August 28, 2009

கிராமராஜன்களுக்கு இனி வாய்ப்பிருக்கிறதா?

1992 ஆம் ஆண்டு.சரத்குமார் நடித்து மணிவாசகம் இயக்கத்தில் வெளிவந்திருந்த பெரிய கவுண்டர் பொண்ணு திரைப்படத்துக்கு சென்றிருந்தேன்.(திண்டுக்கல் - கணேஷ் தியேட்டர்) மதிய காட்சி ஹவுஸ்புல். இடைவேளை முடிந்து ரசிகர்கள் அரங்கிற்கு உள்ளே சென்றதும் கேண்டின்காரரிடம் கேட்டேன்.

”என்னங்க இந்தப்படத்துக்கு இவ்வளோ கூட்டம்”

”ராமராஜன் படம் எதுவும் இப்போ இல்ல, பித்தளப்பட்டி,பாறைப்பட்டி,தெத்துப்பட்டின்னு எல்லா ஆளுகளும் இப்போ இந்தப் படத்துக்குத்தான் வந்திருக்காங்க” என்று பதிலளித்தார்.

அதுமட்டுமல்ல அதன்பின் வந்த ஊர் மரியாதை,எல்லைச்சாமி,சாமுண்டி, கட்டபொம்மன்,ராஜபாண்டி என சரத்குமார் நடித்த கிராமியப் படங்கள் எல்லாம் அந்த ஏரியாவில் நன்றாக ஓடியது.

91 ஆம் ஆண்டு வெளிவந்த என் ராசாவின் மனசிலே வெற்றிக்குப் பின் ராஜ்கிரணுக்கும் இந்த பாக்கியம் கிடைத்தது. அரண்மணைக்கிளி,எல்லாமே என் ராசாதான் என அடுத்தடுத்த படங்கள் வெற்றியும், பின் வந்த படங்கள் மற்ற இடங்களில் தோலிவியடைந்தாலும் சி செண்டர்களில் முதலுக்கு மோசமில்லாமல் ஓடின.

சென்னை-28, சரோஜா படங்களின் இயக்குநர் வெங்கட் பிரபு முதலில் கதாநாயகனாக அறிமுகமாக இருந்த படம் பூஞ்சோலை. அவர் தந்தை கங்கை அமரனே தயாரித்து இயக்குவதாக இருந்தது. நாயகி சங்கீதா (அப்போது ரசிகா). அந்தப் பட பிரஸ் மீட்டில் அமரன் சொன்னது,

“ராம்ராஜனின் இடம் இப்போது காலியாக இருக்கிறது. என் மகனுக்கு கிராமத்து ஹீரோவுக்கு உரிய முகம். ஒரு ரவுண்டு வருவான். அதனால் துணிந்து அறிமுகப்படுத்துகிறேன்” என்றார். விதி, வெங்கட் பிரபுவை நல்ல இயக்குநராக அடையாளம் காட்டியது பின்னர்.


ஆமாம். இப்பொது அந்த கிராமிய படங்களுக்கே உரித்தான ஹீரோக்கள் எங்கே போனார்கள்?
ராமராஜன்,ராஜ்கிரண் வரிசையில் அடுத்த ஆள் யார்?

கிராம மக்களின் ரசனை அப்படியே இருக்கிறதா? இல்லை முன்னேறி விட்டதா?

தற்போது ஆதவன்,கோபி கிருஷ்ணன், ப சிங்காரம் என படிக்கும் யாரும் முதலிலேயாவா அதைப் படிக்க ஆரம்பித்தார்கள்?. சிறுவர் மலர்,காமிக்ஸில் தொடங்கி விகடன்,குமுதம்,கிரைம் நாவல் வழியாக எஸ்ரா,சாரு,ஜெமோ என ஆரம்பித்து நாஞ்சில் நாடன்,சுரா,மௌனி,புதுமைப்பித்தன்,நகுலன் என முன்னேறியவர்கள் தானே?

ஐந்து வயதுப் பையனுக்கு ஹேராமும்,நான் கடவுளும் பிடிக்குமா? அவனுக்குப் பிடித்தது சண்டைப் படம்,மீசை அரும்பியபின் காதல் படம், கொஞ்சம் அடிபட்ட பின் அன்பே சிவம், மகாநதி.

ஆனால் விகடன், குமுதத்திலேயே தங்கி விடும் போதுதான் ரசனைத் தேக்கம் ஏற்படுகிறது. அதுபோலவே சி சென்டர் ரசிகர்களும் எதையுமே நேரடியாகச் சொல்லும் படங்களுடன் தங்களை நிறுத்திக் கொண்டார்கள். காட்சிகளுக்கு இடையே படித்தல், குறியீடுகள் ஆகியவை அவர்களுக்கு அன்னியமாய் இருந்தன.

