March 31, 2009
புதிய பதிவர்களை வரவேற்று சென்னையில் பதிவர் சந்திப்பு
தமிழ் வலைப்பதிவுலகம் என்றும் வற்றாத ஜீவநதியாய் பாய்ந்தோட முக்கிய காரணம் சிற்றோடைகளாய் வந்து சங்கமிக்கும் புதிய பதிவர்களே. அவ்வாறு கடந்த ஆறு மாதங்களில் பல புதிய பதிவர்கள் பதிவுலகிற்க்கு வந்துள்ளார்கள். அவர்களை வரவேற்கும் விதமாகவும், சென்னையில் இருந்தாலும் இன்னும் சந்திப்புகளில் கலந்து கொள்ளாமல் இருக்கும் பதிவர்களுடன் அறிமுகம் ஏற்படுத்திக் கொள்வதற்க்காகவும் வருகிற ஞாயிறு (ஏப்ரல் 5) மாலை ஐந்து மணி அளவில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாலபாரதி, லக்கிலுக், நர்சிம், டாக்டர் புருனோ, அதிஷா, கேபிள் சங்கர் ஆகியோர் கலந்து கொள்வதாக கூறியுளார்கள். மேலும் வழக்கமாக சந்திப்புக்கு வரும் சிவஞானம்ஜி, இராமகி ஐயா, பைத்தியக்காரன், ஜியோவ்ராம் சுந்தர், வளர்மதி, ஆழியூரான், சுகுணா திவாகர், இளவஞ்சி, டோண்டு ராகவன், உண்மைத்தமிழன், அதியமான், நந்தா, எம் எம் அப்துல்லா, கடலையூர் செல்வம், வெண்பூ, கார்க்கி, ஜாக்கி சேகர்,தாமிரா, ஸ்ரீ ஆகியோரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. (வழக்கமாக வருபவர்கள் பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்)
சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இருக்கும் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.
இடம் : மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில்
நேரம் : மாலை 5 மணி முதல் 7 மணி வரை
நாள் : 05- 04 -2009. ஞாயிற்றுக்கிழமை
இதற்கு அமைப்பாளர்கள் என்று யாரும் இல்லை. கலந்து கொள்ளும் அனைவரும் அமைப்பாளார்களே.
சந்திப்பு பற்றிய் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள
பாலபாரதி – 9940203132
லக்கிலுக் – 9841354308
அதிஷா – 9884881824
கேபிள் சங்கர் - 9840332666
முரளிகண்ணன் - 9444884964
March 28, 2009
தமிழ்சினிமாவில் அம்மாக்களின் கட்டுடைப்பு
ராமராஜன், ராஜ்கிரண் படங்களில் தாய் கிட்டத்தட்ட தெய்வமேதான். ராஜ்கிரண் அரண்மனைக்கிளியில் தாயின் அஸ்தியை முகத்தில் பூசிக் கொண்டு அழுததை யாரும் மறக்க முடியாது. விஜயின் படங்களிலும் தாய் செண்டிமெண்டுக்கு குறைவில்லை. துள்ளாத மனமும் துள்ளுமில் தாயை காட்டாமலேயே ஒரு சென்டிமெண்ட் நன்கு கையாளப் பட்டிருந்தது. சிவகாசி, வில்லு ஆகிய படங்களிலும் தாய் செண்டிமெண்டே படத்தின் அடிநாதமாக இருந்தது. முதலில் நடித்த ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் கூட எம் ஏ என்றால் மதர்ஸ் அப்பெக்ஷன் என்ற அரிய விளக்கத்தைக் கொடுத்திருப்பார். இதுதவிர எல்லா நாயகர்களுமே அம்மா அம்மா என அரற்றி ஒரு பாட்டுப் பாடாமல் இருந்ததில்லை.
இந்த மாஸ் ஹீரோக்களின் படங்களில் தாய் செண்டிமெண்ட் வைப்பதில் ஒரு உளவியல் இருக்கிறது. அந்த ஜனரஞ்சகப் படங்களைப் பார்க்கும் தாய்மார்கள் தன் சிறு வயது மகனிடம் “ பார்த்தியா, அம்மாக்காக என்னெல்லாம் செய்யுறான்” என சொல்லி அவனை ஆற்றுப்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. இந்த நடிகர் நடிக்கும் படங்களில் தாய்க்கு முக்கியத்துவம் தருகிறார். எனவே நல்ல மனிதர் என்னும் பிம்பம் பெண்களின் மனதில் ஏற்படுகிறது. மேலும் இந்த நடிகன் படத்தை மகன் பார்க்கலாம், ரசிகனாக கூட இருக்கலாம் என்னும் எண்ணமும் தோன்ற வாய்ப்பிருக்கிறது. மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கு குடும்பத்தோடு கூட்டம் வர இதுவும் ஒரு காரணம்.
ஆனால் இதே அம்மாவை, சமூகத்தை யதார்த்தமாக காட்டும் கதையமைப்புள்ள படங்களில் மாமியார் என்ற கோணத்திலேயே காட்டுவார்கள். நாயகிக்கு கொடுமை செய்வதே பிரதானமாக அமைந்திருக்கும். இந்தப் படங்களில் கதாநாயகர்கள் மக்கள் அபிமானம் பெறாதவர்களாகவே பெரும்பாலும் இருப்பார்கள். படத்தைப் பார்க்கும் பெண்கள் அந்த ஹீரோயின் கதாபாத்திரத்தில் தான் தன்னை பொருத்திப் பார்ப்பார்கள். ஆண்கள் ஒரு பொதுக்கண்ணோட்டத்தில் படத்தைப் பார்ப்பார்கள்.
எது எப்படி இருந்தாலும் நாயகனின் அம்மா என்ற கோணத்தில் காட்டப்படும் பாத்திரம் தியாக செம்மலாகவும், குடும்பத்திற்க்கு ஒன்று என்றால் துடித்துப் போய்விடுபவளாகவும், குல விளக்காகவும், கட்ட்டுப்பெட்டியாகவும் இருக்கும். ஆனால் தற்போது வந்து கொண்டிருக்கும் படங்களில் மாற்றம் ஏற்பட்டு அம்மாவை விருப்பு வெறுப்புள்ள சாதாரண மனுஷியாக காட்டும் போக்கு அதிகரித்துள்ளது. இந்தித் திரைப்பட அம்மாக்களும் புனிதத்தில் தமிழுக்கு சளைத்தவர்கள் இல்லை. ஆனால் மைனே பியார் கியா படத்துக்குப் பின் இளமையான அம்மாக்கள் இந்தி திரையுலகில் வலம் வரத் தொடங்கினார்கள்.
நாம் நமது ஏரியாவை மட்டும் எடுத்துக் கொள்வோம். கதாநாயகனின் அம்மாவாக இருந்து, புனித பாத்திரம் வகிக்காமல் சராசரியாக கட்டப்பட்ட அம்மாக்களைப் பார்ப்போம்.
வசந்த மாளிகை
சிவாஜியின் வசனங்களுக்காகவும், நடிப்புக்காகவும் இந்த படம் ஞாபகம் கொள்ளப் பட்டாலும், சிவாஜி குடிகாரர் ஆனதற்க்கு காரணம் அவரது தாய் என்னும் வகையிலேயே கதையமைப்பு இருக்கும். வசதி படைத்த அவரது தாய் லேடிஸ் கிளப், மாதர் சங்கம் என சுற்றுவதால் வேலைக்காரியால் வளர்க்கப்படுகிறார் சிவாஜி. புறக்கணிப்பு அவர் மனதில் ஏக்கமாக மாறி அதைமறக்க குடிகாரர் ஆகிறார். பல பெண்களை வீழ்த்துகிறார். பின்னர் காதலி வாணிஸ்ரீ மூலம் நல்வழிப் படுகிறார்.
குணா
நாயகனின் அம்மா கற்புக்கரசியாக இருக்க வேண்டும் என்பதை உடைத்துப் போட்ட படம். மகன் வளர்ந்த பின்னும் தாய் விபச்சார விடுதி தலைவியாகவே இருக்கிறாள். தேவடியா மகன் என்ற ஒரு வார்த்தையையே இங்கே யாராலும் தாங்க முடியாது. வாழ்க்கையே அப்படி என்றால்?. நாயகனின் மனச் சிதைவுக்கு அதுவே காரணமாகிறது.
நந்தா
கள்ள உறவு கொள்ளும் கணவனை கொன்று விடுகிறான் மகன். ஆனால் தாய் மகனை உச்சி முகரவில்லை. தன் வாழ்க்கை மற்றும் தன் இன்னொரு மகள் வாழ்க்கை பாழானதே என்று நினைத்தாளோ என்னவோ?. சீர்திருத்த பள்ளியில் இருந்து மகன் திரும்பி வந்தும் மனம் மாறவில்லை. ஊரார் மகனை கொலைகாரன் என்று தூற்றியதும் சோற்றில் விஷம் வைத்து கொன்றே விடுகிறாள். இந்த வகையில் இந்தப் படமும் தாய் செண்டிமெண்டை அசைத்துப் பார்த்த படம்தான்.
அமர்க்களம்
இதில் அஜீத் ரவுடியாக மாறக் காரணாமாக காட்டப்படுவது அவர் பெற்றோர்க்கிடையே ஏற்படும் ஈகோ மோதல். அதனால் அவர் தாய் வேறொருவனையும், தந்தை வேறொருத்தியையும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அனாதையாகும் அஜீத் ரவுடியாகிறார்.
வில்லன்
தன் மகன் எப்படி இருந்தாலும் தாய் ஏற்றுக் கொள்வாள் என்பதை உடைத்த படம் இது. இரட்டை அஜீத்களில் ஒருவன் ஆட்டிசம் போன்ற நோய்க்கு ஆளானவன். அப்படி ஒரு பிள்ளை தங்களுக்கு இருப்பதை அவமானமாக கருதும் பெற்றோர் தங்கள் சமூகத்திற்க்கு அவனை காட்டாமல் இருக்கிறார்கள். ஆனால் அவனின் உடன்பிறப்பு அவனை சீராட்டி வளர்க்கிறான்.
கற்பூர முல்லை
பாடகி தன் இமேஜும் தன் காதலரின் இமேஜும் பாதிக்கப் படுமென தங்களுக்கு பிறந்த குழந்தையை விடுதியில் வளர்க்கிறாள். ஆனால் மகள் கண்டுபிடித்து வந்தவுடன் வழக்கமான அம்மாவாகி விடுகிறாள். இதுபோலவே சிந்துபைரவி முதலான படங்களிலும் காட்சி அமைப்பு உண்டு.
