July 14, 2009

நாகராஜன் சந்து

எங்கள் ஊர்ப்பகுதிகளில் ஒரு வழக்கம் இருந்து வருகிறது. வேறொன்றுமில்லை.ஊரின் பெயரைச் சுருக்கி வாடகை சைக்கிள் செயின் கார்ட்,கடை விளம்பரப் பலகை மற்றும் திருவிழா போஸ்டர்களில் எழுதுவது. வத்தலக்குண்டு என்னும் பெயரை வதிலை என்றும், கெங்குவார்பட்டியை கெங்கை, தும்மலப் பட்டியை துமிலை என்றும் சுருக்குவார்கள். அதில் தப்பொன்றும் இல்லை. சுருக்கத்துக்குப் பின்னால் மாநகர் என்னும் அடை மொழியைச் சேர்ப்பார்கள். அதைப் பார்க்கும் போதுதான் வயிறெறியும். 200 வீடுகள் இருக்கும் தும்மலப்பட்டியை துமிலை மாநகர் என்று சொன்னால் வேறு எப்படி இருக்கும்?

அப்படியொரு பெயரைப் பெற்ற வதிலை மாநகரில் எதற்கு குறைவிருக்கிறதோ இல்லையோ ருசியான சாப்பாட்டுக்கு மட்டும் குறைவிருக்காது. ஆறு, ஏரி ஏன் கடலே வத்தினாலும் வத்தாதது வதிலை மாநகர மாந்தரின் வயிறு.

காலை ஐந்துமணிக்கு குழந்தைகளுக்காக ஆரம்பிக்கும் பனியார,ஆப்பக்கடைகள் ஏழு மணியளவில் இட்லி தோசைக் கடையாக பரிணாம வளர்ச்சி அடையும். காலை பத்துமணிக்கு அங்கே இனிப்பு சிய்யம்,வெங்காய போண்டா போட ஆரம்பிப்பார்கள். 12 மணியளவில் மசால் வடையும், உளுந்த வடையும்.

ரன் ரேட் எப்படியிருந்தாலும் நாலைந்து ஓவரில் மேக்கப் செய்துவிடும் அதிரடி பேட்ஸ்மெனைப் போன்றவை இந்த வடைகள். ஆம் எவ்வளவு மட்டமான சாம்பார்,ரசத்தையும் ருசியாக்கி விடும் வல்லமை இவைகளுக்கு உண்டு. மாலை மூன்று மணிக்கு அவல் கேசரியும், தவளை வடையும் தங்கள் இன்னிங்சை ஆரம்பிக்கும்.

நடைபாதைக் கடைகளே இப்படியென்றால் நளனே வந்து ரெசிப்பி கேட்கும்படி சுவையாக இருக்கும் வதிலை மாநகர ஹோட்டல் அயிட்டங்கள். கறி வாங்கி சமைப்பது அவர்களுக்கு ஆகாது. தங்கள் டேஸ்டுக்கேற்ப ஆடுகளை வளர்த்து வெட்டிச் சமைப்பார்கள் அங்கே. ஒருவர் அகத்திக்கீரையை மட்டுமே போட்டு ஆட்டை வளர்ப்பார். இன்னொருத்தவர் ஆட்டுத்தீவனமே வீட்டில் தயார் செய்வார்.

காலை ஐந்து மணிக்கு ஆட்டை வெட்டியதும் ஸ்பெசலாக ரத்தப் பொறியலும், வெங்காய குடல் கறியும் தயாராகும். அதை வாங்க வரிசையில் நிற்பவர்கள் வீட்டிற்கு பெரும்பாலும் மாப்பிள்ளை வந்திருப்பார். இரவு ஏழு மணிக்கு தயாராகும் புரோட்டாக்கள். விண்டவர் கண்டிலர் என்னும் கம்பராமாயணப் பாட்டிற்கு அர்த்தம் வேண்டுபவர்கள் சாப்பிடுவோரின் இலைகளைப் பார்க்கலாம். இந்தக் கடைகளில் மாவு இரவு மூன்று மணி வரை இருக்கும்.