எடுத்துக்காட்டாக

சந்திரமுகியில் ரஜினிகாந்த் அமெரிக்காவில் பெரிய மனோதத்துவ நிபுணர் என்ற பாத்திரம். அதற்கு சப்போர்டிவ்வாக அவர் ஏதும் கான்பரண்ஸில் பேசுவது மாதிரியோ அல்லது ஒரு சிக்கலான கேஸை ஹேண்டில் செய்வது மாதிரியோ காட்சி அமைத்து விளக்காமல், “அவர் எவ்வளோ பெரிய டாக்டர்” என்ற ஒரு வரி வசனத்தில் நேரடியாகச் சொல்லி விடுவார்கள்.

ராமராஜன்,சரத்குமார்,ராஜ்கிரண் நடித்த பல கிராமிய படங்களில் இம்மாதிரி நேரடிக் காட்சிகளே இருக்கும்.

சரி. இப்போது எப்படி நிலைமை? அவர்கள் அங்கேயே தங்கி விட்டார்களா? என்ற கேள்விக்கு
முன்னேறி வருகிறார்கள் என்பதே பதிலாக இருக்கும்.


கடந்த சில வருடங்களில் பஞ்சாயத்து,மஞ்சு விரட்டு,முறை மாமன் என லைட்டான கதையமைப்புடன் வந்த எந்த வழக்கமான கிராமியப் படமும் ஓடவில்லை. ஆனால் விருமாண்டி,பருத்திவீரன் போல உள்ளடக்கத்துடன் வந்த படங்கள் தப்பித்தன.

இப்போதைய தமிழ்சினிமாவில் இரண்டு வகையான படங்களே எடுக்கப்படுகின்றன. ஒன்று நகரத்தைக் களமாகக் கொண்ட ஆக்‌ஷன்,காதல், காமெடி பொழுது போக்குப் படங்கள்.

இன்னொன்று யதார்த்தமான அழகி,காதல்,சுப்ரமணியபுரம்,பூ, வெண்ணிலா கபடிக் குழு,நாடோடிகள்,பசங்க போன்ற படங்கள். இவை மதுரையைச் சுற்றியுள்ள இடங்களில் படமாக்கப்பட்டாலும் வழக்கமான கிராமியப் படங்களின் வகையில் சேர்க்க முடியாது. சில படங்கள் சிறு நகர பேக் கிரவுண்டில் எடுக்கப்படுகின்றன.
தங்கர் பச்சான் வட மாவட்டங்களைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டார். வெடிகுண்டு முருகேசன் கூட வழக்கமான கிராமியப் படங்களில் இருந்து மாறுபட்ட ஒன்றே.

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, காத்தவராயன் என வழக்கமான பாணியில் எடுக்கப்பட்ட கிராமியக் கதைகள் படு தோல்வி அடைந்ததால் அனைவரும் யோசிக்கிறார்கள்.

செயற்கைக் கோள் தொலைக்காட்சி, அலை பேசி வருகைக்குப் பின் சி செண்டர் மக்களுக்கு அதிக எக்ஸ்போஷர் கிடைத்துள்ளது. எனவே அவர்களின் ரசனையும் உயர்ந்து கொண்டே வருகிறது.

யதார்த்தப் படங்களுக்கு கதைக்கேற்ற ஹீரோதான். ஆனால் வழக்கமான கிராமியப் படங்களுக்குத்தான் ரெககணைஸ் ஆன முகம் தேவை. அம்மாதிரிப் படங்கள் இனி வருவது கடினம் என்பதால் அதற்கேற்ற கிராமராஜன்களும் வருங்காலத்தில் உருவாவப் போவதில்லை.

இனி எல்லாம் அஜீத்,விஜய்,விக்ரம்,சிம்பு,விஷால்,ஜெயம் ரவி,ஆர்யா, மாதவன் டைப் ஹீரோக்கள் தான் வருவார்கள். சில சமயம் சசிகுமார் போல வந்தாலும் கதைக்கேற்ற வேடம்தான் போடுவார்கள்.

49 comments:

அது ஒரு கனாக் காலம் said...

ஆஹா ஒரு இடம் காலி இருக்கு போல ???!!!!!

நல்ல பதிவு சார் ....

கே.என்.சிவராமன் said...

//கிராமராஜன்களும் வருங்காலத்தில் உருவாவப் போவதில்லை.

இனி எல்லாம் அஜீத்,விஜய்,விக்ரம்,சிம்பு,விஷால்,ஜெயம் ரவி,ஆர்யா, மாதவன் டைப் ஹீரோக்கள் தான் வருவார்கள். சில சமயம் சசிகுமார் போல வந்தாலும் கதைக்கேற்ற வேடம்தான் போடுவார்கள். //

இது ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் முரளி. முகங்கள்... விலைபோகும் அழகான, ஸ்மார்ட்டான முகங்கள்... இதை வச்சு வேறொரு தளத்துக்கு ஓட ஆரம்பிச்சுட்டேன்.