இம்மாதிரி படங்களில் பெரும்பாலும் நாயகனின் நிலைக்கு காரணத்தை சித்தரிக்கவே வழக்கத்துக்கு மாறான தாயைக் காட்டினார்கள். ஆனால் இந்த ஆண்டு வெளிவந்த இரண்டு படங்களில் தாயும் ஒரு குடும்ப உறுப்பினர், அவருக்கு விருப்பு வெறுப்பு உண்டு என இயல்பான தாயை காட்டியுள்ளார்கள். அவை சிவா மனசில சக்தி மற்றும் யாவரும் நலம்.
சிவா மனசில சக்தி
நாயகன் ஜீவாவின் தாய் ஊர்வசி இதில் வெகு யதார்த்தமாக காட்ட்ப்பட்டுள்ளார். அவன் காதலியின் வீட்டைப் பார்த்ததும் நல்ல புளியங்கொம்பா பிடிச்சிட்டடா என்னும் போதும், அவளை கர்ப்பமாக்கி விட்டான் என்று தெரிந்ததும் புன்னகை புரிவதும் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்ட சித்தரிப்பு.
யாவரும் நலம்
நாயகன் மாதவனின் தாய் சரண்யா இதி சீரியல் பைத்தியமாக நடித்துள்ளார். மாதவன் சுவற்றில் ஆணி அடிக்கும்போது கை அடிபட்டுவிட அவ்வளாவுதானா என்றபடி போவார். மனைவிதான் பதறி ஓடி வருவார். இதுபோல் பல காட்சிகள் இருக்கும். முன்காலத்திய திரைப்படங்களின் அம்மாக்களோடு ஒப்பிடும்போது இது பெரிய முன்னேற்றம் தான்.
இந்த இரண்டு படங்களையும் எல்லாத் தரப்பினரும் திரையரங்கில் நன்கு ரசித்தார்கள். மக்கள் இந்த மாற்றத்தை மனதளவில் ஏற்றுக்கொண்டார்கள் என்றே தெரிகிறது.
இனி வரும் ஆக்ஷன் படங்களில் அம்மா-மகன் அதீத பாசக் காட்சிகள் வந்தால் மக்கள் சிரிக்கக் கூட கூடும்
March 27, 2009
1990 ஆம் ஆண்டில் தமிழ்சினிமா – ஒரு பார்வை
புலன் விசாரனை – ஆர் கே செல்வமணி
கேளடி கண்மணி – வசந்த்
பாலம் – கார்வண்ணன்
புதுவசந்தம் – விக்ரமன்
நீங்களும் ஹீரோதான் – வி சேகர்
வைகாசி பொறந்தாச்சு – ராதா மோகன்
புரியாத புதிர் – கே எஸ் ரவிகுமார்
பட்டணந்தான் போகலாமடி – கோலப்பன்
இணைந்த கைகள் – என் கே விஸ்வனாதன்
இதுதவிர இந்த ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
குழந்தை நட்சத்திரமாக பேபி ஷாமிலி அஞ்சலி படத்தின் மூலம் அறிமுகமானார். பின் அவர் நடித்து வெற்றி பெற்ற துர்கா படத்தின் மூலம் தமிழ், தெலுங்கின் முண்ணனி குழந்தை நட்சத்திரமாக மாறினார்.
அஞ்சலி படத்தில் மணிரத்னம் தன் ஆஸ்தான கேமராமேன் பி சி ஸ்ரீராமுக்கு பதிலாக மது அம்பாட்டை பயன்படுத்தினார்.
ராமநாராயணனின் ஆடிவெள்ளி படம் பெரிய வெற்றியைப் பெற்றது. பின் அது பல மொழிகளில் தயாரிக்கப்பட்டு சென்ற இடமெல்லாம் சிறப்பு பெற்றது. ஒரியா, போஜ்பூரி, பெங்காலி ஆகிய மொழிப் படங்களையும் இயக்கிய தமிழ் இயக்குனர் என்னும் பெயரை அவருக்கு பெற்றுத்தந்தது.
கிழக்கு வாசல் படத்தின் மூலம் கார்த்திக் தனது பிலிம் பேர் ஹாட்டிரிக்கை சாதித்தார். (88- அக்னி நட்சத்திரம், 89 – வருஷம் 16).
பா ம க நிறுவனர் ராமதாஸ் முதன் முறையாக பாலம் படத்தில் நடித்தார். (டி வி பேட்டியில் கருத்து சொல்பவராக.) பின் இந்தப் படத்தின் இயக்குநர் கார்வண்ணனின் அடுத்த படமான புதிய காற்றில் ஒரு சிறு வேடத்திலும் நடித்தார். பாலம் திரைப்படத்தில் இந்திய ஹாக்கி அணி தனது கடைசி ஒலிம்பிக் பதக்கத்தை பெற்ற போது காப்டனாக இருந்த வி பாஸ்கரன் வில்லனாக நடித்தார்.
எம் ஜி யார் முதல்வராகும் முன் நடித்து, பாதியில் நின்று போன அண்ணா நீ என் தெய்வம் படத்தின் காட்சிகளை எடுத்து, அதற்கேற்றார் போல் திரைக்கதை அமைத்து, பாக்யராஜ் இயக்கிய அவசர போலிஸ் 100 திரைப்படம் வெளியானது. பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்து எடுத்திருக்கிறோம் என்ற விளம்பரத்துடன் வெளியான இந்த படத்திற்க்கு, பூ அளவிலேயே மக்கள் ஆதரவு தந்தனர்.
இந்த ஆண்டு சரத்குமார் தயாரிப்பில், கலைவாணன் கண்ணதாசன் இயக்கத்தில் வெளியான மிஸ்டர் கார்த்திக் படத்தில் சரத் சிறுவேடத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த ஆண்டு வெளியான புலன் விசாரணை படம் தான் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
அன்பாலயா பிரபாகரன் தயாரிப்பில், ராதா பாரதி இயக்கத்தில் வெளியான வைகாசி பொறந்தாச்சு பெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் அறிமுகமான பிரசாந்துக்கு 50,000 ரூபாய் சம்பளம் அளிக்கப்பட்டது. ஒரு புதுமுகத்துக்கு (ஆண்) அந்த அளவு சம்பளம் கொடுக்கப்பட்டது அதுவே முதல் முறை. இந்தப் பட பாடல்களின் வெற்றி மூலமாகவே தேவாவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் கிடைத்தது.
இரட்டை வேட காட்சிகள் எடுக்க வேண்டுமா? கூப்பிடு என் கே வியை என்பார்கள். அந்த அளவுக்கு இருவேட ட்ரிக் ஷாட்கள் எடுப்பதில் புகழ்பெற்ற என் கே விஸ்வனாதன் இயக்கிய முதல் படம் இணைந்த கைகள். ஆபாவாணன் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் தோல்வி அடைந்தாலும், அடுத்து என் கே வி இயக்கிய பெரிய வீட்டுப் பண்ணக்காரன் வெற்றியைப் பெற்றது.
அபூர்வ சகோதரர்கள் படத்தில் வசனகர்த்தா கிரேஸி மோகன் அதிகம் கவனிக்கப் படவில்லை. குள்ள அப்புவின் விஸ்வரூபம் அப்பட டெக்னீஷியன்கள் அனைவரையும் மறைத்துவிட்டது. ஆனால் இந்த ஆண்டு வெளியான மைக்கேல் மதன காம ராஜன் திரைப்படத்தில் அவர் வசனம் பெருமளவு கவனிக்கப் பட்டது. பின் வெளியான கமலின் நகைச்சுவைப் படங்களுக்கு முன்னோடியகவும் அமைந்தது.
ஜெயபாரதி இயக்கத்தில் டெல்லி கணேஷ் நடித்த உச்சி வெயில் இந்த ஆண்டு வெளிவந்து விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.
கிராமிய கதைகளையும், நகர கதைகளையும் இயக்கி வந்த பாரதிராஜா முதன் முறையாக சென்னை நகர சேரி வாழ்க்கையையும், அரசியல்வாததிகளின் வஞ்சகத்தையும் காட்டிய படம். இதில் பாபு, ரமா ஆகியோர் அறிமுகமானர்கள். தென்னவன் அரசியல்வாதி வேடத்தில் அறிமுகமானார். இவர் நீண்ட இடைவேளைக்குப் பின் ஜெமினி படத்தில் நடித்தார்.
ஒரே படத்தில் இரண்டு படம் என்ற பாலசந்தரின் முயற்சி ஒரு வீடு இரு வாசல் திரைப்படம். இடைவேளைக்கு முன் ஒரு படமும், பின்னர் ஒரு படமும். ஆனால் இரண்டிலும் பெண்ணுரிமை குறித்தான கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன. சினிமா துணை நடிகர்களின் வாழ்க்கையை நன்கு சித்தரித்த படங்களில் இதுவும் ஒன்று.
பாக்யராஜின் உதவியாளராக இருந்த வி சேகர், அவரிடம் இருந்து பிரிந்து, தற்போதயை தமிழக உணவுத்துறை அமைச்சராக இருக்கும் எ வ வேலுவின் துணையுடன் இயக்கிய படம் நீங்களும் ஹீரோதான். எ வ வேலு அப்போது திரை வட்டாரத்தில் தண்டாரம் பட்டு வேலு என அறியப்பட்டவர். இந்தப் படம் நிஜ திரையுலகை காட்டியதால் தோல்வியடைந்தது. பின் வி சேகர் பல லோ பட்ஜெட் படங்களை இயக்கி புகழ் பெற்றார். அவரது படங்களைப் பார்த்தோ என்னவோ அவருக்கு இயக்குநர் சங்க பொருளாலர் பதவியும் கிடைத்தது. சென்ற தேர்தலில் அவர் சுயேச்சையாக நின்ற ஆர் சுந்தர்ராஜனிடம் தோற்றுப் போனார்.
நிலா பெண்ணே படத்தின் மூலம் திவ்யபாரதி நாயகியாக இங்கு அறிமுகமானார். பின் பல இந்திப் படங்களில் நடித்து அகால மரணாமடைந்தார்.
(தொடரும்)
March 26, 2009
காரியவாதி?
அவள் சொன்ன விஷயம் இதுதான் “நம்ம சுகந்தி ஆபிஸுல ஒருத்தன் புதுசா ஜாயின் பண்ணியிருக்கானாம். அவன் தினமும் அவளை தொல்லை பண்ணிக்கிட்டேயிருக்கானாம். அவளுக்கு எப்படி அவங்க வீட்டுக்காரர் கிட்ட இதை சொல்லுறதுன்னு தெரியலையாம்”.
