தமிழ்சினிமாவில் பெண்கள் வயதுக்கு வருவது, அதற்கான சடங்குகள் நடத்துவது போன்ற காட்சியமைப்புகள் எப்போதிலிருந்து வருகின்றன என்று பார்த்தால் 70 களின் ஆரம்பத்தில் இருந்துதான் என்று சொல்ல முடியும். இயல்பான கதைகள் வரத்தொடங்கிய காலகட்டத்தில் தான் பெண்களின் இயல்பான பருவமாற்றமும் திரையில் வரத் தொடங்கியது.
இந்தக் காட்சிகளின் அவசியமென்ன?. இரு குடும்பத்தாரிடையே சண்டை வர ஒரு களம், அதைத் தொடர்ந்து கதையில் வரும் முடிச்சிற்க்காக சில இயக்குநர்கள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். குறிப்பாக பாரதிராஜா. தாய்மாமன் என்னும் உறவை தூக்கிப்பிடிக்கவும் இது பயன்படுத்தப்பட்டது.
ஒரு பெண்ணிற்க்கு காதல் வரத்தொடங்கும் ஆரம்பப் புள்ளியாகவும் (பாரதிகண்ணம்மா,காதல்), ஆணுக்கு காதல் தொடங்கும் (அழகி) ஆரம்பப்புள்ளிக்காகவும் இந்தக் காட்சிகள் பல இயகுநர்களால் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.
சில இயக்குநர்களே இதை காமெடி காட்சிகளுக்கும் உபயோகப் படுத்தினார்கள் (ஜல்லிக்கட்டு காளை, திருப்பதி). வைகாசி பொறந்தாச்சு படத்தில் ஒரு ஆண் வயதுக்கு வந்தால் எப்படி பாட வேண்டுமென காமெடி பண்ணியிருந்தார்கள். பாட்டாளி திரைப்படத்தில் பெண் வேடமிட்ட ஆணுக்கு சடங்கு என்று ஒரு காமெடியும் உண்டு.
ஆனால், இந்த விஷயத்தை திரைப்படத்தின் கருவாகவே உபயோகித்த படங்கள் மிகக் குறைவு. தென் மாவட்டங்களில் ஒரு பழக்கம் உண்டு (மற்ற இடங்களிலும் இருக்கலாம்). ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால் அந்தத் துணிகளை துவைத்து கொடுப்பவர்கள் சலவைத் தொழிலாளர்களே. பின் அந்தப் பெண்ணை தனியே உட்கார வைத்து, சில நாட்களுக்குள் தாய்மாமன் சீர் நடைபெறும். (பூப்புனித நீராட்டு விழா என்பது வசூலுக்காகவும், எங்கள் பெண் பெரியவளாகிவிட்டாள் என ஊருக்குத் தெரியப்படுத்தவும் பின் சவுகரியமான ஒரு நாளில் நடத்தப்படுவது.). இந்த தாய்மாமன் சீரில் கொடுத்த புடவையைத் தான் முதலில் உடுத்திக் கொள்ள வேண்டுமென சொல்வார்கள். இந்த இடைப்பட்ட ஓரிரு நாளில் அந்தப் பெண்கள் உடுத்திக் கொள்வது சலவைத் தொழிலாளர்கள் கொடுக்கும் உடைகளையே.
இதை மையமாக வைத்து 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் முதல் சீதனம். சிவா, ஆம்னி நடிக்க சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர் பி சவுத்ரி இசையில் வெளியானது இந்தப்படம். இயக்கியது சேரன் பாண்டியன் போன்ற படங்களின் வசனகர்த்தா ஈரோடு சவுந்தர். இசை சௌந்தர்யன்.
ஒரு சலவைத் தொழிலாளியை பெரிய வீட்டுப் பெண் காதலிக்கிறார். அந்தத் தாய்மாமனை விட எனக்கு முதல் சீதனம் கொடுத்த இந்த தொழிலாளி பெரியவர்தான் என நாயகி சொல்கிறாள். முடிவு எப்படியிருக்கும்?. இந்தப் படம் தோல்வியடைந்தாலும் சில சமூக சிந்தனைகளைத் தூண்டியது.
