50 ஆண்டுகள் கழித்தும் எல்லோர் மனதிலும் ஆணியடித்தது போல் உட்கார்ந்து கொண்டிருக்கும் படங்களை வேறு எப்படி சொல்லமுடியும்?
நாடோடி மன்னன்
எம்ஜியாரின் வாழ்க்கையில் மிகப்பெரும் திருப்புமுனையாக இருந்த படம். அதுவரை வெற்றிகரமான கதாநாயகனாக மட்டுமே மக்களால் பார்க்கப்பட்ட நிலை மாறி ஆட்சிக்கும் இவர் பொருத்தமானவரே என்னும் நிலைக்கு உயர்ந்த படம். எம்ஜியார் தயாரித்து, இயக்கிய முதல் படம். இப்படத்தை பற்றி எம்ஜியார் சொன்னது “இந்த படம் வெற்றிபெற்றால் நான் மன்னன், தோற்றால் நான் நாடோடி”. கிட்டத்தட்ட 5 படங்களுக்கு தேவையான அளவு காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு எடிட்டிங்கில் ஒரு படமாக்கப்பட்டது. முதல் பாதி கறுப்பு வெள்ளையிலும் இரண்டாம் பாதி வண்னத்திலும் [கேவா கலர்] படமாக்கப்பட்டது. இந்தபடத்தில் இடம்பெற்ற பல வசனங்கள் கம்யூனிஸ சிந்தனையை பிரதிபலிக்கும். வில்லன் உங்கள் ஆட்சியில் அப்ப்டியானால் பணக்காரர்களே இருக்கமாட்டார்களா என கேள்வி எழுப்பும் போது எம்ஜியார் சொல்வார் “ பணக்காரர்கள் இருப்பார்கள். ஏழைகள் இருக்கமாட்டார்கள்” என்று. தூங்காதே தம்பி தூங்காதே, சம்மதமா, தடுக்காதே என்னை தடுக்காதே போன்ற பாடல்கள் நிறைந்த படம். சென்ற ஆண்டு சென்னை ஆல்பட் திரையரங்கில் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிய ஒன்றே போதும் இப்படத்தின் சிரப்பை சொல்ல.
உத்தம புத்திரன்
கமல்ஹாசன் ரீமேக் செய்து நடிக்க மிகவும் ஆசைப்பட்ட படம். ஆனாலும் என்னால் வில்லன் [விக்ரமன்] சிவாஜி கேரக்டரை செய்ய முடியாது என்று சொன்ன படம். இந்த படத்தில் விக்ரமன் சிவாஜியின் மேனரிஷங்களைதான் ரஜினி தன் ஆரம்ப கால படங்களில் பயன்படுத்தினார். இந்த படமே ஒரு ரிமேக்தான். ஒரே மாதிரி உருவ ஒற்றுமை இருந்தாலும் பாடி லாங்வேஜிலும், டயலாக் மாடுலேஷனிலும் இருவருமே வேறு வேறு நபர்கள் என பார்ப்பவர்களை நம்பவைத்திருப்பார். அதுவம் யாரடி நீ மோகினி பாடலில் பாஸ்ட் பீட்டுக்கு ஏற்ப நடனமும், முகபாவங்களும், புதுவித மேனரிஷமும் என அசத்தியிருப்பார். பார்த்திபன் கேரக்டர் சிவாஜிக்கு இணை பத்மினி. காத்திருப்பான் கமலக்கண்னன் பாடலில் தன் நடன திறமையை காட்டியிருப்பார். இதுதவிர முல்லை மலர் மேலே, உன்னழகை கன்னியர்கள் கண்டதினாலே போன்ற இனிமையான பாடல்களும் உண்டு. இந்த படம் அப்போதைய காலகட்டத்தில் வணிகரீதியான வெற்றியைப் பெறவில்லை என்ற கருத்தும் உண்டு.
