள். களத்தில் இறங்கினால் அதகளம் தான். ஆனால் தலைமைப்பண்பு என வரும்போது? அதற்கென்று சில தனியான குணங்கள் வேண்டும். அது இருவருக்கும் குறைவு. இமேஜ் பற்றி இப்போது அதிகம் கவலைப்படுகிறார்கள். வால்டேர் தேவாரம் வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படை தலைவரானபோது கூட சொன்னார்கள், "இவர் அருள்,ஸ்ரீபால் போன்றோர் வியூகம் அமைத்து கொடுத்தால் சிறப்பாக செயல்படுவார்". ஆனால் இவரால் தனியாக சிறப்பாக செயல்படமுடியாது என்று. அதை நிரூபித்தார். இவர்களும் அவரைப் போன்றவர்களே.

டிராவிட் - கமல்

இருவரும் தங்கள் துறைகளில் கைதேர்ந்தவர்கள். ஆனால் முன் ஜோடியுடன் ஒப்பிட்டால் ரசிகர்கள் குறைவு. இருவரும் வல்லுனர்களால் சிலாகிக்கப்படுபவர்கள், சாதாரண ரசிகர்களால் அன்னியமாக பார்க்கப்படுபவர்கள். ஒருவர் அற்புதமான பேட்டிங் டெக்னிக் இருந்தும் பார்ப்பவரை நோகடித்துவிடுவார். மற்றவர் அபாரமான நடிப்பு இருந்தும் பார்ப்பவரை சிலநேரம் இருக்கையில் நெளியவைத்துவிடுவார்.

டிராவிட்டுக்கு இந்தியாவைவிட வெளிநாட்டில் டெஸ்ட் சராசரி அதிகம். கமலுக்கு தமிழ்நாட்டை விட வெளி ஏரியாக்களில் மதிப்பு அதிகம்.

கங்குலி - விஜயகாந்த்

முன் இரு ஜோடிகளுடன் ஒப்பிட்டால் இவர்களுக்கு தொழில் திறமை குறைவு. ஆனாலும் இருப்பதை வைத்துக்கொண்டு இவர்களுடன் மல்லுக்கட்டி முன்னேறியவர்கள். கங்குலிக்கு ஆப் சைட் என்றால் விஜயகாந்துக்கு ஆக்சன் சீன். கங்குலிக்கு லெக் சைட்டில் நளினமாக ஆடவராது. நம்மாளுக்கு காலை வைத்து நளினமாக ஆட தெரியாது. பார்ம் போனபின் மீடியாக்களால் பந்தாடப்பட்டவர்கள். ஒருவருக்கு வங்காளம் பின்னால் நின்றது. இவருக்கு இவரது பி & சி ரசிகர்கள். துறை வல்லுனர்களிடம் இவர்களைப்பற்றி கேட்டால் நல்லமுறையில் பதில் வராது, ஆனாலும் நின்றவர்கள்.

ஆனால் தலைமைக்கு தேவையான குணங்கள் இருவரிடமும் அதிகம். தைரியமானவர்கள். கங்குலி, 1991 ஆஸ்திரேலியப் பயணத்தில் நான் கிரிக்கெட் ஆட வந்தேன், கூல்ட்ரிங்ஸ் கொடுக்க அல்ல என்று நிர்வாகத்தை எதிர்த்தவர். இவர் நான் கதானாயகனாகதான் நடிப்பேன், வில்லனாக மாட்டேன் என்று அடம் பிடித்தவர். இவர் பார்மை இழந்து பின்னர் மீண்டும் எழுந்து நிற்பார். பல தோல்விப்படங்கள் கொடுத்தாலும் பின் ஒரு வெற்றியின் மூலம் இவரும் எழுந்துநிற்பார்.

என்னாச்சு ஏ ஆர் ரகுமானுக்கு?


2001 முதல் தற்போதுவரை ரகுமான் இசையில் வந்த தமிழ்படங்களின் வெற்றிசதவீதம் ஆச்சரியப்படவைக்கிறது.


2001 - ஸ்டார்,பார்த்தாலே பரவசம்

2002 - அல்லி அர்ஜூனா,கன்னத்தில் முத்தமிட்டால்,பாபா,காதல் வைரஸ்

2003 - பரசுராம்,பாய்ஸ்,எனக்கு 20 உனக்கு 18, கண்களால் கைது செய்

2004 - உதயா,ஆயுத எழுத்து, நியூ

2005 - அ ஆ

2006 - சில்லென்று ஒரு காதல்,வரலாறு

2007 - சிவாஜி,அழகிய தமிழ் மகன்

2008 - சக்கரகட்டி


இவற்றில் சிவாஜி,வரலாறு, நியூ மட்டுமே வெற்றிப்படங்கள். அதில் நியூ இனி திரையிடக்கூடாது என தடைவிதித்து விட்டார்கள்.


அ ஆ ஆவரேஜ்


மற்ற படங்கள் எல்லாம் தயாரிப்பாளர்களை முடக்கிய படங்கள் எனலாம்
எனக்கு 20 உனக்கு 18 ல் ஏ எம் ரத்னம் காலி, பாபா மணி ரிட்டர்ன், சக்கரகட்டி - தாணுக்கு நாமகட்டி.

பாடல்கள் நன்றாகத்தான் இருக்கின்றன ஆனால் படம்?

இதில் பல படங்களுக்கு இந்திக்கு கொடுத்த டியூன் தான்.


பாடல் கரை சேர்த்துவிடும் என தயாரிப்பாளர்கள் கதையில் கோட்டைவிடுகிறார்களா?


பாடல்கள் வாங்குவதில் இயக்குனர்கள் களைப்படைந்து விடுகிறார்களா?


இல்லை கதை கேட்காமல் பேனர் பார்த்து ரகுமான் படம் ஒப்புக்கொள்வதால் இப்படி நடக்கிறதா?

