எம்ஜியாரும் சிவாஜியும் தாதாவாக வலம் வந்து கொண்டிருந்த பேட்டையில், குண்டுராவ் என்ற பேரிருந்தும் நோஞ்சானாக இருந்த ஒருவர் இவர்களுக்கு சமமாக ஏன் ஒருபடி மேலேயே இந்த ஆண்டில் வூடு கட்டி அடித்தார். வெற்றி பெற்ற பெரும்பாலான படங்களில் நாயகியாய் நடித்து முடிசூடா ராணியாய் வலம் வந்தார் ஜெயலலிதா.
ஒளிவிளக்கு
எம் ஜி யாரின் 100வது படம். எஸ் எஸ் வாசனின் ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பு. இயக்கம் டி பி சாணக்யா, இசை எம் எஸ் விஸ்வனாதன். சௌகார் ஜானகி, ஜெயலலிதா இணை. இதன் மூலப் படமான இந்தியில் சௌகாரின் வேடமான விதவையை திருமணம் செய்துகொள்வது போல் கதை அமைப்பு இருக்கும். ஆனால் இங்கு எம்ஜியாரின் இமேஜுக்கு ஏற்ப ஜெயலலிதாவுடன் இணையுமாறு கதை மாற்றப்பட்டது. திருடனான ஒருவன் நல்வழிப்படும் கதை. 1984ல் எம்ஜியார் உடல் நலம் குன்றி மரணப் படுக்கையில் இருந்தபோது தினமலர் பத்திரிக்கை இப்படத்தில் வரும் “இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு” பாடலை முதல் பக்கத்தில் பெரிய எழுத்துருவில் பிரசுரித்தது. இந்த பாடல் உடல்நலம் குன்றி இருக்கும் எம்ஜியார் நலம்பெற சௌகார் பாடுவதாக படத்தில் வரும். அதன்பின் சில மாதங்களுக்கு அந்த பாடல் கிட்டத்தட்ட மாநில கீதமாக மாறிப்போனது. பள்ளி பிரேயரில் கூட ஒருமுறை அப்பாடலைப் பாடி எம்ஜியார் நலம் பெற வேண்டிக் கொள்ளச் சொன்னார்கள். பள்ளிகளில் நடக்கும் மாறுவேட போட்டிகளில் நரிக்குறவர் வேடம் போடும் குழந்தைகளுக்கு ஆட்டோமேட்டிக் சாய்ஸ் “நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க”.
தில்லானா மோகனாம்பாள்
விடீயோ பார்க்கும் பழக்கம் அறிமுகமானபோது அதிகம் பேர் லைப்ரரியில் வாடகைக்கு எடுத்த படங்களில் முக்கியமான படம் (குடும்பத்தோடு பார்ப்பவர்கள்). ராஜ் வீடியோ விஷன் கூட ஒரு பேட்டியில் அதிகம் விற்பனையான தங்கள் கேசட்டுகளில் இது அதிகம் விற்பனையானது என்று சொல்லி இருக்கிறார்கள். பத்மினி திருமணத்துக்கு பின் நடித்த படம். நலந்தானா பாடல் படமாக்கப்படும் போது அவர் மூன்று மாதம். சிவாஜி,பத்மினி, பாலையா என ஒரு கூட்டமே கலக்கியிருந்தாலும், பெரிய மனிதர்களுக்கு மாமா வேலை பார்க்கும் கேரக்டரில் நாகேஷ் அசத்தியிருப்பார். மனோரமாவும் ஜில் ஜில் ரமாமணியாக கலக்கியிருப்பார். இயக்கம் ஏ பி நாகராஜன். இஅசி கே வி மஹாதேவன். இந்தப் படத்தின் பல காட்சிகள் பல இயக்குநர்களால் மாடிஃபை செய்யப்பட்டு படமாக்கப் பட்டன. கதையை வைத்துக் கொண்டு, களத்தை மட்டும் மாற்றி எடுக்கப்பட்ட கரகாட்டக்காரன் ஒரு உதாரணம்.