வஞ்சிக்கோட்டை வாலிபன்
ஹீரோ,ஹீரோயின்,கதை,இயக்கம் இவையெல்லாவற்றையும் வில்லன் பேசும் ஒரு வரி வசனம் மறக்க வைக்குமா? அந்த வசனமே 50 ஆண்டுகளாய் அந்த படத்திற்க்கு அடையாளமாய் இருக்கமுடியுமா? முடியும். திரையையும் தாண்டி, பத்மினி,வைஜெயந்திமாலா இருவரில் யார் சிறந்த நடனமணி என்ற விவாதம் மக்களிடம் அப்போது இருந்தது. பத்மினி முதலில் அரசைவையில் ஆட,அனைவரும் அசர, ஈகோ காரணமாக வைஜெயந்திமாலா நடன உடைக்கு மாறி சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி என்க. அப்பொழுது பி எஸ் வீரப்பா சபாஷ் என சொல்லி ஒரு சிறு இடைவெளிவிட்டு சரியான போட்டி என்று சொல்லும்போது நினைத்திருப்பாரா 50 ஆண்டுகளை கடந்தும் இந்த வசனம் நினைக்கப்படும் என. ஆனந்தவிகடன் பாஸ் ஜெமினி எஸ் எஸ் வாசன் தயாரிப்பு. அக்கம்பெனியில் முதலில் பணியாற்றிய நடிகர் ஜெமினி கணேசன் நாயகன். கண்ணும் கண்ணும், ராஜாமகள் ரோஜாமகள் போன்ற இனிமையான பாடல்களை கொத்தமங்கலம் சுப்பு எழுதியிருந்தார்.
சபாஷ் மீனா
சிவாஜி கணேசன், சந்திரபாபு, சரோஜா தேவி நடிப்பில் பி ஆர் பந்துலு இயக்கிய அற்புத நகைச்சுவைப் படம். இந்த படத்தை சுட்டு பல படங்கள் வந்துள்ளன. அவற்றில் பெரு வெற்றி பெற்றவை அமீர்கான்,சல்மான்கான் நடித்த அண்டாஸ் அப்னா அப்னா, கார்த்திக்,ரம்பா,கவுண்டமணி நடித்த உள்ளத்தை அள்ளி தா. தந்தையின் கண்டிப்பு காரணமாக நண்பர் வீட்டுக்கு அனுப்பப்படும் சிவாஜி, தன் நண்பர் சந்திரபாபுவை அங்கு மாற்ரி அனுப்பிவைப்பதில் தொடங்கும் நகைச்சுவை படம் முடியும் வரை தொடரும். நாடக பிரியையான சரோஜாதேவி, சந்திரபாபுவின் நடிப்பிற்க்காக அவரை காதலிப்பதும், அவரை மணக்க வேண்டிய சிவாஜி மற்றொரு பெண்னை காதலிப்பதுமாக செல்லும். இந்த படத்தில் ஏழை ரிக்ஷா தொழிலாளியாக சந்திரபாபு நாடகத்தில் பாடி நடிக்கும் பாடல் அருமையான கலா அனுபவம். சிவாஜி தன் காதலியை நினைத்து பாடும் சித்திரம் பேசுதடி பாடலும் மிக அருமையாக இருக்கும்.
சம்பூர்ண ராமாயணம்
ராமன் பிரதர்ஸ் பிறப்பில் தொடங்கி லவ குசா பிறப்புவரை பூரணமாக ராமனின் கதையை கூறும் படம். ராமனாக தேவுடு என் டி ஆர், பரதனாக சிவாஜி கணேசன், குணசித்திர வேடத்துக்காகவே பிறந்த சித்தூர் நாகையா, டி கே பகவதி நடித்த படம். பத்மினி, வரலட்சுமி, எம் என் ராஜம் ஆகியோரும் உண்டு. அப்போதைய கிராம திரையரங்குகளில் இருந்த [70 களில் நான் பார்த்த போது] ப்ரொஜெக்டர் கார்பன் ராடுகள் ஐந்து ரீல்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும் தன்மை உடையவை. எனவே ஐந்து ரீல்கள் முடிந்ததும் படத்தை நிறுத்திவிட்டு பின் ஐந்து நிமிடம் கழித்து திரையிடுவார்கள். இதற்க்கு பாகம் பிரித்தல் என்று பெயர். இரண்டு ப்ரொஜெக்டர் உள்ள திரையரங்குகளில் இந்த பிரச்சினை இல்லை. எனவே கிராமங்களில் சாதரணமாக ஒரு படத்திற்க்கு மூன்று இடைவேளை இருக்கும். சம்பூர்ண ராமாயணம் 22-23 ரீல்கள் கொண்ட பெரிய படம். இதற்க்கு நாலு இடைவேளை விடுவார்கள். மொதப்பாகத்தில கூனி மேல அம்பு விடுவான், இரண்டாம் பாகத்தில வில்லை உடைப்பான் என்று படம் பார்த்து விட்டு வருபவர்கள் பேசிக்கொள்வார்கள். வால்மீகி,கம்பர் காண்டம் பிரித்ததை போல இங்கே ஆப்ப்ரேட்டர்கள் பாகத்தை பிரிப்பார்கள். வைகுண்ட ஏகாதேசிக்கு பார்க்க ஏற்ற படம். இரண்டாம் ஆட்டம் 11 மணிக்கு ஆரம்பிக்கும் படம் மூணரை அளவில் முடியும். பேசிக்கொண்டே வீடு திரும்ப நாலு மணிக்கு மேலாகிவிடும். அப்படியே குளித்துவிட்டு சொர்க்க வாசலை பார்க்க போய் விடலாம்.
