January 22, 2010

டப்பிங் படங்களின் மாற்றம் (2000 - 2009)

முன்னாட்களில் தமிழ்நாட்டில் டப்பிங் படங்கள் என்றாலே அது தெலுங்கு தேசத்திலிருந்து வந்ததாகத்தான் இருக்கும்.

வடநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவு வகைகளும், நாயகிகளும் தமிழ் சாயம் பூசிக்கொண்ட போது அதை ஆதரித்த தமிழன் அவர்களது படங்கள் சாயம் பூசிக் கொண்ட போது அதை ஆதரிக்கவில்லை. நேரடி இந்திப்படங்கள் இங்கே அபார வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் இந்தி டப்பிங் இங்கே சகிக்க முடியாததாகவே இருந்திருக்கிறது.
ரஜினியின் முகத்திற்காகக் கூட அதை இங்கே யாரும் பார்க்கத் தயாராயில்லை. லட்சத்தில் ஒருவன், ராஜகுரு போன்ற படங்களை ரஜினியின் ரசிகர்கள் கூட பார்த்திருப்பார்களா? என்பது சந்தேகமே.

அடுத்து கன்னட படங்கள். அதை பெங்களூர்காரர்களே பார்க்க மாட்டார்கள். அதையும் மீறி சில பாலியல் சார்புடைய கன்னட படங்கள் டப் ஆகி வந்தன. அது என்னவோ தெரியவில்லை சரோஜாதேவி, சௌந்தர்யா மற்றும் திவ்யா போன்ற ஏராளமான அழகிகளை உற்பத்தி செய்யும் கன்னட தேசம் ஆண்கள் விஷயத்தில் பாரபட்சமாகவே நடந்து கொள்கிறது. போஸ்டர்களில் ஹீரோக்களின் முகத்தைப் பார்த்தால் கழுதை கூட அதை சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. உபேந்திரா போன்று ஓரளவு வித்தியாசமாக படமெடுப்பவர்களின் படங்கள் கூட இங்கே ஓடமாட்டேன் என்கிறது.


மலையாள தேசத்திலிருந்து கமர்சியல் வேல்யு உள்ள திரைப்படங்கள் 80களிலும் 90 களிலும் ஓரளவு இங்கே டப் ஆகி வந்துள்ளன. மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி ஆகியோரது போலிஸ் மற்றும் கடத்தல் கதைகள் இங்கே வந்து வெற்றி பெற்றுள்ளன. ஆனால் இந்தப் பத்தண்டுகளில் அப்படி வந்து வெற்றி பெற்ற படங்கள் மிகக் குறைவு.

அடுத்தது ஆந்திரா. கால காலமாகவே அங்கிருந்து படங்கள் இங்கே டப் ஆகி வந்துள்ளன. முதலில் புராணப் படங்கள் வந்தன. பின்னர் காந்தாராவ், சோபன் பாபு போன்றோரது அதிரடி ஆக்ஷன் படங்கள் டப் ஆகி வந்தன. பின்னர் விஜய நிர்மலா போன்றவர்கள் டாம் பாய் கேரக்டர்களில் நடித்த ரிவால்வர் ரீட்டா, கன்பைட் காஞ்சனா, டூபான் குயின் போன்ற படங்கள் வந்தன. விட்டலாச்சார்யா கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாமலேயே மிரட்டிய மாயாஜாலப் படங்கள் தனி மார்க்கெட்டைக் கொண்டிருந்தன.

இந்தப் படங்கள் அனைத்தையும் பார்த்தால் அவை உள்ளடக்கம் சார்ந்ததாகவே இருக்கும். கதாநாயகனுக்காக டப்பிங் செய்யப்படாமல் உள்ளடக்கத்திற்க்காக டப்பிங் செய்யப்பட்டிருக்கும். இதை மாற்றியது சிரஞ்சீவி தான். கோதண்டராமி ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, மாதவி நடித்து வெளியான கைதி திரைப்படம் 100 நாட்களை கடந்து ஓடி சிரஞ்சீவிக்கு இங்கு ஒரு மார்க்கட்டை உருவாக்கியது. அதன்பின் சிரஞ்சீவி நடித்த பல படங்கள் நாயகனுக்காக டப் செய்யப்பட்டன. இதுதாண்டா போலிஸ் வெற்றிக்குப் பின் ராஜ சேகருக்கும், உதயம்,இதயத்தை திருடாதே வெற்றிக்குப் பின் நாகார்ஜுனாவுக்கும் ஒரு மர்க்கெட் உருவானது.

