February 25, 2012

அக்கிரிடிடேசன் – பகுதி 3 (பாடத்திட்டமும் வேலைவாய்ப்பும்)

முந்தைய பகுதி


என் பி ஏ கமிட்டியின் எல்லைக்குள் வரும் உயர் படிப்புகள்

பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
மேலாண்மை
ஆர்க்கிடெக்சர்
மருந்தாளுமை [பார்மசி]
ஹோட்டல் மேனேஜ்மெண்ட் & கேட்டரிங்
டவுன் மற்றும் கண்ட்ரி பிளானிங்
அப்ளைடு ஆர்ட்ஸ் மற்றும் கிராப்ட்ஸ்


சென்ற பதிவின் பின்னூட்டத்தில் பதிவர் தராசு அவர்கள் பாடத்திட்டங்கள் வேறுபடுமா? என்று வினவி இருந்தார். மேலும் 20 ஆண்டுகளுக்கு முன் படித்த சிலபஸ்ஸே இப்போதும் இருப்பதாகக் கூறியிருந்தார்.

பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்த வரையில் பாடத்திட்டம் என்பது அவை சார்ந்திருக்கும் பல்கலைகள் வகுக்கும் பாடத்திட்டத்தையே பின்பற்றுகின்றன. அட்டானமஸ் தகுதி பெற்ற கல்லூரிகளும் அடிப்படையில் பல்லகலையின் பாடத்திட்டத்தைத்தான் பின்பற்றுகின்றன. நிகர் நிலை (டீம்டு) பலகலைக்கழகங்களும், தற்போது அக்கிரிடிடேசன் பெற்றிருந்தால் தான் நிகர் நிலை அந்தஸ்து வழங்கப்படும் என்று பல்கலை கழக மானியக்குழு தெரிவித்துள்ளது. எனவே அவற்றின் பாடத்திட்டமும் ஏ ஐ சி டி ஈ வழிகாட்டுதல் படி பல்கலைக் கழகம் வகுத்ததையே கொண்டிருக்கும்.

எந்தத் துறையாக இருந்தாலும் சரி, +2 படித்து வரும் மாணவன் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் கணிப்பொறியியல் மட்டுமே படித்திருப்பான். அந்தத் துறையைப் பற்றிய அடிப்படைக் கல்வியை முதல் இரண்டு வருடங்கள் சிறப்பாக போதித்தால் மட்டுமே அவனால் துறையில் ஆழ்ந்த அறிவு பெற முடியும். அடிப்படைப் பாடங்கள் நூறாண்டு பழமை வாய்ந்ததே.

தற்போதைய அட்வான்ஸ்மெண்டுகளை அடுத்த இரண்டு வருடங்களில் எளிதில் கற்றுக் கொள்ளலாம். அடிப்படை அறிவு இருந்தால் வேலையில் சேர்ந்த பின் கூட பிக்கப் செய்து கொள்ளலாம்.

எனவே என் பி ஏ கமிட்டியானது, தகுதியான ஆசிரியர்கள் இருக்கிறார்களா? என்று பார்க்கிறது.

ஆசிரியர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள்?

அவர்களுக்கு வழங்கப்படும் சம்பள விகிதம் என்ன?

தொடர்ந்து இங்கே பணியில் இருக்கிறார்களா?

புத்தகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்களா? காப்புரிமை ஏதும் பெற்றுள்ளார்களா?

போன்ற அம்சங்கள் பார்க்கப் படுகின்றன.


இது தவிர எஸ் ஏ ஆர் (self assessment report) எனப்படும் தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு அறிக்கையையும் தயாரிக்க வேண்டும். அதில் தன்னுடைய பலம், பலவீனம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு,
பலவீனத்தைப் போக்க மேற்கொண்டிருக்கும் முயற்சிகள், அதற்கு கல்லூரி நிர்வாகம் வழங்கும் ஒத்துழைப்பு போன்றவற்றையும் குறிப்பிட வேண்டும்.

இதை தொடர்ந்து கடைப்பிடிப்பதன மூலம் துறையில் உள்ள ஆசிரியர்கள் தகுதி வாய்ந்தவர்கள் ஆக மாறுவார்கள்.

நூலகம்

பாடத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள பாடங்களுக்கு தேவையான டெக்ஸ்ட் மற்றும் ரெபரன்ஸ் புத்தகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் நூலகத்தில் இருக்க வேண்டும். அது போக ஒவ்வொரு துறையிலும் அந்தத் துறைக்கென டிபார்ட்மெண்ட் லைப்ரரியும் இருக்க வேண்டும். அதில் புத்தகங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு தொடர்ச்சியாக அவை வழங்கப்படவேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆராய்ச்சிக்கு, ஆராய்ச்சி கட்டுரைகளைத் தாங்கி வரும் சர்வதேச சஞ்சிகைகள் தேவை. அவை எவ்வளவு நூலகத்தில் உள்ளன என்பதும் ஒரு அளவுகோல். தற்போது ஆன்லைனில் எல்லாம் கிடைக்கின்றன. இதுபோக பெரிய பல்கலை, மற்றும் நிறுவனங்களுடன் ஒப்பந்தப் செய்து கொண்டு அவர்கள் மூலம் எவ்வளவு புத்தகங்கள் பெறுகிறோம் என்று பார்ப்பார்கள். தற்போது ஐ ஐ டி, அண்ணா பல்கலை ஆகியவை இணையத்தில் தங்கள் பேராசிரியர்கள் எடுக்கும் வகுப்புகளை வலையேற்றி வைத்துள்ளார்கள். இவற்றை கவனிக்க மல்டி மீடியா வசதி நூலகத்தில் உள்ளதா? என்றும் பார்ப்பார்கள்.


வேலைவாய்ப்பு

மாணவர்கள் தொழிற்கல்வி பயில்வதே வேலை வாய்ப்புக்காகத்தான். எனவே மாணவர்களின் எம்ப்ளாயபிலிடிக்கு கல்லூரி என்ன செய்திருக்கிறது? என்று பார்ப்பார்கள்.

எத்தனை பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன?. எந்தெந்த துறைக்கு? யாரால்? போன்றவற்றிற்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

அந்தப் பயிற்சி முடிவுக்குப் பின் மாணவர்களிடம் இருந்து பீட் பேக் பெற்று தொகுத்து வைத்திருக்க வேண்டும்.

எத்தனை வளாகத்தேர்வுகள் நடந்தன?, அவற்றில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றார்கள்? அதிகபட்ச/குறைந்த பட்ச/ சராசரி சம்பளம் எவ்வளவு? ஆகிய விபரங்கள் கடைசி மூன்று கல்வி ஆண்டுகளுக்குக் கொடுக்க வேண்டும்.

அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் காப்பிகள் கூட சமர்ப்பிக்கப் பட வேண்டும்.

ஏனென்றால் உள்ளூர் நிறுவனங்களில் குறைந்த ஊதியத்திற்கு வேலை வாங்கிக் கொடுத்து கணக்கு காட்டிவிடக்கூடாது என்பதற்காகவே இத்தனை விபரங்களும் கேட்கப்படுகின்றன.

அவர்கள் ஆய்வின் ஓர் அங்கமாக எம்ப்ளாயர் மீட் எனப்படும் கூட்டம் நடத்தப்படும். அதில் வேலை வாய்ப்பு அளித்தோர்களும், கமிட்டியினர் மட்டும் இருப்பார்கள். அவர்களிடம் மாணவர்களின் செயல்பாடுகளை, கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை விசாரித்து உறுதி செய்து கொள்வார்கள்.

தொடரும்

February 24, 2012

எம் ஜி யார் திரைப்படங்கள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம்

நான் பிறந்து மூன்று ஆண்டுகள் மட்டுமே எம்ஜியார் திரைப்படங்களில் நடித்தார். ஆனால் அதன்பின் ஓர் பத்து ஆண்டுகளுக்கு அவரது படங்கள் இடைவிடாமல் ரீ ரிலிஸ் ஆகி எங்கள் ஊர் தியேட்டர்களை அலங்கரித்துக் கொண்டுதான் இருந்தன. அப்படி ரீ ரிலீஸ் ஆனவை எல்லாமே மக்களால் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள் தான். அதுபோக அவர் நடித்த பல படங்களை தொலைக்காட்சி வழியாக கண்டுள்ளேன்.

ஒரு படத்தை அது ரிலீஸ் ஆகும் காலகட்டத்தில் மக்களுடன் சேர்ந்து பார்க்கும் போதுதான் அப்படம் ஏற்படுத்தும் உணர்வை நேரடியாக அறியமுடியும். அதன்பின் தொடரும் காலங்களில் அப்படம் அவர்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தையும் உணர முடியும்.

முதலில் பிரபலங்கள் எம் ஜி யார் படங்களால் சமூகத்தில் ஏற்பட்ட தாக்கம் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஓட்டேரி பக்கம் போய் பார்த்தீங்கண்னா, அங்க இப்பவும் தண்டால், பஸ்கி எடுத்துக்கிட்டு ஒரு கூட்டமே இருக்கும். மது அருந்த மாட்டாங்க, சிகரெட் குடிக்க மாட்டாங்க. அவங்க அப்படி செய்யுற இடத்துல ஒரு எம்ஜியார் புகைப்படம் இருக்கும். அப்படி அவங்கள மாத்துனவர் எம்ஜியார்.

இது கமல்ஹாசன் பல வருடங்களுக்கு முன் கொடுத்த பேட்டியில் சொன்னது.

எம்ஜியார் படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னா அந்தப் படத்தோட ஸ்டில்லுகள பார்த்துட்டு, அதே மாதிரி டிரஸ் பண்ணிட்டு போயிருவோம். அப்படி ஒரு தடவை சிந்தாமணி தியேட்டருக்குப் போன போது, எங்களை மாதிரியே நிறையப் பேர் வந்திருந்தாங்க.

இது விஜயகாந்த், ஆனந்த விகடனில் வெளியான அவரைப்பற்றிய தொடரில் சொன்னது.

நான் வித்தியாசமா டிஸைன் செஞ்சு, ஒரு பேண்ட் தைக்கச் சொல்லி போட்டுக்கிட்டேன். எங்கப்பா அதைப் பார்த்து திட்டுனாரு. ஆனா அதுக்கடுத்து வெளியான படத்துல எம்ஜியார் அந்த மாடல் பேண்ட் தான் போட்டிருந்தார். இளைஞர்கள்கிட்ட நல்ல வரவேற்பு. அப்பதான் எனக்குத் தெரிஞ்சது. ஏன் எங்கப்பா ட்ரான்ஸ்போர்ட்ல வேலை பார்க்குறாரு, எம்ஜியார் சூப்பர் ஸ்டாரா இருக்காருன்னு.

பாண்டியராஜன் – தான் தயாரித்த குமுதம் இதழில் எழுதியது.


எம்ஜியார் தனி கதாநாயகனாக நடித்தது 47ல். 53 ஆம் ஆண்டு அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின் 72ல் அங்கிருந்து வெளியேறினார். பின்னர் அதிமுகவைத் தொடங்கி 77 வரை நடித்தார்.

47 முதல் 53 வரை வெளியான படங்களின் வெற்றியும், அப்போதைய அரசியல் சூழ்நிலையும் எம்ஜியார் தனக்கான பாதை எது என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ள உதவியது.

மந்திரி குமாரி, மருத நாட்டு இளவரசி (வசனம் : கருணாநிதி), மர்மயோகி, சர்வாதிகாரி ஆகிய சரித்திர பிண்ணனி உள்ள படங்கள், அதில் எம்ஜியாரின் பாத்திரப் படைப்பு, அவர் பேசிய வசனங்கள் அவருக்கு நல்ல இமேஜைக் கொடுத்திருந்தன.

இப்போது அந்த கால அரசியல் சூழ்நிலையைப் பார்ப்போம். சுதந்திரம் கிடைத்து காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. பெரும்பாலான மாவட்டங்களுக்கு ஜமீன்தார்கள், பண்ணையார்கள், தொழிலதிபர்கள் தான் பிரதிநிதியாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதிகாரம் பரவலாக்கப்படாமல் ஓரிடத்தில் குவிந்திருந்தது.

ஒரு மனிதன் இளைஞனாயிருக்கும் வரை அவனுக்கு அமைப்பை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற எண்ணம் தன்னிச்சையாகவே இருக்கும். திருமணம் முடிந்தோ அல்லது பொறுப்புக்கள் அதிகரிக்கும் போதோ அமைப்புடன் சமரசம் செய்து வாழ்க்கையை ஓட்டிவிட வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கும். அப்போதைய கால கட்டத்தில் வெள்ளையர் ஆட்சி இல்லை. அமைப்பு என்பது நிலப்பிரபுத்துவம் ஆக இருந்தது. அது காங்கிரஸையும் நேரடியாகக் குறித்தது.

பெரியார், 1925ல் இருந்தே காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாடில் இருந்தார். அவர்களுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களைப் பரப்பி வந்தார். அவரால் கவரப் பட்ட இளைஞர்கள் அந்த அமைப்புக்கு எதிரான மனநிலையில் இருந்து வந்தார்கள்.

1953ல் எம்ஜியார் திமுகவில் இணைந்து பின் 72ல் வெளியேறும் வரை அவர் நடித்த திரைப்படங்களில் எல்லாம் பெரியாருடைய கருத்துகளையும், திமுகவின் கொள்கைகளையும் பிரதிபலித்துக் கொண்டே தான் வந்தார்.

இந்தக் கால கட்டத்தில் அவர் நடித்த அப்போதைய சமூகத்தை பிண்ணனியாகக் கொண்ட படங்களில் எல்லாம், அவர் ஒரு சாதாரண குடும்பப் பிண்ணனி கொண்டவராக இருப்பார். பெருந்தனக்காரர்கள் ஊரை சுரண்டுவார்கள். எதிர்த்துக் கேட்பார். உடனே அவர்கள் சூழ்ச்சி செய்து இவரை சிக்கலில் தள்ளுவார்கள். பின் அதில் இருந்து மீள்வார். ஊர் கொண்டாடும்.

இந்த சிக்கலில் இருந்து மீள அவர் பெரிய வித்தையெல்லாம் செய்ய மாட்டார். தனி மனித ஒழுக்கமுள்ளவராக, பொது வாழ்வில் நேர்மையானவராக இருந்தே அதை சாதிப்பார். முக்கியமாக தன் பாத்திரப் படைப்பில் எந்த ஜாதியின் சாயலும் வராமல் பார்த்துக் கொண்டார்.