மாலையிட்ட மங்கை
கண்ணதாசன் தயாரித்த படம். மெட்டுக்கே பாட்டு எழுத சொல்கிறார்களே, நாமே படம் எடுத்தால் நமக்கு பிடித்த பாட்டுகளை எழுதிக் கொடுத்து இசையமைக்க சொல்லலாமே என்பதற்க்காக அவர் தயாரித்த படம் என்று சொல்வார்கள். டீ ஆர் மகாலிங்கம் பாடிய செந்தமிழ் தேன் மொழியாள் பாடல் இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்தும் ரசிக்கப்படும். பாடலுக்கு முன்னால் வரும் சில்லென்று பூத்த சிறு நெருஞிக் காட்டினிலே என்னும் விருத்தம் எப்படி உருவானதென்று இந்த வார வாரமலரில் கூட ஒரு கட்டுரை வந்திருக்கிறது. படம் தோல்வி என்றாலும் பாடல்களுக்காக னம் நினைவில் இருக்கும் படம்.
49 comments:
//அமீர்கான்,சல்மான்கான் நடித்த அண்டாஸ் அப்னா அப்னா,//
சபாஷ் மீனாவிற்கும் அந்தாஸ் அப்ன அப்னாவிற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. குறுக்கு வழியில் பணக்காரனாக நினைக்கும் இரண்டு வாலிபர்கள் பணக்கார யுவதிகளை காதலிக்கும் படம். திரைக்கதை சொதப்பலாக இருந்தாலும் அமீர்கானின் சில டைமிங் காமெடிக்காக ஓடிய படம்.
சபாஷ் மீனாவை தழுவி எடுக்கப்பட்ட ‘உள்ளத்தை அள்ளித் தா’வில் ஹிந்திப் படத்தின் சில காட்சிகள் இருக்கும். அவ்வளவுதான் தொடர்பே.
வருகைக்கு நன்றி ஸ்ரீதர் நாராயணன்.
அந்தப்படத்தை நான் பார்க்கும் போது
//அமீர்கான்,சல்மான்கான் நடித்த அண்டாஸ் அப்னா அப்னா,//
சபாஷ் மீனாவின் சாயல் இருப்பதாகவே பட்டது. 1995 என நினைக்கிறேன், படம் பார்த்துவிட்டு வந்த பின் செக்கரெட்டரியாக மாற்றி அவர்கள் நடிக்கும் காட்சி எனக்கு இந்த படத்தையே ஞாபகப்படுத்தியது.
ஒருவேளை என் குறைவான இந்தி மொழி புரிதல் காரணமாக கூட இருக்கலாம்.
என்னை நம்பி கேட்டவர்கள் எவரும் இல்லை, என்னை நம்பாமல் கேட்டவர்கள் பலருண்டு -நாடோடி மன்னன்?
வஞ்சிக்கோட்டை வாலிபன் - சபாஷ் சரியான போட்டி ?
சரியா ?
/*ஒருவேளை என் குறைவான இந்தி மொழி புரிதல் காரணமாக கூட இருக்கலாம்.*/
இதுக்குதான் நான் கிந்தி படமே பாக்கிறது இல்லை
நசரேயன் 100% சரி
ஊத்தம புத்திரன் பட ஏற்கன்வே பி யூ சின்னப்ப நடித்த உத்த்ம புத்திரனின் ரீமேக் தான். பின்பு வடிவேலு நடித்த இம்சை அரசனும் இதை தழுவி எடுக்கபட்டது தான் ( ஒரே படம் 50 வருடங்களில் மூன்று முறை எடுத்துவிட்டார்கள்).
சபாஷ் மீனவை பற்றி சொல்லவே வேண்டாம் பேரிலே சபாஷ் வைத்துள்ளது.
மீண்டும் என்னை பழைய கலத்ஹ்டிர்க்கு அழைத்து சென்ற முரளிகண்ணனுக்கு நன்றிகள்....
--------------
இனிமே நீங்களும் கவர்ச்சி படம் போடுவீங்களோ???
இதில் சம்பூர்ண ராமாயணம் தவிர அனித்து படங்களையும் பார்த்து சுவைத்தவன் என்ற தாளாத பெருமை எனக்குண்டு. மாலையிட்ட மங்கையில் வரும் செந்தமிழ் தேன் மொழியாள் பாடல் எனது ஆல் டைம் ஃபேவரைட் களில் முக்கியமானது. நல்ல பதிவு என்பதைவிட நல்ல சேவை என்பதே பொருத்தம் என்று நினைக்கிறேன்
the only odd movie here is Sabhash Meena.
it was obvious that midway the director did not have a clue how to end this movie!
jokes were good though!