இதில் வீட்டுக்காரர் என்று குறிக்கப்படுபவர் என் நண்பன் சிவா. காரியவாதி என்று பெயரெடுத்தவன். வேலைக்குப் போகும் பெண்ணாக இருக்கவேண்டும், குடும்பத்தில் ஓரளவுக்கு வசதி இருக்கவேண்டும், அதே வேளையில் பெண் கோபித்துக் கொண்டு வந்தால் அவளை அரவணைக்க முடியாத அளவுக்கு அங்கே பிரச்சினைகள் இருக்க வேண்டும் என்று மணல் கயிறை மிஞ்சிய நிபந்தனைகளுடன் பெண் தேடி அதில் வெற்றியும் பெற்றவன்.
இதுதான் போகட்டும் என்றால் பெண்ணுக்கு உரிமை கொடுப்பதில் தாலிபானை மிஞ்சிய பழமைவாதியாக இருந்தான். அவன் மனைவியின் ஜாக்கெட், ஒளி மட்டுமல்ல நீரும் ஊடுருவ முடியாத அடர்த்தியில் இருக்கும். ஜாக்கெட் கையின் நீளம் முழங்கையை தாண்டி இருக்கும். சங்க இலக்கியங்களில் சொல்வார்களே ‘சேல் அகற்றிய விழியாள்”, அதாவது கண்கள் நீண்டு காதுவரை இருக்கும் என. அதுதான் அவள் மனைவியின் ஜாக்கெட்டைப் பார்க்கும் போது நினைவுக்கு வரும்.
ஆமாம் அந்த ஜாக்கெட்டின் மேல்பகுதி கழுத்து வரையும், கீழ் பகுதி பாவாடை வரையும் நீண்டிருக்கும். சூரத் சென்று பிரத்யேகமாக வாங்கிவருவானோ என்று எண்ணும் படி அவள் உடுத்தும் சேலையின் நீளமும் அகலமும் ஆச்சரியப்படுத்தும். அந்த சேலையை சுற்றிக்கொண்டு அவள் வரும்போது எகிப்திய மம்மி ஒன்று எதிரில் வருகிறதோ எனத் தோன்றும். ஆனால் மம்மிகள் முகத்திற்க்கு மஞ்சள் பூசி கேரம் போர்ட் ரெட் காயினை நெற்றியில் ஒட்டிக் கொண்டு வராதே.
இப்படி வருபவளையா ஒருவன் தொல்லை செய்கிறான்?. 29 வயசிலே 49 வயசுக்காரி மாதிரி இருப்பாளேடா? பாலியல் வறட்சி தமிழ்நாட்டில் உண்மையிலேயே அதிகரித்து விட்டது போலிரிக்கிறதே என ஆச்சரியப் பட்டேன்.
இது நடந்த ஒரு வாரத்தில் அலுவலக வேலையாக சுகந்தி இருக்கும் அலுவலகம் வழி செல்ல நேரிட்டது. சரி விசாரிப்போம் என அங்கே நுழைந்தேன். சுகந்தி குனிந்த தலை நிமிராமல் வேலை செய்து கொண்டிருந்தாள். பரஸ்பர உரையாடலுக்குப் பின் அவள் காட்டிய திசையில் துறு துறு வனெ ஆரம்ப இருபதுகளில் இருந்த ஒரு வாலிபனைப் பார்த்தேன். பின் யோசனையுடன் விடைபெற்றேன்.
அலுவலகம் முடிந்து வீட்டிற்க்கு திரும்பியவுடன் மனைவி கொடுத்த தேனீரை பருகிக் கொண்டே ஆரம்பித்தேன். “ சுகந்தி பொய் சொல்ற மாதிரி தெரியுதே?. ஒரு வேளை இந்த மாதிரி பேச்சு கிளம்புனா, சிவா தன் கிட்டே அன்பா நடந்துக்கிடுவான்னு அவளே கிளப்பி விடுற மாதிரி தெரியுதே என்றேன்.
அவள் பார்த்த பார்வையில் ஆறிக் கொண்டிருந்த தேனீர் சூடானது போல் இருந்தது. கோபத்துடன் சொன்னாள் “ எந்தப் பொண்ணும் தான் கேரக்டர் ஸ்பாயில் ஆகிறத விரும்பவே மாட்டா”.
உங்க லாஜிக்ல ஓட்டை இல்லை பெரிய பள்ளமே இருக்கு என வழக்கம் போல கடுப்படித்துவிட்டு டிவி பார்க்க சென்றாள்.
இந்த டிவிக்கள் பல வழிகளில் நம்மை படுத்தி எடுத்தாலும் சில நேரம் நல்லது செய்வதுமுண்டு. அதில் ஒன்று பெண்கள் தினத்தை முன்னரே அறிவித்து விளம்பரம் செய்வது. சென்ற ஆண்டு போல இந்த ஆண்டும் வாங்கிக் கட்டிக் கொள்ளக்கூடாது என முடிவெடுத்த நான், சர்பிரைஸ் கிப்ட் ஒன்றை வாங்க ஸ்பென்சரில் நுழைந்தேன்.
எதை, எவ்வளவுக்கு வாங்கினால் திட்டு விழாமல் இருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தபோது ப்ளு கலர் ஜீன்ஸ் ஸ்கர்ட்டும், மஜந்தா கலர் டாப்ஸூம் அணிந்த பெண்ணொருத்தி என்னை கடந்து சென்றாள். வடிவழகும் நடையழகும் பெருமூச்சு விட வைத்தன. என்ன அவள் போட்டிருந்த போனிடெயில் தான் குதிரை வாலின் நீளத்தைத் தாண்டி டைனோசர் வால் அளவுக்கு நீண்டிருந்தது.
அப்போது ஒரு துறு துறு இளைஞன் அவளிடம் ஒரு கைப்பையை கொண்டு வந்து நீட்டினான். இவன எங்கேயோ பார்த்திருக்கமே என்று யோசிக்கையில், அவள் எதேச்சையாக திரும்பினாள். அட சுகந்தி!.
எப்படி ரியாக்ட் செய்வது எனத் தெரியாமல் இலக்கற்று பார்த்துக் கொண்டிருந்தபோது என்னை நெருங்கினாள் அவள். என் கண்களைப் பார்த்து சொன்னாள் “ எனக்கும் பொண்ணுக போல இருக்கணும்னு ஆசை இருக்குல்ல”.
March 25, 2009
தமிழ்சினிமாவில் மேற்கு மாவட்டங்களின் சித்தரிப்பு
வட மாவட்டங்களை சித்தரித்து மறுமலர்ச்சி, (வாட்டாகுடி) இரணியன் ஆகிய படங்கள் வெளிவந்தன. மறுமலர்ச்சி படத்தின் ஒளிப்பதிவாளரான தங்கர் பச்சான் இயக்குனரான பின் தான் இயக்கிய அழகி, சொல்ல மறந்த கதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம் ஆகிய படங்களை வடமாவட்ட பிண்ணனியில் இயக்கினார். முத்துக் குளிக்க வாரீயளா, நிலாவே வா, டும் டும் டும், கோவில் ஆகிய படங்கள் நாஞ்சில் நாட்டு பின்புலத்தில் எடுக்கப்பட்டாலும் அவை அம்மண்ணை இயல்பாக சித்தரித்தனவா என்பது கேள்விக்குறி.
நம் முன் உள்ள கேள்வி, மேற்கு மாவட்டங்களை அவற்றின் இயல்புடன் யதார்த்தமாக சித்தரித்து படங்கள் வந்துள்ளனவா?. ஏனெனில் 1990க்குப் பின் மேற்கு மாவட்ட பிண்ணனியில் ஏராளமான படங்கள் வந்துள்ளன. தேவராஜ், கே பாக்யராஜ், ஆர் சுந்தர்ராஜன், மணிவண்ணன், பாலு ஆனந்த், ஆர் வி உதயகுமார். அனுமோகன், சி ரங்கனாதன், ராஜகுமாரன் என பல இயக்குநர்கள் மேற்கு மாவட்டங்களில் இருந்து வந்துள்ளார்கள். இதுதவிர சென்னை வாசியான கே எஸ் ரவிகுமார், நெல்லைக்காரரான விகரமன் ஆகியோரும் மேற்கு மாவட்ட படங்களை ஈரோடு சௌந்தர் என்னும் வசனகர்த்தா உதவியுடன் இயக்கினார்கள்.
முதலில் மேற்கு மாவட்டங்களை அடிப்படையாக கொண்ட சில படங்களையும், பின்னர் அவை இம்மண்ணை யதார்த்தமாக சித்தரித்ததா, இல்லையா என்பதனையும் பார்ப்போம்.
மக்களைப் பெற்ற மகராசி (1957)
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் வந்த புராண படங்கள் இலக்கண சுத்தமான வசனங்களால் நிரம்பியிருந்தது. பிராண நாதா போன்ற வசனங்களும் பெருமளவு உபயோகப்பட்டன. சமூக கருத்துடன் வெளிவந்த மேனகா, தியாக பூமி ஆகிய படங்களிலும் வட மொழி கலந்த தமிழே பேசப்பட்டது. 1947 ஆம் ஆண்டில் கருணாநிதி ராஜகுமாரி என்னும் திரைப்படம் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமான பின் வட மொழி கலப்பில்லாத மையத் தமிழ் படங்களில் இடம் பெறத் தொடங்கியது. இதை மையத் தமிழ் என்று சொல்ல காரணம் இதில் இடம்பெற்ற வார்த்தைகள் மிகப் பொதுவானவை. இதில் எந்த வட்டார வழக்கும், இடுகுறிச் சொற்களும் இல்லாமல் இருந்தன. இச்சூழ்நிலையில் சோமு இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த இந்தப் படத்தில் மேற்கு மாவட்ட வட்டார வழக்கு முதன் முதலில் பயன்படுத்தப் பட்டது. அதுவரை மையத்தமிழ் பேசி நடித்த சிவாஜி இதில் கொங்கு மொழியை பேசினார்.
சொத்துக்களை கவர்ந்து கொண்டு தங்கையை அண்ணன் விரட்டி விடுகிறான். தங்கையின் (கண்ணாம்பா) மகன் செங்கோடன் (சிவாஜி) மாமன் மீது கோபத்துடன் வளர்கிறான். மாமன் தன் மகனை பட்டணத்தில் படிக்க வைக்க, செங்கோடனும் தன் தங்கையை அங்கே படிக்க வைக்கிறான். குடும்ப பகையை மறந்த இளசுகள் காதலிக்கிறார்கள். இருவர் வீட்டிலும் எதிர்ப்பு. ஒருநாள் குளக்கரையில் பிணமாக ஒதுங்குகிறார்கள் காதலர்கள். எல்லோரும் கதற, நடிப்புத்தான் என எந்தரிக்கிறார்கள் காதலர்கள். இந்த இடத்தில் இன்னொரு திருப்பம். கண்ணாம்பா உயிர்தியாகம் செய்து மக்களைப் பெற்ற மகராசியாகிறார்.
