October 03, 2008

தமிழ் சினிமாவில் நெஞ்சை தொட்ட உணவு உண்ணும் காட்சிகள்

தமிழ் சினிமாவில் உணவு உண்ணும் காட்சிகளை பெரும்பாலும் ஒரு குடும்பத்தின் பொருளாதார சூழலை காட்டவும், கட்டுக்கோப்பான கூட்டுக்குடும்பம் என்பதைக்காட்டவும் உபயோகப்படுத்துவார்கள். நகைச்சுவைக்காகவும் பல காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். இவை தவிர நெஞ்சைத்தொடும் அளவுக்கு பல காட்சிகள் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

முதல் மரியாதை

ஊர் பெரிய மனிதர், அவருக்கும் அவர் மனைவிக்கும் கட்டாய கல்யானத்தாலும், மனைவியின் முன் நடத்தையாலும் பிரச்சினை. அவ்வூருக்கு பஞ்சம் பிழைக்க வந்த இளம்பெண். அப்பெண்ணுக்கும்,பெரிய மனிதருக்கும் இடையில் ஏற்படும் நுட்பமான காதல். ஒரு நாள் மழையின் காரணமாக இளம்பெண்ணின் குடிசையில் ஒதுங்குகிறார், அப்போது அவள் மீன்குழம்பு சாப்பிட்டுக்கொண்டுருக்கிறாள். அவள் வற்புறுத்த இவருக்கும் ஆசை. சம்மதிக்கிறார். உடனே அவள் தன் கையை கழுவிவிட்டு இவருக்கு உணவு பரிமாறுகிறாள். அப்பொது தன் மனைவி மூக்கு சிந்திய கையுடன் அலட்சியமாக பரிமாறுவது கண்ணில் தோன்றுகிறது. சுவையில் மனமயங்கி சொல்கிறார். " அப்படியே என் ஆத்தா வைச்சது போலவே இருக்கு, அவளும் இப்படித்தான் எனக்கு உறைக்குமேன்னு ரெண்டே ரெண்டு முளகாய கிள்ளிப்போட்டு வைப்பா". என்று சொல்லி ஆசையுடன் சாப்பிடுகிறார். அவள் இன்னும் கொடுக்க கூச்சம் தடுக்க "உனக்காததான் சாப்பிடுறேன் ஆமா" என்று சொல்லி நடிகர் திலகம் சிவாஜி சாப்பிடும் போது தியேட்டரில் பலரின் கண்களில் கண்ணீர். மிக சிறப்பாக அமைகப்பட்ட காட்சி அது.

வறுமையின் நிறம் சிகப்பு

வேலை இல்லா பட்டதாரிகள், தங்கள் வீட்டுக்கு வந்த இளம்பெண்ணிடம் தங்கள் வறுமையை மறைப்பதற்காக சாப்பிடுவது போல் நாடகமாடுகிறார்கள். அதை உணர்ந்த அவள் தன் வீட்டீற்கு சாப்பிட அழைக்கிறாள். சமைக்கும் போது அவர்கள் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். சமையல் முடியும் போது தான் தெரிகிறது, அவளது பாட்டி இறந்தது. கண்ணீருடன் எழுகிறார்கள். பாட்டி இறந்ததற்கா? இல்லை இப்போது இறந்ததற்கா? கமல், எஸ் வி சேகர், தீலீப், ஸ்ரீதேவி அசத்திய இந்த காட்சியும் நெஞ்சை தொட்ட ஒன்று.

புது வசந்தம்

சினிமா ஆசையுடன் வந்து தெருவில் பாடி பிழைத்துக்கொண்டிருப்பவர்கள். அவர்கள் வாழ்க்கையில் புது வசந்தமாய் நுழைகிறாள் ஒரு பெண். ஒருநாள் சாப்பிட இலை இல்லாததால் நிலாச்சோறு சாப்பிடுகிறார்கள். அப்போது ஒருவன் கண்ணில் மட்டும் கண்ணீர், காரணம் சொல்கிறான் " எனக்கு நிலாச்சோறு சாப்பிடனும்னு ரொம்ப ஆசை. என் வாழ்க்கை பூராம் நிலா இருந்துச்சு, ஆனா சோறு தான் இல்லை. சார்லி கலக்கிய காட்சி இது.

