December 20, 2015

இயக்குநர் வசந்த்

1990 ஆம் ஆண்டு வசந்த் இயக்கிய “கேளடி கண்மணி” வெளியான போது தமிழகம் முழுவதும் அதைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. படம் வெளிவரும் முன்னரே படத்தின் டைட்டிலே மிகப்பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டியது. அதற்கு முந்தைய ஆண்டில் வெளியான கே பாலசந்தரின் “புதுப்புது அர்த்தங்கள்” படத்தின் ஹிட் பாடலான கேளடி கண்மணியையே தான் இயக்கும் முதல் படத்திற்கு டைட்டிலாக வைத்திருந்தார் அவரது சிஷ்யரான வசந்த். படத்தின் பாடல்களும் வெளியாகி ஒரு எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது. படம் பார்க்கச் சென்றவர்களும் ஏமாறவில்லை. தமிழ்சினிமாவில் அரிதாக எடுத்தாளப்பட்டிருந்த நடுத்தர வயது காதல்தான் களம்.

மனைவியை இழந்து, தன் பெண்குழந்தையோடு வாழும்  எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வாய்பேச முடியாத பெற்றோர்க்காக திருமணம் செய்யாமல் முதிர்கன்னியாக வாழும் ராதிகாவை காதலிக்கிறார். திருமணம் நிச்சயமாகிறது. ஆனால் மகள் எதிர்ப்பு தெரிவிக்க திருமணம் தடைபெறுகிறது. அந்த மகள் வளர்ந்து, காதலில் விழுந்து, தனக்கு ஒரு உயிர்கொல்லி நோய் இருப்பதை அறிந்த பின், காதல் பிரிவின் சோகம் உணர்ந்து தன்னால் தடைபெற்ற திருமணத்தை நடத்தி வைக்கிறாள். அருமையான பாடல்களோடு வெளிவந்த இந்தப்படம் பெரிய வெற்றி பெற்று, வசந்த் என்னும் இயக்குநரின் வருகையை அறிவித்தது.

வசந்தின் இரண்டாவது படம் “நீ பாதி நான் பாதி”. கேளடி கண்மணி படத்தில் இடம்பெற்றிருந்த புகழ்பெற்ற பாடலின் தலைப்பில் ஆரம்பித்த படம். ரகுமான்,கௌதமி,ஹீரா நடிக்க மரகதமணி இசை. கணவன் பெயர் சொல்லாமல் அம்மா வளர்க்கும் பெண்ணின் மனப்போராட்டங்கள் தான் கதை. பெரிய எதிர்பார்ப்போடு சென்ற ரசிகர் கூட்டம் ஏமாற்றமடையும் அளவுக்கு சாதாரண சம்பவங்களால் அடுக்கப்பட்டிருந்தது படம்.

முதல் படத்தை பெரு வெற்றிப்படமாக கொடுத்த ஒவ்வொரு இயக்குநருக்கும் இரண்டாவது படம்தான் முக்கியமான சோதனை. அதில் தோல்வி அடைந்தார் வசந்த். ஆனாலும் கே பாலசந்தர் தயாரித்து ரஜினிகாந்த் நடித்த “அண்ணாமலை” படத்தை முதலில் இயக்கும் வாய்ப்பு வசந்துக்கு வந்தது. தன் ஸ்டைலில் தான் படமாக்குவேன் என்று பிடிவாதம் பிடித்ததால் அந்த வாய்ப்பு பறிபோனது. அதன்பின் மணிரத்னம் தயாரிப்பில் அஜீத்குமாரை ஹீரோவாக வைத்து 95ஆம் ஆண்டில் “ஆசை” படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இசையமைப்பாளர் தேவா. மனைவியின் தங்கை மீது மோகம் கொள்ளும்  கதை. பிரகாஷ்ராஜ், அக்கா கணவராக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். நல்ல வெற்றியடைந்த படம். அஜீத்குமார்க்கும், பிரகாஷ்ராஜ்க்கும் நல்ல திருப்புமுனையைக் கொடுத்த படம்.

இதன்பின்னர் சூர்யாவை அறிமுகப்படுத்தி, விஜய்யுடன் இணைத்து நேருக்கு நேர் என்ற படத்தை இயக்கினார். (சிம்ரனும் இந்தப் படத்தில் அறிமுகமானார். ஆனால் அவர் அதன்பின் நடிக்க ஒப்பந்தமான பிரபுதேவா,அப்பாஸ், ரம்யா நடித்த விஜபி முதலில் வெளிவந்தது) இந்தப் படம் ஓரளவு ஓடியது. இதன்பின்னர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ஜோதிகாவை அறிமுகப்படுத்தி  ”பூவெல்லாம் கேட்டுப் பார்” படத்தை இயக்கினார். தங்கள் காதல் வெற்றிபெற தங்கள் துணையின் வீடுகளில் தங்கி அவர்களை கன்வின்ஸ் செய்யும் கதை. அப்போது இதே கதையமைப்பில் ஜோடி,மின்சாரகண்ணா படங்களும் வந்திருந்ததால் இந்தப் படம் வெற்றியடையவில்லை. ஆனால் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு நல்ல பெயர் பெற்றுத்தந்தது.

