February 24, 2012

எம் ஜி யார் திரைப்படங்கள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம்

நான் பிறந்து மூன்று ஆண்டுகள் மட்டுமே எம்ஜியார் திரைப்படங்களில் நடித்தார். ஆனால் அதன்பின் ஓர் பத்து ஆண்டுகளுக்கு அவரது படங்கள் இடைவிடாமல் ரீ ரிலிஸ் ஆகி எங்கள் ஊர் தியேட்டர்களை அலங்கரித்துக் கொண்டுதான் இருந்தன. அப்படி ரீ ரிலீஸ் ஆனவை எல்லாமே மக்களால் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள் தான். அதுபோக அவர் நடித்த பல படங்களை தொலைக்காட்சி வழியாக கண்டுள்ளேன்.

ஒரு படத்தை அது ரிலீஸ் ஆகும் காலகட்டத்தில் மக்களுடன் சேர்ந்து பார்க்கும் போதுதான் அப்படம் ஏற்படுத்தும் உணர்வை நேரடியாக அறியமுடியும். அதன்பின் தொடரும் காலங்களில் அப்படம் அவர்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தையும் உணர முடியும்.

முதலில் பிரபலங்கள் எம் ஜி யார் படங்களால் சமூகத்தில் ஏற்பட்ட தாக்கம் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஓட்டேரி பக்கம் போய் பார்த்தீங்கண்னா, அங்க இப்பவும் தண்டால், பஸ்கி எடுத்துக்கிட்டு ஒரு கூட்டமே இருக்கும். மது அருந்த மாட்டாங்க, சிகரெட் குடிக்க மாட்டாங்க. அவங்க அப்படி செய்யுற இடத்துல ஒரு எம்ஜியார் புகைப்படம் இருக்கும். அப்படி அவங்கள மாத்துனவர் எம்ஜியார்.

இது கமல்ஹாசன் பல வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியில் சொன்னது.

எம்ஜியார் படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னா அந்தப் படத்தோட ஸ்டில்லுகள பார்த்துட்டு, அதே மாதிரி டிரஸ் பண்ணிட்டு போயிருவோம். அப்படி ஒரு தடவை சிந்தாமணி தியேட்டருக்குப் போன போது, எங்களை மாதிரியே நிறையப் பேர் வந்திருந்தாங்க.

இது விஜயகாந்த், ஆனந்த விகடனில் வெளியான அவரைப்பற்றிய தொடரில் சொன்னது.

நான் வித்தியாசமா டிஸைன் செஞ்சு, ஒரு பேண்ட் தைக்கச் சொல்லி போட்டுக்கிட்டேன். எங்கப்பா அதைப் பார்த்து திட்டுனாரு. ஆனா அதுக்கடுத்து வெளியான படத்துல எம்ஜியார் அந்த மாடல் பேண்ட் தான் போட்டிருந்தார். இளைஞர்கள்கிட்ட நல்ல வரவேற்பு. அப்பதான் எனக்குத் தெரிஞ்சது. ஏன் எங்கப்பா ட்ரான்ஸ்போர்ட்ல வேலை பார்க்குறாரு, எம்ஜியார் சூப்பர் ஸ்டாரா இருக்காருன்னு.

பாண்டியராஜன் – தான் தயாரித்த குமுதம் இதழில் எழுதியது.


எம்ஜியார் தனி கதாநாயகனாக நடித்தது 47ல். 53 ஆம் ஆண்டு அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின் 72ல் அங்கிருந்து வெளியேறினார். பின்னர் அதிமுகவைத் தொடங்கி 77 வரை நடித்தார்.

47 முதல் 53 வரை வெளியான படங்களின் வெற்றியும், அப்போதைய அரசியல் சூழ்நிலையும் எம்ஜியார் தனக்கான பாதை எது என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ள உதவியது.