குடியிருந்த கோயில்
முன்பு கிராம திருவிழாக்களில் உபயதாரர்களால் நடத்தப்படும் பாட்டு கச்சேரிகளில் முதலில் பக்திப் பாடல்கள்,பின் லேட்டஸ்ட் ஹிட், தொடர்ந்து மெலடி பாடல்கள் என எல்லோரையும் திருப்திப் படுத்தும்படி பாடிக்கொண்டிருப்பார்கள். பின்னிரவில் மெலடியால் தாலாட்டப்பட்டு மக்கள் தூங்கிவிடுவார்களோ என குழுவினருக்கு தோன்றும் போது அவர்கள் நாகாஸ்திரமாக உபயோகிக்கும் பாடல் துள்ளுவதோ இளமை. (பிரம்மாஸ்திரம் ஒன்று இருக்கிறது). எம் எஸ் வி இசையமைத்த இந்தப் படத்தில் ஆடலுடன் பாடலைக் கேட்டு, என் விழியும் உன் வாளும் சந்தித்தால், பெண் கவிஞரான ரோஷனா பேகம் எழுதிய குங்குமப் பொட்டின் மங்களம் ஆகிய ஹிட் பாடல்களும் உண்டு. (இவர் தான் தமிழ் சினிமாவின் முதல் பெண் பாடலாசிரியர் என்றும் கூறுவர்- உறுதியாக தெரியவில்லை). இயக்கம் கே சங்கர். இணை -ஜெயலலிதா.
கலாட்டா கல்யாணம்
தங்க வேலுவின் மகளான ஜெயலலிதாவை காதலிக்கிறார் சிவாஜி. அவரோ தம் மூத்த பெண் மனோரமா உட்பட நான்கு பெண்களுக்கும் மாப்பிள்ளை பார்த்தால் தான் சம்மதிப்பேன் என்கிறார். மனோரமா ஆண்களை வெறுப்பவர். மற்ற இரண்டு பெண்களும் ஒவ்வோரு விதம். நண்பர் நாகேஷின் துணை கொண்டு வெற்றிபெறுகிறார் சிவாஜி. ஆரம்பம் முதல் முடிவு வரை சிரிக்க வைக்கும் இந்தப் படத்தின் இயக்குனர் ஸ்ரீதரின் உதவி இயக்குநரான சி வி ராஜேந்திரன். இதில் நாகேஷ்க்கு முதலில் ஒரு பெண்ணை சொல்வார் சிவாஜி. ஆனால் மனோரமாவுக்கு மாப்பிள்ளை கிடைப்பது கடினம் என்பதால் நாகேஷிடம் கெஞ்சி அவர் மனத்தை மாற்றி விடுவார். பின் மனோரமாவை சம்மதிக்க வைக்க இருவரும் போடும் நாடகங்கள் கலக்கலானவை.
மூன்றெழுத்து
ரவிசந்திரன், ஜெயலலிதா, நாகேஷ், அசோகன் நடித்த படம். ஒரு குடும்பத்துக்கு சொந்தமான செல்வம் அனைத்தும் ஒரு இடத்தில் புதைக்கப்பட்டு அது இருக்கும் இடம் ஒரு மேப்பில் வரையப் படுகிறது. பின் அது மூன்று துண்டுகளாக கிழிக்கப்பட்டு புதையல் இருக்கும் ஊரின் பெயரில் (கமுதி) ஒவ்வொரு எழுத்தும் ஒரு துண்டின் பின்னால் எழுதப்படுகிறது. இது மூன்று பேரிடம் ஒப்படைக்கப் படுகிறது, அதை கண்டுபிடிக்க ரவிசந்திரன் மேற்கொள்ளும் போராட்டமே படம். நல்ல நகைச்சுவையுடன் செல்லும் சஸ்பெண்ஸ் படம்.