பெருந்தனக்காரர்கள் அப்போதைய காங்கிரஸ் முதலாளிகளையும், சாதாரணன் அப்போதைய நடுத்தர, ஏழை இளைஞனையும் பிரதிபலித்தது. அப்போது திமுகவில் இப்படிப்பட்ட இளைஞர்களே இருந்தார்கள். அவர்கள் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ள இது உதவியது.

அதனால் தான் எம்ஜியார் உபயோகப் படுத்தும் உடையை உடுத்தும் (பேகிஸ்) , கடவுள் விஷயத்தில் தான் நேரடியாகப் பங்கு கொள்ளாத மனோபாவம், ஜாதிப் பெயர்களை தன் பெயரில் பின்னால் போட்டுக்கொள்ளாத ஒரு இளைஞர் கூட்டம் உருவாகியது.

இப்படி ஒருவருடன் ஒரு கூட்டமே தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளுமா?

சில ஆண்டுகளுக்கு முன் மெட்டி ஒலி ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த நேரம். வேலையின் காரணமாக வெளியூரில் ஒரு வீட்டு மாடியில் வாடகைக்குத் தங்கியிருந்தேன். ஒருநாள் கீழ்வீட்டு அம்மாள் 55 வயது இருக்கும். அழுது கொண்டு இருந்தார். கேட்டதற்கு, சிதம்பரம் இறந்து விட்டார். காயத்ரியின் மாமியார் செய்த கொடுமை அப்படி. எனப் புலம்பினார். இவரே ஒரு மாமியார், ஆனால் தன்னை காயத்ரியாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார். என் மனைவியும், தாயும் கூட தன்னை அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள் என பின்னர் அவர்களிடம் பேசும் போது புரிந்து கொண்டேன். மொத்தத்தில் பெரும்பாலான தமிழக பெண்கள் அனைவருமே அந்த இரண்டாவது பெண் கதாபாத்திரத்தோடுதான் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அந்த சீரியலுக்கு முன் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. பின்னர் ஒன்று இருக்கிறது. மெட்டி ஒலிக்கு இடையேயும் விளம்பரங்கள் வருகின்றன. நல்ல வெளிச்சத்தில் பல இடையூறுகளுடன் பார்க்கிறார்கள். இருந்தும் அந்தப் பிம்பத்தில் இருந்து தங்களைப் பிரித்துக் கொள்ள முடியவில்லை அவர்களால்.

53-72 காலகட்டம். ஆத்மார்த்தமாக, எந்த இடையூறுமின்றி படம் பார்க்கிறார்கள். தங்களை அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள். சில பண்புகளால் கவரப் பட்டு தங்களை மேம்படுத்தவும் அந்தக் கால இளைஞர்கள் முயல்கிறார்கள்.

எம்ஜியாரும் அந்தப் பிம்பம் கலைந்து விடாமல் தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்தே வந்திருக்கிறார். அப்போதைய பிரம்மாண்ட பட நிறுவனங்களான, விஜயா வாகினி (எங்க வீட்டு பிள்ளை) , ஏவிஎம் (அன்பே வா) மற்றும் ஜெமினிக்கு (ஒளி விளக்கு) தலா ஒரு படங்கள் மட்டுமே செய்திருக்கிறார். மார்டன் தியேட்டர்ஸில் அதற்கு முன் இரு படங்களிலும், 53க்கு பின் ஒரே படத்திலும் (அலிபாபாவும் 40 திருடர்களும்) மட்டுமே நடித்திருக்கிறார். இவை எல்லாமே பிளாக் பஸ்டர்ஸ்.

அந்தக் கால கட்டத்தில் பல தயாரிப்பாளர்களை (உதா தேவர் பிலிம்ஸ், சத்யா மூவிஸ் ) எம்ஜியார் உருவாக்கியிருக்கிறார் (அவர் வசதிக்காக என்றே பலரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்). என்றாலும் தனக்கு மிகப் பெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர்களுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற முன் வர வில்லை என்பதும் பல சாமானியர்களை தயாரிப்பாளர் ஆக்கியதும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்திருக்கலாம்.

இந்த காலகட்டத்தில் அவர் நடித்த அரசர் கதைகளிலும் கூட சுத்த தமிழ்ப் பெயர்களை தான் தன் பாத்திரத்துக்கு வைத்தார். (நாடோடி மன்னன் : மார்தாண்டன், வீராங்கன், ஆயிரத்தில் ஒருவன் : மணிமாறன்). அவர் மன்னனாக இருந்தால் மக்கள் நலமே சிந்தனையாக இருப்பதாகவே காட்சிகள் இருக்கும். எனவே இளைஞர்கள் இந்தப் படங்களிலும் தங்களை அடையாளப் அடுத்திக் கொள்ள முடிந்தது.


சமூகப் படங்களில் அவர் ஒழுக்கமானவராக தன்னை காட்டியதோடு மட்டுமல்லாமல் தன் உடைகளிலும் எளிமையைக் காட்டினார். சட்டை பேண்ட் அணிந்திருப்பார். வாட்ச் அணிந்திருப்பார். மோதிரம், செயின் ஆகியவை வெளிப்படையாகத் தெரியாது.

இப்போது கூட அறுபது வயதுக்கு மேல் உள்ள பல ஆண்களைப் பாருங்கள். வசதி இருந்தும் வாட்சுடன் நிறுத்திக் கொண்டிருப்பார்கள். நன்கு மீசை வளரும் அளவுக்கு மரபணு இருக்கும். ஆனாலும் அதை உதட்டுக்கு மேல் ஒரு மெல்லிய கோடாக மட்டுமே வைத்திருப்பார்கள். இதற்கு எம்ஜியாரின் மீசைதான் காரணம்.

அப்போது தொலைக்காட்சி இல்லை. மீடியாக்கள் 24 மணி நேரமும் செய்திக்காக அசுரப்பசியோடு இரை தேடி அலையவில்லை. இத்தனை நாளிதழ், பத்திரிக்கைகளும் இல்லை. எனவே அவரின் உண்மையான கேரக்டர் என்பது படத்தில் வந்ததுதான் என்று மக்கள் நம்பவேண்டிய கட்டாயம். இது இளைஞர்களிடம் நல்ல தாக்கத்தையே ஏற்படுத்தியது. ராமனாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் பல இளைஞர்களுக்கு ஏற்பட்டது.

அடுத்ததாகப் பார்க்கப் போனால் அவர் குறிப்பிட்ட தொழில் செய்தவராக நடித்த படங்கள். ரிக்‌ஷாகாரன், படகோட்டி, மாட்டுக்கார வேலன், இவையெல்லாம் அந்தந்த செக்மெண்ட் இளைஞர்களுக்கு ஒரு அந்தரங்க பூரிப்பைக் கொடுத்ததாக சொல்வார்கள். எனக்குத் தெரிந்த வளையல்காரர் ஒருவரின் வீட்டில் பெரிய எம்ஜியார் படமிருக்கும். காரணம் கேட்டதற்கு அவர் சொன்னது “ படகோட்டியில வளையல் காரரா வருவார்”

அது மாறுவேடம். இருந்தும் அவருக்கு ஒரு அகமகிழ்ச்சி.

பொதுவாக எம்ஜியாரின் படங்களில் காவல்துறை அதிகாரி நேர்மையானவராகவே காட்டப்படுவார். அது நம்பியாராக இருந்தாலும் சரி. அசோகனாக இருந்தாலும் சரி. உயர் அதிகாரிகள் நன்மையையே செய்வார்கள். எனவே இவர் படங்களைப் பார்ப்பவர்கள் காவலர்களை மரியாதையுடன்தான் பார்த்தார்கள்.

இவர் கட்டமைத்த எதிரி என்று பார்த்தால் பணக்காரர்களும், தவறான அரசர்களும் தான். இது இயல்பாக திமுகவிற்கு இளைஞர்களை திருப்பிவிட ஏதுவாக இருந்தது.


ஆனால் 72க்குப் பின் நடித்த படங்களில் மறைமுகமாக கருணாநிதி மற்றும் திமுகவுக்கு எதிரான கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கும். கவர்ச்சி காட்சிகளும் கூடுதலாக இருக்கும் வகையில் படங்கள் இருந்தன. அவற்றாலும் கவரப்பட்ட ஒரு தலைமுறை உருவானது.

எம்ஜியார் என்ற பிம்பத்தை கட்டமைக்க உதவியதும், அதன்மூலம் அவர் அக்கால இளைஞர்களை நல் வழியில் பாதித்ததும் 53-72ல் வெளியான படங்களின் மூலமே. அது திமுகவிற்கும் பெரும் உதவியாக இருந்தது.

February 22, 2012

தமிழ் சினிமாவில் விக்ரமின் ஆண்டு 2003 – ஒரு பார்வை

2003 ஆம் ஆண்டில் தமிழ்சினிமாவின் சென்செஷனாக இருந்தவர் விக்ரம் தான். தூள், காதல் சடுகுடு, சாமி மற்றும் பிதாமகன் ஆகியவை இவர் நடிப்பில் வெளிவந்தன. தூள் மற்றும் சாமி கமர்சியலாக கலக்க, பிதாமகன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் அவருக்குப் பெற்றுத்தந்தான். சறுக்கலாக காதல் சடுகுடு அமைந்தது. நான்குமே வெவ்வேறு விதமான பாத்திரங்கள். தூளில் கிராமத்து முரட்டு வாலிபன், காதல் சடுகுடுவில் நகரத்து இளைஞன், சாமியில் கம்பீரமான போலிஸ் அதிகாரி, பிதாமகனில் மயானத் தொழிலாளி.

இந்த ஆண்டில் மற்ற நடிகர்களும் போலீஸ் வேடம் போட்டார்கள். அவர்களில் முதலிடத்தில் வந்தது காக்க காக்க சூர்யா தான். அன்புச் செல்வன் ஐ பி எஸ் இன்னும் நம் கண்களில் நிற்கிரார். ஆஞ்சநேயாவில் அஜீத்தும், ராமச்சந்திராவில் சத்யராஜும் காக்கி உடுப்பை அணிந்தார்கள். அர்ஜூன் பரசுராமில் காவல் துறை அதிகாரியாகவும் மற்றும் ஷங்கரின் சிஷ்யர் இளங்கண்ணன் இயக்கத்தில் ஒற்றனாகவும் (சி பி ஐ அதிகாரி) வந்தார். தம் படத்தில் சிம்புகூட கடைசி காட்சியில் காக்கிச் சட்டை மாட்டினார்.

ஆனால் யதார்த்தமான போலிஸ் அதிகாரியாக வாழ்ந்து காட்டியவர் ரஞ்சித் தான். அவரது பீஷ்மர் படம் ஒரு போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் நிஜ வாழ்வில் சந்திக்கும் நெருக்கடிகளை சமரசமில்லாமல் சொன்னது. தூசி என்னு ஊரில் ஒரு காவல்துறை சப் இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த நெருக்கடிகளை அடி நாதமாகக் கொண்டு இந்தப் படத்தை எடுத்திருந்தார்கள். இந்த ஆண்டில் வெளியான பல வெற்றிப் படங்களினால் இந்தப் படம் கவனிப்பு பெறாமல் போனது.

விக்ரமை அடுத்து இந்த ஆண்டில் கலக்கியவர் தனுஷ். அவரது காதல் கொண்டேனும், திருடா திருடியும் அவருக்கு நல்ல பெயரையும் வசூலையும் தந்தது.


தமிழ்சினிமாவில் சற்று மாறுபட்ட படங்களைத் தற்போது கொடுத்துக் கொண்டிருக்கும் ஜனநாதன் இயற்கை மூலமும், கரு பழனியப்பன் பார்த்திபன் கனவு மூலமும், சமுத்திரக்கனி உன்னை சரணடைந்தேன் மூலமும் அறிமுகமானார்கள்.
செல்வராகவன் அபிஷியலாக காதல் கொண்டேன் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

கங்கை அமரன் தன் மகன் வெங்கட் பிரபுவை எப்படியாவது நாயகன் ஆக்கி விட வேண்டும் என்று பூஞ்சோலை என்னும் படத்தை ஆரம்பித்தார். ஆனால் படம் வெளியாகவில்லை. அவர் பின் தன் நண்பன் சரண் தயாரிப்பில் வெளியான உன்னை சரணடைந்தேனில் நாயகன் ஆனார். ஆனால் இப்போதோ பல நாயகர்களை உருவாக்கும் இயக்குநராக மாறிவிட்டார்.

தமிழ்சினிமா வழக்கப்படி பல வாரிசுகள் இந்த ஆண்டும் அறிமுகமானார்கள். அவர்களில் ஜீவா இப்போது மிளிர்ந்து வருகிறார். ஆசை ஆசையாய், தித்திக்குதே என்ற அவரது இரு படங்களும் அடிவாங்கின.

சத்யராஜ் மகன் சிபிராஜ் ஸ்டூடண்ட் நம்பர் 1 மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா நாயகர்களின் எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்டினார்.

ஜெயம் படத்தின் மூலம் ஜெயம் ராஜா இயக்குநராகவும், ஜெயம் ரவி நடிகராகவும் அறிமுகமானார்கள். ரவி அதன் பின் சில வெற்றிப்படங்கள் கொடுத்தும் முன்னிலை நடிகராக பரிமளிக்காமல் இருக்கிறார். ஜெயம் ராஜா நவீன ஜெராக்ஸ் நுட்பத்தை அறிமுகப்படுத்தி, ஷங்கரைக் கூட அதை பாலோ செய்ய வைத்து விட்டார்.

சேர்த்ததை எல்லாம் ஒரே படத்தில் விட்டவர்கள் வரிசையில் இந்த ஆண்டு ஏ எம் ரத்னமும், ரம்பாவும் சேர்கிறார்கள். எனக்கு 20 உனக்கு 18ல் ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா பணத்தை வாரி இறைத்திருந்தார். சந்திப்போமா என்னும் பாடலில் மட்டும் ஏகப்பட்ட மாண்டேஜ் காட்சிகள். ஒவ்வொரு காட்சியிலும் ஏராளமான ரிச் கேர்ள்ஸ். ஏ ஆர் ரகுமான் பாடல்களை இசையமைக்க எடுத்துக் கொண்ட நேரம் அளவுகூட படம் ஓடவில்லை.