வீரப்பதக்கம்

வேளை நிறுத்தத்தால் தொழிலாளியின் குடும்பம் பட்டினி. அவன் மனம் வெறுத்ததைப் பார்த்து உடன் இருந்த சகாக்கள் பணம் திரட்டி அவன் குடும்பத்திற்கு பிரியாணி வாங்கிச்செல்கிறார்கள். அதற்குள் பசி தாங்காத அவன் குடும்பத்தார் தற்கொலை செய்துகொள்கிறார்கள். குடும்பத்தலைவனாக மணிவண்ணன் நம்மை அழ வைத்துவிடுவார்.

தேவர் மகன்

இருகுடும்பப் பகை. கண்மாய் உடைக்கப்பட்டு பலர் வீடிழக்கிறார்கள். இந்த சண்டை பிடிக்காமல் வெளியூர் செல்லவிருந்த நல்லவரின் மகன் மனம் மாறி அவருடன் இருக்க தலைப்படுகிறான். அவர் அப்போது சாப்பிடச் சொல்ல மறுக்கிறான். அப்பொது அவர் கண்மாய் வெள்ளத்தால் ஒரு குழந்தையை இழந்து சோகத்தோடு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பெண்னைக் காட்டி சொல்கிறார் " குழந்தையை பறிகொடுத்தவ, ஏன் சாப்பிடுறா?. இன்னோரு குழந்தையை காப்பத்தனுமே? அதுக்குத்தான். நாம தெம்பா இருந்தாத்தான் நம்மளை நம்பி இருக்குறவங்களை காப்பாத்த முடியும்?" கமலின் அருமையான வசனமும், சிவாஜியின் இயல்பான நடிப்பும் இதில் நம்மை உருக்கிவிடும்.


நட்புக்காக

நண்பனும் முதலாளியுமானவனின் குடும்ப மானத்திற்காக சிறை சென்று மீண்டு வருகிறான். அது அவன் மகனுக்கும் தெரியாது. மகனோ எஜமான விசுவாசத்தில் தந்தையையும் மிஞ்சியவன். சிறை மீண்டவன் தாய் கையால் சாப்பிட விழைகிறான. ஆனால் அவன் மகனோ தன் பாட்டியிடம் அவருக்கு சோறு போடாதே, என் முதலாளிக்க் துரோகம் செய்தவன் என்கிறான். வாய் வரை கொண்டு சென்ற சாப்பாட்டை, மகனின் விசுவாசம் கண்டு மகிழ்வோடு தட்டில் போட்டு விட்டு எழுகிறான்.

புதியபாதை

ரவுடியாக இருந்து திருந்தி வாழும் கணவன். வேலைக்கு போய்விட்டு பெரும் பசியோடு வருகிறான். உணவு குறைவாக இருக்கிறது. மனைவி கர்ப்பமாய் வேறு இருக்கிறார். என்ன இவ்வளவு மோசமா சமைச்சிருக்க? இதுக்கு தண்டனையா நீயே எல்லாத்தையும் சாப்பிடணும் என கட்டளையிட்டு விட்டு வெளியேறுகிறான். மனைவியோ அவர் சாப்பிடாத சாப்பாடு எனக்கெதற்கு என கொட்டி விடுகிறாள். பின் உண்மையறிந்து கணவன் பாசம் வியக்கிறாள்.

நந்தா

மகன் கொலைகாரன் என ஊர் தூற்றியதால், தாயே அவனை கொல்ல நினைக்கிறாள். சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுக்கிறாள். விஷம் கலந்தது எனத் தெரிந்தும் ஒன்றுமே சொல்லாமல் சாப்பிட்டு விட்டு, ரொம்ப வருசம் கழிச்சு உன் கையால சோறுமா, அதுதான் எதுவும் சொல்லாம சாப்பிட்டேன் என புன்முறுவலோடு சொல்கிறான் மகன்.