தாழ்த்தப்பட்டவர்களில் புதிரை வண்ணார்கள் என்று ஒரு பிரிவு உண்டு. சுருக்கமாகச் சொன்னால் தாழ்த்தப்பட்டவர்களில் இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள். இவர்கள் தீட்டுச் சேலையை சலவை செய்து கொடுப்பவர்கள் என்று சொல்வார்கள். திண்டுக்கல்,விருதுநகர் மாவட்டங்களில் இவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் சற்று அதிகமாகவே. இவர்கள் தங்கள் உரிமைக்காக பல போராட்டங்களை நடத்தி வந்தார்கள். பல சமூக ஆர்வலர்கள் இவர்களுக்காக உழைத்தார்கள்.
தமிழக அரசு சமீபத்தில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தது. அதைத் தொடர்ந்து நீண்ட முயற்சிகளுக்குப் பின் புதிரை வண்ணார்களுக்கான தனி நல வாரியத்தை அமைத்துள்ளது. இது அவர்கள் வாழ்வில் ஒளியேற்றும் என நம்புவோமாக.
முதல் சீதனம் படத்தில் பாடல்கள் நன்றாக இருக்கும். குறிப்பாக எஸ் பி பி பாடிய எட்டு மடிப்புச் சேலை என்னும் பாடல்.
மேற்குறிப்பிட்ட படங்களெல்லாம் பெண் பருவமடைந்த பின் வரும் காட்சியமைப்புகளை வைத்து. ஆனால் ஓரு பெண் பருவமடையாவிட்டால் என்னென்ன கஷ்டங்களை அவளும் அவள் குடும்பத்தாரும் பட நேரிடும் என்பதை அருமையாக காட்டிய படம் 1975 ஆம் ஆண்டு வெளியான தென்னங்கீற்று.
எழுத்தாளர் கோவி மணிசேகரன் எழுதிய நாவலே இது. அவர் சில காலம் சினிமா மீது கொண்ட பற்றுக்காரணமாக இயக்குநர் கே பாலசந்தரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். முதல் படம் அரங்கேற்றம். பின்னர் அவரிடம் இருந்து வெளியேறியபின்
இயக்கிய படமே தென்னங்கீற்று.
இந்தக் கதையை கேள்விப்பட்ட ஒரு கன்னட தயாரிப்பாளர் இதை கன்னடத்தில் படமாக்க வந்தார். அவரிடம் கோவி, படத்தை தானே இயக்குவதாகவும், தமிழிலும் இதை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
விஜயகுமார், சுஜாதா நடிக்க உருவானது இந்தப் படம். சுஜாதா 28 வயதாகியும் பருவமடையாத பெண்ணாக நடித்திருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் வேடத்தில் நடித்த கல்பனா. கன்னடத்தில் சுஜாதா வேடத்தை ஏற்றிருந்தார். பல சங்கடங்களை சந்திக்க நேரும் சுஜாதா இறுதியில் பருவமடைவார்.
கன்னடத்தில் நல்ல வெற்றி பெற்ற இந்தப் படம், தமிழில் தோல்வியடைந்தது. ஆனால் விமர்சகர்களால் பாராட்டப் பட்டது. தமிழக அரசு விருதும் கிடைத்தது.
இந்தப்படம் வெளியான காலகட்டங்களில் பெண்ணின் பருவமடையும் வயது 14-15 ஆக இருந்தது. பி யூ சி படிக்கத் தொடங்கும் வயது பெண்களுக்கு 16. அந்தக் காலகட்டத்தில் பெண் பருவமடையாமல் இருந்தால் அவளை தென்னங்கீற்று என மறைமுகமாக கிண்டல் செய்வார்களாம்.