இதன்பின்னர் 2000ல் தேவா இசையில் பிரசாந்த் நடிக்க அப்பு வெளியானது. இது தோல்விப்படமாக அமைந்தது. இதே ஆண்டில் ரஹ்மான் இசையமைப்பில் அர்ஜூன் – மீனா நடிக்க ரிதம் படத்தை இயக்கினார் வசந்த். கணவனை இழந்த மனைவியும், மனைவியை இழந்த கணவனும் காதலிக்கும் கதை. பாடல்கள் பெரிதாகப் பேசப்பட்டாலும் படம் வெற்றி பெறவில்லை. மூன்றாண்டு கழித்து வசந்த் இயக்கத்தில் அடுத்து வெளிவந்த படம் “ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே”. ஷாம்-சினேகா நடித்த இந்தப்படத்தில் ஐந்து இசை அமைப்பாளர்கள் தலா ஒரு பாடலுக்கு இசை அமைத்திருந்தார்கள். காதல் தோல்வி ஏற்பட்டால் கௌரவமாக ஒதுங்க வேண்டும் என்ற கருத்தைச் சொல்ல எடுத்த இந்தப் படமும் சரியாக ரீச் ஆகவில்லை.

இதன்பின் நான்காண்டு இடைவெளிக்குப் பின் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெளிவந்த படம் “சத்தம் போடாதே”. குழந்தை கொடுக்க வாய்ப்பில்லாத சைக்கோ கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண்ணின் காதலைச் சொல்லிய படம். வசந்த் இயக்கத்தில் கடைசியாக 2010ஆம் ஆண்டு வெளிவந்தபடம் “மூன்று பேர் மூன்று காதல்”. இந்தப் படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை. படம் மக்களைக் கவரவில்லை.
வசந்த் இயக்குநராக அறிமுகமாகி, இது 25ஆவது வருடம். இதுவரை 10 படங்களை இயக்கியிருக்கிறார். எல்லாப் படங்களுமே பாடல்களுக்காகப் பேசப்பட்டவை. ஆனால் கேளடி கண்மணி மற்றும் ஆசை மட்டுமே அனைத்துத் தரப்பாலும் ரசிக்கப்பட்ட படங்கள். அதற்கடுத்து என்றால் “நேருக்கு நேர்” மட்டுமே.

வசந்தின் எல்லாப் படங்களிலுமே காதல் தான் மைய இழை. இருவருக்கு இடையேயான காதல், அந்தக் காதல் நிறைவேறாமல் தடுக்க ஒரு காரணி. அந்தக் காரணியானது மைய இழைக்கு சரிக்குச் சமமாக அமைக்கப்பட்டிருக்கும். கேளடி கண்மணியில் மகளின் தாய்ப்பாசம், ஆசையில் காதலியின் அக்கா கணவனின் மைத்துனி மோகம், அப்புவில் விபச்சார விடுதிக்கு கடத்திச் செல்லும் ஒரு வில்லன், ரிதத்தில் விதவைப் பெண்ணின் மாமியார், சத்தம் போடாதேயில் முன்னாள் கணவனின் கொடூர மனப்பான்மை என எல்லாப் படங்களிலும் குறுக்கீடு இருக்கும். ஆனால் அவை ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கும்.

இன்னொரு முக்கியமான அம்சம் எல்லாப் படங்களின் கதைச்சூழலும் நடுத்தர வகுப்பைச் சார்ந்தே இருக்கும். நாயகர்கள் யதார்த்தமானவர்களாகவே இருப்பார்கள். படத்தின் காட்சியமைப்புகள் பெருநகர இளைஞர்கள் விரும்பும்படி இருக்கும். ஓரளவு கதை, நல்ல பாடல்கள் இருந்தும் வசந்தின் பெரும்பாலான படங்கள் தோல்வியடையக் காரணமே, அழுத்தமான சம்பவங்களால் திரைக்கதை எழுதப்படாததுதான்.
நேருக்கு நேர் படத்திற்கு ஆதாரமே கணவன் மனைவி பிரிதல் தான். அதற்காக காட்டப்படும் காரணமே, இதற்குத்தானா என ரசிகர்களை எண்ண வைக்கும் படி இருக்கும். பூவெல்லாம் கேட்டுப்பாரில் இரட்டையர்களாக இருந்து பிரிந்த இசை அமைப்பாளர்கள் என்ற அருமையான களம் இருந்தும், அபத்தமான ஆள்மாறாட்ட காமெடிக் காட்சிகளை வைத்து படத்தை நீர்க்கச் செய்து இருப்பார். ஏய் நீ ரொம்ப அழகா இருக்கேவில் எதனால் காதல் மறுக்கப்படுகிறது என்பது குழப்பமாகவே சொல்லப்பட்டிருக்கும்.