October 10, 2008

சினிமா கேள்வி பதில் தொடர்விளையாட்டு

என்னை இந்த தொடர் விளையாட்டுக்கு அழைத்த பாஸ்டன் பாலா,லக்கிலுக் ஆகியோருக்கு நன்றிகள்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எங்கள் ஊரில் பெண்கள் மதிய காட்சி, ஆண்கள் மாலை மற்றும் இரவு. பெண்கள் அனைவரும் சேர்ந்தே செல்வதால் கைக்குழந்தையையும் தூக்கி செல்வார்கள்.விவரம் தெரிந்து பார்த்த படம் சகலகலாவல்லவன். படம் முடிந்தபின் சகதி சண்டை,கம்பு சண்டை,சேஸிங் என சிலாகித்துக் கொண்டே வந்தேன். நிலாகாயுது பாட்டு அறுவை என்ற கமெண்ட் வேறு.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம் - வேளச்சேரி ராஜலட்சுமியில் (5 வது முறை)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

சன் டிவியில் நேற்று கில்லி. இதன் மூலமான ஒக்கடுவில் இருக்கும் ஆந்திராவுக்கான எக்ஸ்ட்ரீம் காட்சிகளை தரணி கவனமாக தவிர்த்திருப்பது அவரின் தமிழ் சினிமா ரசிகர்கள் மீதான புரிதலை காட்டியது. தெலுங்கை விட தமிழ் கில்லி படு வேகம். இவரா குருவி?

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

இந்தியன். நல்ல கம்பெனியில் ரிட்டர்ன் கிளியர், இன்டெர்வியு ஓவர். ரிசல்டுக்காக காத்திருக்கும் போது உறவினர் ஒருவரின் மூலம் முயன்றால் வெற்றி என தெரியவந்தது. அடுத்த நாள் அவரை சந்திக்கலாம் என்ற்ரு இருந்த நிலையில் இந்தப்படம். தாத்தா கமல் சொல்வார் "லஞ்சம் கொடுத்தா உனக்கு முன்னாடி இருக்கிரவனை ஏய்க்கிறதில்லையா" என்று. மனசு சரியில்லை. அவரை சந்திக்கவில்லை. கோவிந்தா. இரண்டு வருடம் நாய்ப்பாடு பட்டபின் இருந்த கொஞச நஞ்ச நல்ல குணமும் போய், இப்பல்லாம் ரொம்பவே சுயநலம்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

குஷ்பூ - கற்பு மேட்டர். பகவத் கீதையின் சாரம்சம் கடமையை செய் பலனை எதிர்பாராதே. அதையும் நைக்காரர்கள் சுருக்கி டூ இட் ஆக்கினார்கள். அதுபோல் பெரியாரின் பெண்ணுரிமைக்கருத்துகளின் சாரம்சமே குஷ்பூ பேசியது. அதை பெரியாரை ஞானத்தந்தையாக ஏற்றவர்களே எதிர்த்தது ஆச்சரியம். பெரியார் என்றால் கடவுள் மட்டும் ஜாதி மறுப்பு தானா? மற்றவற்றை படிக்க வில்லையா? மனம் இல்லையா?

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

தசாவதாரத்தில் பல கிராபிக்ஸ் காட்சிகள் சராசரிக்கும் கீழே. ஆனால் பல்ராம் நாயுடு,பாட்டி இருவரும் காரில் முன்னால் போக பின்னால் கோவிந்த் துரத்தி வரும் காட்சி ஒரே ப்ரேமில் இருக்கும். சரியான அளவுகளுடன். முற்பாதியில் நாயுடு நடந்து கொண்டே விசாரனை செய்யும்போது அவருக்குப் பின் இருக்கும் கண்ணாடியில் கோவிந்தின் உருவம் தோன்றும் சரியான பாவங்களுடன். அசந்து விட்டேன். இயக்குனர்,கமல்,கேமிராமேன் கலக்கிய காட்சி அது.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

சுவாசிப்பதுண்டா என்று கேட்டிருக்கிறீர்கள். முன்பு குமுதம் சினிமா நிருபர்களின் செய்திகளை தொகுத்து ரா கி ரங்கராஜன் எழுதிய லைட்ஸ் ஆன் வினோத் தான் நான் முதலில் படிப்பது. அவர் கொடுக்கும் ஆங்கில பன்ச் அசர வைக்கும். தேவியில் நெல்லை வழக்கில் எழுதும் பகுதியும், ஜெ பிஸ்மி வண்னத்திரையில் எழுதுவதும் பிடிக்கும். உயிர்மை காலச்சுவடு கீற்று போன்றவற்றில் வரும் சினிமா தொடர்பான கட்டுரைகளையும் விடுவதில்லை. முன்பு ஞாயிறுகளில் மாலைமலர் இணைப்பாக கொடுக்கும் சினிமா மலருக்காகவே அதை வாங்கியதுண்டு.

7.தமிழ்ச்சினிமா இசை?

திரைப்பட பாடல் மட்டுமே எனக்கு தெரிந்த சங்கீதம். சிறுவயதில் அதிரடி இசை. விடலையில் காதல் பாடல்கள். இப்போது கானாதான் என் பேவரைட். உசுருபோற நேரத்தில ஊத்த மாட்டான் பால, கால நீட்டி படுத்துக்கிட்டா எவ்வளோ பெரிய மாலை? என அசால்டாக ஒரே வரியில் வாழ்க்கையை புரியவைக்கிறார்கள்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

வாய்ப்பு கிடைத்தால் எதையும் விடுவதில்லை. சிறுவனாக இருக்கும் போது தெலுங்கு டப்பிங். மீசை முளைத்த போது மூன்றாம்தர மலையாளம். காலேஜில் கெத்துக்காக தில்,பேட்டா. நேம் ட்ராப்பிங்குக்காக பெங்காளி. உறவினர்களுக்காக ஆங்கிலம். அதிகம் தாக்கிய படம் ஹம் ஆப்கே ஹைன் கோன் (40 முறை, மாதுரிக்காக)

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

மேன்ஷனில் பலர் பழக்கம். ஒருமுறை அவர்களை இம்ப்ரெஸ் செய்வதற்க்காக பொன்னியின் செல்வனை உல்டா செய்து ஒரு கதை சொன்னேன்.

சுந்தரசோழன் - வயதான மாபியா டான்

ஆதித்த கரிகாலன் - ஐரோப்பாவில் போதை நெட்வொர்க் கவனிக்கும் மூத்த மகன்

வந்திய தேவன் - மூத்த மகனின் நம்பிக்கைக்குரிய அடியாள்

அருண்மொழிவர்மன் - ஹாங்ஹாங் போதை நெட்வொர்க் கவனிக்கும் இளைய மகன்

குந்தவை - மாபியா டானின் மகள் மற்றும் தற்போதைய செக்கரட்டரி

பழுவேட்டரையர்கள் - டானின் கூட்டாளிகள், இந்திய நெட்வொர்க்

கொடும்பாளூர் மலையமான் - இளைய மகனுக்கு பெண் கொடுக்க நினைக்கும் மற்றோரு கூட்டாளி

நந்தினி - பழைய பங்கு பிரித்தலில் கொல்லப்பட்ட இன்னோரு கூட்டாளியின் மகள். பழி வாங்க துடிக்கிறாள்.

சேந்தன் அமுதன்,பூங்குழலி,மதுராந்தகன்,பினாகபானி போன்ற மொக்கை கேரக்டர்களை தவிர்த்துவிட்டு 80 சீன் எழுதினேன். அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் தான் நான் உண்மையை கூறினேன். பட்ஜெட் பெரிசு என்று எகிறிவிட்டார்கள். இப்போதுதான் பொன்னியின் செல்வன் பொது உடமை தானே? யாராவது இளிச்சவாயன் கிடைத்தால் நான் ரெடி. டிவி தொடராக கூட எடுக்கலாம்.
தமிழ்சினிமாவை கீழே வேண்டுமானால் அது இறக்கும்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

டிவி விழுங்கிவிடும் என்று சொன்னார்கள். படத்தை வைத்திருப்பதுதான் டிவிக்கு இப்போது சொத்து. காதலில் விழுந்தேன் படத்தை பென்ஹர் பட ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கிறார்கள். எனவே 10 வருஷமாவது இந்நிலை நீடிக்கும்.தற்போது, 3சி என்று அழைக்கப்படும் சென்னை, செங்கல்பட்டு ,கோவை ஆகிய சென்டர்களின் வசூல் மற்ற அனைத்து சென்டர்களின் கூட்டு வசூலுக்கு நிகராக இருக்கிறது.இதுபோக சாட்டிலைட் ரைட்ஸ், வெளிநாட்டு உரிமை என மார்க்கட் விரிந்து உள்ளது. எனவே சரோஜா, பொய் சொல்ல போறோம் போன்ற அர்பன் தீம் படங்கள் அதிகம் வர வாய்ப்புள்ளது

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

என் வேலையில் நல்ல பெயரெடுப்பேன். புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உருவாக வாய்ப்பு அதிகம். தமிழக வரலாறு 4000 வருடம் என கொண்டாலும் இந்த 77 ஆண்டுகள் இரண்டு சதவீதம் தானே?

கீழ்க்கண்டவர்கள் இதே கேள்விகளுக்கு தங்கள் மலரும் நினைவுகளை தொடரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


டாக்டர் புருனோ
ராப்
வெட்டிப்பயல்
குட்டிபிசாசு
பரிசல்காரன்
நந்தா


October 09, 2008

இயக்குனர்களின் வித்தியாசமான முதல் படங்கள்

சில இயக்குனர்களின் பெயரைக் கேட்டவுடனேயே அவர்கள் இம்மாதிரிப் படங்கள் தான் இயக்குவார்கள் என்று நாம் சொல்லுவோம். ஆனால் அவர்களின் முதல் படம், தற்போது அவர்கள் இருக்கும் டொமைனுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் இருக்கும். அம்மாதிரி இயக்குனர்களையும், அந்த முதல் படங்களையும் பார்ப்போம்.

ராம நாராயணன்

இவர் பெயரைக் கேட்டாலே நம் ஞாபகத்துக்கு வருவது விலங்குகளை வைத்து இவர் இயக்கிய படங்கள்தான். யானை(ஆடி வெள்ளி) , பாம்பு,நாய்,மாடு (துர்கா),குரங்கு இவற்றை வைத்து படங்களை எடுத்தவர். தேவர் பிலிம்ஸ்க்கு அடுத்து விலங்குகளை உபயோகித்து அதிக படம் எடுத்தவர் இவர்தான். அதற்கடுத்து பாளையத்து அம்மன், ராஜகாளி அம்மன் போன்ற சிறுமுதலீட்டு சாமி படங்களை எடுத்தவர். இவர் படங்களில் ஒரு நடிகை நடிக்கிறார் என்றால், அவர் மார்க்கட் இழந்தவர் என்று அர்த்தம். நாயகியாய் நடித்து மார்க்கட் போனபின் ஓய்வுக்கு முன்னரோ அல்லது தற்போது சின்னத்திரைக்கு முன்னரோ இவர் படங்களில் நடிக்க வேண்டும் என்பது ஐதீகம். சிறுமுதலீட்டு காமெடி படங்களும் இவர் ஸ்பெசாலிட்டி. இவரின் 100 வது படம் "திருப்பதி எழுமலை வெங்கடேசா" நல்ல ஹிட். பின் கந்தா கடம்பா கதிர்வேலா, விஸ்வனாதன் ராமமூர்த்தி போன்ற படங்களும் ஓரளவு ஓடின. இடைக்காலத்தில் விஜயகாந்த் (கரிமேடு கருவாயன்), பிரபு (சூரக்கோட்டை சிங்ககுட்டி),கார்த்திக்,சுரேஷ் (இளஞ்ஜோடிகள்) அர்ஜுன்,ஆனந்த்பாபு (கடமை),சந்திரசேகர் (இவர் ஆஸ்தானம்) ஆகியோரை வைத்து பல படங்கள் எடுத்தவர். தமிழ் தவிர தெலுங்கு,கன்னடம்,ஒரியா,போஜ்பூரி ஆகிய மொழிகளிலும் வெற்றிப்படங்களை கொடுத்தவர். விலங்குகளுக்கு ஏது பாஷை? மொழி பிரிவினை?. இதுவரை 113 படங்களை இயக்கியுள்ளார். ஒரெ சமயத்தில் பல உதவி இயக்குனர்களைக் கொண்டு நான்கு, ஐந்து படங்களை இயக்கியதால் மேஸ்திரி இயக்குனர் என்று அழைக்கப்பட்டவர். குறைந்த செலவில் படமெடுப்பதால் ஏவிஎம்,கவிதாலாயா நிறுவனங்களும் இவர் இயக்கத்தில் படம் தயாரித்துள்ளன. 1989 தேர்தலில் திமுக சார்பில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். தற்போது திரைப்பட தயாரிப்பாளர் சஙகத்தலைவராகவும் உள்ளார்.