நன்றி. என்னை ஓட வைத்ததற்கு.

வழக்கமான டெம்ப்ளேட் வார்த்தைதான் என்றாலும், அதையே சொல்கிறேன்.

நல்லா இருக்கு.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Karaikudiyaan said...

Miga nalla Pathivu Sir...
After seeing this post title,
I thought abt virumandi and paruthiveeran..
u also told abt it..
Excellent

SK said...

நல்லா அலசி இருக்கீங்க. இம்புட்டு படமுமா பாக்குறீங்க.

தலைவரே, உங்களுக்கு ரொம்ப நாள் முன்னாடி ஒரு ஈமெயில் செஞ்சேன். வந்திச்சா ?? திரும்ப அனுப்பவா ?? உங்க பதிலுக்காக காத்து இருக்கிறேன்.

வெட்டி வேலு said...

//செயற்கைக் கோள் தொலைக்காட்சி, அலை பேசி வருகைக்குப் பின் சி செண்டர் மக்களுக்கு அதிக எக்ஸ்போஷர் கிடைத்துள்ளது. எனவே அவர்களின் ரசனையும் உயர்ந்து கொண்டே வருகிறது.//

வில்லு, குருவி, ஏகன், ஆழ்வார், இப்ப கந்தசாமீ தோல்வியில இருந்து நகர வாசிகளுக்கும் ரசனை கூடிருச்சின்னு சொல்லலாமில்லையா ? :)

நல்ல பதிவு :)

எம்.எம்.அப்துல்லா said...

//வில்லு, குருவி, ஏகன், ஆழ்வார், இப்ப கந்தசாமீ தோல்வியில இருந்து நகர வாசிகளுக்கும் ரசனை கூடிருச்சின்னு சொல்லலாமில்லையா ? :)

//

இதே பதிலைதான் நானும் சொல்ல வந்தேன்.

முரளிகண்ணன் said...

நன்றி அது ஒரு கனாக் காலம்

நன்றி பைத்தியகாரன். நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லியிருக்கிறேனா என பயந்து கொண்டே இருக்கிறேன். சில விஷயங்களை நன்றாக சொல்ல வில்லை என நினைக்கிறேன்.
(பரவாயில்லை முயற்சிதானே என ஆறுதல் பட்டுக் கொள்கிறேன்)

முரளிகண்ணன் said...

நன்றி முத்து.

மன்னித்துக் கொள்ளுங்கள் எஸ் கே.
அந்த மெயில் தேடியும் கிடைக்கவில்லை. எப்படி மிஸ் பண்ணினேன் எனத் தெரியவில்லை.சிரமப்படாமல் இன்னொன்று அனுப்பவும்.


வருகைக்கு நன்றி வெட்டி வேலு

நன்றி அப்துல்லா அண்ணே

Raju said...

முரளிண்ணே,
எனக்கு தெரிந்து, நகரவாசிகளுக்கும் சரி, கிராமவாசிகளுக்கும் சரி ரசனை உயரவெல்லாம் இல்லை.
மாறு படுகின்றது அவ்வளவே...!

இரும்புத்திரை said...

//செயற்கைக் கோள் தொலைக்காட்சி, அலை பேசி வருகைக்குப் பின் சி செண்டர் மக்களுக்கு அதிக எக்ஸ்போஷர் கிடைத்துள்ளது. எனவே அவர்களின் ரசனையும் உயர்ந்து கொண்டே வருகிறது.
//

படித்தவர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே இருக்கிறது அது தான் காரணம்.
ரசனையும் மாறுகிறது. வில்லு, குருவி, ஏகன், ஆழ்வார், கந்தசாமி - இது எல்லாம் லாஜிக் மற்றும் மேஜிக் இல்லாதது

SK said...

திருப்பி அனுப்பி உள்ளேன். :-)

சரவணகுமரன் said...

வழக்கம் போல் நல்ல பதிவு...

சரவணகுமரன் said...

ஹரி எடுக்கும் படங்கள், கிராம படங்களா?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அதுபோலவே சி சென்டர் ரசிகர்களும் எதையுமே நேரடியாகச் சொல்லும் //


வல்லரசு படம் இதற்கு மிகத் தெளிவான உதாரணம். வல்லரசுவின் ஒவ்வொரு திட்டத்தையும் அந்த காட்சி முடிந்த உடன் இரண்டு நபர்கள் எளிமையாக விளக்குவார்கள். காட்சியிலேயே தெளிவாகத்தான் எடுத்து இருப்பார்கள். இருந்தாலும் இரண்டுபேர் பேசுவதாக எடுத்திருப்பார்கள்.