இதில் ஒரு குறிப்படத்தக்க அம்சம் என்னவென்றால் அப்போது தமிழில் உச்சத்தில் இருக்கும் நாயகியுடன் இவர்கள் நடிக்கும் படங்களுக்கு ஒரு முன்னுரிமை இருக்கும். ஸ்ரீதேவி,ராதா ஆகியோர் உச்சத்திலிருக்கும் போது அவர்கள் படங்கள் அதிகமாக டப் ஆகி வந்தன.
சில்க்ஸ்மிதாவக்காகவும் சில படங்கள் டப் செய்யப்பட்டு வந்தன.இது குஷ்பூ காலத்தில் இன்னும் அதிகமானது. (ஹீரோயின் சென்ட்ரிக்). ரோஜா போதை தமிழ்நாட்டு ரசிகர்களை பீடித்திருந்தபோது அவருக்காக வினோத்குமார், பாலகிருஷ்ணா ஆகியோரையெல்லாம் சகித்துக் கொள்ளும் நிலைக்கு தமிழன் தள்ளப்பட்டான். உள்ளத்தை அள்ளித்தந்த ரம்பா, காதலன்,பாட்ஷாவுக்குப் பின் நக்மா ஆகியோருக்காவும் இங்கே படங்கள் டப் செய்யப்பட்டன.

இதுதவிர அம்மன், அருந்ததீ போல மிஸ்டிக் கதையமைப்பு உள்ள படங்களும், கமல் மற்றும் ரஜினி தெலுங்கில் பிரத்யேகமாக நடித்த படங்களும் இங்கே டப் ஆகி வந்துள்ளன.

ஆனால் இந்தப் பத்தாண்டுகளில் தெலுங்கு டப்பிங் படங்கள் பெருமளவு குறைந்து விட்டன. அருந்ததீ போல மிகச் சில படங்கள் மட்டுமே (ஏறக்குறைய இல்லை என்றும் சொல்லலாம்) அந்த அளவுக்கு எந்தப் படமும் இங்கே வெற்றி பெற வில்லை.

இந்த மாற்றத்திற்க்கு காரணம் என்ன?

1. தெலுங்கு மசாலா படங்களை ரசிக்கக் கூடியவர்களுக்கு இங்கேயே தீனி கிடைக்கிறது. அதீத உணர்ச்சிகர வசனங்கள், சண்டை, பாடல்கள் என கலந்து கட்டி படமெடுக்கும் ஷங்கர், பேரரசு போன்றோர் இங்கேயே வந்துவிட்டார்கள்.

2. கொஞ்சம் வித்தியாசமான படமாக இருந்தால் அதை கவ்விக் கொண்டு வந்துவிட விஜய், ஜெயம் ரவி ஆகியோரது உளவுப்படைகள் அங்கேயே சுற்றிக் கொண்டு இருக்கின்றன.

3.ஆங்கில டப்பிங் படங்களின் வரவு இந்தப் பத்தாண்டுகளில் முக்கியமான மாற்றம். ஜாக்கிசான் முதல் டேனியல் கிரெக் வரை இங்கே சென்னை தமிழில் பேசுகிறார்கள்.அர்னால்டு சிவனேசன் என்று கூட டைட்டில் போடுவார்கள் போலிருக்கிறது கலிபோர்னிய கவர்னருக்கு. 2012ன் வசூல் அயன் வசூலை சில தியேட்டர்களில் மிஞ்சி விட்டது என்கிறார்கள். அவதாரை ஹாலிவுட் பாலா பார்ப்பதற்குள் கோலிவுட் சங்கர் பார்த்துவிடுகிறார். இதனால் தெலுங்கு டப்பிங் படங்கள் தங்கள் மார்க்கெட்டை படிப்படியாக இழந்து வருகின்றன.

4. முன்னர் ஹீரோயின்களின் ஆயுள் காலம் அதிகமாக இருந்தது. இப்போது இரண்டு ஆண்டுகள் கூட யாரும் தாக்குப் பிடிப்பதில்லை. ஒரு கிரேஸ் ஏற்பட்டு இந்த ஹீரோயினின் படத்தை டப் செய்யலாம என்று யோசிப்பதற்க்குள் அவரது மார்க்கெட் போய்விடுகிறது.

