May 31, 2009

என்னுடைய ட்ரீம் கிரிக்கெட் டீம்

நான் கிரிக்கெட் பார்த்த வரைக்கும், எனக்குப் பிடிச்ச ஆளுங்களை எல்லாம் சேர்த்து உருவாக்குனது இந்த டீம்.

ஆஸ்திரேலிய பெர்த் பிட்ச்சா இருந்தாலும் சரி, ஐதராபாத் டெத் பிட்ச்சா இருந்தாலும் சரி

செஞ்சூரியன் மாதிரி வட்டமா இருந்தாலும் சரி
வெலிங்டன் மாதிரி அஷ்டகோணலா இருந்தாலும் சரி.

லார்ட்ஸ் மாதிரி ஸ்விங் ஆனாலும் சரி, பிரேமதாசா மாதிரி ஸ்பின் படமெடுத்து ஆடினாலும் சரி

பேட்ஸ்மென் உயிரக் கொடுத்து அடிச்சாத்தான் சிக்ஸ் போகும்கிற மாதிரி இருக்குற மெல்போர்ன் ஆனாலும் சரி. பேட்ஸ்மென் தும்முனாலே சிக்ஸ் போயிடுற டாண்டனா இருந்தாலும் சரி


டெஸ்ட்டானும் சரி ஒன் டே ஆனாலும் சரி

20 20 ஆனாலும் சரி இனிமே வரப்போற 10 10 ஆனாலும் சரி

என்னோட டீம் இதுதான்.

இது பெஸ்ட் லெவன் இல்லை. என்னோட இஷ்ட லெவன்.


1. கார்டன் கிரினீட்ஜ்

கிரினீட்ஜ் அடிச்சா பால் பவுண்டரி எட்ஜ்ஜு.
வலது கால தரையில அழுத்தமா ஊணி, இடது கால தூக்கி இவர் அடிக்கிற ஹுக்குக்கும் புல்லுக்கும் நான் அடிமை.
(செல்லமா, நடராஜர் ஷாட்).

2. விரேந்திர சேவாக்

வாக் பண்ணி உள்ள வந்தா எதிரணி பவுலர்களுக்கெல்லாம் கதக்குன்னு இருக்கும்.

3. விவியன் ரிச்சர்ட்ஸ் (கேப்டன்)
ஓப்பனர்கள் எப்படா அவுட் ஆவாங்கண்ணு எதிரணி கேப்டனுக்கு பயமாவும் இருக்கணும். ஐயையோ அப்படி அவுட்டாயிட்டா இவன் வந்துடுவானேன்னு பீதியாவும் இருக்கணும். அதுக்கு நம்மாளை விட்டா வேற யாரு இருக்கா?


4. ஜாவிட் மியாண்டாட்


பிவோட்டல் ரோல் இவருக்குத்தான். வண்டி எந்த நிலைமையில இருந்தாலும் ஸ்டேஷனுக்குள்ள பாதுகாப்பா கரெக்ட் டயத்துக்கு போயிடும், இந்த இஞ்சின் ட்ரைவர் இருந்தா.

5.அரவிந்த டி சில்வா

ஆளப் பார்த்தா அஞ்சடி. அடிச்சா பால் பஞ்சர்டி.
மினி பவர் ஹவுஸ். சிட்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி எதிரணிக்கு அடி விழும்.

6.இயன் போத்தம்

இயன் போத்தம் இல்ல. அடுத்த டீம் போதும் போதும்னு சொல்லற வரைக்கும் அயன் பண்ற போத்தம்.
ஆல் ரவுண்டர் ஸ்லாட் இவருக்குத் தான். சாதாரண மேட்ச் வின்னர் இல்ல. அசாதாரண சீரிஸ் வின்னர்.

7. ஆடம் கில்கிரிஸ்ட்

நான் மட்டுமில்ல, யாரு வேணூம்னாலும் எப்ப வேணூம்னாலும் லெவன் போட்டா இவர்தான் கீப்பிங்குக்கு ஆட்டோமேட்டிக் சாய்ஸ்.