மந்திரி குமாரி, மருத நாட்டு இளவரசி (வசனம் : கருணாநிதி), மர்மயோகி, சர்வாதிகாரி ஆகிய சரித்திர பிண்ணனி உள்ள படங்கள், அதில் எம்ஜியாரின் பாத்திரப் படைப்பு, அவர் பேசிய வசனங்கள் அவருக்கு நல்ல இமேஜைக் கொடுத்திருந்தன.

இப்போது அந்த கால அரசியல் சூழ்நிலையைப் பார்ப்போம். சுதந்திரம் கிடைத்து காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. பெரும்பாலான மாவட்டங்களுக்கு ஜமீன்தார்கள், பண்ணையார்கள், தொழிலதிபர்கள் தான் பிரதிநிதியாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதிகாரம் பரவலாக்கப்படாமல் ஓரிடத்தில் குவிந்திருந்தது.

ஒரு மனிதன் இளைஞனாயிருக்கும் வரை அவனுக்கு அமைப்பை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற எண்ணம் தன்னிச்சையாகவே இருக்கும். திருமணம் முடிந்தோ அல்லது பொறுப்புக்கள் அதிகரிக்கும் போதோ அமைப்புடன் சமரசம் செய்து வாழ்க்கையை ஓட்டிவிட வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கும். அப்போதைய கால கட்டத்தில் வெள்ளையர் ஆட்சி இல்லை. அமைப்பு என்பது நிலப்பிரபுத்துவம் ஆக இருந்தது. அது காங்கிரஸையும் நேரடியாகக் குறித்தது.

பெரியார், 1925ல் இருந்தே காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாடில் இருந்தார். அவர்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களைப் பரப்பி வந்தார். அவரால் கவரப் பட்ட இளைஞர்கள் அந்த அமைப்புக்கு எதிரான மனநிலையில் இருந்து வந்தார்கள்.

1953ல் எம்ஜியார் திமுகவில் இணைந்து பின் 72ல் வெளியேறும் வரை அவர் நடித்த திரைப்படங்களில் எல்லாம் பெரியாருடைய கருத்துகளையும், திமுகவின் கொள்கைகளையும் பிரதிபலித்துக் கொண்டே தான் வந்தார்.

இந்தக் கால கட்டத்தில் அவர் நடித்த அப்போதைய சமூகத்தை பிண்ணனியாகக் கொண்ட படங்களில் எல்லாம், அவர் ஒரு சாதாரண குடும்பப் பிண்ணனி கொண்டவராக இருப்பார். பெருந்தனக்காரர்கள் ஊரை சுரண்டுவார்கள். எதிர்த்துக் கேட்பார். உடனே அவர்கள் சூழ்ச்சி செய்து இவரை சிக்கலில் தள்ளுவார்கள். பின் அதில் இருந்து மீள்வார். ஊர் கொண்டாடும்.

இந்த சிக்கலில் இருந்து மீள அவர் பெரிய வித்தையெல்லாம் செய்ய மாட்டார். தனி மனித ஒழுக்கமுள்ளவராக, பொது வாழ்வில் நேர்மையானவராக இருந்தே அதை சாதிப்பார். முக்கியமாக தன் பாத்திரப் படைப்பில் எந்த ஜாதியின் சாயலும் வராமல் பார்த்துக் கொண்டார்.

பெருந்தனக்காரர்கள் அப்போதைய காங்கிரஸ் முதலாளிகளையும், சாதாரணன் அப்போதைய நடுத்தர, ஏழை இளைஞனையும் பிரதிபலித்தது. அப்போது திமுகவில் இப்படிப்பட்ட இளைஞர்களே இருந்தார்கள். அவர்கள் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ள இது உதவியது.

அதனால் தான் எம்ஜியார் உபயோகப் படுத்தும் உடையை உடுத்தும் (பேகிஸ்) , கடவுள் விஷயத்தில் தான் நேரடியாகப் பங்கு கொள்ளாத மனோபாவம், ஜாதிப் பெயர்களை தன் பெயரில் பின்னால் போட்டுக்கொள்ளாத ஒரு இளைஞர் கூட்டம் உருவாகியது.