சார்லிஸ் ஏஞ்சல்ஸ் பாதிப்பில் படம் எடுக்க நினைத்த ரம்பாவின் பொருளாதாரத்துக்கு திரி ரோசஸ் மலர் வளையமாக மாறிவிட்டது.

பெரிய இயக்குநர்களுக்கு இந்த ஆண்டு மரண அடியாக அமைந்தது. பாலுமகேந்திரா – ஜூலி கணபதி, பாரதிராஜா – ஈரநிலம், பாக்யராஜ் – சொக்கத்தங்கம் என சறுக்கினார்கள்.

மௌலிக்கு நள தமயந்தியும், பிரியதர்சனுக்கு லேசா லேசாவும், ஷங்கருக்கு பாய்ஸும் சறுக்கலைத் தந்தன.

நாசர் மோகன்லால், சிம்ரன் கூட்டணியுடன் பாப் கார்ன் எடுத்தார். அது ரசிக யானையின் தீனிக்கு பாப்கார்ன் ஆகவே அமைந்தது.

விஜய்க்கு வசீகரா சுமாராகவும், புதிய கீதை மட்டமாகவும், திருமலை நன்றாகவும் ஓடியது. சிம்பு தம்மில் கொஞ்சம் தம் பிடித்தார். ”அலை” யில் கரை சேரவில்லை.

அங்கிள் நடிகர்களாக மாறியிருந்த விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு ஆகியோருக்கு இந்த ஆண்டும் ஏமாற்றமே. விஜயகாந்த் சொக்கத்தங்கம் மற்றும் தென்னவன் ஆகிய படங்களிலும் சத்யராஜ் ராமச்சந்திரா, மிலிடரி ஆகிய படங்களிலும் நடித்தனர்.


சரத்குமாருக்கு பாட்ஷாவின் ரீ மேக்கான அரசு மற்றும் கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் வெளியான பாறை ஆகியவை ஆறுதலான வெற்றியைத் தந்தன. பிரபு எஸ் மேடம், பந்தா பரமசிவம் போன்ற காமெடி படங்களில் நடித்தார்.


எஸ் டி சபா இயக்கிய புன்னகை பூவே, சந்தோஷ் இயக்கிய மனசெல்லாம் போன்ற படங்கள் மனதை தாலாட்டின. ஜே டி – ஜெர்ரி இயக்கிய விசில் காம்பஸ் திரில்லராக வெளிவந்தது.

இந்த ஆண்டை வடிவேலுவின் செகண்ட் இன்னிங்ஸ் ஆண்டு என்றும் சொல்லலாம். வின்னர் படத்தின் மூலம் ஆர்ப்பாட்டமாக அதை ஆரம்பித்தார். பூபதி பாண்டியனின் வசனம், சுந்தர் சியின் கண்ட்ரோல் துணையுடன் அவர் தியேட்டரை அதிரவைத்தார்.

இதே ஆண்டில் தான் சுந்தர் சி அன்பே சிவம் என்ற படத்தையும் இயக்கினார்.

தாஜ்மகாலைப் பற்றி ஒரு ஆங்கில எழுத்தாளர் எழுதும் போது, எவ்வளவோ புகைப்படங்கள் எல்லாவிதமான கோணங்களிலும் எடுக்கப்பட்டு விட்டன. அழகை ஆராதித்து எல்லா மொழிகளிலும் கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன. ஏராளமான வல்லுநர்கள் டெஸ்டிமோனியல்கள் கொடுத்து விட்டார்கள். ஆனாலும் அதைப்பற்றி எழுத, படமெடுக்க இன்னும் அங்கே ஏராளமான விஷயம் இருக்கிறது என்றார்.

அது அன்பே சிவம் படத்துக்கும் பொருந்தும். 2003ல் தமிழில் பிளாக் பரவலாக மக்கள் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்து, இன்று பிளாக் ஆரம்பிக்கும் புது பதிவர் வரை அதைப் பற்றி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அன்பே சிவம் பற்றி எழுதி விடுகிறார்கள்.

இது என் பங்குக்கு.

2007ல் என் நண்பன் அனுப்பிய ஆராய்ச்சிக் கட்டுரை பல கேள்விகளுடன் நிராகரிக்கப்பட்டது. நான் அனுப்பி இருந்த ஒரு கட்டுரைக்கும் பலத்த அடி. மாலையில் இருவரும் சேர்ந்து அன்று விடுதியில் திரையிடப்பட்ட இந்தப் படத்தைப் பார்த்தோம். இந்த வேலைக்கே சரியான அங்கீகாரம் கிடைக்கலியே, நாம பார்த்ததுக்கு கிடைக்காததுக்கு வருத்தப் படுறோம் என மனசைத் தேத்திக் கொண்டோம்.


கட்டுரைக்கு உதவிய தளங்கள்

தமிழ்சினிமா.காம்

விக்கி பீடியா

செந்தில் அண்ணன்

செந்தில் வருவாப்புல, ஸ்கோடா அம்பத்திரெண்டு நாப்பது எடுத்துக்குங்க. மீனாட்சியம்மன் கோயில் போயிட்டு நீங்க இறங்கிக்கங்க. கெஸ்டு அப்படியே கொடைக்கானல் போறேன்னாரு. மூணு நாள் ஸ்டே. என்றபடியே ஐந்தாயிரததை திணித்தார் மானேஜர்.

செந்திலா? என்று ஒரு கணம் தயங்கினேன். பின்னர் வேறுவழி எதுவும் இல்லாததால் தலையசைத்து பணத்தை வாங்கிக் கொண்டேன்.

தயங்க காரணம் இருந்தது. அது செந்தில் அண்ணன் பற்றி மற்ற ட்ரைவர்கள் ஏற்படுத்திருந்த பிம்பம். லேசா அவரப் பார்த்து சிரிச்சீங்க, அடுத்த நாளே மகனுக்கு உடம்பு சரியில்ல, எக்ஸாம் பீஸ் கட்டலைன்னு நூறு, இருநூறு ரூபாயாவது அடைப்பை போட்டிருவார் என்று அவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள்.

நாங்கள் பணிபுரிவது மதுரையில் சுவிட்ச் கியர் தயாரிக்கும் ஒரு கம்பெனியில். தயாரிப்பு என்று சொல்லக்கூடாது. கோவையில் சில சிறு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருளை வாங்கி, ஸ்டிக்கர் ஒட்டி, எங்கள் எம்பளம் போட்ட அட்டைப் பெட்டியில் அடைத்து விற்பதே எங்கள் பணி.

எங்கள் முதலாளிக்கு அரசியல் மட்டத்தில் பல தொடர்புகள் உண்டு. அதன் மூலம் வட மாநிலங்களில் இருக்கும் அரசு நிறுவனங்களுக்கு சுவிட்ச் கியர் சப்ளை செய்யும் டெண்டரை எடுத்து விடுவார். அந்த நிறுவனங்களின் அதிகாரிகள் அவர்களைச் சார்ந்தோர் வந்தால் மதுரை, ராமேஸ்வரம் என்று புண்ணியதலங்களுக்கு கூட்டிச் செல்வதும், கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று குளிர்விப்பதும் என் பணியில் அடங்கும். மாதம் நான்கைந்து பேராவது வந்துவிடுவார்கள்.

நாளிதழ்களில் வரும் டெண்டர்களை பார்ப்பது, கொட்டேஷன் தயாரிப்பது, ஆர்டர் கிடைத்த பின் அதற்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்வது போன்றவற்றிற்கு 50 வயது கடந்த ஆறேழு பேர் இருக்கிறார்கள். பேக்கேஜிங், டெஸ்பாட்ச்சுக்கு ஒரு ஐந்து பேர், வாகனம் ஓட்ட ஒரு ஐந்து பேர் என மொத்த எண்ணிக்கை 20ல் அடங்கிவிடும்.

எங்கள் மானேஜர் ஒரு வில்லங்கப் பேர்வழி. லோக்கல் வேலையாகப் போவோர் பஸ் ஃபேர் வேண்டும் என்று கேட்டால், என்ன விஸ்பர் வேண்டுமா? என கேட்பார். டெண்டர் செக்சனில் ஒன்றரைக் கண் உடைய ஒருவரை அரை பரமசிவம் என்று குறிப்பிடுவார். கேட்டால் சிவனுக்கு நெற்றிக்கண்ணைச் சேர்த்து மூன்று கண். இவன் ஒன்றரை கண் என்பார்.

ஒருமுறை நான் அவர் சொன்ன வேலையைச் சரியாகச் செய்யாமல் சொதப்பிய போது, அவனுக்கு பத்து காசு கம்மி என்று கமெண்ட் அடித்தார். எனக்குப் புரியாமல் செக்‌ஷனில் கேட்டபோது, உங்களுக்கு 10% சதவிகிதம் நார்மல் அறிவை விட கம்மி என்கிறார் என்றார்கள்.

இதனால் கடுப்பான நான், ஆபிஸ் வேலை இல்லாத நேரங்களில் ட்ரைவர்களுடன் தான் டாப் அடித்துக் கொண்டிருப்பேன். அவர்களும் என்னுடன் மிக இயல்பாகப் பழகிவிட்டார்கள். பாஸு அம்பது ரூபா கொடுங்க, கொத்த அணைச்சுட்டு வர்றோம், பேட்டால கழிச்சுக்குங்க என்று சாப்பிட பணம் வாங்கிப் போவார்கள். அவசர வேலை என்றால், கவலைப்படாதீங்க தொத்தி தொண்ணூறுல போயாவது முடுச்சுடுவோம் என்று நம்பிக்கையூட்டுவார்கள்.

ஆனால் செந்திலுடன் மட்டும் பழக்கம் இல்லை. மேலும் அவர் ஓனரின் ட்ரைவர். பெரும்பாலும் ஓனருக்குத் தான் ஓட்டுவார். அன்று, வழக்கமான ட்ரைவர்கள் விடுப்பில் இருந்ததால் வேறு வழியின்றி செந்திலுடன் போக வேண்டியதாகிவிட்டது.

கெஸ்டுகளுடன் மூவ் பண்ணும் விதம், ஸ்மூத் ட்ரைவிங், நாசூக்கு என பல வழகளில் அவர் என்னை மிகவும் கவர்ந்து விட்டார். தொடர்ந்து முக்கிய கெஸ்டுகள் வரும் போதெல்லாம் அவர் வந்தால் நன்றாக இருக்கும் என்று நானே அவரைக் கேட்டு வாங்கிக் கொண்டேன்.

மீனாட்சி பட்டிணத்தில் இருக்க ஒரு வீடும், அஞ்சாயிரமும் இருந்தா ராசா மாதிரி பொழைக்கலாம் என்று முன்னர் சொல்வார்கள். அதை செயலில் எனக்கு காட்டியவர் செந்திலண்ணன் தான். அனாவசிய செலவுகள் இன்றி, அமைப்பாக குடும்பம் நடத்துவார்.

சர்க்கஸ் போனா, 100 ரூபா டிக்கட் ஆரம்பிக்கிற மொதோ வரிசையும், 200 ரூபா டிக்கட் முடியுற கடைசி வரிசையும் பக்கம் பக்கமா இருக்கும். நம்ம சமார்த்தியம் தான் நாம எவ்வளோ கொடுத்து அங்க உட்காருறோம்ங்கிறத நிர்ணயிக்குது. அதனால யோசிச்சு, புத்திசாலித்தனமா நடந்துக்கிட்டா, மத்தவன் 20 ஆயிரத்துல அனுபவிக்கிற வசதிய நாம 10 ஆயிரத்துலயே அனுபவிக்கலாம் என்பார்.

நல்ல பழக்கம் ஏற்பட்ட பின் ஒரு நாள் அவரிடம் நெடு நாளாய் இருந்த சந்தேகத்தை அவரிடம் கேட்டே விட்டேன். ஏண்ணேன், நீங்க கைமாத்து அடிக்கடி கேட்பீங்கன்னு எல்லாரும் சொல்றாங்களே என்று.

காயம் பட்ட குரலில் ஆரம்பித்து

தம்பி, நான் ஓனருக்கு ஓட்டுறவன். இங்க 20 பேர் இருக்கீங்க. பணம் நிறையா பொழங்கும், வேலையும் சிரமமில்ல. அதனால யாரும் தகிடுதத்தம் பண்ணீரக் கூடாதுன்னு அவர் அடிக்கடி செக் பண்ண வருவார். அது போக அரசியல்ல வேற இருக்கார். வேண்டாதவங்களும் உண்டு. இங்க இருக்குறவங்க அவர் எப்படி?, எப்ப வருவார், எங்க போவார்ன்னு அடிக்கடி கேட்பாங்க. அதைச் சொல்லுறது தர்மமில்ல. கேட்கும் போது சொல்லாட்டியும் தப்பா எடுத்துப்பாங்க. அதுனால அந்த மாதிரி யாரெல்லாம் கேட்பாங்களோ, அவங்க கிட்ட கைமாத்தா அடிக்கடி பணம் கேட்டு நொச்சுவேன். அதுக்குப் பயந்துகிட்டே யாரும் நம்மளை நெருங்குறதில்லே

என்று முடித்தார்.

February 21, 2012

பாக்யராஜும் எதார்த்த காதல்களும்

நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் வரை காதல் என்று ஒன்று கிடையாது என்றே நம்பிக்கொண்டிருந்தேன். அக்காலத் திரைப்படங்களில் பறந்து பறந்து போடும் மிகைப்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகளைப் போலவே காதலும் மிகைப்படுத்தப் பட்ட ஒன்று என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கு புறச்சூழலே காரணம். ஏனென்றால் எங்கள் தெருவிலும், அருகேயிருந்த தோட்டத்திலும் யாரும் குரூப் டான்ஸர்கள் புடை சூழ ஆடிக்கொண்டிருக்கவில்லை.

ஆனால் காதல் என்ற ஒன்று உலகில் இருக்கிறது என்று எனக்கு அறிமுகப்படுத்தியவர் தெருவில் இருந்த குமார் அண்ணன். எப்பொழுதும் என்னை பவுண்டரி லைனுக்கு வெளியிலேயே நின்று பீல்ட் செய்யுமாறு பணிக்கும் அவர், ஆச்சரியமாக பேட் செய்யும் வாய்ப்பை வழங்கினார். பின்னர் தான் தெரிந்தது, விக்டோரியா க்வின் என்று அந்த செட்டால் பெயர் சூட்டப்பட்டிருந்த கோடி வீட்டு நிர்மலா அக்காவுக்கு என்னைத் தூது அனுப்பத்தான் என்று.