ரகசிய போலிஸ் 115
இதிலும் எம்ஜியார்,ஜெயலலிதா,நாகேஷ். எம்ஜியார் ரகசிய போலிஸ் அதிகாரி. அசோகன், ஜெயலலிதா அண்ணன் தங்கை. இவர்களின் தந்தை ஒரு நாடகப் பைத்தியம். அசோகன் குற்றங்கள் புரியும் கூட்டத்தை சேர்ந்தவர். அந்த கூட்டத்தில் இருக்கும் ஒரு கலைகள் தெரிந்த ஒரு அழகு பெண்ணை அவர் காதலிப்பார். அந்தப் பெண் தன் குழுவில் இருக்க வேண்டும் என அசோகனின் தந்தை நினைப்பார். இதற்க்காக் அவர் நிறைய செலவழிப்பார். இந்த சிக்கல்களை தீர்க்க ஜெயலலிதா தன் காதலன் என எம்ஜியாரை அழைத்து வருவார். ஜெயலலிதாவின் திட்டம் அந்தப் பெண்ணை எம்ஜியார் காதலிப்பது போல் நடித்து இவர்களிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்பது. எம்ஜியார் உளவு பார்க்க வந்தவர். ஜெயலலிதாவின் தந்தைக்கோ எம்ஜியாரை கலைக்குழு நாயகனாக்க வேண்டும் என்பது. சுவராசியமாக செல்லும் இந்தப் படத்தில் யார் ஆசை நிறைவேறும்?. இந்தப் படத்தில் எம்ஜியாருக்கு ஜெயலலிதா காதலிக்க சொல்லிக் கொடுக்கும் காதல் காட்சியும் அதை தொடர்ந்து வரும் என்ன பொருத்தம் பாடலிலும் கெமிஸ்ட்ரி பிரமாதமாக இருக்கும்.
எதிர் நீச்சல்
மாடி வீட்டி மாதுவாக நாகேஷ் கலக்கிய படம். அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி அங்கு வேலை செய்து படிக்கும் மாது, அவனுக்கு துணைநிற்கும் நாயர் (முத்துராமன்), மேஜர் சுந்தர் ராஜன். ஒவ்வொரு முறை சாப்பாட்டுக்கும் ஒருவர் வீட்டு வாசலில் நிற்கும் அவலம், வாழ்க்கையில் ஏமாற்றம் வேண்டாம் என்பதற்க்காக ஒரு காதல் என நாகேஷ் பல பரிமாணங்களை காட்டியிருப்பார். பாலசந்தர் இயக்கம். அடுத்தாத்து அம்புஜத்தை, சேதி கேட்டோ, தாமரை கன்னங்கள், வெற்றி வேண்டுமா போன்ற அருமையான பாடல்களை தந்திருப்பார் இசையமைப்பாளர் வி குமார்.
உயர்ந்த மனிதன்
ஏவிஎம் தயாரிக்க கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் சிவாஜி, வாணிஸ்ரீ, மேஜர்,அசோகன் நடித்த படம். சிவாஜி கணேசன், மேஜர் சுந்தர்ராஜன் நண்பர்கள். பின்னாளில் அவர்கள் சந்திக்கும்போது பாடும் பாடலான அந்த நாள் ஞாபகம் பாடல் இன்றும் பாடப்படுகிறது. காதலன் வராத ஏக்கத்தில் வாணிஸ்ரீ பாடும் நாளை இந்த வேளை பார்த்து வா நிலா பாடல் (பி சுசீலா) காதல் ஏக்கத்தில் பெண் பாடுவதாக தமிழில் வந்திருக்கும் பாடல்களில் மிக சிறப்பான ஒன்று. சத்ரியன் படத்தில் பானுப்ரியா பாடும் மாலையில் நான் மனதோடு போல சில பாடல்களே இந்த உணர்வில் வந்திருக்கின்றன.
தாமரை நெஞ்சம்
நாகேஷ் கலக்கிய இன்னொரு படம். தன் உடல்நிலை காரணமாக தாழ்வு மனப்பான்மை கொண்ட நாகேஷ், சரோஜா தேவியை காதலித்தும் சொல்ல முடியாமல் தவிக்கிறார். பாலசந்தர் இயக்கிய இந்தப் படம் பின்னால் வெளிவந்த பல தாழ்வு மனப்பான்மை – காதல் சொல்லாமை படங்களுக்கு முன்னோடி எனலாம். சரோஜா தேவியும் தன் வழக்கமான கொஞ்சல் பாணி இல்லாமல் (கோப்பால் – மிமிக்ரி ஞாபகப்படுத்திக் கொள்ளவும்) இயல்பாக பேசியிருப்பார்.