ஒண்ணா இருக்க கத்துக்கணும்

இதில் சுடுகாட்டில் வேளை செய்பவராக கவுண்டமணி, தன் மகன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆசையுடன் வளர்ப்பார். அவன் பள்ளிக்கு கிளம்பும் போது நீ படிச்சு கலெக்டராகனும் நல்லா சாப்பிடு என்று பழைய சோறை பரிமாறுவார். அது பல்லி விழுந்த சோறு. அதனால் மகன் இறந்துவிட கவுண்டமணி ஒரு அரற்று அரற்றுவார், பார்ப்பவர் நெஞ்சம் உடைந்துவிடும். அவர் எவ்வளவு பெரிய குணச்சித்திர நடிகர் என்பதற்கு அந்த ஒரு காட்சி போதும்.

29 comments:

நிலாக்காலம் said...

'உன்னால் முடியும் தம்பி' படத்தில் கமல் சாப்பிட்டுக் கொண்டே பேசும் காட்சி.. கோபமாகப் பேச ஆரம்பித்து, கண்ணீருடன் முடிப்பார். =D>

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி நிலாக்காலம்

thamizhparavai said...

கவுண்டமணி வெட்டியானாக வருவது 'ஒண்ணா இருக்க கத்துக்கணும்' படத்துக்காக....'காலம் மாறிப்போச்சு' படத்துக்காக அல்ல‌

thamizhparavai said...

'முதல் மரியாதை','தேவர் மகன்' மற்றும் 'புதுவசந்தம்' படத்தில் நீங்கள் சொன்ன காட்சிகள் எனக்கும் மிகவும் பிடித்தவை முரளி...
அருமையான நினைவூட்டல்....

முரளிகண்ணன் said...

தமிழ்ப்பறவை, வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. திருத்தி விடுகிறேன்

MyFriend said...

பருத்திவீரன்ல பிரியாமணி அடிவாங்கிட்டு அவ்ளோ நெறைய சோறு போட்டு சாப்பிடுவாங்களே.. “அடி வாங்குறது தெம்பு வேணும்ல”ன்னு சொல்லிட்டே சாப்பிடுவாங்க.. அதை சேர்க்காம விட்டுட்டீங்க. :-P

MyFriend said...

அதே வருமையின் நிறம் சிவப்புல கொஞ்சம் முன்னாடியே வரும் காட்சி. ஸ்ரீதேவி முன்னாடி இவங்க எல்லாரும் நல்லா சாப்பிட மாதிரி ஒன்னுமில்லா சட்டியை உருட்டி பெரட்டி சாப்பாடு ஆஹோ ஓஹோன்னு சொல்லுவாங்க.. இவங்க காலி பானைய வச்சி பண்ற ட்ராமாவை ஸ்ரீதேவி பார்த்துடுவாங்க. இந்த காட்சியும் அருமை. :-)

முரளிகண்ணன் said...

மை பிரண்ட்.
ஆம் பருத்திவீரனை சேர்த்து விடுகிறேன்.
வ.நி.சிகப்பு அக்காட்சியையைத்தான் சுருக்கி எழுதினேன்.
வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றிகள்

அத்திரி said...

சிவாஜி இயல்பாக நடித்த படங்களில் முதலிடம் முதல் மரியாதை. பாடல்களும் சரி, நீங்கள் சொன்ன காட்சியும் சரி ரொம்ப இயல்பாக இருக்கும்.

Kavi said...

மறுமலர்ச்சி படத்தில ஒரு காட்சி வரும்..அதையும் சேர்த்துக் கொள்ளுங்கோ. :)

thamizhparavai said...

எல்லாமே என் ராசாதான் படத்தில் வரும் உணவுக்காட்சி எனக்குப் பிடிக்கும்...இது 'மறுமலர்ச்சி' படத்தில் வருவது போல்,கொல்ல வருபவனுக்கு விருந்து படைப்பது...ஆனால் இதில் வில்லன், சங்கீதாவைக் கொன்று விடுவான்...

Thamira said...

தொகுப்பு அருமைங்க..

சென்ஷி said...

சூப்பர் :)

RATHNESH said...

நல்ல தொகுப்பு. மைபிரண்ட் சொன்னது போல் பருத்தி வீரனின் அந்தக் காட்சியும் இந்தப் பட்டியலில் இடம் பெற வேண்டிய ஒன்று. எல்லோருடைய நடிப்பும் இயல்பாக அலட்டல் இல்லாமல் இருக்கும் காட்சி அது.