Anvarsha
மன்னனாவதற்கு தேவை, செங்கோல் தாங்கும் கை, மகுடம் தாங்கும் த்லை, ஆரணங்குகளை மயக்கும் அழகு, இவை எனக்கும்தான் இருக்கிறது.
அதோடு சிந்தனை செய்யும் சக்தியும் எனக்கிருக்குறது.
ந்ம்பியாரின் வசனம் இது.
நாடோடி மன்னன் படம் கூட நான்கு மணி நேரம் ஓடக் கூடியதே.
இளவரசியி உடலில் உடை மாற்றும்போது மச்சத்தினை கண்டுபிடிப்பார்கள்
இருளைப் போக்கும் விளக்கிற்கு தன் நிழலைப் போக்கும் சக்தி கிடையாது.
மன்னன் அழிக்கும் மானியத்தில் நானும் பங்கு கொள்கிறேன். வாழ்விலந்த மகளிருக்காகவும், மருத்துவ மனைக்காகவும் என் சொத்தில் நானும் பாதியை கொடுக்கிறேன்.(ராணி பேசுவது)
நம் மன்னர் குடிகாரரா..........
கடைசிக் காட்சியில்...
மன்னா, மகாராணி குற்றமற்றவர்
நாடோடி,, மன்னனிடம் கூறவதும் கூறும் தோணியும்...
அக்னி பார்வை அவர்களே
நேரமிருந்தால் எனது பகுதிக்கு வாருங்கள். உத்தம புத்திரன் எத்தனை முறை ரீமேக் ஆகியிருக்கிறது என்பதை எழுதி இருக்கிறேன்
ஒரே கதை தனித்தனிப் படங்களின் ஹீரோக்களாக அஜித், வடிவேலு
http://kanavukale.blogspot.com/2008/11/blog-post_25.html//
உத்தமபுத்திரன் ஒரு ஆக்சன் படம், நடிகர் திலகம் முகத்திலேயே ஒட்டு மொத்த சண்டையையும் கொண்டுவருவார்..
அவரால் மட்டுமே முடியும்
style மன்னன் என்றால் அவர்தான்.
அவர் உடல் எடை மட்டும் அதிகரிக்காமல் இருந்திருந்தால்
நோ கமல், நோ ரஜினி
எவ்வளவு வயதையும் அவர் நடிப்பில் சமாளித்து விடுவார்.
வஞ்சிக்கோட்டை வாலிபன்
எம்.ஜி.ஆர் நடித்திருந்தால்...........
சிவாஜி நடித்திருந்தால்...........
செந்தமிழ் தேன்மொழியாள் என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட். ஆனால் அந்த மெட்டை நெளஷத் இந்தியில் போட்டார். விஸ்வனாதான் அதை பயன்படுத்திக் கொண்டார். எனவே அதுவும் மெட்டுக்கு எழுதிய பாட்டுதான்.. 1958 கூட உங்களுக்கு தெரியுதே!!! கலக்கறீங்க முரளி. ஏன் வலையின் பேர மாத்திட்டிங்க? இன்னைக்கு உங்களுக்கு ஒரு கவுஜ எழுதியிருக்கேன். நம்ம கடைக்கு வந்து பாருங்க..
அக்னிபார்வை,
பாடல்களில் ஒரு கதை சொல்லலாம் என சிறு முயற்சி. அதற்கேற்ற படங்கள் போடுவேன்
அருண்மொழிவர்மன்,சுரேஷ்
தங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றிகள்
கார்க்கி
பழைய டெம்பிளேட்டில் சில பிரச்சினைகள். மாற்றும் போது பேரையும் மாற்றிவிட்டென்
கலக்குறீங்க முரளி. 'உத்தம புத்திரன்' விக்ரமன் சிவாஜி ஸ்டைல், ஆரம்பகால ரஜினிக்கு inspiration என்னும் பார்வை அபாரம்.
Template மாற்றம், மற்றும் அழகான புகைப்படங்கள். என்னமோ நடக்குது.
அனுஜன்யா
//ராமனின் கதையை கூறும் படம். ராமனாக தேவுடு என் டி ஆர், பரதனாக சிவாஜி கணேசன்//
அந்த காலத்து நடிகர்கள் ஈகோ பார்க்காமல் பாத்திரத்தின் தன்மைக்கு மதிப்புக் கொடுத்து பலருடன் இணைந்து, இயைந்து நடித்திருக்கிறார்கள்.