உதாரணமாக

நம்ம சாரோட திற்மை பார்த்தியா.. கொலைகாரன் எப்படியும் போலீசோட கலந்திருவான்னு எதிர்பார்த்துக்கிட்டு எல்லாத்துக்கும் முதல்ல்யே யபவ் டன் அப்படின்னா கீழே உங்காருங்கன்னு சொல்லிட்டாரு. அதுனால நம்ம தலைவர் யபவ்டன் அப்டின்னதும் நம்ம போலீஸ் காரங்கலெல்லாம் கீழே உங்கார்ந்திட்டாங்க. அந்த பயங்கரவாதி மட்டும் திரும்பி நின்னான். நம்ம சார் சுட்டுட்டார்.

இன்னொரு காட்சி

பய்ங்கரவாதிகளின் திட்டம் பற்றிய தேதி கிடைத்தவுடன் கேப்டன் பய்ங்கரமாக யோசித்து அன்று ஒரு மத்திய அமைச்சர் வருவது பற்றி தெரிந்து கொண்டு பதட்டப் படுவார். அடுத்த காட்சியில் அவர் க்ர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவரை பயங்கரவாதிகள் கொன்றால் என்னன்ன விளைவுகள் நடக்கும் அதனால் அங்குள்ள தமிழர்கள் எவ்வளவு பாதிப்பு அடைவார்கள் என்பதையும் விவரமாக இரண்டு நிமிடம் சொல்வார்கள். பாமர ரசிகர்களுக்கும் கேப்டன் திட்டமும், பதட்டத்திற்கான காரணமும் புரியும்.

அடுத்து வாஞ்சிநாதனில் ஒவ்வொரு முறை துப்பாக்கிச் சூடு நடத்தும்போதும் அந்த கேசை எப்படி முடிப்பது என்பது பற்றி ஒரு நிமிடம் பேசி பிறகே சுடுவார்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம் தல..,

புரிய வேண்டும். அதே மேலும் கொஞ்சம் சுவாரசியம் இருக்க வேண்டும். அப்போது மட்டுமே வெற்றியடைய முடியும்.

ஒரு படத்தில் நாயகர் பேண்ட் சட்டை போட்டு, கூலர்ஸ் போட்டுக் கொண்டு உழுவார். ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு படம் பார்த்தார்கள்.

அதே போல் பாக்கியராஜின் கிராமப் படங்களிலும் அவர் நல்ல நேர்த்தியான பேண்ட் சட்டையுடனேயே வருவார். கதையோடு ஒன்றிய தன்மையில் வந்தால் கிராம ராஜன்கள் வருவார்கள்.

முரளிகண்ணன் said...

டக்ளஸ் ரசனை உயரவில்லை என பொத்தாம் பொதுவாக சொல்லமுடியாது. குறைந்த பட்சம் உயர்ந்திருக்கிறது என்றாவது ஒப்புக்கொள்ளும்படித்தான் நிகழ்வுகள் உள்ளன.

இப்போது சின்னதம்பி மாதிரியான படம் வெளிவந்தால் அதே அளவு ஓடும் என்று சொல்ல முடியுமா?

ரசிகர்கள் சிரித்து விடுவார்கள்.

கந்தசாமி பட லாஜிக் மீறல்களை இடைவேளையின் போது இருவர் டீக் குடித்துக் கொண்டே பேசுவதைக் கேட்டேன்.

(வினியோக வட்டாரங்களில் அந்த தியேட்டர் சி செண்டர், அதிக பிரிண்ட் என்பதால் இங்கேயும் வெளியானது)

முரளிகண்ணன் said...

நன்றி இரும்புத்திரை அரவிந்த்

நன்றி எஸ் கே

நன்றி சரவணகுமரன்.

ஹரி எடுப்பது கிராமத்தை பேக் ட்ராப்பாகக் கொண்ட படம்.

:-))

மணிஜி said...

கிராமங்கள் இருக்கிறது.கிராமத்தான்கள் குறைந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.ரசனை மாற்றம் நிச்சயமாக இருக்கிறது.புரிகிறதோ இல்லையோ பேண்டசியை விரும்புகிறார்களோ?

முரளிகண்ணன் said...

விரிவான விளக்கத்திற்கும் உதாரணத்திற்கும் நன்றி டாக்டர்.

\\கதையோடு ஒன்றிய தன்மையில் வந்தால் கிராம ராஜன்கள் வருவார்கள்\\

அதையேதான் சொல்ல வருகிறேன் டாக்டர். கதைக்கு ஏற்ற முகம் மட்டுமே தேவை. கிராம நாயகனாக எஸ்டாபிளிஷ் ஆக முடியாது.

அதற்கான வியாபார ஏரியாவும் குறைந்து கொண்டே வருகிறது.

3சி எனப்படும் சென்னை, செங்கல்பட்டு,கோயம்புத்தூர் ஏரியாக்களே இப்போது முதன்மைப் படுத்தப் படுகின்றன. (டிக்கட் விலை அப்படி)

கிராமப் படங்கள் நல்ல அம்சத்துடன் வந்தாலும் தொடர்ந்து வர வாய்ப்பில்லை

முரளிகண்ணன் said...

\\கிராமங்கள் இருக்கிறது.கிராமத்தான்கள் குறைந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்\\

அருமையான வரிகள் தண்டோரா.

\\ரசனை மாற்றம் நிச்சயமாக இருக்கிறது\\

ஆம்.

\\புரிகிறதோ இல்லையோ பேண்டசியை விரும்புகிறார்களோ?
\\

பேண்டசி என்று சொல்லுவதை விட அவர்களுக்கு அதில் ஏதாவது புதுமையோ, அழகியலோ, அவர்கள் அறிந்திருப்பதை விட ஒரு படி மேலான விஷயமோ இடம்பெற வேண்டுமென நினைக்கிறார்கள் என நினைக்கிறேன்

அத்திரி said...

அருமையான அலசல் தல................ இத்தனை கோடி பட்ஜெட்டுன்னு பெருமையா சொல்றாங்க..ஆனா கதய எங்கன்னா.........ஹிஹிஹிதான்

Cable சங்கர் said...

இன்றும் பி அண்ட் சி ஆட்க்ள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. முரளி..இல்லாவிட்டால் மாயாண்டி குடும்பத்தார்.. வெறும் பி செண்டரில் சில இடங்களிலும், சி செண்டர்கள் பல இடஙக்ளில் ஓடியிருக்காது..

துபாய் ராஜா said...

//அதுமட்டுமல்ல அதன்பின் வந்த ஊர் மரியாதை,எல்லைச்சாமி,சாமுண்டி, கட்டபொம்மன்,ராஜபாண்டி என சரத்குமார் நடித்த கிராமியப் படங்கள் எல்லாம் அந்த ஏரியாவில் நன்றாக ஓடியது.

91 ஆம் ஆண்டு வெளிவந்த என் ராசாவின் மனசிலே வெற்றிக்குப் பின் ராஜ்கிரணுக்கும் இந்த பாக்கியம் கிடைத்தது. அரண்மணைக்கிளி, எல்லாமே என் ராசாதான் என அடுத்தடுத்த படங்கள் வெற்றியும்,//

அப்போது மக்களுக்கு திரைப்படத்தை தவிர வேறு சிறந்த பொழுதுபோக்கு இல்லை.

//செயற்கைக் கோள் தொலைக்காட்சி, அலை பேசி வருகைக்குப் பின் சி செண்டர் மக்களுக்கு அதிக எக்ஸ்போஷர் கிடைத்துள்ளது. எனவே அவர்களின் ரசனையும் உயர்ந்து கொண்டே வருகிறது.//

உலகமயமாக்கலால் மக்களின் ரசனை மாறிவிட்டது.மாமு, மச்சான் என்று ஜாக்கிசானும், ஜேம்ஸ்பாண்டும் தமிழில் பஞ்ச் டைலாக் பேசினால் கிராமராஜன்களை யார் ரசிப்பார்கள்.

//ஐந்து வயதுப் பையனுக்கு ஹேராமும்,நான் கடவுளும் பிடிக்குமா? அவனுக்குப் பிடித்தது சண்டைப் படம்,மீசை அரும்பியபின் காதல் படம், கொஞ்சம் அடிபட்ட பின் அன்பே சிவம், மகாநதி.//

//சில சமயம் சசிகுமார் போல வந்தாலும் கதைக்கேற்ற வேடம்தான் போடுவார்கள்.படங்கள் சிறு நகர பேக் கிரவுண்டில் எடுக்கப்படுகின்றன.//

உண்மையான உண்மை.

அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

கிராமத்தான்கள் இருக்கிறார்கள். எடுக்கத்தான் ஆள் இல்லை..

போட்ட கலெக்ஷனை முதல் மூன்று நாட்களிலேயே சிட்டிகளில் எடுத்துவிடலாம் என்ற நப்பாசையில்தான் முக்கால்வாசி திரைப்படங்கள் உருவாகின்றன. அவர்களுக்கு முதல் குறி சிட்டிகள்தான்..

மரத்தடி பஞ்சாயத்து, பம்ப் செட் குளியல், வாய்க்கால் வரப்பு சண்டை.. மாமன், மச்சான் மோதல்.. இதெல்லாம் எங்க திரும்ப வரப் போகுது..?

முரளிகண்ணன் said...

நன்றி அத்திரி

வாங்க கேபிள்ஜி

நீங்கள் சொல்வதுபடியே மாயாண்டி குடும்பத்தார் ஓரளவு ஓடியிருந்தாலும் இன்னொரு கிராமியப் படம் இப்போது வருமா?

இல்லை, அதன் நாயகர்களுக்கு இன்னொரு கிராமராஜனாகும் பொடென்சியல் ஆதரவு அலை இருக்கிறதா?

கிராமியப் படங்களில் இருந்து ஓரளவு விலகி எடுக்கப்பட்ட தாலேயே தான் அந்த ஓட்டமும்.

முரளிகண்ணன் said...

நன்றி துபாய் ராஜா

உண்மைத்தமிழன் அண்ணா

\\மரத்தடி பஞ்சாயத்து, பம்ப் செட் குளியல், வாய்க்கால் வரப்பு சண்டை.. மாமன், மச்சான் மோதல்.. இதெல்லாம் எங்க திரும்ப வரப் போகுது..?
\\

உங்களுக்குள்ள இருக்குற கிராமத்தான் இன்னும் உயிரோடத்தாண்ணா இருக்கான்


நன்றி டிவிஆர் சார்

Mahesh said...

நல்ல அலசல் முரளி.... நீங்க சொன்ன மாதிரி கிராமங்கள்லயும் ஒரளவுக்கு (எல்லாருக்கும் இல்லாட்டாலும் ஒரு சிலருக்காவது) வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருக்கறதாலயும், technology availability இருக்கறதாலயும் அவங்களே கிராமப் படங்களை விரும்பறதில்லையோன்னு கூட தோணுது...

Ashok D said...

//தற்போது ஆதவன்,கோபி கிருஷ்ணன், ப சிங்காரம் என படிக்கும் யாரும் முதலிலேயாவா அதைப் படிக்க ஆரம்பித்தார்கள்?. சிறுவர் மலர்,காமிக்ஸில் தொடங்கி விகடன்,குமுதம்,கிரைம் நாவல் வழியாக எஸ்ரா,சாரு,ஜெமோ என ஆரம்பித்து நாஞ்சில் நாடன்,சுரா,மௌனி,புதுமைப்பித்தன்,நகுலன் என முன்னேறியவர்கள் தானே?//

அண்ணா.. இந்த பார்ட் நம்முல்துங்கன்னா... அதாவது புட்சிகிதுங்கனா....

சு.வா..ராஸியமான பதிவுங்கனா...

Starjan (ஸ்டார்ஜன்) said...

அந்த மாதிரி இப்போ யார் படம் எடுக்கிறாங்க

அது தான் காலியாயிருக்கு .

அந்த இடத்துக்கு நான் வரலாமா !!...

:-)))

jothi said...

உண்மையில் என்ன படம் வந்தாலும் 30 ரூபாயில் DVDயில் படம் பார்ப்பதையே கிராமத்திலுள்ளவர்கள் நினைக்கிறார்கள். திரையரங்கிற்கு போனால் ஒருத்தர்,DVD இருந்தால் கிராமம் முழுக்க, எது வசதி??

Toto said...

ந‌ல்ல‌ ப‌திவு முர‌ளி.. யோசிக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம்.. கிராம‌ங்க‌ள்ல‌ தியேட்ட‌ரை ஒழிச்சாச்சு. ஒரு வித‌த்துல‌ ந‌ம‌க்கும் எதிர்பார்ப்பு ரொம்ப‌வே அதிக‌மாய்டுச்சு. ஏன்.. ந‌ம்ம‌ பார்த்து ர‌சிச்ச‌ ப‌ட‌மே இப்ப‌ பார்ப்ப‌மான்ற‌து ச‌ந்தேக‌ம் தான்.
நிறைய‌ எழுதுங்க‌.. ந‌ல்லா இருக்கு.

-Toto [ Film4thwall.blogspot.com ]

Jackiesekar said...

சந்திரமுகியில் ரஜினிகாந்த் அமெரிக்காவில் பெரிய மனோதத்துவ நிபுணர் என்ற பாத்திரம். அதற்கு சப்போர்டிவ்வாக அவர் ஏதும் கான்பரண்ஸில் பேசுவது மாதிரியோ அல்லது ஒரு சிக்கலான கேஸை ஹேண்டில் செய்வது மாதிரியோ காட்சி அமைத்து விளக்காமல், “அவர் எவ்வளோ பெரிய டாக்டர்” என்ற ஒரு வரி வசனத்தில் நேரடியாகச் சொல்லி விடுவார்கள்.--//

முரளி நம்ம டைரக்கடர்கள் விஷுவலாக சொல்ல வேண்டியதை ஒரு வரி வசனத்தில் சொல்லி விடுவதுதான் கொடுமை...

Jackiesekar said...

செயற்கைக் கோள் தொலைக்காட்சி, அலை பேசி வருகைக்குப் பின் சி செண்டர் மக்களுக்கு அதிக எக்ஸ்போஷர் கிடைத்துள்ளது. எனவே அவர்களின் ரசனையும் உயர்ந்து கொண்டே வருகிறது.