இரவு மூன்று மணிக்கும் காலை ஐந்து மணிக்கும் இடையே  பசியெடுத்தால் என்ன செய்வது? இருக்கவே இருக்கின்றன. காளியம்மன் கோயில் பகுதி டீக்கடைகள். பால் பன்,அச்சு பன்,தேங்காய் பன்னில் இருந்து செவ்வாழை,பச்சை,புள்ளி,கற்பூர,நாட்டு வாழை வரை சூடான டீயுடன் கிடைக்கும்.

இவ்வளவு சாப்பாட்டுக் கடைகள் இருக்கும் ஊரில் ஒரு டாய்லெட் கூட இல்லை என்றால் எப்படியிருக்கும்? ஆம். அதிர்ஷ்டவசமாக பெண்களுக்கு மட்டும் சில பொதுக்கழிவறைகள் இருந்தன. பாதாள சாக்கடைத் திட்டம் போன்ற எதுவுமில்லாத ஊரில் ஆண்கள் எங்கே தங்கள் கடன்களை கழிப்பது?

மூன்று வயதுவரை அந்த வைபவம் வீட்டிலேயே நடந்துவிடும். பக்குவமாக பார்சல் செய்யப்பட்டு வீதியில் டிஸ்போஸ் செய்யப்படும். அதனால் நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையும் அங்கே வேலைக்காகாது. மூன்று வயதுக்கு மேல் தெரு ஓரத்தில் குப்பைத் தொட்டிக்கு அருகில் அந்த சடங்கு நிறைவேற்றப்படும். அந்தப் பையனுக்கு வெட்கம் வரும் வரையிலோ அல்லது பார்ப்பவர்களுக்கு எரிச்சல் வரும் வரையிலோ அந்த இடம்தான்.

அடுத்தகட்ட பிர மோசன் நாகராஜன் சந்து என ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட நரகல் சந்து. நூறு நூற்றி இருபது மீட்டர் நீளத்தில் வளைந்து நெளிந்து இருக்கும் அந்த சந்தில் காலைக் கடன்களை கழிக்க பஞ்சாயத்து அனுமதி இருந்தது. நாம் போகும்போது யாராவது உட்கார்ந்திருந்தால் அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்து விடக்கூடாது. எவ்வளவு தூரம் தள்ளிப் போக முடியுமோ அவ்வளவு தூரம் தள்ளிப் போய்விட வேண்டும். அடுத்து வருபவன் இருவருக்கும் இடைப்பட்ட இடத்தில் உட்கார வேண்டும். இது அங்கே
உள்ள ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்.

பின் சுத்தம் செய்வதற்கு சந்தின் கடைசியில் இருக்கும் மழை நீர் தேங்கும் பள்ளத்துக்கு செல்ல வேண்டும். அங்கே தேங்காய் மூடி, பாதி உடைந்த பிளாஸ்டிக் மக், ஓட்டையிருக்கும் தகர ஆயில் டின் ஆகியவை இருக்கும். அவற்றில் நீர் வாரி வேலையை முடித்துக் கொள்ள வேண்டும். நேரடியாக பள்ளத்தில் இறங்கி விடக்கூடாது என்பது அக்ரிமெண்டின் உப சரத்து.

இதற்கடுத்த புர மோசனும் உண்டு. மூன்று கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் சுடுகாடு. பத்துவயதில் என்னுடைய கனவே, சைக்கிள் எடுத்துச் சென்று சுடுகாட்டில் காலைக் கடன் முடிக்க வேண்டும் என்பதே. கழுவுவதற்கு வசதியாக பம்ப்செட் தண்ணீர் அங்கே இருப்பது கூடுதல் வசதி.அந்தக் கனவு கைகூடும் முன்னரே நாங்கள் வேறு ஊருக்கு இடம்பெயர நேரிட்டது.

அங்கே துயரத்தின் உச்சமாக வீடுகள் எடுப்பு கக்கூஸுடன் இருந்தன. அதனாலேயே அந்த வீடு எனக்கு அன்னியமாகவே இருந்தது. இரண்டு மூன்று நாட்களில் நண்பர்கள் கிடைக்க, அந்த ஊர் நாகராஜன் சந்து அறிமுகமானது. அன்னியமான கூட்டுக்குடும்ப வீட்டில் கட்டிக்கொடுக்கப் பட்ட பெண், அங்கே வளைய வர எவ்வளவு கூச்சப்படுவாளோ, அதற்கு நிகரானது இந்த மாதிரி புது இடங்களில் புழங்குவதும். நான்கு நாட்களில் அந்த சந்திற்கான ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட் பிடிபட்டுவிட ரிலாக்ஸானது காலைகள்.