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி என்னும் அருமையான பாடல் இடம் பெற்ற திரைப்ப்டம் இது.
ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
இயக்குனர்களின் பொற்காலமாக விளங்கிய பின் 70களில் வந்த முக்கிய திரைப்படம் இது. தேவராஜ் இயக்கி, இளையராஜா இசையமைத்த இந்தப் படம் சிவகுமாரின் 100ஆவது படம். சேலம் அருகிலுள்ள வண்டிச்சோலை கிராமத்தில் சுதந்திரம் கிடைத்த காலகட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளை சொல்லிய படம் இது. செம்பட்டை (சிவகுமார்) ஊர் மக்களுக்கு தேவையான பொருட்களை வெளியூரில் இருந்து வாங்கி வந்து தந்து அதன் மூலம் வாழ்க்கை நடத்துபவன். அவனுக்கு பட்டணப் பெண் (தீபா) மனைவியாகிறாள். அந்தக் கிராமத்துக்கு வரும் வனத்துறை அதிகாரி (சிவசந்திரன்) தீபாவின் தந்தைக்கு அறிமுகமானவர் என்பதால் இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. இது தொடர்ந்து ஊராருக்கும் தெரியவருகிறது. இதை தாங்க முடியாத செம்பட்டை தற்கொலை செய்து கொள்கிறான்.
இந்தப் படம் பல குறியீடுகளை கொண்ட படம். கிராமத்துக்கு பட்டணப் பெண் வருவதை ஊருக்கள் நாகரீகம் வருவதற்க்கு இணையாக கொள்ளலாம். அவள் மூலம் ஊருக்குள் ஏற்படும் மாற்றம், நாகரீகத்தால் ஏற்படும் மாற்றங்களிக் குறிக்கிறது. அந்த கால கட்டத்தை அருமையாக திரையில் பிரதிபலித்த இந்தப் படத்தில் வெத்தலை வெத்தலை வெத்தலையோ, என்னுள்ளே ஏதோ, உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி ஆகிய பாடல்கள் புகழ்பெற்றவை.
வாழ்க்கை சக்கரம் (1990)
மேற்கு மாவட்டத்தை சேர்ந்த சத்யராஜ், கவுண்டமணி முக்கிய வேடங்களில் நடிக்க அதே பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் இயக்கிய படம். இந்தப் படம் வரதட்சிணை கொடுமையைப் பேசினாலும், அது மேற்கு மாவட்டத்தை கதைக்களமாக கொண்டும், அப்பகுதியில் உள்ள வழக்கோடும் கையாளப்பட்டது. சத்யராஜ் காவல்துறை துணை ஆய்வாளர். அவரது தந்தை தன் மகனுக்கு வசதியான இடத்தில் பெண் பார்க்கிறார். மணிவண்ணனின் மகள் கௌதமியை நிச்சயம் செய்கிறார்கள். இவர்கள் கேட்ட அதிக வரதட்சணையை திரட்ட மணிவண்ணன் மிகவும் சிரமப் படுகிறார். திருமண நாளன்று அதை அறிந்த சத்யராஜின் தந்தை திருமணம் வேண்டாம் என மறுக்கிறார். இதை அறிந்து கோபப்படும் சத்யராஜ், தன் தந்தையை சமாளித்து திருமணத்திற்க்கு அனைவரையும் அழைத்துக் கொண்டு செல்கிறார். செல்லும் பேருந்து விபத்துக்குள்ளாகிறது. இதை அறியாத மணிவண்ணன் மாப்பிள்ளை வீட்டார் வரவில்லையே என தற்கொலை செய்து கொள்கிறார்.
இதே போல் சத்யராஜ் மிகவும் மதிக்கும் ஊர் பெரியவர் விஜய கிருஷ்ண ராஜ், வாழ்ந்து கெட்டவர். அவர் தன் ஒரே மகளுக்கு மாப்பிள்ளை தேடுகிறார். சாதாரண நிலையில் இருப்போர் பெரிய வீடு என தயங்க, வசதியானவர்களோ இவரிடம் பெண் எடுத்தால் பணம் கிடைக்காது என நழுவுகிறார்கள். இந்நிலையில் சாராயம் காய்ச்சும் வசதியான குடும்பம் பெண் கேட்கிறது. திருமணம் நடந்தால் சரி என பெரியவரும் ஒத்துக் கொள்கிறார். சாராயம் காய்ச்சுபவர்கள் பெண்ணை கொடுமைப் படுத்த அவர்களி கொன்று விட்டு சிறைக்குச் செல்கிறார் சத்யராஜ். திரும்பி வந்து உன்னை மணந்து கொள்கிறேன் என கௌதமியிடம் சொல்லிவிட்டு.
இந்தப் படத்தில் விஜய கிருஷ்ணராஜ் பேசும் வசனங்களும், கவுண்டமணியின் வசனங்களும் கவனிக்கப் பட வேண்டியவை. தலைமை காவலரான கவுண்டமணியிடம், சத்யராஜ் ஏன் லஞ்சம் வாங்குகிறீர்கள் எனக் கேட்க அதற்க்கு அவர் சொல்வார். “கவர்மெண்டு தர்ற சம்பளத்துல லத்தியக் கூட தூக்கமுடியாது”. 100% சத உண்மை. ஏனெனில் அப்போதைய கால கட்டத்தில் காவலர்களின் சம்பளம் மிகக் குறைவு. அரசு வீடுகள் இல்லாவிட்டால் சென்னை போன்ற இடங்களில் அவர்களால் வாடகை கொடுத்துகூட தங்க முடியாது. இது இன்னும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
மதுரை வீரன் எங்க சாமி (1990)
சத்யராஜ் நடித்த இந்தப் படத்தில் மேற்கு மாவட்டங்களில் நிலவும் சாதிப் பிரச்சினை கையாளப் பட்டிருந்தது. மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு சாதாரண கமர்சியல் படமாகத் தோன்றும் இதில் தான் முதன் முதலாக மேற்கு மாவட்டங்களில் சமகாலத்தில் நிலவும் சாதிப் பிரச்சினை காட்டப்பட்டது. மூன்று ஆண், மூன்று பெண் கொண்ட வசதியான மேட்டுக்குடி குடும்பம். இதில் ஒரு பெண் (ஜெயபாரதி) மட்டுமே அறிவானவர். மற்ற இரு பெண்கள் அப்படியில்லை. ஜெயபாரதி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த சத்யராஜை காதலிக்கிறார். அவரை வீட்டை விட்டு துரத்தும் அண்ணன்கள் மற்ற இரு பெண்களுக்கும் தங்கள் சமூகத்தில் இருக்கும் வசதி மட்டும் அறிவற்ற மாப்பிள்ளைகளுக்கு திருமணம் செய்து சொத்தை அபகரித்துக் கொள்கிறார்கள். ஒரு குழந்தை பிறந்ததும் சத்யராஜ் இறந்துவிட தவிக்கிறார் ஜெயபாரதி. பின்னர் அவர் மகன் ( வேறு யார்? இதுவும் சத்யராஜ் தான்) மாமன்களை எப்படி வழிக்கு கொண்டு வருகிறார் என்பதே கதை. இதில் பலூன் கந்தசாமியாக கவுண்டமணி பல சேட்டைகளை செய்வார். சத்யாராஜுக்கு ஜோடியாக ரூபிணி நடித்திருந்தார்.
சேரன் பாண்டியன் (1991)
சென்னைவாசியான கே எஸ் ரவிகுமார் இயக்கிய படம். சரத்குமாருக்கு திருப்புமுனையாக அமைந்த படம். ஊர் பெரிய மனிதருக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ஒரு மனைவியும், அதன் மூலம் ஒரு மகனும்,மகளும் (சரத்குமார், சித்ரா) உண்டு. முதல் மனைவியின் மகன் (விஜயகுமார்) இவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. தாழ்த்தப் பட்ட்டவர்களாகவே பார்க்கிறார். இந் நிலையில் விஜயகுமாரின் சமூகத்தை சேர்ந்த நாகேஷ் தன் சுயநலத்துக்காக அண்ணன் தம்பிக்கு இடையில் சண்டையை வரவழைக்கிறார். முடிவு என்ன?. இந்தப் பட வசன கர்த்தா ஈரோடு சவுந்தர் விஜயகுமாருக்காக எழுதிய வசனங்கள் சாதியை தூக்கிப் பிடிப்பதாகவே எழுதப்பட்டன. பிற்பாதியில் விஜயகுமாரின் மனைவி மஞ்சுளா மூலம் அதற்க்கு பதிலடி கொடுக்கப்பட்டது. பாடல்கள், கவுண்டமணி செந்தில் நகைச்சுவை மூலம் மையக்கருத்து நீர்த்து போகவே செய்யப்பட்டது. இந்தப்படத்தில் மேற்கு மாவட்ட வீடுகள், அவர்கள் உண்ணும் முறை ஆகியவை இயல்பாக காட்டப்பட்டன
(தொடரும்)
March 19, 2009
1988 ஆம் ஆண்டு திரைப்படங்கள் – இரண்டாம் பகுதி
கனம் கோர்ட்டார் அவர்களே
இதுவரை வந்த எல்லாத் திரைப்படங்களிலும் வக்கீல்களை வசதியானவர்கள், பொய்யாக வாதாடுபவர்கள் என்ற தோற்றம் வரும்படியே சித்தரித்திருப்பார்கள். மிக சில படங்களில் மட்டுமே உதவி வழக்கறிஞர்களின் பொருளாதார பிரச்சினையை (மிடில் கிளாஸ் மாதவன், கலக்குறே சந்துரு) சித்தரித்திருப்பார்கள். இனிவரும் படங்களில் அவர்களை கலககாரர்களாக கூட (ஏற்கனவே சுந்தர் சி யின் தீ படத்தில் ஓரளவு காட்டியாகிவிட்டது) சித்தரிப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் தான் ஒரு பிரபல வக்கீலின் உதவியாளர்கள் எந்தெந்த வேலையெல்லாம் செய்ய வைக்கப் படுகிறார்கள், அவர்களுக்கு கிடைக்கும் பொருளாதார சுதந்திரம் என்ன என தெளிவாக காட்டியிருப்பார்கள்.
அதுவரை பெரும்பாலும் காமெடி வேடங்களிலேயே நடித்துக் கொண்டிருந்த எஸ் எஸ் சந்திரன் இதில் சீனியர் வக்கீலாக கனமான வேடத்தில் நடித்திருந்தார். அவரின் மனைவியாக ஸ்ரீவித்யாவும், ஜுனியர் வக்கீலாக சத்யராஜும் நடித்திருந்தனர். சத்யராஜின் காதலியாக அம்பிகா. எஸ் எஸ் சந்திரன் சில்க் ஸ்மிதா விரிக்கும் வலையின் மூலம் ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார். மற்றவர்கள் கைவிட்ட நிலையில் கடைசி ஜூனியரான சத்யராஜ் எஸ் எஸ் சந்திரனை காப்பாற்ற முயற்சிக்கிறார். பின்னர்தான் தெரிகிறது இதற்க்குப் பின் ஒரு பெரிய கூட்டமே இருக்கிறதென்று. வழக்கம் போல் எல்லா வில்லன்களையும் புஜ பல பராக்கிரமத்தால் வென்று சீனியரை காப்பாற்றுகிறார்.
மணிவண்ணன் இயக்கிய இந்தப் படத்தின் தோல்விக்கு காரணம், எதார்த்தமான முன்பகுதியும், அதற்க்கு சற்றும் சம்பந்தமேயில்லாமல் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்ட பின்பாதியும் தான். வருமானமில்லாத காரணத்தால் முழங்காலுக்கு சற்று கீழ் வரை ஏறிப்போன பேண்டும், சோடாபுட்டி கண்ணாடியும், அப்பாவித்தனமான பேச்சுமாக வளைய வரும் சத்யராஜ் திடீரென்று மெஷின் கன்னை அனாயசமாக கையாளுவது, ”தமிழ் சினிமாவில் லாஜிக் பார்ப்பது என்பதே லாஜிக் இல்லாதது” என்று நம்புவர்களைக் கூட திகைப்பில் ஆழ்த்தியது.
கதாநாயகன்
நாயகனை முதலில் தயாரித்து பின் ஜிவியிடம் கொடுத்த முக்தா பிலிம்ஸாரின் அடுத்த தயாரிப்பு கதாநாயகன். பாண்டியராஜன், எஸ் வி சேகர், ரேகா நடித்த இந்தப் படம் ஒரு மலையாளப் படத்தின் தழுவல். நான் பி காம் பர்ஸ்ட் கிளாஸ், இவன் எஸ் எஸ் எல் சி, சைக்கிளுக்கு ட்ரைவர் வச்சுருக்கவன் நான் போன்ற பாண்டியராஜன் டைப் காமெடி, மாடு வைத்திருக்கும் கோனாரிடம் இந்த கோனார் நோட்ஸ் போடுறது நீங்கதானா? ஐஞ்சு டெல்லிப் பசு, பத்து பாம்பே பசு, பத்து கல்கத்தா பசு போன்ற எஸ் வி சேகர் டைப் காமெடி, சந்திரபோஸின் இசையில் பாடல்கள் என நன்கு ஓடியது இந்தப் படம்.
இதன் மூலமான நாடோடிக்காட்டில் மோகன்லாலும், ஸ்ரீனிவாசனும் அதகளம் பண்ணியிருப்பார்கள்.
குரு சிஷ்யன்
இன்சாப் கி புகார் என்னும் இந்திப்படத்தை தழுவி எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் பஞ்சு அருணாசலம் தயாரித்த வெற்றிப் படம். ரஜினி,பிரபு,சீதா, சோ மற்றும் ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்த இந்தப் படத்தின் மூலம் கௌதமி அறிமுகமானார். கவர்னர் ஆட்சி நடந்து கொண்டு இருந்த சூழ்நிலை. இது தொடர்பான பல காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கும். நாற்காலிக்கு சண்டை போடும் நாமெல்லாம் பைத்தியம் தாண்டா (வரிகள் மாற்றப் பட்டன். முதலில் நாமெல்லாம் பாரத நாடு என இருந்தது). காவலர்கள் அரசியல் பேசிக்கொண்டிருக்கும் போது கைதி பிரபு இடையில் புகுந்து “சிவாஜிதான்யா ஜெயிப்பாரு” என்பார். சோ சிந்திக்கும் போது தன் கைவிரல்களால் அத்தனை சின்னங்களையும் கொண்டு வருவார். இந்தப் படத்தில் ரஜினியின் பஞ்ச் டயலாக்கான “நாங்க செய்யறத தான் சொல்லுவோம், சொல்லுறத தான் செய்வோம்” என்பது திமுகவால் சொல்வதை செய்வோம் என பிரச்சாரத்தில் உபயோகப் படுத்தப் பட்டது.
தர்மத்தின் தலைவன்
கஸ்மே வாடி இந்திப் படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். குஷ்பூ அறிமுகமான படம். இதிலும் ரஜினியுடன் பிரபு உண்டு. சுஹாசினி இணை. ரஜினியின் ஞாபகமறதி காமெடி மிகவும் ரசிக்கப் பட்டது. ஓரளாவு ஓடினாலும் பெரிய வெற்றி அடையவில்லை.
ஊர தெரிஞ்சுக்கிட்டேன்
கலைப்புலி தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து பிரிந்த ஜி சேகரன் தயாரித்து இயக்கிய படம். பாண்டியராஜன் நாயகன். நண்பனாக செந்தில். இந்தப் படத்தின் முதல் பகுதி காமெடி காட்சிகள் இன்று வரை பலராலும் மறக்க முடியாதவை.
பிம்பிலிக்கி பிலாப்பி, மாமா பிஸ்கோத்து, கள்ள மொய் எழுதுவது என அமர்க்களமான முதல் பாதியும் பின்னர் அதை நியாயப் படுத்தும் கனமான பின் பாதியும் எல்லோராலும் ரசிக்கப்பட்டது. சொத்துக்காக பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்யும் சமுதாயப் பிரச்சினையும் படத்தில் தொடப்பட்டிருந்தது.
என் தங்கை கல்யாணி
ராஜேந்தரின் பாணியான மெகா செட்டுகள், தங்கைப் பாசம், காதலியிடம் காதலை மறைப்பது போன்ற அம்சங்களுடன் வந்து வெற்றியடைந்த கடைசிப் படம். இத்ற்க்குப் பின் அவரது படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. (சிம்பு நடித்த எங்க வீட்டு வேலன் விதிவிலக்கு. அதில் மேற்கண்ட அம்சங்கள் இருக்காது). ரிக்சா ஓட்டும் தொழிலாளியாக நடித்த டி ராஜேந்தர் கனவு பாடல்களில் ஜிகினா சட்டையுடன் ஆடி வெற்றி பெற்றார்.
என்னை விட்டுப் போகாதே
டி கே போஸ் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியான தாய் பாசத்தை அடிப்படையாகக் கொண்ட ராமராஜன் படம். கிராமத்து ரசிகர்களை இந்தப் படம் வெகுவாக கவர்ந்தது. பொறுப்பில்லாமல் ஊர் சுற்றும் ராமராஜன், கூலி வேலை செய்து காப்பாற்றும் அம்மா. அம்மாவின் மறைவுக்குப் பின் திருந்துவது என வழக்கமான கதை. ஆனால் டி கே போஸின் இயல்பான வசனங்களும், இளையராஜாவின் இசையும் படத்தை தூக்கி நிறுத்தின. இந்த டி கே போஸ் சென்ற ஆண்டு வெளியான கொடைக்கானல் என்னும் படத்தையும் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ”பொன்னப் போல ஆத்தா என்னை பெத்து போட்டா, என்னப் பெத்த ஆத்தா கண்ணீர தான் பார்த்தா” என்னும் பாடல் இளையராஜாவின் தாய் பாச பாடல்களில் குறிப்பிடத்தக்கது.
உன்னால் முடியும் தம்பி
இதுவரையில் கே பாலசந்தரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடித்த கடைசி படம். 21 ஆண்டுகள் ஆகிவிட்டன, இருவரும் இணைந்து. ஜெமினி கணேசன், சீதா, மனோரமா, ஜனகராஜ் நடித்து இளையராஜா இசையில் வெளியானது. கடைசி அரை மணி நேர சொதப்பலால் தோல்வியடைந்த முதல் பத்துப் படங்களில் இதற்க்கும் ஒரு இடமுண்டு. நல்லாத்தானய்யா போயிக்கிட்டு இருந்துச்சு என்னும் வண்ணம் கடைசி அரை மணி நேரத்தில், சிறந்த குடிமகன் விருது, அதைக் கொடுக்க பிரதமர் (ராஜீவ் காந்தி சாயலில் ஒருவர், மொழி பெயர்க்க சிதம்பரம் சாயலில் ஒருவர் வேறு) என சொதப்பி விட்டார்கள். அப்போது பிரபலமாகிக் கொண்டிருந்த மக்கள் சக்தி இயக்கத் தலைவர் உதயமூர்த்தியை இன்ஸ்பிரேஷனாக கொண்டு கதாநாயகனது கேரக்டரை அமைத்திருந்தார்கள் (பெயர் உட்பட).
இளையராஜா இசையில் நஞ்சை உண்டு புஞ்சை உண்டு, அக்கம் பக்கம் பாரடா, என்ன சமையலோ, விழியில் கதை எழுதும் நேரமிது என இனிமையான பாடல்கள். ஜெமினி, மனோரமா, ஜனகராஜின் அசத்தலான நடிப்பு என இருந்தும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ரமேஷ் அரவிந்த், தாரிணி ஆகியோர் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமானார்கள்.
உரிமை கீதம்
பிற்காலத்தில் கிராமிய படங்களில் முத்திரை பதித்த பிலிம் இண்ஸ்டிடூட் மாணவர் ஆர் வி உதயகுமாரின் முதல் படம். நல்ல சஸ்பென்ஸ் திரில்லர். பிரபு,கார்த்திக்,ரஞ்சனி,பல்லவி, ஜனகராஜ் நடித்தது. கார்த்திக்கின் தந்தை முதலமைச்சர். அவரை பிரபு சுட்டுக் கொன்று விட்டதாக போலிஸ் துரத்துகிறது. கார்த்திக்கும் துரத்துகிறார். ஆனால் பிரபு சதியால் சிக்கியவர் எனத் தெரிந்ததும் இருவரும் இணைந்து எதிரிகளை வீழ்த்துகிறார்கள். ஜனகராஜ் இதில் துணி தேய்ப்பவர் வேடத்தில் அசத்தியிருப்பார். இந்த ஆண்டு ஜனகராஜின் ஆண்டு என்று கூட சொல்லலாம். அவ்வளவு வித்தியாச வேடங்கள். இசை மனோஜ் – கியான். மெல்ல மெல்ல நடந்து வந்தது பாதம் என்னும் அருமையான பாடலும் உண்டு. சுவராசியமான காட்சிகளால் படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருப்பார் ஆர் வி உதயகுமார்.
மற்றவை அடுத்த பகுதியில்
March 18, 2009
ரகுவரன் – சில நினைவுகள்
கே எஸ் அதியமான் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி, கார்த்திக் நடிப்பில் தொட்டாச்சிணுங்கி படம் வந்து வெற்றி பெற்றிருந்த நேரம். அதை இந்தியில் தயாரிக்கப் போவதாக செய்தி வந்திருந்தது. நான் அப்போது தங்கியிருந்த மேன்ஷனில் இருந்த உதவி இயக்குநர் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார் “ரகுவரன் ரோல அங்க யாரு பண்ணப்போறா?”. உடனே அங்கே ஒரு மௌனம் நிலவியது. அங்குதான் ஏகப்பட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்களே, இந்த வேடத்தை பண்ண மாட்டார்களா? என்ன? என்று நான் யோசித்தேன்.
ஒரு கணவன், தன் மனைவி தன்னை மட்டுமே நாயகனாக ஆராதிக்க வேண்டும், அன்பைப் பொழிய வேண்டும் என்று நினைக்கிறான். மனைவியோ ஒரு பாடகனிடம் தாய்மை அன்பு செலுத்துகிறாள். கணவன் இதனால் மனைவியிடம் கோபம் கொள்கிறான். சிறிது பிசகினாலும் தவறான அர்த்தம் வந்துவிடக் கூடிய வசனங்கள். ரகுவரன் அதை மிக எளிதாக கையாண்டு இயக்குநர் நினைத்த உணர்வை பர்வையாளனுக்கு கொண்டு சென்றிருப்பார். அதில் முக்கிய காட்சி ஒரு பாடலை பாடிவிட்டு “நான் பாடுறது நல்லா இல்லைன்னாலும் நீ நல்லா இருக்குன்னு சொல்லனும்” என்று ஏக்கத்துடன் பேசும் காட்சி. இந்தக் காட்சிக்கு கை இல்லாதவர்களைத் தவிர எல்லோரும் திரையரங்கில் கைதட்டுவார்கள்.
அப்போது (90 களின் மத்தியில்) சில உதவி இயக்குநர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களின் மனதில் உள்ள கதையை சொல்வார்கள். ஏறக்குறைய எல்லோர் கதையிலும் ரகுவரனுக்கு ஒரு பாத்திரம் இருக்கும். நான் கூட கேட்பதுண்டு ரகுவரன் வேண்டும் என்பதற்க்காகவே இதை நுழைத்தீர்களா? என்று. அவர்களின் பதில் “ சில கதாபாத்திரங்களை நினைக்கும் போதே முதல் தேர்வாக ரகுவரனின் முகமே எங்களுக்கு தோன்றுகிறது” என்று. அந்த அளவுக்கு தன் நடிப்பால் பலர் உள்ளங்களில் படிந்தவர் அவர்.
எம்ஜியார் பிடிக்காதவர்கள், சிவாஜி பிடிக்காதவர்கள், ரஜினி பிடிக்காதவர்கள், கமல் பிடிக்காதவர்கள், கவுண்டமணி பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ரகுவரனை பிடிக்கவில்லை என்று சொன்ன யாரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை.
அடையார் திரைபடக் கல்லூரியில் நடிப்புக்கான பட்டயப் படிப்பை முடித்த ரகுவரன் சில காலம் நாடகங்களில் நடித்து வந்தார். 1982 ஆம் ஆண்டு தன் 23 வயதில் ஏழாவது மனிதன் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். ஹரிஹரன் இயக்கத்தில் வைத்தியனாதன் இசையில் வெளியான இந்தப் படம் வணிக ரீதியிலான வெற்றி பெறவில்லை. ஆனால் பாடல்கள் பெரிதும் பேசப்பட்டன. காரணம் அவர்கள் உபயோகப் படுத்தியது பாரதியாரின் பாடல்கள். பின்னர் 83ஆம் ஆண்டு ஒரு ஓடை நதியாகிறது படத்தில் நடித்தார்.
அவருக்கு திருப்புமுனையான ஆண்டு, 1986 ஆம் ஆண்டு. குடிப்பழக்கத்தின் கொடுமைகளை விவரித்து சிவசங்கரி எழுதிய நாவல் தூர்தர்ஷனில் “ஒரு மனிதனின் கதை” என்ற பெயரில் ஒளிபரப்பானது. இயக்கம் எஸ் பி முத்துராமன், தயாரிப்பு ஏவிஎம். இதில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான தியாகு என்னும் மையப் பாத்திரத்தில் அனாசயமாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் ரகுவரன். இதே ஆண்டு ஏவிஎம் தயாரித்த சம்சாரம் அது மின்சாரம், மிஸ்டர் பாரத் ஆகிய படங்களில் ரகுவரனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இரண்டு வேடமும் இரண்டு துருவங்கள். சம்சாரம் அது மின்சாரத்தில் சிதம்பரம் என்னும் நடுத்தர வர்க்க சுயநலவாதி. மிஸ்டர் பாரத்தில் இட ஆக்ரமிப்பு செய்திருக்கும் பேட்டை தாதா. இரண்டிலும் தன் நடிப்பால் அசத்தினார்.
1987 ஆம் ஆண்டு பாசிலின் இயக்கத்தில் வந்த பூ விழி வாசலிலேவில் கால் ஊனமுற்ற கொலைகாரன் வேடம். மக்கள் என் பக்கத்தில் டான் சத்யராஜின் வலதுகை. இந்த இரண்டு படங்களின் வெற்றி அவருக்கு தமிழ்சினிமாவில் நிலையான இடத்தைத் தந்தது. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து வி சி குகநாதன் இயக்கத்தில் மைக்கேல்ராஜ், கைநாட்டு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். முதலுக்கு மோசமில்லாத படங்கள். இந்தக் காலகட்டத்தில் ரஜினியின் ஆஸ்தான வில்லனாகவும் ரகுவரன் மாறியிருந்தார். ஊர்காவலன், மனிதன், ராஜா சின்ன ரோஜா என் ரஜினியுடன் தொடர்ந்து மல்லுக்கட்டினார். பாசிலின் இயக்கத்தில் அடுத்து வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்திலும், கே சுபாஷ் இயக்கிய கலியுகம் படத்திலும் நல்ல வேடம் கிடைத்தது.
1990ல் வெளியான புரியாத புதிர், அஞ்சலி இரண்டும் நல்ல பெயரை பெற்றுத் தந்தன. புரியாத புதிரில் சைக்கோ கணவனாகவும், அஞ்சலியில் குறைபாடுள்ள குழந்தையால் மனைவி மனம் நோகக்கூடாது என எண்ணும் பாசமுள்ள கணவனாகவும் பரிமாணம் காட்டியிருப்பார். 1994ல் வெளியான காதலனில் குண்டு வைக்கும் நவீன அடியாள் வேடத்திலும், 95ல் பாட்ஷாவில் மும்பை டான் மார்க் ஆண்டனியாகவும் மிரட்டியிருப்பார். தொடர்ந்து அவர் தமிழிலும் தெலுங்கிலும் பல வேடங்களை ஏற்றார். சென்ற ஆண்டு அவர் இறந்தபின் வெளியான படம் யாரடி நீ மோகினி. அடுத்து வெளிவரவிருக்கும் கந்தசாமியிலும் அவர் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தில் இருக்கும் காட்சி வரவிருக்கும் இந்திரவிழா திரைப்படத்திற்க்காக எடுக்கப்பட்ட ஒன்று.
அவரது சட்டையை கழட்டிப் பார்த்தால் யாரும் அவரை வில்லன் என்று சொல்லமாட்டார்கள். வீரப்பா போலவோ, சரத்குமார்,சத்யராஜ் போலவோ வாட்ட சாட்டமான உடம்பு இல்லை. ஆனால் ஒரு பார்வையிலேயே ரசிகனுக்கு கிலியை ஏற்றிவிடுவார். அதுதான் ரகுவரனின் சிறப்பு. ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் தேவையில்லை, அடித்தொண்டையில் இருந்து வரும் குரல் போதும் ரகுவரனுக்கு. அதிலேயே எஃபெக்டை கொண்டுவந்து விடுவார்.
குணசித்திர வேடங்களில் நடிக்கும் போதும் அழுது புரண்டதில்லை. சலனமற்றுப் பார்க்கும் ஒரு ஏகாந்த பார்வை, உமிழ்நீர் விழுங்குவதுபோல ஒரு அசைவு இது போன்ற சிற்சில பாவனைகளிலேயே தேவையான உணர்வைக் கொண்டுவந்துவிடுவார்.
ஹோம் வோர்க் என்பதை தாரக மந்திரமாக கடைப் பிடித்தவர் ரகுவரன். கதையை உள்வாங்கி, அவரது கேரக்டர் எவ்வாறு அதில் புரஜெக்ட் ஆகிறது என்பதை ஸ்டடி செய்து அதற்கேற்ற மேனரிஷங்கள், உச்சரிப்பு, உடை என எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவார். படப்பிடிப்பு தளத்திற்க்கு வருமுன் வீட்டிலேயே ரிகர்சல் பார்த்து விட்டு வருவார். அதனால்தான் அவரால் எல்லாவித கேரக்டர்களையும் தனித்துவமுடன் செய்யமுடிந்தது.
லவ்டுடே படத்தில் விஜய்யின் பாசக்கார தந்தையாக நடித்தவர், அதற்கடுத்த ஆண்டுகளில் வந்த நிலாவே வா படத்தில் விஜய்யின் காதலியை திருமணம் செய்ய வருபவராக நடித்தார். அந்தளவுக்கு அவர்மேல் இயக்குநர்களுக்கு நம்பிக்கை.
தெலுங்கிலும் வெற்றிகரமான நடிகராக விளங்கினார். அவரது கேரியரில் சிறு சிறு இடைவெளிகள் இருக்கும். அத்ற்க்கு அவரே காரணம். திரைப்பட நடிகை ரோகினியை திருமனம் செய்து கொண்ட அவருக்கு ஒரு மகன் உண்டு.
ஒரு மனிதனின் கதையில் போதைக்கு அடிமையானவனாக நடித்த அவர், வாழ்வையும் நடிப்பையும் பிரித்துப் பார்க்கவில்லை. அந்த பழக்கத்தாலேயே அவர் சென்ற ஆண்டு இதே நாளில் நம்மை விட்டு பிரிந்தார். உடல் ரீதியாக எங்களி விட்டு நீங்கள் நீங்கியிருக்கலாம். எங்கள் மனதை விட்டு எந்நாளும் நீங்கள் அகலப் போவதில்லை.
ரித்தீஸுக்கு எம் பி சீட் & ஜூவியில் விடாது நர்சிம்
இன்றைய ஜுவியில் நடிகர் ரித்தீஸின் பெயர் எம் பி சீட்டுக்கான பரிசீலனையில் இருப்பதாக ஹேஸ்யம் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து பதிவுலகிலும் பல குபீர் சிரிப்பு பதிவுகள் வர வாய்ப்புள்ளது.