ஆம். நாம் எந்த இடத்தில் இருந்தாலும் அதைச் சுற்றி ஒரு காதல் கதை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த பத்தாண்டுகளில் அப்படி நடக்கும் பல காதல்கள் திரைப்படுத்தப் பட்டிருக்கின்றன. காதல், 7ஜி ரெயின்போ காலனி, அங்காடிதெரு என இப்போது பல படங்களில் சமூகத்தில் நாம் கேள்விப்படும் இயல்பான காதல்கள் காட்சிப்படுத்தப் படுகின்றன.


ஆனால் தமிழ் சினிமா ஆரம்பித்த காலத்தில் கடவுள்கள், அரச குடும்பத்தினர், செல்வந்தர்கள் வட்டாரத்தில் நடக்கும் காதல்களே பெரிதும் திரைப்படுத்தப் பட்டிருந்தன. பின் எம்ஜியார்,சிவாஜி கால கட்டத்தில் ஒரு ஹீரோவைச் சுற்றியே காதல் இருந்தது. அரிதாக ஹீரோயினியின் பார்வையிலும். ஸ்ரீதர் வருகைக்குப் பின் நடுத்தர வர்க்கத்துக் காதல் [கல்யாணப்பரிசு] கதைகளின் வரவு ஆரம்பித்தது. பாலசந்தரின் பெருநகர மத்திய தர வர்க்கக் காதல் கதைகள், பாரதி ராஜாவின் கிராமத்துக் காதல் கதைகள், மகேந்திரன், பாலு மகேந்திராவின் இயல்பான காதல் கதைகள் என அது தொடர்ந்தது.

இந்த வரிசையில் பார்த்தால், பாக்யராஜும் பல இயல்பான காதல் களங்களை தன் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார். அவருடைய படங்கள் குழப்பமில்லா திரைக்கதை,மெல்லிய காமம் கலந்த நகைச்சுவை போன்ற அம்சங்கள் கொண்டதாக மட்டுமே இப்போது அடையாளப்படுத்தப் படுகின்றன. ஆனால் அவர் படங்களில் தான் பல இயல்பான காதல் களங்கள், அதுவரை யாரும் தொடாத களங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

அவர் இயக்கிய முதல் படமான சுவரில்லாத சித்திரங்களில், ஒரு தெருவில் இருக்கும் அழகான பெண் மீது, அடுத்த தெருவில் இருக்கும் வசதி படைத்தவனுக்கு வரும் காதல், அது தொடர்ந்த காட்சிகள் இயல்பாக சொல்லப்பட்டிருக்கும். அப்பெண்ணை சந்திக்க, கவர அடிக்கடி அங்கு விஜயம் செய்வதும், அதற்காக அங்கு உள்ள கடையில் டாப் அடிப்பதும், அந்தக் கடைக்காரர் அதை உபயோகப் படுத்திக் கொள்வதும் இன்னும் கூட எங்காவது ஒரு இடத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு தெருவில் உள்ள இளைஞர்கள் மற்றும் யூத்துகளின் அக/புறச் சமநிலையை குலைக்க வேறெதுவும் வேண்டாம். ஒரு அழகுப் பெண்ணுடைய குடும்பம் அங்கே குடியேறினாலே போதும். அந்தப் பெண்ணின் கவனம் கவர, காதலைப் பெற அம்மக்கள் எந்த நிலைக்கெல்லாம் இறங்குவார்கள் என்பதை காட்சிப்படுத்திய படம் ”இன்று போய் நாளை வா”. தன் குடும்ப அவசரத்திற்காகக் கூட கடைக்குப் போகத் தயங்கும் ஒருவன், பெண்ணுக்காக ரேஷன் கடைக்குப் போவதும், வடாம் பிழிவதும் உச்சகட்டமாக கழுதையைக் கூட அழைத்து வருவதும், யதார்த்தத்தை பிரதிபலித்த ஒன்று. இன்னொரு நாயகன் படித்த ஹிந்தி இன்று வரை நமக்கு இனித்துக் கொண்டுதான் இருக்கிறது. இப்போதும் கூட தெருவிலோ, அலுவலகத்திலோ ஒரு அழகுப் பெண்ணின் வருகை அங்குள்ள ஆண்களின் சமநிலையை குலைத்துக் கொண்டிருப்பது நாம் அறியாததா, என்ன?


ஸ்டிரீட் ஸ்மார்ட் என்னும் வகையிலான பெண்களையும் நம் அன்றாட வாழ்க்கையில் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். கறாரான பேச்சு, தன் குடும்ப நலனுக்காக பல வழிகளும் சிந்திப்பது, மற்றவர்களின் உணர்வுகளுக்கு ஒரு அளவுக்கு மேல் மதிப்பு கொடுக்காதது, தன் கருத்தே சரி என்று அதற்கு வாதங்களை அடுக்குவது என்ற குணங்களுடன் வாழும் பெண். அவளுக்கு வரும் காதல், கணவன் இன்னொரு பெண்ணுடன் அசந்தர்ப்பவசமாக உறவு கொண்டதால் வந்த கோபம், பின்னர் வெல்லும் காதல் என ஒரு நடுத்தர வர்க்க ஸ்டிரீட் ஸ்மார்ட் பெண்ணின் காதல்தான் மௌன கீதங்கள்.

ஒரு பெண், இயற்கையாக அவளுக்குத் தோன்றும் காதல், அதை பகிர, குறைந்த பட்ச தகுதி [அழகு, குணம்]கொண்ட ஆண் அவசியம். வீடு, தெருவைத் தாண்டி செல்ல முடியாத சூழல். சுற்றிலும் எதிர்பார்ப்புக்கு ஏற்ற ஆண் இல்லை. அந்தச் சூழ்நிலையில் வீட்டில் வாடகைக்கு குடியிருக்க வருபவனிடத்தில் அவை இருக்கும் போது காதல் பூப்பது இயல்புதானே? அந்த ஏழு நாட்களிலும் அதுதான் நடந்தது.

பெண்ணைத் திருமணத்திற்காகப் போய் பார்த்த உடன் மிகவும் பிடித்து வருகிறது. ஆனால் லௌகீக, ஈகோ காரணங்களுக்காக அது தகையாமல் போய் விடுகிறது. ஆனாலும் அதை நனவாக்க முயற்சி எடுக்காமலா இருப்பார்கள் நம்மவர்கள்?. அப்படி காதல்வயப்பட்டவனின் முயற்சிகள் தூறல் நின்னு போச்சாக வந்து பலரின் மனசுக்குள்ளும் மழையடித்துப் போனது.

சிறு வயதில் தோன்றி, மனதில் ஆழமாக வேரூன்றிய காதலைப் பேசிய படம் ”டார்லிங்... டார்லிங்... டார்லிங்...” அக்கால பாக்யராஜ் படங்களுடன் ஒப்பிடும் போது இது பேன்ஸியான காதல்தான்.

என் தந்தையின் பணி காரணமாக பல ஊர்களில் வசித்திருக்கிறோம். அதில் பல நண்பர்களைத் தந்த வரையில் மறக்க முடியாத ஊர் அருப்புக்கோட்டை. இரண்டாம் ஆட்டம் முடிந்து, எங்கள் குழு [ஐ டி சி என அப்போது பெயர் சூட்டப் பட்டிருந்தோம் தெருவால் : இண்டர்நேஷனல் தரிசு கோஷ்டி] திரும்பிய போது, தெருவே அல்லோல கல்லோலபட்டுக் கொண்டிருந்தது. அந்தத் தெருவின் பிரெஸ்டிஜ் பத்மனாபன் கதறிக் கொண்டிருந்தார். காரணம் அவர் பெண் ஜெண்ட்டாகி [கம்பி நீட்டுவது, எஸ்ஸாவதின் அருப்புக்கோட்டை ஸ்லாங்] இருந்தாள். உடன் போக்கு எய்தியவன், பக்கத்து தெரு அசடு ஒருவன். சில நாட்கள் தேடலுக்குப் பின் அவர்கள் சிக்கினார்கள். ஐ டி சி யின் உறுப்பினன் ஒருவன் தாங்க முடியாத மன வருத்தத்தில் அந்தக் காதலின் காரணத்தை அப்பெண்ணிடம் கேட்ட போது, எங்க வீட்டில அப்பா, பெரியப்பா, சித்தப்பா, ஏன் என் அண்ணன் உட்பட யாருமே கட்டுனவள மதிக்க மாட்டாங்க, மாடு, பன்னின்னுதான் கூப்பிடுவாங்க. ஆனா, அவங்க வீட்டுல அப்படியில்ல, மரியாதையா நடத்துறதப் பார்த்தேன். அதுக்கு ஆசைப்பட்டுத் தான் அவன லவ் பண்ணினேன் என்றாள்.


முருங்கைக்காய்க்காக மட்டுமே நம் ஞாபகத்தில் இருக்கும் முந்தானை முடிச்சின் அடிநாதம் இது தான். ஒரு காட்சியில் ஊர்வசி சொல்லுவார், இந்த ஊரில எல்லோரும் பொண்டாட்டி இருக்கும் போது, இன்னொன்னை வச்சிருக்காங்க, எங்க அய்யனும்தான். ஆனா, இந்த வாத்தியாரு பொண்டாட்டி செத்தும் பிள்ளையை வளர்க்கணும்னு யோக்கியமா இருக்காரு, அதான் அவர் மேல ஆசப் பட்டேன் என்பார். குடும்பத்தில், சூழலில் காணக் கிடைக்காத பண்பை இன்னொரு ஆளிடம் பார்க்கும் போது பூக்கும் காதல் எல்லைகளையும் அறியாது.

இப்படி பெரும்பாலும் இயல்பான காதல்களன்களுடன் பயணித்த பாக்யராஜ், வணிக வெற்றிகளின் காரணமாக சிறிது திசை மாறினார்.

எங்க சின்ன ராசாவில் தம்பிக்கு என்று சொன்ன பெண்ணை தனக்கு என்று பார்த்து, திருமணத்திற்கு பின் அவள் காதலை உண்மையாக வெல்லும் கமர்சியல் பாத்திரம் பாக்யராஜுக்கு.

பாலகுமாரன் இயக்கத்தில், பாக்யராஜின் மேற்பார்வையில் வந்த படம் இது நம்ம ஆளு. இதில் புரோகிதம் செய்ய வேடமிட்டு வந்த ஒருவன் மீது அந்த வீட்டுப் பெண்ணுக்கு ஒரே நாளில் காதல் வந்தது டூ மச் தான்.

ஆராரோ ஆரிரரோ, வீட்ல விசேஷங்க ஆகிய படங்களில் மனநிலை தவறிய அல்லது நடிக்கும் பெண் அவளுடன் ஒரு நல்லவனுக்கு வரும் காதல், அதை ஊக்குவிக்கும் பொது மனிதர் என சினிமா காதலே பிரதானமாக இருந்தது.

சுந்தர காண்டத்தில் மாணவிக்கு ஆசிரியர் மேல் வரும் காதலைச் சொல்லி இருந்தார். இது ஓரளவு நடைமுறையில் நாம் பார்த்து வருவது. பவுனு பவுனு தான் படத்தில் குழந்தைப் பருவத்தில் இருந்து தன் மாமன் மேல் தீராக் காதல் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் காதல். இது மிகவும் மிகைப்படுத்தப் பட்டு சொல்லியதால் தோல்வி அடைந்தது.


பாக்யராஜின் படங்களிலேயே நம்ப முடியாத காதல் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி தான். அரண்மனை இளவரசி, ஒருவன் செய்யும் நல்ல காரியத்தைப் பார்த்து ஒரே நாளில் காதல் கொள்வதும், அவனை அடைய பல முயற்சிகள் எடுப்பதும் பேண்டஸி வகையில் இந்த படத்தைச் சேர்க்கச் சொல்லி நம்மைத் தூண்டுகிறது.

ஒரு நேர்மையான பத்திரிக்கையாளன் மீது, பணக்காரப் பெண்ணுக்கு வரும் காதல் ஞானப்பழம். இது இந்தக் காலத்தில் நடக்குமா என்ன?

சொக்கத் தங்கத்தில் விஜயகாந்த்துக்கு சவுந்தர்யா மேல் வரும் காதல் முதியோர் கல்வியை ஞாபகப்படுத்தியது.

தன் வாரிசுகளை களம் இறக்கும் போதும், இந்த பாணியை மாற்றவில்லை. பாரிஜாதத்தில் அம்மாவிற்கு பிடித்ததனால் பெண்ணை மணக்கும் மகன் கூட நிஜத்தில் நடக்க வாய்ப்புள்ளது. ஆனால் சித்து+2 சினிமா காதல்தான்.

ஒரு கட்டத்திற்குப் பிறகு சறுக்கினாலும் தமிழ் சினிமாவுக்கு பல வகையான காதல் களங்களை அறிமுகப்படுத்தியவர்களில் பாக்யராஜும் ஒருவர் என்பதை மறுக்க முடியாது.

பண்புடன் இணைய இதழில் வெளியான கட்டுரை

நன்றி

பிப்ரவரி 15 பண்புடன் இதழின் ஆசிரியர் திரு வெயிலான் ரமேஷ்

பண்புடன் ஆசிரியர் குழுமம்

February 20, 2012

அக்கிரிடிடேசன் – பகுதி 2 [வாஷிங்டன் அக்கார்ட்]

முதல் பகுதியை வாசிக்க

சென்ற பகுதியில் பொறியியல் கல்லூரிகளுக்கான அக்கிரிடிடேசன் பற்றிப் பார்த்தோம். அதில் பாடப்பிரிவுகளுக்குத்தான் [டிபார்ட்மெண்ட்] தர நிர்ணயம், கல்லூரிக்கு அல்ல என்பதைப் பார்த்தோம்.

ஒரு டிபார்ட்மெண்டில் இருந்து குறைந்தது இரண்டு பேட்ச் வெளியில் சென்றிருந்தால்தான் தர நிர்ணயக் கமிட்டிக்கு அப்ளை செய்யமுடியும்.

தரநிர்ணயம் என்பது தன்னார்வத்தில் [வாலண்டரி] செய்யக்கூடியது. கட்டாயமில்லை. பொறியியியல் கல்லூரிகளுக்கு ஏ ஐ சி டி ஈயின் அனுமதிதான் கட்டாயம்.

