நான் படித்த துவக்க பள்ளியில் கரும்பலகைக்கு கரி பூசுதல் என்பது ஒரு முக்கியமான சடங்கு. கரும்பலகையில் சில மாத உபயோகத்திற்குப்பின் சாக்பீசால் எழுதும்போது கிரீச் என்ற ஒலி கேட்க ஆரம்பிக்கும். எழுத்து சரியாக விழாது. எனவே காலாண்டு,அரையாண்டுத் தேர்வு முடியும் நாளில் கரி,ஊமத்தை இலை போன்றவற்றை நீர் சேர்த்து மருதாணி போல அரைத்து சீராக கரும்பலகையில் பூசுவார்கள். ஒரு நாள் காய்ந்து விட்டால் புதுப்பொலிவுடன் கரும்பலகை இருக்கும். இதற்கு ஐந்தாம் மற்றும் நான்காம் வகுப்பு லீடர்கள் தான் இன்சார்ஜ். எப்பொழுதும் கடைசி நாள் பரிட்சையாக ’நீதி போதனை’ தான் இருக்கும். அதுவும் மதியத்துடன் முடிந்துவிடும்.
நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது என் தெருப்பையன் ஒருவன் தான் கிளாஸ் லீடர். விரைவாக எழுதிவிட்டு கரி அரைக்க வருமாறு டீச்சர் சொல்லவும், அவன் என்னையும் துணைக்கழைத்துப் போனான். ஐந்தாறு பேர் சேர்ந்து எல்லாப் பலகையையும் பூசி முடிக்க 2 மணிக்கு மேலாகிவிட்டது. அந்தக் காலகட்டம் இப்போது போல ஸ்கூல் வேன்,ஸ்கூல் பஸ் இல்லாத காலம். பெரும்பான்மையான மாணவர்கள் மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போய்த்தான் சாப்பிடுவார்கள்.
கைகழுவி விட்டு கிளம்ப எத்தனித்த போது, ஒருவன் மட்டும் சாப்பிடலைடா என்றான். அவன் மதிய உணவுத்திட்ட மாணவன். டீச்சரும் எல்லாரும் சாப்பிட்டுட்டு போங்கடா எனச் சொல்ல சாப்பிடப் போனோம்.
அரிசியா, கோதுமையா எது என பிரித்து அறிய முடியாமல் கொழ கொழவென இருந்த ஒரு சாதக்கலவையை, கரிப்பிடித்த ஈய வட்டாவில் இருந்து ஒரு கரண்டி வைத்தார்கள். அந்தப் பசியிலும் என்னால் இரண்டு வாய்க்கு மேல் சாப்பிடமுடியவில்லை. நண்பனிடம் நைஸாக தள்ளிவிட்டுவிட்டேன்.
இத எப்படிடா அவன் சாப்பிடுறான் என வீடு திரும்பும்போது நண்பனிடம் கேட்டேன். அவன் அதற்கு ‘அவங்க வீட்டுல ரொம்ப கஷ்டம்டா, இது இல்லாட்டி இவன் ஸ்கூலுக்கே வரமாட்டாண்டா’ என்றான்.
அதுபோல அப்போது நிறைய மானவர்கள் இருந்தார்கள். 83ஆம் ஆண்டில் எனது பள்ளிக்கட்டணம் ஆண்டுக்கு ஐந்து ரூபாய் மட்டுமே. அவ்வளவு ஏன்? 1989ல் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி ஆண்டுக்கட்டணம் பன்னிரெண்டு ரூபாய்தான், அதைக் கூட செலுத்த முடியாத மாணவர்கள் ஏராளமாக இருந்தனர். படிப்புத்தான் ஒரு மனிதனை முன்னேற்றும் என்ற கருத்தில், எப்படியாவது பள்ளிக்கு கொண்டுவந்து சேர்த்துவிடவேண்டும் என்று காமராஜரால் தொடங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் நல்ல பலனைக் கொடுத்துவந்தது. அப்போது இருந்த நிதி ஆதாரத்திற்கு காமராஜரால் அந்த அளவு தரத்தில்தான் உணவுதான் கொடுக்க முடிந்த்து. இன்றும் கூட நான் சந்திக்கும் பல அதிகாரிகள் அந்த திட்டத்தின் மூலம் ஆளானவர்கள்தான்.
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, பள்ளியில் ஒரு பரபரப்புத் தோன்றியது. அஞ்சாப்பு வரைக்கும் இருக்குற பிள்ளைகளுக்கெல்லாம் சத்துணவு போடப்போறாங்களாம் என பேச்சு அடிபட்டது. அரிசி சாப்பாடு, பருப்பு கலந்து சாம்பார் மாதிரி கொடுக்கணுமாம்,காயும் கொஞ்சம் இருக்குமாம் என பேசிக் கொண்டார்கள். ஏற்கனவே காமராஜரின் மதிய உணவுத்திட்டத்தில் இருந்த மாணவர்களுடன் புதிதாகவும் மாணவர்களை அவர்களின் பொருளாதாரத்திற்கு ஏற்ப லிஸ்ட் எடுக்க ஆரம்பித்தார்கள். அரசுப்பணியாளர்கள், வியாபாரிகள், தோட்டம் துறவு வைத்திருப்பவர்களின் பிள்ளைகள் தவிர மற்றவர்களைச் சேர்த்துக் கொண்டார்கள். சமையல் அறை வெள்ளை அடிக்கப்பட்டது. புதிதாக பாத்திரங்கள், விறகு வந்திறங்கியது.
இப்போதைய மதுரை,திண்டுக்கல்,தேனி ஆகிய மூன்று மாவட்டங்களும் இணைந்து ஒரே மதுரை மாவட்டமாக அப்போது இருந்தது. அதன் அப்போதைய ஆட்சித்தலைவர் சந்திரலேகா ஐ ஏ எஸ். எம்ஜியாருக்கு ராசியானது திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி. அந்த தொகுதிக்கு உட்பட்ட எங்கள் ஊரான வத்தலக்குண்டில் இந்த திட்டத்திற்கான ஆரம்பவிழா நடத்த முடிவானது. அன்னை தெரசா அவர்கள் இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். உண்
மையிலேயே வரலாறு காணாத கூட்டம்.
மூன்றே மாதம் தான். இந்த திட்டத்தின் வெற்றி உளவுத்துறை மூலம் கோட்டையை எட்டியது. உடனே எம்ஜியார் இதை உயர்நிலைப்பள்ளி வரை விரிவாக்கச் சொன்னார். நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் ஆடிப்போனார். அதிகாரிகளும் தான். ஆனால் எம்ஜியார் அதில் உறுதியாய் இருந்தார். அடுத்த ஆண்டிலேயே அந்தத் திட்டம் அமுலுக்கு வந்தது,
சத்துணவுக்கென தனி துறை உருவாக்கப்பட்டது. எப்படியாவது அதற்கு நிதி ஆதாரம் கொண்டுவரவேண்டும் என அவர் உறுதியாய் இருந்தார். பட்ஜெட்டில் சில துறைகளின் நிதியை இதற்கு திருப்பிவிட்டார். பல தொழிலதிபர்களிடம் நிதி கேட்டார், பரிசுச்சீட்டு குலுக்கல் நடத்தினார்.
ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு சத்துணவு அமைப்பாளர், சத்துணவு பணியாளர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்பட்டது, ஆதரவற்ற பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஒரு ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு சேர்த்து ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டார். நிறைய பேருக்கு வேலை கிடைத்தது. ஏராளமான மாணவர்கள் பயன்பெற்றனர். ஒரு மினி
எமர்ஜென்ஸிக்கு இணையான வேகத்துடன் இந்தத் திட்டத்துக்கான கோப்புகள் பறந்தன.
இந்த திட்டத்தின் மூலம் எம்ஜியாருக்கு பெரும்பாலான மக்களின் மனதில் பெரிய இடம் கிடைத்தது. இதை அப்போதைய மக்களின் பொருளாதார நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். நாங்கள் இப்போது குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் தங்கள் பகுதியில் தளத்தை இடித்துவிட்டு டைல்ஸ் பதிக்கும் வேலையைத் தொடங்கினார். தளத்தை பெயர்த்தெடுக்கவந்த பணியாளர்கள் கிறுகிறுத்துப் போய் அடுத்த நாள் வேலைக்கே வரவில்லை. அவ்வளவு கெட்டியான தளமாக அது இருந்தது.
இதைப்பற்றிச் சொல்லும் போது வீட்டு உரிமையாளார், ‘’85 வாக்குல
இந்த வீட்டைக் கட்டுனேன்பா, வேலைக்கு அவ்ளோ பேர் வருவாங்க. பணப்புழக்கம் இப்ப மாதிரியா
இருந்துச்சு? நல்லா வேலை பார்க்கலைன்னா ஆள மாத்திடுவோம்னு விழுந்து விழுந்து வேலை பார்ப்பாங்க”
என்றார், கூலியும் மிகக் குறைவாகவேதான் இருக்குமாம்.
இப்போது போல ஏராளமான சிறு வேலை வாய்ப்புகள்
அப்போது இல்லை. இப்போது தண்ணீர் கேன் சப்ளை முதல்
செக்யூரிட்டி வரை ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. வேலை தேடி ஒரிஸ்ஸா,பீகார்காரர்கள்
வருமளவுக்கு தமிழ்நாட்டில் இப்போது நிலவரம் இருக்கிறது.
எனவே அந்தக் காலகட்டத்தில் பலருக்கு வாழ்வு
கொடுதத்தாக இந்த சத்துணவுத் திட்டம் இருந்தது. இப்போது இந்த அளவு தமிழகம் செழிப்பதற்கான
(மற்ற வட மாநிலங்களோடு ஒப்பிடுகையில்) காரணங்களில் ஒன்றான சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளும்
84ல் எம்ஜியார் யதார்த்தமாக ஆரம்பித்ததுதான்.
1989ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் சத்துணவில் மாத்த்திற்கு
2 முட்டை கொடுத்தார். பின் அது வாரத்திற்கு ஒரு முட்டை ஆகி, இரண்டாகவும் ஆனது. அடுத்து வந்த ஜெயலலிதா முட்டை போடும் நாட்களில் அதற்கு ஈடாக சைவ அயிட்டம்
ஒன்றையும் வழங்க உத்தரவிட்டார்.
எவ்வளவோ தொலை நோக்குடன் திட்டங்கள் வகுக்கலாம். ஆனால்
எப்போதும் உடனடியாகச் செய்ய வேண்டிய ஒன்றும் இருக்கும். அந்த காலகட்டத்தில் தேவைப்பட்ட
மாணவர்க்கான உணவை ஒரு கடமையாகச் செய்யாமல் ஆத்மார்த்தமாகச் செய்தார் எம்ஜியார்.
அரிசி,பருப்பு கொள்முதலில் இருந்து, அது உணவாக மாறி
மாணவனுக்குப் போய்ச் சேரும் வரை கவனம் செலுத்தினார். சத்துணவு தொடர்பாக எந்த புகார்
வந்தாலும் உடனடி நடவடிக்கை எடுத்தார். அதிகாரிகளிடம் ஆய்வுக்கூட்டங்களில் பேசும்போது
நான் கையேந்தியாவது நிதி சேர்த்துத் தருகிறேன் என்று உறுதி அளித்தார். அந்த விஷயத்தில்
அவர் காட்டிய உறுதி ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு பயத்தைக் கொடுத்து இந்தத் திட்டம் கொடுத்து
குறைவான தவறுகளுடன் மட்டுமே செயல்பட வைத்தது.
No comments:
Post a Comment