பதினெட்டு வயதில் இந்தப் பிரச்சினை ஓய்ந்தது. கல்லூரி விடுதிக் கழிவறைகள் ஓரளவு வசதியாகவே இருந்தன. அந்தக் கதவில் கிறுக்கப்படும் கிசுகிசுக்கள், ஒன்லைனர்கள் கூடுதல் சுவராசியம்.

மூன்று ஆண்டுதான் நீடித்தது அந்த சுகம். பின் வேலைக்காக சென்னை மேன்ஷன். அப்பா எவ்வளவு சொல்லியும் ஐந்து மணிக்கு எந்திரிக்காத என்னை திருத்தியவை மேன்சன் கழிவறைகளே. பந்திக்கு கூட முந்தக்கூடாது, இதற்கு முந்துவது தான் அவசியம் என உணர்த்தியது அதன் சுத்தம். குடிக்கக் கூட மினரல் வாட்டர் உபயோக்கிக்காத நான், ஒரு முறை தண்ணீர் தீர்ந்ததால், கழுவ அதை வாங்கியது வாழ்க்கையின் நகைமுரண்.

இப்போது பரவாயில்லை, புறநகரில் தனி வீட்டில் வாடகைக்கு இருக்கிறேன். அதை விட முக்கியம் தனிக் கழிவறை.

சென்ற வாரம் அப்பா வந்திருந்தார். கிளம்பும் போது, பெண் பார்க்கப் போகிறோம். ஏதாவது அபிப்ராயம் இருந்தால் சொல் என்றார்.

”பொண்ணு எப்படியிருந்தாலும் பரவாயில்லை. அந்த வீட்டில கக்கூஸ் கொஞ்சம் தனியா இருக்கணும் அவ்வளவு தான்” என்ற என்னை வித்தியாசமாகப் பார்த்தபடியே கிளம்பினார் என் அப்பா.

July 12, 2009

மோகன்லால் பிரியதர்ஷன் ஐபிஎல் டீம் ஆலோசனை

ஐபிஎல், டீம்களின் எண்ணிக்கையை உயர்த்தப் போவதாக வந்த செய்திகளை அடுத்து, மோகன்லாலும் பிரியதர்ஷனும் இணைந்து கேரளா டீமை ஏலத்தில் எடுக்கப் போவதாக செய்திகள்.

அவர்கள் தங்கள் மானேஜர்களுடனும் கிரிக்கெட் வல்லுநர்களுடனும் ஆலோசனை நடத்த படகு வீட்டில் கூடுகிறார்கள்.

லால் : டீம் பேரு நம்ம பாரம்பரியத்தைக் காட்டுறமாதிரி இருக்கணும்

தர்ஷன் : சித்திரைத் திருநாள், சுவாதித் திருநாள் மகராஜாக்களை நினைவு படுத்துற மாதிரி கேரளா மகராஜ்ஸ்ன்னு பேர் வைக்கலாமா?

வல்லுநர் : சார், ஏற்கனவே ராயல்ஸ்,கிங்ஸ்ன்னு நாலு டீம் இருக்கு

லால் : அப்போ கேரளா சிப்ஸ் லெவன், கேரளா நேந்திரம்ஸ், கேரளா புட்டூஸ்னு ...

வல்லுநர் : சார், நாம என்ன ஹோட்டலா ஆரம்பிக்கப் போறோம்?


மானே 1 : சேட்டா, நம்ம டீமுக்கு கேரளா ஐபிஎல் சாம்பியன்ஸ்னு பேர் வைப்போம். நாம தோத்தாலும் பத்திரிக்கை, டிவி எல்லாம் கேரளா ஐபிஎல் சாம்பியன்ஸ் கேரளா ஐபிஎல் சாம்பியன்ஸ்னு சொல்லுவாங்க.