ஆனால் இவரது ஆரம்ப காலப் படங்கள் கம்யூனிச சிந்தனையை அடிப்படையாக கொண்டவை. முதல் படம் சுமை (1981). வேலை இல்லாதால் குடும்பத்தார் படும் சிரமங்களை அடிப்படையாக கொண்டது. 1982 ல் இவர் இயக்கிய சிவப்புமல்லி (விஜயகாந்த்,சந்திரசேகர், தயாரிப்பு ஏவிஎம்) கம்யூனிச சிந்தனையை அடிப்படையாக கொண்டது. மே தினம் உழைப்பவர் சீதனம் என்னும் பாடலில் வரும் "ரத்தச் சாட்டை எடுத்தால்" என்னும் வரி சென்சாரால் முதலில் ஆட்சேபிக்கப்பட்டது. ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம், தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும் என்னும் அருமையான பாடலும் உண்டு.

பி வாசு

இவர் பெயரக் கேட்டாலே மசாலா நெடி மூக்கைத்துளைக்கும். சென்டி மெண்ட் இல்லை மீட்டர் மெண்ட், கிலோமீட்டர் மெண்ட் ரேஞ்சுக்கு சென்டிமெண்ட் காட்சிகள் அமைப்பார். பிரபு (என் தங்கச்சி படிச்சவ, சின்னதம்பி) சத்யராஜ் (வேலை கிடைச்சுடுச்சு,நடிகன்,வால்டேர் வெற்றிவேல்), ரஜினி (மன்னன்,சந்திரமுகி) போன்ற அவர்களின் முக்கிய படங்களை இயக்கியவர். தமிழ் சினிமாவில் அடியாட்களுக்கு யூனிபார்ம் (வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி) முதலில் கொடுத்தவர் இவர்தான். இவரும் பிறமொழி படங்கள் இயக்கியுளார்.

இவர் இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராய் இருந்தவர். இவரும் மற்றொரு உதவியாளரான சந்தான பாரதியும் இணைந்து பாரதி-வாசு என்னும் பெயரில் இயக்கிய படம் பன்னீர் புஷ்பங்கள். விடலை பருவ காதலை பேசியபடம். போர்டிங் ஸ்கூலில் படிக்கும் சுரேஷும்,சாந்தி கிருஷ்ணாவும் மோதலுக்குப் பின் காதலிக்கிறார்கள். பிரதாப் போத்தன் ஆசிரியர். பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறார்கள் எனப் போகும். ஓ வசந்த ராகம் கேட்கும் நேரம் போன்ற மெலடிகளும், ஹாஸ்டல் சாப்பாட்டை கிண்டல் செய்து மாணவர்கள் பாடும் வெங்காய சாம்பாரும் வேகாத சோறும் போன்ற பாடல்களும் ஹிட்டானவை

வி சேகர்

சிறு முதலீட்டு படங்களை இயக்கி புகழ் பெற்றவர். நான் புடிச்ச மாப்பிள்ளை, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், பொறந்த வீடா புகுந்த வீடா, வரவு எட்டணா செலவு பத்தணா, காலம் மாறி போச்சு, ஒண்ணா இருக்க கத்துக்கணும், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை போன்ற கீழ் மத்தியதர குடும்ப வாழ்க்கையை பேசும் பல படங்களை இயக்கியவர். நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் தருபவர். கவுண்டமணி,செந்தில்,ஜனகராஜ்,விவேக்,வடிவேல்,சார்லி,சின்னி,வையாபுரி போன்ற நகைச்சுவை நடிகர்கள், வணிக மதிப்பு குறைந்த சிவகுமார்,நிழல்கள் ரவி, நாசர், லிவிங்ஸ்டன் போன்ற நடிகர்கள், மார்க்கட் இழந்த நடிகைகள் ஆகியோரை வைத்து குறுமுதலீட்டில் படம் எடுக்க வல்லவர். இசையைப் பற்றி கவலைப்படுவதில்லை. நல்லா இருந்தா சந்தோசம், இல்லையா ரொம்ப சந்தோசம் (பாட்டு ரிச்சா எடுக்கனுமே) என்னும் கொள்கை உடையவர்.

பாக்யராஜின் உதவியாளரான இவரின் முதல் படம் நீங்களும் ஹீரோதான். ஹீரோக்களை தோலுரித்துக்காட்டிய இப்படத்தின் நாயகன் நிழல்கள் ரவி. இப்படத்தைக்கண்டு அப்போதைய சில ஹீரோக்கள் எரிச்சலானார்கள். கவுண்டமணி கூத்து வாத்தியாராகவும், செந்தில் அவர் மாணவராகவும் வருவார்கள். ஒரு கிராமத்திற்க்கு சினிமா எடுக்க வருவதை களமாக கொண்டு பட குழுவினரையும், ஹீரோக்களையும் எள்ளல் செய்த படம்.

கே எஸ் ரவிக்குமார்

எஸ் பி முத்துராமனுக்குப் பின், தயாரிப்பாளர்களின் கஷ்டம் புரிந்த இயக்குனர் என பெயர் பெற்றவர். ரஜினி (முத்து,படையப்பா), கமல் (அவ்வை சண்முகி, தசாவதாரம்), அஜீத் (வில்லன்,வரலாறு), சரத் (நாட்டாமை,நட்புக்காக) என அவர்கள் கேரியரின் மைல்கல் படங்களை தந்தவர். இதுதவிர புருஷ லட்சனம்,பிஸ்தா போன்ற சிறுமுதலீட்டில் அதிக லாபம் தந்த படங்களையும் இயக்கியவர்.

வெளிநாடுகளுக்கு படங்களை வினியோகிப்பவராக துவங்கி பின்னர் உதவி இயக்குனரானவர். இவர் பணிபுரியும் படங்கள் வெளியாகாது என்னும் செண்டிமெண்ட் கொண்டவர். இவர் இயக்குனராகும் போது இரண்டு படங்களே வெளியாகிருந்தன, அதில் ஒன்று புதுவசந்தம். அப்படத்தில் இவரின் திறமையை கவனித்த ஆர் பி சௌத்ரி இவருக்கு இயக்குனர் வாய்ப்பளித்தார். அப்படம்தான் புரியாத புதிர்.
எந்தவித கமர்ஷியல் ஐட்டங்களும் இல்லாமல் வெளிவந்த திரில்லர் படம் இது. ரகுவரன்,ரேகா,ஆனந்த் பாபு, சரத்குமார் நடித்தது. கணவன் கொலை செய்யப்படுகிறான். சந்தேகம் மனைவி,அவளின் முன்னாள் காதலன் உட்பட பலரை சுற்றி வருகிறது. இதில் சைக்கோ கணவன் வேடத்தில் ரகுவரன் அசத்தியிருப்பார். ஐ நோ ஐ நோ என பல மாடுலேஷன்களில் உச்சரிப்பார். எத்தனை முறை அவ்வாறு சொல்கிறார் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் படத்தை ஓடவைக்க போட்டி கூட நடத்தப்பட்டது.

