October 23, 2010

நேர்காணல் – தென் மாவட்ட தியேட்டர் ஆப்பரேட்டர்

என் சிறுவயது கனவு வேலைகளில் ஒன்று – தியேட்டர் ஆப்பரேட்டர் ஆவது. அந்த வேலையைச் செய்பவர்களிடம் எனக்கு ஒரு கவர்ச்சி இருந்தது. பின்னாட்களில் அது மறைந்து போனது. என் நண்பர் ஒருவரின் உதவியுடன் நேற்று ஒரு தியேட்டர் ஆப்பரேட்டரை சந்தித்து உரையாடினேன். தன் பெயர், விபரம் வெளியிடவேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். எனவே உரையாடல் மட்டும்

கே : முன் இருந்த வேலைப்பளு மற்றும் திறன் தேவைக்கும் தற்போது உள்ள நிலைமைக்கும் என்ன வித்தியாசம்?

ப: முன்னர் நிறைய திறமை தேவைப்பட்டது. முக்கால் மணிநேரத்தில் புரஜெக்டர் சூடாகி விடும், கார்பன் ராடுகள் மாற்ற வேண்டும், பிலிம் குவாலிட்டியும் மட்டமாக இருக்கும். அதுபோக சவுண்டு ரீபுரடக்‌ஷனிலும் அடிக்கடி பிரச்சினை வரும். இப்போது அப்படியில்லை. நல்ல குவாலிட்டி புரஜக்டர்,சவுண்டு சிஸ்டம் இருப்பதால் வேலைப் பளு குறைவு. யாரும் இந்த வேலையை இரண்டு மூன்று நாட்களில் கற்றுக் கொண்டு விடலாம்.


கே : ஆப்பரேட்டர்கள் சில காட்சிகளை வெட்டி விட்டார்கள் என்ற முணுமுணுப்பை பல ஆண்டுகளாக கேட்டு வந்துள்ளேன். ஏன் அப்படி?

ப : பெரும்பாலும் பெரிய நடிகர்கள் படங்களுக்கு அப்படிச் செய்வதில்லை. சில படங்களில் தேவையில்லாத பாடல்காட்சிகள் இருக்கும். அது ரசிப்புக்கு உரியதாகவும் இல்லாத நிலையில் வெட்டி விடுவோம். படம் நீளமாக இருந்தால் நான்கு காட்சிகளிலேயே தேவையில்லாத காட்சிகளை கணித்து வெட்டி விடுவோம்.

கே : அதை எப்படி முடிவு செய்வீர்கள்?
ப : தேவையில்லாத பாடல் காட்சி வரும் போது ரசிகர்களிடம் இருந்து ஒருவித அசூசை ஒலி கிளம்பும். கேண்டீனுக்கு சிகரெட் குடிக்க பலர் வெளிவருவார்கள். சக ஆப்பரேட்டர், என் உதவியாளர்கள், தியேட்டர் பணியாளர்கள் போன்றோருடன் ஷோ முடிந்தவுடன் பேசும் போது அது இழுவை, இது இழுவை என்று பேச்சு வரும். அந்த காட்சிகளை வெட்டி விடுவோம். இது பெரும்பாலும் அனுமானத்தில் செய்வதுதான். குறிப்பிட்ட விதிகள் இல்லை.

கே : காட்சி திடீரென தடைப்பட்டாலோ அல்லது மின்சாரம் நின்று போனாலோ ரசிகர்கள் ஆபாசமாக திட்டுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அப்போது உங்கள் மனநிலை?

ப : ஆரம்பத்தில் கோபம் வரும். நான் பதிலுக்கு திட்டிக்கொண்டே இருப்பேன். நாளாக நாளாக அது எரிச்சலோடு நின்று போனது. இப்போது அதுமாதிரி நடைபெறுவது அரிதாகவே இருக்கிறது. முன்னர் கார்பன் ராடு தீர்ந்து போனால் காட்சி மங்கலாகும், சில சமயம் பிலிம் ரோல் அந்து விடும், ஓவர்லேப் ஆகும், வசனம் கட்டாகிவிடும். இந்த சூழ்நிலைகளில் சத்தம் அதிகமாக இருக்கும். இன்றைய சூழல் அப்படியில்லை. பத்தாண்டுகளுக்கு முன்னால் வரையில் மின்சாரம் தடைப்பட்டால் டீசல் ஜெனெரேட்டரை இயக்கி படம் ஓட்ட வேண்டிய சூழல் இருந்தது. அதற்கு குறிப்பிட்ட நேரமாகும். தற்போது தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் ஒரு சுவிட்சிலேயே மாற்றிவிடுகிறோம்.

கே : உங்கள் வருமானம் எப்படி?

ப : சம்பளம் என்று பெரியதாக வராது. தியேட்டருக்கு உள்ளே சிறு கடைகள் வைத்துக் கொள்ள முன்னர் முதலாளிகள் அனுமதித்தார்கள். எனவே சிகரெட், முறுக்கு,கடலை மிட்டாய் குளிர்பானங்கள் கொண்ட கடை ஒன்றையும் நடத்தினேன். இப்போது மொத்த குத்தகையாக கடைகளை விட்டு விடுகிறார்கள். ஸ்லைடு மற்றும் விளம்பரப்படம் போடும் கம்பெனியினர் அவ்வப்போது கவனிப்பதுண்டு. இழுத்துப் பிடித்து ஓட்டும் நிலைமைதான்.

கே : ரசிகர்களின் மனோபாவம் எப்படியிருக்கிறது?

ப : முன்னெல்லாம் 2.30 மணி ஷோ என்றால் 1.30 மணிக்கே மக்கள் வந்துவிடுவார்கள். 2.00 மணிக்கு கவுண்டர் திறந்துவிடும்போது 75 சதவிகித கூட்டம் கூடியிருக்கும். இப்போது 2.15 மணி அளவில் கூட 10, 15 பேர்தான் வருகிறார்கள். சரியான நேரத்துக்குத் தான் எல்லோரும் வருகிறார்கள்.

கே : உங்கள் தியேட்டரில் ஆபாச காட்சிகள் பிரத்யேகமாக இணைக்கப்பட்ட திரைப்படம் வெளியிடும் போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?

ப : மனது சங்கடமாகத்தான் இருக்கும். என் மகனின் நண்பர்கள், மற்றும் மகளின் தோழிகள் ஆகியோர் இதைக் கவனித்து ஏதும் அவர்களிடம் கேட்டுவிடுவார்களோ என பயமாக இருக்கும். என்ன செய்வது?.


முன்னர் ஒவ்வொரு தியேட்டரையும் குறிப்பிட்ட வினியோகஸ்தர்கள் பிடித்து வைத்திருப்பார்கள். அந்த தியேட்டருக்கு படம் தரும் வினியோகஸ்தர்கள் வினியோகிக்கும் படங்கள் சரியில்லாமல் போனாலோ அல்லது அவர்கள் நொடித்தாலோ படவரவு நின்றுவிடும். அப்போது பழைய ஹிட் படங்களைப் போட்டு ஒப்பேற்றுவோம். அது சரிவராத பட்சத்தில் காலைக் காட்சியாக அம்மாதிரிப் படங்களை திரையிட ஆரம்பித்து இப்போது எல்லாக் காட்சியும் அம்மாதிரிப் படங்கள் வெளியிடும் அளவுக்கு பல தியேட்டர்கள் மாறிவிட்டன.

இதற்கு தியேட்டர்காரர்களைச் சொல்லியும் குற்றமில்லை.
தியேட்டர் காம்பவுண்ட் வரி, மின்சாரக் கட்டணம், ஆட்கள் சம்பளம், பராமரிப்பு என அவர்களுக்கும் நிறைய செலவு இருக்கிறதே?.

இப்போது இங்கே மூன்று தியேட்டர்கள் இருக்கின்றன. ஒன்றை சன் பிக்சர்ஸ் மற்றும் முண்ணனி நிறுவனங்கள் பிடித்து வைத்துள்ளன. எங்கள் தியேட்டரை பழைய வினியோகஸ்தர்கள் மற்றும் தற்போது ஓரளவு நல்ல படம் கொடுக்கும் சிலர் பிடித்து வைத்துள்ளார்கள். இன்னொன்றுக்கு யாரும் படம் தருவதில்லை. ஏனென்றால் தரம் குறைந்த வசதிகள். அவர்கள் இப்போது வேறு வழியில்லாமல் அந்தப் படங்களைப் போட வேண்டிய நிலை.

கே : உங்கள் பார்வையில் எந்தப் படத்துக்கு அதிக கூட்டம் வந்துள்ளது?

இந்த 25 வருடங்களை எடுத்துக் கொண்டால் ரஜினி,கமல் படங்களுக்கு நல்ல கூட்டம் வரும். இதில் ரஜினிக்குத்தான் அதிகம். அடுத்த தலைமுறையில் விஜய்,அஜீத்துக்கு கூட்டம் முதல் இரண்டுநாள் வருகிறது. பின் படத்தைப் பொறுத்தே கூட்டம். சூர்யா, விக்ரம் படத்துக்கும் முதல் நாள் கூட்டம் வருகிறது. படம் நல்லாயிருக்குன்னு கேள்விப்பட்டு கூட்டம் கூடின படம் நிறைய இருக்கு.

கே : எந்திரன் வரை வந்துள்ள ரஜினி படங்களில் எந்தப் படத்துக்கு கூட்டம் அதிகம் வந்ததுன்னு நினைக்கிறீங்க?

ப : அண்ணாமலை, பாட்ஷா மற்றும் படையப்பாவுக்குத்தான் அதிக கூட்டம். குறிப்பாச் சொல்லணும்னா படையப்பா படம். 25 நாள் ஓடியும் எந்த ஷோவுக்கும் கூட்டம் குறையவில்லை.

கே : எந்திரன் அதிக தியேட்டர் ரிலீஸ், மற்றும் அதிக கட்டணம் அதனால் கூட்டம் தெரியாம இருக்கலாம் இல்லையா?

ப : இங்கே, இரண்டு தியேட்டரில் வெளியிட்டுள்ளார்கள். இரண்டு தியேட்டர் சேர்த்தும் எப்பவும் வருகிற கூட்டம் தான். இந்த கூட்டத்தைக் கணக்கிட்டாலும் படையப்பாவுக்கு வந்தது நல்ல கூட்டம்.

கே : இந்த தொழிலில் எதிர்காலம் எப்படி இருக்கும்னு கணிக்கிறீர்கள்?

ப : தியேட்டர் வசதியாக இருந்தால்தான் மக்கள் படம் பார்க்க வருவார்கள். பெரிய கம்பெனிகளும் படம் கொடுக்கும். வசதிப்படுத்த முடியவில்லை என்றால் இடிப்பதே நல்லது.


உரையாடி முடித்தவுடன் அருகில் இருந்த கடையில் தேனீர் அருந்திவிட்டு விடைபெற்றேன்.

சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நண்பர் செந்தில் வேலுக்கு இங்கும் நன்றியைப் பதிவு செய்துகொள்கிறேன்.

