டி ஆர் ராஜகுமாரி
மைசூர் ரசத்தை சமையல்காரர்கள் கண்டுபிடித்தபோது அதை சுவைத்த மகராஜா, யாம் பெற்ற இன்பம் பெறட்டும் இவ்வைகையகம் என ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். விருந்துக்கு முன்னால், அவர் மந்திரிகளிடம் பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. " நம்மைப் போல ருசிக்கு அடிமையானவர் யாரும் இருப்பார்களா என பரிசோதிக்கலாமே" என்று. பந்தி ஆரம்பமானது. முதல் முறை மைசூர் ரசம் பறிமாறப்பட்டது. அனைவரும் ருசித்து சாப்பிட்டார்கள். உடனே மகராஜா அறிவித்தார். " ஒரு முறை மட்டும்தான். இனி யாருக்கும் பரிமாறப் படாது. யாராவது விரும்பி கேட்டால் கொடுக்கப்படம். ஆனால் சாப்பிட்டு முடித்தவுடன் தலை கொய்யப்படும்" எல்லாரும் அமைதியாய் இருந்தனர். ஒருவன் மட்டும் எழுந்து கேட்டான். " சாப்பிட்டப்பறம் தானே, தாராளமாய் வெட்டிக்குங்க. இப்ப ஊத்துங்க". மகராஜா அவனை கட்டி அணைத்துக் கொண்டார்.
டி ஆர் ராஜகுமாரி நடித்த ஹரிதாஸில் பாகவதரை மயக்கும் காட்சி, கச்ச தேவயானியில் யானை மீது அமர்ந்து வரும் காட்சி, சந்திரலேகாவில் ரஞ்சனிடம் அவர் பேசுவது போன்ற காட்சிகளை நல்ல திரையரங்கில் ஒருமுறை காட்டிவிட்டு, இதோடு சரி. இன்னொரு முறை பார்க்க வேண்டுமானால் காட்டுவோம், ஆனால் கண்ணைக் குருடாக்குவோம் என்றால், என்னையறியாமலே நான் சொல்லுவேன் "ஒன்ஸ்மோர்". வார்த்தைகளுக்குள் அடங்காத வசீகரம் ராஜகுமாரியினுடையது. பார்வையாளனை பரவசப்படுத்த அவருக்கு இரண்டு கண்கள் மட்டும் போதும். அப்படிப்பட்ட நாயகி எதிர்நாயகியாக நடித்தால் எப்படி இருக்கும்?
மனோகராவில் கண்ணாம்பா உணர்ச்சி பொங்க பேச, அதைக்கேட்டு சிவாஜி தூணையே உடைத்து சங்கிலிப் பிணையில் இருந்து விடுபட்டு எதிரிகளை துவம்சமாக்குவார். அப்பேர்ப்பட்ட உரைக்கு காரணமாக எப்பேர்ப்பட்ட வில்லத்தனம் இருக்கவேண்டும்?. கொடுமைக்கார வில்லன் கூட்டமா தேவை? .வசந்தசேனையாக வரும் டீ ஆர் ராஜகுமாரியின் கண் அசைப்பு போதாது?
குலேபகாவலியில் பகடை உருட்டி ராஜகுமாரர்களை அடிமையாக்கும் ராணி வேடம். அதில் பகடை உருட்டும் போது போட்டியாளரை ஏமாற்ற விளக்கை அணைப்பார்கள். அந்தப் படம் பார்த்த போது தோன்றியது " எதற்க்கு விளக்கை அணைக்கவேண்டும்?. ராஜகுமாரி ஒரு மோகனப் பார்வை பார்த்தால் போதாது?.
பொன்னியின் செல்வனை திரைப்படமாக அது வெளிவந்த போதே எடுத்திருந்தால் சந்தேகத்துக்கே இடமில்லாமல் அதில் நந்தினி கேரக்டர் ராஜகுமாரிக்குத்தான். அந்த கேரக்டரை டெலிகேட்டாக செய்ய அவரால்தான் முடியும்.
வடிவுக்கரசி
முதல் மரியாதையில் இவருக்கு அற்புதமான வில்லி வேடம் கிடைத்தது. பின்னர் இவருக்கு வழக்கமான டெலிசீரியல் டைப் வில்லி வேடங்களே வாய்த்தன. கண்ணாத்தாள் போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம். அருணாச்சலத்தில் கொடுமைக்கார கூன் விழுந்த பாட்டி வேடத்தைக் கொடுத்தார்கள். ஆச்சார்யா என்னும் படத்தில் மார்க்கட் தண்டல் வாங்கும் மாயாக்காள் பாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இவரது ஆகிருதிக்கும் முக அமைப்புக்கும் தக்க வில்லி வேடத்தை தமிழ் சினிமா இன்னும் தராமலேயே இருக்கிறது.
சில்க் ஸ்மிதா
அந்தக் காலத்துக்கு ராஜகுமாரி என்றால் அதற்க்கடுத்த தலைமுறைக்கு சில்க். உடற்கட்டிலும்,முக அழகிலும், பார்வையிலும் இவர் டீ ஆர் ராஜகுமாரிக்கு சளைத்தவர் இல்லை. ராஜகுமாரி பிராட்மென் என்றால் சில்க் சச்சின். ஆனால் இவருக்கு தமிழ்சினிமா பெரும்பாலும் ஹீரோவை மயக்கும் வில்லன் கூட்டத்து ஆள் வேடத்தையே கொடுத்தது. விதிவிலக்காக குணசித்திர நடிகர்களை மயக்கும் (கனம் கோர்ட்டார் அவர்களே, பாண்டித்துரை) வேடத்திலும் சில படங்களில் வலம் வந்தார். ஒளிப்பதிவாளர் அசோக்குமார் இயக்கிய "அன்று பெய்த மழையில்" திரைப்படத்தில் வித்தியாச வில்லி வேடம் இவருக்கு கிடைத்தது. தன்னிடம் உறவு கொண்டு பின் மனைவியுடன் சேர்ந்துவிடும் சரத் பாபுவை பழி வாங்கும் வேடம். உளவியல் ரீதியில் அவருக்கு ஏற்படும் சிக்கல்களை அசோக்குமார் அதில் சித்தரித்திருப்பார். அந்த பாத்திரத்துக்கு ஈடு கொடுத்து சில்க் அசத்தியிருப்பார்.
ரம்யாகிருஷ்ணன்
ரஜினிகாந்தை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் படையப்பா படத்திற்க்கு நீலாம்பரி என்றுதான் பெயர் வைத்திருப்பார்கள். இந்தக் கேரக்டரை படத்திலிருந்து கழித்தால் என்ன மிஞ்சும்?. அறிமுக காட்சி முதல் ருத்ர தாண்டவம் ஆடும் காட்சி, ரஜினியுடனான ஊஞ்சல் காட்சி, தன்னைத் தானே சுட்டுக்கொள்ளும் இறுதிக்காட்சி வரை அசத்தலான பெர்பார்மன்ஸ். இப்போது சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் ஆறுமுகம் படத்திலும் இது போன்ற கேரக்டரே என்று சொல்லுகிறார்கள்.
சிம்ரன்
தமிழ் சினிமாவில் நுழைந்த போது சின்ன சில்க் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். இவர் கதாநாயகியாக நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றன. சரண் இயக்கிய பார்த்தேன் ரசித்தேனில் வில்லி வேடம். தான் காதலிக்கும் பிரசாந்த் காதலுக்கு உதவுவது போல் நடித்து பின் அந்த காதலுக்கு வேட்டு வைக்கும் வேடம். இதில் அவருக்கு அண்ணனாக நடித்த ரகுவரனுக்கே சவால் விடும் படியாக நடித்திருப்பார். கோவில் பட்டி வீர லட்சுமி படத்தில் அநீதிக்கு எதிராக பொங்கி எழும் பெண் வேடம். வில்லி என்று சொல்ல முடியாது. ஆக்சன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருப்பார்.
தெலுங்கானா சகுந்தலா
தூளில் சொர்ணாக்கா என்னும் வேடம். இப்போது கூட யாராவது பெண் அராஜகம் பண்ணினால் சொர்ணாக்கா டைப்புடா என்று சொல்ல வைக்கும் அளவுக்கு வில்லித்தனம் காட்டியிருப்பார்.
சங்கீதா
உயிர் படத்தில் கொழுந்தனை அடைய நினைக்கும் அண்ணி வேடம். அதற்க்காக கணவனை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு பேச்சில் காயப்படுத்தும் பாத்திரம். கணவன் இறந்தபின் தடையாக இருக்கும் கொழுந்தனின் காதலி,தன் குழந்தைகளை கூட சித்திரவதை செய்யம் பாத்திரம்.
ஸ்ரேயா ரெட்டி
திமிரு படத்தில் தெனாவெட்டான ரோல் இவருக்கு. கந்துவட்டி அராஜகம் பண்ணும் குடும்பத்து பெண் வேடம். ஏய் இசுக்கு என்று மதுரைத் தமிழில் பாவாடை தாவணியுடன் வில்லித்தனத்தைக் காட்டியிருப்பார். தன் தாவணியை உருவி சரிக்கு சமமாக மோதிய நாயகனனிடம் உன்னையே திருமணம் செய்து கொள்வேன் என்று மல்லுக்கட்டுவதாகட்டும், ஆறுதல் சொல்ல வரும் அண்ணனிடம் "அவனைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், விடக்கோழி அடித்து விருந்து தயாரி என அலம்புவதாகட்டும், கடைசியில் நாயகன் திருமணத்துக்கு மறுத்ததும் ஏய் என கத்தியுடன் பாய்வதாகட்டும் மிரட்டியிருப்பார்.
ஜோதிகா
அறிமுகமான பூவெல்லாம் கேட்டுப்பார் முதல் பல படங்களில் அப்பாவிப் பெண் வேடங்களில் நடித்தவர். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் பணத்திற்க்காக ஆண்களை மயக்கும் வேடத்தில் பிளந்து கட்டியிருப்பார். கண்களில் சோகம் ததும்பும் காமத்துடன் அவர் பார்க்கும் போது யார்தான் மயங்கமாட்டார்கள்?. கடைசிவரை விட்டுக்கொடுக்காத வில்லத்தனம் காட்டியிருப்பார். மொழி பார்த்து விட்டு இதைப் பார்த்தவர்கள் விழி பிதுங்கிவிட்டது. சந்திரமுகி படத்திலும் ஸ்பிளிட் பெர்சனாலிடி காட்சிகளில் சந்திரமுகியாக மிரட்டியிருப்பார்
அக்சயா
கலாபக் காதலன் படத்தில் தன் ஒன்றுவிட்ட அக்கா கணவனை அடையத்துடிக்கும் பாத்திரம்.
ரீமா சென்
வல்லவன்படத்தில் தன் துணை தனக்கு கிட்டத்தட்ட அடிமையாக இருக்க வேண்டும் என்கிற சைக்கோ பாத்திரம். சைக்கோ என்பதை விட ஓவர் பொசெஷனுடன் ஹைபர் ஆக்டிவ்வும் கலந்த பெண் வேடம் என்றும் சொல்லலாம். படத்தில் காட்டப்படும் வயதுக்கு உடல் ஒத்துழைக்கவிட்டாலும் நடிப்பு ஒத்துழைத்தது
ஐஸ்வர்யா
பேரரசுவின் பழனி படத்தில் வசதிக்காக பணம் உள்ளவர்களுடன் இணையும் பாத்திரம். இவரது குரல் வில்லி வேடத்திற்க்கு மிகப் பொருத்தம்.
சி ஐ டி சகுந்தலா போன்றோர் பழைய கௌபாய் டைப் படங்களில் வில்லியாக நடித்தனர். கர்ணன் படங்களில் ராஜ் கோகிலா, ராஜ் மல்லிகா போன்றோர் வில்லி வேடத்தில் நடித்தனர்.எங்க சின்ன ராஜா படத்தில் சி ஆர் சரஸ்வதி நடித்தார். பூவா தலையா படத்தில் எஸ் வரலட்சுமி, மாப்பிள்ளை படத்தில் ஸ்ரீவித்யாவும் வில்லி மாமியாரார் வேடங்களில் கலக்கினார்கள். இது போல பல படங்களில் குறிப்பிட்டு சொல்லும்படி வேடம் கிடைத்தாலும், பெரும்பாலும் நாயகனுடன் மோதி பின் அவனுக்கு ஏங்கும் (சமீபத்தில் : கேடி -தமன்னா) வேடங்களையே வில்லிகளுக்கு தமிழ் சினிமா தொடர்ந்து அளித்துவருகிறது.
31 comments:
நான் தான் முதல்ல....
திமிரு படத்த விட்டுடீங்களே தல....
நன்றி நவநீதன். பின்னர் சேர்த்து விடுகிறேன்.
நாம் அரசியலில் 33% இடஒதுக்கீடை பெண்களுக்காக கேட்டு போராடிக் கொண்டிருக்க தொலைக்காட்சித் தொடர்கள் வில்லன் கதாபாத்திரத்துக்கான 100% ஒதுக்கீட்டை பெண்களுக்கு கொடுத்துவிட்டன. ஆனால் தமிழ் திரையுலகம் 10% ஒதுக்கீட்டைக் கூட அனுமதிக்கவில்லை//
அசத்தல் முரளி.. வித்தியாசமான தளத்திலான அலசல்..
வழக்கம் போல கலக்கல் பதிவு.
பூவா தலையா படம் என்று நினைக்கிறேன் - எஸ்.வரலக்ஷ்மிக்கு பிரதான, வில்லி வேடம் தானே. போலவே, மாப்பிள்ளை படத்தில் ஸ்ரீ வித்யா. ஓரளவு புதிய பறவை சவுகார். 'நீயா' ஸ்ரீப்ரியாவை எப்படிச் சொல்வது? ஜோதிகா நடித்த சினேகிதி என்று ஞாபகம். அதிலும் ஒரு பெண் தானே எதிர்மறை பாத்திரம்? அதே போல் எதோ ஒரு ஆர்யா படம் ('நான் கடவுள்' இல்லை). மனைவியின் தங்கையே துரத்தி, மிரட்டி காதலிக்கும் படம். போங்க தல, யோசித்தால், வில்லிகள் எண்ணிக்கை வில்லன்களை மிஞ்சும் போல இருக்கு :)
அனுஜன்யா
டி ஆர் ராஜகுமாரி பற்றிய தகவல்கள் புதிது, மனோகரா படம் பார்த்திருந்தாலும் அவர் முகம் நினைவில் இல்லை.
//ராஜகுமாரி பிராட்மென் என்றால் சில்க் சச்சின்.//
பொருத்தமான ஒப்பீடு.
ரீமா சென் பற்றி நீங்கள் குறிப்பிடுவது எந்த படத்தில்? நீங்கள் குறிப்பிடுவது போல் அவர் எந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று யோசித்துப்பார்க்கிறேன், எந்த படமென்று நியாபகம் வர மறுக்கிறது.
நல்லாருந்தது முரளி. M.N.ராஜம் விட்டுடீங்களே??
லலிதா..கணவனே கண் கண்ட தெய்வம்...தூக்கு தூக்கி ஆகிய படங்கள்
வஞ்சிக்கோட்டை வாலிபனில்..வைஜயந்தியும்..கிட்டத்தட்ட..எதிர்மறை பாத்திரமே(படையப்பா...ரம்யா போல)
உங்கள் தளம் சிறக்க வாழ்த்துக்கள்.
http://pnaptamil.blogspot.com
http://pnaprasanna.blogspot.com
ரசம் சொட்ட சொட்ட எழுதியிருகீங்கா...
நர்சிம் மிக்க நன்றி
அனுஜன்யா மொத்த வேடத்தைக் கூட்டினாலும் ஆண் வில்லன் வேடத்தில் 10% சதவீதம் தானே வரும். கலாபக் காதலன் - அக் ஷயா. உங்கள் இன்புட்டை வைத்து இன்னோரு பதிவு கூட எழுதலாம் போலிருக்கிறதே.
நிலோபர் அன்பரசு - ரீமா சென் நடித்தது - வல்லவன். மிக்க நன்றி
வித்யா, எம் என் ராஜம் மறந்து விட்டேன். ஞாபக படுத்தியதற்க்கு நன்றி
சீரியல் டைப்பிலான வில்லிகளை தவிர்க்கலாம் என நினைத்து மாமியார் வில்லிகளை எழுதாமல் விட்டு விட்டேன்.
டி வி ஆர் சார், ஏகப்பட்ட தகவல்களை கொடுக்குறீர்கள். நன்றி
ப்ரசன்னா வாழ்த்துக்கு நன்றி.
அக்னிபார்வை, ரசமான பின்னூட்டம்
அருமையான பதிவு!
எப்படித்தான் அனைத்தையும் நினைவிலிருந்து எழுதுகிறீர்கள் என தெரியவில்லை.
எதிர் 'நாயகி'கள் என்றாலே பெண் என்று தானே பொருள்படும்.
ரீமாசென்னுக்கு என்ன படம்னு சொல்ல விட்டுட்டீங்க.
வெயிலான், தங்கள் வருகைக்கு நன்றி.
\\எதிர் 'நாயகி'கள் என்றாலே பெண் என்று தானே பொருள்படும்.
\\
ஆமாம், திருத்தி விடுகிறேன் தலைப்பை.
\\ரீமாசென்னுக்கு என்ன படம்னு சொல்ல விட்டுட்டீங்க.\\
ரீமா சென் - வல்லவன்.
டி.ஆர்.ராஜகுமாரியை எந்த அளவுக்கு ரசித்திருந்தால், அந்த ஆரம்ப் பில்டப் இருக்கும், ப்ளாக் & ஒயிட் காலத்திலேயே, நல்ல ப்ராட் பாண்ட் உடற்கட்டுடனுடனும், சொக்கும் கண்களை பார்க்கும் போது.. ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்பா இப்பகூட கண்ணை கட்டுதே..
வழக்கம் போல் சூப்பர் முரளி..
சி.கே.சரஸ்வதி.. (தில்லானா மோகனாம்பாள் பத்மினி அம்மா... அந்த அம்மா என்ன ஒரு வில்லத்தனம் பண்ணியிருக்காங்க.. அவங்களை விட்டுட்டீங்களே..தல..
வழக்கம் போல கலக்கல் பதிவு.
சூப்பரோ சூப்பர்:):):) ராஜகுமாரி மேடம் பத்தின உங்க வரிகள் கலக்கல்.
ஜோதிகாவோட எதிர்நாயகி கதாப்பாத்திரங்களைப் பத்தி எழுதும்போது, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த, தல அஜீத் கலக்கிய 'இராஜா' திரைப்படத்தை குறிப்பிடாததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சங்கர் சார் வருகைக்கு நன்றி. சி கே சரஸ்வதியை ஞாபகப் படுத்திவிட்டீர்கள்.
சின்னப்பையன்,கார்கி -நன்றிகள்.
ஆஹா ராப் வந்துட்டிங்களா. இனி எனக்கு விட்டுப்போன தகவல்கள் எல்லாம் கிடைச்சுடும்.
/*நாம் அரசியலில் 33% இடஒதுக்கீடை பெண்களுக்காக கேட்டு போராடிக் கொண்டிருக்க தொலைக்காட்சித் தொடர்கள் வில்லன் கதாபாத்திரத்துக்கான 100% ஒதுக்கீட்டை பெண்களுக்கு கொடுத்துவிட்டன. ஆனால் தமிழ் திரையுலகம் 10% ஒதுக்கீட்டைக் கூட அனுமதிக்கவில்லை*/
மறுக்க முடியாத உண்மை
தகவல்கள் அருமை....தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே....
ssss
ரம்யாகிருஷ்னனை பற்றி கூட நாலு வரி எழுதினால் தான் என்னவாம்?
//ரஜினிகாந்தை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் படையப்பா படத்திற்க்கு நீலாம்பரி என்றுதான் பெயர் வைத்திருப்பார்கள். //
அதே போல் ரஜினியை தவிர வேறு எந்த ஹீரோவும் தனக்கு இனையாகவோ அல்லது அதற்கு மேலாகவோ எந்த கேரக்டரும் இல்லாமல் பார்த்து கொள்வதில் மிக கவனமாக இருப்பார்கள்.
உ.தா: கமலஹாசன் கடைசி வரைக்கும் ரகுவரனுக்கு ஒரு படத்தில் கூட இனைந்து நடிக்க வாய்பளிக்கவில்லை.
நசரேயன், ராமசுப்பிரமணிய ஷர்மா தங்களின் வருகைக்கு நன்றி.
பிளீச்சிங் பவுடர்,
கமல் சத்யராஜ்,நாசர்,பிரகாஷ் ராஜ்,பசுபதி ஆகியோருடன் இணைந்து நடிக்கவில்லையா?. இவர்களெல்லாம் ரகுவரனை விட திறமை குறைந்தவர்களா? எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன பட தயாரிப்பில். இப்போது கூட மோகன்லாலுடன் தன் அடுத்த படத்திற்க்கு பேசிக் கொண்டுள்ளார். கமலை நீங்கள் உதாரணத்துக்கு எடுத்திருப்பது எனக்கு உடன்பாடில்லை.
உள்ளேன் ஐயா
// கமல் சத்யராஜ்,நாசர்,பிரகாஷ் ராஜ்,பசுபதி ஆகியோருடன் இணைந்து நடிக்கவில்லையா?. இவர்களெல்லாம் ரகுவரனை விட திறமை குறைந்தவர்களா? எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன பட தயாரிப்பில். இப்போது கூட மோகன்லாலுடன் தன் அடுத்த படத்திற்க்கு பேசிக் கொண்டுள்ளார். கமலை நீங்கள் உதாரணத்துக்கு எடுத்திருப்பது எனக்கு உடன்பாடில்லை.
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...
எதிர்நாயகியாக எனக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் "செந்தூரப்பூவே" வில்லிதான்.. பெயர் நினைவில்லை..
//எதிர்நாயகியாக எனக்கு சட்டென்று நினைவுக்கு வருபவர் "செந்தூரப்பூவே" வில்லிதான்.. பெயர் நினைவில்லை..
//
She is Vijayalalitha; Jothilakshmi, Jayamalini's sister and Vijayshanthi's aunt.
மாடர்ன் தியேட்டர்ஸ் திகில் பட வில்லிகளை விட்டுவிட்டீர்களே, சி ஐ டி சகுந்தலா அதில் பிரபலம். ஒய். விஜயாவையும் விட்டு விட்டீர்கள்.
Your description of late4 Selvi T.R.Rajakumari's eyes is wonderfuil. In those college days, I used to draw with pencil the bust size pictures of her and her eyes had special attention in my drawings. Thanks.
samson's blogspot.com
I feel the same infatuation in the eyes of Ms.Ramya Krishnan as those of Selvi T.R.Rajakumari. I regret she is not being used in the cine field according to her talents.
samban's blogspot.com
oruvarai uyarthi pesuvathil thappilai aanal matravarai kurai kurakkudathu devarmagan [nasar]kuruthi punal [nasar]virumandi[pasupathi]maganathi[shankar]panjathanthiramethu pol ennum niraiya;thanathu penaril nasar,sathayaraj,madhavan ena matra nayargali podu alaku parthavar avarai thavaraga pesathirgal
Post a Comment