இப்போதெல்லாம் ஒரு படம் ஹிட் ஆனாலே அதன் ஹீரோ எதாவது இரு நாயகர்கள் படம் என்றால் எனக்கும் சரிசமமான பங்கு இருக்கனும் என்று சொல்லிவிடுகிறார்கள். நல்ல கதையாக எடுக்க வேண்டிய படங்கள் கூட இவர்களின் ஈகோவினால் முகத்தை தொலைத்து மசாலாவாக மாறிவிடுகிறது :(
அனுஜன்யா தங்கள் வருகைக்கு நன்றி.
கோவிஜி
\\அந்த காலத்து நடிகர்கள் ஈகோ பார்க்காமல் பாத்திரத்தின் தன்மைக்கு மதிப்புக் கொடுத்து பலருடன் இணைந்து, இயைந்து நடித்திருக்கிறார்கள்.
\\
மிக மிக சரி.
ஒ... 1958ல இருந்து அரம்பிக்குரீங்களா ....
இப்பிடியே வருசத்துக்கு ஒரு பதிவு எழுதினா அதுவே அம்பதுக்கு மேல வந்துருமே...
நல்ல பதிவு...!
மாலையிட்ட மங்கை தவிர மற்றதெல்லாம் பார்த்திருக்கிறேன்.. எல்லாமே பிடித்தபடங்களும் கூட..
அப்பா பிஹச்டிக்காக சம்பூர்ண ராமாயணம் படத்தை கேசட்டுக்களாக வைத்திருந்தார்கள். டெக் எடுக்கும்போதெல்லாம் அது ஒரு முறை ஓடும்.. :)
படத்திற்கு துளி கூட சம்பந்தம் இல்லாமல் இரண்டு பாடல்கள் படத்தில் உண்டு
மற்ற தத்துவ பாடல்களுக்கு ஏதாவது தொடர்பு இருக்கும் கீழ்கண்ட பாடல்களுக்கு திரைக்கதையில் ஒரு தொடர்பும் இருக்காது. ஆனால் படத்தின் கதைப் போக்கே அவைதான். எங்கும் இந்தப் பாடல்களை வெட்டுவதில்லை. அதில் இயக்குனர் வெற்றி பெற்றிருப்பார்.
உழைப்பதிலா உழைப்பை கொடுப்பதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா
பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம்
கிட்டுவதே இல்லை என் தோழா
உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா
...........
தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி
வாடிக்கையாய் வரும் துன்பங்களை
இன்னும் நீடிக்க செய்வது மோசமன்றோ
இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்து
சேகரித்தால் இன்பம் திரும்புமடி
நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால்
மீதம் உள்ளவரின் நிலை என்ன மச்சான்
நாளை வருவதை எண்ணி எண்ணி
அவர் நாழிக்கு நாழி தெளிவாரடி
எல்லாமே பாஸிடிவ் அப்ரோச் உடன் அமைக்கப் பட்டிருக்க்கும்.
நானே போடப்போறேன் சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்
58லேயே இப்படி பாடியிருப்பார்
மாலையிட்ட மங்கை படத்தை தவிர மற்ற எல்லாப்படங்களையும் பார்த்திருக்கிறேன்.
என்னோட சாய்ஸ் எப்பவுமே நாடோடி மன்னன் தான்.. வாத்தியார் செம்ம கலக்கலா நடிச்சிருப்பாரு.
ஸ்ரீதர் அண்ணா சொன்னாமாதிரி சபாஷ் மீனாவுக்கும் அந்தாஸ் அப்னா அப்னாவுக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது. அது ஒரு பாதை. இது ஒரு பாதை.
//சென்ற ஆண்டு சென்னை ஆல்பட் திரையரங்கில் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிய ஒன்றே போதும் இப்படத்தின் சிரப்பை சொல்ல//
உண்மை
//வஞ்சிக்கோட்டை வாலிபன்//
நடனமும் வீரப்பா வசனமும் எக்காலத்திலும் மறக்க முடியாது
சபாஷ் மீனா வில் சிவாஜி அவர்களும் சந்திரபாபுவும் செய்யும் காமெடி டாப் கிளாஸ் :-)))))))))
//எனவே கிராமங்களில் சாதரணமாக ஒரு படத்திற்க்கு மூன்று இடைவேளை இருக்கும்.//
ஏங்க ஊர்ல நான்கு இடைவேளை இருந்தது
//டீ ஆர் மகாலிங்கம் பாடிய செந்தமிழ் தேன் மொழியாள் பாடல் இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்தும் ரசிக்கப்படும்//
கலக்கலான பாட்டு ..இன்னமும் ஆர்கெஸ்ட்ராவில் இந்த பாடலை பாடினால் விசில் பறக்கும்
சபாஷ் மீனா-- எத்தனை தடவை பாத்தாலும் அலுப்பு தட்டாது. சிவாஜியும்,சந்திர பாபுவும் போட்டி போட்டு நகைச்சுவை நடிப்பில் பின்னி பெடலெடுப்பார்கள்.