இது தமிழ் சினிமா சம்பந்தப்பட்ட பதிவு என்றாலும் கூடுதலாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

BAGHBAN என்கிற இந்திப் படத்தில் அமிதாப்பச்சனும் ஹேமமாலினியும் பிரிக்கப்பட்டு ஆளுக்கொரு பையனின் வீட்டில் இருப்பார்கள். இருவரையும் ஒரே வீட்டில் வைத்துக் கொள்ள பிள்ளைகள் யாரும் தயாராக இருக்க மாட்டார்கள்.

கடுவாசோக் என்கிற தினம் ஒன்று வரும். அதில் பகல் முழுதும் பட்டினி விரதம் இருக்கும் மனைவி இரவில் நிலவையும் கணவனையும் பார்த்து அவன் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிடுவாள். அன்று அமிதாப் இருக்கும் வீட்டில், மகனும் மருமகளும் வீட்டில் உணவு ஏதும் செய்து வைக்காமல் ஏதோ பார்ட்டி என்று வெளியே சென்று விடுவார்கள். ஹேமமாலினி இருக்கும் வீட்டிலும் அவளைத் தனியே விட்டுவிட்டுப் போயிருப்பார்கள். ஆனால் வீட்டில் அனைவருக்கும் அவளே உணவு செய்வதால், தான் சாப்பிடுவதற்கு எல்லாம் எடுத்துக் கொண்டு மேசையில் தன் முன்னே வைத்துக் கொண்டு கணவனுக்கு ஃபோன் செய்வாள்.

மனைவியின் குரலுக்கு உருகி அமிதாப் பேசுவார். "சாப்பிட்டீங்களா?" என்று கேட்பாள் ஹேமா. "இனிமேத் தான்" என்பார். "முதலில் நீங்க எடுத்துச் சாப்பிடுங்க, எனக்குப் பசிக்குது" என்பாள் ஹேமா. "ஒரு நிமிஷம், உன் முன்னேயே சாப்பிட்டு விடுகிறேன்" என்றவராகத் தொலைபேசி ரிஸீவரை வெளியே வைத்து விட்டு அடுக்களை போய்ப் பார்ப்பார். ஒன்றுமே இருக்காது. ஃப்ரிட்ஜைத் திறந்தால் அங்கும் எதுவும் இருக்காது.

தன் ஏமாற்றம், பசி, இயலாமை எல்லாவற்றையும் முகத்தில் ஒரு கணம் வெளிப்படுத்தி விட்டு உடனே மனைவியின் ஞாபகம் மேலிட, வெறும் பிளேட்டுகள், கிண்ணங்கள் கரண்டிகளை எடுத்துக் கொண்டு தொலைபேசியின் அருகில் வந்து "அடடா, இது வேற இருக்கா? இந்த ஐட்டம் உன் மருமகள் சூப்பரா செஞ்சிருக்கா" என்று சொன்னவாறே வெறும் பாத்திரங்களை (ஒரு தமிழ்ப்படத்தில் நான் பார்த்தது போல் ஓவர் ஆக்ஷனாக இல்லாமல்)உருட்டி சாப்பிடுவது போல் வெறும் வாயினைச் சவைத்து ஒலி ஏற்படுத்துவார்.

ஹேமா ஒரு நிமிடம் அமைதியாகத் தொலைபேசியைக் காதின் அருகில் வைத்துக்கொண்டிருந்து விட்டு சொல்வார், "உங்களுக்குப் பொய் கூட உருப்படியாகச் சொல்லத் தெரியவில்லையே" என்று.

மனதைப் பிசையும் யதார்த்தமாக இருக்கும் காட்சி அது.

வெட்டிப்பயல் said...

நந்தா மிஸ் பண்ணிட்டீங்களே...

சூர்ய வம்சம் இட்லி உப்புமா சீன் கூட கொஞ்சம் டச்சிங்கா இருக்கும்.

நியூ படத்துல தேவயானிக்கு எஸ் ஜே சூர்யா சாப்பாடு கொடுக்கும் போது அவுங்க சொல்றது "பப்பு வெறும் சாப்பாடு மட்டும் சாப்பிட மாட்டான். என் கையையும் சேர்த்து தான் சாப்பிடுவான்" அதுவும் கொஞ்சம் டச்சிங்கா இருக்கும்.

