என் சிறுவயது கனவு வேலைகளில் ஒன்று – தியேட்டர் ஆப்பரேட்டர் ஆவது. அந்த வேலையைச் செய்பவர்களிடம் எனக்கு ஒரு கவர்ச்சி இருந்தது. பின்னாட்களில் அது மறைந்து போனது. என் நண்பர் ஒருவரின் உதவியுடன் நேற்று ஒரு தியேட்டர் ஆப்பரேட்டரை சந்தித்து உரையாடினேன். தன் பெயர், விபரம் வெளியிடவேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். எனவே உரையாடல் மட்டும்
கே : முன் இருந்த வேலைப்பளு மற்றும் திறன் தேவைக்கும் தற்போது உள்ள நிலைமைக்கும் என்ன வித்தியாசம்?
ப: முன்னர் நிறைய திறமை தேவைப்பட்டது. முக்கால் மணிநேரத்தில் புரஜெக்டர் சூடாகி விடும், கார்பன் ராடுகள் மாற்ற வேண்டும், பிலிம் குவாலிட்டியும் மட்டமாக இருக்கும். அதுபோக சவுண்டு ரீபுரடக்ஷனிலும் அடிக்கடி பிரச்சினை வரும். இப்போது அப்படியில்லை. நல்ல குவாலிட்டி புரஜக்டர்,சவுண்டு சிஸ்டம் இருப்பதால் வேலைப் பளு குறைவு. யாரும் இந்த வேலையை இரண்டு மூன்று நாட்களில் கற்றுக் கொண்டு விடலாம்.
கே : ஆப்பரேட்டர்கள் சில காட்சிகளை வெட்டி விட்டார்கள் என்ற முணுமுணுப்பை பல ஆண்டுகளாக கேட்டு வந்துள்ளேன். ஏன் அப்படி?
ப : பெரும்பாலும் பெரிய நடிகர்கள் படங்களுக்கு அப்படிச் செய்வதில்லை. சில படங்களில் தேவையில்லாத பாடல்காட்சிகள் இருக்கும். அது ரசிப்புக்கு உரியதாகவும் இல்லாத நிலையில் வெட்டி விடுவோம். படம் நீளமாக இருந்தால் நான்கு காட்சிகளிலேயே தேவையில்லாத காட்சிகளை கணித்து வெட்டி விடுவோம்.
கே : அதை எப்படி முடிவு செய்வீர்கள்?
ப : தேவையில்லாத பாடல் காட்சி வரும் போது ரசிகர்களிடம் இருந்து ஒருவித அசூசை ஒலி கிளம்பும். கேண்டீனுக்கு சிகரெட் குடிக்க பலர் வெளிவருவார்கள். சக ஆப்பரேட்டர், என் உதவியாளர்கள், தியேட்டர் பணியாளர்கள் போன்றோருடன் ஷோ முடிந்தவுடன் பேசும் போது அது இழுவை, இது இழுவை என்று பேச்சு வரும். அந்த காட்சிகளை வெட்டி விடுவோம். இது பெரும்பாலும் அனுமானத்தில் செய்வதுதான். குறிப்பிட்ட விதிகள் இல்லை.
கே : காட்சி திடீரென தடைப்பட்டாலோ அல்லது மின்சாரம் நின்று போனாலோ ரசிகர்கள் ஆபாசமாக திட்டுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அப்போது உங்கள் மனநிலை?
ப : ஆரம்பத்தில் கோபம் வரும். நான் பதிலுக்கு திட்டிக்கொண்டே இருப்பேன். நாளாக நாளாக அது எரிச்சலோடு நின்று போனது. இப்போது அதுமாதிரி நடைபெறுவது அரிதாகவே இருக்கிறது. முன்னர் கார்பன் ராடு தீர்ந்து போனால் காட்சி மங்கலாகும், சில சமயம் பிலிம் ரோல் அந்து விடும், ஓவர்லேப் ஆகும், வசனம் கட்டாகிவிடும். இந்த சூழ்நிலைகளில் சத்தம் அதிகமாக இருக்கும். இன்றைய சூழல் அப்படியில்லை. பத்தாண்டுகளுக்கு முன்னால் வரையில் மின்சாரம் தடைப்பட்டால் டீசல் ஜெனெரேட்டரை இயக்கி படம் ஓட்ட வேண்டிய சூழல் இருந்தது. அதற்கு குறிப்பிட்ட நேரமாகும். தற்போது தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் ஒரு சுவிட்சிலேயே மாற்றிவிடுகிறோம்.
கே : உங்கள் வருமானம் எப்படி?
ப : சம்பளம் என்று பெரியதாக வராது. தியேட்டருக்கு உள்ளே சிறு கடைகள் வைத்துக் கொள்ள முன்னர் முதலாளிகள் அனுமதித்தார்கள். எனவே சிகரெட், முறுக்கு,கடலை மிட்டாய் குளிர்பானங்கள் கொண்ட கடை ஒன்றையும் நடத்தினேன். இப்போது மொத்த குத்தகையாக கடைகளை விட்டு விடுகிறார்கள். ஸ்லைடு மற்றும் விளம்பரப்படம் போடும் கம்பெனியினர் அவ்வப்போது கவனிப்பதுண்டு. இழுத்துப் பிடித்து ஓட்டும் நிலைமைதான்.
