February 07, 2009

தமிழ் சினிமா எதிர் நாயகர்கள்- 4 (நாசர்)

தமிழ்சினிமாவில் சமகால எதிர்நாயகர்களுக்கும்,கதாநாயகிகளின் ஆயுள்காலத்திற்க்கும் ஒருவித தொடர்பு இருக்கும். பானுமதி,சாவித்திரி போன்ற நாயகிகள் நீண்ட நாள் முன்னிலையில் இருந்தது போல வீரப்பா,நம்பியார் முன்னிலையில் இருந்தனர். பத்மினி,சரோஜாதேவி போல் அசோகன்,ஆர் எஸ் மனோகர் போன்றோரும் நீடித்து நின்றனர். பின்னாட்களில் கதாநாயகிகளின் ஆயுள் ஐந்து ஆண்டுகளாக குறுகியபோது வில்லன்களின் ஆயுளும் குறுகத் தொடங்கியது.

வில்லனாக ஒருவர் நடிக்கத் தொடங்கி, பட்டி தொட்டியெல்லாம் முகம் பரிச்சியமாகிவிட்டால் கதாநாயக வேடம் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். கிடைத்த வாய்ப்பை நன்கு உபயோகப்படுத்தினால் (சத்யராஜ், சரத்குமார்) ஒரு 10,15 ஆண்டுகள் ஹீரோவாக காலத்தை ஓட்டி விடலாம். சொதப்பினால் (ஆனந்த்ராஜ்,நெப்போலியன்) சப்பை கேரக்டர்களுக்குத்தான் கூப்பிடுவார்கள். வில்லனாக ஒருவர் அறிமுகமாகும்போது மிரட்டலாக இருக்கும். சில படங்களுக்குப் பின் அவரின் வில்லத்தனம் (சலீம் கௌஸ், ஆசிஷ் வித்யார்த்தி) பழகிவிடும். இதில் நம் டைரக்டர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஒரே மாதிரி உறும வைத்து புலியையும் பூனையாக்கி விடுவார்கள்.

இம்மாதிரி உச்சத்தை அடைந்து, ஹீரோவாக மாறி ஆனால் அதில் சொதப்பினாலும் இன்னும் சவாலான கேரக்டர்களுக்கு இயக்குனர்களால் தேடப்படுபவர் நாசர். அடுத்த ஆண்டுடன் இவர் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகப்போகிறது. முதல் படமான கல்யாண அகதிகளில் என்ன மாதிரியான வியப்பை பார்வையாளர்களுக்கு கொடுத்தாரோ அது இப்போது வெளியான பஞ்சாமிர்தம் வரை தொடர்கிறது.

அவர் முதன் முதலில் இயக்கிய அவதாரம் படத்தில் இடம் பெற்ற அரிதாரத்தைப் பூசிக் கொள்ள ஆசை என்னும் பாடலில் ஒரு வரி இடம் பெற்றிருக்கும். "காசு பணத்துக்காக நான் அரிதாரம் பூச ஏங்கவில்லை, கைதட்டுக்காகத்தான்". அது அவரை மனதில் வைத்துத் தான் பாடலாசிரியர் எழுதியது என்பதை இன்றுவரை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். கிட்டத் தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் மேஜிக் லான்டெர்ன் குழுவினர் பொன்னியின் செல்வன் புதினத்தை மூன்று மணி நேர நாடகமாக நடத்தினார்கள். அப்போது தன் இடைவிடாத திரைப் பணிக்கு இடையிலும் ஆதித்ய கரிகாலன் வேடத்தை ஏற்று அவர் நடித்தார் எனபதில் இருந்தே அவருக்கு கலையின் மேல் இருக்கும் ஆர்வத்தை தெரிந்து கொள்ளலாம்.

நாசரின் இன்னொரு சிறப்பு, திரைத்துறையில் இருக்கும் எல்லாவித குழுக்களுடனும் இணைந்து அவர் படம் செய்திருப்பது.

கலை அம்சத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மணிரத்னத்தின் படத்திலும் அவர் இருப்பார். அந்த விஷயத்தில் அக்கறை காட்டாமல் படம் எடுக்கும் ராம நாராயனன் படத்திலும் அவர் இருப்பார்.

பெரிய பட்ஜெட் படங்களாக எடுக்கும் ஷங்கர் இயக்கத்திலும் அவர் நடிப்பார், அதே நேரத்தில் ஷங்கர் பட ஒரு பாடல் காட்சி எடுக்கப்படும் செலவில் முழு படத்தையே எடுத்து முடித்துவிடும் வீ சேகர் இயக்கத்திலும் அவர் நடிப்பார்.

கமல்,ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும்போதே அறிமுக நாயகர்கள் நடிக்கும் படங்களிலும் அதே அளவு தீவிரத்துடன் நடிப்பார்.

ஓம் பூரி, நசுருதீன் ஷா வுக்கு இணையான நடிப்பாளுமை உடையவராக இருந்தாலும், பி வாசு போன்றோர் கொடுக்கும் வழக்கமான வில்லன் வேடங்களையும் முகம் சுளிக்காமல் நடித்துக் கொடுப்பார்.

பிரியதர்ஷன் போன்ற வெளிமாநில இயக்குனர்கள் வந்தாலும் சரி, திருமுருகன் போல தொலைக்காட்சியில் இருந்து வந்தாலும் சரி அவர்கள் தேடுவது நாசரைத்தான்.

டெண்டுல்கர், லட்சுமணன் போன்றோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் போது அவர்களின் ஆட்டம் வழக்கத்தை விட அபாரமாக இருக்க்கும். அதுபோல நாசர், கமல் உடன் இணைந்து நடிக்கும் படங்களில் இன்னும் பிரகாசிப்பார். அவர் நடிப்பில் அசத்திய படங்களை பட்டியலிட்டால் கட்சிகளின் தேர்தல் அறிக்கையைப் போல அதனை படிக்காமல் விட்டுவிடும் வாய்ப்பு அதிகம் என்பதால் நான்கு படங்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.

தேவர் மகன்

வாசிம் அக்ரமும், அம்புரோசும் தங்கள் உச்சத்தில் இருக்கும் போது ஆளுக்கொரு முனையில் இருந்து பந்து வீசினால் பாட்ஸ்மென் என்ன செய்ய முடியும்?. ஆனால் அதே பாட்ஸ்மென் அவர்களுக்கு சமமாக ஆடினால் பார்வையாளர்களுக்கு எப்படி ஒரு அனுபவம் கிடைக்கும்?. அதுபோன்ற அனுபவம்தான் நமக்கு தேவர்மகனில். முதலில் சிவாஜியோடும், பின்னர் கமலோடும் அவர் யுத்தம் நடத்தும்போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது.

தலைவாசல்

தேவர்மகனில் பார்த்தால் தென்மாவட்ட ஆளை கண்ணில் நிறுத்துவார். இந்தப் படத்தில் பீடா சேட்டாக ஒரு வட மாநில ஆளாக உருமாறியிருப்பார். பீடா மாபியாவை நடத்தி மாணவர்களை கெடுத்து சம்பாதிக்கும் வேடம். முகத்தை அகலமாக்கி, பல்லில் கறையேற்றி, உச்சரிப்பில் வட மாநில மாடுலேஷனைக் கொண்டுவந்து மிரட்டியிருப்பார்.

மகளிர் மட்டும்

எதிர்நாயகன் என்ற வார்த்தை சரியாகப் பொருந்தும் வேடம். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் மேலதிகாரி வேடம். உடன் நடித்த ஊர்வசி,ரேவதி,ரோகிணி எல்லோரும் கடுமையான போட்டியை கொடுக்கக் கூடியவர்கள். கண்ணசைவுகள், வழியும் முகபாவம், கெஞ்சல், மிரட்டல் என பல பாவங்களையும் அனாயாசமாக காட்டியிருப்பார்.

குருதிப்புனல்

அரசாங்கத்துக்கு எதிரான தலைமறைவு போராட்டக்குழு தலைவன் வேடம். ஆயிரம் பேர் கொடூர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டாலும் திரையில் வராத உக்கிரத்தை ஒரு டேபிளில் எதிரெதிரே உட்கார்ந்து நடத்தும் விசாரனையில் கொண்டுவந்து விடுவார்கள் கமலும்,இவரும். கூர்மையான பார்வையுடன் எதற்க்கும் ஒரு பிரேக் பாயிண்ட் இருக்கு என்று இவர் சொல்லும் போது நாயகன் இவரா, கமலா என்றே சந்தேகம் வந்துவிடும்.

சென்ற ஆண்டின் சிறந்த காமெடி நடிகராக விகடன் இவரை தேர்ந்தெடுத்தது. பொய் சொல்ல போறோம்,பஞ்சாமிர்தம் படங்களின் மூலம் புதிய தலைமுறை ஹீரோ ஹிரோயின்களுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டார். தொடர்ந்து அவர் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கட்டும்.

31 comments:

Cable சங்கர் said...

குருதிபுனல், மற்றும் தேவர்மகனில் நாசரின் வீச்சு அற்புதமாயிருக்கும், கமலின் பலமே அவருக்கு ஈடான நடிக்கும் நடிகர்களை ஊக்குவிப்பதுதான் என்பது என் கருத்து.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அமராவதி............

முரளிகண்ணன் said...

கேபிள் சார் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


சுரேஷ் சார், வில்லன் தொடர் என்பதால் வில்லன் வேடம் மட்டும் எழுதலாம் என்று பார்த்தேன்.

Gajen said...

நஸ்ருதீன் ஷா, அனுபம் கேர், அமீர் கான், கமல் ஹாசன் ஆகிய 'Method actors' வரிசையில் சேர்க்கப்பட வேண்டியவர் நாசர் என்பது என் தாழ்மையான கருத்து..தமிழ் சினிமாவில் மிகவும் underestimated நடிகரும் இவர் தான் என்று நினைக்கிறேன்...

உங்களுடைய இந்த தொடர் மிகவும் அருமையாக உள்ளது..வாழ்த்துக்கள்!!

anujanya said...

இன்னொரு டெண்டுல்கர் செஞ்சுரி. அதே எண்ணம்தான் இந்தப் பதிவு படித்ததும். எதிர் பார்ப்பு அதிகம் இப்போது உங்களிடம். ஆனாலும், அதே கச்சிதம், ஆழம், கூர்ப்பார்வை. நானாக தலைப்பைப் பார்த்ததும், 'ம்ம், பாப்போம்; குருதிப் புனல் பற்றி சொன்னால்தான் முரளிக்கு நூறு மதிப்பெண்' என்று நினைத்தால், 'பிரேக் பாயிண்ட்' பற்றி சொல்லி நூற்றுக்கு இருநூறு உங்களுக்கு இப்போது :)

'நாயகன்' பற்றி ஞாபகம் வந்தது. வில்லன் இல்லை என்றாலும், நிச்சயம் 'எதிர்-நாயகன்' தானே :). அன்பே சிவமும் ஞாபகம் வந்தது. ஆனால், மிகச் சிறந்த அந்தப் படத்தில் கமல் மற்றும் மாதவனுக்குப் பின் யாருக்கும் ஒன்றும் மிஞ்சவில்லை.

அனுஜன்யா

பி.கு. இதற்கே எவ்வளவு நேரம் செலவாகும்? இடையில் தமிழிஷ் க்கு ஏது நேரம்? எனினும் மிக்க நன்றி முரளி.

anujanya said...

உங்களிடம் ஒரு மாலை கிரிக்கெட் பற்றி மட்டும் பேச ஒதுக்க வேண்டும். அம்ப்ரோஸ்/ அக்ரம் பற்றி சொன்னது (போலவே கார்க்கி பதிவில் கிரேட்பாட்ச் பற்றி நினைவு வைத்திருந்தது) எல்லாம், ஒரு casual cricket follower எழுத முடியாதது. ஒரு திரவம் என் செலவில். என்ன நினைத்தீர்கள்? ஜஸ்ட் சோடா. மீதி உங்க கணக்கு தான் :)

அனுஜன்யா

சின்னப் பையன் said...

சூப்பர்...

முரளிகண்ணன் said...

தியாகி தங்கள் வருகைக்கு நன்றி.

அனுஜன்யா, நன்றிகள். நிச்சயம் கிரிக்கெட் பற்றி பேசுவோம். அந்த மாலையில் எனக்கு சோடா கூட வேண்டாம். உடன்கட்டை ஏற காத்திருக்கும் நிழல் போல ஒரு ஹைக்கூவை மட்டும் எனக்காக சொல்லுங்கள்.

சின்னப்பையன் நன்றி.

Cable சங்கர் said...

//இதற்கே எவ்வளவு நேரம் செலவாகும்? இடையில் தமிழிஷ் க்கு ஏது நேரம்? எனினும் மிக்க நன்றி முரளி.//

முரளி சொல்லவேயில்லை..? இதெல்லாம் ரொம்ப மோசம்..

முரளிகண்ணன் said...

\\//இதற்கே எவ்வளவு நேரம் செலவாகும்? இடையில் தமிழிஷ் க்கு ஏது நேரம்? எனினும் மிக்க நன்றி முரளி.//

முரளி சொல்லவேயில்லை..? இதெல்லாம் ரொம்ப மோசம்\\



தலைவரே, அவரோட ஹைகூ கவிதைகளை தமிழிஷ் தளத்தில் போஸ்ட் செய்தேன். வேறொன்றும் இல்லை.

மாதவராஜ் said...

மிக முக்கியமான நடிகர் நாசர். பதிவு செய்திருப்பது நல்ல விஷயம். தமிழ்ச்சினிமாவில் இலக்கியப் பரிச்சயமுள்ள், தீவீரத் தேடல் உள்ள கலைஞர்களில் அவர் ஒருவராக இருக்கிறார். அவர் சோதனை முயற்சியாக செய்த முகங்கள் போன்ற படங்களையும், பூமணியின் கதையில் நடித்ததையும் குறிப்பிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

கார்க்கிபவா said...

//ஒரு திரவம் என் செலவில். என்ன நினைத்தீர்கள்? ஜஸ்ட் சோடா. மீதி உங்க கணக்கு தான் :)
/

நானும் நானும்

முரளிகண்ணன் said...

மாதவராஜ் சார், நாசர் இயக்கிய அவதாரம்,தேவதை,மாயன் திரைப் படங்களையும், கருவேலம்பூக்கள், குட்டி, முகம் ஆகிய திரை முயற்சிகளையும் தனிப்பதிவாக எழுதுகிறேன்.

மா (தவ) பலன் எனக்கு தங்கள் வருகை.

கார்கி நீ இல்லாமலா?

கோபிநாத் said...

கலக்கல் பதிவு ;)

\\தேவர் மகன்
வாசிம் அக்ரமும், அம்புரோசும் தங்கள் உச்சத்தில் இருக்கும் போது ஆளுக்கொரு முனையில் இருந்து பந்து வீசினால் பாட்ஸ்மென் என்ன செய்ய முடியும்?. ஆனால் அதே பாட்ஸ்மென் அவர்களுக்கு சமமாக ஆடினால் பார்வையாளர்களுக்கு எப்படி ஒரு அனுபவம் கிடைக்கும்?. அதுபோன்ற அனுபவம்தான் நமக்கு தேவர்மகனில். முதலில் சிவாஜியோடும், பின்னர் கமலோடும் அவர் யுத்தம் நடத்தும்போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது\\

ஆகா..எப்படி அண்ணாச்சி இப்படி எல்லாம்....சூப்பரு ;))

RAMASUBRAMANIA SHARMA said...

"நடிகர் நாசர்"...is one of the TREND SETTER in the history of TAMIL CINEMA....அருமையான பதிவு...தொடரட்டும் தங்களின் இந்தப்பயணம் திரு கண்ணன்...

RAMASUBRAMANIA SHARMA said...

sssss

கிரி said...

//ஒரே மாதிரி உறும வைத்து புலியையும் பூனையாக்கி விடுவார்கள்.//

:-)))

நாசர் தேவர் மகனில் அந்த பஞ்சாயத்து காட்சியில் செமையா வெறுப்பேத்துவார்..சிறப்பான நடிப்பு

வெண்பூ said...

வழக்கம்போல் கலக்கல்.. கமல் படங்களில் இவருக்கு ஒரு இடம் எப்போதும் உண்டு, அதிலும் அவ்வை சண்முகியில் கலக்கி எடுத்திருப்பார்..

ராமகுமரன் said...

வால்டர் வெற்றிவேலில் ஒரு மோசமான போலீஸ் அதிகாரியாக கலக்கியிருப்பார், ஈரமான ரோஜாவில் பெண்னின் காதலுக்கு எதிரான பணக்கார தந்தையாக மிக அருமையாக நடித்திருப்பார், அந்த கதாபாத்திரத்தை வேறு யாரும் அவ்வளவு அழகாக செய்ததில்லை

Poornima Saravana kumar said...

naazar:-)
nalla kalaingar!!
devar maganil avarin pechum natippum yappaa chanceye illai!!

Nilofer Anbarasu said...

"தமிழ்" படத்தில் திருக்குறள் பேசிக்கொண்டு ஒரு கேரக்டர் செய்திருப்பார். நாசர் நடித்ததில் எனக்கு அதுவும் பிடிக்கும்.