மாதுரி படம் சூப்பர் சகா.
//இந்த படம் அப்போதைய காலகட்டத்தில் வணிகரீதியான வெற்றியைப் பெறவில்லை என்ற கருத்தும் உண்டு.//
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை . உத்தம புத்திரன் வெற்றிப்படம்
100 நாட்கள் ஓடிய திரையரங்குகள்
சென்னை- காசினோ
மதுரை - நியூ சினிமா
மைசூர் - லட்சுமி.
ஜோ தங்கள் வருகைக்கு நன்றி.
\\அப்படியெல்லாம் ஒன்றுமில்லை . உத்தம புத்திரன் வெற்றிப்படம்
\\
இது கமல்ஹாசன் ஒரு பேட்டியில் சிவாஜியே சொன்னதாகக் கூறியது. இந்த படம் வெளிவந்த போது கமலுக்கு 4 வயது. நடிகராக பெரிய வளர்ச்சி அடைந்தபின் சிவாஜியிடம்,உத்தம புத்திரனை ரீமேக் செய்யலாம் என்று நினைக்கிறேன். அப்போ செம ஒட்டம் ஓடியிருக்குமே அதுபோல இப்பவும் ஓடும் என்றாராம்.
அதற்கு பதிலளித்த சிவாஜி அது நல்லா ஓடுச்சுன்னு யாரு சொன்னா?. சுமாராத்தான் போச்சு என்றாராம்.
//அதற்கு பதிலளித்த சிவாஜி அது நல்லா ஓடுச்சுன்னு யாரு சொன்னா?. சுமாராத்தான் போச்சு என்றாராம்//
உண்மை தான் .அது உத்தம புத்திரன் பெற தகுந்த அளவுக்கு இமாலய வெற்றி பெறவில்லை என்ற கருத்தில் நடிகர் திலகம் சொன்னது .
அதனால் உத்தம புத்திரன் தோல்விப்படம் என்று அர்த்தம் இல்லை.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் ஜோ. 100 நாட்கள் என்பதுகூட அப்படிப்பட்ட படத்துக்கு நியாயம் செய்து விட முடியாது
//தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் ஜோ.//
நன்றி சக கமல் ரசிகரே! :)
டெம்ப்ளெட் மாற்றம் மற்றும் அழகிய(நங்கையின்) படம் என அசத்தலாக இருக்கிறது வலைப்பூ...
உத்தமபுத்திரன் 'மேன் இன் ஐயன் மாஸ்க்' ரீமேக் தானே...?!
'சபாஷ் மீனா', 'உள்ளத்தை அள்ளித்தா' வரிசையில் 'ராமன் அப்துல்லாவை'ச் சேர்க்கலாம்தானே...?!
'சபாஷ் மீனா'வில்தானே எம்.ஆர்.ராதாவின் காமெடி நடிப்பு வரும்...?!
'மாலையிட்ட மங்கை' யிலா மனோரமா அறிமுகம்..?!
சூடான இடுகைல டாப் ஒன்!!
வாழ்த்துக்கள் வலையுலக ஃப்லிம்நியூஸ் ஆனந்தனுக்கு!!!
மாலையிட்ட மங்கை ஒரு நல்ல வெற்றிப்படம் சார். கண்ணதாசன் அவர்கள் தயாரித்ததிலே வெற்றிப்பெற்ற வெகு சிலப் படங்களில் இதுவும் ஒன்று. அது மட்டுமன்றி டி.ஆர்.மகாலிங்கம் அவர்களுக்கு இருண்டிருந்த திரை வாழ்வில் செக்கன்ட் இன்னிங்க்சை துவங்கி வைத்த படம். அவர் தன் இறுதி கால பேட்டிகள் வரை இது குறித்து அனைத்து பெட்டிகளிலும் தெரிவித்திருப்பார்.
மனோரமா அவர்களின் முதல் திரைப்படம் கூட:):):)
இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் கண்ணதாசன் மானசீகமாக நௌஷாத் அவர்களை மனதில் வைத்து எழுதியது. அதன் காரணமாகத்தான் செந்தமிழ் தேன்மொழியாள் பாடலின் தழுவல் கூட செய்யப்பட்டது. கண்ணதாசன் அவர்களே வற்புறுத்தி செய்ய வைத்த ஒன்று இது.