இப்படி ஒருவருடன் ஒரு கூட்டமே தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளுமா?

சில ஆண்டுகளுக்கு முன் மெட்டி ஒலி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த நேரம். வேலையின் காரணமாக வெளியூரில் ஒரு வீட்டு மாடியில் வாடகைக்குத் தங்கியிருந்தேன். ஒருநாள் கீழ்வீட்டு அம்மாள் 55 வயது இருக்கும். அழுது கொண்டு இருந்தார். கேட்டதற்கு, சிதம்பரம் இறந்து விட்டார். காயத்ரியின் மாமியார் செய்த கொடுமை அப்படி. எனப் புலம்பினார். இவரே ஒரு மாமியார், ஆனால் தன்னை காயத்ரியாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார். என் மனைவியும், தாயும் கூட தன்னை அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள் என பின்னர் அவர்களிடம் பேசும் போது புரிந்து கொண்டேன். மொத்தத்தில் பெரும்பாலான தமிழக பெண்கள் அனைவருமே அந்த இரண்டாவது பெண் கதாபாத்திரத்தோடுதான் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அந்த சீரியலுக்கு முன் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. பின்னர் ஒன்று இருக்கிறது. மெட்டி ஒலிக்கு இடையேயும் விளம்பரங்கள் வருகின்றன. நல்ல வெளிச்சத்தில் பல இடையூறுகளுடன் பார்க்கிறார்கள். இருந்தும் அந்தப் பிம்பத்தில் இருந்து தங்களைப் பிரித்துக் கொள்ள முடியவில்லை அவர்களால்.

53-72 காலகட்டம். ஆத்மார்த்தமாக, எந்த இடையூறுமின்றி படம் பார்க்கிறார்கள். தங்களை அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள். சில பண்புகளால் கவரப் பட்டு தங்களை மேம்படுத்தவும் அந்தக் கால இளைஞர்கள் முயல்கிறார்கள்.

எம்ஜியாரும் அந்தப் பிம்பம் கலைந்து விடாமல் தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்தே வந்திருக்கிறார். அப்போதைய பிரம்மாண்ட பட நிறுவனங்களான, விஜயா வாகினி (எங்க வீட்டு பிள்ளை) , ஏவிஎம் (அன்பே வா) மற்றும் ஜெமினிக்கு (ஒளி விளக்கு) தலா ஒரு படங்கள் மட்டுமே செய்திருக்கிறார். மார்டன் தியேட்டர்ஸில் அதற்கு முன் இரு படங்களிலும், 53க்கு பின் ஒரே படத்திலும் (அலிபாபாவும் 40 திருடர்களும்) மட்டுமே நடித்திருக்கிறார். இவை எல்லாமே பிளாக் பஸ்டர்ஸ்.

அந்தக் கால கட்டத்தில் பல தயாரிப்பாளர்களை (உதா தேவர் பிலிம்ஸ், சத்யா மூவிஸ் ) எம்ஜியார் உருவாக்கியிருக்கிறார் (அவர் வசதிக்காக என்றே பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்). என்றாலும் தனக்கு மிகப் பெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற முன் வர வில்லை என்பதும் பல சாமானியர்களை தயாரிப்பாளர் ஆக்கியதும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்திருக்கலாம்.

இந்த காலகட்டத்தில் அவர் நடித்த அரசர் கதைகளிலும் கூட சுத்த தமிழ்ப் பெயர்களை தான் தன் பாத்திரத்துக்கு வைத்தார். (நாடோடி மன்னன் : மார்தாண்டன், வீராங்கன், ஆயிரத்தில் ஒருவன் : மணிமாறன்). அவர் மன்னனாக இருந்தால் மக்கள் நலமே சிந்தனையாக இருப்பதாகவே காட்சிகள் இருக்கும். எனவே இளைஞர்கள் இந்தப் படங்களிலும் தங்களை அடையாளப் அடுத்திக் கொள்ள முடிந்தது.