கே : ரசிகர்களின் மனோபாவம் எப்படியிருக்கிறது?
ப : முன்னெல்லாம் 2.30 மணி ஷோ என்றால் 1.30 மணிக்கே மக்கள் வந்துவிடுவார்கள். 2.00 மணிக்கு கவுண்டர் திறந்துவிடும்போது 75 சதவிகித கூட்டம் கூடியிருக்கும். இப்போது 2.15 மணி அளவில் கூட 10, 15 பேர்தான் வருகிறார்கள். சரியான நேரத்துக்குத் தான் எல்லோரும் வருகிறார்கள்.
கே : உங்கள் தியேட்டரில் ஆபாச காட்சிகள் பிரத்யேகமாக இணைக்கப்பட்ட திரைப்படம் வெளியிடும் போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?
ப : மனது சங்கடமாகத்தான் இருக்கும். என் மகனின் நண்பர்கள், மற்றும் மகளின் தோழிகள் ஆகியோர் இதைக் கவனித்து ஏதும் அவர்களிடம் கேட்டுவிடுவார்களோ என பயமாக இருக்கும். என்ன செய்வது?.
முன்னர் ஒவ்வொரு தியேட்டரையும் குறிப்பிட்ட வினியோகஸ்தர்கள் பிடித்து வைத்திருப்பார்கள். அந்த தியேட்டருக்கு படம் தரும் வினியோகஸ்தர்கள் வினியோகிக்கும் படங்கள் சரியில்லாமல் போனாலோ அல்லது அவர்கள் நொடித்தாலோ படவரவு நின்றுவிடும். அப்போது பழைய ஹிட் படங்களைப் போட்டு ஒப்பேற்றுவோம். அது சரிவராத பட்சத்தில் காலைக் காட்சியாக அம்மாதிரிப் படங்களை திரையிட ஆரம்பித்து இப்போது எல்லாக் காட்சியும் அம்மாதிரிப் படங்கள் வெளியிடும் அளவுக்கு பல தியேட்டர்கள் மாறிவிட்டன.
இதற்கு தியேட்டர்காரர்களைச் சொல்லியும் குற்றமில்லை.
தியேட்டர் காம்பவுண்ட் வரி, மின்சாரக் கட்டணம், ஆட்கள் சம்பளம், பராமரிப்பு என அவர்களுக்கும் நிறைய செலவு இருக்கிறதே?.
இப்போது இங்கே மூன்று தியேட்டர்கள் இருக்கின்றன. ஒன்றை சன் பிக்சர்ஸ் மற்றும் முண்ணனி நிறுவனங்கள் பிடித்து வைத்துள்ளன. எங்கள் தியேட்டரை பழைய வினியோகஸ்தர்கள் மற்றும் தற்போது ஓரளவு நல்ல படம் கொடுக்கும் சிலர் பிடித்து வைத்துள்ளார்கள். இன்னொன்றுக்கு யாரும் படம் தருவதில்லை. ஏனென்றால் தரம் குறைந்த வசதிகள். அவர்கள் இப்போது வேறு வழியில்லாமல் அந்தப் படங்களைப் போட வேண்டிய நிலை.
கே : உங்கள் பார்வையில் எந்தப் படத்துக்கு அதிக கூட்டம் வந்துள்ளது?
இந்த 25 வருடங்களை எடுத்துக் கொண்டால் ரஜினி,கமல் படங்களுக்கு நல்ல கூட்டம் வரும். இதில் ரஜினிக்குத்தான் அதிகம். அடுத்த தலைமுறையில் விஜய்,அஜீத்துக்கு கூட்டம் முதல் இரண்டுநாள் வருகிறது. பின் படத்தைப் பொறுத்தே கூட்டம். சூர்யா, விக்ரம் படத்துக்கும் முதல் நாள் கூட்டம் வருகிறது. படம் நல்லாயிருக்குன்னு கேள்விப்பட்டு கூட்டம் கூடின படம் நிறைய இருக்கு.
கே : எந்திரன் வரை வந்துள்ள ரஜினி படங்களில் எந்தப் படத்துக்கு கூட்டம் அதிகம் வந்ததுன்னு நினைக்கிறீங்க?
ப : அண்ணாமலை, பாட்ஷா மற்றும் படையப்பாவுக்குத்தான் அதிக கூட்டம். குறிப்பாச் சொல்லணும்னா படையப்பா படம். 25 நாள் ஓடியும் எந்த ஷோவுக்கும் கூட்டம் குறையவில்லை.
கே : எந்திரன் அதிக தியேட்டர் ரிலீஸ், மற்றும் அதிக கட்டணம் அதனால் கூட்டம் தெரியாம இருக்கலாம் இல்லையா?