8. ரிச்சர்ட் ஹேட்லி

இந்த சுல்தான் ஆப் சீம் அன்ட் சுவிங் தான் நம்ம டீமோட ஒன் சேஞ் பவுலர். இவர் போடுற லெக் கட்டர பார்த்தா அடுத்து உக்கார்ந்திருக்குற பேட்ஸ்மெனோட வாய் நெயில் கட்டரா ஆயிடும்.

9. வாசிம் அக்ரம்

நாலஞ்சு ரீப்ளே பார்த்தாத்தான் பால் எப்படி ஸ்விங் ஆச்சுன்னே சொல்ல முடியும் கமாண்டேட்டரால. இந்த டெயில் எண்ட் டெர்மினேட்டர் இருக்குற வரைக்கும் எந்த டீம் வாலும் ஆடாது.

10. ஷேன் வார்னே

பாம்புப் புத்துக்குள்ள கையை விட்ட படையப்பாவ பார்த்துருக்கோம். ஆனா புத்துக்குள்ள காலை விட்ட மாதிரி நடுங்குற பேட்டப்பாக்களை பார்க்கலாம் இவர் பவுலிங் பண்ணுறப்போ.

11. கர்ட்லி அம்புரோஸ்

பெர்த்துல இவர் பவுலிங் போட்டா விக்கெட் கீப்பர் தேர்ட் மென்லதான் நிக்கணும். 22 யார்ட் என்ன 44 யார்டுல பிட்ச் இருந்தாலும் லென்த்துல போடுவாரு எங்காளு.

மீண்டும் ஒரு தொடர் பதிவு

இது ஒரு தொடர் பதிவு. அருமை நண்பர் ஹாலிவுட் பாலா அழைப்பு விடுத்தார்.

விதிகள் எப்பவும் போலத்தான். கீழே இருக்கிற 32 கேள்விகளுக்கும் (ஏதும் நியுமராலஜியா?) பதில் சொல்லணும். மூணு பேரைக் கூப்பிடணும்.

ரெடி ஸ்டார்ட்.


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

பெற்றோர் வைத்த பெயர்தான். எல்லா இடங்களிலும் முரளி கிருஷ்ணாவா எனக் கேட்கும்
போது மட்டும் அப்படிக்கூட இருந்திருக்கலாமா எனத் தோன்றும்.



2.கடைசியாக அழுதது எப்பொழுது?

இப்போது அழுகை எல்லாம் வருவதில்லை. ஆத்திரம் மட்டுமே.


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ம்ஹூம்.

4).பிடித்த மதிய உணவு என்ன?

பொன்னி புழுங்கல் அரிசி சாதம், குரும்பாட்டு தொடைக்கறியும், கொட்டப்பட்டி பிஞ்சு கத்திரிக்காயும் போட்டு செய்யப் பட்ட கறிக்குழம்பு (கறி எது கத்தரி எதுன்னு பிரிக்க முடியாத அளவுக்கு இருக்கும்), நெஞ்செலும்பு சூப் செய்த பின்னாடி மிஞ்சுற எஸென்ஸை ஊத்தி செஞ்ச ரசம், எருமைப் பால்ல உறை ஊத்தின தயிர், சைட் டிஷ்ஷா மிளகு கறி வருவல், ஒரு முட்டை பொடிமாஸ். முடிச்ச பின்னாடி பினிசிங் டச்சா ஒரு நன்னாரி சர்பத்.


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

விண்டவர் கண்டிலர் ரேஞ்சுல உடனே.


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவி. அதிலயும் குற்றாலத்தில புலியருவினு ஒன்னு இருக்கும். நம்ம தலைக்கு ரெண்டடி
உய்ரத்தில இருந்து விழும். அதுமாதிரி உயரம் கம்மியான அருவியா இருக்கணும். ஹோன்னு தலையில அடிக்கிற மாதிரி விழுகிற அருவிக்கு நோ.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அவர்களின் பேச்சு.


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: அடாப்டபிலிட்டி
பிடிக்காத விஷயம் : சோம்பேறித்தனம்

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடிச்ச விஷயம் : அன்பு

பிடிக்காத விஷயம் : டயட்ல இருங்கன்னு கண்டிக்கிறது


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?..