மேலும் வசந்த் தன்படத்தில் காட்டும் காதலை, காதல் சம்பவங்களை பல இயக்குநர்கள் எளிதாகத் தாண்டிச் சென்றுவிட்டார்கள். பெரு நகர இளைஞர்களை கவரும் காதல்காட்சிகளில் கௌதம் மேனன், அழுத்தமான காட்சி அமைப்புகளுக்குச் செல்வராகவன் என வகைக்கொன்றாக இயக்குநர்கள் வந்துவிட்டதால், வசந்தின் கடைசி மூன்று படங்கள் எந்த தாக்கததையும் ஏற்படுத்தவில்லை.

படத்தின் பாடல்கள், டிரெயிலர் தரும் எதிர்பார்ப்பை, படத்தின் மையக்காட்சிகள் தராவிட்டால் பார்வையாளனுக்கு முழு காட்சி அனுபவம் கிடைக்காது. இதனாலேயே பெருவாரியான ரசிகர்களுக்கு படம் அவ்வளவு உவப்பானதாக இல்லாமல் போனது. தனித்தனியாக பல காட்சிகள் கவிதையாக செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் அதற்கடுத்த காட்சிகள் அதைக் குலைக்கும்படி இருக்கும். கேளடி கண்மணியில் தங்கள் மகள் கல்யாணத்துக்கு ஒத்துக்கொண்டதை அறிந்து வாய்பேச முடியாத பெற்றோர்கள் குதூகலிக்கும் காட்சி, எங்கே நமக்கு கல்யாணம் ஆகிவிட்டால் அவர்களைப் பார்த்துக்கொள்ள முடியாதே என மகள் கோவிலில் புலம்ப, அதற்கு எஸ்பி பாலசுப்பிரமணியம் பதிலளிக்கும் காட்சி என செதுக்கி இருப்பார். ஆனால் அதற்குப் பின்னர் வந்த படங்களில் அந்த அளவுக்கு நெகிழ்வான காட்சிகளின் கோர்வை இல்லை. வசந்தின் ஆடியன்ஸ் என்பது நடுத்தர வர்க்க இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள்தான். 90களில் மத்திக்குப் பின்னர்  தொலைக்காட்சிகளிலேயே அம்மாதிரி காட்சிகளை தொடர்ந்து பார்த்து வந்தவர்களை வசந்தினால் கட்டிப்போட முடியாமல் போனது.

வசந்த் நிறைய விளம்பரப்படங்களை இயக்கியுள்ளார். அது அவரது படத்தில் பல காட்சிகளில் தெரியும். ஆனால் தனித்தனியான சிறந்த காட்சிகள் ஒரு படத்தின் வெற்றிக்கு உதவாதே. மக்களைக் கட்டிப்போடும் காட்சிக்கோர்வை என்ற விதத்தில் வசந்தின் பிந்தைய படங்கள் சாதிக்கவில்லை.

கேளடி கண்மணியில் மூச்சு விடாமல் பாடும் பாடல், நீ பாதி நான் பாதியில் ஒரே வார்த்தையை மட்டும் வைத்து ஒரு பாடல், ரிதத்தில் பஞ்ச பூதங்களைக் குறிக்கும் வகையில் பாடல்கள், மூன்று பேர் மூன்று காதலில் நெய்தல், மருதம், குறிஞ்சி என நிலங்களைக் குறிக்கும் வகையில் காதல் நடக்கும் இடங்கள் என வசந்த் மெனக்கெட்டிருப்பார். தன்னுடன் பணிபுரியும் இசை அமைப்பாளர்களிடம் இருந்து சிறந்ததை வாங்கும் திறன் கொண்டவர்.

தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற சிறுகதையையும், சா.கந்தசாமியின் விசாரணை கமிஷனையும் குறும்படமாக எடுத்தவர் வசந்த். இரண்டும் நல்ல பாராட்டுப் பெற்றவை.

பாடல் காட்சிகளும், சில கவிதையான காட்சிகளும் போதும் என நினைக்கும் தலைமுறை இப்போது இல்லை. தங்கள் அபிமான நடிகரின் படம் எப்படி இருந்தாலும் பார்ப்போம் ஆனால் மற்ற படங்கள் அழுத்தமான கதை அமைப்புடன் இருக்க வேண்டும். பாடல்கள் எல்லாம் இரண்டாம் பட்சம் என்று எண்ணுபவர்களே இப்போது படம் பார்க்கும் தலைமுறை. அவர்களை திருப்திப்படுத்த வழக்கத்தை விட கடின உழைப்பை இப்போது தர வேண்டி இருக்கிறது. வசந்த் நிறைய இலக்கியங்கள் படிப்பவர். அதை அவர் பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார். நல்ல இலக்கியங்களை அவரால் படமாக்க முடியும். அதற்கான முயற்சிகளிலும் (குறும்படங்கள்) முன்னர் அவர் ஈடுபட்டிருக்கிறார்.


தற்போது வசந்த், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்னும் படத்தை தன்னுடைய “சத்தம் போடாதே” திரைப்படத்தின் நாயகி பத்மபிரியாவை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தையும் வரும் காலங்களில்  அவர் தரப்போகும் அழுத்தமான படைப்புக்களையும் எதிர்நோக்கி. 

No comments: