முதல் பகுதி இங்கேஇந்திய ஆல் டைம் டெஸ்ட் அணிக்கு யார் துவக்க ஆட்டக்காரர்கள்?
துவக்க ஆட்டக்காரர்களுக்கும் மிடில் ஆர்டர் ஆட்டக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம்? முதல்
பந்தில் ஓப்பனர் அவுட் ஆகிவிட்டால் உடனே நம்பர் த்ரி உள்ளே வந்து விடுகிறாரே?
நிச்சயம் இருக்கிறது.
துவக்க ஆட்டக்காரர் உள்ளே நுழையும் போது (அது எந்த இன்னிங்ஸாக இருந்தாலும்) வேகப்பந்து வீச்சாளர்கள் தன் முழு ஆற்றலுடன் இருப்பார்கள். அனலைக் கக்குவார்கள். அவர்களை சமாளிக்க வேண்டும். பந்தும் புதிதாக இருக்கும். அருமையாக ஸ்விங்கும் ஆகும். எனவே நல்ல பேட்டிங் டெக்னிக் இருக்க வேண்டும்.
பிட்ச் எந்த கண்டிஷனில் இருக்கிறது என்று தெரியாது. எவ்வளவு எம்பும்? இல்லை தாழும் எனத் தெரியாது.விக்கெட் விழாமல் ஆட வேண்டும்.
முதல் இன்னிங்ஸில் எதிர் அணி இரண்டு நாட்கள் ஆடி கடைசி நாலு ஓவர் மட்டும் கொடுக்கும் போது, பேடைக் கட்டிக்கொண்டு போய் நிற்க ஸ்டாமினா வேண்டும். விக்கெட் கொடுக்காமல் ஆட கான்சண்ட்ரேஷன் வேண்டும். ஆனால் பவுலர் பிரெஷாக இருப்பார்.
இதுமாதிரியான சிக்கல்களினால் தான் அது ஸ்பெஷலிஸ்ட் பொசிஷனாக கருதப்படுகிறது.
71ல் இருந்து நம் அணியில் ஆடிய துவக்க ஆட்டக்காரகளில் யாரை தேர்ந்தெடுக்கலாம்?
1. சுனில் கவாஸ்கர்பேட்டிங் ஆவரேஜ் 50க்கு மேல். 10000ஐ முதன் முதலில் பார்த்தவர். 34 சதத்தையும்
முதலில் பார்த்தவர். வேகப் பந்து பிசாசுகளான ஆண்டி ராபர்ட்ஸ்,மைக்கேல் ஹோல்டிங்,கார்னர் மற்றும் மார்ஷல் போன்றோரை அனாசியமாக ஆடியவர். ஸ்விங்கில் வல்லவர்களான லில்லி,ஹேட்லி, போத்தம் ஆகியோரையும் இம்ரான்,அக்ரம் போன்ற வல்லவர்களையும் எளிதாக எதிர் கொண்டவர்.
நீ வேகமாப் போடு. அப்பதான் எனக்கு ஈஸி. தட்டி விட்டாலே போர் போயிடும் என்று அவர்களைப் பார்த்து சிரித்தவர்.
கவாஸ்கர் ஸ்டம்புக்கும், மிட் ஆனுக்கும் இடையே உள்ள 'வி' யில் பந்துகளை அருமையாக ட்ரைவ் செய்வார். பவுலரும் தொட முடியாது, மிட் ஆன் பீல்டருக்கும் வாய்ப்பிருக்காது. இது எப்படி எனக் கேட்ட போது அவர் சொன்னது
“ நான் தெருவில் விளையாடும் போது மிட் ஆனில் இரண்டு கார்கள் நிற்கும். அந்த கண்னாடியில் அடிக்கக் கூடாது என்பதற்காக அந்த வி யில் அடித்தே பழகினேன்”. என்றார்.
ஸ்பின்னர்களையும் தெளிவாக ஆடுவார்.நல்ல ஸ்லிப் பீல்டரும் கூட.
2. எம் எல் ஜெயசிம்மாஅசாருதீனுக்கும் லட்சுமணனுக்கும் உள்ள ஒற்றுமை ஹைதராபாத் அணி மற்றும் ரிஸ்டி பிளே. அந்த மணிக்கட்டு திருப்பு ஆட்டத்துக்கும்,லெக் ஸ்டம்பில் போடும் பந்தை நோகாமல் தட்டி பவுண்டரிக்கு அனுப்பும் ஸ்டைலுக்கும் குரு இவர்தான். இவரும் ஹைதராபாத் தான். இவரது லெகஸிதான் அசாருக்கும் பின் லட்சுமணனுக்கும் வந்தது. இவர் முதலில் மிடில் ஆர்டர் ஆட்டக்காரர்தான். ஆனால் நமது அணியில் மிடில் ஆர்டருக்கு எப்போதும் இருக்கும் அடிதடியால் மேக்ஷிஃப்ட் ஓப்பனர் ஆகி பின் அதையே நிரந்தரமாக்கிக் கொண்டவர். அப்பொதைய அணியில் பிரசன்னா,வெங்கட்ராகவன்,பேடி,சந்திர சேகர் போன்ற ஸ்பின் ஜாம்பவான்கள் இருந்ததால் மித வேகப் பந்து வீசும் இவரையே துவக்க பந்து
வீச்சாளாராக உபயோகப் படுத்தினார்கள். ஓப்பனிங் பேட்டிங், ஓப்பனிங் பவுலிங் என வாழ்ந்தவர்.
அதன்பின் இலங்கையின் ரவிரத்னாயகே வும்,நம் மனோஜ் பிரபாகரும் அந்த வாழ்வை அனுபவித்தவர்கள்.
3. சேட்டன் சௌகான்செஞ்சுரியே அடிக்காமல் 40 டெஸ்ட் ஆடியவர். ஆனால் கவாஸ்கருக்கு நல்ல துணையாக விளங்கியவர். கவாஸ்கர் ஒருமுறை இந்திய கனவு அணியை தேர்வு செய்த போது இவரைத்தான் துவக்க ஆட்டக்காரராக தேர்வு செய்தார். (இன்னொருவர் கவாஸ்கரேதான்). இவர் எப்படி ஆடுவார் என பார்க்க வேண்டுமென்றால் ஸ்டார் டிவியில் கிளாசிக் தொகுப்பில் பார்க்கலாம். ஆனால் அகால வேளையில் போடுகிறார்கள்.
நான் விளக்குமாற்றை கிரிக்கெட் பேட்டாக கற்பனை செய்து ஆடி அம்மாவிடம் திட்டு வாங்கினேன். கல்யாணத்தன்று கிப்ட் கொடுத்த நண்பனிடம் ஸ்கோர் என்னாச்சு என்று மணமேடையில் கேட்டு மனைவியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன். இப்போது கிரிக்கெட் பார்க்க கார்ட்டூனை மாத்தாதே என மகனிடமும் திட்டு வாங்குகிறேன். மூன்று தலைமுறையும் என்னை கிரிக்கெட் பார்க்க விடாமல் சதி செய்கிறது.
சௌகான் ஆட்டத்தைப் பார்த்தவர்கள் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
4. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்ஒரு முறை அரசு பதிலில் எஸ் ஏ பி (ஐராசு,ராகிரா வாகவும் இருக்கலாம்) சொன்னது, “ ஸ்ரீகாந்த் அடிச்சா நாமே அடிச்சமாதிரி இருக்கும்”. அது உண்மைதான். சராசரியை விட அதிக அகலத்துக்கு காலை அகட்டி நிற்பதும், மூக்கை உறிஞ்சிக்கொள்வதும்,சூரியனை பார்ப்பதும், ரெஸ்ட்லெஸாக லெக் அம்பயரை நோக்கி நடப்பதும் சிரிப்பாகத்தான் இருக்கும். ஆனால் ஆண்டி ராபர்ட்ஸை அவர் அடித்த ஸ்கொயர் ட்ரைவ் இன்னும் கண்ணுக்குள் தான் இருக்கிறது.
சார்ஜாவில் மார்ஷலை முதல் பந்தில் மிட்விக்கெட்டில் சிக்சரும், அடுத்த பந்தில் ஸ்கொயர்கட்டில் போரும் அடித்தவுடன், ஸ்லிப்பில் நின்ற ரிச்சர்ட்ஸ் காலில் வென்னீரைக் கொட்டியதுபோல் மார்ஷலிடம் ஓடினார். மார்ஷல் வாழ்க்கையிலேயே கேப்டனிடம் சுடு சொல் வாங்கியது அந்த ஒரு சந்தர்ப்பத்திலாகத்தான் இருக்கும்.
