என்னை இந்த தொடர் விளையாட்டுக்கு அழைத்த பாஸ்டன் பாலா,லக்கிலுக் ஆகியோருக்கு நன்றிகள்.
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எங்கள் ஊரில் பெண்கள் மதிய காட்சி, ஆண்கள் மாலை மற்றும் இரவு. பெண்கள் அனைவரும் சேர்ந்தே செல்வதால் கைக்குழந்தையையும் தூக்கி செல்வார்கள்.விவரம் தெரிந்து பார்த்த படம் சகலகலாவல்லவன். படம் முடிந்தபின் சகதி சண்டை,கம்பு சண்டை,சேஸிங் என சிலாகித்துக் கொண்டே வந்தேன். நிலாகாயுது பாட்டு அறுவை என்ற கமெண்ட் வேறு.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தசாவதாரம் - வேளச்சேரி ராஜலட்சுமியில் (5 வது முறை)
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சன் டிவியில் நேற்று கில்லி. இதன் மூலமான ஒக்கடுவில் இருக்கும் ஆந்திராவுக்கான எக்ஸ்ட்ரீம் காட்சிகளை தரணி கவனமாக தவிர்த்திருப்பது அவரின் தமிழ் சினிமா ரசிகர்கள் மீதான புரிதலை காட்டியது. தெலுங்கை விட தமிழ் கில்லி படு வேகம். இவரா குருவி?
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
இந்தியன். நல்ல கம்பெனியில் ரிட்டர்ன் கிளியர், இன்டெர்வியு ஓவர். ரிசல்டுக்காக காத்திருக்கும் போது உறவினர் ஒருவரின் மூலம் முயன்றால் வெற்றி என தெரியவந்தது. அடுத்த நாள் அவரை சந்திக்கலாம் என்ற்ரு இருந்த நிலையில் இந்தப்படம். தாத்தா கமல் சொல்வார் "லஞ்சம் கொடுத்தா உனக்கு முன்னாடி இருக்கிரவனை ஏய்க்கிறதில்லையா" என்று. மனசு சரியில்லை. அவரை சந்திக்கவில்லை. கோவிந்தா. இரண்டு வருடம் நாய்ப்பாடு பட்டபின் இருந்த கொஞச நஞ்ச நல்ல குணமும் போய், இப்பல்லாம் ரொம்பவே சுயநலம்.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
குஷ்பூ - கற்பு மேட்டர். பகவத் கீதையின் சாரம்சம் கடமையை செய் பலனை எதிர்பாராதே. அதையும் நைக்காரர்கள் சுருக்கி டூ இட் ஆக்கினார்கள். அதுபோல் பெரியாரின் பெண்ணுரிமைக்கருத்துகளின் சாரம்சமே குஷ்பூ பேசியது. அதை பெரியாரை ஞானத்தந்தையாக ஏற்றவர்களே எதிர்த்தது ஆச்சரியம். பெரியார் என்றால் கடவுள் மட்டும் ஜாதி மறுப்பு தானா? மற்றவற்றை படிக்க வில்லையா? மனம் இல்லையா?
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
தசாவதாரத்தில் பல கிராபிக்ஸ் காட்சிகள் சராசரிக்கும் கீழே. ஆனால் பல்ராம் நாயுடு,பாட்டி இருவரும் காரில் முன்னால் போக பின்னால் கோவிந்த் துரத்தி வரும் காட்சி ஒரே ப்ரேமில் இருக்கும். சரியான அளவுகளுடன். முற்பாதியில் நாயுடு நடந்து கொண்டே விசாரனை செய்யும்போது அவருக்குப் பின் இருக்கும் கண்ணாடியில் கோவிந்தின் உருவம் தோன்றும் சரியான பாவங்களுடன். அசந்து விட்டேன். இயக்குனர்,கமல்,கேமிராமேன் கலக்கிய காட்சி அது.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
சுவாசிப்பதுண்டா என்று கேட்டிருக்கிறீர்கள். முன்பு குமுதம் சினிமா நிருபர்களின் செய்திகளை தொகுத்து ரா கி ரங்கராஜன் எழுதிய லைட்ஸ் ஆன் வினோத் தான் நான் முதலில் படிப்பது. அவர் கொடுக்கும் ஆங்கில பன்ச் அசர வைக்கும். தேவியில் நெல்லை வழக்கில் எழுதும் பகுதியும், ஜெ பிஸ்மி வண்னத்திரையில் எழுதுவதும் பிடிக்கும். உயிர்மை காலச்சுவடு கீற்று போன்றவற்றில் வரும் சினிமா தொடர்பான கட்டுரைகளையும் விடுவதில்லை. முன்பு ஞாயிறுகளில் மாலைமலர் இணைப்பாக கொடுக்கும் சினிமா மலருக்காகவே அதை வாங்கியதுண்டு.