5. வணிக மதிப்புக் கொண்ட நம் நடிகர்கள் யாரும் இப்போது அங்கே பிரத்யேக தெலுங்குப் படங்களில் நடிப்பதில்லை.

மலையாள படங்களின் பட்ஜெட் மிகக் குறைவு என்பதால் அங்கே இப்போது மசாலாப் படங்கள் நம்மவர்களை ஈர்க்கும் அளவுக்கு தயாராவதில்லை. வித்தியாசப் படங்களை இங்கே விக்ரம் (காசி, மஜா), சூர்யா (பேரழகன்) போன்றோரை வைத்து ரீமேக் செய்து விடுகிறார்கள். பழசிராஜா போரில் மட்டுமில்லாமல் வசூலிலும் இங்கே தோல்வியடைந்து விட்டார்.

இந்தப் பத்தண்டுகளில் டப்பிங் படங்களைக் குறித்த வரையில் ஏற்பட்ட மாற்றம் டோலிவுட்டுக்குப் பதில் ஹாலிவுட் என்பதே.

January 19, 2010

2000 - 2009 பத்தாண்டுகளில் அறிமுக நடிகர்கள்.

70களில் அறிமுகமான (நாயகர்களாக) கமல்ஹாசனும்,ரஜினிகாந்தும் 80,90,1 என 3 தசாப்தங்களைக் கடந்தும் இன்னும் ஸ்டெடியாக இருக்கிறார்கள். 70களின் இறுதியில் வந்த விஜயகாந்தும் இந்த மூன்று தசாப்தங்களில் நின்று காண்பித்து விட்டார். பாக்யராஜ் 80களின் இறுதிவரை நிலைத்து நின்று தொண்ணூறுகளில் ஆரம்பத்தில் பீல்ட் அவுட் ஆனார்.

80களில் அறிமுகமாகி வெற்றிக்கொடி நாட்டிய ராஜேந்தர்,மோகன்,ராமராஜன்,பாண்டியராஜன் ஆகியோர் தொண்ணூறுகளில் பீல்ட் அவுட் ஆனார்கள். கார்த்திக் 90களின் இறுதிவரை நிலைத்தார். பிரபு 90களின் பாதிவரை. முரளியும் 90களின் இறுதிவரை தாக்காட்டினார். சத்யராஜ் நிலைத்து நின்றாலும் மூன்றாம் வரிசை நாயகனாகவே உள்ளார். இதன் இறுதியில் அறிமுகமானவர்களில் இப்பொது வரை ஸ்டெடியாக இருப்பவர் விக்ரம் மட்டுமே. அர்ஜூன்,சரத்குமார் தள்ளாட்டம், பிரசாந்த் பல கிரகங்களால் அலைக்கழிக்கப்பட்டார்.

90களின் ஆரம்பத்தில் அறிமுகமாகி கோடி ரூபாய் சம்பளத்தை முதலில் தொட்ட ராஜ்கிரணும் அந்தப் பத்தாண்டு இறுதிக்குள்ளேயே அமைதியாகி விட்டார். விஜய்,அஜீத் மற்றும் இறுதியில் அறிமுகமான சூர்யாவும் மட்டுமே இன்னும் பத்தாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வாய்ப்புடன் இருக்கிறார்கள். அரவிந்த்சாமி, அப்பாஸ் போன்றோர் அஸ்தமித்தே விட்டார்கள். நெப்போலியன் மந்திரியாகிவிட்டார். மகேந்திரனிடம் பாராட்டுப் பெற்ற பிரபுதேவாவும் நடிகராக பத்தாண்டுகளைத் தாண்ட முடியவில்லை. அருண்விஜய்யை எப்படி சொல்வது என்றே குழப்பமாக உள்ளது.

சரி, இந்தப் பத்தாண்டில் அறிமுகமானவர்களில் யார் யார் அடுத்த இரு பத்தாண்டுகள் வரை நிலைத்திருப்பார்கள்?

