அலுவலகப் பேருந்தில்
மாலை வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது அலைபேசி ஒலித்தது. “இறங்கி, மெடிக்கர் வாங்கிட்டு
வாங்க. தீபா ஸ்கவுட் கேம்ப்புனு போயி ஊர்ப்பட்ட பேனை தலையில ஏத்திக்கிட்டு வந்துருக்கா”
என வீட்டில் இருந்து கட்டளை வந்தது. கலீக், என்ன ஜி “வரும் போது அரை கிலோ புளி வாங்க
வரவுமா”? என கேட்டார். இல்ல ஜி, பேன் மருந்து என்று சொல்லும்போதே என் மனம் தேனூர் நினைவுகளில்
மூழ்கத் தொடங்கியது.
தேனூரில் நாங்கள்
இருந்த தெருவில் முதல் முதலாக நுழைந்த போது, வாயடைத்துப் போனேன். முக எழிலும் உடல்
வனப்புமாய் நிறைய பெண்கள் அந்த தெருவில் இருந்தார்கள். மாநிறத்திற்கும் வெள்ளை நிறத்திற்கும்
இடையில் நட்ட நடுவாக ஒரு நிறம் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு நிறத்தில், இடுப்பளவு
தொங்கும் அடர்த்தியான முடியோடு இருந்த அவர்களைப் பார்த்ததும் என் தந்தைக்கு மாறுதல்
உத்தரவு வழங்கிய அதிகாரிக்கு பூசலார் போல் மனதிலேயே கோவில் கட்டத் தொடங்கினேன்.
அப்போது கல்லூரி
விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்ததால் வார இறுதியில் தான் வீட்டுக்கு வருவேன்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை பின் மதியம், தெருவில் கண்ட காட்சி சற்று வினோதமாக இருந்தது. எல்லாப்
பெண்களும் வாசல்படியில் உட்கார்ந்து ஒருவருக்கொருவர் தலையில் பேன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஐந்தாறு வாசல்படி இருக்கும் வீடுகளில் கீழ்படியில் ஒரு பெண் உட்கார்ந்திருக்க, அடுத்தடுத்த
மேல் படிகளில் பெண்கள் வரிசையாக உட்கார்ந்து ரிலே ரேஸ் போல பேன் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அதற்கடுத்த வாரத்தில்
ஒரு வியாபாரி சைக்கிளில் பேன் சீப்பு, ஈர்வளி என விற்றுக்கொண்டு வந்தார். தெருவில கோலமாவு
விப்பாங்க, தயிர் விப்பாங்க இது என்னடா ஈர்வளி வித்துக்கிட்டு வர்றாங்க என ஒரே ஆச்சரியம்.
பின்னர் தான் தெரிந்தது,
அந்த தெரு தேவதைகளெல்லாம் என்ன வைத்தியம் செய்தாலும் முப்போகமும் பேன் விளையும் தலையைக்
கொண்டவர்கள் என்று. வசம்பை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்ப்பது, சோற்று கத்தாழை
ஜெல்லை தலையில் பூசிக் கொள்வது, வெங்காயமும், பூண்டும் சேர்த்து அரைத்த சாறை தலையில்
தடவிக்கொள்வது, மருதாணிப் பூவை சூடிக் கொள்வது என அவர்கள் செய்யாத கை வைத்தியமே கிடையாது.
என்ன செய்தாலும்
பேனை மட்டுப்படுத்தத்தான் முடிந்ததே தவிர, அழிக்க முடியவில்லை. அவர்கள் நாளின் பெரும்பாலான
நேரத்தை இதற்கே ஒதுக்கியதால், மற்ற வேலைகளை எல்லாம் பயங்கர சுறுசுறுப்பாக முடிக்க பழகி
இருந்தார்கள். பிரசவத்திற்காக வந்திருந்த என் அக்கா இதையெல்லாம் கேட்டு தேனூராம், பேனூர்னு
வச்சிருக்கலாம் என கமெண்ட் அடித்தார்.
அந்த வாரம் முடி
வெட்டுவதற்காக சலூனுக்குப் போன எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. எனக்கு முன் முடி
வெட்டிக்கொண்டிருந்த ஒருவருக்கு நல்ல வெள்ளைத்துணியைப் போர்த்தி இருந்தார்கள். அதில்
முடியோடு சேர்ந்து பேனும் கொத்துக் கொத்தாக விழுந்து கொண்டிருந்தது தெரிந்தது. எங்கே
நமக்கும் இது தொற்றி விடுமோ எனப் பயந்து “டீ சாப்பிட்டு வர்றேன்” என நழுவி விட்டேன்.
20 கிலோ மீட்டர் தள்ளிப் போய் இன்னொரு ஊரில் முடிவெட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.
எங்கள் வீட்டு
வேலைக்கு உதவியாக இருந்த அக்கா ஒருநாள் கூடையில் நான்கைந்து மாப்பிள்ளை விநாயகர் சோடா
பாட்டில்களை வாங்கிக் கொண்டு போவதைப் பார்த்த என் அக்கா, என்ன அது? எனக் கேட்டார்.
அந்தச் செம்பருத்தி
வீட்டு ரெண்டாவுது பொண்ணு தலைக்கு எண்ணெய் தேய்ச்சு குளிக்கப் போகுது அதான் என்றார்.