நண்பர்கள்.


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

நீலம்.


12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

எதுவும் இல்லை.


13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பிங்க் (அப்போதான் பெண்கள் எடுத்துக்கிடுவாங்க)

14.பிடித்த மணம்?

காலைத் தேநீரின் மணம்.


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

SUREஷ் : சந்தித்தது இல்லை. ஆனா நெருக்கமா உணர்றேன்.


டி வி ராதாகிருஷ்ணன் :பதிவர்களிடம் மிகப் பிரியமாக பழகுவார்


கார்த்திகைப் பாண்டியன் : சந்தித்தது இல்லை. ஆனா நெருக்கமா உணர்றேன்

காரணம் : இவங்களைப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்கத்தான்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?


ஹாலிவுட் பாலா : அவருடைய எல்லா திரை விமர்சனங்களும்.

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட்

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

ரொமாண்டிக் காமெடி

20.கடைசியாகப் பார்த்த படம்?

அயன்

21.பிடித்த பருவ காலம் எது?

விண்டர்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

இந்தவார ஜூனியர் விகடனும், ரிப்போர்டரும்.


23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

கடந்த மூன்று வருடமாக ஒன்றே (என் பையனின் படம்)


24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சப்தம் : சிரிப்பு

பிடிக்காத சப்தம் : அழுகை


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

பெங்களூர் தான் அதிகபட்சம் நான் சென்றது


26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இருக்கணும்.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்ன தப்பு செஞ்சேன்னே சொல்லாம நண்பர்கள் என்னை ஒதுக்கும்போது.


28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்.


29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

அப்படி எதுவும் ஸ்பெசிபிக்கா இல்லை.


30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இதுக்கு நான் நீட்சேவைத் தான் துணைக்கழைக்கணும்


31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

பதிவு போடுறது

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

வேற வழியில்ல. வாழ்ந்துதான் கழிக்கணும்

1947 ஆம் ஆண்டின் திரைப்படங்கள் - ஒரு பார்வை.

இந்த ஆண்டு ஒவ்வொரு இந்தியனுக்கும் மறக்க முடியாத ஆண்டாக இருப்பது ஏன்? என்று கொடியேற்றி ஆரஞ்சு மிட்டாய் சாப்பிட்ட அனைவருக்கும் தெரியும். தமிழ் சினிமாவுக்கும் இது ஒரு மறக்க முடியாத ஆண்டுதான். இதற்க்கு முன் சில வருடங்களாக பிலிம் ரோலுக்கு கடும் தட்டுப்பாடு (இரண்டாம் உலகப்போர் காரணமாக) இருந்ததால் வருடத்துக்கு 15க்கும் குறைவான படங்களே தயாரிக்கப்பட்டு வந்தன். இந்த ஆண்டில் தான் தமிழ் சினிமா வீறுகொண்டு எழுந்து 32 படங்களைத் தயாரித்தது.

இதைவிட முக்கியமான சம்பவம், அடுத்த 40 ஆண்டுகளுக்கு தமிழகத்தை ஆட்டிப்படைத்தவர் ஹீரோவாக பதவிஉயர்வு அடைந்ததுதான். ஆம் அதுவரை கேரக்டர் ரோல்களிலும், இரண்டாம் கதாநாயகனாகவும் நடித்துவந்த எம்ஜியார் இந்த ஆண்டில்தான்
ராஜகுமாரி படத்தின் மூலம் கதாநாயகனானார். அதுவரை பாடத்தெரிந்தவர்கள் தான் கதாநாயகர்கள் ஆக முடியும் என்றிருந்த மாயையையும் உடைத்தார்.

இந்த ஆண்டில் வெளியாகிய சில படங்களைப் பார்ப்போம்.