இயக்குனர் ஷங்கர் பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். "எனது முதல் படமாக குயில் என்னும் படத்தை எடுக்க நினைத்தேன், ரகுவரன், ரேவதி,விவேக் காம்பினேசனில். ஆனால் முடியவில்லை என்று.

இந்தப் படங்கள் எல்லாமே ஓரளவு ஓடிய படங்கள் தான். ஆனால் வெற்றி என்று சொல்ல முடியாது. ஒருவேளை இப்படங்கள் பெருவெற்றி அடைந்திருந்தால், இவர்கள் வேறுமாதிரிப் படங்களை கூட கொடுத்திருக்கலாம். யார் கண்டது?.

October 07, 2008

தமிழ் சினிமாவில் இருதார மணம்

இரண்டு கதாநாயகிகள் என்பது தமிழ்சினிமாவில் சாதரணம் தான். இதில் ஒரு கதாநாயகி கவர்ச்சிக்காக சேர்க்கப்பட்டு கதானாயகனை ஒரு தலையாக காதலித்து, தியாகம் செய்வாள். மனைவி/காதலி இறந்துவிட்டதாக நினைத்து நாயகன் இன்னொரு மனைவி/காதலியை அடையும் கதைகளும் (வீரா) பல உண்டு. காமெடிக்காக இருதார மணம் புகுத்தப்படுவதும் உண்டு. தற்போது அடுத்தவருடைய மனைவி/காதலியை அடைய துடிக்கும் (வாலி) படங்களும், மனைவியை கொலை செய்யும் (ஆசை) படங்களும் வந்துவிட்டன. இதன் உச்சமாக நாயகி அக்காள் கணவனை (கலாபக் காதலன்) அடைய முயற்சிப்பதும், கொளுந்தனை (உயிர்) விரும்பி அடைய முற்படுவதும் வந்துவிட்டன. இரண்டு தார மணத்தால் முதல் மணைவி அடையும் வேதனைகளை பேசிய படங்களும் பல உள்ளன. அவற்றில் 80க்குப் பின் வந்த சிலவற்றைப் பார்ப்போம்.

கோபுரங்கள் சாய்வதில்லை

மணிவண்ணன் இயக்குனராக அறிமுகமான படம். தந்தையின் பிடிவாதத்தால் அழகில்லாத கிராம பெண்ணை (அருக்காணீ : சுஹாசினி) மணக்கும் நாயகன் (மோகன்) பின்னர் பணிபுரியும் இடத்தில் சந்திக்கும் ராதாவை மணக்கிறான். அருக்காணி அந்த வீட்டிற்க்கே வேலைக்காரியாக வருகிறாள். நாயகனின் மைத்துனன் (எஸ் வி சேகர்) அவளை அழகாக மாற்றி காதலிக்க நினைக்கிறான். பல திருப்பங்கள், உணர்ச்சிகர காட்சிகளுக்குப்பின் அருக்காணியுடன் நாயகன் புது வாழ்வை துவக்குகிறான். இதில் அருக்காணியின் கொண்டை புகழ்பெற்ற ஒன்று. என் புருசன் தான் எனக்கு மட்டும் தான் என்ற பாடல் நன்றாக இருக்கும். பின் இதை தலைப்பாக வைத்து விஜய்காந்த், சுஹாசினி, ரேகா நடிக்க இரு தார படம் ஒன்றும் வந்தது.

ரெட்டைவால் குருவி

கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் இஞ்சினியர் என்ற பதம் தமிழ்சினிமாவுக்கு அறிமுகமானது இப்படத்தில் தான். தொலைக்காட்சியில் (டிடி) வேளை பார்க்கும் மோகன், சுதந்திர தினத்துக்காக சிறுவர்களை பேட்டி காணும் போது ஒரு சிறுவன் இந்த பதத்தை உபயோகிப்பான். பாலுமகேந்திரா இயக்கிய இப்படத்தில் அர்ச்சனா வேளைக்குச்செல்லும், குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் முதல்மனைவியாகவும், பாடகியான ராதிகா இரண்டாம் மனைவியாகவும் நடித்திருப்பர். ராஜ ராஜ சோழன் நான், கண்ணன் வந்து பாடுகிறான் போன்ற அருமையான பாடல்கள், வி கே ஆரின் காமெடி என கலகலப்பான படம்

சின்னவீடு

பெற்றோரின் கட்டாயத்தால், பல நடிகைகளின் கலவையாய் பெண் வேண்டும் என்ற எதிர் பார்ப்பில் இருக்கும் பாக்யராஜ் குண்டு பெண் கல்பனாவை மணம் முடிக்கிறார். வங்கி அதிகாரியான அவர் கடன் வசூலிக்கப்போய், காதலை வசூலிக்கிறார். காமம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவள் விலைமகள். இந்த பாத்திரத்தில் தான் பாவம் கொடூரன் புகழ் மாதுரி நடிக்க இருந்து அவ்வாய்ப்பு தட்டிப்போனது. பின்னாளில் அந்த பாத்திரமாக நிஜ வாழ்க்கையிலும் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது துரதிர்ஷ்டமே. கணவன் ஒருகட்டத்தில் மணம் திருந்த கல்பனா வெள்ளை மனம் உள்ள மச்சான் என்று பாடி ஏற்றுக்கொள்கிறார்.

சிந்துபைரவி

சிவகுமார் கர்னாடக சங்கீத வித்வான். மனைவி சுலோசனா கிலோ என்ன விலை. தன் சகாக்களும் மற்ற நேரங்களில் லௌகீக வாழ்க்கையில் மூழ்கி இருக்க, சங்கீதம் பற்றி பகிர ஆள் இல்லாமல் தவிக்கிறார். வருகிறார் சுஹாசினி. சங்கீதமும், ஒரு கட்டத்தில் சரீரமும் பகிரப்பட, கர்ப்பமாகிறார். தலைமறைவாகிறார். சங்கீத வித்வான் குடிகாரராகி பின்னர் திருந்த, முதல்மனைவி இருவரின் திருமணத்திற்க்கு ஏற்பாட்டை செய்ய, சுஹாசினி தனக்கு பிறந்த குழந்தையை, குழந்தையில்லா முதல் மனைவிக்கு பரிசாக கொடுத்துவிட்டு செல்கிறார். இப்படத்தில் சுஹாசினிக்கு தேசிய விருது கிடைத்தது. நானொரு சிந்து பாட்டுக்காக சித்ராவுக்கும். பாடறியேன், தண்ணித் தொட்டி, கலைவாணியே போன்ற பாடல்கள் படத்தின் பலம்.