என்னடியம்மா இது, அதுக்கெதுக்கு சோடா என என் அக்கா கேட்க,
அந்தப் பொண்ணுக்கு
அவ்வளவு அடர்த்தியான முடி, வாரம் பூரா கத்தாழை, வெங்காயம்னு தடவுதா அது பூராம் சிக்குப்
பிடிச்சு போயிடும். நல்லா சீயக்காய வச்சு அவங்க அம்மாவும் அக்காவும் அரக்கி தேச்சு
விடுங்க. அதுல கிறங்கி சில சமயம் எல்லோருக்குமே மயக்கம் வந்துரும். அதான் முன்கூட்டியே
சோடா வாங்கி வச்சிக்கிருவாங்க, அந்த சீயக்காயிலயும் என்னென்னவோ போட்டு கலந்து அரச்சு
வச்சிருப்பாங்க, அப்படி ஒரு காட்டமா இருக்கும் என்றார்.
பக்கத்து வீட்டு
பாட்டி ஒரு முறை அம்மாவிடம், ”லங்கையில சீதாவப் பிடிச்சு வச்சிருந்தாங்கள்ள, அப்ப அனுமார்
தீ வச்சு நிறைய ராட்சசிசங்க இறந்துடுச்சாம், சண்டையிலயும் நிறைய செத்துருச்சுகளாம்.
ராமர் ஜெயிச்சு சீதாவ கூட்டிக்கிட்டுப் போறப்ப, அதுகள்ளாம் வழி மறச்சு, இந்த சீதானாலதான்
எங்களுக்கு இந்த நிலம, இவளப் பழிவாங்குனாத்தான் எங்க ஆத்மா சாந்தியடையும்னு சொல்ல, ராமரு, என் பொண்டாட்டிய
எதுவும் செய்ய உடமாட்டேன்னு சொல்ல, அப்புறம்
அந்த ராட்சசிங்கள்ளாம் கூடிப் பேசி, சீதா அம்சத்தோடு பூமியில பிறக்குற பொம்பளைங்க தலையில
நாங்க இறங்குற வரத்தக் குடுன்னு கேட்டு வாங்குச்சுகளாம். அதான் எங்க தலையில எல்லாம்
இம்புட்டு பேனு என்றாராம்.
இதை அம்மா, அக்காவிடம்
சொல்ல, “இந்தப் பேன் தலைக்காரிகளுக்கு இப்படி ஒரு பிளாஷ்பேக்கா”? லாஜிக்காப் பார்த்தாலும்
சூர்ப்பனகைனால தான ராட்சசிங்களுக்கெல்லாம் கஷ்டம் வந்துச்சு, அப்பன்னா இந்த குரூப்
சூர்ப்பனக அம்சம் என சொல்லிச் சிரிக்க, எனக்கு கோபம் வந்தது.
உனக்கு எலிவால்
மாதிரி முடி. அதான் பொறாமையில இப்படி சொல்லுற என கோபப்பட்டேன்.
என் கோபத்துக்குக்
காரணம் கவிதா. எப்படி லட்சக்கணக்கான அழகிய சேலைகள் துணிக்கடையில் இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு,
அதில் ஒரு சேலை மட்டுமே பிடித்தமானதாக இருக்குமோ, அப்படி அந்த தெரு தேவதைகளில் எனக்குப்
பிடித்தவள் கவிதா. பேன் அரித்தால் கூட ஒயிலாக தலையைச் சாய்த்து, நளினமாக இடதுகை ஆட்காட்டி
விரலால் பேனை அழுத்தி, கட்டைவிரலை சப்போர்ட்டுக்கு கொண்டு சென்று அதை எடுத்து, பரதநாட்டிய
அபிநயம் பிடிப்பது போல இரு கட்டை விரல் நகங்களுக்கு இடையில் வைத்து அந்தப் பேனை சொர்க்கத்துக்கு
வழி அனுப்பி வைப்பாள்.
கவிதாவின் பின்னால்
சில நாட்கள் சுற்றிப் பார்த்தேன், அவள் கண்டுகொள்ளவேயில்லை. அரவிந்த்சாமி பாம்பே பட
உயிரே பாட்டுக்கு அணிந்திருந்த புளூ ஜீன்ஸ், பனியனை பல கடைகள் அலைந்து திரிந்து வாங்கி
அணிந்து தெருவை அளந்தேன். பின்னர்தான் தெரிந்தது, அரவிந்த்சாமி மாதிரியே நான்கைந்து
பேர் அவள் பின்னால் சுற்றுவது. இது வேலைக்காகாது என மனதை தேற்றிக் கொண்டு மீண்டும்
நல்லவன் முகமூடியை அணிந்து கொண்டேன்.
ஸ்டாப் வந்திருச்சு ஜி, என்ன யோசனை என கலீக் எழுப்ப, இறங்கி
மெடிக்கர் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். “இப்படியா பொண்ண கவனிக்காம விடுவாங்க,
ஒரு நாள்தான் கேம்புல பக்கத்துக படுத்திருக்கா, வண்டி வண்டியா பேன இவ தலையில ஏத்திட்டா
என அவர்கள் குடும்பத்தையே என் மனைவி திட்ட
ஆரம்பிக்க, “விடு, ட்ரை பன்ணாமயா இருந்திருப்பாங்க, பாவம்” என்றபடி சட்டையைக் கழட்ட
ஆரம்பித்தேன்.
3 comments:
இங்கு இதே பேன்தான் பெரிய பிரச்சனை. நீங்கள் நகைச்சுவையாக சொன்னாலும் பேன் தரு தொல்லை பெரும் தொல்லைதான்.
அடப்பாவி கவிதாவை பாதியில் விட்டதற்கு கடும் கண்டனங்கள்....
முகநூலில் பகிர்ந்தேன் ...
நன்றி நிஷா,
நன்றீ மது.
Post a Comment