1.மாதவன்

அலைபாயுதே, மின்னலே,ரன் போன்ற வெற்றிப்படங்கள், அன்பே சிவம்,ஆய்த எழுத்து,நளதமயந்தி,தம்பி போன்ற வித்தியாச கதாபாத்திரங்கள் என நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றவர். இந்தியில் ரங் தே பசந்தி, 13 பி, த்ரீ இடியட்ஸ் மூலம் பரவலான கவனிப்பைப் பெற்றவர். இப்போதைக்கு தமிழில் அதிக கவனம் செலுத்தாததால் அடுத்த அரவிந்த்சாமி ஆகிவிடுவாரோ என எண்ணத் தோன்றுகிறது.


2. தனுஷ்

அண்ணனுடையான் அறிமுகத்துக்கு அஞ்சான். ஆனாலும் அடுத்தவர்களின் படங்களிலும் நடித்து வெற்றி பெற்றாகி விட்டது. கடைசி நாலு படங்கள் ஹிட். கல்லூரியில் படித்த அல்லது படிக்காத சேட்டை செய்யும் வாலிபன் என்னும் வட்டத்துக்குள்ளேயே பெரும்பாலான வேடங்கள். உடல் அமைப்பு அப்படி. ஆனால் இப்படியே இருந்தால் எப்படி? உடலைத் தேற்றி பல பாத்திரங்களையும் ஏற்று நடிக்கும்படி மாறினால் இன்னும் பல ஆண்டுகள் வெற்றிநடை போடலாம்.


3.சிலம்பரசன்


நடிப்பு மட்டுமில்லாமல், இயக்குநர்,பாடகர் என தன்னை நிரூபித்து விட்டவர். இப்போதுதான் கௌதம் மேனன், கே வி ஆனந்த் என பெரிய இயக்குநர்களிடம் அட்டாட்ச் ஆகியுள்ளார். பொடென்ஷியல் உள்ள ஆள் என்பதால் இன்னும் பத்தாண்டு கேரண்டி.

4. ஜெயம் ரவி

அண்ணனைத் தவிர மற்றவர்களின் படங்களில் எடுபடுவதில்லை என்னும் கூற்று தற்போது பேராண்மை மூலம் உடைந்திருக்கிறது. தெலுங்கு பட உலகமும் (ஆந்திராவா? டெலுங்கானாவா?) அண்ணனும் உள்ளவரை அவ்வப்போது ஹிட் கொடுத்து ஓரளவு நிலைத்து நின்று விடுவார். குரல் மட்டும் இன்னும் மெச்சூர் ஆனால் நன்றாக இருக்கும்.

5.விஷால்

இன்னொரு வாரிசு என்றாலும், உதவி இயக்குநராகப் போய் அர்ஜூனின் மாறுபட்ட கோணப் பார்வையால் நடிகரானவர். தொடர்ந்து ஹிட் கொடுத்து இப்போது ஆப் ஆகியுள்ளார். இருண்டு கிடந்த விக்ரமையும், மங்கலாக இருந்த சூர்யாவையுமே பிரகாசமாக்கிய பாலா சும்மா விடுவாரா? திராவிட நிறம் என்பதால் இன்னும் பத்தாண்டு கேரண்டி.


6. ஆர்யா

மறைந்த ஜீவாவின் கண்பட்டு கதாநாயகனான ஆர்யா அடுத்த அப்பாசோ என நினைத்த வேளையில் பாலா மூலம் அகோரியானார். வரும் படங்களை வைத்துத்தான் இவரை கணிக்க முடியும்.

7.ஷாம்

குஷி படத்தில் விஜய்யின் நண்பர் குழாமில் ஒருவராக அறிமுகமானாலும் அப்பட கேமராமேன் ஜீவா மூலம் 12 பி யில் அறிமுகமானார். குறைந்த காலத்திலேயே சிம்ரன்,ஜோதிகா,சினேகா,திரிஷா,மீரா ஜாஸ்மின் போன்ற தேவதைகளோடு நடித்தாலும் அதிர்ஷ்ட தேவதையின் கண்பார்வை படவில்லை. இப்போது இரண்டாம் கதாநாயகனாக இவர் நடிக்கும் தில்லாலங்கடியைப் பொறுத்தே இவர் எதிர்காலம்

8. ஜீவா

இன்னொரு வாரிசு. ராம், கற்றது தமிழ், ஈ என வித்தியாசம் காட்டினாலும் மீண்டும் கமர்ஷியல் பாதைக்கே திரும்பிவிட்டார். வரும் படங்கள் தான் உரைகல். இவராவது பரவாயில்லை இவர் சகோதரர் ஜித்தன் ரமேஷ் பாவம்.