இதனால் பல பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
பெண் பருவமடையும் வயது படிப்படியாக குறைந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 60களில் 16 ஆக இருந்தது தற்போது 12-13 என மாறிவருகிறது. இதற்குச் சூழலும் முக்கியமாக உணவுப் பழக்கங்களும் காரணம் எனத் தெரிவிக்கிறார்கள். இந்த வயது இன்னும் குறைந்தால் மிகப் பிரச்சினை. மன முதிர்சிக்கு முன் உடல் முதிர்ச்சி அபாயகரமானது.
35 comments:
முரளி அருமை.. யாருக்கும் ஞாபகமில்லாத படங்களை பற்றிய உங்களது இந்த பதிவு.. மிக அருமை.. ஏற்கனவே இந்த படத்தை பற்றி கேள்விபட்டு டிவிடி தேடிக் கொண்டிருந்த என்னை மேலும் அலைய தூண்டி விட்டது இந்த பதிவு.
ஈரோடு சவுந்தர் என் நண்பர் தான் அவருக்கு இந்த பதிவு பற்றி தெரிந்தால் மிகவும் சந்தோசப்படுவார்.
முரளி,
சமுதாய பிரச்சினையோடு ஒரு அழகான பதிவு.
எல்லா கோணங்களிலும் நன்றாக அலசியிருக்கிறீர்கள்...
உங்களிடமிருந்து நிறைய இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேன்...
பிரபாகர்.
”ராமாயி வயசுக்கு வந்துட்டா”ன்னு ஒரு படம் வந்தது.ஆனால் அப்படம் அதைப் பற்றியதா என்று ஞாபகமில்லை.
சென்னையில் இதை ”புட்டு” கேஸ் என்று சொல்வார்கள்.
நன்றி கேபிள் சங்கர்.
நன்றி பிரபாகர்
நன்றி ரவிஷங்கர்.
1980ல் வெளியான ராமாயி வயசுக்கு வந்துட்டா தலைப்புக்காகவே பரபரப்பாக பேசப்பட்ட படம். வேந்தன்பட்டி அழகப்பனின் முதல் படம்.
இந்தப் படத்தைப் பார்த்திருந்தாலும் எனக்கு அந்தப் படம் சொன்ன செய்தி ஞாபகமில்லை. வயசுக்கு வந்ததைப் பற்றியா அல்லது வேறெதும் கட்டுடைப்பா என தெரியவில்லை.
பிரச்சனையையும், சினிமாவைவும் கலந்து கட்டி எழுதியதில் சினிமாவைப் பற்றிய தகவல்களே அதிகம்.
தென்னங்கீற்றை மட்டும் தனியாக எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்!?
ஒரு பெண் பருவமடைந்து விட்டாள் என்பதை ஊருக்கே தெரிவிக்கிற ஒரு வழக்கம் நம் மரபான விஷயமாக இருக்கிறது. அதைத் தெரிவிக்க முடியாதபோது வருகிற உளைச்சல் மிக அதிகம். மற்றபடி, அந்தப் பெண்ணுக்கும், அந்தக் குடும்பத்தினருக்குமே தெரிந்த குறையாய் இருக்கும் பட்சத்தில் அந்த உளைச்சல் நிச்சயம் வேறுவிதமாகவே இருக்கும். இதனையும் சேர்த்தே இந்தப் பிரச்சினையை நாம் பார்க்க வேண்டியுள்ளது. நல்ல பதிவு முரளிக்கண்ணன்.
அப்படி சடங்கு வைக்கலின்னா அவ்வளவு தான்
அப்புறம் தாய்மாமனுக்கு வேலை வேண்டாமா .....
:-))
அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
நல்லாயிருக்குங்க.. நல்ல அலசல்.
உங்கள் தேங்காய் சீனிவாசன் பதிவும் நல்லாயிருந்தது.
தல
சூப்பர்
மிக மிக அருமையான கட்டுரை
எந்த மேட்டரையும் விட்டு வைக்கறதில்லையா தல, எல்லாத்துக்கும் ஒரு சினிமா கனெக்ஷன் குடுத்துற்ரீங்க,
வாழ்த்துக்கள்.
//ராமாயி வயசுக்கு வந்துட்டா”ன்னு ஒரு படம் வந்தது.ஆனால் அப்படம் அதைப் பற்றியதா என்று ஞாபகமில்லை.
//
இந்த இடுகையில் நீங்கள் “எப்படி எப்படி சமைஞ்சது எப்படி” பாடலை பற்றி கூட சேர்த்திருக்கலாம்
பின்ன --> ”உன்(ங்கள்) பெண்ணை பார்த்து இப்படி பாடுவீயா(ர்களா)” என்று அந்த கவிஞருக்கு 1000 தபால் அட்டைகள் (போஸ்ட் கார்டு) அனுப்ப வைத்த பிரபல பாடலல்லவா அது !!
//இந்த இடைப்பட்ட ஓரிரு நாளில் அந்தப் பெண்கள் உடுத்திக் கொள்வது சலவைத் தொழிலாளர்கள் கொடுக்கும் உடைகளையே.
//
எங்க ஊர்ல இந்த பழக்கம் இருந்தது..இப்ப இல்லை.
அருமை தல
நன்றி அப்பாவி முரு
நன்றி மாதவராஜ்
நன்றி ஸ்டார்ஜான்
நன்றி அசோக்
நன்றி புருனோ
நன்றி தராசு
நன்றி அத்திரி
சமீபத்தில் காதல் திரைப்படத்தில் இக்காட்சி விரிவாக இருந்தது என்று நினைக்கிறேன்
நல்ல பதிவு.குழந்தைதனம் மாறாமல் இருக்கும் போதே உடல் முதிர்ச்சி??வடகரைவேலனின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது
வருகைக்கு நன்றி தண்டோரா
வயதாகியும் பருவமடையா சிக்கல்களை வைத்து படமெடுத்தது போல சிறு வயதில் பருவமடைவதால் வரும் சிக்கலை வைத்து படமெடுத்தால் விழிப்புணர்வாக இருக்கும்.
இன்னும் திரையுலகம் தொடாத சப்ஜெக்ட் இது
தலைப்பைப் பார்த்து, உங்க ”நாகராஜன் சந்து” மாதிரியான இடுகைன்னு நினைச்சேன். சினிமாவில் தென்னங்கீத்தின் பங்கில ஆரம்பிச்சு இட ஒதுக்கீடுன்னு கலந்து பெண்களின் பிரச்சினைன்னு பல விஷயத்தைச் சொல்லியிருக்கீங்க. நல்லாருக்கு முரளிகண்ணன், இப்பவும் இந்தத் தென்னங்கீத்துச் சடங்குகள் தொடருதா இல்ல குறைஞ்சுக்கிட்டே வருதா?!
//மன முதிர்சிக்கு முன் உடல் முதிர்ச்சி அபாயகரமானது//
well said muralikannan.
வருகைக்கு நன்றி சங்கா.
இன்னும் இவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பத்தாண்டுகளுக்கு முன் போஸ்டருக்கு பிரமோஷன் வாங்கிய இவ்வகை விழாக்கள் தற்போது பிளக்ஸ் போர்ட் வைக்கும் அளவுக்கு தென்மாவட்டங்களில் வளர்ந்துவிட்டன.
ஏன் சென்னை வேளச்சேரியிலேயே அமர்க்களமாக இன்னும் நடைபெறுகின்றன. தண்டீஸ்வரம் பகுதியில் இருக்கும் சில பியூட்டி பார்லர்களில் இவ்வகை விழாக்களுக்கு சிறப்பு பேக்கேஜே உண்டு.
வருகைக்கு நன்றி மிஸஸ் தேவ்
முரளி
நன்றாக இருந்தது. இன்னும் கொஞ்சம் விலாவரியாக எழுதியிருக்கலாம். அவசரமாய் சின்ன பதிவாக வெளியிட்டிருக்கிறீர்கள். சினிமாவின் தாக்கத்தால் மஞ்சள் நீராட்டு விழா என்கிற பெயரில் loud speaker கட்டி ஊரையே கதி கலங்க வைத்து (பெண்ணுக்கு எப்படி அது மன நிலையை பாதிகும் என்று யார் கவலைப்பட்டார்கள்?), "மஞ்சக்குளிச்சி அள்ளி முடிச்சி' போன்ற பாடல்கள் இவைகளைப் பற்றியும் அலசியிருக்கலாம். சமீபத்தில் இந்த தாய்மாமனை கல்யாணம் செய்வது விஷயமாய் 'பூ' என்று ஒரு படம் அருமையாக எடுத்திருந்தார்கள்.
நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்!
நன்றி ஸ்ரீதர்
:))
மிகவும் மெனக்கெட்டு எழுதியிருக்கிறீர்கள். சத்தியமாக நீங்கள் சொல்லிய சில படங்கள் பற்றி நான் கேள்வி பட்டதே இல்லை. சிறப்பான பதிவு. கொஞ்சம் எனது வலைமனைக்கும் வருகை தாருங்களேன். நானும் தமிழ் சினிமாப் பற்றிய சில பதிவுகளை இட்டு உள்ளேன்.
http://oliyudayon.blogspot.com/
நன்றி பிரசன்னராஜன்
நிச்சயம் வருகிறேன்
முதல் சீதனம். சிவா, ஆம்னி நடிக்க சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர் பி சவுத்ரி இசையில் வெளியானது இந்தப்படம்.
Boss Music director choudry or producer choudry?
Plz Check it.
நன்றி யாழிசை
தயாரிப்பில் என்பதற்கு பதிலாக இசையில் என்று வந்துவிட்டது.
திருத்தி விடுகிறேன்
காயத்ரி என்றொரு மலையாளப் படம் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் கதை. அதிலும் சலவிஅத் தொழிலாளியை காதலிக்கிற மாதிரி வரும். படம் நன்றாய் நினைவில்லை. திருவனந்த புரம் போய் பார்த்தது. 1971/72 என்று நினைவு. சற்று சுதந்திரமாக குடித்துவிட்டு பார்த்தேன்.குமுதத்தில் ஒரு சிறு கதை வந்தது, 60 களில், அதை எழுதியது, ஏ.வி.எம் குமரன்
கதை கல்யாணமான பின்(முதலிரவு அன்று பூப்பெய்துவது போல் நினைவு.
வருகைக்கும் மேலதிக தகவல்களுக்கும் மிகுந்த நன்றி கலாபிரியா சார்.
ஓரளவுக்கு உங்களோட சினிமா லேபிள் இருக்கிற எல்லாத்தையும் படிச்சிட்டேனே!
மிக்க நன்றி இரவுப்பறவை.
பதிவு பற்றிய தங்களின் கருத்துக்களை
பகிர்ந்து கொண்டிருக்கலாமே?
அருமையான பதிவுங்க நண்பர் முரளிக்கண்ணன்.
நன்றி கார்த்திகேயன்
அருமையான பதிவு முரளி
முதல் சீதனம் தோல்விப்படமா?
நல்ல பதிவு, இன்னும் விரிவாக பேசியிருக்கலாம்.
நன்றி டிவிஆர் சார்
வருகைக்கு நன்றி தமிழன் கறுப்பி
முதல் சீதனம் தோல்விப்படமே. ஆனால் மிக குறைந்த பட்ஜெட் என்பதால் தயாரிப்பாளாருக்கு அடியில்லை.
இன்னும் சில விபரங்கள் இருக்கின்றன. மற்றுமொரு பதிவில் அதை எழுதுகிறேன்
Post a Comment