அதே மாதிரி மாது வந்திருக்கேன் மாது வந்திருக்கேனு சொல்லி நாகேஷ் சாப்பாடு வாங்கி சாப்பிடற எதிர்நீச்சல்.

இந்த மாதிரி நிறைய இருக்கு. கொஞ்ச நேரம் கழிச்சி திரும்ப வரேன் :)

வல்லிசிம்ஹன் said...

பழைய படங்களில் வரும் காட்சிகளும் அருமையாக இருக்கும்.

கன்னிராசியில் பிரபு,கவுண்டமணி,
ரேவதி,சுமித்ரா நடிக்கும் காட்சியும் அழகாக இருக்கும்.

dondu(#11168674346665545885) said...

//நகைச்சுவைக்காகவும் பல காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும்.//
மாயா பஜார் படத்தில் கல்யாண சமையல் சாதம் என ராகத்துடன் பாடிவிட்டு கடோத்கஜனாக வரும் எஸ்.வி. ரங்கா ராவ் சாப்பாட்டை வெளுத்துக் கட்டும் காட்சியை விட்டு விட்டீர்களே. அதன் வீடியோவை இங்கு பார்க்கலாம், பார்க்க: http://in.youtube.com/watch?v=1iHWHkAAUhk&NR=1

அன்புடன்,
டொஒண்டு ராகவன்

பாபு said...

தலைப்பை படித்தவுடன் எனக்கு முதலில் ஞாபகம் வந்தது ,முதல் மரியாதை தான்
அடுத்து புது வசந்தம்.அந்த மாதிரி மொட்டை மாடியில் நமக்கு பிடித்தவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது யாருக்குத்தான் பிடிக்காது.

narsim said...

பருத்திவீரனில் அடியும் உதையும் வாங்கிய பின் ப்ரியாமணி அழுதுகொண்டும் வீராப்புடன் பேசிக்கொண்டும் சாப்பிடும் காட்சியும் மனதைத் தொட்ட காட்சிகளில் ஒன்று..

நல்ல பதிவு

நர்சிம்

Anonymous said...

இதில் ஒரு படம் கூட பார்க்கவில்லை:(
முதலில் படங்களை பார்க்கின்றேன்..நன்றி

யோசிப்பவர் said...

டச்சிங்கான காட்சிகளை மட்டும் பட்டியலிட்டுள்ளீர்கள். அதனால் காமெடியான எலும்பு கடிகளை விட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன்(வெறும் எலைய எவன்யா திம்பான்!!).!!

தொகுப்பு அருமை!!;-)

Bee'morgan said...

நல்ல தொகுப்பு.. இந்த தலைப்பைக் கண்டவுடன் மனக்கண்ணில் தோன்றிய முதல் காட்சி, வ.நி.சி தான்.. என் all time favourite அது..

//அதே மாதிரி மாது வந்திருக்கேன் மாது வந்திருக்கேனு சொல்லி நாகேஷ் சாப்பாடு வாங்கி சாப்பிடற எதிர்நீச்சல்.//
ரிப்பீட்டேய்..

rapp said...

ஒவ்வொன்னும் அருமை. விடுபட்ட சிலக் காட்சிகளையும் பின்னூட்டங்களில் எல்லாரும் கலக்கலா எடுத்துக்கட்டியிருக்காங்க. சிவாஜி சார் மீன் உண்ணும் காட்சியைப் பற்றி, சட்டப்பேரவையில் கூட ஒருமுறை ஒரு உதாரணத்திற்காக பேசிய அழகான விவாதம் கலைஞரோட புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது:):):) சூப்பரோ சூப்பர்.அப்படியே என்னோட நேயர் விருப்பத்தை மறந்திடாதீங்க :):):)

முரளிகண்ணன் said...

அத்திரி வருகைக்கு நன்றி

ஓவியா,தாமிரா,சென்ஷி தங்கள் வருகைக்கு நன்றி

முரளிகண்ணன் said...