October 20, 2010

கமலின் அடுத்த மூவ்

கமல்ஹாசன் கலந்து கொள்ளும் விழாக்களைக் கவனித்தாலே அவரின் அடுத்த மூவ் புலப்பட்டுவிடும்.


அவர் கலந்து கொள்ளும், அவர் சம்பந்தப்படாத படங்களின் விழாக்களை இப்படி தரம் பிரிக்கலாம்.

1. கருணாநிதி/ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் போது அவர்களுக்காக அல்லது அவர்களால் நடத்தப்படும் விழாக்கள். இதில் வேறு வழியில்லாமல் கலந்து கொள்ள வேண்டும்.

2. நடிகர் சங்கம், பெப்ஸியின் கீழ் வரும் அமைப்புகள் போன்றவற்றால் நடத்தப்படும் கலை/காசு தேற்றும் விழாக்கள். இதுவும் கட்டாயமே.

3. குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய ஏவிஎம், இளம்வயதில் தொடர் வாய்ப்புக் கொடுத்த பாலசந்தர் மற்றும் பெரிதும் மதிக்கும் சிவாஜி குடும்பம் ஆகியவை தொடர்பாக நடக்கும் விழாக்கள். இதில் கலந்து கொள்ளாவிட்டால் தர்மசங்கடம் நேரும்.

4. கமலுக்கு ஒவ்வொரு சீசனிலும் சில கொள்கை பரப்பு செயலாளார்கள் இருப்பார்கள். அவர்கள் தொடர்பான விழாக்களிலும் கமல் கலந்து கொள்வார். உதாரணத்துக்கு கரணைச் சொல்லலாம். கரணின் கொக்கி, கனகவேல் காக்க ஆகிய படங்களில் விழாக்களில் கலந்து கொண்டதைச் சொல்லலாம்.

இவை தவிர அவர் மேலும் சில விழாக்களில் கலந்து கொள்வார். அவைகளை நன்கு கவனித்தோமானால் அந்த விழாக்கள் எல்லாம் அவர் அப்போது நடிக்கும் படத்தின் அல்லது நடிக்கப்போகும் படத்தின் தயாரிப்பாளர்/இயக்குநர்/முண்ணனி தொழில்நுட்பக்கலைஞர் ஆகியோர் தொடர்புடைய விழாவாக இருக்கும்.

ஷங்கர் இயக்கி, தயாரித்த முதல்வன் படத்தின் வெற்றி விழாவில் அவர் கலந்து கொண்டார். காரணம் அப்போது ஷங்கர், ரோபோ படத்தை கமலின் நடிப்பில் இயக்குவதாக இருந்தது. பின்னர் அது கைவிடப்பட்டது.

படையப்பா பட வெற்றி விழாவில் அவர் கலந்து கொண்டார். காரணம் அதன் இயக்குநர் கே எஸ் ரவிகுமார் அடுத்து கமலின் தெனாலி படத்தை எடுப்பதாக இருந்தது. அதை மேடையிலும் கமல் வெளிப்படுத்தினார்.

“ரஜினிக்கு யாரை வைத்து வேலை வாங்க வேண்டும் என்ற புத்திசாலித்தனம் இருக்கிறது. எனக்கும் அந்த புத்திசாலித்தனம் இருக்கிறது. என் அடுத்த படம் இந்த இயக்குநருடன் தான்”

என்று மேடையில் பேசினார்.

பின்னர் தாணு தயாரிப்பில் வெளியான கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என்ற படத்தின் ஆடியோ வெளியீடு தேவி தியேட்டரில் பிரம்மாண்டமாக நடந்தது. கலந்து கொண்ட எல்லோருக்கும் பட்டாடை கொடுத்திருந்தார்கள். கமல் அதில் சிறப்பு விருந்தினர். காரணம் அப்போது ஆளவந்தான் தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது.

தற்போது கூட மைனா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். காரணம் உதயநிதி ஸ்டாலின் அந்தப் படத்தை வெளியிடுவது. உதயநிதி, கமலின் தற்போதைய ப்ரொட்யூசர்.

இது மாதிரி கமல் கலந்து கொள்ளும் விழாக்களில் கூட ஒரு காரணம் இருக்கும். காரணம் அவர் நேர மேலாண்மையையும், ஆற்றல் மேலாண்மையையும் இரு கண்களைப் போல கருதுபவர்.

காதலா காதலா பட ஷீட்டிங் சமயத்தில் அவர் குங்குமம் பத்திரிக்கைக்கு ஒரு பேட்டியளித்தார். அதில்

“எனக்கு கார் ஓட்டத் தெரியும். அதற்காக நானே கார் ஒட்டிக் கொண்டு போனால் என்னுடைய நேரம் எவ்வளவு வீணாகும். அந்த நேரத்தில் நான் அடுத்து செய்யப் போவதை சிந்தித்தால் எனது ப்ரொடக்டிவிட்டி கூடும். அதனால் தான் நான் ஓட்டுநர் வைத்துக் கொள்கிறேன்”

என்று சொல்லியிருந்தார். அவர் தேவையில்லாமல் நேரத்தை வீணாக்குவதேயில்லை. அவர் சம்பந்தமில்லாமல் ஒரு விழாவில் கலந்து கொண்டால் அதில் ஒரு உள்ளர்த்தம் இருக்கும்.

சமீபத்தில் பரபரப்பாக திரையுலக வட்டாரங்களில் அடிபடும் செய்தி
“ தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. கமல் முதல் ஆளாக சென்று வாழ்த்தியுள்ளார்” என்பது.

காரணமில்லாமல் கமல் அங்கு செல்ல எந்த முகாந்திரமும் இல்லை. தற்போது மன்மதன் அம்பு படம் ஷீட்டிங் முடிந்து அதன் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்த படத்துக்கு அவர் தயாராகி விட்டது போலவே தெரிகிறது.

ஆஸ்கார் ரவிசந்திரனும் தசாவதாரத்தில் ரவிவர்மனின் உழைப்பைப் பார்த்து மாஸ்கோவின் காவிரி என்னும் படத்தை இயக்கக் கொடுத்து, அவுட்புட்டை பார்த்து நொந்து போய், அந்தப் படம் தன் பேனரில் வெளியானால் ஆஸ்கார் பிலிம்ஸின் குட்வில் போய்விடும் என்று ஒரு டம்மி கம்பெனியைத் தொடங்கி, அதன் மூலம் வெளியிட்டு தோள் பட்டை வரை சுட்டுக்கொண்டார்.

மேலும் அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் தியேட்டர்களுக்கு படங்களை தொடர்ந்து பீட் பண்ண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

எனவே ஆஸ்கார் தயாரிப்பில் கமல் படம் என்னும் அமைப்பு ஒன்று தெரிகிறது.

அது மருதநாயகமாய் இருக்குமோ என்னும் வதந்தியும் மீடியாவில் உலவுகிறது.

கமல் தேவர் மகன் படம் தொடர்பான ஒரு பத்திரிக்கைப் பேட்டியில்

“இந்தப் படத்தில் வரும் சிலம்ப சண்டைக்காட்சி (சுண்ணாம்பு மூலம் பொட்டு வைப்பது) மருதநாயகத்துக்காக நான் கன்ஸீவ் பண்ணியது”

என்று சொல்லியிருந்தார். எனவே கிட்டத்தட்ட 20 ஆண்டு காலமாக கமலுக்கு கனவாக இருப்பது மருதநாயகம்.

மதராச பட்டிணம் படத்துக்கு கிடைத்து இருக்கும் வரவேற்பும் ஆஸ்கார் பிலிம்ஸையும், கமலையும் மருதநாயகத்தை நோக்கி மனம் திருப்ப வைத்திருக்கலாம்.

எப்படியோ இம்முறையாவது அவர் கனவு நிறைவேறட்டும். இல்லையெனில் ஒரு நல்ல பொழுது போக்குப் படம் இவர்கள் கூட்டணியில் உருவாகட்டும்.


நிறைவேறாத காதல் தான் காவியமாகிறது. சாத்தியப்பட்ட காதல் சடங்காகி விடுகிறது. அதுபோலவே கமலுக்கு மருதநாயகம் நிறைவேறாத காதலாகவே இருக்கட்டும் என்பதே என் ஆசை. இவ்வளவு நாள் எதிர்பார்த்து விட்டு கடைசியில் இதைத்தானா? என்று மனம் வெதும்பும் படி ஆகிவிடக் கூடாது என்பதே என் எண்ணம்.

October 19, 2010

ஜெயலலிதா மதுரை கூட்டம் – நேரடி கவரேஜ்

காலை ஐந்து ஆறு மணி அளவில் இருந்தே திருமங்கலம் ஏரியா டீக்கடைகளில் திருவிழா கூட்டம். டீயும் சிகரெட் விற்பனையும் கொடிகட்டிப் பறந்தது. கன்னியாகுமரி,திருநெல்வேலி உட்பட பல ஊர்களில் இருந்தும் கட்சியினர் வேன்களில் வந்திருந்தனர்.

மகிந்திரா போன்ற வேன்களே அதிகம் இருந்தன. சொகுசு வாகனங்கள் குறைவு. ஸ்கார்பியோக்களும் அதிகம்.

நான் கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு சென்றது கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் சார்பாக வந்த வேனில்( லிஃப்ட் கேட்டு). அந்த வேன் பொறுப்பாளரிடம் பேசியபோது கிடைத்த தகவல்கள்.

முதல் நாள் இரவு புரோட்டா ஆம்லேட், காலை டீ, சிகரெட் பின்னர் டிபன், மதியம் மற்றும் இரவு சாப்பாடு வரை அவர் பொறுப்பு. ஆனால் ஒரு ஆளுக்கு என்று தனியாக பணமோ, மதுபானமோ தர தேவையில்லை.

மாவட்டத்துக்கு இத்தனை வேன்கள் என்று டார்கெட். அதை ஒன்றியம் வாரியாக பிரித்து, பின் கிளைகழகம் வரை பிரித்து டார்கெட் அச்சீவ் பண்ணியுள்ளார்கள்.

வந்தவர்கள் அனைவருமே கட்சிக்காரர்கள் தான்.

தற்போது மாணவரணி செயலாளராக இருக்கும் ஆர் பி உதயகுமாருக்கு நல்ல மவுசு என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் எததனை நாளைக்கு அது இருக்கும் என்ற கேள்வியும் அவர்களிடம் இருந்தது.

கூட்டம் நடந்த இடத்துக்குச் சென்ற போது பெண்களையே காண முடியவில்லை. தீப்பொறி ஆறுமுகம் மீட்டிங்கிலும், சபரி மலையிலும் தான் திரும்பிய பக்கமெல்லாம் ஆண்கள் இருப்பார்கள். நேற்றும் அதுபோலத்தான் கூட்டம் இருந்தது.
83,84 ஆம் ஆண்டு வாக்கில் ஜெயலலிதா எங்கள் ஊருக்கு வரும்போதெல்லாம் சரி பாதி பெண்கள் கூட்டம் இருக்கும். இப்போது அது மிஸ்ஸிங். ஒருவேளை கூட்டம் நடைபெற்ற நேரம், இடம் ஆகியவை காரணியா இல்லை டிவியில் மூழ்கி விட்டார்களா இல்லை போயி என்ன ஆகப் போகுது என்ற மனநிலையா இல்லை அரசியல் ஆர்வம் குறைந்து விட்டதா என பல கேள்விகள்.