சோப்பு சீப்பு கண்ணாடி
அழகுப் பொருட்கள் விற்கும் விற்பனை பிரதிநிதியான நாகேஷ் ஒரு பூட்டிய வீட்டுக்குள் மாட்டிக் கொள்கிறார். பின் அவர் எப்படி வெளியேறுகிறார் இதுதான் கதை. இதை வைத்து மூன்று மணி நேரம் புகுந்து விளையாடியிருப்பார்கள். இடையில் ஒரு இளப் பெண் வேறு. உள்ளே மாட்டிக் கொண்டு வெளியேற துடிக்கும் நாகேஷின் கலாட்டக்களும், புலம்பல்களையும் மாவாக வைத்துக் கொண்டு, வெங்காயம் போட்டு, ரவை போட்டு, உருளைகிழங்கு போட்டு என பல படங்களில் பலர் ஸ்பெசல் தோசை சுட்டு நமக்கு பரிமாறி விட்டார்கள்.
இந்த ஆண்டில் நாகேஷ் ஏற்றது போல வெரைட்டியான ரோல்கள் ஒரு நடிகருக்கு ஒரே ஆண்டில் இனி கிடைக்குமா என்பது சந்தேகமே.
26 comments:
இதுவும் ஊடு கட்டுன கலக்கல் பதிவு
நாகேசுக்குக் கிடைக்க வேண்டிய பெருமையை நாம் அவருக்கு அளிக்கவில்லையோ என்று அடிக்கடி தோன்றுவதுண்டு. அவரது நடன அசைவுகள் மிக நளினமாக இருக்கும். சிரிக்க வைக்கத் தெரிந்த அவருக்கு அழவைக்கவும் தெரியும். நல்ல்ல்ல நடிகர்...
>>(மந்தையில் இருந்து பிரிந்த ஆடுகள் சந்தித்துக் கொண்டன .......... பிரியாணி தட்டில்). இந்தப் படத்தில் சிவாஜி பேசும் நோ பீஸ் ஆப் மைண்ட்டும் புகழ் பெற்ற ஒன்று.
Both were from Gnana oLi not Uyarndha Manidhan.
நாகேஷ் என்கிற ஒரு சிறந்த நடிக்கருக்கு மரியாதை செய்யும் விதமாக உள்ளது இந்த தொகுப்பு...கலக்கல் ;)
நசரேயன்,தருமி ஐயா,கோபிநாத் தங்கள் வருகைக்கு நன்றி
அனானி
\\Both were from Gnana oLi not Uyarndha Manidhan\\
பழைய படம் என்பதால் குழம்பி விட்டேன் என நினைக்கிறேன்.
சுட்டிகாட்டியதற்க்கு மிக்க நன்றி.
//கலாட்டா கல்யாணம்//
//தாமரை நெஞ்சம்//
இரண்டிலும் நாயகனுக்கு இணையான வேடம்....
தாமரை நெஞ்சம் பாத்திரம் சிவாஜிக்குக் கூட கிடைத்திருக்கிறதா எனத்தெரியவில்லை.
//சோப்பு சீப்பு கண்ணாடி//
//எதிர் நீச்சல்//
நாயகனே அவர்தான்.
//எஸ் எஸ் வாசனின் ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பு. இயக்கம் டி பி சாணக்யா//
குசேலன், சந்திரமுகி, முத்து, போன்ற படங்களின் முன்னோடி இந்தப் படம்தான்.
// ஊரின் பெயரில் (கமுதி) ஒவ்வொரு எழுத்தும் ஒரு துண்டின் பின்னால் //
இதைதான் பெரியவர் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று பாடினாரோ...
:-)
கலக்கலான தொகுப்பு....
எல்லா படத்தின் கதைகளும் அருமை....
நீங்களும் ஊடு கட்டி அடித்திருக்கிறீர்கள்...
மிகச்சிறந்த கலைஞனைப் பற்றிய மிகச்சிறந்த பதிவு முரளி கண்ணன்.. ஈடு செய்ய முடியாதவர் நாகேஷ்
அன்பு பதிவர்களே , ,copy அன்ட் paste இல்லாமல் நான் எழுதிய முதல் பதிவு, திருமங்கல தேர்தலும் , நான் போட்ட ஓட்டும் என்ற தலைப்பில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் படித்து, பின்னுட்டம் இடுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.தயவு செய்து செஞ்சுருங்க சாமீஈஈஈ......
