February 22, 2012

செந்தில் அண்ணன்

செந்தில் வருவாப்புல, ஸ்கோடா அம்பத்திரெண்டு நாப்பது எடுத்துக்குங்க. மீனாட்சியம்மன் கோயில் போயிட்டு நீங்க இறங்கிக்கங்க. கெஸ்டு அப்படியே கொடைக்கானல் போறேன்னாரு. மூணு நாள் ஸ்டே. என்றபடியே ஐந்தாயிரததை திணித்தார் மானேஜர்.

செந்திலா? என்று ஒரு கணம் தயங்கினேன். பின்னர் வேறுவழி எதுவும் இல்லாததால் தலையசைத்து பணத்தை வாங்கிக் கொண்டேன்.

தயங்க காரணம் இருந்தது. அது செந்தில் அண்ணன் பற்றி மற்ற ட்ரைவர்கள் ஏற்படுத்திருந்த பிம்பம். லேசா அவரப் பார்த்து சிரிச்சீங்க, அடுத்த நாளே மகனுக்கு உடம்பு சரியில்ல, எக்ஸாம் பீஸ் கட்டலைன்னு நூறு, இருநூறு ரூபாயாவது அடைப்பை போட்டிருவார் என்று அவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள்.

நாங்கள் பணிபுரிவது மதுரையில் சுவிட்ச் கியர் தயாரிக்கும் ஒரு கம்பெனியில். தயாரிப்பு என்று சொல்லக்கூடாது. கோவையில் சில சிறு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருளை வாங்கி, ஸ்டிக்கர் ஒட்டி, எங்கள் எம்பளம் போட்ட அட்டைப் பெட்டியில் அடைத்து விற்பதே எங்கள் பணி.

எங்கள் முதலாளிக்கு அரசியல் மட்டத்தில் பல தொடர்புகள் உண்டு. அதன் மூலம் வட மாநிலங்களில் இருக்கும் அரசு நிறுவனங்களுக்கு சுவிட்ச் கியர் சப்ளை செய்யும் டெண்டரை எடுத்து விடுவார். அந்த நிறுவனங்களின் அதிகாரிகள் அவர்களைச் சார்ந்தோர் வந்தால் மதுரை, ராமேஸ்வரம் என்று புண்ணியதலங்களுக்கு கூட்டிச் செல்வதும், கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று குளிர்விப்பதும் என் பணியில் அடங்கும். மாதம் நான்கைந்து பேராவது வந்துவிடுவார்கள்.

நாளிதழ்களில் வரும் டெண்டர்களை பார்ப்பது, கொட்டேஷன் தயாரிப்பது, ஆர்டர் கிடைத்த பின் அதற்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்வது போன்றவற்றிற்கு 50 வயது கடந்த ஆறேழு பேர் இருக்கிறார்கள். பேக்கேஜிங், டெஸ்பாட்ச்சுக்கு ஒரு ஐந்து பேர், வாகனம் ஓட்ட ஒரு ஐந்து பேர் என மொத்த எண்ணிக்கை 20ல் அடங்கிவிடும்.

எங்கள் மானேஜர் ஒரு வில்லங்கப் பேர்வழி. லோக்கல் வேலையாகப் போவோர் பஸ் ஃபேர் வேண்டும் என்று கேட்டால், என்ன விஸ்பர் வேண்டுமா? என கேட்பார். டெண்டர் செக்சனில் ஒன்றரைக் கண் உடைய ஒருவரை அரை பரமசிவம் என்று குறிப்பிடுவார். கேட்டால் சிவனுக்கு நெற்றிக்கண்ணைச் சேர்த்து மூன்று கண். இவன் ஒன்றரை கண் என்பார்.

ஒருமுறை நான் அவர் சொன்ன வேலையைச் சரியாகச் செய்யாமல் சொதப்பிய போது, அவனுக்கு பத்து காசு கம்மி என்று கமெண்ட் அடித்தார். எனக்குப் புரியாமல் செக்‌ஷனில் கேட்டபோது, உங்களுக்கு 10% சதவிகிதம் நார்மல் அறிவை விட கம்மி என்கிறார் என்றார்கள்.

இதனால் கடுப்பான நான், ஆபிஸ் வேலை இல்லாத நேரங்களில் ட்ரைவர்களுடன் தான் டாப் அடித்துக் கொண்டிருப்பேன். அவர்களும் என்னுடன் மிக இயல்பாகப் பழகிவிட்டார்கள். பாஸு அம்பது ரூபா கொடுங்க, கொத்த அணைச்சுட்டு வர்றோம், பேட்டால கழிச்சுக்குங்க என்று சாப்பிட பணம் வாங்கிப் போவார்கள். அவசர வேலை என்றால், கவலைப்படாதீங்க தொத்தி தொண்ணூறுல போயாவது முடுச்சுடுவோம் என்று நம்பிக்கையூட்டுவார்கள்.