அந்த அப்ரூவலானது, கல்லூரியில் குறைந்த பட்ச கட்டுமானம் இருக்கிறதா, நடத்த பணம் இருக்கிறதா? தகுதியான ஆசிரியர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை பரிசோதித்து கொடுக்கப்படுவது. ஆனால் என் பி ஏ தர நிர்ணயமானது, படித்து முடித்து வெளியேறும் மாணவரிடத்தில் தரம் இருக்கிறதா என்று பரிசோதித்து அளிக்கப்படுவது.

எனவே தர நிர்ணயத்துக்கு அப்ளை செய்யும் கல்லூரிகள் இரண்டு பகுதிகளாக ரிப்போர்ட் தயார் செய்ய வேண்டும்.

முதல் பகுதியில் கல்லூரியின் அடிப்படை கட்டுமானங்கள், ஆசிரியர் தகுதி, எண்ணிக்கை, அவர்களில் சம்பள பட்டியல், ஆடிட்டோரியம், பிளேஸ்மெண்ட் செல், விடுதி வசதி, உடற்பயிற்சி வசதி, மினரல் வாட்டர், வங்கி, தபால் அலுவலக வசதி (கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயேயிருந்தால்) போன்றவற்றைச் சொல்லவேண்டும்.

பகுதி 2ல் தரநிர்ணயம் கோரும் துறையின் ஆசிரியர் தகுதி, அவர்களின் சாதனைகள், ஆசிரியர் மாணவர் விகிதம், ஆய்வுச்சாலை வசதிகள், நடத்தப்பட்ட சிறப்பு சொற்பொழிவுகள், தேர்ச்சி விகிதம் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.

இந்த தகவல்களை ஆராயும் என் பி ஏ அலுவலகம், திருப்தியடைந்தால் ஆய்வுக்கு வரும் தேதியை கல்லூரிக்குத் தெரியப்படுத்தும்.

இதற்கான குழுவிற்கு ஒரு சேர்மன் இருப்பார். எந்த டிபார்ட்மெண்ட் தர நிர்ணயம் கோருகிறதோ, அதில் எக்ஸ்பர்ட்டான இருவர் (கல்விப்பணியில் இருந்து ஒருவர், தொழிற்சாலை பணியில் இருந்து ஒருவர்) குழுவில் இருப்பர். இவர்கள் யாரென வந்து சேரும் வரை தெரியாது.


அவர்கள் வந்து, இரண்டு பகுதிகளில் கொடுத்துள்ள விவரங்கள் சரியாக இருக்கிறதா என சரி பார்ப்பார்கள். இதற்காக கல்லூரியின் முதல்வர் முதல் பகுதிக்கும், துறைத்தலைவர் இரண்டாம் பகுதிக்கும் பிரசண்டேஷன் கொடுக்க வேண்டும். பின்னர் வளாகத்தையும், குறிப்பிட்ட துறையையும் நேரடியாக ஆய்வு செய்வார்கள்.

இதன் பின்னர் அந்தத்துறையின் ஆசிரியர்களை தனியே சந்திப்பார்கள்.

பின்னர் மாணவர்களை தனியே சந்தித்து கிராஸ் செக் செய்வார்கள்

பின்னர் மாணவர்களின் பெற்றோர்களைச் சந்திப்பார்கள்.

முந்தைய பேட்ச் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பளித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் (எம்ப்ளாயர்ஸ் மீட்) விசாரணை செய்வார்கள்.



இதன் அடிப்படையில் தான் தர நிர்ணய சான்றிதழ் வழங்கப்படும்.


இதில் வாசிங்டன் அக்கார்ட் ஒப்பந்தப்படி ஒரு டிபார்ட்மெண்டுக்கு இரண்டு ஆண்டுகள் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு தர நிர்ணயம் தரப்படும்.

அவர்கள் 1000 மதிப்பெண்களுக்கு பரிசோதிப்பார்கள். அதில் 10 பிரிவுகள் இருக்கும். ஆசிரியர் தகுதி, தேர்ச்சி விகிதம் இப்படி. ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தது 60 மதிப்பெண்கள் வாங்க வேண்டும். மொத்தமாக 750 மதிப்பண்கள் வாங்க வேண்டும். 750க்கு மேல் வாங்கினால் ஐந்தாண்டுகள் கிடைக்கும். அதற்கு குறைந்தால் இரண்டாண்டுகள் கிடைக்கும்.

பின்னர் ரீ-அக்கிரிடிடேஷசன் (அதாவது இரண்டோ, அல்லது ஐந்தோ காலம் முடிந்தவுடன்) செல்லும் போது, சென்ற முறையை விட சற்றேனும் கூடுதல் மதிப்பெண்கள் பெற வேண்டும்.

இந்த முறையில் ஆசிரியர்களின் தகுதிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

1. படிப்பு
2. ஆராய்ச்சி கட்டுரைகள்
3. கலந்து கொண்ட கருத்தரங்குகள்
4. வெளியில் அளித்த சிறப்பு சொற்பொழிவுகள்
5. இண்டஸ்ட்ரியல் கன்சல்டன்சி
6. அறிவுசார் உரிமைகள்
7. பதிப்பித்த புத்தகங்கள்

என பல அளவுகோலின்படி ஆசிரியரின் தரம் எடை போடப்படுகிறது.

பின்னர் அந்த துறையில் எத்தனை பேர் நீண்ட காலமாக பணியாற்றுகிறார்கள் (எம்பிளாயி ரிடன்சன்) என்பதும் முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.


மாணவர்களின் தரத்திற்கு

1. தேர்ச்சி விகிதம்
2. பல்கலைகழக ரேங்குகள்
3. பெற்றுள்ள வேலை வாய்ப்புகள்
4. வேலையின் உயர்ந்தபட்ச, குறைந்தபட்ச சம்பளம்
5. கலந்துகொண்ட கருத்தரங்குகள்

ஆகியவை அளவுகோலாக பார்க்கப்படுகின்றன.


(தொடரும்)

February 19, 2012

தீப்பொறி ஆறுமுகம் பொதுக்கூட்டம் – ஒரு பார்வை

பிப்ரவரி 18, 2012 அன்று மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் திமுகவின் பொதுக்குழுத் தீர்மானங்களை விளக்கி தீப்பொறி ஆறுமுகம் உரையாற்றினார். அந்த பொதுக்கூட்டம் குறித்த ஒரு பார்வை.

கூட்டம் நடந்த இடத்தில் சென்ற மாதம் தான் எம்ஜியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. எண்ணி பத்து பேர்தான் பார்வையாளர்கள்.

ஆனால் நேற்று இரவு 7.30 மணிக்கு மேல் கூட்டம் சிறுக சிறுக வர ஆரம்பித்தது. கிடைக்கும் கேப்பில் எல்லாம் தங்கள் டூ வீலர்களை பார்க் செய்துவிட்டு ஆங்காங்கே பொதுமக்கள் நின்று கொண்டிருந்தார்கள். மேடைக்கு எதிரே உள்ள சேர்களில் கட்சியினர் அமர்ந்திருந்தனர். கட்சியினரைவிட பொதுமக்கள் கூட்டம் 10 மடங்கு இருக்கும்.

முதலில் பேசிய ஒருவர் சொன்னது.

விஜயகாந்த் மாதிரியே நாங்களும் கேட்குறோம். இன்னைக்கு நிலமைக்கு கவர்னர் ஆட்சியை கொண்டு வந்திட்டு திருமங்கலம் நகராட்சி தேர்தல நடத்து, நாங்க அசால்டா ஜெயிப்போம் என்று.

மாவட்ட துணை செயலாளர் எம் எல் ராஜ் பேசும் போது,
கப்பலூர் தொழில் பேட்டை மின்வெட்டால் கடுமையாய் பாதிக்கப்பட்டு இருப்பதையும், விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் இருப்பதையும் குறிப்பிட்டு, இன்னும் ஆறு மாதங்களில் விலைவாசி உயர்வு எங்கோ போய்விடும் என்று புளியை கரைத்தார்.

சரியாக ஒன்பது மணி அளவில் தீப்பொறியார் பேச்சைத் தொடங்கினார்.

தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார், குரேஷி, தற்போது தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி முதற்கொண்டு தமிழக மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், சட்டங்கள், தீர்ப்புகள் என ஏகப்பட்ட தகவல்களுடன் ஒன்றரை மணி நேரம் உரையாற்றினார்.


பேச்சில் இருந்து

ஜெ, சங்கரன்கோவிலுக்கு 26 மந்திரிகளை அனுப்புகிறார். ஆனால் தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூருக்கு எத்தனை பேரை அனுப்பினார்?

இப்ப சங்கரன் கோவிலுக்கு வந்திருக்கிற 26 பேர் கிட்டயும் கேளுங்க, யாராவது தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா மாவட்டத்தையும் சொல்லிட்டா நான் அரசியல் இருந்தே விலகிக்கிறேன்.

இந்த ஊர் நகரச்செயலாளர் கிட்ட இரவு 9.50க்கு மேல பேசக்கூடாதுன்னு எழுதி வாங்குனாங்களாம். முந்தா நாள் கரூரில் பத்தரை வரைக்கும் பேசினேன்.

கரூருக்கு ஒரு சிஎம், திருமங்கலத்துக்கு ஒரு சி எம்மா? ஒரே சட்டம்தானே?

பை எலெக்‌ஷன் நடக்குற தொகுதியில கட்டுப்பாடு வை. இல்ல அந்தத் தொகுதி இருக்குற நெல்லை மாவட்டத்துக்கு வை. அத்வும் இல்லையா முந்தி ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில இருந்ததால தூத்துக்குடி மாவட்டத்துக்கும் கட்டுப்பாடு வை. திருமங்கலத்துல ஏன் கட்டுப்பாடு?


அண்ணா கிட்ட என்விஎன் வந்து சொல்லுறாரு, 67ல, அண்ணா ”நாம தனி மெஜாரிட்டியில ஜெயிச்சுட்டோம்”னு. உடனே அண்ணா அழுதார். ஆட்சி வந்திருச்சு. கட்சி போயிருச்சுன்னு.

எப்பல்லாம் நாம ஆட்சிக்கு வர்றோமோ அப்ப எல்லாம் கட்சி போயிறுது.
விஜயகாந்தை மிகவும் புகழ்ந்தார். (கூட்டணி வரும் போலிருக்கே?]

பஸ் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு பற்றியும் பேசினார்.

நாலு மணி நேரம் இருந்த மின்வெட்டு, அப்புறம் கஷ்டப்பட்டு மூணு மணி நேரமா குறைச்சோம், அப்புறம் இரண்டு மணி நேரம். அதுக்கே பொறுக்காம மாத்தீட்டிங்க. இப்ப அனுபவீங்க. (அவருக்கு முன் பேசிய அனைத்து உள்ளூர் பேச்சாளர்களும் இதையேதான் பேசினார்கள்]

மின்வெட்டு பற்றிய அவரின் பஞ்ச்

ராத்திரியில ஒரு மணி நேரம் அணைக்கிறான், ஒரு மணி நேரம் போடுறான் (இதையே பலமுறை சொல்லிக்காட்டி]

7 கோடியா இருக்குற தமிழ்நாட்டு ஜனத்தொகை 12 கோடியா ஆயிடும் போலிருக்கே.



19 வயதில் மேடை ஏறி தற்போது 72 வயது வரை 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக பட்டி தொட்டிகளில் எல்லாம் பேசியும் தீப்பொறிக்கு இன்னும் கரிஸ்மா குறையாமல் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு நேற்று விடை கிடைத்தது. ஏகப்பட்ட விசயங்களை அப்டேட் செய்து கொண்டேயிருக்கிறார். எத்தனை பேரூராட்சி, இப்போது மாநகராட்சியில் இணைந்தது, அவை என்ன என்றெல்லாம் லிஸ்ட் போடுகிறார்.

பேப்பரே படிக்காத ஆட்களுக்கு மட்டுமல்ல, என்னேரமும் இணைய செய்திகளை மேய்ந்து கொண்டிருப்பவர்களுக்குக் கூட அவரிடம் தகவல்கள் இருக்கிறது.


கூட்டத்துக்கு வந்தவர்களின் குறைந்த வயது 35. பெரும்பாலும் 45+ தான் கண்ணில் பட்டார்கள். திமுக விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. 25 வயது ஆட்கள் யாருகே இல்லை. அழகிரி பிறந்த நாளான ஜனவரி 30க்கு அவரை வாழ்த்தி வைக்கப்பட்ட பேனர்களில் நகரபொறுப்பில் உள்ள பலரது மகன்களின் படம் பட்டத்தோடு இருந்தது. ஆனால் அவர்கள் யாரையும் கூட்டத்தில் காணவில்லை. தீப்பொறியின் 90 நிமிட பேச்சில் அவர்கள் பல தகவல்களை உள் வாங்கியிருக்கலாம்.

நான் சிறுவனாக இருந்தபோது, பார்த்த கூட்டங்களில் எல்லாம் இளவயதினர் தான் அதிகம் இருப்பார்கள். அவர்கள் தான் இன்னும் வருகிறார்களோ என்ற எண்ணமே ஏற்பட்டது.

ஆசைத்தம்பி, மதியழகன், என்விஎன் பற்றி எல்லாம் சொன்னார். ராஜாஜி, மவுண்ட் பேட்டன், மோதிலால், ஜவஹர்லால் என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. ஆனால் இவர்களின் பெயர்கள் எல்லாம் பேனரில் சிரித்துக் கொண்டிருக்கும் பி ஏ, பி எஸ்ஸி, பி ஈ க்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்காது.

பொதுஜனத்தின் ஆதரவு அமோகமாக இருந்தது. மின் வெட்டு அவர்களை சிந்திக்க வைத்திருக்கிறது. (மின் வெட்டினால் கூட இவ்வளவு கூட்டம் கூடியிருக்கலாம்].

இன்றைய நிலையில் நியாயமாக ஒரு இடைத்தேர்தல் நடந்தால் அது நிச்சயம் ஆளுங்கட்சிக்கு கசப்பான முடிவையே தரும் என்பது மட்டும் நிதர்சனம்.

February 17, 2012

அக்கிரிடிடேசன் – ஒரு அறிமுகம்

இந்தப் பதிவு அக்கிரிடிடேசன் பற்றி அறிந்தவர்களுக்கானது அல்ல. மன்னிக்கவும்.


மார்ச் மாத துவக்கத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. தேர்வு முடிந்தவுடன் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான கல்லூரியை தேர்வு செய்ய தொடங்குவர்கள். (பலர் ஏற்கனவே நிச்சயித்திருப்பார்கள்).