மேலும் பொது மக்கள் என்ற ஜாதியினரையும் அங்கே நான் பார்க்கவில்லை. பார்த்த எல்லோருமே கட்சியினர் தான். இதில் பெண்களை எதிர்பார்ப்பது என்பது ப்ளெக்ஸ் இல்லாத மதுரை வீதிகளை எதிர்பார்ப்பதற்குச் சமம்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை தற்போது பிளக்ஸ் வைத்துத் தானே தமிழை வளர்க்கிறது. இந்தக் கூட்டத்திலும் பல அட்டகாச பிளக்ஸ் வசனங்கள். அன்னை மீனாட்சியே தொடங்கி அம்மா வந்தாச்சு பூமி குளிர்ந்தாச்சு வரை வித வித வசனங்கள். ஆனால் மேன் ஆப் தி மேட்ச் கிரம்மர் சுரேஷ் என்பவர்தான். (முன்னர் பி டி ஆர் பழனிவேல்ராஜனின் தொண்டராக இருந்து அழகிரியால் அதிமுகவிற்க்கு வந்தவர்). இவர் வைத்த உலக செயலாளர்களுக்கெல்லாம் செயலாளரே மிகப்பெரிய ஹிட்.

கூட்டத்தில் பெரும்பாலோனோர்கள் ஜெயலலிதா பேசியதை கவனித்ததாகவே தெரியவில்லை. காலையில் இருந்தே வெயிலிலும், புழுக்கத்திலும் இருந்ததால் உண்டான களைப்பு மற்றும் பேசுபொருள் தெரிந்திருந்ததால் ஏற்பட்ட அசுவராசியம் போன்ற காரணங்கள் என்று நினைக்கிறேன். கேமரா திரும்பும்போது மட்டும் உற்சாகமாக கையாட்டினார்கள்.

பெரும்பாலும் குழு குழுவாகவே அமர்ந்திருந்தார்கள் அல்லது நின்றிருந்தார்கள். உட்கட்சிப் பேச்சுக்கள் அவர்களிடையே பிரதானப் பங்கு வகித்தன. இளைஞர் பாசறை செயலாளர், தொகுதி செயலாளார் ஆகியோர் உற்சாகமாக இருப்பதாக அவர்கள் பேச்சில் இருந்து தெரியவந்தது.

கூட்டம் முடிந்து வீட்டிற்க்கு கோவை மாவட்டம் வேலுமணி எம் எல் ஏ அவர்கள் ஏற்பாட்டில் வந்திருந்த வேனில் லிஃப்ட் கேட்டு திரும்பினேன். அந்த வேனின் பொறுப்பாளர் வட மாவட்டங்களில் இருந்து குறைவான வாகனங்களே வந்திருந்ததாகவும், மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இருந்துதான் அதிக வாகனங்கள் வந்திருந்ததாகவும் தெரிவித்தார்.

ரிங் ரோடில் இருந்த பல கல்லூரிகளில் விடுமுறை அறிவித்திருந்தார்கள். பல பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே வகுப்புகளை முடித்து விட்டிருந்தார்கள். சில தனியார் அலுவலகங்களும் வேலை நேரத்தை மாற்றி அமைத்திருந்தன. பொதுமக்களும் தங்கள் நடமாட்டத்தை குறைத்திருந்தனர்/மாற்றியமைத்திருந்தனர்.

பாபர் மசூதி/ராம ஜென்ம பூமி தீர்ப்பின் போதும் மக்களிடம் இதே அணுகுமுறை இருந்தது. மக்கள் புரோ ஆக்டிவ்வாக மாறத் தொடங்கியுள்ளதையே இது காட்டுகிறது. மேலும் பல கல்வி/வியாபார நிறுவனங்கள் அரசியல்வாதிகளுடையதாக இருப்பதும் இதற்கு காரணாமாய் இருக்கலாம்.

இதனால் கூட்டம் நடைபெறும்போது அந்தப் பகுதி தவிர மதுரை மிக இயல்பாகவே இருந்தது. கூட்டம் முடிந்த பின்னர் எல்லா வாகனங்களும் ஒரு சேர கிளம்பியதால் மட்டுமே டிராஃபிக் ஜாம் ஆனது.

நான் கவனித்த வரையில் கூடிய கூட்டத்தை பார்த்தால் இது ஒரு கட்சி மாநாடு போலவே நடந்தது. வந்த கூட்டததை ஆட்சிக்கு எதிரான மக்களின் எழுச்சி என்று சொல்ல வாய்ப்பே இல்லை.

ஆனால் அதிமுக விற்கு இவ்வளவு நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்பது திமுகவிற்கு கவலை அளிக்கக்கூடிய விஷயம் தான். ஒவ்வொருவரும் ஐம்பது ஓட்டைக் கொண்டு வந்தாலே அதிமுகவிற்கு பெரிய பலமாகிவிடும். மேலும் இவர்களுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுகவிற்கு தலைவலிதான்.

October 15, 2010

கம்பெனி நடிகர்கள்

கம்பெனி நடிகர்கள் என்றவுடன் நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது பாய்ஸ் கம்பெனி முதலான நாடகக் கம்பெனி நடிகர்கள் தான். எம்ஜியார், சிவாஜி கணேசன் போன்றவர்கள் கூட இம்மாதிரி கம்பெனி நடிகர்களாக இருந்து வந்தவர்கள் தான். நடிப்பில் அசத்தி மக்கள் மனதை வசீகரித்துவிட்டால் கம்பெனி நடிகர் என்னும் வட்டத்தில் இருந்து தப்பித்து ஸ்பெஷல் நாடக நடிகர், சினிமா நட்சத்திரம் என முன்னேறிவிடலாம்.

அதன் பின்னர் தமிழ்சினிமாவில் மார்டன் தியேட்டர்ஸ், ஜெமினி போன்ற நிறுவனங்கள் ஆண்டுக்கணக்கில் நடிகர் நடிகைகளை ஒப்பந்தம் செய்து மாத சம்பளம் கொடுத்து வேலை வாங்கினார்கள்.

சில இயக்குநர்கள் தாங்கள் அறிமுகப்படுத்தும் நாயக/நாயகியரை சில படங்கள் வரை தொடர்ந்து பணிபுரிய வேண்டும் என கேட்டுக் கொள்வதும்/நிர்பந்திப்பதும் உண்டு. பாலசந்தர் நடிகர்களிடத்திலும், பாரதிராஜா நடிகைகள் இடத்திலும் இது போல ஒப்பந்தம் போட்டுக் கொள்வதுண்டு. எனவேதான் பாலசந்தர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜ், விவேக் என பலரிடம் தொடர்ந்து வேலை வாங்க முடிந்தது (விதிவிலக்காக இதில் சரிதாவையும் சேர்த்துக் கொள்ளலாம்) . பாரதிராஜாவோ ரேவதி,ராதிகா,ராதா போன்றோரை தொடர்ந்து உபயோகப் படுத்த முடிந்தது. (விதிவிலக்காக ராஜா வை சேர்த்துக் கொள்ளலாம்).

மணிரத்னம், பாலா ஆகியோரிடத்திலும் இந்தத் தொடர்ச்சியைப் பார்க்கலாம். மணிரத்னம் அரவிந்த்சாமி மற்றும் மாதவனை தொடர்ந்து பயன்படுத்தினார். பாலாவும் விக்ரம்,சூர்யா மற்றும் ஆர்யாவிடம் உரிமை எடுத்துக் கொண்டது உண்டு.

இவர்கள் எல்லாம் நட்சத்திரங்கள். ஆனால் நடிகர்கள் என்னும் நிலையில் இருந்து தொடர்ந்து ஒரு கம்பெனியின் எல்லாப் படங்களிலும் தலை காட்டுபவர்களை கம்பெனி நடிகர்கள் என்று செல்லமாகக் குறிப்பிடுவார்கள். அப்படி அழைக்கப் படும் கம்பெனி நடிகர்களைப் பற்றி பார்ப்பதே இந்தப் பதிவு.


முதலில் கவிதாலயா நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம். இந்நிறுவனத்திற்க்கென்றே பிரத்யேக நடிகர்கள் உண்டு. அவர்களில் முக்கியமானவர் கவிதாலயா கிருஷ்ணன். எம் டெக் பட்டதாரியான (அந்தக் காலத்திலேயே!) இவர் கவிதாலயாவின் எல்லாப் படங்களிலும் இருப்பார், அது யார் நடித்ததாக இருந்தாலும் சரி, யார் இயக்கியதாக இருந்தாலும் சரி. மற்ற கம்பெனிப் படங்களில் இவர் அரிதாகவே தலை காட்டுவார். இதற்கெல்லாம் உச்சமாக இவர் கவிதாலயாவின் துணை நிறுவனமான மின்பிம்பங்களின் அனைத்து சீரியல்களிலும் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். ராஜாவை விட ராஜாவின் மேல் விசுவாசம் என்பதற்கு இவர்தான் உதாரணம்.

நாசர், சார்லி போன்றவர்களும் கவிதாலயாவின் கம்பெனி நடிகர்களாக இருந்தாலும் அதை விட்டு நாசர் முழு அளவிலும், சார்லி பகுதியாகவும் தங்கள் திறமையினால் தனித்து நின்றுவிட்டார்கள்.

அடுத்ததாக சூப்பர் குட் பிலிம்ஸ். இவர்கள் குறுகிய காலத்தில் ஐம்பது படங்களை தயாரித்தவர்கள். பெரும்பாலும் லோ பட்ஜெட் படங்கள். அதனால் தான் அலுவலக நிர்வாகிகள், உதவி இயக்குநர்கள் ஆகியோரை தொடர்ந்து தங்கள் படங்களில் பயன்படுத்திக் கொள்வார்கள். சிங்கமுத்து, லட்சுமணன் போன்ற நடிகர்கள் இவர்களின் எல்லாப் படத்திலும் சிறு சிறு கேரக்டர்களின் வருவார்கள்.

விசுவின் படங்களில் மறைந்த கிஷ்மு (வேறு வழியில்லை, தம்பி), திலீப் போன்றோரை தொடர்ந்து பார்க்கலாம்.

ராஜ்கமல் பிலிம்ஸ்ஸை பொறுத்தவரை சந்தான பாரதி,அஜய் ரத்னம் பல படங்களில் தலை காட்டினார்கள். அதுபோல் பி வாசுவின் படங்களில் பாண்டு, மார்க்கண்டேயன் போன்றோரும், தற்போது கே எஸ் ரவிக்குமாரின் படங்களில் அனுமோகன், மனோபாலா போன்றோரையும் தொடர்ந்து பார்க்கலாம்.

இம்மாதிரியான கம்பெனி நடிகர்களின் தொடர் வாய்ப்புக்கு காரணம் என்ன?

1. முதல் காரணம் செண்டிமெண்ட். ஒரு வெற்றிப்படத்தில் ஒருவர் தலை காட்டிவிட்டால் அவர் இதிலும் இருக்கட்டுமே என்று கம்பெனி ஆட்கள் அனைவருமே நினைப்பார்கள். எடுத்துக்காட்டாக நாகராஜ சோழன் என்னும் நடிகர் ஒரு கால கட்டத்தில் நடித்த படங்கள் எல்லாமே நூறு நாட்கள். அவரை ஒரு காட்சியிலாவது நடிக்க வைக்க பல இயக்குநர்கள் விரும்பினார்கள்.

2. ஒரு நிறுவனத்தில் இருக்கும் வேலைகளை இழுத்துப் போட்டு செய்பவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புக் கொடுக்கவே தலைமை விரும்பும். அதுபோல் படப்பிடிப்பில், வணிகத்தில் என ஆர்வம் காட்டும் நபர்களை தொடர்ந்து சினிமாவில் உபயோகப்படுத்த நினைப்பார்கள்.

3. சில இயக்குநர்களுக்கு தங்களுக்கு கதை விவாதத்தில் உதவுபவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகிவிடும். அதனாலேயே சில இயக்குநர்களின் படங்களில் சிலர் தொடர்ந்து தலை காட்டுவது உண்டு.

4. சில நடிகர்கள் வலுக்கட்டாயமாக சென்று தொடர்ந்து வாய்ப்புக் கேட்பதும் உண்டு. நாமளே இவனுக்கு வாய்ப்புத் தராட்டி யார் தரப்போறா? என்ற அனுதாபத்தில் அவர்களும் வாய்ப்பளிப்பதுண்டு. எங்கள் ஊரில் இருந்த துணை நடிகர் ஒருவர் தொடர்ந்து சங்கிலி முருகன் படங்களில் ஒரு சீனிலாவது நடித்து விடுவார். அதற்குக் காரணம் பட பூஜையன்றே அட்டெண்டென்ஸ் கொடுத்து விடுவதுதான்.

5. சில இயக்குநர்களுக்கு ஒன் டேக் ஆர்டிஸ்ட் எனப்படும் தப்புச் செய்யாமல் நடிக்கும் நடிகர்களைப் பிடிக்கும் நேர/பண விரயத்தைத் தடுக்க அவர்களை அழைத்து இந்த கேரக்டரைச் செய் என்று சொல்லி விடுவார்கள்.

ஆனால் இப்படி கம்பெனி ஆர்டிஸ்ட் என அழைக்கப் படுவதில் அவர்களுக்கு உண்மையிலே உவப்பாக இருக்குமா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லிவிடலாம். ஒவ்வொருவரும் திரை உலகத்தில் நட்சத்திரமாக மின்ன வேண்டும் என்ற பெருங்கனவுடனே வந்தவர்களாய்த்தான் இருப்பார்கள். ஒரு கட்டத்தில் கனவு கலைந்து கிடைத்த இடத்தில் அதிருப்தியுடந்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

July 02, 2010

சூர்யா-கார்த்தி இதில் யார் அம்பிகா? யார் ராதா?

தமிழ்சினிமாவில் நடிப்புத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் பல சகோதர, சகோதரிகள் திறம்பட பணியாற்றியுள்ளார்கள். நடிப்புத்துறையில் உள்ளவர்கள் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களைக் காட்டிலும் மக்களிடம் எளிதில் சென்று சேர்ந்துள்ளார்கள்.

நடிகர்களை எடுத்துக் கொண்டால்

எம்.ஜி.சக்கரபாணி – எம்.ஜி.ராமச்சந்திரன்

மு.க.முத்து-மு.க ஸ்டாலின் (திரைப்படம் : ஒரே ரத்தம்)

எம் ஆர் ஆர் வாசு – எம் ஆர் ராதாரவி

சந்தான பாரதி – ஆர் எஸ் சிவாஜி

சாருஹாசன் - சந்திரஹாசன் - கமல்ஹாசன்

ராம்குமார் (அறுவடை நாள்) – பிரபு

டாக்டர் ராஜசேகர் – செல்வா

பிரபுதேவா-ராஜு சுந்தரம்-நாகேந்திர பிரசாத்

சூர்யா – கார்த்தி

அஜய் கிருஷ்ணா - விஷால்

ஜித்தன் ரமேஷ் – ஜீவா


நடிகைகளை எடுத்துக் கொண்டால்


வரலட்சுமி-மாதுரி

பண்டரிபாய் - மைனாவதி

சௌகார் ஜானகி - கிருஷ்ணகுமாரி

சந்தியா - வித்யாவதி

லலிதா-பத்மினி-ராகினி

கே ஆர் விஜயா – கே ஆர் வத்சலா - கே ஆர் சாவித்திரி

ஜெயசுதா-சுபாஷினி

ராஜ்கோகிலா - ராஜ்மல்லிகா (மீனாவின் தாய்)

ஜோதிலட்சுமி - ஜெயமாலினி

ரேகா - ஜிஜி (நினைவெல்லாம் நித்யா)

ராதிகா-நிரோஷா

அம்பிகா-ராதா

இந்திரா - ராசி

கல்பனா – ஊர்வசி – கலாரஞ்சனி

அருணா – நந்தினி (ஆவாரம் பூ)

சரிதா - விஜி

பானுப்பிரியா-நிஷாந்தி

டிஸ்கோ சாந்தி – லலிதகுமாரி

என் உயிர் தோழன் ரமா – லதா

ஷகிலா - ஷீத்தல்

அனுஷா - ராகசுதா

நக்மா-ரோஷினி-ஜோதிகா

கவிதா - வனிதா - பிரீதா - ஸ்ரீதேவி (விஜயகுமார்)

சிம்ரன் – மோனல் (இதில் சில குழப்பங்களும் உண்டு,
மோனலை சித்தி பெண் என்றும் கூறுவார்கள்)

மீரா ஜாஸ்மின் - ஜெனி

ஷாலினி - ஷாமிலி




(சகோதரிகள் பட்டியல் பதிவர்கள் கிருஷ்குமார், உண்மைத்தமிழன்,இந்தியன் ஆகியோர் பின்னூட்டங்கள் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. நன்றிகள் பின்னூட்டத்தில் கலக்குவோர் அனைவருக்கும்).



எனப் பலர் தமிழ்சினிமாவில் இடம் பிடித்திருக்கிறார்கள். (பலர் விடுபட்டிருக்கலாம்)


இந்த வரிசையைப் பார்த்தோமென்றால்

1. சகோதரர்கள்/சகோதரிகளில் ஒருவர் எட்டிய உச்சத்தை/அடைந்த புகழை இன்னொருவர் அடைந்ததில்லை.

2. அப்படி இருவரும் சமமான இடத்தைப் பிடித்திருந்தார்கள் என்றால் அவர்கள் அத்துறையில் முண்ணனியில் இருந்திருக்க மாட்டார்கள்.

3. சமமான புகழைப் பெற்று முண்ணனியில் இருந்திருந்தால் அது வேறு வேறு காலகட்டமாக இருந்திருக்கும். (நக்மா – ஜோதிகா).


இந்த விதிக்கு உட்படாமல் ஒரே நேரத்தில் சம புகழை அடைந்தவர்கள் எனில் அது அம்பிகா-ராதா சகோதரிகள்தான். 80களின் துவக்கத்தில் ஸ்ரீதேவி இந்திக்கு சென்று விட, ஸ்ரீபிரியா,ஸ்ரீவித்யா குண்டாகி விட, உருவான வெற்றிடத்தை அம்பிகா,ராதா மற்றும் மாதவி ஆகியோர் நிரப்பினார்கள்.

ராதா பாயும்புலி, தூங்காதே தம்பி தூங்காதே என ரஜினி மற்றும் கமலுடன் ஏ வி எம்மின் அடுத்தடுத்த படங்களில் நடித்தால் அம்பிகா அடுத்த சுற்றில் மிஸ்டர் பாரத், உயர்ந்த உள்ளம் என்று அதே காம்பினேஷனில் கலக்குவார்.

ராதா நான் மகான் அல்ல, ஒரு கைதியின் டைரி என ஒரே ஆண்டில் ரஜினி,கமலுடன் ஜோடி சேர்ந்தால், நான் சிகப்பு மனிதனில் ரஜினியுடனும், காக்கி சட்டையில் கமலுடனும் அம்பிகா ஜோடி சேர்ந்த படங்கள் ஒரே நாளில் வெளியாகின.

சிவாஜி கணேசனுடன் அம்பிகா வாழ்க்கையில் (திரைப்படம்) நடித்தால், ராதா முதல் மரியாதையில் ஜோடி சேருவார்.

ரஜினி காந்துடன் எங்கேயோ கேட்ட குரல், கமல்ஹாசனுடன் காதல் பரிசு மற்றும் மோகனுடன் இதயகோயில் என இருவரும் ஒரே நாயகனுக்கு ஜோடியாக நடித்ததும் உண்டு. வெள்ளை ரோஜா போன்ற படங்களில் தனித்தனி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்ததும் உண்டு.

தற்போது தமிழ்சினிமாவில் அப்படி வணிக மதிப்புடனும், நடிப்பு ரீதியாகவும் புகழ் அடைந்து கொண்டிருப்பவர்கள் சூர்யாவும், கார்த்தியும். சூர்யா அயன்,ஆதவன் மற்றும் சிங்கம் என கலக்க, கார்த்தியும் பருத்திவீரன்,ஆயிரத்தில் ஒருவன்,பையா என தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

இருவரது அடுத்தடுத்த படங்களும் பெரிய நிறுவனங்களால் (தற்போதைய சூழ்நிலையில்) வாங்கப் பட்டிருக்கின்றன. இதற்கெல்லாம் உச்சமாக சன் பிகஸர்ஸ் எந்திரனை அடுத்து தானே தயாரிக்கும் இரண்டாவது படத்தில் இருவரையும் நடிக்க கேட்டிருக்கிறார்கள் என்னும் செய்தி. இது அவர்களின் வணிக மதிப்பை உறுதிப் படுத்துகிறது.

80களின் ஆரம்பத்தில் வாலிப வயதில் இருந்தவர்களுக்குத் தெரியும் அம்பிகாவை விட, ராதாவுக்கு மவுசு ஒரு படி அதிகம் என்பது. அப்போதைய இளைஞர்களின் கனவுக்கன்னி ராதா தான்.

ராதாவின் அறிமுகப்படமான அலைகள் ஓய்வதில்லையில் ராதாவை வம்புக்கு இழுத்து கார்த்திக் பாடும் பாடல் ”வாடி என் கப்பக் கிழங்கே”. இதை எழுதியவர் கங்கை அமரன். அவரிடம் இந்தப் பாடல் குறித்து ஒருவர் கேட்ட போது அவர் சொன்னது இது.

”பொதுவா கும்முன்னு இருக்குற பொண்ணுகளை கிழங்கு மாதிரி இருக்கான்னு கிராமப் புறங்கள்ல சொல்லுவாங்க, ராதாவும் அப்படித்தான் இருந்தாங்க. அவங்க நேட்டிவ் கேரளா, கேரளாவுல கப்பக் கிழங்கு தான பேமஸ். அதுதான் வாடி என் கப்பக் கிழங்கேன்னு எழுதுனேன். என்றார்.

இது அப்போது எல்லோருடைய கருத்தும் தான்.

அம்பிகா திருமணத்துக்குப் பின் விவாகரத்து, மறுமணம், கேரக்டர் ரோல், காமெடி ரோல், சின்னத்திரை என தன் கெத்தை விட்டு விட்டார்.

ஆனால் ராதாவோ ராஜசேகரன் நாயரை திருமணம் செய்து கொண்டதோடு சரி, மீடியாவில் இருந்து விலகி விட்டார். தற்போது தன் பெண்ணுடன் திரும்பி வந்திருக்கிறார். வேறு எதிலும் தலைகாட்டி தன் கெத்தை இறங்கிவிடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். அக்கால இளைஞர்களின் காணாமல் போய்விட்ட கனவு தேவதையாகவே இன்னும் இருக்கிறார்.

அது போல சூர்யாவா, கார்த்தியா யார் முந்தப் போகிறார் என்பது சில ஆண்டுகளில் தெரிந்துவிடும்.

அம்பிகா,ராதாவுக்கு நிழலில் கணவராக நடித்த சிவகுமார் நிஜத்தில் சூர்யா-கார்த்திக்கு தந்தை என்பது இதில் ஒரு சுவராஸ்யமான ஒற்றுமை.

June 29, 2010

1998 ஆம் ஆண்டின் திரைப்படங்கள் – ஒரு பார்வை

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற சட்டம் இல்லாமலேயே அழகழகான தமிழ்ப் பெயர்களில் திரைப்படங்களுக்கு பெயர் சூட்டிய ஆண்டு இந்த ஆண்டுதான்.

கண்ணேதிரே தோன்றினாள், மறுமலர்ச்சி, தினந்தோறும், சொல்லாமலே, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், இனியெல்லாம் சுகமே, துள்ளித் திரிந்த காலம், இனியவளே, கண்களின் வார்த்தைகள், ப்ரியமுடன், நிலாவே வா, என்னுயிர் நீதானே மற்றும் உயிரோடு உயிராக என நல்ல தலைப்புகளுடன் மென்மையான படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்தன.

அதே போல முழுநீள நகைச்சுவைத் திரைப்படங்களும் இந்த ஆண்டில் அதிக அளாவு வெளிவந்தன.

உதவிக்கு வரலாமா, நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா, அரிச்சந்திரா, கோல்மால், கவலைப்படாதே சகோதரா, கும்பகோணம் கோவாலு மற்றும் கல்யாண கலாட்டா என நகைச்சுவையை மையமாகக் கொண்ட பல படங்கள் இந்த ஆண்டு வெளியாகின.

இந்த ஆண்டு ஆக்‌ஷன் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களை ஏமாற்றிய ஆண்டாகும்.

அஜீத்தும் விஜய்யும் ஆக்‌ஷன் ஹீரோக்களாக பரிமளிக்காத நேரம். விக்ரம் அப்போதுதான் மொட்டையடித்துக் கொண்டு சேதுவாகிக் கொண்டிருந்தார் வரப்போகும் வசந்தத்தை எதிர்பார்த்து. சூர்யா சினிமா என்றால் என்ன என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். சத்யராஜ் பீல்ட் அவுட். கார்த்திக் ரொமாண்டிக்கான காதல் கலந்த லைட்டான கதைகளை மட்டும் பண்ணிக் கொண்டிருந்தார். பிரசாந்த் அன்றைக்கும் இன்றைக்கும் என்ற பேச்சே இல்லாமல் எப்போதும் இப்படித்தான் என்று இருந்தார்.

கமல்ஹாசன் அவ்வை சண்முகி, மற்றும் சாக்‌ஷி 420 யின் வெற்றிக்குப் பின் மருதநாயகத்தை தொடங்கி, முடியாமல் பெப்ஸி பிரச்சினையில் நுழைந்து, வேறு வழியில்லாமல் காதலா காதலா படத்தைத் தொடங்கி வெளியிட்டார்.


அப்போதைய நிலைமைக்கு ஆக்‌ஷன் ஹீரொக்கள் என்றால் ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார் மற்றும் அர்ஜூன் தான். இதில் ரஜினிகாந்த் படையப்பாவை படைக்கும் ஆயத்தங்களில் இருந்தார். விஜயகாந்தோ தர்மா, உளவுத்துறை, வீரம் விளைஞ்ச மண்ணு என தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் வழக்கத்தையே ஒழிக்கப் பாடுபட்டுக்கொண்டிருந்தார்.

அர்ஜூன் கே எஸ் ரவிகுமாருடன் இணைந்து கொண்டாட்டம் என்ற ஆக்‌ஷனும் இல்லாத காமெடியும் இல்லாத இடைநிலைப் படத்தைக் கொடுத்தார். தாயின் மணிகொடி என்ற வழக்கமான தேச பக்தி படமும் அர்ஜூன் நடிப்பில் வெளியானது. ஆனால் அப்படம், படத்தின் கதாநாயகியான நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவான நிவேதாவுக்காக மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது. (படத்தைத் தொடர்ந்து பெங்களூரில் அவர் தற்கொலை செய்து கொண்டார் (பெரிய இடத்து விவகாரம்)).

ராஜ்கிரண் வீரத்தாலாட்டு, பொன்னு விளையற பூமி என படம் பார்க்க வந்தவர்களை புண்ணாக்கிக் கொண்டிருந்தார்.

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்த நட்புக்காக மட்டுமே இந்த ஆண்டில் வெற்றியைப் பெற்ற ஒரே ஆக்‌ஷன் படம். இதிலும் செண்டிமெண்ட் கொஞ்சம் தூக்கல்தான். வின்செண்ட் செல்வா இயக்கத்தில் விஜய் நடித்த ப்ரியமுடன் ஓரளவு ஆக்‌ஷன் ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்த ஆண்டில் வெளியான சில திரைப்படங்களைப் பற்றிய ஒரு பார்வை.


மறுமலர்ச்சி


மதுரை, நெல்லை,கோவை மற்றும் சென்னை வட்டாரப் படங்களே வந்து கொண்டிருந்த காலத்தில் தென் ஆற்காடு வட ஆற்காடு மாவட்ட கிராமத்தை களமாகக் கொண்டு வந்த படம் இது (முதல் படமென்றும் சொல்லலாம்). முதலில் ராசு படையாச்சி என்னும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் மறுமலர்ச்சி என மாற்றப்பட்டது. அதேபோல் முதலில் விஜயகாந்த் நாயகன் வேடத்துக்குப் பேசப்பட்டு பின்னர் மம்மூட்டி நாயகனாக நடித்தார். பாரதி இயக்கம், எஸ் ஏ ராஜ்குமார் இசை. இப்பட ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான், அப்போது ராசு படையாச்சி என்னும் பெயருக்காகவே எந்த தமிழ் கதாநாயகனும் நடிக்க மறுக்கிறார்கள் என ஆவேசப்பட்டார். பின்னர் அவர் ஆற்காடு மாவட்ட பின்புலத்தில் பல படங்களை இயக்க இப்படம் ஒரு தூண்டுகோலாக அமைந்தது.


கோல்மால்


அருமையான முழுநீள நகைச்சுவைத் திரைப்படம். நாயகன் செல்வா, நாயகி மோனிகா நெருக்கருக்குப் பதில் வேறு நல்ல மார்க்கெட் வேல்யு உள்ளவர்கள் நடித்திருந்தால் உள்ளத்தை அள்ளித் தா அளவுக்கு பேசப்பட்டிருக்கும். ஏராளாமான திருப்பங்களைக் கொண்ட நகைச்சுவைப் படம். ஸ்க்ரிப்ட் பலமாக இருந்தாலும் காஸ்டிங் சரியில்லாவிட்டால் படம் ரீச் ஆகாது என நிரூபித்த படம்.


நட்புக்காக


இப்படத்தின் பிரிவியு பார்த்து விட்டு ரஜினி, கே எஸ் ரவிகுமாரிடம் கேட்டது “ இந்த மாதிரி கதையெல்லாம் ஏன் என்கிட்ட சொல்ல மாட்டேங்கிறங்க?”. படம் தெலுங்கில் சிரஞ்சிவி நடிக்க ”சினேகம் கோசம்” என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது.



தினந்தோறும்/துள்ளித்திரிந்த காலம்


இரண்டு படங்களுமே ஒத்த சாயல் கொண்ட படங்கள். வேலை இல்லாத் திண்டாட்டத்தையும், இளைஞர்களின் பொறுப்பின்மையையும் களமாகக் கொண்டு வெளிவந்த படங்கள். தினந்தோறும் படம் இயக்குநர் நாகராஜனின் காட்சி அமைப்புகளாலும், வசனத்தாலும் பேசப்பட்டது. பின்னர் இயக்குநர் நாகராஜன் குடிக்கு அடிமையாகி, தற்போது மீண்டு வருவதாகத் தகவல்.


சொல்லாமலே

தாழ்வு மனப்பான்மையை அடிப்படையாக வைத்து வெளிவந்த படம். ஆனால் கிளைமாக்ஸில் நாக்கை அறுப்பதால் அதுவே பல ஊடகங்களால் முன்னிலைப் படுத்தப்பட்டது. இயக்குநர் சசிக்கு து முதல் படம். பின்னர் அவர் ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ என வெரைட்டியான படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் தமிழில் அவருக்கு நிலையான இடம் இல்லாமல் இருப்பது வேதனையான ஒன்று.


காதல் மன்னன்


இயக்குநர் சரணின் முதல் படம். இன்னொருவருக்கு நிச்சயித்த பெண்ணை காதலித்து மணக்கும் ரொமாண்டிக் ஹீரோ வேடத்தில் அஜீத். இம்மாதிரி தமிழில் வந்த முதல் படம் என்றும் சொல்லலாம். (தமிழ் – தில்வாலே லே துனியா.......). படத்தின் இணை இயக்குநர் விவேக் (பாலசந்தரின் சிஷ்யர்கள்). பின்னர் இவருக்கும் சரணுக்கும் முட்டிக் கொண்டது. மெஸ் ஓனராக எம் எஸ் விஸ்வனாதனை முதன் முதலில் நடிக்க வைத்திருந்தார்கள். நாயகி மானு கலாசேத்திரா மாணவி. செக்யூரிட்டி சர்வீஸ், மேன்ஷன் மெஸ், டூ வீலர் சர்வீஸ் ஸ்டேஷன் என நகரத்தின் அடையாளங்களை திரைக்கு தெளிவாக கொண்டு வந்த படம் இது.


அரிச்சந்திரா


கல்யாண வயதில் ஒரே இடத்தில் வேளை பார்க்கும் நண்பர்கள். குடியும் கூத்துமாய் இருப்பவர்கள். அவர்களின் லீடருக்கு குடியை, மாமிசத்தை, சிகரெட்டை வெறுக்கும் பெண்ணின் மேல் காதல். ஏமாற்றி காதலிக்கிறான். பின்னர் மாட்டிக் கொள்கிறான். எப்படி அவள் அன்பை மீண்டும் பெறுகிறான் என்பதே கதை. இந்தக் கேரக்டருக்கு கார்த்திக்கை விட பொருத்தமாய் யார் கிடைப்பார்?. நல்ல எண்டெர்டைனர்.


நாம் இருவர் நமக்கு ஒருவர்


பிரபு தேவா தாடி எடுத்த படம், மீனா நீச்சலுடையில் நடித்த படம். சுந்தர் சி யின் வழக்கமான ஆள் மாறாட்டக் காமெடிப் படம். காதலா காதலா வுக்கும் இதற்கும் சில காட்சிகளில் ஒற்றுமை இருந்தது. கார்த்திக் ராஜா அருமையான மெலடிகளைக் கொடுத்திருந்தார். என்ன வென்று தெரியாமல் ஏதோ குறைந்திருந்ததால் தோல்வியடைந்த படம்.



உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்


கார்த்திக் கடனுக்கு (வாங்கிய) நடித்துக் கொடுத்த படம். ரமேஷ் கண்ணாவுக்கு நகைச்சுவை நடிகன் அந்தஸ்து கொடுத்த படம். தீபாவளிக்கு முன் வெளியாகி தீபாவளிப் படங்கள் பப்படமானதால் பொங்கல் வரைக்கும் ஓடிய படம்.

கண்ணெதிரே தோன்றினாள்

சுஜாதாவின் வசனத்தில் அறிமுக இயக்குநர் ரவிச்சந்திரன் இயக்கி தேவாவின் கானாப் பாடல்களோடு வெற்றியடைந்த படம். பிரசாந்துக்கு சொல்லிக்கொள்ளும் படி அமைந்த மிகச்சில படங்களில் ஒன்று.

இதே ஆண்டில் தில்சே படம் தமிழில் உயிரே என வெளியாகி இவ்வளவுதான் மணிரத்னம் என்று தமிழ் மக்களை உணர வைத்தது.

June 28, 2010

தமிழ் சினிமாவில் வீடுகள்

தமிழ்சினிமாவில் கதாநாயகன், நாயகி, எதிர்நாயகன், ஆகியோரது குணாதிசயங்கள் பில்ட் அப் காட்சிகளின் மூலமாகவோ அல்லது பிறரை விட்டு பேசச் சொல்லியோ தான் பார்வையாளனுக்கு உணர்த்தப் படுகிறது. அவர்கள் குடியிருக்கும் வீடானது அந்தக் குணாதிசயங்களை பிரதிபலிக்கும் வகையில் காட்டப்படுகிறதா என்று பார்த்தோமானால் பெரும்பாலான திரைப்படங்களில் ஏமாற்றமே மிஞ்சும்.

படத்தின் நாயகர்/நாயகியின் செல்வ நிலையை காட்டும் விதத்தில்

ஏழை – குடிசை (கிராமம் மற்றும் சேரிப்பகுதி)

கீழ் நடுத்தரம் - சம்சாரம் அது மின்சாரம் செட் (தனி வீடு)

ஒண்டுக் குடித்தனங்கள் (ஸ்டோர்ஸ்)

மத்திய நடுத்தரம் – ஹவுசிங் போர்ட் டைப் வீடுகள்

உயர் நடுத்தரம்- அபார்ட்மெண்ட் டைப்,

பணக்காரர்கள் – கீழ்பாக் குஷால்தாஸ் கார்டன் (தற்போது இடிக்கப்பட்டு விட்டது), ஈ சி ஆர் ரோட் பங்களாக்கள், கல்பனா ஹவுஸ், இரண்டு பக்கம் படிக்கட்டு வைத்து ஹை சீலிங் உள்ள வீடுகள்.

பெரும் செல்வந்தர்/ நாட்டாமை டைப் – எம் ஏ எம் ராமசாமி வீடு, செட்டுநாட்டு ஆயிரம் ஜன்னல் வீடு.

என அவர்களின் இருப்பிடம் சித்தரிக்கப்படுகிறது.

ஆச்சாரமானவர்கள் என்பதைக் காட்ட ஒரு பூஜை அறை, துளசி மாடம் ஆகியவற்றைக் காட்டினால் போதும் என்ற கருத்தும் தமிழ்சினிமாவில் தொன்று தொட்டு வழங்கிவருகிறது.

வில்லனுக்கும் அவர் வசதிக்கும், தொழிலுக்கும் மற்றும் பதவிக்கும் ஏற்ற வீடு காட்டப்படும்.

ஆனால் நகைச்சுவை நடிகன் தான் பாவம், அவனுக்கு என்று சொந்தமாக ஒரு இருப்பிடம் மிக அரிதாகவே (சூரிய வம்சம், பெரிய தம்பி) காட்டப்படும். அதுகூட கதைக்கு அவசியமாவதால் வேறு வழியில்லாமல் காட்டப்படும்.

பேய்ப்படங்கள் மற்றும் குற்றம் சார்ந்த திகில் படங்களில் வீடுகள் அமானுஷ்ய தன்மை கொண்டதாக சித்தரிக்கப்படும் (13 ஆம் நம்பர் வீடு, ஆனந்தப்புரத்து வீடு).

வீடு ஒரு கதாபாத்திரமாக அமைந்த படங்கள் என்றால்

பாலுமகேந்திராவின் வீடு படம் தான் சட்டென்று எல்லோர் நினைவுக்கும் வரும். ஒரு நடுத்தர குடும்பம் வீடு கட்ட படு கஷ்டத்தை காவியமாக சொன்ன படம் அது.

டி பி கஜேந்திரன் இயக்கத்தில் உருவான பட்ஜெட் பத்மநாபன், தன் வீட்டை மீட்க போராடுபவனின் கதையை நகைச்சுவை முலாம் பூசி சொன்னது.

சேரனின் பாண்டவர் பூமி, குடும்பத்திற்க்காக சிறைக்குப் போன தம்பி வெளிவந்து நன்கு வாழ வேண்டுமென அவனது அண்ணன்கள் ஒரு மணப்பெண்ணை வளர்த்து, வீட்டையும் கட்டி வைப்பதை இணை கதையாகச் சொன்னது.

என சில படங்களைச் சொல்லலாம்.

எனவே எப்படிப் பார்த்தாலும் குணாதிசயங்களைச் சொல்லும் வீடு காட்டப் பட்டிருக்கிறதா என்று பூதக் கண்ணாடி வைத்துத் தான் தேட வேண்டியிருக்கிறது.


ஸ்டியோக்களில் சினிமா சிறைப்பட்டிருந்த காலத்தில் கார்பெண்டரும், பெயிண்டருமே வீட்டை முடிவு செய்தார்கள், பதினாறு வயதினிலேக்குப் பின் இயல்பு வீடுகள் என்ற போர்வையில் மதுரை, கோபி செட்டிப் பாளையம் மற்றும் காரைக்குடி சுற்று வட்டார வீடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. சிவாஜி படத்துக்காக ரஜினியின் வீட்டை பிரமாண்டமாய் காட்ட வேண்டுமென்று டெல்லியில் அலைந்து அந்த வீட்டைப் பிடித்தார்கள்.

நாயகன்/நாயகியின் தனித் தன்மைகளை வீட்டு அலங்காரம், அங்கு உள்ள பொருட்கள், போஸ்டர்கள், பொருள் அடுக்கியிருக்கும் விதம் என காட்ட கலை இயக்குநர்களுக்கு சுதந்திரத்தையும், ஸ்க்ரிப்டையும் கொடுங்கள் இயக்குநர்களே.

January 22, 2010

டப்பிங் படங்களின் மாற்றம் (2000 - 2009)

முன்னாட்களில் தமிழ்நாட்டில் டப்பிங் படங்கள் என்றாலே அது தெலுங்கு தேசத்திலிருந்து வந்ததாகத்தான் இருக்கும்.

வடநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவு வகைகளும், நாயகிகளும் தமிழ் சாயம் பூசிக்கொண்ட போது அதை ஆதரித்த தமிழன் அவர்களது படங்கள் சாயம் பூசிக் கொண்ட போது அதை ஆதரிக்கவில்லை. நேரடி இந்திப்படங்கள் இங்கே அபார வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் இந்தி டப்பிங் இங்கே சகிக்க முடியாததாகவே இருந்திருக்கிறது.
ரஜினியின் முகத்திற்காகக் கூட அதை இங்கே யாரும் பார்க்கத் தயாராயில்லை. லட்சத்தில் ஒருவன், ராஜகுரு போன்ற படங்களை ரஜினியின் ரசிகர்கள் கூட பார்த்திருப்பார்களா? என்பது சந்தேகமே.

அடுத்து கன்னட படங்கள். அதை பெங்களூர்காரர்களே பார்க்க மாட்டார்கள். அதையும் மீறி சில பாலியல் சார்புடைய கன்னட படங்கள் டப் ஆகி வந்தன. அது என்னவோ தெரியவில்லை சரோஜாதேவி, சௌந்தர்யா மற்றும் திவ்யா போன்ற ஏராளமான அழகிகளை உற்பத்தி செய்யும் கன்னட தேசம் ஆண்கள் விஷயத்தில் பாரபட்சமாகவே நடந்து கொள்கிறது. போஸ்டர்களில் ஹீரோக்களின் முகத்தைப் பார்த்தால் கழுதை கூட அதை சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. உபேந்திரா போன்று ஓரளவு வித்தியாசமாக படமெடுப்பவர்களின் படங்கள் கூட இங்கே ஓடமாட்டேன் என்கிறது.


மலையாள தேசத்திலிருந்து கமர்சியல் வேல்யு உள்ள திரைப்படங்கள் 80களிலும் 90 களிலும் ஓரளவு இங்கே டப் ஆகி வந்துள்ளன. மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி ஆகியோரது போலிஸ் மற்றும் கடத்தல் கதைகள் இங்கே வந்து வெற்றி பெற்றுள்ளன. ஆனால் இந்தப் பத்தண்டுகளில் அப்படி வந்து வெற்றி பெற்ற படங்கள் மிகக் குறைவு.

அடுத்தது ஆந்திரா. கால காலமாகவே அங்கிருந்து படங்கள் இங்கே டப் ஆகி வந்துள்ளன. முதலில் புராணப் படங்கள் வந்தன. பின்னர் காந்தாராவ், சோபன் பாபு போன்றோரது அதிரடி ஆக்ஷன் படங்கள் டப் ஆகி வந்தன. பின்னர் விஜய நிர்மலா போன்றவர்கள் டாம் பாய் கேரக்டர்களில் நடித்த ரிவால்வர் ரீட்டா, கன்பைட் காஞ்சனா, டூபான் குயின் போன்ற படங்கள் வந்தன. விட்டலாச்சார்யா கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாமலேயே மிரட்டிய மாயாஜாலப் படங்கள் தனி மார்க்கெட்டைக் கொண்டிருந்தன.

இந்தப் படங்கள் அனைத்தையும் பார்த்தால் அவை உள்ளடக்கம் சார்ந்ததாகவே இருக்கும். கதாநாயகனுக்காக டப்பிங் செய்யப்படாமல் உள்ளடக்கத்திற்க்காக டப்பிங் செய்யப்பட்டிருக்கும். இதை மாற்றியது சிரஞ்சீவி தான். கோதண்டராமி ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, மாதவி நடித்து வெளியான கைதி திரைப்படம் 100 நாட்களை கடந்து ஓடி சிரஞ்சீவிக்கு இங்கு ஒரு மார்க்கட்டை உருவாக்கியது. அதன்பின் சிரஞ்சீவி நடித்த பல படங்கள் நாயகனுக்காக டப் செய்யப்பட்டன. இதுதாண்டா போலிஸ் வெற்றிக்குப் பின் ராஜ சேகருக்கும், உதயம்,இதயத்தை திருடாதே வெற்றிக்குப் பின் நாகார்ஜுனாவுக்கும் ஒரு மர்க்கெட் உருவானது.

இதில் ஒரு குறிப்படத்தக்க அம்சம் என்னவென்றால் அப்போது தமிழில் உச்சத்தில் இருக்கும் நாயகியுடன் இவர்கள் நடிக்கும் படங்களுக்கு ஒரு முன்னுரிமை இருக்கும். ஸ்ரீதேவி,ராதா ஆகியோர் உச்சத்திலிருக்கும் போது அவர்கள் படங்கள் அதிகமாக டப் ஆகி வந்தன.
சில்க்ஸ்மிதாவக்காகவும் சில படங்கள் டப் செய்யப்பட்டு வந்தன.இது குஷ்பூ காலத்தில் இன்னும் அதிகமானது. (ஹீரோயின் சென்ட்ரிக்). ரோஜா போதை தமிழ்நாட்டு ரசிகர்களை பீடித்திருந்தபோது அவருக்காக வினோத்குமார், பாலகிருஷ்ணா ஆகியோரையெல்லாம் சகித்துக் கொள்ளும் நிலைக்கு தமிழன் தள்ளப்பட்டான். உள்ளத்தை அள்ளித்தந்த ரம்பா, காதலன்,பாட்ஷாவுக்குப் பின் நக்மா ஆகியோருக்காவும் இங்கே படங்கள் டப் செய்யப்பட்டன.

இதுதவிர அம்மன், அருந்ததீ போல மிஸ்டிக் கதையமைப்பு உள்ள படங்களும், கமல் மற்றும் ரஜினி தெலுங்கில் பிரத்யேகமாக நடித்த படங்களும் இங்கே டப் ஆகி வந்துள்ளன.

ஆனால் இந்தப் பத்தாண்டுகளில் தெலுங்கு டப்பிங் படங்கள் பெருமளவு குறைந்து விட்டன. அருந்ததீ போல மிகச் சில படங்கள் மட்டுமே (ஏறக்குறைய இல்லை என்றும் சொல்லலாம்) அந்த அளவுக்கு எந்தப் படமும் இங்கே வெற்றி பெற வில்லை.

இந்த மாற்றத்திற்க்கு காரணம் என்ன?

1. தெலுங்கு மசாலா படங்களை ரசிக்கக் கூடியவர்களுக்கு இங்கேயே தீனி கிடைக்கிறது. அதீத உணர்ச்சிகர வசனங்கள், சண்டை, பாடல்கள் என கலந்து கட்டி படமெடுக்கும் ஷங்கர், பேரரசு போன்றோர் இங்கேயே வந்துவிட்டார்கள்.

2. கொஞ்சம் வித்தியாசமான படமாக இருந்தால் அதை கவ்விக் கொண்டு வந்துவிட விஜய், ஜெயம் ரவி ஆகியோரது உளவுப்படைகள் அங்கேயே சுற்றிக் கொண்டு இருக்கின்றன.

3.ஆங்கில டப்பிங் படங்களின் வரவு இந்தப் பத்தாண்டுகளில் முக்கியமான மாற்றம். ஜாக்கிசான் முதல் டேனியல் கிரெக் வரை இங்கே சென்னை தமிழில் பேசுகிறார்கள்.அர்னால்டு சிவனேசன் என்று கூட டைட்டில் போடுவார்கள் போலிருக்கிறது கலிபோர்னிய கவர்னருக்கு. 2012ன் வசூல் அயன் வசூலை சில தியேட்டர்களில் மிஞ்சி விட்டது என்கிறார்கள். அவதாரை ஹாலிவுட் பாலா பார்ப்பதற்குள் கோலிவுட் சங்கர் பார்த்துவிடுகிறார். இதனால் தெலுங்கு டப்பிங் படங்கள் தங்கள் மார்க்கெட்டை படிப்படியாக இழந்து வருகின்றன.

4. முன்னர் ஹீரோயின்களின் ஆயுள் காலம் அதிகமாக இருந்தது. இப்போது இரண்டு ஆண்டுகள் கூட யாரும் தாக்குப் பிடிப்பதில்லை. ஒரு கிரேஸ் ஏற்பட்டு இந்த ஹீரோயினின் படத்தை டப் செய்யலாம என்று யோசிப்பதற்க்குள் அவரது மார்க்கெட் போய்விடுகிறது.

5. வணிக மதிப்புக் கொண்ட நம் நடிகர்கள் யாரும் இப்போது அங்கே பிரத்யேக தெலுங்குப் படங்களில் நடிப்பதில்லை.

மலையாள படங்களின் பட்ஜெட் மிகக் குறைவு என்பதால் அங்கே இப்போது மசாலாப் படங்கள் நம்மவர்களை ஈர்க்கும் அளவுக்கு தயாராவதில்லை. வித்தியாசப் படங்களை இங்கே விக்ரம் (காசி, மஜா), சூர்யா (பேரழகன்) போன்றோரை வைத்து ரீமேக் செய்து விடுகிறார்கள். பழசிராஜா போரில் மட்டுமில்லாமல் வசூலிலும் இங்கே தோல்வியடைந்து விட்டார்.

இந்தப் பத்தண்டுகளில் டப்பிங் படங்களைக் குறித்த வரையில் ஏற்பட்ட மாற்றம் டோலிவுட்டுக்குப் பதில் ஹாலிவுட் என்பதே.

January 19, 2010

2000 - 2009 பத்தாண்டுகளில் அறிமுக நடிகர்கள்.

70களில் அறிமுகமான (நாயகர்களாக) கமல்ஹாசனும்,ரஜினிகாந்தும் 80,90,1 என 3 தசாப்தங்களைக் கடந்தும் இன்னும் ஸ்டெடியாக இருக்கிறார்கள். 70களின் இறுதியில் வந்த விஜயகாந்தும் இந்த மூன்று தசாப்தங்களில் நின்று காண்பித்து விட்டார். பாக்யராஜ் 80களின் இறுதிவரை நிலைத்து நின்று தொண்ணூறுகளில் ஆரம்பத்தில் பீல்ட் அவுட் ஆனார்.

80களில் அறிமுகமாகி வெற்றிக்கொடி நாட்டிய ராஜேந்தர்,மோகன்,ராமராஜன்,பாண்டியராஜன் ஆகியோர் தொண்ணூறுகளில் பீல்ட் அவுட் ஆனார்கள். கார்த்திக் 90களின் இறுதிவரை நிலைத்தார். பிரபு 90களின் பாதிவரை. முரளியும் 90களின் இறுதிவரை தாக்காட்டினார். சத்யராஜ் நிலைத்து நின்றாலும் மூன்றாம் வரிசை நாயகனாகவே உள்ளார். இதன் இறுதியில் அறிமுகமானவர்களில் இப்பொது வரை ஸ்டெடியாக இருப்பவர் விக்ரம் மட்டுமே. அர்ஜூன்,சரத்குமார் தள்ளாட்டம், பிரசாந்த் பல கிரகங்களால் அலைக்கழிக்கப்பட்டார்.

90களின் ஆரம்பத்தில் அறிமுகமாகி கோடி ரூபாய் சம்பளத்தை முதலில் தொட்ட ராஜ்கிரணும் அந்தப் பத்தாண்டு இறுதிக்குள்ளேயே அமைதியாகி விட்டார். விஜய்,அஜீத் மற்றும் இறுதியில் அறிமுகமான சூர்யாவும் மட்டுமே இன்னும் பத்தாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வாய்ப்புடன் இருக்கிறார்கள். அரவிந்த்சாமி, அப்பாஸ் போன்றோர் அஸ்தமித்தே விட்டார்கள். நெப்போலியன் மந்திரியாகிவிட்டார். மகேந்திரனிடம் பாராட்டுப் பெற்ற பிரபுதேவாவும் நடிகராக பத்தாண்டுகளைத் தாண்ட முடியவில்லை. அருண்விஜய்யை எப்படி சொல்வது என்றே குழப்பமாக உள்ளது.

சரி, இந்தப் பத்தாண்டில் அறிமுகமானவர்களில் யார் யார் அடுத்த இரு பத்தாண்டுகள் வரை நிலைத்திருப்பார்கள்?

1.மாதவன்

அலைபாயுதே, மின்னலே,ரன் போன்ற வெற்றிப்படங்கள், அன்பே சிவம்,ஆய்த எழுத்து,நளதமயந்தி,தம்பி போன்ற வித்தியாச கதாபாத்திரங்கள் என நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றவர். இந்தியில் ரங் தே பசந்தி, 13 பி, த்ரீ இடியட்ஸ் மூலம் பரவலான கவனிப்பைப் பெற்றவர். இப்போதைக்கு தமிழில் அதிக கவனம் செலுத்தாததால் அடுத்த அரவிந்த்சாமி ஆகிவிடுவாரோ என எண்ணத் தோன்றுகிறது.


2. தனுஷ்

அண்ணனுடையான் அறிமுகத்துக்கு அஞ்சான். ஆனாலும் அடுத்தவர்களின் படங்களிலும் நடித்து வெற்றி பெற்றாகி விட்டது. கடைசி நாலு படங்கள் ஹிட். கல்லூரியில் படித்த அல்லது படிக்காத சேட்டை செய்யும் வாலிபன் என்னும் வட்டத்துக்குள்ளேயே பெரும்பாலான வேடங்கள். உடல் அமைப்பு அப்படி. ஆனால் இப்படியே இருந்தால் எப்படி? உடலைத் தேற்றி பல பாத்திரங்களையும் ஏற்று நடிக்கும்படி மாறினால் இன்னும் பல ஆண்டுகள் வெற்றிநடை போடலாம்.