9. கார்த்தி

பராசக்திக்குப் பிறகு இவ்வளவு ஸ்ட்ராங்காக அறிமுகமான நடிகர் இவர்தான் என்பது இண்டஸ்ட்ரி வாக்கு. நல்ல நடிப்புத் திறமை, பின்புலம். பத்தாண்டு கேரண்டி.

10. சித்தார்த்

பாய்ஸ்,ஆய்த எழுத்து என பெரிய இயக்குநர் படங்கள். கிளிக் ஆகாததால் தெலுங்குக்குப் போய்விட்டார். இங்கு இடமிருக்காது என்பதே தற்போதைய நிலவரம்.

11. பரத்

பாய்ஸில் அறிமுகமானாலும் செல்லமே, காதல் திருப்புமுனை. பேரரசு வரை இறங்கவும் முடியும் கண்டேன் காதலை என இயல்பாக நடிக்கவும் முடியும் என்பது பலம். ஆனால் பட்சி இதெல்லாம் தாக்குப் பிடிக்காது என்றே சொல்கிறது.

12. நகுல்

ஷங்கர் செய்ய முடியாததை நாக்க முக்க செய்து விட்டது. ஆனாலும் நீடிப்பது கஷ்டமே.


13. ஜே கே ரித்தீஸ்


சரத்குமார், நெப்போலியன், ராமராஜனுக்கெல்லாம் பல ஆண்டுகள் ஆனது. நாயகனுக்கு ரெண்டே படம் தான் எம்பி ஆகிவிட்டார். அதிமுகவில் இப்படி யெல்லாம் நடக்கும் என்று அங்கலாய்ப்புகள் வேறு. சாம் ஆண்டர்சனை தனியாக விட்டு விட்டு போனதுதான் சோகம்.


14. சுந்தர் சி

இப்படியெல்லாம் நடக்கும் என குஷ்பூ கூட எதிர்பார்த்திர்க்க மாட்டார்.

15 சேரன் / தருண்கோபி

முடியல அடுத்த பதிவில தொடருகிறேன்

January 18, 2010

2000 - 2009 பத்தாண்டுகளில் தமிழ்சினிமா

முதலில் மங்களகரமாக வசூலில் இருந்து தொடங்குவோம். முதல் பத்து இடத்தைப் பிடித்த படங்கள் [வரிசைப்படி அல்ல :-)) ]

1.தசாவதாரம்
2.சிவாஜி
3.சந்திரமுகி
4.கில்லி
5.சாமி
6.கஜினி
7.போக்கிரி
8.அன்னியன்
9.அயன்
10.தூள் மற்றும் ரமணா, ஜெமினி,வானத்தைபோல படங்களும் 10 ஆவது இடத்துக்கான போட்டியில் உள்ளன.

சூப்பர் ஸ்டார் நான்கு படங்களில் மட்டுமே நடித்தார். இரண்டு மெகா ஹிட், இரண்டு பிளாப்

1.பாபா (2002)
2.சந்திரமுகி (2005)
3.சிவாஜி (2007)
4.குசேலன் (2008)

கமல் 12 படங்களில் நடித்தார்

1. ஹேராம் (2000) - பிளாப்
2. தெனாலி (2000) - ஹிட்
3.ஆளவந்தான் (2001) - பிளாப்
4.பம்மல் கே சம்பந்தம் (2002) - ஹிட்
5. பஞ்சதந்திரம் (2002) - ஹிட்
6.அன்பே சிவம் (2003) - பிளாப்
7.விருமாண்டி (2004) - ஹிட்
8. வசூல்ராஜா (2004) - ஹிட்
9.மும்பை எக்ஸ்பிரஸ் (2005) - பிளாப்
10. வேட்டையாடு விளையாடு (2006) - ஹிட்
11. தசாவதாரம் (2008) - சூப்பர் ஹிட்
12.உன்னைப் போல் ஒருவன் (2009) - ஹிட்

(தொடரும்)