7.தமிழ்ச்சினிமா இசை?
திரைப்பட பாடல் மட்டுமே எனக்கு தெரிந்த சங்கீதம். சிறுவயதில் அதிரடி இசை. விடலையில் காதல் பாடல்கள். இப்போது கானாதான் என் பேவரைட். உசுருபோற நேரத்தில ஊத்த மாட்டான் பால, கால நீட்டி படுத்துக்கிட்டா எவ்வளோ பெரிய மாலை? என அசால்டாக ஒரே வரியில் வாழ்க்கையை புரியவைக்கிறார்கள்.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
வாய்ப்பு கிடைத்தால் எதையும் விடுவதில்லை. சிறுவனாக இருக்கும் போது தெலுங்கு டப்பிங். மீசை முளைத்த போது மூன்றாம்தர மலையாளம். காலேஜில் கெத்துக்காக தில்,பேட்டா. நேம் ட்ராப்பிங்குக்காக பெங்காளி. உறவினர்களுக்காக ஆங்கிலம். அதிகம் தாக்கிய படம் ஹம் ஆப்கே ஹைன் கோன் (40 முறை, மாதுரிக்காக)
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
மேன்ஷனில் பலர் பழக்கம். ஒருமுறை அவர்களை இம்ப்ரெஸ் செய்வதற்க்காக பொன்னியின் செல்வனை உல்டா செய்து ஒரு கதை சொன்னேன்.
சுந்தரசோழன் - வயதான மாபியா டான்
ஆதித்த கரிகாலன் - ஐரோப்பாவில் போதை நெட்வொர்க் கவனிக்கும் மூத்த மகன்
வந்திய தேவன் - மூத்த மகனின் நம்பிக்கைக்குரிய அடியாள்
அருண்மொழிவர்மன் - ஹாங்ஹாங் போதை நெட்வொர்க் கவனிக்கும் இளைய மகன்
குந்தவை - மாபியா டானின் மகள் மற்றும் தற்போதைய செக்கரட்டரி
பழுவேட்டரையர்கள் - டானின் கூட்டாளிகள், இந்திய நெட்வொர்க்
கொடும்பாளூர் மலையமான் - இளைய மகனுக்கு பெண் கொடுக்க நினைக்கும் மற்றோரு கூட்டாளி
நந்தினி - பழைய பங்கு பிரித்தலில் கொல்லப்பட்ட இன்னோரு கூட்டாளியின் மகள். பழி வாங்க துடிக்கிறாள்.
சேந்தன் அமுதன்,பூங்குழலி,மதுராந்தகன்,பினாகபானி போன்ற மொக்கை கேரக்டர்களை தவிர்த்துவிட்டு 80 சீன் எழுதினேன். அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் தான் நான் உண்மையை கூறினேன். பட்ஜெட் பெரிசு என்று எகிறிவிட்டார்கள். இப்போதுதான் பொன்னியின் செல்வன் பொது உடமை தானே? யாராவது இளிச்சவாயன் கிடைத்தால் நான் ரெடி. டிவி தொடராக கூட எடுக்கலாம்.
தமிழ்சினிமாவை கீழே வேண்டுமானால் அது இறக்கும்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
டிவி விழுங்கிவிடும் என்று சொன்னார்கள். படத்தை வைத்திருப்பதுதான் டிவிக்கு இப்போது சொத்து. காதலில் விழுந்தேன் படத்தை பென்ஹர் பட ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கிறார்கள். எனவே 10 வருஷமாவது இந்நிலை நீடிக்கும்.தற்போது, 3சி என்று அழைக்கப்படும் சென்னை, செங்கல்பட்டு ,கோவை ஆகிய சென்டர்களின் வசூல் மற்ற அனைத்து சென்டர்களின் கூட்டு வசூலுக்கு நிகராக இருக்கிறது.இதுபோக சாட்டிலைட் ரைட்ஸ், வெளிநாட்டு உரிமை என மார்க்கட் விரிந்து உள்ளது. எனவே சரோஜா, பொய் சொல்ல போறோம் போன்ற அர்பன் தீம் படங்கள் அதிகம் வர வாய்ப்புள்ளது
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
என் வேலையில் நல்ல பெயரெடுப்பேன். புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உருவாக வாய்ப்பு அதிகம். தமிழக வரலாறு 4000 வருடம் என கொண்டாலும் இந்த 77 ஆண்டுகள் இரண்டு சதவீதம் தானே?