சிட்னியில் ஸ்ரீகாந்த் அடித்த 123ம், சேப்பாக்கத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த் 123ம் தான் அவர் செஞ்சுரிகள். ஆனால் இரண்டும் பல ஆண்டுகளுக்கு பேசப்பட்டவை.
5. நவ்ஜோத் சிங் சித்துமே இந்திய தீவுக்கு எதிராக அங்கே போய் 201 அடித்தாலும், இந்தியாவில் சில செஞ்சுரிகள்
அடித்திருந்தாலும் இவருக்கு ஒரு வீக்னெஸ் இருக்கிறது.
நல்ல லெங்த்தில் போடப்பட்டு வேகமாக இன்கட் ஆகி உள்ளே வரும் பாலை ஆட மிகவும்
சிரமப்படுவார். பெரும்பாலான முறை இம்மாதிரி பந்துகளில் அவுட் ஆகி உள்ளார். ஆனால் ஸ்பின்னர்களை ஆடுவதில் கிங்.
6. விரேந்திர சேவாக்ஜெஃப்ரி பாய்காட் துவக்க ஆட்டக்காரர் என்றாலே வேகப் பந்து வீச்சாளர்கள் நொந்து போய் விடுவார்கள்.அப்படி ஒரு கட்டை பார்ட்டி. ரன் அடிப்பதில் அவருக்கு சந்தோஷமில்லை. நங்கூரம் பாய்ச்சி நிற்பதில் தான் ஆசை. காமம் இல்லாத காதல்தான் பாய்காட்டின் சாய்ஸ். நம்மாள் இவருக்கு ஆப்போசிட் பார்ட்டி. இவரைக் கண்டும் வேகப் பந்து வீச்சாளர்கள் நொந்து போவார்கள். அடிக்கும் அடி அப்படி. நிற்பதில் ஆசை இல்லை.
சேப்பாக்கத்தில் இவர் அடித்த 300ன் போது தென் ஆப்பிரிக்க கோச் சொன்னது “எங்களிடம் இருந்த எல்லா அஸ்திரத்தையும் ஏவி விட்டோம், எங்களுக்கு தெரிந்த எல்லா வியூகத்தையும் அமைத்து விட்டோம், முடியவில்லை”.
ஆனால் இவர் யாரும் எதிர் பார்க்காத பந்தில் அவுட் ஆகி அவர்கள் நெஞ்சில் பாலை வார்ப்பார்.
இவரது ஆவரேஜும் 50க்கு மேல். இன்று (24-11-09) அடித்த சதத்துக்கு முன்னால் அடித்த
கடைசி 15 சதமும் 150 க்கு மேல்தான்.
இவரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென் ஆக இருந்து மேக் ஷிஃப்ட் ஓப்பனாராக மாறியவர் (உபயம் :கங்குலி)
7. கவுதம் காம்பீர்கணவனின் சம்பாத்தியத்தில் திருப்தி அடையாத சராசரி இந்திய மனைவியின் மனநிலையில்
இருப்பவர் இவர். எவ்வளவு ரன் அடித்தாலும் திருப்தி இருக்காது. ரன் வெறி கொண்டவர்.
செஞ்சுரி அடித்து விட்டு வந்தாலும் கமாண்ட்ரேட்டரிடம் சிரிக்க மாட்டார். கடைசி ஒன்பது மேட்சுகளில் ஏழு சென்சுரி. இந்த மேட்சோடு சேர்த்து (24-11-09) தொடர்ந்து நாலு மேட்ச் சென்சுரி. நல்ல டெம்பெர்மெண்ட். ஸ்பின்னர்களையும் அனாயாசமாக ஆடக்கூடியவர்.
தனது பார்மை அப்படியே டீமுக்கு உபயோகமாக திருப்பக் கூடியவர்.
இந்த ஏழில் இருந்து இருவரை தேர்ந்தெடுங்கள் கண்மணிகளே.