தலைவா எல்லாவற்றிர்க்கும் காரணம் எலக்ட்ரானிக் மீடியா வளர்ச்சிதான் இந்த பார்வை மாற்றத்துக்கு காரணம்னு அழகா சொல்லி இருக்கிங்க...

நல்ல பதிவு முரளி

புருனோ Bruno said...

//தற்போது ஆதவன்,கோபி கிருஷ்ணன், ப சிங்காரம் என படிக்கும் யாரும் முதலிலேயாவா அதைப் படிக்க ஆரம்பித்தார்கள்?. சிறுவர் மலர்,காமிக்ஸில் தொடங்கி விகடன்,குமுதம்,கிரைம் நாவல் வழியாக எஸ்ரா,சாரு,ஜெமோ என ஆரம்பித்து நாஞ்சில் நாடன்,சுரா,மௌனி,புதுமைப்பித்தன்,நகுலன் என முன்னேறியவர்கள் தானே?
//

சூப்பர்

முரளிகண்ணன் said...

நன்றி மகேஷ்

நன்றி அசோக்

நன்றி ஸ்டார்ஜான்

நன்றி ஜோதி

நன்றி டோடோ

நன்றி ஜாக்கி சேகர்.

\\முரளி நம்ம டைரக்கடர்கள் விஷுவலாக சொல்ல வேண்டியதை ஒரு வரி வசனத்தில் சொல்லி விடுவதுதான் கொடுமை\\

நீங்கள்லாம்தான் வருங்காலத்தில இதை மாத்தணும் ஜாக்கி.

நன்றி டாக்டர்

நன்றி தங்கமணி பிரபு

நிச்சயம் செய்கிறேன்.

Prasanna Rajan said...

தமிழ் சினிமாவின் பல படிமங்களை அலசி இருக்கிறீர்கள் முரளி. எப்பூடியா யோசிக்கிறீங்க. எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நான் 5ஆம் வகுப்பு படித்த சமயம். ’நாட்டாமை’ வெளியாகி 200 நாளை நோக்கி சக்கை போடு போட்டு கொண்டிருந்தது. அதே சூட்டோடு ‘ஊர் மரியாதை’ படத்தை வெளியிட்டார்கள். எப்போதும் இரண்டாம் ரிலீஸ் ஆகும் எனது பக்கத்து ஊரான போடியில், முதல் முறையாக புதிதாக ரிலீஸ் செய்தார்கள். அப்படி ஒரு கூட்டம். எக்ஸ்ட்ரா சேர், பெஞ்ச் என்று நிரம்பி வழிந்தது. படம் சுமார் தான் என்றாலும், லாபம் பார்த்து விட்டார்கள்.

இராஜ்கிரணின் ‘அரண்மனைக் கிளி’ வெளியான சமயத்தில் எனது சொந்த ஊரான தேனியில் முதல் ஒரு வாரத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. அப்படி ஒரு கூட்டம். பொதுவாக ரஜினி படத்திற்கு மட்டுமே கட் அவுட் வைப்பார்கள். முதல் முறையாக ராஜ் கிரணுக்கு எங்கள் ஊரில் கட் அவுட் வைத்தார்கள்.

கிராம ராஜன்கள் ‘சி’ செண்டர்களில் கொண்டாடப் பட்டார்கள். நாங்கள் கம்பத்தில் வசித்த போது, எனக்கு நினைவு தெரிந்தே ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தை நான்கு முறை, திரையரங்கில் பார்த்து இருக்கிறேன்.

ஆனால் தற்போது ரசனை அதிகமாகி உள்ளது. படம் நன்றாக இல்லையெனில், கேரளா போல் ‘அறுத்து கொன்னு புட்டாய்ங்க. டிக்கெட் காசுக்கு, குவாட்டர் அடிக்கலாம் மாப்ள’ என்று முதல் ஷோ சென்றவர்கள், இரண்டாம் ஷோவிற்கு நிற்கும் நண்பர்களை எச்சரிக்கிறார்கள். ‘கந்தசாமி’க்கும் இப்படி தான் ஆனது.

ஆனாலும் சில நல்ல படங்களும் ‘சி’ செண்டர்களில் வரவேற்கப் படுவதில்லை. சமீபத்தில் இந்தியா சென்றிருந்த போது ‘பூ’ திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த போது, மொத்தம் 10 பேர் மட்டுமே திரையரங்கில் இருந்தோம். இத்தனைக்கும் படம் வெளியாகி ஒரு வாரம் கூட ஆகியிருக்கவில்லை.

பல நினைவுகள். மிக அருமையான பதிவிற்கு நன்றி முரளி...

Prasanna Rajan said...

ஓட்டும் போட்டாச்சு முரளி... :)

முரளிகண்ணன் said...