லால் : எந்தா, ஈ ஆளுக்கு ரெண்டு இன்கிரிமெண்ட் சேர்த்துப்போடு

மானே 2 : சென்னை டீமுக்கு சிவமணின்னு ஒருத்தர் எங்க போனாலும் டிரம்ஸ் வாசிச்சு சப்போர்ட் பண்ணுறாரு.

தர்ஷன் : நாம பதினெட்டு பேரை பட்டு வேட்டி, துண்டு, கொண்டையோட செண்டை மேளம் வாசிக்க வச்சுருவோம். ஸ்டேடியமே அதிர்ந்துடும்.

மானே 1 : சியர்ஸ் லீடர்னு எல்லா டீமிலயும் டான்ஸர்ஸ் வச்சுருக்காங்க

லால் : ஆழப்புழா போட் ரேசில, ஓட்டுட்டி வர்றவங்கள துண்டைச் சுத்தி சியர்ஸ் பண்ணுவாங்களே, அந்த ஆளுங்கள நாம இறக்கிடுவோம்.

மானே 2 : அப்படியே கடலினக்கப் போறேரே கரையினக்கப் போறோரே பாட்டை ரீமிக்ஸ் பண்ணி

பேட் பிடிக்கப் போறோரே

பந்து வீசப் போறோரே

போய் வரும் போது என்ன கொண்டு வரும்?

போர் சிக்ஸ் அடிச்சு வரும்

விக்கட் எல்லாம் கொண்டு வரும்னு

தீம் சாங்கும் ரெடி பண்ணீருவோம்.

மானே 1 : பெங்களூருக்கு கத்ரினா மாதிரி நமக்கு ஒரு பிராண்ட் அம்பாசட்டர் வேணுமே

லால் : மத்த ஸ்டேட்டெல்லாம் அம்பாசடர் கடன் வாங்கணும். நம்ம ஸ்டேட்ல தடுக்கி விழுந்தா தேவதைகள். மீரா ஜாஸ்மின்ல ஆரம்பிச்சு நயன்,அசின், பாவனான்னு. யாரை செலக்ட் பண்ணுறதுகிறதுதான் கஷ்டம்.
வல்லுநர் : சார், நாம என்ன படமா எடுக்கப் போறோம்? டைட்டில், மியூசிக், ஹீரோயின்னு பேசிக்கிட்டே இருக்கீங்க. எந்த எந்த பிளேயர எடுக்கிறது? அவங்களுக்கு என்ன பட்ஜெட்? அப்படிங்கிறத சொல்லுங்க சார்.

லால் : இங்க எப்பவுமே லோ பட்ஜெட்தான்.

வல்லுநர் : பாரின் பிளேயர்ஸ்ஸ எடுக்கணும்னா கோடிக் கணக்குல செலவாகுமே?

தர்ஷன் : நாங்க, மத்த இடங்கள்ள கோடிக் கணக்குல வாங்குறவங்களுக்கு லட்சத்துலதான் சம்பளம் கொடுக்குறது வழக்கம்.

லால் : ஏன் பாரின் பிளேயர்ஸ்க்கு போறீங்க. இந்தியன் பிளேயர்ஸ்?

வல்லுநர் : ஏழுபேர் டீமில வேணும் அது இதுன்னு பல ரூல்ஸ் இருக்கிறதால இந்தியன் பிளேயர்ஸ்க்கு தான் ரேட் இன்னும் அதிகம். வாசிம் ஜாஃபர்னு ஒருத்தர், அவரு ஒன் டேக்கே லாயக்கிலேன்னாங்க. அவரவே எவ்வளவு காசு கொடுத்து எடுத்திருக்காங்கன்னு தெரியுமா?

லால் : கேரளா பிளேயர் யாரு இருக்குறாங்க?


வல்லுநர் : ஸ்ரீசாந்த்துன்னு ஒருத்தர் இருக்காரு. அவரயும் பஞ்சாப் டீமில பிரீத்தி எடுத்திருக்காங்க.

தர்ஷன் : பிரீத்தி கிட்ட நான் பேசுறேன். எவ்வளவுக்கு அவர எடுத்தாங்களோ அத கொடுத்து அவர வாங்கிடுவோம். மானேஜர் ஒரு பேக்ஸ் அனுப்பிடுங்க.

வல்லுநர் : அப்போ மீத ஆட்களெல்லாம்?