அத்திரி வருகைக்கு நன்றி

ஓவியா,தாமிரா,சென்ஷி தங்கள் வருகைக்கு நன்றி

நந்தா said...

ஓய் கலக்கிக் கொண்டே போகிறீர் ஓய்.

//சார்லி கலக்கிய காட்சி//

இந்த வரிகளைப் படித்ததும் என் மனதில் ந்னைவுக்கு வருவது வெற்றி கொடி கட்டு படத்தில் சார்லி பார்த்தீபனிடம் ஒரு பத்து ரூபாய் இருக்குமா? என்று தய்ங்கிக் கொண்டே கேட்க, நூறு ரூபாய் கிடைத்ததும் இதை வெச்சு ஃபுல்லா லாட்டரி சீட்டு வாங்கப் போறேன் என்று சொல்லும் காட்சி.

என்னைக் கேட்டால் பிற் சேர்க்கைன்னு சொல்லி உன்னால் முடியும் தம்பி, பருத்தி வீரன் போன்றவற்றையும் சேர்த்து விடுங்கள். பிற்காலத்தில் புத்தகமாய்ப் போடும் போது எளிதாய் இருக்கும். :)

கிரி said...

//தமிழ் சினிமாவில் நெஞ்சை தொட்ட உணவு உண்ணும் காட்சிகள் //

எப்படியெல்லாம் தலைப்பு யோசிக்கறீங்க :-))

//தமிழ் சினிமாவில் உணவு உண்ணும் காட்சிகளை பெரும்பாலும் ஒரு குடும்பத்தின் பொருளாதார சூழலை காட்டவும், கட்டுக்கோப்பான கூட்டுக்குடும்பம் என்பதைக்காட்டவும் உபயோகப்படுத்துவார்கள்//

ஆரம்பமே அசத்துறீங்களே!

//அப்படியே என் ஆத்தா வைச்சது போலவே இருக்கு, அவளும் இப்படித்தான் எனக்கு உறைக்குமேன்னு ரெண்டே ரெண்டு முளகாய கிள்ளிப்போட்டு வைப்பா". என்று சொல்லி ஆசையுடன் சாப்பிடுகிறார்.//

உண்மையிலேயே சிறப்பான காட்சி..சிவாஜி அவர்கள் சாப்பிடுவதை பார்த்தால் நமக்கே சப்பு கொட்டும் :-)

//தங்கள் வறுமையை மறைப்பதற்காக சாப்பிடுவது போல் நாடகமாடுகிறார்கள்//

அப்பளம் சாப்பிடுவது தான் கலக்கல் :-)))

//நாம தெம்பா இருந்தாத்தான் நம்மளை நம்பி இருக்குறவங்களை காப்பாத்த முடியும்//

எல்லோருக்கும் பொருந்தும் வசனம் (படம் முழுவதும்)

நகைச்சுவை காட்சின்னா

கவுண்டமணி ரொம்ப கஞ்சனா இருப்பாரு, அதுல ராமராஜன் ஹீரோ ..ராமராஜன் செம கட்டு கட்டுவாரு ..பயங்கர காமெடியா இருக்கும் :-))))

mraj said...

இதில் வந்த எல்லா காட்சிகளும் எனக்கும் பிடிக்கும். இதை விட காதல் திரைபடத்தில் வரும் கடைசி காட்சியும் 7 க ரெயின்போ கோலோனியில் வரும் அந்த இரவு காட்சி. காலஞ்சென்ற நடிகர் விஜயனும் Ravikrishnavum அசதி இருப்பார்கள். அழகான குடும்ப பாசத்தை வெளிப்படுத்தி இருக்கும். இயக்குனர் செல்வராகவனுக்கு சபாஷ்.

mraj said...

இதில் வந்த எல்லா காட்சிகளும் எனக்கும் பிடிக்கும். இதை விட காதல் திரைபடத்தில் வரும் கடைசி காட்சியும் 7 க ரெயின்போ கோலோனியில் வரும் அந்த இரவு காட்சி. காலஞ்சென்ற நடிகர் விஜயனும் Ravikrishnavum அசதி இருப்பார்கள். அழகான குடும்ப பாசத்தை வெளிப்படுத்தி இருக்கும். இயக்குனர் செல்வராகவனுக்கு சபாஷ்.