விரிவான பகிர்தலுக்கு நன்றி பிரசன்னராஜன்

சிவாஜி சங்கர் said...

Thala Kathal, Kalloori, padaththa vittudengale?

Arumayaana post thala!

Venkatesh Kumaravel said...

//நாடோடிகள்,பசங்க//
இதில் நாடோடிகளையும் பசங்க-வையும் எதற்காக குறிப்பிட்டிருக்கிறீர்கள் சார்? கிராமத்துப் பிண்ணனியில் எடுக்கப்பட்ட வணிகப்படம்... அவ்வளவே!

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி சிவாஜி சங்கர்

வெங்கி ராஜா

அந்தப்படங்களைக் குறிப்பிடக் காரணம், அவை வழக்கமான கிராமிய காட்சிகள் இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிடவும்

மேலும் அவை கிராமிய என்னும் வகையில் வராது, சிறுநகர சினிமா என்னும் வகையில் வரும் என்பதற்காகவும்தான்

பகிர்தலுக்கு நன்றி

passerby said...

urbanisation தான் காரணம். தாவணியுடுத்தப்பெண்கள் இன்று கிராமத்தில் இல்லை. கிராமியநடனங்கள் பார்க்க யாரும் இல்லை. கிராமியக்கலாச்சாரம் இன்று மாறி விட்டது. ப்லர் இங்கு குறிப்பிட்ததைப் போல கிராமப்புற இன்றைய தலைமுறை தன்னை இடத்தில் மட்டும் கிராமமாக ஏற்றுக்கொண்டு, மனத்திள் பட்டணவாசியாகவே நினத்துக்கொண்டு வாழ்கிறது.

கிராம வாழ்க்கைக்கும் பட்டண வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளி -கலாச்சாரத்தில் - குறுகிக்கொண்டு ஒருநாள் இல்லாமலே போய்விடும்.

தமிழக அரசின் சுற்றுலாத்துறை, போனதலைமுறையின் வீடுகளைப் பாதுகாத்து, வெளிநாட்டுப்பயணிகளுக்குக் காட்டுகிறது.

அதைப்போல கிராமவாழ்க்கையை தமிழக்த்தில் இப்படி இருந்தது, என heritage sitesகளை சுற்றுலாத்துறை கட்டி பராமரிக்கும் காலம் விரைவில் வரவிருக்கிறது.

இதை நாம் மாற்ற் முடியாது. காலத்தை எதிர்த்து யார் போராடி வெற்றிபெற முடியும்?

கிராமங்கள் அழியும் போது, கிராமியப்படங்களும் அழியும்.

வருத்தமான பதிவு.

"உழவன்" "Uzhavan" said...

//1992 ஆம் ஆண்டு.சரத்குமார் நடித்து மணிவாசகம் இயக்கத்தில் வெளிவந்திருந்த பெரிய கவுண்டர் பொண்ணு திரைப்படத்துக்கு சென்றிருந்தேன்.(திண்டுக்கல் - கணேஷ் தியேட்டர்) மதிய காட்சி ஹவுஸ்புல். இடைவேளை முடிந்து ரசிகர்கள் அரங்கிற்கு உள்ளே சென்றதும் கேண்டின்காரரிடம் கேட்டேன்.//
 
யப்பா.. எப்ப இருந்து டைரி எழுத ஆரம்பிச்சீங்க? :-)
தெளிவான அலசல்.

முரளிகண்ணன் said...

நன்றி கலை. விரிவான கருத்துக்களுக்கும் பகிர்தலுக்கும் நன்றிகள்.

வருகைக்கு நன்றி உழவன்

சில சம்பவங்கள் மனதில் பதிந்துவிடும்தானே. அதுபோலத்தான் இது. அன்று கூட்டத்தைப் பார்த்து மிக ஆச்சரியமடைந்தேன். அதனால் ஞாபகம் இருக்கிறது

Thamira said...

வெட்டி : வில்லு, குருவி, ஏகன், ஆழ்வார், இப்ப கந்தசாமீ தோல்வியில இருந்து நகர வாசிகளுக்கும் ரசனை கூடிருச்சின்னு சொல்லலாமில்லையா ? //

சொல்லலாம்தான். இருந்தாலும் லிஸ்ட்ல விஷாலை மட்டும் தூக்கியிருக்கலாம் முரளி. ரொம்ப படுத்துறாரு.. ஹிஹி..

புருனோ Bruno said...

//
கிராமங்கள் அழியும் போது, கிராமியப்படங்களும் அழியும்.
//

:)

:(

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி ஆதி.

வாங்க டாக்டர்.

கிரி said...

ராமராஜனுக்கு இப்போதும் ஒரு ரசிகர் கூட்டம் உண்டு..

இனி கிராம ராஜன்களுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை

நாஞ்சில் நாதம் said...

:))