குறிப்பாக ஜேகேஆர் பேன் கிளப் என்னும் கூட்டுப்பதிவினர் களத்தில் குதிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். ராமநாதபுரம் தொகுதி கிடைத்து அவர் வெற்றி பெற்று விட்டால் (ராமராஜன் வெல்லவில்லையா?) பாராளுமன்ற அலுவலர்களுக்கு கொண்டாட்டம் தான். பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.
இன்றைய ஜூவியிலும்(18-03-2009) பதிவர் நர்சிம்மின் கருத்துக்களுடன் கேலிச்சித்திரம் வந்துள்ளது. இந்த முறை அவரிடம் மாட்டிக் கொண்டவர் சூப்பர் ஸ்டார். ரஜினி வாய்ஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். வலையுலகில் இருந்து எவ்வளவு எதிர் வாய்ஸ் வரப் போகிறது எனத் தெரியவில்லை.
உங்களுக்கு வாழ்த்துக்களும் எதிர் வாய்ஸ்ஸை சமாளிக்க ஊக்கங்களும்.
தொடர்ந்து மூன்று இதழ்களாக தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையை கிண்டல் செய்து அதை பிரபல பாடல் மெட்டில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த இதழில் மனோமயன், இதற்க்கு முன் இரண்டு இதழ்களில் தமிழ் வேணு என்பவர்கள் இதை எழுதியிருந்தார்கள். இதில் தமிழ் வேணு ஒரு வலைப்பதிவர். அவருக்கும் வாழ்த்துக்கள். அவர் இதுபோல எல்லாப் பாடல்களின் மெட்டிலும் சமகால சம்பவங்களை இணைத்து எழுதியுள்ளார். (சச்சின் சமீபத்திய சதம் உட்பட).
March 17, 2009
1988 ஆம் ஆண்டில் தமிழ்சினிமா
1987 ஆம் ஆண்டு டிசம்பரில் எம்ஜியார் இறந்ததைத் தொடர்ந்து நெடுஞ்செழியன் இடைக்கால முதல்வரானார். பின்னர் ஆர் எம் விரப்பன், ப உ சண்முகம் ஆகியோரின் முயற்சியால் எம் ஜி யாரின் துணைவியார் வி.என்.ஜானகி முதல்வரானார். இதை ஜெயலலிதாவை ஆதரித்த எம் எல் ஏ க்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜானகி முதல்வராக தொடர நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற வேண்டும். அதற்க்கு ஜெயலலிதா ஆதரவு எம் எல் ஏக்களின் ஆதரவும் தேவை. எனவே ஜானகி அணியினர், இந்த எம் எல் ஏக்களை எப்படியும் சரிக்கட்டி ஆட்சியில் தொடரவேண்டும் என நினைத்தனர். ஜெயலலிதாவின் அப்போதைய போர்ப் படைத் தளபதிகளான கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன், திருநாவுக்கரசு (சர்) தங்கள் தரப்பு எம் எல் ஏக்களை சொகுசு பேருந்துகளில் ஏற்றி மாநிலம், மாநிலமாக சுற்றினர். சரியாக வாக்கெடுப்பு நாளில் சட்டசபைக்கு இந்த எம் எல் ஏக்கள் வந்தனர். ஓட்டெடுப்பு அடிதடியில் முடிந்தது. கவர்னர் (பி சி அலெக்ஸாண்டர்) ஆட்சியை மத்திய அரசு கொண்டு வந்தது.
இவ்வாறு திரைப்படங்களை மிஞ்சிய சாகச காட்சிகள் 1988 ல் நடந்தன. பெரும்பாலான பட தயாரிப்பாளர்கள் அரசியல் சார்பு உடையவர்கள் என்பதாலோ என்னவோ அவர்கள் இதில் கவனம் செலுத்திய அளவுக்கு படத் தயாரிப்பில் கவனம் செலுத்தவில்லை. 87ல் 102 படங்கள் வெளிவந்தன. 89ல் 99 படங்கள் வந்தன. ஆனால் 88லோ 64 படங்கள் மட்டுமே வந்தன. ஆனாலும் ரசிக்கத்தக்க படங்கள் பல வெளியாகின. அவற்றைப் பற்றிப் பார்ப்போமா?.
இந்த ஆண்டிற்க்குப் பின்னர் கே பாக்யராஜ், டி ராஜேந்தர், எஸ் பி முத்துராமன் ஆகியோரது வெற்றி விகிதம் குறையத் தொடங்கியது.
பி வாசு, ஆர் வி உதயகுமார் ஆகிய இயக்குனர்கள் வெற்றிப் பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
கலைப்புலி நிறுவனம் இரண்டாகப் பிரிந்து தாணு தனியாகவும், ஜி சேகரன் தனியாகவும் படங்களை தயாரிக்கத் தொடங்கினர்.
குஷ்பூ, கௌதமி, நிரோஷா ஆகிய நடிகைகள் அறிமுகமானார்கள்.
ஜனகராஜ் முண்ணனி கதாநாயகனாக விளங்கினார்.
பாலசந்தரின் இயக்கத்தில் கமல் நாயகனாக நடித்த கடைசி படம் உன்னால் முடியும் தம்பி வெளியானது. (இனிமேல் ஏதும் வாய்ப்பிருக்கிறதா?)
மணிவண்ணன் வில்லனாக கொடி பறக்குது படத்தின் மூலம் அறிமுகமானார்.
அக்னி நட்சத்திரம்
நாயகன் படத்தை முதலில் தயாரித்தவர் முக்தா சீனிவாசன். படம் அவருக்கு திருப்தி இல்லை. எனவே அவரது நண்பர்களை அழைத்து படம் பார்க்கச் சொல்லி, ஏதும் கூட்டல் கழித்தல் செய்யலாமா என்று கேட்டார். பின்னர் படத்தின் இயக்குநர் மணிரத்னத்தின் அண்ணனான ஜி வெங்கடேஸ்வரனே படத்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார். அதுவரை வினியோகஸ்தராக இருந்தவர் தயாரிப்பாளர் ஆனார். நாயகனின் வெற்றிக்குப் பின் ஜிவி தயாரித்த படமே அக்னிநட்சத்திரம். பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா, விஜயகுமார், ஜெயசித்ரா,சுமத்ரா ஆகியோர் நடிப்பில் உருவானது இந்தப் படம். படத்தின் டெக்னீசியன்களான இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் இளையராஜா, ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் ஆகியோரின் பெயர்களை பிரதானமாகக் கொண்டு சுவரொட்டிகள் தயாரிக்கப் பட்டன. நடித்தவர்களை விட இவர்களே பிரதானமாக பேசப்பட்டர்கள். இந்தப் படத்தின் காமெடி டிராக்கில் வி கே ராமசாமியும், ஜனகராஜும் புகுந்து விளையாடினார்கள். இதன்பின்னர் மணிரத்னம் தன் படங்களில் காமெடி டிராக்கை தவிர்க்கத் தொடங்கினார்.
பி சி ஸ்ரீராம் இந்தப் படத்தில் பல புதுமையான முயற்சிகளை மேற்கொண்டார். நின்னுக்கோரி வரணும் பாடலிலும், கிளைமாக்ஸ் காட்சியிலும் ஒளிச்சிதறலின் மூலம் காட்சியின் அதிர்வை பார்வையாளனுக்கு தரும் உத்தியை கையாண்டிருப்பார். ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடல் காட்சி சாதாரண ரயில்வே ஸ்டேஷனில் எடுக்கப் பட்டிருக்கும். ஆனால் ஒளியமைப்பின் மூலம் மிகுந்த ரிச்னெஸ்ஸை கொடுத்திருப்பார். பிரபுதேவா இந்தப் பாடலில் தலையைக் காட்டியிருப்பார். தூங்காத விழிகள் ரெண்டு பாடலில் அமலாவின் தொப்புளை சுற்றி படர்ந்திருக்கும் பூனை முடிகளையும், வா வா அன்பே அன்பே பாடலில் நிரோஷாவின் தோள்பட்டை மயிர்க்கால்களையும் குளோசப்பில் கொண்டு வந்திருப்பார். ஆனந்த் தியேட்டர் அதிபர் ஜி உமாபதி வில்லனாக அறிமுகமானர். பிரபு கார்த்திக் சந்திக்கும் காட்சிகளில் இளையராஜாவின் பிண்ணனி இசை கலக்கலாக இருக்கும்.
இது நம்ம ஆளு
கிட்டத்தட்ட கே பாக்யராஜின் கடைசி சூப்பர் ஹிட் எனலாம். இதன்பின் அவரது இரண்டு படங்கள் (ராசுக்குட்டி,சுந்தரகாண்டம்) ஓரளவு ஓடியிருந்தாலும் அவரது முந்தைய படங்களுடன் ஒப்பிட்டோமானால் அவை சுமார் ரகமே. கமலுடன் எனக்குள் ஒருவன் படத்தில் ஜோடியாக அறிமுகமான ஷோபனா இதில் மீள் அறிமுகம் செய்யப்பட்டார். இந்தப் படத்தின் இயக்குநர் பாலகுமாரன். இயக்கம்- மேற்பார்வை என பாக்யராஜின் பெயர் வரும். கதைக் களம் பிராமண சமுதாயமாக அமைந்ததால் இந்த ஏற்பாட்டை செய்தார்களா என தெரியவில்லை. இதன் பின் பாலகுமாரன் வேறு படங்களை இயக்கவில்லை. வெற்றிகரமான வசனகர்த்தாவாக (குணா, ஜெண்டில்மேன், காதலன், பாட்ஷா, ஜீன்ஸ், மன்மதன்) மட்டும் வலம் வந்தார்.
என் தங்கச்சி படிச்சவ
பி வாசு வின் தலை எழுத்தை மாற்றிய படம். இதன்பின் அவர் கமர்சியல் பாதையை விட்டு விலகவே இல்லை. பிரபு, ரூபினி, சித்ரா, நாசர், ஆனந்த் ராஜ் நடித்த இந்தப் படம் நல்ல கமர்சியல் வெற்றியைப் பெற்றது. இந்தப்படத்தில் தான் வில்லனின் அடியாட்களுக்கு முதன் முதலில் வெள்ளை வேட்டி வழங்கப்பட்டது. அதன்முன் வில்லன் கூட்டம் கரடு முரடான சட்டை, பேண்ட் அணிந்தே சித்தரிக்கப்பட்ட நிலையில் இந்தப் படம் அதை மாற்றியது. பின்னர் தொடர்ந்து பல படங்களில் வில்லன் அடியாட்களுக்கு வெள்ளை வேட்டி வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவின் சாபக்கேடான முத்திரை குத்தலுக்கு ஒரு உதாரணம், இந்தப் படத்தில் தங்கை வேடத்தில் நடித்த சித்ரா. பின்னாட்களில் நல்லெண்ணை சித்ரா என்று அறியப்பட்ட இவர், இப்பட வெற்றிக்குப் பின் தங்கை வேடங்களுக்கே நேர்ந்து விடப் பட்டார். பின்னர் கார்த்திக்குடன் திருப்புமுனை என்னும் படத்தில் நாயகியாக நடித்தும் எடுபடவில்லை. இந்தப் படம் பின்னர் இந்தியில் அமிதாப் அண்ணனாகவும், ராதிகா தங்கையாகவும் நடிக்க ஆஜ் கா அர்ஜூன் என ரீமேக் செய்யப்பட்டது.