ப : இங்கே, இரண்டு தியேட்டரில் வெளியிட்டுள்ளார்கள். இரண்டு தியேட்டர் சேர்த்தும் எப்பவும் வருகிற கூட்டம் தான். இந்த கூட்டத்தைக் கணக்கிட்டாலும் படையப்பாவுக்கு வந்தது நல்ல கூட்டம்.
கே : இந்த தொழிலில் எதிர்காலம் எப்படி இருக்கும்னு கணிக்கிறீர்கள்?
ப : தியேட்டர் வசதியாக இருந்தால்தான் மக்கள் படம் பார்க்க வருவார்கள். பெரிய கம்பெனிகளும் படம் கொடுக்கும். வசதிப்படுத்த முடியவில்லை என்றால் இடிப்பதே நல்லது.
உரையாடி முடித்தவுடன் அருகில் இருந்த கடையில் தேனீர் அருந்திவிட்டு விடைபெற்றேன்.
சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நண்பர் செந்தில் வேலுக்கு இங்கும் நன்றியைப் பதிவு செய்துகொள்கிறேன்.
21 comments:
சொல்லியிருக்குற பதிலை வச்சே, நீங்க மூனு தியேட்டர்ல எந்த தியேட்டர் ஆபரேட்டர்க்கிட்ட பேசுனீங்கன்னு கணிக்க முடியுது.
:-)
ராஜு, ஊர்க்காரர். வெளிய சொல்லிடாதீங்க.
மற்றுமொரு உருப்படியான பதிவு பாஸ்... நன்றி...
நன்றி சுகுமார்.
That was a good interview
:) :)
டாக்டர். முதல்வன் ரகுவரன் ஸ்டைல்ல அடிக்கிறீங்களே?
நேர்மையான பதில்கள்... Operator Training Course என்ற ஒன்று அடையாறு திரைப்பட கல்லூரியில் எங்கள் காலத்தில் இருந்தது.....இப்போதும் இருக்கிறதா?
நேர்மையான பதில்கள்... Operator Training Course என்ற ஒன்று அடையாறு திரைப்பட கல்லூரியில் எங்கள் காலத்தில் இருந்தது.....இப்போதும் இருக்கிறதா?
நன்றி குட்டிமானு. அந்தக் கோர்ஸ் பற்றிய விபரம் தெரியவில்லை.
எங்கள் வீட்டருகே ஒரு திரையரங்கம் உள்ளது. அதன் திரைப்பட கருவி இயக்குனர்கள் நாளைடைவில் உடல் மெலிந்து எலும்பும் தோலுமாய், பற்கள் துருத்திக் கொண்டு காச நோய்க்காரர்கள் மாதிரியாகிவிடுகிறார்கள். அவர்களுக்கு ரகசிய வியாதி எதுவும் கிடையாது, இருப்பினும் இந்தக் கருவியின் வெப்பமோ அல்லது சம்பந்தப் பட்ட வேறு காரணங்களாலோ இவர்களுக்கு இது நேர்கிறது. இது கொடுமையான தொழில், தயவு செய்து யாரும் இந்தத் தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
பதிவு நன்றாக இருக்கிறது.
இதுதான்யா... பேட்டி.. வாழ்த்துக்கள் :)
அருமை, புதுமையான பேட்டி
உங்களுக்கு மட்டுமில்லை முரளிகண்ணன். எனக்கும் தியேட்டர் ஆப்பரேட்டர்களும், மைக்செட் ஆப்பரேட்டர்களும் ஆதர்ச நாயகர்களாக இருந்தார்கள். எனது உறவினர் ஒருவரின் திரையரங்கில் பலமுறை ஆப்பரேட்டர் அறையில் அமர்ந்து படம் பார்த்துள்ளேன்.
இன்றைய தொழில்நுட்பத்தில் ஆப்பரேட்டர்களுக்கே அவசியமில்லாத நிலையும் உருவாகி உள்ளது. உதாரணம்: சத்யம் எஸ்கேப் திரையரங்கங்கள்.
நல்ல பதில்கள்
எப்பிடியாவது ஒப்பேத்தனும்லா, ஒப்பேத்துங்க ஒப்பேத்துங்க.
டிஸ்கி : இப்போல்லாம் தியேட்டர் முதலாளிகளே ஆபரேட்டர் வேலை செய்வதாக
கேள்விபட்டேன்!!!
நல்ல கேள்விகள், இயல்பான பதில்கள்.
நல்ல யோசனை முரளி.. நன்றாகவே எக்ஸிக்யூட் ஆகியுள்ளது...
இதுபோல பிரபலங்களின் பேட்டியை அடிக்கடி வெளியிடுங்களேன்..
எனது சின்ன ஐடியா-
1) லேடீஸ் ஹாஸ்டல் செக்யூரிட்டி
2) காலேஜில் அட்டெண்டன்ஸ் எடுத்து வைக்கும் கடைநிலை ஊழியன்
3) பெட்டிக் கடைக்காரர்
4) டாஸ்மாக்கில் வேலை செய்யும் குடிப்பழக்கமில்லாத சர்வர்
Good Post & their life seems to be miserable
தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழா 2010 - ஒரு நேரடி ரிப்போர்ட்
Nice post..
Post a Comment