சமூகப் படங்களில் அவர் ஒழுக்கமானவராக தன்னை காட்டியதோடு மட்டுமல்லாமல் தன் உடைகளிலும் எளிமையைக் காட்டினார். சட்டை பேண்ட் அணிந்திருப்பார். வாட்ச் அணிந்திருப்பார். மோதிரம், செயின் ஆகியவை வெளிப்படையாகத் தெரியாது.

இப்போது கூட அறுபது வயதுக்கு மேல் உள்ள பல ஆண்களைப் பாருங்கள். வசதி இருந்தும் வாட்சுடன் நிறுத்திக் கொண்டிருப்பார்கள். நன்கு மீசை வளரும் அளவுக்கு மரபணு இருக்கும். ஆனாலும் அதை உதட்டுக்கு மேல் ஒரு மெல்லிய கோடாக மட்டுமே வைத்திருப்பார்கள். இதற்கு எம்ஜியாரின் மீசைதான் காரணம்.

அப்போது தொலைக்காட்சி இல்லை. மீடியாக்கள் 24 மணி நேரமும் செய்திக்காக அசுரப்பசியோடு இரை தேடி அலையவில்லை. இத்தனை நாளிதழ், பத்திரிக்கைகளும் இல்லை. எனவே அவரின் உண்மையான கேரக்டர் என்பது படத்தில் வந்ததுதான் என்று மக்கள் நம்பவேண்டிய கட்டாயம். இது இளைஞர்களிடம் நல்ல தாக்கத்தையே ஏற்படுத்தியது. ராமனாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் பல இளைஞர்களுக்கு ஏற்பட்டது.

அடுத்ததாகப் பார்க்கப் போனால் அவர் குறிப்பிட்ட தொழில் செய்தவராக நடித்த படங்கள். ரிக்‌ஷாகாரன், படகோட்டி, மாட்டுக்கார வேலன், இவையெல்லாம் அந்தந்த செக்மெண்ட் இளைஞர்களுக்கு ஒரு அந்தரங்க பூரிப்பைக் கொடுத்ததாக சொல்வார்கள். எனக்குத் தெரிந்த வளையல்காரர் ஒருவரின் வீட்டில் பெரிய எம்ஜியார் படமிருக்கும். காரணம் கேட்டதற்கு அவர் சொன்னது “ படகோட்டியில வளையல் காரரா வருவார்”

அது மாறுவேடம். இருந்தும் அவருக்கு ஒரு அகமகிழ்ச்சி.

பொதுவாக எம்ஜியாரின் படங்களில் காவல்துறை அதிகாரி நேர்மையானவராகவே காட்டப்படுவார். அது நம்பியாராக இருந்தாலும் சரி. அசோகனாக இருந்தாலும் சரி. உயர் அதிகாரிகள் நன்மையையே செய்வார்கள். எனவே இவர் படங்களைப் பார்ப்பவர்கள் காவலர்களை மரியாதையுடன்தான் பார்த்தார்கள்.

இவர் கட்டமைத்த எதிரி என்று பார்த்தால் பணக்காரர்களும், தவறான அரசர்களும் தான். இது இயல்பாக திமுகவிற்கு இளைஞர்களை திருப்பிவிட ஏதுவாக இருந்தது.


ஆனால் 72க்குப் பின் நடித்த படங்களில் மறைமுகமாக கருணாநிதி மற்றும் திமுகவுக்கு எதிரான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கும். கவர்ச்சி காட்சிகளும் கூடுதலாக இருக்கும் வகையில் படங்கள் இருந்தன. அவற்றாலும் கவரப்பட்ட ஒரு தலைமுறை உருவானது.

எம்ஜியார் என்ற பிம்பத்தை கட்டமைக்க உதவியதும், அதன்மூலம் அவர் அக்கால இளைஞர்களை நல் வழியில் பாதித்ததும் 53-72ல் வெளியான படங்களின் மூலமே. அது திமுகவிற்கும் பெரும் உதவியாக இருந்தது.