துளசி ஜலந்தர்

இந்தப் படத்தின் கதை வடிவேல் நாயக்கர். இசை எம் டி பார்த்தசாரதி. ஒளிப்பதிவு தம்பு. இயக்கம் நாகபூஷணம். பூலோகத்தில் வசிக்கும் ஜலந்தர் என்னும் அசுரன் (பி யு சின்னப்பா) பாதாள உலகை வெற்றிகொள்கிறான். மமதையால் தன் மனைவி பிருந்தையை (கண்ணாம்பா) வெறுத்து ஒதுக்குகிறான். அவரை ஆறுதல் படுத்துகிறார் அசுரகுரு சுக்கிராச்சாரியார். ஜலந்தரின் சேஷ்டைகள் தொடருகின்றன. ஒரு பிராமணரின் மனைவியை மானபங்கப் படுத்துகிறான். இதனால் பேராபத்து வரும் என்று குரு எச்சரிக்கிறார். கேட்பதாயில்லை ஜலந்தர். ஜலந்தரின் மனைவி தன் கணவனுக்கு கெட்டது எதுவும் வரக்கூடாது என சிவபெருமானை நோக்கி தவம் இருக்கிறாள்.

சிவன் தோன்றி, ஜலந்தரின் சடையில் இருக்கும் விஜய சங்கு அங்கு இருந்து விழாத வரையிலும், உன் கற்புக்கு பங்கம் வராத வரையிலும் அவனுக்கு ஆபத்து நேராஅது என வரமளிக்கிறார்.

ஜலந்தரின் பார்வை இப்போது இந்திரலோகம் நோக்கித் திரும்புகிறது. பாதாள லோக அரசனை தளபதியாகக் கொண்டு இந்திரலோகம் மீது போர் தொடுக்கிறான். இந்திரன் அலறி ஓட இந்திராணியை மானபங்கப் படுத்தப் பார்க்கிறான். அப்போது அங்கு தோன்றும் ஜலந்தரின் மனைவி கெஞ்சவே, விட்டு விடுகிறான்.

வெற்றிப் பயணம் மேற்கொள்ளும் போது, குளத்தில் நீராடிக் கொண்டிருக்கும் இந்திரலோக அழகிகளைப் பார்க்கிறான். காமம் தலைகேற அவர்களை விரட்டுகிறான்.ஒரு கன்னி மாட்டிக்கொள்கிறாள். அப்போது நாரதர் தன் சித்து விளையாட்டால் அவளைவிட அழகியாக தோன்றுமாறு மன்மதனை மாற்றி ஜலந்தர் கண்ணில் பட வைக்கிறார். உடனே ஜலந்தர் மன்மதனிடம் செல்ல, அவனோ இவனை மயக்கி அவன் தலையில் இருக்கும் விஜய சங்கை கவர்ந்து கொண்டு கைலாயத்துக்கு ஓடிவிடுகிறான்.

ஜலந்தரும் விடாமல் துரத்திக் கொண்டு கைலாயம் செல்ல, அவன் கண்ணுக்கு பார்வதி தேவியே அந்த அழகியாக தெரிய தொட்டு விடுகிறான். சும்மா இருப்பாரா சிவன்?. நெருப்பில் தூக்கியெறிகிறார். அதே சமயத்தில் மன்மதன் ஜலந்தர் வேடத்தில் உருவெடுத்து அவன் மனைவி பிருந்தையின் கற்புக்கு பங்கம் விளைவிக்கிறான். ஜலந்தரைக் கொல்ல இருக்கும் இரண்டு தடையும் நீங்கிவிட்டதால் சிவபெருமான் ஜலந்தரைக் கொல்கிறார். அவன் தலை விழுந்து துளசி செடியாக மாறுகிறது. அவனுக்கும் அவன் மனைவிக்கும் சாப விமோசனம் கிடைக்கிறது.

என்னா கதைப்பா?.

ராஜகுமாரி

கதை வசனம் - கருணாநிதி, இயக்கம் ஏ எஸ் ஏ சாமி, தயாரிப்பு ஜூபிடர் பிக்சர்ஸ். இதற்க்கு முந்தைய ஆண்டுகளில் வெளியான பட்டி விக்கிரமாதித்தன் படத்தில் ரஞ்சன் கதாநாயகன், எம்ஜியார் வில்லன். ஆனால் இருவருக்கும் இடையேயான கத்திச் சண்டைகள் படு பிரபலமாய் இருந்தன. ஜூபிடர் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்தபோது, எம்ஜியாரை கருணாநிதி தான் ரெக்கமண்ட் செய்ததாக சொல்வார்கள்.கருணாநிதியை ரெக்கமெண்ட் செய்தது இயக்குநர் சாமி. எம்ஜியார் தன் பங்கிற்க்கும் ஒரு
ரெக்க்மண்ட் செய்தார். அவர்தான் சண்டைப் பயிற்சி அளித்த சின்னப்பா தேவர்.

