December 25, 2011

கார்ல் மார்க்ஸ் வளர்த்த பசுமாடு

நண்பனொருவனின் காலம் கடந்த திருமணத்தின் போது நடந்த மது விருந்தில் பொது நண்பன் மூலம் அறிமுகமாகி, பழைய புத்தகக்கடை வைத்திருந்த காரணத்தினால் நெருக்கமானவர் கார்ல்மார்க்ஸ் (எ) சிவசுப்ரமணியன். அவர் தந்தை சித்த வைத்தியர். உடனே அவரை அகத்தியர், போகர் ரேஞ்சுக்கு கற்பனை செய்து விடாதீர்கள். ஒரு சித்த வைத்தியசாலையில் உதவியாளராய் இருந்து காய்ச்சல்,தலைவலி மற்றும் வயிற்றுவலி போன்ற எவர்கிரீன் நோய்களுக்கான சூரண பார்முலாவை கற்றுக் கொண்டு தனியே கடை போட்டவர். இலவச இணைப்பாக ஓம வாட்டர் செய்யும் பார்முலாவையும் லவட்டிக் கொண்டு இருந்தவர்.

அந்த பார்முலாதான் இப்போதும் கார்ல் மார்க்ஸின் மூலதனமாக இருந்து வருகிறது. சுற்று வட்டார குழந்தைகள், பாஸ்ட் புட் கஸ்டமர்கள், கோபமுற்ற மனைவிகளின் கணவர்கள் ஆகியோருக்கு வரும் அஜீரணக் கோளாறுகளை கார்ல் மார்க்ஸ் ஓம வாட்டர் தான் குணப்படுத்தி வருகிறது. ஓமத்தை இடித்து சில பல பொருட்களை சேர்த்து (ஆமா பெரிய கிரையோஜெனிக் பார்முலா என்று கிண்டலடிப்பார் ஏங்கெல்ஸ்) சுடுதண்ணியில் கலக்கி, டாஸ்மாக்கில் இருந்து பெறப்பட்ட பீர் பாட்டில்களில் அடைத்து கார்ல் மார்க்ஸ் ஓம வாட்டர் என்ற லேபிளை ஒட்டிவிட்டால் தோழர் ஒரு வாரம் இயக்கப் பணிக்கு வந்து விடுவார்.

இடை இடையே மாக்ஸிம் கார்க்கி பழைய புத்தகக் கடையில் உட்கார்ந்து கணக்கு வழக்குப் பார்ப்பார். அந்த நேரத்தில் அவர் நண்பர்கள் லெனின், ஸ்டாலின், ரணதிவே மற்றும் ஜோதிபாசு ஆகியோரில் யாராவது அங்கிருப்பார்கள்.

இவர்கள் அனைவரின் பெயர் மாற்றத்திற்கும் காரணம் 15 ஆண்டுகளுக்கு முன் அத்தெருவிற்கு குடிவந்த காம்ரேட் ஒருவர்தான். அனைவரையும் மூளைச்சலவை செய்து இயக்கத்தில் சேர வைக்குமளவுக்கு அவரிடம் பேச்சுத்திறமை இல்லை. ஆனால் பெண்கள் இருவர் இருந்தார்கள். ரஜினி நல்ல கலருல்ல என்று ஆதங்கப்படும் படி ஆத்மாக்கள் இருக்கும் ஏரியா அது. அங்கே கும்மிருட்டில் கூட முகம் தெரியும் கலரில் இரண்டு வயசுப் பெண்கள் எண்ட்ரி கொடுத்தால் எப்படி இருக்கும்? மார்பிள் போல இருக்கும் இட்லியில் உப்பு அதிகமான சாம்பாரை ஊற்றி சாப்பிடும் போது கூட அந்தப் பெண்களின் முகம் ஞாபகம் வந்துவிட்டால் ம்ம் டிவைனாக மாற்றிவிடும் அளவுக்கு லட்சணமான பெண்கள்.

இதனால் சங்கரய்யா, நல்லகண்ணுவைக் கூட யாரென்று தெரியாத அந்த ஏரியா வயசுப் பையன்கள் அனைவரும் கம்யூனிசத்தை தழுவலானார்கள். ஞானஸ்னானம் செய்யும் போது பெயர்களை மாற்றுவது போல தங்கள் பெயர்களையும் மாற்றிக் கொண்டார்கள். கவனமாக ராகுல சாங்கிருத்தயன் என்னும் பெயரை மட்டும் தவிர்த்து விட்டார்கள். ஏனென்றால் அது மச்சினன் பெயர். ஆனால் பரிதாபமாக ஒன்றிரண்டு வருடங்களில்அவர்கள் வீடு மாறிப் போய்விட அம்மை போனாலும் தழும்பு நிரந்தரம் என்னும் கதையாக பெயரும், கம்யூனிஸ ஆதரவும் மட்டும் இவர்களிடம் தங்கிவிட்டது.

சில மாதங்களுக்கு முன் ஒருநாள் கார்ல்மார்க்ஸ் என்னிடம் வந்து, ஒரு பசுமாடு வளர்க்கணும் தோழர், உங்களுக்குத்தான் கிராமத்துல நிறைய சொந்தக்காரங்க இருக்காங்களே, ஏதாச்சும் ஒண்ணை அமைச்சு விடுங்க என்று கேட்டுக் கொண்டார். காரணம் கேட்ட போது, சில நாட்களுக்கு முன் எம்ஜியார் பாட்டைக் கேட்டதாகவும், அதில் இருந்த

“தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு, சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு”

என்ற வரிகள் கவர்ந்து விட்டதாகவும் கூறினார். மேலும் அது லட்சுமி என்றெல்லாம் ஓவராக பீல் பண்ணினார்.