மறுபடியும்

பாலு மகேந்திரா இயக்கம். படத்தில் நிழல்கள் ரவி இயக்குனர். ரேவதி மனைவி. ரோகிணி நடிகை. நடிகையுடன் செல்கிறார் இயக்குனர். ரேவதிக்கு ஆறுதலாய் இருக்கிறார் அரவிந்த்சுவாமி. பின்னர் கணவன் திரும்பி வர மனைவி கேட்கிறாள் “ இதே மாதிரி நான் செஞ்சிருந்தா?”. தன்னம்பிக்கையுடன், தன் மாதிரி பாதிக்கப்பட்ட வேலைக்காரியின் குழந்தையை பராமரிக்க தொடங்குகிறாள். நலம் வாழ எந்நாளும், எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு என்ற பாடல்களில் வாலி புகுந்து விளையாடியிருப்பார். “நிலவினை நம்பி இரவுகள் இல்லை, விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை” போன்ற அருமையான வரிகள். ஆசை அதிகம் வச்சு என்ற ஹிட் பாடலும் உண்டு.

சதிலீலாவதி

அதே பாலுமகேந்திரா. குண்டு கல்பனா. இம்முறை ரமேஷ் அரவிந்த். மனைவி குண்டூஸ் எனவே ஹீராவுடன். லிவிங் டுகெதர் ஆக வாழுபவர்களை கணவனின் நண்பன் கமல்ஹாசன், ஹீராவை காதலிக்கும் ராஜா இவர்களின் துணையுடன் பிரிக்கிறார். சுபம். பாட்ஷா படத்துடன் வெளியாகி ஓடியதே இப்படத்தின் சிறப்பைக் கூறும். கமலுக்கு ஜோடி கோவை சரளா. இப்படம் பின்னர் கன்னடத்தில் ராமா ஷாமா பாமா என்ற பெயரில் நன்கு ஓடியது. தமிழில் கமலுக்கு கோவை பாஷை, கன்னடத்தில் ஹூப்ளீ ஆக்செண்ட். கிரேசி மோகனின் வசனங்கள் பலம்.

டபுள்ஸ்
பாண்டியராஜன் இயக்கம், பிரபு தேவா – மீனா கணவன் மனைவி. சங்கீதா மேல் பிரபுதேவாவுக்கு கிரஷ்.

இந்தவகைப் படங்களில் பெரும்பான்மை, மனைவி அழகில்லாதது (கோ. சா, சின்னவீடு, சதிலீலாவதி). சம அலைவரிசை இல்லாதது (சிந்து பைரவி). பெரிய காரணங்கள் இல்லாமல் இருப்பது (ரெ.வால்.குருவி, மறுபடியும், டபுள்ஸ்).

சுலோசனா, தன் கணவரிடம் சமையலைப்பற்றி பேச முடியவில்லையென்று மற்றொருவரிடம் பகிர்ந்தால்?, அழகில்லாதவர்கள் தங்கள் ரேஞ்சுக்கு இணைந்தால்? பெரிய இயக்குனர்களிடமும் காலம் காலமாக படிந்திருக்கும் மேல் சாவனிசம் தானே இம்மாதிரிப் படங்களுக்கு காரணம்?

சதிலீலாவதியில் பெண், தாய் என்னும் ஸ்தானத்தில் இருந்து சிந்திக்கிறாள். குழந்தைகளுக்காக போராடுகிறாள் என சமாதானப்படுத்திக் கொள்ளலாம்.

மறுபடியும் படம் மட்டுமே பெண்ணை பெண்ணாக பார்த்தது. அவளின் தன்னம்பிக்கையை கூட்டியது. இருதாரப் படங்களிலேயே சிறந்த படமாக இதைக் கூறலாம்.

பாலச்சந்தர் தன் இருகோடுகள் காலத்தில் இருந்து, இருதார கதைகளில் பெரும்பாலும் ஆணாதிக்க சிந்தனையே கொண்டுள்ளார் இன்றுவரை. கல்கியில் கூட ஒருபெண் தாய்மை என்னும் அஸ்திரத்தை வைத்து தவறு செய்பவனை வீழ்த்துவதாக அமைத்திருப்பார். பார்த்தாலே பரவசம் இன்னும் மோசம். பாலு மகேந்திரா ரெட்டை வால் குருவிக்கு மறுபடியும் படத்தின் மூலம் பிராயச்சித்தம் செய்து கொண்டார். கே பி எப்போ?

October 03, 2008

தமிழ்சினிமாவின் முக்கிய காதல் படங்கள் - 2

முதல் பாகத்தை படிக்க இங்கே கிளிக்கவும்

குணா
விலைமாது மகன் என்ற ஏச்சை யாராலும் தாங்கமுடியாது. வாழ்க்கையே ஒருவனுக்கு அப்படித்தான் என்றால் எவ்வளவு மனச்சிதைவு ஏற்படும்?. வாழ்க்கையை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் பெண்ணையே விழுந்து விழுந்து காதலிக்கிறார்கள் ஆண்கள். தாங்க முடியா சோகத்தில் இருப்பவனை மீட்டெடுக்கப் போகும் பெண்ணை, வாழ்வை சொர்க்கமாக்கப் போகும் பெண்ணை எவ்வளவு காதலிக்கலாம்? அப்படியான காதல்தான் குணாவின் காதல். விலைமாதுவின் மகனாகப் பிறந்த கமல் தன்னை மீட்டெடுக்கப் போகும் அபிராமியாக ரோஷினியை சந்திக்கிறார். அவளை கடத்திக்கொண்டு மலைப்பிரதேசத்துக்கு செல்கிறார். புனிதமான காதலை மனிதர்களால் எப்படி புரிந்துகொள்ள முடியும்? துரத்துகிறார்கள். காதலி இறக்க காதலனும் தற்கொலை செய்து கொள்கிறான்.