இப்பொழுது தமிழகத்தில் +2 தேர்வு எழுதுபவர்களில் பெரும் விழுக்காட்டினர் தனியார் பொறியியல் கல்லூரிகளில் தான் சேர்கிறார்கள். இவர்கள் தங்களுக்கான கல்லூரியை தேர்வு செய்யும் அடிப்படை புவியியல் சார்ந்ததாகவே இருக்கிறது.

அதன்பின் அக்கல்லூரியில் நடப்பு ஆண்டில் எவ்வளவு பேர் வளாகத்தேர்வு மூலம் பணி ஆணை பெற்றிருக்கிறார்கள் என்ற காரணி. அதன்பின்னரே அக்கல்லூரியின் கற்பிப்பு தரம் வருகிறது. பின்னர் அதில் தங்களுக்கு ஏற்ற பாடப்பிரிவுகள் உள்ளதா என பார்த்து பின் தெரிவு செய்கிறார்கள்.

இதில் கல்லூரியின் கற்பிப்பு தரம் என்பது எதைப் பொறுத்தது?


ஐஐடிகளில் பி எச் டி, எம் எஸ் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் வைவா முடிந்ததும் கொடுக்கும் தேநீர் விருந்து பிரசித்தி பெற்றது. தங்கள் ஆய்வுக்கு உதவிய பேராசிரியர்கள், டெக்னீசியன்கள் மற்றும் சக மாணவர்களுக்கு நன்றி கூறும் விதமாக அதனை அளிப்பார்கள். அப்போது அங்கு வரும் பேராசிரியர்கள் கலகலப்பாக தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

அன்று விருந்து கொடுத்தவர், தீஸிஸ் சப்மிட் செய்துவிட்டு தற்போது பெரிய அளவில் இருக்கும் தனியார் பல்கலையில் வேலை பார்ப்பவர். அவர் அப்பொழுது ஐஐடியில் இல்லாத இன்பராஸ்ட்ரக்சர் கூட தன் பலகலையில் இருப்பதாகக் கூறினார்.

அப்போது அங்கு இருந்த பேராசிரியர் ஒருவர் சொன்னார் “ காலேஜுக்கு இன்பிராஸ்டிரக்சர் என்பது அங்கு இருக்கும் ஆசிரியர்கள் தான்” என்று. எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டோம்.

ஆனால் ஆசிரியர்களின் தகுதியை எப்படி வரையறுப்பது? அதே போல் ஒரு கல்லூரியின் கற்பிப்பு தரத்தை எப்படி குவாண்டிஃபை செய்வது?

இங்குதான் வருகிறது அக்கிரடிடேசன்.

இந்தக்கல்லூரியில் படித்து முடித்து வெளிவரும் மாணவரிடத்தில் குறைந்தபட்ச தரம் நிச்சயம் இருக்கும் என்று உறுதி கொடுப்பதே அக்கிரடிடேசனின் முக்கிய பணியாகும். எனவே பெற்றோர் தங்கள் பிள்ளைகள் சேரும் கல்லூரி அக்கிரடிடேசன் பெற்றிருக்கிறதா? என்பதை கற்பிப்பு தரத்திற்கான அளவுகோலாக கொள்ளலாம். இதில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியது, அக்கிரடிடேசன் என்பது கல்லூரியில் உள்ள பாடப் பிரிவுகளுக்கு தனித்தனியாகக் கொடுப்பது. முழுக்கல்லூரிக்கு அல்ல.

தங்கள் பிள்ளை சேரும் குறிப்பிட்ட பாடப்பிரிவு அக்கிரடிடேசன் பெற்றுள்ளதா? என பார்த்துக் கொள்ளவும்.


முதலில் இந்தியாவில் என்னென்ன அக்கிரடிடேசன் முறைகள் உள்ளன? எனப் பார்ப்போம். பின்னர் உலகளவில் உள்ள முறைகள் பற்றிப் பார்ப்போம்.

தேசிய கல்விக் கொள்கை (1986)ன் வழிகாட்டுதல் படி உருவானது நாக் எனப்படும் நேசனல் அசெஸ்மெண்ட் மற்றும் அக்கிரடிடேசன் கவுன்சில் (NAAC). இது நாட்டில் உள்ள கல்லூரி, பல்கலைகள் போன்ற உயர் கல்வி அளிக்கும் நிறுவனங்களுக்கு தரச் சான்றிதழ் அளிக்கிறது. ஆனால் பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகளுக்கு என் பி ஏ எனப்படும் நேசனல் போர்ட் ஆப் அக்கிரடிடேசன் (NBA) தரச் சான்றிதழ் வழங்குகிறது.


இது தவிர மருத்துவம், பல்மருத்துவம் போன்ற பல பிரிவுகளுக்கும் கவுன்சில்கள் உள்ளன.

நாம் இங்கே என் பி ஏ அக்கிரடிடேசன் பற்றி மட்டும் பார்ப்போம்.

இந்த என் பி ஏ வானது ஏ ஐ சி டி யுடன் (All India Council for Technical Education) இணைந்த ஒன்று. இது ஒரு தனித்தியங்கக் கூடிய அமைப்பு (அட்டானமஸ் பாடி).

இந்த என் பி ஏ வானது கல்லூரிகளை தற்போது வாசிங்டன் அக்கார்ட் என்னும் முறைப்படி தர நிர்ணயம் செய்கிறது.

வாசிங்டன் அக்கார்ட் என்றால் வேறொன்றுமில்லை. அந்த ஒப்பந்தம் வாஷிங்டனில் நடைபெற்ற மாநாட்டில் கையெழுத்தான ஒன்று. இதே போல் சிட்னி அக்கார்ட், டப்ளின் அக்கார்ட் போன்றவையும் உள்ளன.


இதில் வாசிங்டன் அக்கார்ட் என்பது இளநிலை பொறியியல் பிரிவுகளுக்கு மட்டும் தர நிர்ணயம் செய்வது.

சிட்னி அக்கார்ட் தொழில்நுட்பத்திற்கு செய்வது. வித்தியாசம் என்னவென்றால் பொறியியலில் தியரி, உயர் கணிதம் ஆகியவை அதிகமாக இருக்கும். தொழில்நுட்பத்தில் பிராக்டிகல்ஸ் அதிகமாக இருக்கும். அவர்கள் படிப்பை விட செய்முறைக்கே அதிக கவனம் செலுத்துவார்கள். (நம் நாட்டில் இம்முறை இல்லையென்றே சொல்லலாம்)

டப்ளின் அக்கார்ட் என்பது டெக்னீசியன்களை தர நிர்ணயம் செய்யும் அமைப்பு.

நம் நாட்டு பொறியியல் கல்லூரிகளுக்கு வாசிங்டன் அக்கார்ட் முறை மட்டுமே இனிமேல் கடைபிடிக்கப்படும்.

இந்த வாசிங்டன் அக்கார்ட் அமைப்பானது 14 உறுப்பு நாடுகளைக் கொண்டது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவர்கள் அதில் உள்ளார்கள். நமது நாடு புரவிஷனல் மெம்பர். தற்போது உறுப்பு நாடாக மாற பெரு முயற்சி செய்து வருகிறோம்.

ஏனென்றால் இது ஐ நா சபை பாதுகாப்பு கவுன்சிலின் வீட்டோ அதிகாரம் போன்றது. ஐ நா விலாவது ஐந்து நாடுகள் தான். ஆனால் இங்கோ 14.

இந்த முறைப்படி தர நிர்ணயம் பெற்ற கல்லூரி பாடப் பிரிவில் படித்த மாணவர்களை மற்ற உறுப்பு நாடுகள் அங்கீகரிக்கும். எனவே தான் என் பி ஏ தர நிர்ணயம் பெற்ற கல்லூரி பாடப் பிரிவில் படிப்பது எதிர்காலத்துக்கு நல்லது.


அடுத்த பகுதியில் வாசிங்டன் அக்கார்ட் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

February 07, 2012

தமிழ்நாட்டு கண்டக்டர்கள்

பேருந்துகளில் தனியே பயணம் செய்ய ஆரம்பித்து 25 வருடங்களாகிறது. எத்தனை விதமான கண்டக்டர்கள்! இடத்தோல் பட்டையிலே தோல் பையைத் தொங்கவிட்டு, அக்கையிலேயே எல்லா டிக்கட் புத்தகங்களையும் அடுக்கிக் கொண்டு விரலிடுக்கில் ஐந்து, பத்துக்களை மடித்து வைத்துக் கொண்டு, வலக்கையில் நீள நகங்களை வளர்த்துக் கொண்டு வாயிலேயே விசில் கொடுக்கும் மதுரை ஏரியா கண்டக்டர்கள், நீள் செவ்வக அட்டையில் ரேட் வாரியாக டிக்கெட்டுகளை அடுக்கிக் கொண்டு மெதுவாக இயங்கும் நாஞ்சில் ஏரியா கண்டக்டர்கள், மரியாதையாக நடத்தி மணி அடித்து பஸ்ஸை வழிநடத்தும் கொங்கு ஏரியா கண்டக்டர்கள், பில்கேட்ஸே ஏறினாலும் பிச்சைக்காரனைப் போல் மதிக்கும் சென்னை கண்டக்டர்கள் என டவுன் பஸ்களில் மட்டும் எத்தனை வகை?

மினி பஸ், ஷேர் ஆட்டோ/டாடா மேஜிக் கண்டக்டர்களில் இருந்து தொலைதூர பேருந்து கண்டக்டர்கள் வரை பல ஜாதியினர் இருந்தாலும், பெரும்பாலான கண்டக்டர்கள் இரண்டே பிரிவுகளில் தான் அடங்குவார்கள். கவர்மெண்ட், பிரைவேட்.

கவர்மெண்ட் கண்டக்டர்கள் என்றால், எப்படியாவது சாம, பேத, தண்டங்களைப் பயன்படுத்தி அரசு போக்குவரத்து கழகங்களில் நுழைந்து விடுபவர்கள். அவ்வளவுதான். அதன்பின் அவர்கள் அனைவரும் ஒரே ஜாதிதான். இவர்களுக்கும் பிரைவேட் கண்டக்டர்களுக்கும் திறமை அளவில் பெரிய வேறுபாடு இருக்காது. சொல்லப்போனால் பிரைவேட் கண்டக்டர்களின் ஸ்மார்ட்னெஸ் இவர்களிடம் அறவே இருக்காது.

அரசு கண்டக்டர்கள் அவர்களுக்குள் பேசிக் கொள்ளும் போது அந்த வக்காபுலரி ஒரு இருபது சொச்ச வார்த்தைகளுக்குள் அடங்கிவிடும். நைட் டூட்டி, சொச்சக்காசு, எல்பிஎஃப், சிஐடியு, ஐஎண்டியூசி, பி எம், கலெக்‌ஷன் பேட்டா, செக்கரு, போனஸ், டொச்சு ரூட்டு போன்றவையே அவை.

இன்னொரு வகையான பிரைவேட்டில் தான் மினி பஸ் கண்டக்டர் முதல் ஆம்னி பஸ் கண்டக்டர் வரை அடங்குவார்கள். கூட்டி கழித்துப் பார்த்தால் எந்த வாகனமாய் இருந்தாலும் இவர்களின் சம்பளத்தில் பெரிய வேறுபாடு இருக்காது. மாவுக்கேத்த பனியாரம் என்பது போல கலெக்சனுக்கு ஏற்பவே இவர்கள் சம்பளம்.

இவர்களின் கனவே எப்படியாவது அரசு போக்குவரத்து கழகத்தில் இணைந்து விட வேண்டும் என்பது தான்.

இந்தக் கூட்டத்தில் தான் பல வகையான பர்சனாலிட்டிகளைப் பார்க்கலாம். இசை அமைத்தவர் கூட மறந்து விட்ட பாடல்களை ஞாபகமாக வைத்து, சிச்சுவேஷன் பாடல் கேசட் தயாரிப்பவர்கள், காக்கியாக இருந்தாலும் பூட் கட், ஷார்ட் குர்தா என டிரெண்டுக்கு ஏற்ப தைத்துப் போடுபவர்கள், வாகனத்தில் ரெகுலராக வரும் கல்யாணமாகாத பெண்களுக்கு இடம் போட்டு மனதில் இடம் பிடிப்பவர்கள், கூட்டம் எவ்வளவு இருந்தாலும், பாடல் எவ்வளவு சத்தமாக ஒலித்தாலும், அரை டிக்கட் பிரச்சினை, லக்கேஜ் பிரச்சினை என எல்லாவற்றையும் சமாளித்து கடைசி டிக்கட் கிழித்த உடனேயே அசிஸ்டெண்ட் கண்டக்டரிம் கணக்கை சொல்லும் அளவுக்கு தசாவதானிகள் என பல வகை உண்டு.

70-90 களில் கண்டக்டர் வேலைக்கு வந்தவர்கள் பெரும்பாலும் தந்தை, உறவினர்களைப் பின்பற்றி வந்தவர்களாகத்தான் இருந்தார்கள். பி யூ சி யோ, பத்தாம் வகுப்போ பெயிலாகியோ, நூல் பிடித்து பாஸ் செய்தவர்களுக்கோ போக்கிடம் போக்குவரத்து துறையாகத்தான் இருந்தது. 90களுக்குப் பின் கண்டக்டராக வந்தவர்களை குடும்ப வறுமையே உள்ளே தள்ளியிருக்கும். இப்போது கூட புதிதாக எந்த வாகனத்திலாவது கண்டக்டராக ஏறுபவர்களின் பின்னால் வசதிக் குறைவே முக்கிய காரணியாக இருக்கிறது.

இக்கால இளைஞர்களின் விருப்பத் தொழில்களில் கண்டக்டர் பணிக்கு கடைசி வரிசையில் தான் இடம் தான் இருக்கிறது. கவர்மெண்டில் கிடைக்காட்டி என்ன பண்ணுவது? என்பதே இவர்களின் முன்னால் இருக்கும் கேள்விக்குறி.

ட்ரைவராக வருபவர்களுக்கு இந்த பிரச்சினை பெரிய அளவில் இல்லை. நல்ல தொழில் தெரிந்தவர்களுக்கு வழக்கமான நேரம் போக, டூரிஸ்ட் பஸ் ஓட்டுதல், நீண்ட தூரப் பயணங்களுக்கு இணையாகப் போகுதல் என பல வழிகளிலும் வருமானம் கிடைக்கும். 60 வயதானால் கூட பொறியியல் கல்லூரிகள், பள்ளிகளின் வாகன ஓட்டுநராக இருந்து சமாளிக்குமளவுக்கு சம்பளம் பெறலாம்.