லால் : இந்த ஸ்டேட்ல கிரிக்கெட் தெரிங்சவங்களே இல்லையா?

மானே 1 : சேட்டா, ஸ்டார் கிரிக்கெட் நடக்கும்போது கூட தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவுக்கும் தான் நடக்கும். அந்த அளவுக்கு நம்ம ஸ்டேட் கிரிக்கெட்ல வீக்.

தர்ஷன் : கவலைய விடுங்க. கலாபவன்னு ஆரம்பிச்சு நடிக்க கத்துக் கொடுக்குறமாதிரி கிரிக்கெட் பவன்னு ஒன்னு ஆரம்பிச்சுக்கிடலாம்.

வல்லுநர் : அப்படி புது ஆளுகளா சேர்த்துக்கிட்டா நல்ல கோச் இருந்தாத்தான் வின் பண்ண முடியும்.

லால் : அது எப்படி?

வல்லுநர் : உங்க பாணிலயே சொல்லுறேன். ஸ்டார் இல்லாம, செலவு பண்ணாம ஸ்க்ரிப்ட வச்சு ஜெயிக்கிறீங்கள்ளயா? அதுமாதிரி யாரு எப்போ இறங்கணும், யாருக்கு யாரு பவுல் பண்ணனும், எங்கே பீல்டிங் நிக்கணும்னு ஸ்கிரிப்ட் எழுதுறவங்க தான் கோச். அதுமாதிரி நல்ல பாரின் கோச் வேணும்.

தர்ஷன் : ஓகே. கொஞ்சம் விலை மலிவான கோச்சா பாருங்க.

வல்லுநர் : ஏற்கனவே நல்ல கோச்சை எல்லாம் மத்தவங்க வளைச்சுப் போட்டுட்டாங்க. ஜான் புக்கானன், கிரேக் சேப்பல்னு ரெண்டு பேர் இருக்காங்க. ஆனா அவங்க எல்லாம் பயங்கரமா பாலிடிக்ஸ் பண்ணுறவங்க.

லால் : சார், ஒண்ணு தெரியுமா, எல்லா நாட்டுக்கான தூதர்களும் எங்க ஆளுங்க தான். ஏன் ஐநா சபை பிரதிநிதி வரைக்கும் எங்க ஆளுங்கதான்.

மானே 2 : துபாய்ல ஆரம்பிச்சு தமிழ்நாடு வரைக்கும் எங்க ஆளுக பண்ற அரசியல்ல அங்க இருக்குறவங்களே ஆடிப்போயிருக்காங்க.
லால் : அதனால தான் சொல்லுறோம். ஜான் புக்கானன் என்ன, அவங்க அப்பா முழம் புக்கானன் வந்தாலும் எங்க கிட்ட புட்டு வேகாது.

வல்லுநர் : சரி, அவரவே போட்டுடுவோம்.

மானே 2 : சார், பிரீத்திகிட்ட இருந்து பதில் பேக்ஸ் வந்திருக்கு.
நம்ம கண்டிஷனுக்கு அவங்க ஒத்துக்க மாட்டேங்கிறாங்க.


தர்ஷன் : ஏன் இன்னும் அதிகம் பணம் எதிர்பார்க்குறாங்களா?

மானே 2 : அதில்லை சார். எவ்வளவுக்கு வாங்கினாங்களோ, அதவிட பத்து மடங்கு அதிகம் பணம் அவங்க தர்றாங்களாம். உடனே அவர எடுத்துக்கங்கண்ணு சொல்றாங்க சார்.


அனைவரும் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

July 08, 2009

அஜீத்,விஜய்,விஷால்,சிம்பு திடீர் சந்திப்பு

2009ன் முதல் ஆறு மாதங்களில் கமர்சியல் படங்களில் அயன் மட்டுமே ஹிட். மற்றபடி கதை,நடிப்பு உள்ள படங்களே வெற்றி என்ற ரிப்போர்ட்டைக் கண்டு குமுறும் பார்முலா நாயகர்கள் ஓரிடத்தில் கூடுகிறார்கள்.

அஜீத் : அயன்ல சூர்யா தப்பிச்சுட்டாரு. எங்கப்பா இந்த தனுஷ், ஜெயம் ரவி எல்லாம்?