//'சபாஷ் மீனா'வில்தானே எம்.ஆர்.ராதாவின் காமெடி நடிப்பு வரும்...?!
//
கிடையாது. அப்பொழுது ராதா அவர்கள் ரத்தக்கண்ணீருக்குப் பிறகு சில காலம் நாடகங்களில் கவனம் செலுத்தினார். பின்னர் பாகப்பிரிவினை படத்திற்குப் பிறகுதான் திரையுலகில் கவனம் செலுத்தினார். நீங்கள் கூறுவது ஒருவேளை, பலே பாண்டியாவா?
//அமீர்கான்,சல்மான்கான் நடித்த அண்டாஸ் அப்னா அப்னா,//
இது தேன்மழை படத்தில் வரும் நாகேஷ் - சோ காமடியைப் போல இருக்கும். இவையனைத்துக்கும் தாய் எதாவது ஆங்கில நாடகமா எனத் தெரியாது. அப்படி இல்லையெனில் இது முக்தா ஸ்ரீனிவாசனின் தேன்மழை படத்தில் வரும் காமடி டிராக்கின் முழுத் தழுவலாகும்.
நாடோடி மன்னன் பற்றிய வர்ணனை சூப்பரோ சூப்பர் சார்:):):)
நானும் எனக்குத் தெரிஞ்சதை பகிர்ந்துக்கறேன் இப்படத்தைப் பற்றி:):):)
நாடோடி மன்னன் படத்தை சொல்லிட்டு சரோஜா தேவி அவர்களைப் பற்றி ஒன்றும் கூறவில்லையே:(:(:( பானுமதி அவர்களோடு ஏற்பட்ட பிரச்சினையால் இவரின் அறிமுகமாமே?:):):)நாடோடி மன்னன் படத்திற்கு முன்னர் தொடர்ந்து சிலப் படங்கள் எம்ஜிஆருக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை. ஆனால் சிவாஜிக்கு பல பெரிய வெற்றிப்படங்கள். இதன் காரணமாகவும், வசன வீச்சு, தலைமையிடம் நல்ல பெயர் இன்னும் பல காரணங்களால், சிவாஜிக்கு திமுகவில் ஏறுமுகம்:):):) இவைகளின் சுவாரசிய திருப்புமுனையே, 'திருப்பதி கணேசா' (பீம்சிங் மற்றும் சிவாஜி அவர்களின் திருப்பதி பயணம்)என்ற பிரச்சினை வெடித்தது(பற்றவெக்கப்பட்டது:):):)). பின்னர் நடந்தது வரலாறு. ஆதலால், அத்தகைய சூழலில் எம்ஜிஆர் அவர்களுக்கு செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள மிகப் பிரம்மாண்ட வெற்றி தேவைப்பட்டது. அது நாடோடி மன்னன்:):):)
பெரும்பகுதி வசனம், கண்ணதாசன். பாடல்கள் (பெரும்பான்மையாக) பட்டுக்கோட்டையார்.
//இந்த படத்தில் விக்ரமன் சிவாஜியின் மேனரிஷங்களைதான் ரஜினி தன் ஆரம்ப கால படங்களில் பயன்படுத்தினார்//
super:):):)
உத்தமப்புத்திரன் தயாரிப்பாளர்களில் ஒருவர் டைரெக்டர் ஸ்ரீதர்(ஒர்க்கிங் பார்ட்னர் மாதிரி) அவர்கள் என நினைக்கிறேன். பிளஸ் வசனமும் அவரே என நினைக்கிறேன். இப்படத்தை இவர்கள் எடுக்க ஆரம்பித்த அதேசமயம் எம்ஜிஆர் அவர்களும் எடுக்க ஆரம்பிக்கப்போவதாக அறிவிப்பு செய்தாராம். பேப்பர் விளம்பரத்தில் ஒரு பக்கம் சிவாஜி நடிக்கும் உத்தமப்புத்திரன், மற்றொருபுறம் எம்ஜிஆர் நடிக்கும் உத்தமப்புத்திரன் விளம்பரமாம். பின்னர் பல பெரியவர்கள் கூறியவுடன் எம்ஜிஆர் அவர்கள் தன் திட்டத்தை கைவிட்டாராம் :):):)
நீங்கள் கூறுவது போல் பி.எஸ்.வீரப்பா அவர்களின் அந்த வசன வீச்சு அவ்வளவு அருமையாக இருக்கும்:):):)கேட் பைட் என்பதை இதைவிட அழகாக வெளிப்படுத்த முடியுமா:):):)வஞ்சிக்கோட்டை வாலிபன் இந்தியில் பத்மினி அவர்கள் இறந்துபோவார். தமிழில் வைஜெயந்திமாலா அவர்கள் இறந்துபோவார். அவரவரின் செல்வாக்கை வைத்து செய்தது.