72க்குப் பின் தான் இந்த கவர்மெண்ட், பிரைவேட் பிரிவு. அப்போதைய காங்கிரஸுக்கு ரத்தம் பாய்ச்சியவர்கள் பண்ணையார்களும், பெரும் பஸ் முதலாளிகளான மதுரை டி வி எஸ், பொள்ளாச்சி மகாலிங்கம், திருச்சி, தஞ்சையில் கோலோச்சிய ராமன், சக்தி விலாஸ் போன்றவர்களும்தான். காங்கிரஸின் பெரும்பாலான எம் எல் ஏக்கள் பஸ்ஸுடன் தொடர்புடையவர்கள் தான். திமுகவின் 67 தேர்தல் அறிக்கையில் ரூபாய்க்கு படி அரிசி போன்ற கவர்ச்சிகர அம்சங்கள் இருந்தாலும், பஸ்களை அரசுடையாக்குவோம் என்ற கோஷமும் இருந்தது. எம்ஜியார் பிரச்சாரம் என்ற பிரம்மாஸ்திரம், இந்தி எதிர்ப்பால் மாணவர் ஆதரவு என்ற நாகாஸ்திரம் ஆகியவையே அண்ணாவுக்கு போதுமானதாக இருந்தது அந்த தேர்தலில்.

அம்புறாத்துணியில் தூங்கிக் கொண்டு இருந்த பஸ் அரசுடமையாக்கம் என்ற அஸ்திரத்துக்கு வேலை கொடுத்தவர் கருணாநிதிதான். 67 அமைச்சரவையில் போக்குவரத்து, பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவியேற்று அண்ணா மறைவுக்குப் பின் 69ல் முதல்வரான பின் காங்கிரஸின் பொருளாதார மூலத்தை அசைக்க அதை எய்தார்.

50 பேருந்துகளை மட்டும் முதலாளிகள் வைத்துக் கொள்ளலாம், அதற்கு மேல் உள்ளவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட வேண்டும் என்ற ஆணையால் வெறுப்புற்ற மதுரை டி வி எஸ் நிர்வாகம், எனக்கு பஸ்ஸே வேணாம், பார்சல் சர்வீஸ் நடத்திக்கிறேன் என்று மொத்தத்தையும் ஒப்படைத்துவிட்டது.

இந்த நிகழ்வு தமிழகத்தில் ஓரளவுக்கு சமூக, பொருளாதார மாற்றங்களை கொண்டு வந்த ஒன்று. தனியார் வேலைகள் குறைவாகவும், மிக மிக குறைவான சம்பளத்துடனும் இருந்ததால் 80,90 களில் ட்ரான்ஸ்போர்ட் கார்பொரேஷன் மாப்பிள்ளைகளுக்கு நல்ல கிராக்கி இருந்தது.

91-96 ஜெயலலிதா ஆட்சியில் ஒருமுறை பஸ் கட்டணம் உயர்த்தப் பட்டது. அப்போதைய நிதி அமைச்சரான நெடுஞ்செழியன் நிருபர்களிடம் பேசும் போது சொன்னார், கோயம்புத்தூர்ல நாலு பஸ் வச்சிருக்கவங்க நாலஞ்சு வருஷத்துல கோடீஸ்வரன் ஆகிடுறாங்க. இவ்வளோ பஸ் வச்சுக்கிட்டு நாம நஷ்டத்துக்கு ஓட்டுறோம் என்று.

கார்பொரேஷன் கண்டக்டர்கள் நீ ஏறினா என்ன, ஏறாட்டி என்ன என்ற முக பாவத்துடனே பெரும்பாலும் காணப்படுவார்கள். காரணம் அவர்களுக்கு கிடைக்கும் கலெக்‌ஷன் பேட்டா, மற்ற அலவன்ஸுகளுடன் ஒப்பிடும்போது, மிகக் குறைவுதான்.

ஆனால் தனியார் பேருந்துகளிலோ, சம்பளம் என்பது பேருக்குத்தான். கலெக்‌ஷன் பேட்டாதான் கண்டக்டர்களின் முக்கிய வருமானம். அதனால் அவர்கள், ஆள் ஏற்றுவது, டயத்தை நெருக்கி வண்டி எடுப்பது என்று சகல வித்தைகளையும் காட்ட வேண்டியுள்ளது.

ஆனால் இவற்றை வைத்து கார்பொரேஷனின் நஷ்டத்திற்கு கண்டக்டர்கள் தான் காரணம் என்ற முடிவுக்கு யாரும் வர வேண்டாம். அவர்களின் பங்கு இதில் ஓரளவே.

தற்போது அதிக அளவில் டிக்கெட் விலை ஏறியபோதும், ஜெயவிலாஸ் போன்ற தனியார் நிறுவனங்கள், பெரிதும் விலை ஏற்றவில்லை. சொல்லப் போனால் இந்த ரேட்டுக்கு வண்டி ஓட்டினால் திவாலாகிப் போய்விடுவோம், நான் எங்கே போவது என ஜெயலலிதா மடிப்பிச்சை கேட்ட சமயத்தில் தனியார் பஸ் முதலாளிகள் எல்லாம் சொத்துக்களை வாங்கி குவித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

தனியார் முதலாளிகள் எல்லாம் ரேடியல் டயர் போட்டு, டீசல் உபயோகத்தை குறைக்கிறார்கள். ஆனால் கார்பொரேஷனில் கமிஷன் காரணமாக தொடர்ந்து டயர்களுக்கு ரீ பட்டன் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எஞ்சின் ஆயில் வாங்குவதில் இருந்து, சகல உதிரிப்பாகங்களுக்கும் கமிஷன். இதில் இரண்டு வண்டிகளுக்கு இடையே பாகங்களை மாற்றிப் போட்டு இரண்டு செட் உதிரிப்பாகங்கள் வாங்கியதாக மோசடி பில்கள் வேறு.

போக்குவரத்து விஜிலன்ஸ் அதிகாரி பதவியிடமானது, பழிவாங்கப்படும் இடமாகப் பார்க்கப்படுவதால் அங்கே வருபவர்களும் டீமாரலைஸ் ஆகி விடுகிறார்கள். பஸ் டி ஜி பி என்று திரைப்படங்களில் கிண்டல் செய்யப்படும் அளவுக்கு அந்தப் பதவி இருக்கிறது.

பஸ் இரவு நேரங்களில் ஓட ஜீவாதாரமானது ஹெட் லைட். அதைக்கூட மாற்றுவதில்லை நம் ஆட்கள். எனவே பெரும்பாலான ட்ரைவர்கள், தனியே பல்பு வாங்கி வைத்துள்ளார்கள். இரவு ட்ரிப் எடுக்கப் போகும்முன் அதை மாட்டி விட்டு, இறங்கும் போது கழட்டி எடுத்துச் சென்று விடுகிறார்கள்.

ஆட்சியில் உள்ள தொழிற்சங்கங்க நிர்வாகிகள் வேலை செய்யத் தேவையில்லை என்ற உயரிய வழக்கமும் இங்கேயிருக்கிறது. டிரைவர், கண்டக்டர்களுக்கு டூட்டி போடும் அதிகாரமும் இவர்கள் கையில் உள்ளதால் எந்த சங்கத்திடமாவது அடைக்கலம் ஆக வேண்டிய கட்டாயமும் உண்டு.

இததனை குறைகள் இருந்தாலும் குக்கிராமங்களுக்கும் பஸ் வசதி, ஏழை மாணவர் இலவச பஸ் பாஸ், அரசு சம்பளத்தினால் பல குடும்பங்களுக்கு ஏற்பட்ட உயர்வு என்ற அம்சங்களும் உள்ளன. முழுக்க முழுக்க போக்குவரத்து தனியாரிடமே இருந்தால் இவையெல்லாம் கனவாகவே இருக்கும்

இந்தக் குறையெல்லாம் நல்ல அக்கவுண்டபிலிடி உள்ள சிஸ்டத்தாலும், கடுமையான விஜிலன்ஸ் முறை மூலமும் சரி செய்யக்கூடியவையே.

சில மாதங்களுக்கு முன் பெரும் மனக் கிலேசத்தில் இருந்த நாளொன்றின் இரவில் அதை அதிகப்படுத்தும் விதமாக நெருங்கிய உறவினரின் இறப்புச் செய்தி வேறு வந்தது. தனியார் பேருந்தில் பயணிக்கையில் முதல் 15 நிமிடங்கள் ஒலித்த பாடல்களை சரியாக கவனிக்கவில்லை. பின்னர் தான் அவை ஒரே கருத்துப் பிண்ணனியில் அமைந்த பல்வேறு காலகட்டத்தில் வெளியான பாடல்கள் என்று உணர்ந்தேன். இரண்டு மணி நேரப் பயணத்தில் சுமார் 20 பாடல்கள். காலை முதல் இருந்த மனச் சோர்வு நீங்கி ஒரு தெளிவான மன நிலை பேருந்தை விட்டு இறங்கும் போது கிடைத்தது.

அந்த கண்டக்டரைப் பார்த்தேன். பெரும்பாலான கண்டக்டர்களைப் போலவே பிளஸ் டூ பெயிலாகி, வேன், மினி பஸ் என ஒரு சுற்று சுற்றி பின் இன் ஆடி ஓடி தனியார் பேருந்தில் இடம் பிடித்து, லைசென்ஸ் எடுத்து வைத்து கார்பொரேஷனுக்கும், கல்யாணத்துக்கும் காத்திருக்கும் வயதில் இருந்தார். அடுத்த போஸ்டிங்கின் போது ஏதாவது உப தெய்வத்துக்கு சில லட்சங்கள் கொடுத்து, அமைச்சர் அருள் பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பவராய் தோன்றினார்.

அவருக்கு அரசு கழகத்தில் வேலை கிடைக்காவிட்டால்? 50 வயது வரை அவர்கள் பாஷையில் சொன்னால், ரூட்டில் ஓடுவார். பின்னர் சரியா ஆள் ஏத்தத் தெரியல, வேகம் பத்தலை என கமெண்டுகள் வரும். ஒரு சுபயோகமில்லாத தினத்தில் அவரை கழட்டி விடுவார்கள். ஒரு நாளில் பஸ்ஸிற்குள்ளேயே 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் நடந்த அவர் கால்கள் எங்காவது அடைக்கலம் புகும்.

கிடைத்து விட்டால், மாதம் தவறாத சம்பளம், பயணப்படி, பஞ்சப் படி, ஸ்டிரைக் செய்யாமலே கிடைக்கும் போனஸ், போதும் போதும் எனும் அளவுக்கு கிடைக்கும் ஓய்வு, கல்யாண மார்க்கட்டில் கௌரவமான இடம், பிள்ளைக்கு கூட ஐ ஆர் டி டி யில் இட ஒதுக்கீடு, தமிழகம் முழுக்க குடும்பமே இலவசமாக பயணிக்கும் வசதி, சென்னையில் வசிக்கும் பாவப்பட்டர்கள் பொங்கல், தீபாவளிக்கு வர செய்யும் டிக்கட் ரெக்கமண்டேஷன்கள்.

சரியான பூசாரியைப் பிடிக்காததும், ஓரளவு வசதி இல்லாததும் எவ்வளவு பெரிய வித்தியாசத்தை வாழ்வில் ஏற்படுத்தி விடுகிறது



பண்புடன் இணைய இதழில் வெளியான கட்டுரை

நன்றி

பிப்ரவரி 1 இதழின் பொறுப்பாசிரியர் கார்த்திகை பாண்டியன்

பண்புடன் இதழ் ஆசிரியர் குழு

February 06, 2012

பூவும் பூ சார் இடங்களும்

சில நாட்களுக்கு முன், சென்னையில், பேருந்துக்காக காத்து இருந்தபோது, அருகேயுள்ள பூக்கடையில் பூ வாங்கிய பெண் ஒருவர், தன் கணவரிடம் சன்னமான குரலில் பேசியது என் காதில் விழுந்தது.

“துஷ்டிக்கு கட்டுற மாதிரி இடம் விட்டு கட்டியிருக்காங்க”. கடந்த ஐந்தாண்டுகால சென்னை வாழ்க்கையில் இந்தமாதிரியான அங்கலாய்ப்புகள் கேட்டது மிகக் குறைவு. பூ கட்டும் குடும்பத்திலோ அல்லது அதன் அருகாமை வீடுகளிலோ இருப்பவர்கள் தான் இந்த வார்த்தையைப் பிரயோகப் படுத்துவார்கள்.

அன்பு நண்பர் மருத்துவர் புருனோ ஒருமுறை சொன்னார் “சென்னையில் வழங்கப்படும் சிகிச்சையை தென் மாவட்டங்களில் கொடுத்தால் மருத்துவருக்கு அடிவிழும்” என்று.

அம்மாதிரி இங்கு கிடைக்கும் பொருட்கள், சேவைகள் ஆகியவை குறைவான தரத்தை கொண்டவையாகவே இருக்கின்றன. அன்பு நண்பர் ஆதிமூல கிருஷ்ணன் சென்னை புரோட்டா சால்னாவின் தரத்தைப் பற்றி சொல்லும் போது, “சாணியில் முக்கி சாப்பிடுவது போல் இருக்கிறது” என்பார். சென்னைவாசிகளுக்கு உண்மையான தரம் தெரிவது இல்லை என்பது மதுரைப் பகுதி மக்களின் உறுதியான எண்ணம்.

அதனால்தான் திண்டுக்கல்,சேலம்,மதுரை, விருதுநகர்,ஆம்பூர் என பல ஊர்களின் ஸ்பெசல் அயிட்டங்களும் சென்னையில் சக்கைப் போடு போடுகின்றன். சென்னைக்கு உரிய பிரத்யேக அயிட்டமான வடகறியை, சென்னை எல்லையைத் தாண்டி யாரும் சீண்டுவதில்லை.

மயிலாப்பூரில், மதுரை மல்லிகையை மட்டுமே கட்டி ஒரு கடையில் மாலை வேளையில் விற்கிறார்கள். முன் தினமே அட்வான்ஸ் கொடுத்தால்தான் கிடைக்கும் நிலையில் அதன் டிமாண்ட் இருக்கிறது.