ஆனால் செந்திலுடன் மட்டும் பழக்கம் இல்லை. மேலும் அவர் ஓனரின் ட்ரைவர். பெரும்பாலும் ஓனருக்குத் தான் ஓட்டுவார். அன்று, வழக்கமான ட்ரைவர்கள் விடுப்பில் இருந்ததால் வேறு வழியின்றி செந்திலுடன் போக வேண்டியதாகிவிட்டது.

கெஸ்டுகளுடன் மூவ் பண்ணும் விதம், ஸ்மூத் ட்ரைவிங், நாசூக்கு என பல வழகளில் அவர் என்னை மிகவும் கவர்ந்து விட்டார். தொடர்ந்து முக்கிய கெஸ்டுகள் வரும் போதெல்லாம் அவர் வந்தால் நன்றாக இருக்கும் என்று நானே அவரைக் கேட்டு வாங்கிக் கொண்டேன்.

மீனாட்சி பட்டிணத்தில் இருக்க ஒரு வீடும், அஞ்சாயிரமும் இருந்தா ராசா மாதிரி பொழைக்கலாம் என்று முன்னர் சொல்வார்கள். அதை செயலில் எனக்கு காட்டியவர் செந்திலண்ணன் தான். அனாவசிய செலவுகள் இன்றி, அமைப்பாக குடும்பம் நடத்துவார்.

சர்க்கஸ் போனா, 100 ரூபா டிக்கட் ஆரம்பிக்கிற மொதோ வரிசையும், 200 ரூபா டிக்கட் முடியுற கடைசி வரிசையும் பக்கம் பக்கமா இருக்கும். நம்ம சமார்த்தியம் தான் நாம எவ்வளோ கொடுத்து அங்க உட்காருறோம்ங்கிறத நிர்ணயிக்குது. அதனால யோசிச்சு, புத்திசாலித்தனமா நடந்துக்கிட்டா, மத்தவன் 20 ஆயிரத்துல அனுபவிக்கிற வசதிய நாம 10 ஆயிரத்துலயே அனுபவிக்கலாம் என்பார்.

நல்ல பழக்கம் ஏற்பட்ட பின் ஒரு நாள் அவரிடம் நெடு நாளாய் இருந்த சந்தேகத்தை அவரிடம் கேட்டே விட்டேன். ஏண்ணேன், நீங்க கைமாத்து அடிக்கடி கேட்பீங்கன்னு எல்லாரும் சொல்றாங்களே என்று.

காயம் பட்ட குரலில் ஆரம்பித்து

தம்பி, நான் ஓனருக்கு ஓட்டுறவன். இங்க 20 பேர் இருக்கீங்க. பணம் நிறையா பொழங்கும், வேலையும் சிரமமில்ல. அதனால யாரும் தகிடுதத்தம் பண்ணீரக் கூடாதுன்னு அவர் அடிக்கடி செக் பண்ண வருவார். அது போக அரசியல்ல வேற இருக்கார். வேண்டாதவங்களும் உண்டு. இங்க இருக்குறவங்க அவர் எப்படி?, எப்ப வருவார், எங்க போவார்ன்னு அடிக்கடி கேட்பாங்க. அதைச் சொல்லுறது தர்மமில்ல. கேட்கும் போது சொல்லாட்டியும் தப்பா எடுத்துப்பாங்க. அதுனால அந்த மாதிரி யாரெல்லாம் கேட்பாங்களோ, அவங்க கிட்ட கைமாத்தா அடிக்கடி பணம் கேட்டு நொச்சுவேன். அதுக்குப் பயந்துகிட்டே யாரும் நம்மளை நெருங்குறதில்லே

என்று முடித்தார்.

7 comments:

வரவனையான் said...

:) வாழ்த்துக்கள்

புருனோ Bruno said...

அருமை !!

coolkal said...

அருமை :)

முடிச்சினை கடைசியில் வைத்து, வழியெங்கும் கருத்துக்களைத் தூவி, சற்றே நிதர்சனத்தை வெளிச்சமாக்கிக் காட்டிவிட்டீர்கள்.

முரளிகண்ணன் said...

நன்றி வரவணையான்.

நன்றி புருனோ

நன்றி கோல்கல்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

செம ஆளுதான் செந்தில் அண்ணன்.. இப்படித்தான் இருக்கணும் சூதனமா.. நல்ல கருத்துள்ள கதை.

Murugesh K said...

அருமையான கதை !!!

முரளிகண்ணன் said...

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி முருகேஷ்