சிம்பு : அவங்களுக்கு அவங்க அண்ணங்க இருக்காங்க. எப்படியாச்சும் தேத்தி விட்டுடுவாங்க.

விஷால் : எனக்கும் ஒரு அண்ணன் இருக்கானே?.

அஜீத் : சிம்புக்கும் விஜய்க்கும் அவங்க அப்பா காமெடி பீஸு, உனக்கு அண்ணன்.

விஷால் : என்ன ஜி இப்படி சொல்லிட்டீங்க.

சிம்பு : தலை சொல்லுறது சரிதான். இவ்வளோ செலவழிச்சு உன்னைய வச்சு படமெடுக்குறதும் இல்லாம நீ டைரக்டர ஆட்டி வைக்கிறத பொறுத்துப் போறான்ல.

விஜய் : அட அத விடுங்கப்பா. படம்தான் ஓடமாட்டெங்குதுன்னா நமக்கு பப்ளிசிட்டியும் கிடைக்க மாட்டேங்குதே. ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் நடிக்கிறாரு விக்ரம், அவர் பாடுறாரு, கெட்டப் போடுறாருன்னு ஒரு கவர் ஸ்டோரி. பிரபுதேவா கூட நயன வச்சு பிலிம் காட்டுறாரு.

இங்க ஒருத்தன் கட்சி ஆரம்பிக்கிறேன்னு கத்திக்கிட்டு இருக்கேன்.
எவனும் கண்டுக்க மாட்டேங்கிறான்.

சிம்பு : எந்திரன் பட லொக்கேஷனுக்கு அஸிஸ்டென்ட் டைரெக்டர் போறதுக்குள்ள மீடியா ஆளுங்க போயி உட்கார்ந்த்துக்கிறாங்க. சன் டிவி, எந்திரன் ரிலீஸாகும் போது விளம்பரம் போட ஒரு தனி சானலே ஓப்பன் பண்ணப் போறதா பேசிக்கிறாங்க.

விஷால் : கமல் கூட ஏதோ திரைக்கதை பட்டறை அது இதுன்னு லைம்லைட்லயே இருக்காரு.

அஜீத் : அது என்னப்பா திரைக்கதை?

விஜய் : உனக்கு கதைன்னா என்னன்னே தெரியாது. திரைக்கதை பத்தியெல்லாம் நீ ஏம்பா கவலைப் படுறே?

சிம்பு : இந்த பாருங்க, எங்க தலைக்கு கதை கேட்கத் தெரியாதுதான். ஆனா நடிப்புல நடந்து, திரும்பி எப்படியாவது சமாளிச்சுருவாரு. ஆனா உங்களுக்கு நடிப்பே சுத்தமா வரல்லியே.

விஜய் : நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்ணுறேன்.

விஷால் : ஏற்கனவே நெலமை சரியில்ல. நல்ல கதை, நடிப்பு இருக்கணும்னு மக்கள் எதிர்பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதப்பத்தி பேசுங்க.

விஜய் : ஆமா ஆமா. டிரெண்ட் இப்படியே இருந்துச்சுன்னா நாம பேக் அப் ஆயிடுவோம்.

சிம்பு : போட்டிக்கு சசிகுமார் வேற வந்துட்டாரு. ஹேட்ரிக் அடிச்சிட்டாரு. அவரை எப்படியாவது மட்டயாக்கணுமே.

விஷால் : அது விஜயோட அப்பாவாலதான் முடியும்.

சிம்பு : எப்படி?

விஷால் : நரேன், நிதின் சத்யா ஹிட் ஆனவுடனே அவங்களை புக் பண்ணி மொக்கையாக்குனாரே? அதுமாதிரி சசியையும் வச்சு ஒரு படம் எஸ் ஏ சி எடுத்தா, அந்தாளு காலி.

அஜீத் : சசி மதுரைக்காரரு. சும்ரமணியபுரம் ஆட்டோ சீன் ஞாபகம் இருக்கில்ல?

விஜய் : நமக்குள்ள ஏன்? மக்கள் நல்ல படம் பார்க்குறத நிறுத்தணும், அதுக்கு என்ன வழின்னு பாருங்க

சிம்பு : நல்ல படமா வரும்போது ஏவிஎம் ஒரு மசாலா படத்தக் குடுத்து கெடுக்குமே, அது மாதிரி நாமளும் செய்ய வேண்டியதுதான்.