3.சிலம்பரசன்


நடிப்பு மட்டுமில்லாமல், இயக்குநர்,பாடகர் என தன்னை நிரூபித்து விட்டவர். இப்போதுதான் கௌதம் மேனன், கே வி ஆனந்த் என பெரிய இயக்குநர்களிடம் அட்டாட்ச் ஆகியுள்ளார். பொடென்ஷியல் உள்ள ஆள் என்பதால் இன்னும் பத்தாண்டு கேரண்டி.

4. ஜெயம் ரவி

அண்ணனைத் தவிர மற்றவர்களின் படங்களில் எடுபடுவதில்லை என்னும் கூற்று தற்போது பேராண்மை மூலம் உடைந்திருக்கிறது. தெலுங்கு பட உலகமும் (ஆந்திராவா? டெலுங்கானாவா?) அண்ணனும் உள்ளவரை அவ்வப்போது ஹிட் கொடுத்து ஓரளவு நிலைத்து நின்று விடுவார். குரல் மட்டும் இன்னும் மெச்சூர் ஆனால் நன்றாக இருக்கும்.

5.விஷால்

இன்னொரு வாரிசு என்றாலும், உதவி இயக்குநராகப் போய் அர்ஜூனின் மாறுபட்ட கோணப் பார்வையால் நடிகரானவர். தொடர்ந்து ஹிட் கொடுத்து இப்போது ஆப் ஆகியுள்ளார். இருண்டு கிடந்த விக்ரமையும், மங்கலாக இருந்த சூர்யாவையுமே பிரகாசமாக்கிய பாலா சும்மா விடுவாரா? திராவிட நிறம் என்பதால் இன்னும் பத்தாண்டு கேரண்டி.


6. ஆர்யா

மறைந்த ஜீவாவின் கண்பட்டு கதாநாயகனான ஆர்யா அடுத்த அப்பாசோ என நினைத்த வேளையில் பாலா மூலம் அகோரியானார். வரும் படங்களை வைத்துத்தான் இவரை கணிக்க முடியும்.

7.ஷாம்

குஷி படத்தில் விஜய்யின் நண்பர் குழாமில் ஒருவராக அறிமுகமானாலும் அப்பட கேமராமேன் ஜீவா மூலம் 12 பி யில் அறிமுகமானார். குறைந்த காலத்திலேயே சிம்ரன்,ஜோதிகா,சினேகா,திரிஷா,மீரா ஜாஸ்மின் போன்ற தேவதைகளோடு நடித்தாலும் அதிர்ஷ்ட தேவதையின் கண்பார்வை படவில்லை. இப்போது இரண்டாம் கதாநாயகனாக இவர் நடிக்கும் தில்லாலங்கடியைப் பொறுத்தே இவர் எதிர்காலம்

8. ஜீவா

இன்னொரு வாரிசு. ராம், கற்றது தமிழ், ஈ என வித்தியாசம் காட்டினாலும் மீண்டும் கமர்ஷியல் பாதைக்கே திரும்பிவிட்டார். வரும் படங்கள் தான் உரைகல். இவராவது பரவாயில்லை இவர் சகோதரர் ஜித்தன் ரமேஷ் பாவம்.

9. கார்த்தி

பராசக்திக்குப் பிறகு இவ்வளவு ஸ்ட்ராங்காக அறிமுகமான நடிகர் இவர்தான் என்பது இண்டஸ்ட்ரி வாக்கு. நல்ல நடிப்புத் திறமை, பின்புலம். பத்தாண்டு கேரண்டி.

10. சித்தார்த்

பாய்ஸ்,ஆய்த எழுத்து என பெரிய இயக்குநர் படங்கள். கிளிக் ஆகாததால் தெலுங்குக்குப் போய்விட்டார். இங்கு இடமிருக்காது என்பதே தற்போதைய நிலவரம்.

11. பரத்

பாய்ஸில் அறிமுகமானாலும் செல்லமே, காதல் திருப்புமுனை. பேரரசு வரை இறங்கவும் முடியும் கண்டேன் காதலை என இயல்பாக நடிக்கவும் முடியும் என்பது பலம். ஆனால் பட்சி இதெல்லாம் தாக்குப் பிடிக்காது என்றே சொல்கிறது.

12. நகுல்

ஷங்கர் செய்ய முடியாததை நாக்க முக்க செய்து விட்டது. ஆனாலும் நீடிப்பது கஷ்டமே.


13. ஜே கே ரித்தீஸ்


சரத்குமார், நெப்போலியன், ராமராஜனுக்கெல்லாம் பல ஆண்டுகள் ஆனது. நாயகனுக்கு ரெண்டே படம் தான் எம்பி ஆகிவிட்டார். அதிமுகவில் இப்படி யெல்லாம் நடக்கும் என்று அங்கலாய்ப்புகள் வேறு. சாம் ஆண்டர்சனை தனியாக விட்டு விட்டு போனதுதான் சோகம்.


14. சுந்தர் சி

இப்படியெல்லாம் நடக்கும் என குஷ்பூ கூட எதிர்பார்த்திர்க்க மாட்டார்.

15 சேரன் / தருண்கோபி

முடியல அடுத்த பதிவில தொடருகிறேன்

January 18, 2010

2000 - 2009 பத்தாண்டுகளில் தமிழ்சினிமா

முதலில் மங்களகரமாக வசூலில் இருந்து தொடங்குவோம். முதல் பத்து இடத்தைப் பிடித்த படங்கள் [வரிசைப்படி அல்ல :-)) ]

1.தசாவதாரம்
2.சிவாஜி
3.சந்திரமுகி
4.கில்லி
5.சாமி
6.கஜினி
7.போக்கிரி
8.அன்னியன்
9.அயன்
10.தூள் மற்றும் ரமணா, ஜெமினி,வானத்தைபோல படங்களும் 10 ஆவது இடத்துக்கான போட்டியில் உள்ளன.

சூப்பர் ஸ்டார் நான்கு படங்களில் மட்டுமே நடித்தார். இரண்டு மெகா ஹிட், இரண்டு பிளாப்

1.பாபா (2002)
2.சந்திரமுகி (2005)
3.சிவாஜி (2007)
4.குசேலன் (2008)

கமல் 12 படங்களில் நடித்தார்

1. ஹேராம் (2000) - பிளாப்
2. தெனாலி (2000) - ஹிட்
3.ஆளவந்தான் (2001) - பிளாப்
4.பம்மல் கே சம்பந்தம் (2002) - ஹிட்
5. பஞ்சதந்திரம் (2002) - ஹிட்
6.அன்பே சிவம் (2003) - பிளாப்
7.விருமாண்டி (2004) - ஹிட்
8. வசூல்ராஜா (2004) - ஹிட்
9.மும்பை எக்ஸ்பிரஸ் (2005) - பிளாப்
10. வேட்டையாடு விளையாடு (2006) - ஹிட்
11. தசாவதாரம் (2008) - சூப்பர் ஹிட்
12.உன்னைப் போல் ஒருவன் (2009) - ஹிட்

(தொடரும்)

1996 ஆம் ஆண்டு படங்கள் - ஒரு பார்வை

ஒரே ஆண்டில் சந்தேகத்துக்கே இடமில்லாமல் ஐந்துக்கும் மேற்பட்ட பெரு வெற்றிப்படங்களும் 10 வெற்றிப்படங்களும் அமைவது எப்போதாவதுதான் நடைபெறும். 1989ல் அப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றது (அபூர்வ சகோதரர்கள், வருஷம் 16, ராஜாதிராஜா, கரகாட்டக்காரன், புதியபாதை, புதுப்புது அர்த்தங்கள், மாப்பிள்ளை, பாண்டி நாட்டுத்தங்கம்.....). அது போல 1996லிம் அப்படி பெரு வெற்றி பெற்ற படங்கள் வந்தன.

1.இந்தியன்
2.அவ்வை ஷண்முகி
3.உள்ளத்தை அள்ளித்தா
4.பூவே உனக்காக
5.காதல்கோட்டை

ஆகிய ஐந்து படங்கள் பெருவெற்றி பெற்றன.

கோகுலத்தில் சீதை, நாட்டுப்புறபாட்டு,கோபாலா கோபாலா, சுந்தரபுருஷன், வான்மதி, காதல்தேசம் போன்ற பல படங்கள் நல்ல வெற்றி பெற்றன.


இந்த ஆண்டில் இரண்டுபேருக்கு பெரிய திருப்புமுனை அமைந்தது. ஒன்று விஜய் (பூவே உனக்காக), பிரகாஷ்ராஜ் (கல்கி).

கவுண்டமனிக்கு இந்த ஆண்டு செமையான அறுவடை. (இந்தியன், அவதார புருஷன்,கோயம்புத்தூர் மாப்ளே, டாட்டா பிர்லா,மேட்டுக்குடி, சேனாதிபதி,ஞானப்பழம்,கட்டப் பஞாயத்து, பூவரசன், மகாபிரபு,பரம்பரை).

பெரிய இயக்குநர்களுக்கு மரண அடி (பாரதிராஜா - அந்திமந்தாரை, தமிழ்செல்வன்: பாலசந்தர் - கல்கி: பாக்யராஜ் - ஞானப்பழம்)


ரஹ்மான் இசையில் இந்தியன்,காதல்தேசம், மிஸ்டர் ரோமியோ மற்றும் லவ்பேர்ட்ஸ் ஆகியவை வந்தன. இந்த நான்கும் முறையே ஏ எம் ரத்னம், கே டி குஞ்சுமோன், ஆர் பி சௌட்த்ரி மற்றும் பிரமிட் நடராஜன் ஆகிய பெருங்கைகளின் தயாரிப்பில் வந்தது. இந்த நால்வரில் ஆர் பி சவுத்ரி மட்டுமே இப்போதும் படம் தயாரிக்கும் நிலையில் உள்ளார். லவ்பேர்ட்ஸ் படம் ரஹ்மான் இசையமைக்க எடுத்துக் கொண்ட நாட்கள் கூட ஓடாமல் அடிவாங்கியது. ஆனால் இதே லைனை வைத்து ராகேஷ் ரோஷன் தன் மகன் ரித்திக் ரோஷனை அறிமுகப்படுத்தி எடுத்த கஹோ நா பியார் ஹை பெருவெற்றி பெற்றது.

ஆர் கே செல்வமணி பினாமியாக டைரெக்ட் செய்த கர்ணன் டைப் படமான ராஜாளி, ராஜ்கிரணுக்கு தோல்விப்பாதை அமைத்துக் கொடுத்த மாணிக்கம் , விஜய்,அஜீத் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே , பிரசாந்த், அஜீத் இணைந்து நடித்து பூஜாபட் தமிழில் அறிமுகமான கல்லூரி வாசல், லிசா ரே தமிழில் அறிமுகமான் நேதாஜி என பல தோல்விப்படங்களும் இந்த ஆண்டில் உண்டு.

விஜயகாந்தை அலெக்சாண்டரும், சரத்குமாரை மகாபிரபுவும் காப்பாற்றினார்கள்.

விஜய்க்கு செல்வா, மாண்புமிகு மாணவன், ராஜாவின் பார்வையிலே மற்றும் வசந்தவாசல் ஆகிய படங்களின் தோல்வியை பூவே உனக்காக சரிகட்டியது .