சேது

அழகான பெண்கள் தான் காதலிக்கப்படுவார்கள் என்றால் ஐஸ்வர்யா ராயும்,மாதுரி தீட்சித்தும் தான் காதலிக்கப் படுவார்கள். அழகான் ஆண் என்றால் அர்விந்த் சாமியும், அக்ஷய்குமாரும் தான் காதலிக்கப் படுவார்கள். பணக்கார ஆண்கள் தான் காதலிக்கப் படுவார்கள் என்றால் டாட்டா பிர்லா தான் காதலிக்கப்படுவார்கள். ஆனால் எங்கும் காதல் நடந்து கொண்டுதானே இருக்கிறது. ஒரு பெண், இவனை மணந்து கொண்டால் நாம் நல்லாயிருக்கலாம் என்று நினைக்கும் போதும், ஒரு ஆண், இவளை நான் மணந்து கொண்டால் மற்றவர்களைவிட சிறப்பாக வைத்துக் கொள்ளலாமெ என்று நினைக்கும் போது வருவது தான் காதல். -- இது நான் கல்லூரி ஆண்டு (1995) மலருக்காக எழுதி நிராகரிக்கப்பட்ட கதையில் வரும் ஒரு பகுதி.
சேதுவில் விக்ரம் காதலுக்கு சொல்லும் காரணம் "அவளை ராணி மாதிரி பார்த்துக்கிடனும்டா" , பின்னர் அவளிடம் சொல்லும் போது " என்னய கட்டுனா நல்லா இருப்ப, இல்லாட்டி உன் மாமனுக்கு பேன் தான் பார்க்கணும். தான் நன்றாக வைக்க ஆசைப்பட்ட பெண் பின்னர் இறந்ததும் பாண்டி மடத்தை நோக்கி செல்ல ஆரம்பிக்கிறான்.

காதல் கோட்டை

கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு - ஆணும் பெண்ணுமாய் இருந்து சுபமாய் முடிந்தால் எப்படி இருக்கும்?. இப்படித்தான் இருக்கும். 1996 ல் வெளிவந்த இந்த டிரெண்ட் செட்டரால் பல காதல் படங்கள் வெளியாகின. பார்க்காமலே காதலை தொடர்ந்து, பல வகை காதல்கள் படையெடுத்தன. சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது முதன் முறையாக தமிழுக்கு இப்படத்தின் மூலம் கிடைத்தது. அகத்தியன் அந்த பெருமைக்கு சொந்தக்காரர். வாய்ப்பில்லாமல் கவர்ச்சி ஆட்டம் (சிவசக்தி) போட்ட தேவயானிக்கு மறுவாழ்வு. தமிழகத்தின் செல்லப்பெண் ஆனார். ஆசை வான்மதிக்குப் பின்னர் வந்து அஜீத்தை தமிழில் நிலைநிறுத்தியது இந்தப்படம்.

மௌன ராகம்

திருமண்த்திற்க்கு முன் காதல். காதலன் இறந்துவிட்டாலும் மறக்க முடியவில்லை. கணவனின் அன்பை முடிவில் புரிந்து சுபம். இந்தப்படத்தில் 20 நிமிடம் வரும் கார்த்திக் 25 ஆண்டுகள் கழித்தும் ஞாபகத்தில் இருப்பார். புனேயில் உள்ள பிலிம்இன்ஸ்டிட்யூட்ன் ரோல் ஆப் ஹானரில் சிறந்த துணை கதாபாத்திர நடிப்புக்காக கார்த்திக் பெயர் இப்பாத்திரத்துக்காக இடம்பெற்றுள்ளது. இதற்க்குமுன் பகல்நிலவு, இதயகோவில் ஆகிய படங்களை இயக்கி இருந்தாலும் இப்படமே மணிரத்னத்திற்கு பெரும் பெயர் பெற்றுத் தந்தது. இளையராஜாவின் பிண்ணனி இசையை வார்த்தையில் வர்ணிக்க முடியாது. நிலாவே வா, மன்றம் வந்த தென்றலுக்கு போன்ற எவர்கிரீன் சோலோ சாங்ஸ் இடம் பெற்ற படம். சந்திரமௌலி என்ற பெயர் கொண்டவர்களை அலறவைத்த படம். மிடில் கிளாஸ் பெண்களின் பிம்பமாக ரேவதி மக்கள் மனதில் பதிந்த படம்.

தமிழ் சினிமாவில் நெஞ்சை தொட்ட உணவு உண்ணும் காட்சிகள்

தமிழ் சினிமாவில் உணவு உண்ணும் காட்சிகளை பெரும்பாலும் ஒரு குடும்பத்தின் பொருளாதார சூழலை காட்டவும், கட்டுக்கோப்பான கூட்டுக்குடும்பம் என்பதைக்காட்டவும் உபயோகப்படுத்துவார்கள். நகைச்சுவைக்காகவும் பல காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். இவை தவிர நெஞ்சைத்தொடும் அளவுக்கு பல காட்சிகள் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

முதல் மரியாதை

ஊர் பெரிய மனிதர், அவருக்கும் அவர் மனைவிக்கும் கட்டாய கல்யானத்தாலும், மனைவியின் முன் நடத்தையாலும் பிரச்சினை. அவ்வூருக்கு பஞ்சம் பிழைக்க வந்த இளம்பெண். அப்பெண்ணுக்கும்,பெரிய மனிதருக்கும் இடையில் ஏற்படும் நுட்பமான காதல். ஒரு நாள் மழையின் காரணமாக இளம்பெண்ணின் குடிசையில் ஒதுங்குகிறார், அப்போது அவள் மீன்குழம்பு சாப்பிட்டுக்கொண்டுருக்கிறாள். அவள் வற்புறுத்த இவருக்கும் ஆசை. சம்மதிக்கிறார். உடனே அவள் தன் கையை கழுவிவிட்டு இவருக்கு உணவு பரிமாறுகிறாள். அப்பொது தன் மனைவி மூக்கு சிந்திய கையுடன் அலட்சியமாக பரிமாறுவது கண்ணில் தோன்றுகிறது. சுவையில் மனமயங்கி சொல்கிறார். " அப்படியே என் ஆத்தா வைச்சது போலவே இருக்கு, அவளும் இப்படித்தான் எனக்கு உறைக்குமேன்னு ரெண்டே ரெண்டு முளகாய கிள்ளிப்போட்டு வைப்பா". என்று சொல்லி ஆசையுடன் சாப்பிடுகிறார். அவள் இன்னும் கொடுக்க கூச்சம் தடுக்க "உனக்காததான் சாப்பிடுறேன் ஆமா" என்று சொல்லி நடிகர் திலகம் சிவாஜி சாப்பிடும் போது தியேட்டரில் பலரின் கண்களில் கண்ணீர். மிக சிறப்பாக அமைகப்பட்ட காட்சி அது.