விஷால் : நாம எடுத்த வில்லு,ஏகன்,தோரணை எல்லாம் மசாலா தானே?

சிம்பு : அதெல்லாம் சாதா மசாலா. ஸ்பெசல் மசாலாவுக்கு என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு.

விஜய் : என்ன?

சிம்பு : இந்தியாவிலேயே பெரிய மசாலா ஹிட்டுன்னா அது ஷோலே தான். அதை நாம ரீமேக் பண்ணுவோம்.

விஷால் : சூப்பர். நான் தான் இந்த குரூப்லயே ஹைட்டு. அமிதாப் கேரக்டர் எனக்கு.

சிம்பு : எனக்கு தர்மேந்திரா கேரக்டர். ஹேமமாலினியா நயன்தாரா.

அஜீத் : எனக்கு?

சிம்பு : உங்களுக்கு டான் கேரக்டர்தான் கிளிக்காகுது. அதனால கப்பர் சிங் நீங்கதான்.

விஜய் : அப்போ நான்?

சிம்பு : சஞ்சய் கபூர் கேரக்டர் நீங்க எடுத்துக்குங்க.

விஜய் : அய்யோ, அந்த கேரக்டருக்கு நடிப்பு தேவைப்படுமே. அதுபோக கையில்லாம நடிச்சா என் இமேஜ் என்னாகும்?

சிம்பு : கையில்லாட்டி என்ன? கால் இருக்குல்ல? வழக்கம் போல ரெண்டு குத்துப்பாட்டுக்கு ஆடி தப்பிச்சுக்குங்க.

விஜய் : ஏன் இவ்வளோ பேசுறயே நீ நடிக்க வேண்டியதுதான அந்த கேரக்டர்ல?

சிம்பு : எனக்கு தெரிஞ்சதே விரல் வித்தைதான். கையில்லாத கேரக்டர்ல நான் எப்படி நடிக்கிறது?

அஜீத் : வழக்கம் போல தப்பா கதை கேட்டு நான் மோசம் போக மாட்டேன். ஏன் நான் தர்மேந்திரா கேரக்டர் பண்ணுறனே. விஜய் வேணா கப்பர் சிங் கேரக்டர் பண்ணட்டும்

விஷால் : கப்பக் கிழங்கு சிப்ஸ் மாதிரி ஒல்லியா இருக்காரு. இவர எப்படி?

சிம்பு : சரிங்க சமாதானமாப் போவோம். கப்பர் சிங்கா பிரகாஷ் ராஜ், சஞ்சய் கபூர் கேரக்டருக்கு கிஷோர், ஹேமமாலினியா நயன்தாரா, ஜெயாபாதுரி கேரக்டர்க்கு அசின்.

விஷால் : அப்பக்கூட நயன விடமாட்டேங்கிறானே. பிரபுதேவாவுக்கு எஸ் எம் எஸ் அனுப்பிட
வேண்டியதுதான்.

விஜய் : அதெல்லாம் சரி. மெயின் கேரக்டர்ஸ்?

சிம்பு : அங்க தான் நிக்குறான் சிம்பு. ஒரே நேரத்துல ரெண்டு ஷோலே எடுக்குறோம். ஒன்னுல நானும் விஷாலும் மெயின் கேரக்டர்ஸ். இன்னொன்னுல நீங்களூம் அஜீத்தும்.

அஜீத் : ஓகே நான் தர்மேந்திரா, விஜய் அமிதாப். சரி எங்க ஷோலேக்கு எங்களுக்கு ஏத்த ஆளுகள செலெக்ட் பண்ணிக்கிறோம்.

விஜய் : அருமையான ஐடியா. ரெண்டு படம் வருதுன்னா தமிழ்நாடே பரபரப்பாகும். இது மட்டும் ஹிட் ஆச்சு. ரியாலிட்டி படம் எடுக்குறேன்னு எவனும் இனி வர மாட்டான்.

விஷால் : நம்மனால தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவோ கொடுமைகள அனுபவிச்சுட்டாங்க. அதுல இதுவும் சேரட்டும். ஷூட்டிங்க ஆரம்பிச்சுடுவோம்.