1996 ஆம் ஆண்டு படங்கள் - ஒரு பார்வை

ஒரே ஆண்டில் சந்தேகத்துக்கே இடமில்லாமல் ஐந்துக்கும் மேற்பட்ட பெரு வெற்றிப்படங்களும் 10 வெற்றிப்படங்களும் அமைவது எப்போதாவதுதான் நடைபெறும். 1989ல் அப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றது (அபூர்வ சகோதரர்கள், வருஷம் 16, ராஜாதிராஜா, கரகாட்டக்காரன், புதியபாதை, புதுப்புது அர்த்தங்கள், மாப்பிள்ளை, பாண்டி நாட்டுத்தங்கம்.....). அது போல 1996லிம் அப்படி பெரு வெற்றி பெற்ற படங்கள் வந்தன.

1.இந்தியன்
2.அவ்வை ஷண்முகி
3.உள்ளத்தை அள்ளித்தா
4.பூவே உனக்காக
5.காதல்கோட்டை

ஆகிய ஐந்து படங்கள் பெருவெற்றி பெற்றன.

கோகுலத்தில் சீதை, நாட்டுப்புறபாட்டு,கோபாலா கோபாலா, சுந்தரபுருஷன், வான்மதி, காதல்தேசம் போன்ற பல படங்கள் நல்ல வெற்றி பெற்றன.


இந்த ஆண்டில் இரண்டுபேருக்கு பெரிய திருப்புமுனை அமைந்தது. ஒன்று விஜய் (பூவே உனக்காக), பிரகாஷ்ராஜ் (கல்கி).

கவுண்டமனிக்கு இந்த ஆண்டு செமையான அறுவடை. (இந்தியன், அவதார புருஷன்,கோயம்புத்தூர் மாப்ளே, டாட்டா பிர்லா,மேட்டுக்குடி, சேனாதிபதி,ஞானப்பழம்,கட்டப் பஞாயத்து, பூவரசன், மகாபிரபு,பரம்பரை).

பெரிய இயக்குநர்களுக்கு மரண அடி (பாரதிராஜா - அந்திமந்தாரை, தமிழ்செல்வன்: பாலசந்தர் - கல்கி: பாக்யராஜ் - ஞானப்பழம்)


ரஹ்மான் இசையில் இந்தியன்,காதல்தேசம், மிஸ்டர் ரோமியோ மற்றும் லவ்பேர்ட்ஸ் ஆகியவை வந்தன. இந்த நான்கும் முறையே ஏ எம் ரத்னம், கே டி குஞ்சுமோன், ஆர் பி சௌட்த்ரி மற்றும் பிரமிட் நடராஜன் ஆகிய பெருங்கைகளின் தயாரிப்பில் வந்தது. இந்த நால்வரில் ஆர் பி சவுத்ரி மட்டுமே இப்போதும் படம் தயாரிக்கும் நிலையில் உள்ளார். லவ்பேர்ட்ஸ் படம் ரஹ்மான் இசையமைக்க எடுத்துக் கொண்ட நாட்கள் கூட ஓடாமல் அடிவாங்கியது. ஆனால் இதே லைனை வைத்து ராகேஷ் ரோஷன் தன் மகன் ரித்திக் ரோஷனை அறிமுகப்படுத்தி எடுத்த கஹோ நா பியார் ஹை பெருவெற்றி பெற்றது.

ஆர் கே செல்வமணி பினாமியாக டைரெக்ட் செய்த கர்ணன் டைப் படமான ராஜாளி, ராஜ்கிரணுக்கு தோல்விப்பாதை அமைத்துக் கொடுத்த மாணிக்கம் , விஜய்,அஜீத் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே , பிரசாந்த், அஜீத் இணைந்து நடித்து பூஜாபட் தமிழில் அறிமுகமான கல்லூரி வாசல், லிசா ரே தமிழில் அறிமுகமான் நேதாஜி என பல தோல்விப்படங்களும் இந்த ஆண்டில் உண்டு.

விஜயகாந்தை அலெக்சாண்டரும், சரத்குமாரை மகாபிரபுவும் காப்பாற்றினார்கள்.

விஜய்க்கு செல்வா, மாண்புமிகு மாணவன், ராஜாவின் பார்வையிலே மற்றும் வசந்தவாசல் ஆகிய படங்களின் தோல்வியை பூவே உனக்காக சரிகட்டியது .