கீழ்க்கண்டவர்கள் இதே கேள்விகளுக்கு தங்கள் மலரும் நினைவுகளை தொடரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
டாக்டர் புருனோ
ராப்
வெட்டிப்பயல்
குட்டிபிசாசு
பரிசல்காரன்
நந்தா
16 comments:
அட்டகாசமான பதிவு முரளி. பொன்னியின் செல்வனை இப்படியும் யோசிக்க முடியுமா? திரைக் கதை அபாரம்.
கானா பாட்டுகளை பற்றி நீங்கள் சொன்னது மிகவும் அருமை. இந்தியனை பற்றி சொன்னதும் வருத்தமே மேலோங்கியது. நிமிர்ந்து வாழ்பவர்களுக்கு ஏற்ற இடம் அல்ல நமது உலகம். வளைந்து கொடுப்பவர்களே வாழ்வார்கள்.
ஆலமரம் புயலில் சாய வளைந்து கொடுக்கும் நானல் வாழ்கிறதல்லவா?
அப்பாடி நா எஸ்கேப்பு இந்த தொடர்விளையாட்டுல
இதை தொடர் விளையாட்டு என்று சொல்வதை காட்டிலும் போஸ்டன் பாலா சொன்ன மாதிரி "புள்ளி விபர ஆட்டம்" (சர்வே) என்று சொல்லுவதே பொருந்தும்.
லக்கி அழைப்பு விடுத்த நபர்ல யாராவது கண்டிப்பா நம்மளைக் கூப்பிடுவாங்கன்னு நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி, கொஞ்ச எழுதி வெச்சிருக்கேன். திங்கள் போடறேன்!
தசாவதார டெக்னிகல் விஷய கவனிப்பும், பொன்னியின் செல்வன் உல்டாவும் சூப்பரோ சூப்பர்!
அப்புறம் HHHK 40, தங்கமணிக்கு தெரியுமா?
வருகைக்கு நன்றி சத்யப்ரியன்
ராஜா, ஆமோதிக்கிறேன்
அப்துல்லா உங்களை விட்டுவிடுவோமா? அதுக்கெல்லாம் ஆள் இருக்கு
பரிசல் திங்களை எதிர்பார்க்கிறேன். இப்போ தங்கமணி பதிவு படிக்கிறதில்லே. அதான் உண்மையை எழுதிட்டேன்
ஆகா அப்ப நான்மட்டும்தான் இன்னும் பதிவு போடலியா??
இந்த பதிவ பத்தி..
அதுசரி.. திருவிளையாடல் ஆரம்பம் படத்துல இளவரசு சொல்வாரே..
அவன் பொங்கலுக்கே வெடிவிடுவான்.. தீபாவளி கெடச்சா...
நர்சிம்
நர்சிம், உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
டீன் ஏஜ் வயதில் மூன்றாம் தர மலையாள படங்கள் ம்ம்ம்ம்ம். தொலைக்காட்சிகள் சினிமாவை வைத்துதான் பிழைப்பு நடத்துகின்றன. நச் தொடர் விளையாட்டு.
வருகைக்கும் தொடர் ஆதரவுக்கும் நன்றி அத்திரி
என்னையும் அழைச்சதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க முரளிக்கண்ணன் சார்:):):)
rapp,
I expect a powerful post from you.
Thankyou
ennaiyum azhaichi irukkinge. kandippa ezuthukiren.
குட்டிபிசாசு தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
//அதிகம் தாக்கிய படம் ஹம் ஆப்கே ஹைன் கோன் (40 முறை, மாதுரிக்காக) //
ரொம்ப அநியாயமா இருக்கே..அந்த ஹுசைன விட மோசமா இருப்பீங்க போல :-)))
//காதலில் விழுந்தேன் படத்தை பென்ஹர் பட ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கிறார்கள்//
:-)))))))))
இவ்வளவு சினிமா விஷயங்கள் சொல்லும்போதே நினைச்சேன். கண்டிப்பா ஒரு படத்தையாவது யோசிச்சு வச்சிருப்பீங்கன்னு! உண்மையா போச்சு !
வாழ்த்துக்கள்!
கிரி, சுரேகா வருகைக்கு நன்றி
Post a Comment