உழைப்புக்கு உருவகமான காளை மாடுதானே கம்யூனிசத்திற்கு அடையாளம். பசுமாடு பூர்ஷ்வா இன குறியீடாயிற்றே என்ற சிந்தனை எனக்கு வந்தாலும், இவர் என்ன பிரசங்கம் கேட்டா கம்யூனிஸ்ட் ஆனவர், பிகருக்காக ஆனவர் தானே என சமாதானப் படுத்திக் கொண்டேன்.

பசுவுக்காக அலையும் போதுதான் இத்தனை ரகங்கள், சூட்சுமங்கள் இருக்கிறது என்பதே தெரியவந்ததே. சாதாரண மாடே 100 சிசி பைக்கை விட அதிக விலை விற்கிறது. அதில் கூட இனிசியல் போதும். இதில் சிங்கிள் பேமண்ட். ஈனப் போகும் மாட்டுக்கு தனி விலை. ஆர்வமாய்த்தான் இருந்தது. தோழர் கூட கேட்டார். நீங்க கூட ஒண்ணு வாங்கலாமே என்று.

மார்க்ஸுக்கு சொந்த வீடு. மாடு கட்ட சிறிது இடமும் இருந்தது. நான் இருப்பதோ வாடகை வீடு. முதல் மாடி. மகன் ஓடினாலே கீழே இருந்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவார்கள். ஆசை இருக்கு மாடு வளர்க்க, அதிர்ஷ்டமிருக்கு ஸ்கிரீன் சேவராக்க.

ஒரு வழியாக நாப்பத்தஞ்சாயிரத்துக்கு படிந்தது. வண்டி வாடகை, தரகு கூலி என அரை லானா ஆகிவிட்டது. பிருந்தா காரட் என்ற பெயரை எங்கள் குழு அதற்கு பரிந்துரைத்தது.

இப்போதெல்லாம் தோழரை புத்தகக் கடையிலோ, பொதுக்கூட்டங்களிலோ காண முடிவதில்லை. மாட்டுடன் ஐக்கியமாகிவிட்டார. கன்றும் ஈந்தது அது. நீண்ட நாட்களுக்குப் பின் தோழர் சீம்பாலில் செய்த இனிப்புடன் எங்களை எதிர்கொண்டார்.

எதற்கு இந்த அவதாரம் என ஏங்கெல்ஸ் நேரடியாகவே கேட்டார். ”ஒரு கம்யூனிஸ்ட்டாக உழைப்பின் அருமையை, விவசாயிகளின் கஷ்டத்தை அறிய” என மேடைப் பேச்சுக்காக தயாரித்திருந்த உரையில் சில பகுதிகளை எங்களிடம் அவிழ்த்து விட்டார்.

”யாரையும் சந்தேகி” என எங்கள் பேராசான் எங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் என்றோம். தோழர் பிடி கொடுக்கவில்லை.

பின்னர்தான் தெரியவந்தது. தோழரின் எட்டாவது படிக்கும் பெண்ணுக்கு எஸ் எம் எஸ் வந்து கொண்டிருக்கும் சங்கதி. வீட்ல மாடு கண்ணுன்னு இருந்தா வீடு நச நசன்னு இருக்கும், வீட்டு பொம்பளைகளுக்கு அதை ஒதுங்க வைக்கவே நேரம் இருக்காது, வேளை அதிகமா இருக்கும் போது அலங்காரம் பண்ணத் தோணாது, என்ற யோசனையில் தான் தோழர் பசு வாங்கியிருக்கிறார்.

அடுத்த வீட்டுப் பிகருக்காக கம்யூனிஸ்ட் ஆகிறவன் தன் பெண்ணுக்காக தாலிபான் ஆவது நமக்குப் புதுசா என்ன?

10 comments:

வெண்பூ said...

//
இவர் என்ன பிரசங்கம் கேட்டா கம்யூனிஸ்ட் ஆனவர், பிகருக்காக ஆனவர் தானே என சமாதானப் படுத்திக் கொண்டேன்.
//

செம.... :)))

kanagu said...

அருமையான புனைவு அண்ணா.. :)

/*அடுத்த வீட்டுப் பிகருக்காக கம்யூனிஸ்ட் ஆகிறவன் தன் பெண்ணுக்காக தாலிபான் ஆவது நமக்குப் புதுசா என்ன?*/

/*ரஜினி நல்ல கலருல்ல என்று ஆதங்கப்படும் படி ஆத்மாக்கள் இருக்கும் ஏரியா அது*/


இன்னும் பல இடங்களில் வரிகள் அருமை..

முரளிகண்ணன் said...

நன்றி வெண்பூ

நன்றி கனகு

Ŝ₤Ω..™ said...

கலக்கல்ண்ணா..
"ரஜினி சிவப்பு" சூப்பர் உவமை..

முரளிகண்ணன் said...

நன்றி சென்

என்றும் இனியவன் said...

பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க

Gokul said...

மார்பிள் இட்லி.... சூப்பர்

-கோகுல்

K.R.அதியமான் said...

//இதனால் சங்கரய்யா, நல்லகண்ணுவைக் கூட யாரென்று தெரியாத அந்த ஏரியா வயசுப் பையன்கள் அனைவரும் கம்யூனிசத்தை தழுவலானார்கள். //

:))))

உங்க நகைசுவை உணர்வு அபாரம்.
மற்றபடி, நலமா ? பார்த்து வருசமாச்சு. புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே.

முரளிகண்ணன் said...

Thanks Gokul

Thanks Athiyaman

Unknown said...

அடுத்த வீட்டுப் பிகருக்காக கம்யூனிஸ்ட் ஆகிறவன் தன் பெண்ணுக்காக தாலிபான் ஆவது நமக்குப் புதுசா என்ன?

=

fantastic :D