அன்புடன்
காவேரி கணேஷ்
kaveriganesh.blogspot.com
நிறைய ஆய்ந்து எழுதப்பட்ட பதிவு. எப்போதும் போலவே. 'வைத்தி' யும் 'தருமி'யும் நாகேஷின் மகுடங்கள். சினிமா தகவல்களும் நீங்கள் குடுப்பதால் ஒரு கேள்வி. சி.வி.ராஜேந்திரன், ஸ்ரீதரின் உதவி இயக்குனர் மட்டுமா அல்லது ஸ்ரீதரின் மறுமகனுமா (nephew)
'நாளை இந்த வேளை பார்த்து' சுசீலாவுக்கு தேசிய விருது வாங்கித் தந்த பாடல். அதையும் குறிப்பிடுங்களேன். சத்திரியன் பாடலை இதனுடன் ஒப்பிட்டு, நீங்கள் எங்கேயோ போய்விட்டீர்கள். அபாரம்.
'எதிர் நீச்சல்' அடுக்கு மாடி குடியிருப்பா? நாங்கள் அதனை 'ஸ்டோர்ஸ்' என்று சொல்லுவோம். ஒண்டுக் குடித்தனங்களுக்கு ஒரு கவுரவமான பெயர். சும்மா குற்றம் கண்டுபிடிக்காலாம்னு துளாவிப் பார்த்ததில் இம்புட்டுதான் கிடைத்தது. :))
அனுஜன்யா
நல்ல கலெக்ஷன் முரளி.. சோப்பு சீப்பு கண்ணாடி இதுவரை பார்த்ததில்லை. வித்தியாசமாக இருக்கும் போல, பார்க்கவேண்டும்..
Great tribute to Nagesh, the evergreen actor.
//அழகுப் பொருட்கள் விற்கும் விற்பனை பிரதிநிதியான நாகேஷ் ஒரு பூட்டிய வீட்டுக்குள் மாட்டிக் கொள்கிறார். பின் அவர் எப்படி வெளியேறுகிறார் இதுதான் கதை//
ஹா ஹா ஹா செம காமெடி படங்க இது..
உள்ள மாட்டிக்கிட்டு அவர் பண்ணுற சேட்டை சூப்பர்....தனக்கு தானே பேசி கொள்வது என்று கலக்கி இருப்பார்.
தல வழக்கம் போல கலக்கலான தொகுப்பு.
ஒளிவிளக்கில் சோ அல்லவா நகைச்சுவை நடிகர்? நாகேஷ் எங்கிருந்து வந்தார்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
நான் ஒளிவிளக்கில் நாகேஷ் நடித்திருப்பதாக சொல்லவில்லை. 1968ன் முக்கிய படங்களையும், அவற்றில் பெரும்பாலான படங்களில் நாகேஷ் இடம் பெற்று கலக்கியிருப்பதாகவுமே சொல்ல வந்தேன். தலைப்பில் நாகெஷ் இடம்பெற்றதால் இந்த குழப்பம் என நினைக்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
EXCELLENT ARTICLE...NAGESH IS ONE OF THE BEST COMEDIAN IN THE HISTORY OF INDIAN CINEMA...THIRUMATHY P.SUSEELA'S SONG..."NALAI INTHA VELAI PARTHU"...IS A PRESIDENT AWARD WINNING SONG...GREAT...
Y.P.
Uyarndha Manidhan had Siva kumar in its Cast.
Naalai Indha Velai - was such a beauty that the lyricist Na. Kamarasan created furore with his comment, "Kambanukku Piragu Indha Kamarasan" than :-), heard that he is in penury now and tried to receive some help from the then CM JJ in 2001
எதிர்நீச்சல், தாமரைநெஞ்சம் மாதிரியான கேரக்டர்கள் எதிர்காலத்தில் ஒருவருக்கு கிடைக்குமா என்பதும்,கிடைத்தாலும் நாகேஷ் மாதிரி பர்பார்ம் பண்ணமுடியுமா என்பதும் சந்தேகமே.
எதிர்நீச்சல் பார்க்கும் போதெல்லாம் கண்கள் கலங்குவதைத் தவிர்க்க முடியவில்லை :-))
சுகுணாவின் கவுண்டமணிப் பதிவில் கூறியபடி கவுண்டமணிக்கு அப்புறம் கூட யாரும் வெரைட்டியான கேரக்டரில் நடிக்கவில்லை என்பதும், விவேக்கும்,வடிவேலுவும் ரிப்பீட் கேரக்டர்களில் மட்டுமே நடித்து வருவதும் சற்று ஆயாசத்தையே தருகின்றன.
காத்திருப்போம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செல்வம்
Post a Comment