15 comments:

ravikumar said...

Very good Analysis about MGR & Songs were personally taken care by him (Both Lyrics & tunes) which was one of the break point

முரளிகண்ணன் said...

நன்றி ரவிகுமார்

சி.பி.செந்தில்குமார் said...

எங்கப்பா தீவிர எம் ஜி ஆர் ரசிகர் என்பதால் சின்னப்பையன்ல இருந்தே நானும் அப்படி என்னையும் அறியாமல் வள்ர்ந்தேன்.. சண்டைக்காட்சிகளில் கூட சிரித்த முகமாக இருப்பார்..

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி சி பி செந்தில்குமார்

Jai said...

Excellent Information. I too was attracted towards him because of grandfather who used to take me to MGR films. almost seen 90% his movies. even now while driving alone i used hum his few songs

முரளிகண்ணன் said...

நன்றி ஜெய்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பாக்தாத் திருடன் படம் முடியும் காட்சியில் பாக்தாத்தில் மக்களாட்சியை கொண்டுவருவதாகச் சொல்லி படத்தை முடித்திருப்பார். இந்த மாதிரி குட்டிக் கலாட்டாக்கள் திணிப்புகள் எம்ஜியாரால் மட்டுமே செய்ய முடியும்...,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மதுரையில் அப்போலா மருத்துவ மனைக்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு சுவற்றில் திமுக காரர்கள் வரைந்திருந்தும் சுவர் விளம்பரத்தில் கருப்பு சிவப்பில் நாளை நமதே ஒளிர்கிறது. அந்த திமுக நண்பர்கள் நாளை நமதே படத்தையும் குறிப்பாக அந்த மிக நீண்ட கிளைமாக்ஸ் வசனத்தையும் கேட்டால் என்ன செய்து கொள்வார் என்று தெரியவில்லை...,

புருனோ Bruno said...

அருமையான அலசல்

--

மெட்டி ஓலி விஷயம் எனக்கு புதிய கோணத்தை தந்துள்ளது

!

--

எம்.ஜி.ஆர் திரையில் நடிக்கும் போது தமிழர்களுக்கு ஒழுக்கத்தை கொடுத்தார்
ஆட்சி புரியும் போது உணவும், கல்வியும் தந்தார்

--

தமிழகத்தில் மாவோயியிஸ்ட்கள் வராமல் தடுத்ததில் மிகப்பெரிய பங்கு அவருடையது

முரளிகண்ணன் said...

நன்றி சுரேஷ்

நன்றி டாக்டர்

Gokul said...

எம்.ஜி.ஆர் பற்றி நான் எழுதியவை..
http://kulambiyagam.blogspot.in/2008/12/1.html

http://kulambiyagam.blogspot.in/2009/01/2.html

எம் ஜி ஆரை பற்றி எழுதும்போது 1972 வரை நிறுத்தியதற்கு ஒரு சபாஷ்! மேலும் இங்கே நினைத்து பார்க்கும்போது , தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றே மையம் கொண்ட ஒரு சமூக காலகட்டத்தில் தன்னை ஒரு வேற்று மொழி பேசும் ஒரு நபராக எளிதாக அடையாளம் காணப்படலாம் அவரது எச்சரிக்கை உணர்வு மெலிதாக அடியில் இருக்கும்..

1972 பிறகு அவரது படங்களில் இருப்பவை ..தனது வயதான தோற்றம் + அதிமுகவின் பிரச்சார படங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற மிகுந்த யோசனையே=> அவரின் 'கதாநாயகி கவர்ச்சி'+'இனிய பாடல்கள்' + 'ஒளிப்பதிவு' இதனை காட்டும்.

Gokul said...

-

முரளிகண்ணன் said...

நன்றி கோகுல்

Raj said...

Thanks for writing about thalaivar

Raj said...

Thanks for writing about thalaivar