BTW, சொல்ல வந்த விஷயத்தை தெளிவா சொல்லுறீங்க, அதே சமயம் அழகாவும் ப்ரெசென்ட் பண்றீங்க.

முரளிகண்ணன் said...

வருகைக்கு நன்றி கோபிநாத், ராமசுப்பிரமணியராஜா, கிரி, வெண்பூ, ராம்குமார், பூர்ணிமா சரவணகுமார், நிலோபர் அன்பரசு

narsim said...

கலக்கல் முரளி.. குருதிப்புனல்.. மறக்கமுடியாத படம்.. நாசருக்கும்..

மிக அருமையான ஒரு நடிகர்.. நல்ல பதிவு

முரளிகண்ணன் said...

தலைவரே வருகைக்கு நன்றி.

நவநீதன் said...

// பெரிய பட்ஜெட் படங்களாக எடுக்கும் ஷங்கர் இயக்கத்திலும் அவர் நடிப்பார், அதே நேரத்தில் ஷங்கர் பட ஒரு பாடல் காட்சி எடுக்கப்படும் செலவில் முழு படத்தையே எடுத்து முடித்துவிடும் வீ சேகர் இயக்கத்திலும் அவர் நடிப்பார்.
//

கலக்கல்... இந்த வரிகளை ரசித்தேன்....
இந்நாட்களில் ஷங்கர் காட்சி அமைப்புக்காக சீன் வைக்காமல், பிராமாண்டத்தை திணிப்பதர்க்காகவே சீன் வைப்பதாக எனக்கு தோன்றுகிறது...

தேவர் மகன், குருதிப் புனல், மகளிர் மட்டுமில் நாசர் நடிப்பு பிரமாதம்.... அதிலும் மகளிர் மட்டும் படு சூப்பர்...

இது தவிர அவர் இயக்க முற்சித்த மாயன் போன்ற படங்கள் தோல்வியை தழுவின...
மேலும் ஒரு படத்தில் இயக்கம் மட்டும் செய்திருப்பார் .... படத்தின் பெயர் ஞாபகம் இல்லை.... மோகன் லால், ஒரு இசைக் கலைஞனாக தன் மகளை பிரிந்தவராக நடித்த படம்.... இதுவும் தோல்வியை தழுவியது....

வெண்பூ said...

//
படத்தின் பெயர் ஞாபகம் இல்லை.... மோகன் லால், ஒரு இசைக் கலைஞனாக தன் மகளை பிரிந்தவராக நடித்த படம்.... இதுவும் தோல்வியை தழுவியது
//

Pop Corn

முரளிகண்ணன் said...

நவநீதன், வெண்பூ நன்றிகள்

rapp said...

சூப்பர். இதுல தலைவாசல் படம் செமக் கொடூரமா இருக்கும். பெரியளவில் காட்சிப்படுத்தித்தான் கொடூரத்தை காட்டணும்னு இல்லைங்கறத நிரூபிச்ச பாத்திரம்.

Anonymous said...

நல்லதொரு பதிவை கொடுத்த நண்பர் முரளிகன்னனுக்கு நன்றி..

சம்பத்

வெங்க்கி said...

அவ்வை சண்முகி யில் பாய்-பாட்சா கேரக்டரில் கலக்கி இருப்பார்.. டிபிகல் தமிழ் இசுலாமியர் உருதுவில் பேசி கலக்குவார்..(மஞ்ச கியா மாலும்பா (எனக்கு இன்னா தெரியும்பா) -- கல்லாவுல கை வெச்சிட்டேன்..) இது நான் அந்த சமூகத்தினரிடையே கேட்ட வட்டார வழக்கு.. (உ: மாட்டுகா வால் பக்கடுரே!!-- அர்த்தம்: மாட்டு வாலை பிடி...இதில் மாடு மட்டும் தமிழில், மற்றது உருதுவில்)

www.narsim.in said...

//கமல்,ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும்போதே அறிமுக நாயகர்கள் நடிக்கும் படங்களிலும் அதே அளவு தீவிரத்துடன் நடிப்பார்.
//

இதுதான் அவரின் வெற்றிக்கு காரணம்..

சரியான வார்த்தைகளைக் கொண்ட மிக நல்ல பதிவு முரளி..

கலக்குங்க..தொடர்ந்து