ஒரு நாட்டு ராஜகுமாரியை (தவமணி தேவி), மந்திரவாதி ஒருவர் (எம் ஆர் சுவாமி நாதன்)கடத்தி செல்கிறார் ஏழு கடல் ஏழு மலை தாண்டி. ராஜகுமாரியை மாயக் கம்பளத்தின் உதவியுடன் பறந்து சென்று மீட்கிறார் நாயகன் எம்ஜியார். எம்ஜியாருக்கு பிண்ணனி பாடியது எம் எம் மாரியப்பன் என்னும் பாடகர். இந்தப் படத்திலும் எம்ஜியாரின் கத்திச் சண்டைக் காட்சிகள் பல இடம்பெற்றிருந்தன. மாயாஜாலம், சண்டை, பாடல்கள் என கமர்சியல் ஐட்டங்களால் படம் நல்ல வெற்றி.


நாம் இருவர்

கதை வசனம் - ப நீலகண்டன், இசை -சுதர்சன், இயக்கம்,தயாரிப்பு - ஏ வி மெய்யப்ப செட்டியார். பாடல்கள் அனைத்தும் சுப்பிரமணிய பாரதி. ஆம் அவரின் பாடல்கள் முழுவதையும் ஏவிஎம் ஒரு தொகை கொடுத்து (10000) வாங்கியிருந்தது. பின்னர் பாரதியாரின் பாடல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியபோது, இவர்களின் அனுமதி பெற்றே அதைச் செய்ய முடிந்தது.

பி ஆர் பந்துலு அண்ணன், டி ஆர் மகாலிங்கம் தம்பி. அன்புச் சகோதரர்கள். ஆனால் பந்துலுவின் குடிப்பழக்கத்தாலும், தவறான நண்பர்களாலும் இருவரிடையே பிரிவினை ஏற்படுகிறது. பின்னர் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதே கதை. டி ஆர் மகாலிங்கத்தின் ஜோடி டி ஏ ஜெயலட்சுமி.

இந்தப் படத்துக்காக காரைக்குடியிலேயே (தேவகோட்டை) ஸ்டியோ உருவாக்கப் பட்டது. ஸ்டியோ என்றால்? வெறும் கீற்றுக் கொட்டகைதான். முழுக்க முழுக்க கீற்றுக் கொட்டகை போட்டு படம் எடுத்தார் ஏவிஎம். இந்தப் பட நாயகன் தேசாபிமானம் கொண்டவன். அதனால் பாரதியாரின் தேசபக்திப் பாடகல்கள் பயன்பட்டன. இந்த ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தபோது வானொலியில் இப்பட பாடல்களே அடிக்கடி ஒளிபரப்பப்பட்டன.


மிஸ் மாலினி

புகழ்பெற்ற எழுத்தாளர் ஆர் கே நாராயணன் கதையில் எஸ் எஸ் வாசன் தயாரித்த படம். மாலினி (புஷ்பவல்லி) அழகிய இளம்பெண். தன் உடல்நிலை சரியில்லாத தந்தையுடன் ஏழ்மையில் வாடி வருகிறாள். அவள் தோழி சுந்தரியின் பேச்சைக் கேட்டு கலாமந்திரம் என்னும் குழுவில் சேருகிறாள். நாயகியாகி பெரும்புகழ் அடைகிறாள். அப்போது சம்பத் (கொத்தமங்கலம் சுப்பு) என்பவன் அவளை காதலிப்பது போல நடித்து அவள் பணத்தை சுருட்டி விடுகிறான். இதற்கிடையே தோழி சுந்தரியுடன் பிணக்கு வேறு.ஆனால் தோழி பின்னால் கை கொடுக்கிறாள். மீண்டும் கலாமந்திரம் ஆரம்பிக்கப்பட்டு முன்னேறுகிறார்கள்.

ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி

ஒளிப்பதிவு - டபிள்யூ ஆர் சுப்பாராவ், இயக்கம், தயாரிப்பு - மார்டன் தியேட்டர்ஸ் டி ஆர் சுந்தரம்.

அரசி சிந்தாமணி (மாதுரி தேவி) மூன்று கேள்விகள் கேட்பார். சரியான பதில் சொன்னால்
அவரை திருமணம் செய்து கொள்ளலாம்,நாடும் கிடைக்கும். பதில் தெரியாவிட்டால் தலையை வெட்டி விடுவார். நாயகனின் தந்தை (ஆசையைப்பாரு), அண்ணன்கள் அனைவரும் பதில் தெரியாமல் தலையை இழக்கிறார்கள். நாயகன் தன் நண்பன் உதவியுடன் முதலில் கேள்விகளுக்கான பதிலை தேடிச் செல்கிறான்.

அந்த மூன்று கேள்விகளின் விடையும் மூன்று கதையாய் இருக்கிறது. அந்தக் கதைக்கான முடிச்சை அவிழ்க்கச் சென்றால் அங்கும் ஒரு கதை சொல்லப்பட்டு கேள்வி கேட்கப்படுகிறது.(கதைக்குள் கதை உத்தி)

ஒரு வழியாக எல்லா முடிச்சையும் அவிழ்க்கிறான் நாயகன். அத்தனை கதைகளுமே அவன் வாழ்க்கையோடு தொடர்பு உடையவையே. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மாண்டேஜ் உத்தியில் படமாக்கப்பட்டவை. கேமிராமேன் பெரும் புகழ் பெற்றார் இப்படத்தின் மூலம்.

கடகம்

ராஜகுமாரியைத் தயாரித்த ஜூபிடர் இதே ஆண்டில் தயாரித்தது தான் இந்தப் படமும். நாயகனாக அறிமுகமானார் ஜெயகுமார் என்ற பட்டதாரி. கட்டுமஸ்தான உடல், அழகிய முகத்துடன் இருந்ததால் வாய்ப்பு கிடைக்கப்பெற்றவர். சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடிக்கிறார் என்று செய்தி வெளியாகி, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அற்புத் சக்தி வாய்ந்த கடகம் (பிரேஸ்லெட்) ஒன்று. அதற்க்காக ஹீரோவும் வில்லனும் மோதுகிறார்கள் (டி எஸ் பாலய்யா). எதற்க்கு? அப்போதுதான் இளவரசி (சூர்யகுமாரி) கிடைப்பார். இதற்க்கிடையில் ஒரு கோமாளி வில்லனும் (டீ ஆர் ராமசந்திரன்) கடகத்துக்காக மோதுகிறான். இவன் குயுக்தி படைத்தவனும் கூட. கடைசியில் தமிழ்சினிமா வழக்கப்படி ஹீரோவுக்கே கடகம்.

ஆனால் நிஜத்தில் ஹீரோ பாவம். இப்படத்தின் தோல்வியால் அடுத்த வாய்ப்பு எதுவும்
கிடைக்காமலேயே திரையுலகை விட்டு விலகினார்.

மதனமாலா

நாயகன் - ஸ்ரீராம்(அறிமுகம்), நாயகி - ரஜனி, வில்லன் - சி எஸ் டி சிங். ஏராளாமான கத்திச் சண்டைகள் நிறைந்த வழக்கமான சாகசப் படம். பின்னாட்களில் ஸ்ரீராம் குணசித்திர நடிகராக மாறினார்.

சண்பகவல்லி

கந்தர் பிலிம்ஸ் தயாரிப்பு. டி எஸ் பாலய்யா நாயகன். விஜயாள், ஏ எவ் பெரியநாயகி ஜோடிகள். கூடு விட்டு கூடு பாயும் விக்கிரமாதித்தனாக டி எஸ் பால்ய்யா நடித்திருந்தார். சில பாடல்களையும் இப்படத்தில் அவர் பாடினார்.