வறுமையின் நிறம் சிகப்பு

வேலை இல்லா பட்டதாரிகள், தங்கள் வீட்டுக்கு வந்த இளம்பெண்ணிடம் தங்கள் வறுமையை மறைப்பதற்காக சாப்பிடுவது போல் நாடகமாடுகிறார்கள். அதை உணர்ந்த அவள் தன் வீட்டீற்கு சாப்பிட அழைக்கிறாள். சமைக்கும் போது அவர்கள் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். சமையல் முடியும் போது தான் தெரிகிறது, அவளது பாட்டி இறந்தது. கண்ணீருடன் எழுகிறார்கள். பாட்டி இறந்ததற்கா? இல்லை இப்போது இறந்ததற்கா? கமல், எஸ் வி சேகர், தீலீப், ஸ்ரீதேவி அசத்திய இந்த காட்சியும் நெஞ்சை தொட்ட ஒன்று.

புது வசந்தம்

சினிமா ஆசையுடன் வந்து தெருவில் பாடி பிழைத்துக்கொண்டிருப்பவர்கள். அவர்கள் வாழ்க்கையில் புது வசந்தமாய் நுழைகிறாள் ஒரு பெண். ஒருநாள் சாப்பிட இலை இல்லாததால் நிலாச்சோறு சாப்பிடுகிறார்கள். அப்போது ஒருவன் கண்ணில் மட்டும் கண்ணீர், காரணம் சொல்கிறான் " எனக்கு நிலாச்சோறு சாப்பிடனும்னு ரொம்ப ஆசை. என் வாழ்க்கை பூராம் நிலா இருந்துச்சு, ஆனா சோறு தான் இல்லை. சார்லி கலக்கிய காட்சி இது.

வீரப்பதக்கம்

வேளை நிறுத்தத்தால் தொழிலாளியின் குடும்பம் பட்டினி. அவன் மனம் வெறுத்ததைப் பார்த்து உடன் இருந்த சகாக்கள் பணம் திரட்டி அவன் குடும்பத்திற்கு பிரியாணி வாங்கிச்செல்கிறார்கள். அதற்குள் பசி தாங்காத அவன் குடும்பத்தார் தற்கொலை செய்துகொள்கிறார்கள். குடும்பத்தலைவனாக மணிவண்ணன் நம்மை அழ வைத்துவிடுவார்.

தேவர் மகன்

இருகுடும்பப் பகை. கண்மாய் உடைக்கப்பட்டு பலர் வீடிழக்கிறார்கள். இந்த சண்டை பிடிக்காமல் வெளியூர் செல்லவிருந்த நல்லவரின் மகன் மனம் மாறி அவருடன் இருக்க தலைப்படுகிறான். அவர் அப்போது சாப்பிடச் சொல்ல மறுக்கிறான். அப்பொது அவர் கண்மாய் வெள்ளத்தால் ஒரு குழந்தையை இழந்து சோகத்தோடு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பெண்னைக் காட்டி சொல்கிறார் " குழந்தையை பறிகொடுத்தவ, ஏன் சாப்பிடுறா?. இன்னோரு குழந்தையை காப்பத்தனுமே? அதுக்குத்தான். நாம தெம்பா இருந்தாத்தான் நம்மளை நம்பி இருக்குறவங்களை காப்பாத்த முடியும்?" கமலின் அருமையான வசனமும், சிவாஜியின் இயல்பான நடிப்பும் இதில் நம்மை உருக்கிவிடும்.


நட்புக்காக

நண்பனும் முதலாளியுமானவனின் குடும்ப மானத்திற்காக சிறை சென்று மீண்டு வருகிறான். அது அவன் மகனுக்கும் தெரியாது. மகனோ எஜமான விசுவாசத்தில் தந்தையையும் மிஞ்சியவன். சிறை மீண்டவன் தாய் கையால் சாப்பிட விழைகிறான. ஆனால் அவன் மகனோ தன் பாட்டியிடம் அவருக்கு சோறு போடாதே, என் முதலாளிக்க் துரோகம் செய்தவன் என்கிறான். வாய் வரை கொண்டு சென்ற சாப்பாட்டை, மகனின் விசுவாசம் கண்டு மகிழ்வோடு தட்டில் போட்டு விட்டு எழுகிறான்.

புதியபாதை

ரவுடியாக இருந்து திருந்தி வாழும் கணவன். வேலைக்கு போய்விட்டு பெரும் பசியோடு வருகிறான். உணவு குறைவாக இருக்கிறது. மனைவி கர்ப்பமாய் வேறு இருக்கிறார். என்ன இவ்வளவு மோசமா சமைச்சிருக்க? இதுக்கு தண்டனையா நீயே எல்லாத்தையும் சாப்பிடணும் என கட்டளையிட்டு விட்டு வெளியேறுகிறான். மனைவியோ அவர் சாப்பிடாத சாப்பாடு எனக்கெதற்கு என கொட்டி விடுகிறாள். பின் உண்மையறிந்து கணவன் பாசம் வியக்கிறாள்.

நந்தா

மகன் கொலைகாரன் என ஊர் தூற்றியதால், தாயே அவனை கொல்ல நினைக்கிறாள். சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுக்கிறாள். விஷம் கலந்தது எனத் தெரிந்தும் ஒன்றுமே சொல்லாமல் சாப்பிட்டு விட்டு, ரொம்ப வருசம் கழிச்சு உன் கையால சோறுமா, அதுதான் எதுவும் சொல்லாம சாப்பிட்டேன் என புன்முறுவலோடு சொல்கிறான் மகன்.


ஒண்ணா இருக்க கத்துக்கணும்

இதில் சுடுகாட்டில் வேளை செய்பவராக கவுண்டமணி, தன் மகன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆசையுடன் வளர்ப்பார். அவன் பள்ளிக்கு கிளம்பும் போது நீ படிச்சு கலெக்டராகனும் நல்லா சாப்பிடு என்று பழைய சோறை பரிமாறுவார். அது பல்லி விழுந்த சோறு. அதனால் மகன் இறந்துவிட கவுண்டமணி ஒரு அரற்று அரற்றுவார், பார்ப்பவர் நெஞ்சம் உடைந்துவிடும். அவர் எவ்வளவு பெரிய குணச்சித்திர நடிகர் என்பதற்கு அந்த ஒரு காட்சி போதும்.