திரை விமர்சகர்களாலும், திரையுலகத்தினராலும், பொதுமக்களாலும் சமீப காலத்தில் ஒரு சேர பாராட்டப் பெற்ற திரைப்படங்களைப் பார்த்தோமேயானால் அவற்றில் பெரும் பாலான படங்கள் தென்மாவட்டங்களை களமாக கொண்ட படங்களேயாகும். காதல்,பருத்திவீரன், சுப்ரமணியபுரம், வெண்ணிலா கபடி குழு என மதுரையையும், மதுரையை சார்ந்த பகுதிகளையும் இயல்பாக சித்தரித்த படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. பொதுவாக தமிழ்சினிமாவில் கிராமங்களை கதைக்களமாக கொண்ட படங்கள் தென் மற்றும் மேற்கு மாவட்ட கிராமங்களையே தொடர்ந்து சித்தரித்து வந்துள்ளன. மிக அரிதாகவே வட மாவட்டங்களையும், நாஞ்சில் நாடு எனப்படும் கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளையும் தமிழ் சினிம சித்தரித்து வந்துள்ளது.
வட மாவட்டங்களை சித்தரித்து மறுமலர்ச்சி, (வாட்டாகுடி) இரணியன் ஆகிய படங்கள் வெளிவந்தன. மறுமலர்ச்சி படத்தின் ஒளிப்பதிவாளரான தங்கர் பச்சான் இயக்குனரான பின் தான் இயக்கிய அழகி, சொல்ல மறந்த கதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம் ஆகிய படங்களை வடமாவட்ட பிண்ணனியில் இயக்கினார். முத்துக் குளிக்க வாரீயளா, நிலாவே வா, டும் டும் டும், கோவில் ஆகிய படங்கள் நாஞ்சில் நாட்டு பின்புலத்தில் எடுக்கப்பட்டாலும் அவை அம்மண்ணை இயல்பாக சித்தரித்தனவா என்பது கேள்விக்குறி.
நம் முன் உள்ள கேள்வி, மேற்கு மாவட்டங்களை அவற்றின் இயல்புடன் யதார்த்தமாக சித்தரித்து படங்கள் வந்துள்ளனவா?. ஏனெனில் 1990க்குப் பின் மேற்கு மாவட்ட பிண்ணனியில் ஏராளமான படங்கள் வந்துள்ளன. தேவராஜ், கே பாக்யராஜ், ஆர் சுந்தர்ராஜன், மணிவண்ணன், பாலு ஆனந்த், ஆர் வி உதயகுமார். அனுமோகன், சி ரங்கனாதன், ராஜகுமாரன் என பல இயக்குநர்கள் மேற்கு மாவட்டங்களில் இருந்து வந்துள்ளார்கள். இதுதவிர சென்னை வாசியான கே எஸ் ரவிகுமார், நெல்லைக்காரரான விகரமன் ஆகியோரும் மேற்கு மாவட்ட படங்களை ஈரோடு சௌந்தர் என்னும் வசனகர்த்தா உதவியுடன் இயக்கினார்கள்.
முதலில் மேற்கு மாவட்டங்களை அடிப்படையாக கொண்ட சில படங்களையும், பின்னர் அவை இம்மண்ணை யதார்த்தமாக சித்தரித்ததா, இல்லையா என்பதனையும் பார்ப்போம்.
மக்களைப் பெற்ற மகராசி (1957)
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் வந்த புராண படங்கள் இலக்கண சுத்தமான வசனங்களால் நிரம்பியிருந்தது. பிராண நாதா போன்ற வசனங்களும் பெருமளவு உபயோகப்பட்டன. சமூக கருத்துடன் வெளிவந்த மேனகா, தியாக பூமி ஆகிய படங்களிலும் வட மொழி கலந்த தமிழே பேசப்பட்டது. 1947 ஆம் ஆண்டில் கருணாநிதி ராஜகுமாரி என்னும் திரைப்படம் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமான பின் வட மொழி கலப்பில்லாத மையத் தமிழ் படங்களில் இடம் பெறத் தொடங்கியது. இதை மையத் தமிழ் என்று சொல்ல காரணம் இதில் இடம்பெற்ற வார்த்தைகள் மிகப் பொதுவானவை. இதில் எந்த வட்டார வழக்கும், இடுகுறிச் சொற்களும் இல்லாமல் இருந்தன. இச்சூழ்நிலையில் சோமு இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த இந்தப் படத்தில் மேற்கு மாவட்ட வட்டார வழக்கு முதன் முதலில் பயன்படுத்தப் பட்டது. அதுவரை மையத்தமிழ் பேசி நடித்த சிவாஜி இதில் கொங்கு மொழியை பேசினார்.
சொத்துக்களை கவர்ந்து கொண்டு தங்கையை அண்ணன் விரட்டி விடுகிறான். தங்கையின் (கண்ணாம்பா) மகன் செங்கோடன் (சிவாஜி) மாமன் மீது கோபத்துடன் வளர்கிறான். மாமன் தன் மகனை பட்டணத்தில் படிக்க வைக்க, செங்கோடனும் தன் தங்கையை அங்கே படிக்க வைக்கிறான். குடும்ப பகையை மறந்த இளசுகள் காதலிக்கிறார்கள். இருவர் வீட்டிலும் எதிர்ப்பு. ஒருநாள் குளக்கரையில் பிணமாக ஒதுங்குகிறார்கள் காதலர்கள். எல்லோரும் கதற, நடிப்புத்தான் என எந்தரிக்கிறார்கள் காதலர்கள். இந்த இடத்தில் இன்னொரு திருப்பம். கண்ணாம்பா உயிர்தியாகம் செய்து மக்களைப் பெற்ற மகராசியாகிறார்.
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி என்னும் அருமையான பாடல் இடம் பெற்ற திரைப்ப்டம் இது.
ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
இயக்குனர்களின் பொற்காலமாக விளங்கிய பின் 70களில் வந்த முக்கிய திரைப்படம் இது. தேவராஜ் இயக்கி, இளையராஜா இசையமைத்த இந்தப் படம் சிவகுமாரின் 100ஆவது படம். சேலம் அருகிலுள்ள வண்டிச்சோலை கிராமத்தில் சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளை சொல்லிய படம் இது. செம்பட்டை (சிவகுமார்) ஊர் மக்களுக்கு தேவையான பொருட்களை வெளியூரில் இருந்து வாங்கி வந்து தந்து அதன் மூலம் வாழ்க்கை நடத்துபவன். அவனுக்கு பட்டணப் பெண் (தீபா) மனைவியாகிறாள். அந்தக் கிராமத்துக்கு வரும் வனத்துறை அதிகாரி (சிவசந்திரன்) தீபாவின் தந்தைக்கு அறிமுகமானவர் என்பதால் இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. இது தொடர்ந்து ஊராருக்கும் தெரியவருகிறது. இதை தாங்க முடியாத செம்பட்டை தற்கொலை செய்து கொள்கிறான்.
இந்தப் படம் பல குறியீடுகளை கொண்ட படம். கிராமத்துக்கு பட்டணப் பெண் வருவதை ஊருக்கள் நாகரீகம் வருவதற்க்கு இணையாக கொள்ளலாம். அவள் மூலம் ஊருக்குள் ஏற்படும் மாற்றம், நாகரீகத்தால் ஏற்படும் மாற்றங்களிக் குறிக்கிறது. அந்த கால கட்டத்தை அருமையாக திரையில் பிரதிபலித்த இந்தப் படத்தில் வெத்தலை வெத்தலை வெத்தலையோ, என்னுள்ளே ஏதோ, உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி ஆகிய பாடல்கள் புகழ்பெற்றவை.
வாழ்க்கை சக்கரம் (1990)
மேற்கு மாவட்டத்தை சேர்ந்த சத்யராஜ், கவுண்டமணி முக்கிய வேடங்களில் நடிக்க அதே பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் இயக்கிய படம். இந்தப் படம் வரதட்சிணை கொடுமையைப் பேசினாலும், அது மேற்கு மாவட்டத்தை கதைக்களமாக கொண்டும், அப்பகுதியில் உள்ள வழக்கோடும் கையாளப்பட்டது. சத்யராஜ் காவல்துறை துணை ஆய்வாளர். அவரது தந்தை தன் மகனுக்கு வசதியான இடத்தில் பெண் பார்க்கிறார். மணிவண்ணனின் மகள் கௌதமியை நிச்சயம் செய்கிறார்கள். இவர்கள் கேட்ட அதிக வரதட்சணையை திரட்ட மணிவண்ணன் மிகவும் சிரமப் படுகிறார். திருமண நாளன்று அதை அறிந்த சத்யராஜின் தந்தை திருமணம் வேண்டாம் என மறுக்கிறார். இதை அறிந்து கோபப்படும் சத்யராஜ், தன் தந்தையை சமாளித்து திருமணத்திற்க்கு அனைவரையும் அழைத்துக் கொண்டு செல்கிறார். செல்லும் பேருந்து விபத்துக்குள்ளாகிறது. இதை அறியாத மணிவண்ணன் மாப்பிள்ளை வீட்டார் வரவில்லையே என தற்கொலை செய்து கொள்கிறார்.
இதே போல் சத்யராஜ் மிகவும் மதிக்கும் ஊர் பெரியவர் விஜய கிருஷ்ண ராஜ், வாழ்ந்து கெட்டவர். அவர் தன் ஒரே மகளுக்கு மாப்பிள்ளை தேடுகிறார். சாதாரண நிலையில் இருப்போர் பெரிய வீடு என தயங்க, வசதியானவர்களோ இவரிடம் பெண் எடுத்தால் பணம் கிடைக்காது என நழுவுகிறார்கள். இந்நிலையில் சாராயம் காய்ச்சும் வசதியான குடும்பம் பெண் கேட்கிறது. திருமணம் நடந்தால் சரி என பெரியவரும் ஒத்துக் கொள்கிறார். சாராயம் காய்ச்சுபவர்கள் பெண்ணை கொடுமைப் படுத்த அவர்களி கொன்று விட்டு சிறைக்குச் செல்கிறார் சத்யராஜ். திரும்பி வந்து உன்னை மணந்து கொள்கிறேன் என கௌதமியிடம் சொல்லிவிட்டு.
இந்தப் படத்தில் விஜய கிருஷ்ணராஜ் பேசும் வசனங்களும், கவுண்டமணியின் வசனங்களும் கவனிக்கப் பட வேண்டியவை. தலைமை காவலரான கவுண்டமணியிடம், சத்யராஜ் ஏன் லஞ்சம் வாங்குகிறீர்கள் எனக் கேட்க அதற்க்கு அவர் சொல்வார். “கவர்மெண்டு தர்ற சம்பளத்துல லத்தியக் கூட தூக்கமுடியாது”. 100% சத உண்மை. ஏனெனில் அப்போதைய கால கட்டத்தில் காவலர்களின் சம்பளம் மிகக் குறைவு. அரசு வீடுகள் இல்லாவிட்டால் சென்னை போன்ற இடங்களில் அவர்களால் வாடகை கொடுத்துகூட தங்க முடியாது. இது இன்னும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
மதுரை வீரன் எங்க சாமி (1990)
சத்யராஜ் நடித்த இந்தப் படத்தில் மேற்கு மாவட்டங்களில் நிலவும் சாதிப் பிரச்சினை கையாளப் பட்டிருந்தது. மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு சாதாரண கமர்சியல் படமாகத் தோன்றும் இதில் தான் முதன் முதலாக மேற்கு மாவட்டங்களில் சமகாலத்தில் நிலவும் சாதிப் பிரச்சினை காட்டப்பட்டது. மூன்று ஆண், மூன்று பெண் கொண்ட வசதியான மேட்டுக்குடி குடும்பம். இதில் ஒரு பெண் (ஜெயபாரதி) மட்டுமே அறிவானவர். மற்ற இரு பெண்கள் அப்படியில்லை. ஜெயபாரதி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த சத்யராஜை காதலிக்கிறார். அவரை வீட்டை விட்டு துரத்தும் அண்ணன்கள் மற்ற இரு பெண்களுக்கும் தங்கள் சமூகத்தில் இருக்கும் வசதி மட்டும் அறிவற்ற மாப்பிள்ளைகளுக்கு திருமணம் செய்து சொத்தை அபகரித்துக் கொள்கிறார்கள். ஒரு குழந்தை பிறந்ததும் சத்யராஜ் இறந்துவிட தவிக்கிறார் ஜெயபாரதி. பின்னர் அவர் மகன் ( வேறு யார்? இதுவும் சத்யராஜ் தான்) மாமன்களை எப்படி வழிக்கு கொண்டு வருகிறார் என்பதே கதை. இதில் பலூன் கந்தசாமியாக கவுண்டமணி பல சேட்டைகளை செய்வார். சத்யாராஜுக்கு ஜோடியாக ரூபிணி நடித்திருந்தார்.
சேரன் பாண்டியன் (1991)
சென்னைவாசியான கே எஸ் ரவிகுமார் இயக்கிய படம். சரத்குமாருக்கு திருப்புமுனையாக அமைந்த படம். ஊர் பெரிய மனிதருக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ஒரு மனைவியும், அதன் மூலம் ஒரு மகனும்,மகளும் (சரத்குமார், சித்ரா) உண்டு. முதல் மனைவியின் மகன் (விஜயகுமார்) இவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. தாழ்த்தப் பட்ட்டவர்களாகவே பார்க்கிறார். இந் நிலையில் விஜயகுமாரின் சமூகத்தை சேர்ந்த நாகேஷ் தன் சுயநலத்துக்காக அண்ணன் தம்பிக்கு இடையில் சண்டையை வரவழைக்கிறார். முடிவு என்ன?. இந்தப் பட வசன கர்த்தா ஈரோடு சவுந்தர் விஜயகுமாருக்காக எழுதிய வசனங்கள் சாதியை தூக்கிப் பிடிப்பதாகவே எழுதப்பட்டன. பிற்பாதியில் விஜயகுமாரின் மனைவி மஞ்சுளா மூலம் அதற்க்கு பதிலடி கொடுக்கப்பட்டது. பாடல்கள், கவுண்டமணி செந்தில் நகைச்சுவை மூலம் மையக்கருத்து நீர்த்து போகவே செய்யப்பட்டது. இந்தப்படத்தில் மேற்கு மாவட்ட வீடுகள், அவர்கள் உண்ணும் முறை ஆகியவை இயல்பாக காட்டப்பட்டன
(தொடரும்)
49 comments:
//சோமு இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த இந்தப் படத்தில் மேற்கு மாவட்ட வட்டார வழக்கு முதன் முதலில் பயன்படுத்தப் பட்டது. அதுவரை மையத்தமிழ் பேசி நடித்த சிவாஜி இதில் கொங்கு மொழியை பேசினார்//
A.P.நாகராஜன், சோமு போன்றவர்கள் சேலம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்!
வித்தியாசமான தலைப்பு.. வைதேகி காத்திருந்தாள்.. முழுக்க முழுக்க ஒகேனக்கலை சுற்றி இருக்கும் தர்மபுரி மாவட்ட பகுதிகளிலேயே கதை நகரும்.
நீங்க சொல்றது சரிதான் மு.க...
ஆனால், சத்தியராஜ், சரத்குமார் இவர்கள் நடித்த பல படங்கள் வட மாவட்டத்தைச் சேர்ந்தவைகளே...
இன்னும் சொல்லப் போனால் இயக்குனர்கள் தங்கள் ஊருக்கு முக்கியத்துவம் தருபவர்கள் எனில் இம்மாதிரி
தென் மாவட்டம், வட மாவட்டப் பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.
ஒருவேளை, தென் மாவட்டங்களில் இருந்து அதிக இயக்குனர்கள் வருகிறார்களோ என்னவோ ?
மேற்கு மாவட்டங்கள் படங்களுக்காப் பஞ்சம்.திரையுலகத்துல ரெண்டே போட்டிதான். மதுரையா? கோவையா?
வடமாவட்டங்கள்தான் பாவம்.கிட்டத்தட்ட மொத்தப்பட்டியலையும் நீங்களே போட்டுட்டீங்க.கணக்குப் பாத்து எழுத ஆரம்பிச்சீங்கன்னா, மே.மா. பட்டியல் பெரிசா போகுமே.
'காஞ்சித் தலைவன்', மெட்ராஸ் டு பாண்டிச்சேரி, சென்னை 28, 12 B போன்ற படங்கள் வடமாவட்டங்கள் பற்றி எடுக்கப்பட்டவை என்று கொள்ளலாமா? ச்சும்மா, கோவிச்சுக்காதீங்க முரளி :)
எப்பவம் போல - வேறென்ன தகவல்கள் மற்றும் சுவாரஸ்யம்.
அனுஜன்யா
அண்ணாமலை, அருணாசலம் இதெல்லாம் கூட வட மாவட்டப் படங்கள் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். முத்துவேலும், அய்சும் மகிழ்வார்கள் :)
அனுஜன்யா
நல்லா ஆராச்சி செஞ்சி எழுவி இருக்கீங்க...
* * * * * * * * * * * * * * * *
நல்லவேளை எங்க நெல்லை மாவட்டம் தப்பிச்சது.
சினிமாலே எங்க மாவட்ட வட்டார வழக்கை சொல்லுதேன்னு சொல்லி
சும்மா எதுக்கெடுத்தாலும் "ஏலே... ஏலே" என்று சேர்த்து கொடுமை படுத்திவிடுவார்கள். விட்டா சினிமாலே எங்கே மாவட்டத்துகாரங்க "*சு" விட்டா கூட "ஏலே" அப்படிங்குற சவுண்டுலே தான் போவும் அப்படின்னு காட்டுவாங்க போலே இருக்கு.
முரளி..
ஒரு துறையின் அனைத்துவித கோணங்களும் அலசப்படும்பொழுது, சுவாரஸ்யமாய் இருக்கிறது.
அடுத்து, இந்த துறையில்,எதைப்பற்றி எழுதுவீர்கள் என்ற எண்ணமும் ஆர்வமும் ஏற்படுத்துகிறது.. தொடருங்கள்...
//சென்னை 28, 12 B //
அஞ்சலி, அலைபாயுதே !!!
//நல்லவேளை எங்க நெல்லை மாவட்டம் தப்பிச்சது. //
சாமி பாத்தியளா அண்ணாச்சி ??
நல்ல பதிவு முரளி
நல்ல பதிவு முரளி
//சத்யராஜ் ஏன் லஞ்சம் வாங்குகிறீர்கள் எனக் கேட்க அதற்க்கு அவர் சொல்வார். “கவர்மெண்டு தர்ற சம்பளத்துல லத்தியக் கூட தூக்கமுடியாது”. 100% சத உண்மை. ஏனெனில் அப்போதைய கால கட்டத்தில் காவலர்களின் சம்பளம் மிகக் குறைவு. அரசு வீடுகள் இல்லாவிட்டால் சென்னை போன்ற இடங்களில் அவர்களால் வாடகை கொடுத்துகூட தங்க முடியாது. இது இன்னும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. //
உண்மை.
அதை விட பல விஷயங்களும் இருக்கின்றன
1. வார ஓய்வு கிடையாது
2. வீட்டிலிருந்தபடியே CL என்று சொல்ல முடியாது
3. வாரம் 80 மணி நேரத்திற்கும் அதிகமாக பணி நேரம்
4. இரவுப்பணி என்றால் அடுத்த நாள் காலை வழக்கம் போல் பணிக்கு வர வேண்டும்
அரசு மருத்துவர்களுக்கும் மேல் உள்ள அனைத்தும் பொருந்தும் என்றாலும், காவலர்களின் நிலை (அரசு மருத்துவர்களை விட) மோசம் என்பதற்கான காரணங்கள்
1. சங்கம் கிடையாது
2. சட்டென்று வேலையை உதறி வெளியில் வந்தால் வேறு வேலை கிடைப்பது கஷ்டம்
//வட மாவட்டங்களை சித்தரித்து மறுமலர்ச்சி, (வாட்டாகுடி) இரணியன் ஆகிய படங்கள் வெளிவந்தன.//
முரளி தகவலுக்காக...
வாட்டாகுடி இரணியன் படம் தஞ்சை மாவட்டத்தில் மதுக்கூர் ஒன்றியத்தில் உள்ள வாட்டாகுடி என்கிற கிராமத்தில் வாடியக்காடு ஜமீனை எதிர்த்து போராடிய இரணியன் என்கிற பொதுவுடமை போராளியை பற்றிய படம்!
Missed Chinna Gounder, Amaidhippadai, Thirumathi Palanisamy in this list.
Manorama's slang in C.Gounder is ditto of the slang Erode/Coimbatore district.
//அரசு மருத்துவர்களுக்கும் மேல் உள்ள அனைத்தும் பொருந்தும் என்றாலும்,//
Doctor, let us discuss movies here... ;-}
அது சரி
கோவையில் கதை நடப்பதாக கூறப்படும் படங்கள் எல்லாம் இந்த பட்டியலில் வருமா
உதாரணம் - நெற்றிக்கண் ;)
நல்லதந்தி, வெண்பூ, டக்ளஸ் வருகைக்கு நன்றி.
முத்துவேல் அடுத்த பகுதிகளில் சின்னகவுண்டர் உள்ளிட்ட படங்களும் விரிவான அலசலும் உண்டு.
வந்து ஆதரவு தாருங்கள்
அனுஜன்யா வட மாவட்டங்கள் வேறு சென்னை வேறு. சென்னை,கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களிலும் வெளிநாடுகளிலும் எடுக்கப்படும் படங்கள் சிட்டி சப்ஜெக்ட் என்னும் வரையரைக்குள் வரும்.
தங்களின் வருகைக்கு நன்றி
நையாண்டி நைனா,
தங்களின் வருகைக்கு நன்றி. நெல்லையும் மதுரை சுற்று வட்டாரம் தானே. மொழியில் வேறுபாடு இருந்தாலும் நடவடிக்கைகள் ஏறத்தாழ ஒன்றுதானே.
ஆனால் நாஞ்சில் நாடு இதில் இருந்து வேறுபட்டதால் அதை தனியே சொன்னேன்
நர்சிம் நன்றி.
டாக்டர் அஞ்சலி,அலைபாயுதே எல்லாம் சிட்டி சப்ஜெக்ட் கேட்டகிரியில் வரும்.
அக்னிபார்வை தங்களுக்கு இரண்டு நன்றி
பாரி அரசு தங்களின் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.
இந்தியன், தாங்கள் குறிப்பிட்டுள்ள படங்கள் அடுத்த பகுதியில்
டாக்டர் அதெல்லாம் (கோவை) சிட்டி சப்ஜெக்ட்.
//டாக்டர் அஞ்சலி,அலைபாயுதே எல்லாம் சிட்டி சப்ஜெக்ட் கேட்டகிரியில் வரும்.//
சரி :) :)
முரளி, தெரிந்தே சொன்னதுதான் அது. 'ச்சும்மா' என்றும் சொன்ன ஞாபகம். முத்துவேல் சொந்த ஊர் திருவண்ணாமலை பக்கம் என்பதால் 'அண்ணாமலை, அருணாசலம்' என்று அவரைப் பகடி செய்தேன். லூஸ்ல விடுங்க தல :)
அனுஜன்யா
அனுஜன்யா :-)))
ஏமாந்துட்டேன்.
முத்துவேலின் பின்புலம் தெரியாததால்.
அட மேற்கத்திய மாவட்டங்கள்(நாடு)கள்....
கோயமுத்தூரூ........
கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை தலைவரே..
ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
அந்த கால கட்டத்தை அருமையாக திரையில் பிரதிபலித்த
/////
சுதந்திர காலத்துக்கும் முன்னாடி காலத்திய படம் மாதிரி ஒரு உணர்வு..
//மதுரை வீரன் எங்க சாமி (1990)
சத்யராஜ் நடித்த இந்தப் படத்தில் மேற்கு மாவட்டங்களில் நிலவும் சாதிப் பிரச்சினை கையாளப் பட்டிருந்தது. மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு சாதாரண கமர்சியல் படமாகத் தோன்றும்//
தலைப்பு கதையை சொல்லும் படங்களில் இதுவும் ஒன்று தல..
இந்த மாதிரி படங்களில் நடித்ததால்தான் அவர் ஒரு புரட்சித்தமிழன்,
//கவுண்டமணி செந்தில் நகைச்சுவை மூலம் மையக்கருத்து நீர்த்து போகவே செய்யப்பட்டது. //
தட்டீஸ் பாலிடிக்ஸ்.
வாங்க சுரேஷ்.
உங்க ஏரியா சும்மா விடுவீங்களா?
நல்ல பதிவு முரளி..
முரளிக்கண்ணன் சார் இது எங்க ஏரியாவாச்சே நாங்க விடுவோமா!
நல்ல பதிவு
வழக்கம் போல் அருமையான பதிவு.. தலைப்பு சூப்ப்பர்.. எப்படியெல்லாம் யோசிக்கீறீங்க.. தலைவரே..
வண்ணத்துப்பூச்சி, டிவி ராதாகிருஷ்ணன் சார், சின்னப்பையன் தங்கள் வருகைக்கு நன்றி.
வாங்க நல்லதந்தி
கேபிளார் பெண்களூர் பயணம் முடிந்து வந்துட்டீங்க போல இருக்கே?
நல்லா இருக்கு தகவல்கள்... நம்ம தென் மாவட்டத்து படங்களை பற்றிய பதிவை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்..
மறுமலர்ச்சி அருமையான படம். இன்றைக்கும் வட மாவட்டங்களில் ரீ ரீலிஸ் செய்யும் பொழுதெல்லாம் நல்ல வசூலை அள்ளும் என்று அம்மாவட்டத்தை சேர்ந்த ஒரு நண்பன் கூறுவான். இந்த படத்தில் முதலில் நடிக்க விஜயகாந்தை கேட்டதாகவும், அவர் மறுத்ததால் அந்த வாய்ப்பு மம்முட்டிக்கு கிட்டியதாகவும் கேள்வி.
விஜய்காந்த் இந்த படத்தில் நடித்திருந்தால் இன்னொரு சின்ன கவுண்டர் கிடைத்திருக்கும்
அத்திரி, பிளீச்சிங் பவுடர் தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
தஞ்சாவூரை களமாக வைத்தும் சினிமா பெரும்பாலும் வருவதில்லை.
நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு நாட்டாமையை விட்டு விட்டீர்களே, அதே போல சூரியவம்சம் , இன்று போய் நாளை வா மேற்கு மாவட்ட கதைகள். கடலோர கவிதை, அலைகள் ஒய்வதில்லை ஆகிய படங்களில் பாரதிராஜா அழகாக நாஞ்சில் நாட்டை படம் எடுத்திருப்பார். கடவுள் படம் வடமாவட்டங்களை குறிவைத்து எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.இராமேஸ்வரத்தை பாலா நந்தாவில் கையாண்டிருக்கிறார். குறிப்பாக முன்பனியா பாடல் வெளிநாடு செல்லாமல் இந்திய கடலிலேயே இவ்வளவு அழகாக திரையாக்க முடியுமா என்பதன் உதாரணம். சிதம்பர ரகசியம் திரைப்படத்தில் காரைக்குடி பகுதி வாழ்க்கையை நன்றாக பதிவு செய்திருப்பார்கள். வட்டத்துக்குள் சதுரம் (பழைய சீவரம்), பதினாறு வயதினிலே (வாலாஜாபாத்) போன்ற திரைப்படங்கள் காஞ்சிபுரம் அதை சுற்றியுள்ள பகுதிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை. மேலும் 70 மற்றும் 80 களில் வந்த சில ஆக்ஷன் அல்லது கொள்ளைக்கூட்ட படங்கள் மகாபலிபுரம் சாலை சவுக்கு தோப்பு முதலியவையை மையமாக கொண்டவை.
குடுகுடுப்பை வருகைக்கு நன்றி.
ராம்குமார் தங்களின் தொடர் பங்களிப்புக்கு நன்றி.
நீங்கள் குறிப்பிட்டுள்ள மேற்கு மாவட்ட படங்கள் வரும் பகுதிகளில் இடம்பெறும்.
தங்களின் பங்களிப்பை தொடரவும்
முரளிகண்ணன்,
தமிழகத்தின் மிக முக்கியமான மீடியாவான சினிமாவில் வட தமிழகத்தின் பங்கு என்ன?
எத்தனை டைரக்டர்கள் இங்கே இருந்து வந்து இருக்கிறார்கள்?
எத்தனை கதா நாயகர்கள் இங்கே இருந்து வந்து இருக்கிறார்கள்?
எத்தனை இசை அமைப்பாளர்கள் இங்கே இருந்து வந்து இருக்கிறார்கள்?
எத்தனை தயாரிப்பாளர்கள் இங்கே இருந்து வந்து இருக்கிறார்கள்?
எத்தனை கதை ஆசிரியர்கள் இங்கே இருந்து வந்து இருக்கிறார்கள்?
பதில்: விரல் விட்டு என்னக்கூடிய அளவிற்குதான் வந்து இருக்கிறார்கள்.
என்றேனும் ஒரு கிராமத்து கதாநாயகன் வட தமிழகத்தில் இருந்து வருகின்ற மாதிரி ஒரு காட்சியமைப்பை நீங்கள் சினிமாவில் பார்த்து இருக்கிறீர்களா?
காரணம்-இயக்குனர்கள் வட தமிழகத்தை சார்ந்தவர்கள் அல்லர்!
சில பேர் இருக்கிறார்கள், உ.தா. k.s.Ravikumar இவர் சொந்த ஊர் திருத்தணி, ஆனால் இவர் கிராமத்து கதை கோவையை சார்ந்ததாக இருக்கும் ( நாட்டாமை,நட்புக்காக!)
இதற்கு காரணம்- வட தமிழகத்தை, இவர் பிறந்த மண்னை இவர் ஒரு கிராமமாகவே பார்க்கவில்லை.
ஒரு பாரதிராஜாவால், வரண்ட பூமியை வைத்து ஒரு "கருத்தம்மா" எடுக்க முடிகிறது, ஆனால் k.s.Ravikumar-ஆல் திருத்தணியை வைத்து எந்த
கதையையும் எடுக்க முடியவில்லை.
பல வருடஙளுக்கு முன்பு வந்த மக்களை பெற்ற மகராசி சினிமா பாடல் என்னை மிகவும் யோசிக்க வைத்த பாடல்,(கவி: மருதகாசி)
"மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி"
இதில் வரும் ஊர்பெயர்கள் மிகவும் யோசிக்க வைத்தவை,
மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி....ஆத்தூரு கிச்சிலி சம்பா....
...கருதை நல்ல விளயவச்சு மருத ஜில்லா ஆளை வச்சி
...பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே விருது நகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு...
இதில் வரும் ஊர் பெயர்கள் இவைதான். ..
நான் எதுவும் கூட்டவோ குறைக்கவோ இல்லை.
பலப்பல வருடங்களுக்கு பின்பு வந்த சாமி திரைப்பட பாடலில் (திரு நெல்வேலி அல்வாடா,திருச்சி மலை கோட்டைடா) இடம் பெற்ற ஊர்கள்
திருநெல்வேலி
திருப்பதி
பாண்டிச்சேரி
மதுரை
திண்டுக்கல்லு
பாளையங்கோட்டை
காஞ்சிபுரம் (தவறி வந்து விட்டது)
ஊத்துக்குளி
திருச்செந்தூர்
தூத்துக்குடி
ஒரு திரைப்பட பாடலை வைத்து எனது வாதங்களை வைப்பதற்கு சங்கடமாகதான் இருக்கிறது, ஆனாலும் தமிழகத்தில் திரைப்படத்தின் வீச்சு வைத்து பார்க்கையில் இந்த பாடல் வரிகள் முக்கிய இடங்களை பெறுகிறது.
ஆக அன்று முதல் இன்று வரை எதுவுமே மாறவில்லை.
இதற்கு சினிமாவை மட்டும் குற்றம் சொல்ல முடியாது, ஒரு brand value இல்லாமல் சினிமாக்காரர்கள் எதனையும் தொட மாட்டர்கள்.
பத்திரிக்கைகளிலும் சரி, திரைப்படத்திலும் சரி, விழுப்புரத்திற்கு வடக்கே உள்ள பிரதேசம் விலக்கபட்டே இருக்கிறது.
நெல்லை தமிழ், கோவை தமிழ்,ராம நாதபுரத்து தமிழ்,தஞ்சை தமிழ்,மதுரை தமிழ் என ஒவ்வோரு தமிழ் பற்றி ஆனந்த விகடனில் பத்தி பத்தியாக
வெளி வரும், ஆனால் விகடனை பொருத்தவரை விழுப்புரத்திற்கு வடக்கே ஒரே தமிழ் , அது சென்னை தமிழ்.
300 ஆண்டுகளுக்கு முன்பு உருவான சென்னையை வைத்தே சுமார் 86 தொகுதிகளை கொண்ட இந்த ஜில்லாக்களின் தமிழ், சென்னை தமிழ் என்று
அழைக்கபடுகிறது.
வட ஆற்காடு, தென் ஆற்காடு என்ற பரந்த மாவட்டங்களுக்குள் dialect வேறுபாடு இருக்கும், என்று கூட யாரும் கவலை படவில்லை.
இதுவே தென் தமிழகத்திற்கு இது போல நடந்து இரு ந்தால், ஏகப்பட்ட கண்டன குரல்கள் வ ந்து இருக்கும்.
வட பகுதி ஆட்கள் அவ்வளவு "பிசி", தங்கள் வயிற்றை கழுவிக்கொள்வதில்.
இந்த சூழ் நிலையில் , சமீப காலமாக ஒரெ ஒரு இயக்குநர், வெளிபட்டு இருக்கிறார், அவர், தங்கர் பச்சன்.
அவரும், ஒரு சாதிய கன்னோட்டதில் தம்மை சுருக்கி கொண்டாரோ என சமீப செய்திகள் அச்சப்பட வைக்கின்றன.
ஆன்டிபட்டியையும் அரசம்பட்டியையும் தெரிய வைக்க அல்லி நகரத்தில் இருந்து இயக்குநர் வந்தார்.
அதே போல் கலசபாக்கதையும், தக்கோலத்தையும் செஞ்சியையும் சொல்வதற்கு ஒரு கலைஞன் வரவேண்டும்.
சொந்த மாநிலத்திலேயே தமது கலாச்சாரத்தை, சொந்த பழக்க வழக்கங்களை சொல்ல துணிவில்லாத தாழ்வு மனப்பாண்மையை என்னவென்று
சொல்வது?
http://kulambiyagam.blogspot.com/2008/03/4.html
-Gokul
அன்பு கோகுல்
தங்களுடைய பின்னூட்டம் மிக அருமையாக இருக்கிறது. இதைப் பற்றி எழுத வேண்டும் என நான் நினைத்துக் கொண்டு இருந்தேன்.
மிக்க நன்றி
பொதுவாகவே தமிழ்த்திரைப்படங்களில் பட்டிக்காட்டுப் படங்கள் என்றால் மதுரையும் மதுரைக்குக் கீழேயும்தான். கோவை வட்டாரப் படங்களில் மக்களைப் பெற்ற மகராசி இருந்தாலும் 80களின் இறுதியில்தான் கோவைப்பகுதியை மையப்படுத்திப் படங்கள் வந்தன என்றே சொல்லலாம். ஆனால் ரோசாப்பூ ரவிக்கைக்காரியைத் தவிர வேறெந்தப் படத்தையும் யதார்த்தப்படம் என்று சொல்ல முடியவில்லை.
அதே போல வடக்கு மாவட்டங்களைப் பார்த்தால்... தங்கர்பச்சானைத் தவிர வேறு யாரும் திரும்பிப்பார்த்ததாகவும் தெரியவில்லை.
பாரதிராஜாவின் படங்கள் இருக்க.... ஏழாவது மனிதன், மனிதரில் இத்தனை நிறங்களா, காதல், சுப்பிரமணியபுரம் என்று யதார்த்தங்கள் நீண்டுகொண்டேயிருக்கின்றன.
இது வரைக்கும் எனக்கு தெரிஞ்சி வட மாவட்டங்களை வைத்து ரொம்ப இயல்பா வந்த படம் அழகி மட்டும் தான்.
மறுமலர்ச்சி ஓரளவு ஏத்துக்கலாம் (நான் பொறந்த திருக்கோவிலூர் டானிஷ் மிஷன் ஹாஸ்பிட்டல் எல்லாம் அந்த படத்துல வரும் ;) )
எங்க ஊருல இருந்து வந்த முருகதாஸ் கூட அந்த மாவட்டத்தை பேஸ் பண்ணி படம் எடுக்கறதில்லை.
அழகில மட்டும் தான் எங்க மண்ணு, எங்க மொழியை இயல்பா காண்பிச்சிருப்பாங்க.
ஒரு எடுத்துக்காட்டுக்கு, மத்த ஊருல எல்லாம் நிலக்கடலை, கடலைனு சொல்லுவாங்க. ஆனா எங்க ஏரியால எல்லாம் மல்லாட்டைனு சொல்லுவாங்க. அந்த வார்த்தை எல்லாம் அழகில மட்டும் தான் வரும். அப்பறம் பண்ரூட்டில இருந்து சொந்தக்காரவங்க யாராவது வந்தா முந்திரி, பலாப்பழம் வாங்கிட்டு வருவாங்க. அது அந்த படத்துல தான் காட்டுவாங்க. இந்த மாதிரி நிறையா.
கிராமம்னு காண்பிச்சா ஒண்ணு சௌத்து, இல்லை பொள்ளாச்சி. அவ்வளவு தான் தமிழ் சினிமால இருக்கு. எங்க மாவட்டம் எல்லாம் தமிழ் சினிமா இயக்குனர்கள் கண்ணுக்கே தெரியாது.
ஜி ராகவன், வெட்டிப்பயல் தங்கள் வருகைக்கு நன்றி.
வட மாவட்ட கிராமங்களில் இருந்து இயக்குநர்கள் வராதது முக்கிய காரணமாக இருக்குமோ?
முரளிகண்ணன்,
எனது பின்னூட்டங்களை வெளியிட்டதற்கு நன்றி. சினிமா மட்டும் என்றில்லை எல்லா துறைகளிலும் வடமாவட்டங்கள் பின் தங்கியே இருக்கிறது.
I have written a series of posts in my blog and I showed to many of the northern districts people and nobody cared! Persons who opined is only south and western districts people.
You can see those posts here,
http://kulambiyagam.blogspot.com/2008/03/1.html
http://kulambiyagam.blogspot.com/2008/03/2.html
http://kulambiyagam.blogspot.com/2008/03/3.html
http://kulambiyagam.blogspot.com/2008/03/5.html
http://kulambiyagam.blogspot.com/2008/03/6.html
இப்பொழுதான் 'வெட்டிப்பயல்' வடமாவட்டத்தை சேர்ந்தவர் என்ற தகவல் எனக்கு தெரிய வந்தது, எனவே 'வெட்டிப்பயல்' மேற்கூறியவற்றை படிக்க வேண்டும்.
Thanks
Gokul
//வட மாவட்ட கிராமங்களில் இருந்து இயக்குநர்கள் வராதது முக்கிய காரணமாக இருக்குமோ?//
அப்படி வராததுக்கே பல காரணங்கள் இருக்கும்னு நினைக்கிறேன் முரளி கண்ணன்.
மதுரைக்காரவங்களுக்கோ, கோங்கு மாவட்டத்தை சேர்ந்தவங்களுக்கோ இருக்குற ஊர் பற்று வட மாவட்டத்தை சேர்ந்தவங்களுக்கு இல்லை
இன்னும் நிறைய இருக்கு... கோகுல் பதிவை படிச்சதுக்கு அப்பறம் நிறைய எழுதனும்னு தோணுது...
எழுதுவோம்...
Post a Comment