மிக மிக அற்புதமான அலசல்:):):)
//
SUREஷ் said...
வஞ்சிக்கோட்டை வாலிபன்
எம்.ஜி.ஆர் நடித்திருந்தால்...........
சிவாஜி நடித்திருந்தால்
//
//உத்தமபுத்திரன் ஒரு ஆக்சன் படம், நடிகர் திலகம் முகத்திலேயே ஒட்டு மொத்த சண்டையையும் கொண்டுவருவார்//
super:):):)
தமிழ்பறவை,
ராமன் அப்துல்லா வும் அதே சாயல்தான்
எம் ஆர் ராதா சபாஷ் மீனாவில் இல்லை. ராப் அவர்கள் தங்கள் பின்னூட்டத்தில் மேலதிக தகவல்கள் கூறியுள்ளார்
பரிசல் வாழ்த்துக்கு நன்றி
ராப்
பதிவை விட தங்கள் பின்னூட்டங்கள் சுவையான தகவல்களை தந்துள்ளன.
மாலையிட்ட மங்கை மனோரமா அறிமுக மேட்டரில் ஒரு விஷயம்
ஒருமுறை கலைஞரிடம் கண்ணதாசன், நீங்கள் அதிகமோனோரை அறிமுகம் செய்துள்ளீர்கள், என்று கூறினாராம்.
உடனே கலைஞர், அதெல்லாம் நீ அறிமுகப்படுத்திய மனோரமாவுக்கு ஈடாகுமா என்றாராம். (கண்ணதாசன் அறிமுகப்படுத்திய ஒரே நடிகை]
ராப்
நீங்கள்
மௌன ராகம் - கார்த்திக்
மாதிரி.
நான் என்ன சினிமா பதிவு எழுதினாலும், கமெண்டிலயே நீங்க புகழை எல்லாம் அள்ளீட்டு போயிரீங்க.
வெறும் மோகன் - ரேவதி மட்டும் இருந்தா மௌனராகம் நல்லாவா இருந்திருக்கும்?
//உத்தம புத்திரன்
கமல்ஹாசன் ரீமேக் செய்து நடிக்க மிகவும் ஆசைப்பட்ட படம். ஆனாலும் என்னால் வில்லன் [விக்ரமன்] சிவாஜி கேரக்டரை செய்ய முடியாது என்று சொன்ன படம். இந்த படத்தில் விக்ரமன் சிவாஜியின் மேனரிஷங்களைதான் ரஜினி தன் ஆரம்ப கால படங்களில் பயன்படுத்தினார். இந்த படமே ஒரு ரிமேக்தான். ஒரே மாதிரி உருவ ஒற்றுமை இருந்தாலும் பாடி லாங்வேஜிலும், டயலாக் மாடுலேஷனிலும் இருவருமே வேறு வேறு நபர்கள் என பார்ப்பவர்களை நம்பவைத்திருப்பார்//
முரளி கண்ணன்..
வழக்கமான கலக்கல்!!!
ஆம்.. ரஜினி ஸ்டைலின் ஆதாரமே சிவாஜியின் இந்த பாத்திரம் தானோ என்று நினைக்கத்தோன்றும் படி கலக்கியிருப்பார் சிவாஜி..
நல்ல பதிவு முரளி..
//இந்த படத்தில் விக்ரமன் சிவாஜியின் மேனரிஷங்களைதான் ரஜினி தன் ஆரம்ப கால படங்களில் பயன்படுத்தினார்//
ரொம்ப சந்தோசமாக இருந்தது,இதை படிக்கும்போது
சிவாஜி தன் ஆரம்ப கால படங்களிலேயே நிறைய வித்தியாசம் காட்டியிருப்பார்.
ஸ்டைல் இன்று நாம் சொல்வதை நிறைய தன் ஆரம்ப காலத்திலேயே செய்தவர்.
பின்னாளில் பதிவு எழுதுவோம் என்கிற தீர்க்கதரிசனத்தோடே படங்கள் பார்த்தீர்களோ... சூப்பர்ப்!
நர்சிம், பாபு, கிழஞ்செழியன் தங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி
நல்ல தொகுப்பு அண்ணன் ஆமா இதுல்லாம் 1958 இல வந்தவையா.. நான் கூட பாத்திருக்கேனே சில படங்களை ...
Post a Comment