இப்படி பூவிற்கு பெயர் போன, மதுரை ஏரியா பக்கம் பூக்காரர்கள் நிலை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

பூக்கட்டி விற்பது தற்போது மட்டுமல்ல ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகவே எல்லா ஜாதியினராலும் செய்யப் பட்டு வந்திருக்கிறது. அதற்கு ஆதாரம் பல ஆண்டுகளாக பல்வேறு ஜாதியினரால் மீனாட்சி அம்மன் கோயிலில் இருக்கும் பூக்கடைகள். முன்காலத்தில் பண்டாரம் என்ற பிரிவினர் மட்டும் இத்தொழில் ஈடுபட்டதாக பூக்கடைகாரகள் சொன்னார்கள்.

மதுரையைச் சுற்றியுள்ள பூக்கடைகாரர்களின் தினப்படி வாழ்க்கை காலை மூன்று மணியளவில் தொடங்கிவிடுகிறது.
சமயநல்லூர், மேலூர், அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் வரையிலான பூக்காரர்கள் மதுரையிலும், திண்டுக்கலுக்கு அருகிலுள்ளோர் திண்டுக்கலிலும், நிலக்கோட்டை தாலுகா, அதைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ளோர் நிலக்கோட்டையிலும் பூ வாங்குவார்கள் (அவர்கள் மொழியில் உதிரிப்பூ). மதுரைக்கு தூங்கா நகரம் என்ற பெயர் வர இந்தப் பூக்கடைகளும் காரணம். 12 மணிக்கு மேல் தான் பூ வரத்து தொடங்கும். காலை நாலு மணிக்குள் வியாபாரிகள் வாங்கிப் போய்விடுவார்கள்.


அப்படி வாங்கிச் சென்ற பூக்களை தாங்கள் பிடித்து வைத்திருக்கும் வீடுகளில் டெலிவரி செய்து விடுவார்கள். அந்த வீட்டுப் பெண்கள், தங்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, அவசரத்திற்கேற்ப பூக்களை கட்டிக் கொடுப்பார்கள். இதற்கு மல்லிகை, கனகாம்பரம் என்றால் ஆயிரத்திற்கு இவ்வளவு என்றும், கதம்பப் பூவிற்கு பந்துக்கு இவ்வளவு என்றும் கட்டுக்கூலி நிர்ணயித்திர்ப்பார்கள்.

தீப்பெட்டி ஓட்டுவது, தீக்குச்சி அடுக்குவதை விட இது வருமானம் தர்ம் தொழில் தான். ஆனால் டிமாண்ட் மாறிக் கொண்டேயிருப்பதால் சீரான வருமானம் கட்டிக் கொடுப்பவர்களுக்கு இருக்காது.

பூக்கடைக் காரர்கள் ஒருவர், இருவருக்கு மேல் வேளைக்கு வைத்துக் கொள்ள மாட்டார்கள். மாலை கட்டத் தெரிந்த ஒருவர் இருந்தால் போதும். மீதமுள்ளவற்றை அவுட் சோர்சிங் முறையில் செய்து கொள்வார்கள். தற்போது பெரிய நகர பூக்கடைகளில் மட்டுமே பலரை வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள்.

சுப முகூர்த்த நாட்கள், தீபாவளி பொங்கல் போன்ற விசேஷ நாட்கள், வெள்ளிக்கிழமைகள், ஆடி மாத அம்மன் பண்டிகளைகள், வழக்கமான வெள்ளிக்கிழமைகளில் பூ வியாபாரம் களை கட்டும். இந்த நாட்களில் விலை அதிகமாகவும் மற்ற நாட்களில் அதில் பாதியாகவும் இருக்கும். இருப்பதிலேயே ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை சமயங்களில் தான் பூ விலை உச்சத்துக்குப் போகும். ஏனென்றால் இந்தப் பண்டிகைகள்தான் வீட்டிலும், அலுவலகத்திலும் கொண்டாடப்படும் நிகழ்வுகள்.

இது தவிர கூடைகளில் கொண்டு வந்து விற்கும் பெண்கள், பஸ் ஸ்டாண்ட், கோவில் அருகில் கடை போட்டிருக்கும் பெண்கள் ஆகியோர், பெரும்பாலும் கமிசன் வியாபாரிகளிடம் பூ வாங்கி கட்டி விற்பார்கள். இவர்களுக்கு ஆண்களின் சைக்காலஜி அத்துப்படி. கையில் பளபள பிரேஸ்லட், மோதிரத்தை வைத்து புது மாப்பிள்ளை என்று கண்டு பிடித்து விட்டால் எப்படியும் வாங்க வைத்து விடுவார்கள். ஆனால் பெண்களிடம் இவர்கள் ஜம்பம் செல்லாது. இது தவிர இப்போது வீடுகள், கடைகளுக்கு மாத விலை பேசி ரெகுலராக கொடுப்பவர்களும் அதிகரித்து உள்ளார்கள். அவர்கள் சீசனுக்கேற்ப அளவை கூட்டி குறைத்து கொடுப்பார்கள்.

பூ கட்டும் வீட்டை எளிதில் கண்டு பிடுத்து விடலாம். மல்லி, கனகாம்பரம், சாமந்தி என ஒரு கலவையான வாசனை அடிக்கும். தரை எப்பொழுதுமே ஈரமாக நசநசப்புடன் காணப்படும். வெளியில் பூக்கட்டுவதற்கான வாழை நாரை காய வைத்திருப்பார்கள். இப்போது பலரும் ட்வெயின் நூலை உபயோகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். செவ்வாய், வெள்ளிகளில் சாம்பிராணி போட்டு வீட்டை புகை மண்டலமாக்கி விடுவார்கள். இல்லையெனில் சிறு சிறு பூச்சிகள், நச்சு உயிரினங்கள் படையெடுக்கத் துவங்கி விடும். ஏனென்றால் பல பெண்கள் குழந்தைகளை அருகில் போட்டுக் கொண்டுதான் பூ கட்டுவார்கள்.

பூ கட்ட பயிற்றுவிக்கும் போது, முதலில் பேப்பரை கிழித்து, நூலில் கட்டி பழகச் சொல்வார்கள், பின் கதம்பம், கனகாம்பரம் என பழகி, இருப்பதிலேயெ கஷ்டமான மல்லிகைக்கு வருவார்கள். சுப நிகழ்வுகளுக்கு மிக நெருக்கமாகவும், சாதரான உபயோகத்திற்கு நெருக்கமாகவும், துஷ்டிக்கு இடைவெளி விட்டும் கட்டுவார்கள். அடுத்த கட்டம் மாலை போட பழகுதல். இதை பெரும்பாலும் ஆண்களே செய்கிறார்கள். ஒவ்வொரு ஊருக்கும் மாலை கட்டுவதில் ஒரு ஸ்டைல் உண்டு. மதுரைப் பக்கங்களில், ரோஜா மாலை கட்டி முடிந்தவுடன் ஜண்டி எனப்படும் மின்னும் பட்டு நூலால் அலங்கரிப்பார்கள். இதனான் பூ உதிர்வது தடுக்கப்படும். இந்த ஜண்டி அடிப்பது ஒரு கலை. மாலையை மேல் உத்திரத்தில் தொங்க விட்டு கீழ் நாரை கால் கட்டை விரலால் பிடித்துக் கொண்டு மாலையின் மேலும் கூழும் சுற்ற வேண்டும். இப்போது இடையில் தெர்மோ கோலால் செய்யப்பட்ட வண்ண அட்டைகளை வைக்கிறார்கள்.

துக்க நிகழ்வுகள் இவர்களுக்கு எதிர்பாராத வருமானம். பெரிய ஆட்கள் இறந்து விட்டால், பார்க்க வருபர்கள் வாங்குவது, கப்பல், தேர் போன்ற வடிவங்களில் பாடை கட்டுவது என பூ ஓடி அடையும்.


முன் காலத்தில் இத்தொழிலில் இருந்த சீரற்ற நிலை காரணமாக, பலர் வருமானக் குறைவால் அவதிப் பட்டார்கள். ஆனால் இப்பொழுது நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. பல பூக்காரர்கள் இப்போது கடன் வாங்கி ஐந்து அல்லது ஆறு பவுனுக்கு ஒரு நகையை வாங்கிக் கொள்கிறார்கள். அந்த கடனை தினப்படி வரவு வைத்து அடைக்கிறார்கள். பின் அந்த நகையை பேங்கில் அடகு வைத்து பணம் வாங்கி, அதில் நகை வாங்கி, பின் திருப்பிக் கொள்கிறார்கள்.

சென்னையில் பூக்கடை ஏரியா, கோவையில் சென்ட்ரல் மார்க்கெட் என கட்டிய பூ விற்பனை கேந்திரங்கள் உள்ளன. இவை இரவு பகலாக செயல்படும். குழந்தை பிறந்த சில நாளில் செய்யப்படும் புண்ணிய தானம் முதல், அவன் நூறாண்டு வாழ்ந்து மறைந்தபின் சில நாட்கள் கழித்து செய்யப்படும் கருமாதி வரையிலான விசேஷங்களுக்கு தேவையான எல்லாப் பொருட்களும் கிடைக்கும். இதே போல் மதுரையில் விளக்குத்தூணுக்கு இடப்பக்கம் இருக்கும் இடத்தில் கிடைக்கும். இது போன்ற பகுதிகளில் இருந்துதான் சிறு பூக்கடைக்காரகள் சந்தனம், பத்தி முதலான பொருட்களை கொள்முதல் செய்து கொள்வார்கள்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் பூக்கடைக்குச் சென்றிருந்தால் குறிப்பாக கோயில் சார்ந்த பூக்கடைகள். மாலை, கட்டிய பூ, சந்தனம், குங்குமம், பத்தி, கற்பூரம், தேங்காய், பழம் ஆகியவை மட்டும் தான் இருக்கும். ஆனால் இப்போது பார்த்தால் அந்தக் கடைகளில் நெய் விளக்கு, எள் விளக்கு, துளசி மாலை, அருகம் பூ மாலை, எருக்கம் பூ மாலை போன்றவையே அதிகம் காணப்படுகின்றன.

கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் அவள் விகடன், சினேகிதி, மங்கையர் மலர், மல்லிகை போன்ற மகளிர் பத்திரிக்கைகள் ஜாதகம், தோஷம், பரிகாரத்துக்கு விளக்கு போடுதல், மாலை சாத்துதல் என தீவிரப் பிரச்சாரம் செய்ததில் இந்த போக்கு அதிகமாகிவிட்டது. கணபதிக்கு அருகம்புல், செவ்வாய் முருகன், வியாழன் தட்சிணா மூர்த்தி, வெள்ளி துர்க்கைக்கு எண்ணெஉ, நெய் விளக்கு. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர், பெருமாளுக்கு துளசி மாலை நெய் விளக்கு , சனி பகவானுக்கு எள் விளக்கு, என இப்பொருட்களே அதிகம் விற்பனையாகின்றன.

ஆமாம் முன்னெல்லாம் நோய் ஏற்பட்டால் எம் பி பி எஸ் டாக்டரைத்தான் பார்ப்போம். ஆனால் இப்போது கால லேசாக வலித்தால் ஆர்த்தோ, பசியால் கை நடுங்கினால் கூட நியூரோ என்று ஓடுகிறோமில்லையா?. அதுபோல் கடவுள்களிலும் ஸ்பெஷலிஸ்டுகள் பெருகிவிட்டார்கள்.
தட்சிணா மூர்த்திக்கு சுண்டல் மாலை நிறையப் பேர் கேட்குறாங்க, அதனால அடுத்த வியாழன்ல இருந்து அதுவும் செய்யலாம்னு இருக்கோம் என்றார்கள். விட்டால் வடை மாலையும் ரெடிமேடாய் செய்து வைத்து விடுவார்கள் போலிருக்கிறது.

முன்பைக் காட்டிலும் இப்போது பூ விலை அதிகரிக்கக் காரணம் அதிகமான உதிரிப்பூ விலையும் கட்டும் கூலியும் தான். மாலை வேளைகளில்தான் தோட்டங்களில் பூ பறித்தலை தொடங்குவார்கள். இரவு ஒன்பது, பத்து மணி வரை கூட பூ பறிப்பார்கள். வெயில் சேராதவர்கள், அருகிலுள்ள கிராமப் பெண்டிர் ஆகியோர் முன்னர் ஆர்வமாக பறிக்க வருவார்கள். இப்போது ஆட்கள் கிடைப்பது தட்டுப் பாடாய் இருக்கிறது என்கிறார்கள். மாலை வேளைகளில் கணவர், பிள்ளைகளுக்கு சமைக்க வேண்டும், நாங்க இருந்தாத்தான் பிள்ளைக படுக்கிதுங்க போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன. சொல்லப் படாத இன்னொரு காரணம் மாலை நேர சீரியல்கள். இனி பூ பறிக்கவும் ஒரிசா காரர்கள் வந்து விடுவார்கள் போலிருக்கிறது.

பூக்களை பத்திரப்படுத்த, பதப்படுத்த குளிர்பதன சேமிப்பு அறை நிலக்கோட்டை பகுதியில் இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது. 84 ஆம் ஆண்டு தொகுதி அதிமுக எம் எல் ஏ அ. பாலுச்சாமி, ஒரு கோடியில் மல்லிகை செண்ட் தயாரிக்க ஆலை நிறுவுமாரு சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். எம்ஜியாரும் சரி என்றார். அந்த ஆலை இன்னும் வந்த பாடில்லை. அதன்பின் ஏ எஸ் பொன்னமாள் (காங்கிரஸ்), மற்றும் அதற்கடுத்து வந்த பல அதிமுக எம் எல் ஏக்கள் குளிர்பதன சேமிப்பு அறைக்கு சட்டசபையில் குரல் கொடுத்து வந்துள்ளார்கள்.

ரிலையன்ஸ் நிறுவனம், இந்திய அளவில் தங்கள் ரிலையன்ஸ் பிரெஷ் கடைகளுக்காக பல இடங்களில் காய்கறிக்கான வேர் ஹவுஸ் அமைத்து வருகிறது. அது போல் பூக்களுக்காகவும் வேர் ஹவூஸ் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தகவல்கள் வருகின்றன. கார்பொரேட்கள் இதை கையில் எடுத்துக் கொண்டால் பிஸ்ஸாவுக்கு கோக் காம்போ போல பூவுக்கு விளக்கு காம்போ வாங்கும் நாளை எதிர்பார்க்கிறேன்.