கண் சிமிட்டும் நேரம்
கார்த்திக், அம்பிகா நடித்து சரத்குமார் தயாரித்த படம். இசை வி எஸ் நரசிம்மன், இயக்கம் கலைவாணன் கண்ணாதாசன். அம்பிகா வை கொலை செய்ய கார்த்திக் வருகிறார். ஆனால் விபத்தின் காரணமாக நினைவு தப்பி விடுகிறது. யாரென்று தெரியாமல் அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார் அம்பிகா. நினைவு திரும்பியவுடன் அம்பிகாவை கொல்ல விரட்டுகிறார் கார்த்திக். மிக நல்ல திரில்லர். இந்தப் படத்தின் வெற்றியால் சரத்குமார் மிஸ்டர் கார்த்திக்என்னும் படத்தை கார்த்திக் நடிப்பில் தயாரித்தார். அதன் தோல்வியால் பின்னர் முழு நேர நடிகரானார்.
ஊமை குயில்
அசத்தப் போவது யாருவை முழு படமாக எடுத்தால் எப்படி இருக்கும்?. யோகராஜ் என்பவர் பாக்கியராஜ் போல ஓரளவு தோற்றம் கொண்டவர். அவர் பாக்யராஜைப் போலவே இமிடேட் செய்து நடித்து,இயக்கிய படம் இது. ஓரளவு வெற்றியைப் பெற்றது இந்தப் படம்.
சத்யா
நாயகனின் வெற்றிக்குப் பின் வந்த கமல் படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்குனராக அறிமுகமான படம். சன்னி தியோல் நடித்த அர்ஜூன் என்னும் படத்தின் ரீமேக்கே இது.ஆனால் தமிழுக்கு தேவையான சில மாற்றங்களை செய்திருந்தார்கள். மொட்டையடித்து சிறிது வளர்ந்த முடி, கையில் காப்பு என கமலின் கெட்டப் பலரையும் வசீகரித்து அது போல மாற்றியது. அமலா இணை. வளையோசை கலகலவென பாடல் கவிதை. இப்பட்த்தின் மூலம் நாயகனில், கமலின் தந்தையாக சிறு வேடத்தில் நடித்திருந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி வில்லனாக அறிமுகமானர் கிட்டி என்னும் பெயரில். இவர் நாயகனில் மணிரத்னத்தின் உதவி இயக்குனர். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனினும் ரீ ரிலீஸ்களில் பலராலும் ரசிக்கப்பட்டது.
இந்தப்படம் பின் அப்போது வெங்கடேஷ், குஷ்பூ வை வைத்து தெலுங்கில் ரீ மேக் செய்யப் பட்டது. சின்னதம்பி பட வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்ட குஷ்பூ அலையின் காரணமாக அவர் அதற்க்குமுன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைத் தவிர எல்லா வேற்று மொழிப்படங்களும் இங்கே டப்பாகி வந்தன. அப்போது இந்தப் படமும் ஜில்லா ரவுடி என்ற பெயரில் திரும்பி வந்து வாழ்க்கை ஒரு வட்டம் என நிரூபித்தது
கொடி பறக்குது
முதல் மரியாதையில் தென்றலைப் பிடித்துக் கொண்டு நந்தவனத்தில் நடந்த பாரதிராஜா இதில் புயலின் கையைப் பிடித்துக் கொண்டு பூமியை வலம் வந்தார். ரஜினியின் இணை அமலா. இசை அம்சலேகா. மணிவண்ணன் வில்லனாக அறிமுகம். இவருக்கு பிண்ணனி குரல் கொடுத்தவர் பாரதிராஜா. படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.
இன்னும் நிறைய படங்கள் இருக்கின்றன. அவற்றை வரும் பகுதிகளில் பார்ப்போம்.
துருவங்களின் திருப்புமுனை ஆண்டு – 1954
ராஜகுமாரியைத் தொடர்ந்து மருத நாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மர்மயோகி (தமிழின் முதல் ஏ சர்டிபிகேட் படம்) ஆகிய படங்களில் நடித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். ஆனால் அதைத் தொடர்ந்து அவர் நடித்த சில படங்கள் (ஜெனோவா, என் தங்கை, நாம்) வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த ஆண்டில் அவர் நடித்த மலைக்கள்ளன் திரைப்படம் வெளி வந்து எம்ஜியாருக்கு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் ராபின் ஹூட் பாணியிலான கதாபாத்திரம் நல்ல இமேஜைக் கொடுத்தது. அதன்பின் 1977ஆம் ஆண்டு தமிழக முதல்வராகும் வரை திரையுலகில் அசைக்க முடியாத நட்சத்திரமாக விளங்கினார்.
சிவாஜி கணேசன் தன் 25 ஆம் வயதில் 1952ல் பராசக்தி மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 1953 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையவில்லை சிவாஜிக்கு. ஆனால் 1954ல் வெளிவந்த மனோகரா, எதிர்பாரதது, அந்த நாள் ஆகிய திரைப்படங்களின் மூலம் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
எம் ஜி யார் அறிமுகமாகி 16 ஆண்டுகள் கழித்து அறிமுகமானாலும் இரண்டே வருடங்களில் அவருக்கு இணையான அந்தஸ்தை அடைந்தார்.
இருதுருவங்களுக்கும் திருப்புமுனை ஆண்டான 1954க்கு இன்னொரு விசேஷமும் உண்டு. இதே ஆண்டில்தான் பின்னாட்களில் தமிழ்சினிமா முன்னேற்றப் பாதையில் செல்ல முக்கிய பங்களிப்பை வழங்கிய கமல்ஹாசன் பிறந்தார். இனி இந்த ஆண்டின் முக்கிய திரைப்படங்களைப் பார்ப்போம்.
ரத்தக் கண்ணீர்
தமிழ்சினிமாவில் தனித்தன்மையுடன் விளங்கிய, நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இம்மாதிரி கலைஞன் தோன்றுவான் என வியக்கப்பட்ட எம் ஆர் ராதா நாயகனாக நடித்த படம். வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த நாயகன் நாகரீக மோகத்தில், தன் மனைவியை பத்தாம் பசலி என வெறுக்கிறான். விலைமகள் காந்தாவிடம் சரணடைகிறான். தொழு நோய் ஏற்படுகிறது. தன் மனைவியை நண்பனுக்கு மணம் முடித்து வைத்து விட்டு பிரிகிறான்.
திருவாரூர் தங்கராசு வசனம். நாத்திக கருத்துகள் பரவலாக படத்தின் வாயிலாக சொல்லப்பட்டன. இந்த படத்தில் எம் ஆர் ராதா பேசிய வசனங்கள் எல்லாமே பன்ச் டயலாக்குகள் தான். பின்னர் இந்தப் படத்தின் கதையை வாங்கி எம் ஆர் ராதா நாடகமாக நடித்தார். இது அவரின் பேரன் எம் ஆர் ஆர் வாசு விக்ரம் வரை தொடருகிறது. இதுவரை 3500 தடவைக்கு மேல் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமைக்குரியது இந்த நாடகம். எம் ஆர் ராதா இந்த நாடகத்துக்கான வசனங்களை அப்போதைய அரசியல், சமுதாய நிலைமைக்கேற்ப அப்டேட் செய்து பேசுவார். இம்ப்ரொவைசேஷன் அதிகம் இருக்கும். அதனால் பார்த்தவர்களே திரும்ப திரும்ப பார்ப்பர். அந்த அளவுக்கு கூரிய பார்வையும், அதை நகைச்சுவை ததும்பும் வசனமாக மாற்றக்கூடிய திறமையும் அவரிடம் இருந்தன.
நடிகர் விவேக் தன் படங்களில் உபயோகிப்பது எம் ஆர் ராதாவிடம் இருந்து பெறப்பட்ட நாத்திக, சமூக அகக்றையுள்ள கருத்துகளை நகைச்சுவையாக சொல்லும் பாணியையே. திருநெல்வேலி என்னும் படத்தில் விவேக் இதை முதன் முறை உபயோகித்தார். இதுவே அவரை பத்மஸ்ரீ வரை கொண்டு சென்றது.
அந்த நாள்
எஸ் பாலசந்தர் இயக்கத்தில், ஏவி எம் தயாரித்த படம். சிவாஜி எதிர் நாயகனாக நடித்த படம். தன் கண்டுபிடிப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை என்னும் கோபத்தில் இரண்டாம் உலகப் போரின் போது எதிரி நாட்டுக்கு துணைபோகிறான் விஞ்ஞானி. உண்மை தெரிந்த மனைவி பண்டரி பாய் அவனைக் கொன்று விடுகிறாள். அற்புதமான சஸ்பெண்ஸ் படமான இதில் பாடல்கள் இல்லை. அப்போது பாடல்கள் இல்லாமல் படம் வருவது மிக ஆச்சரியமான விஷயம். ரஷோமான் படத்தின் உத்தியும் இதில் உபயோகப் படுத்தப் பட்டிருக்கும். எஸ் பாலசந்தரின் திறமையான இயக்கமும், சிவாஜி கணேசனின் இமாலய நடிப்பும் படத்திற்க்கு வெற்றியைத் தேடித்தந்தது.
மலைக்கள்ளன்
நாமக்கல் கவிஞரின் கதைக்கு கருணாநிதி வசனம் எழுதி ஸ்ரீராமுலு நாயுடுவின் இயக்கத்தில் வெளிவந்த படம். எம்ஜியார்க்கு பெரிய திருப்புமுனையான இந்தப் படம் குடியரசுத் தலைவரின் சிறந்த மாநில மொழி திரைப்படத்துக்கான விருதைப் பெற்றது. பணம் படைத்தவர்களிடம் இருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் மலைக்கள்ளனாக எம்ஜியார், காதலியாக பானுமதி, மலைக்கள்ளனை பிடிக்க வரும் காவல்துறை அதிகாரியாக எம்ஜியாரின் அண்ணன் எம் ஜி சக்கரபாணி, அவருக்கு உதவியாக மாம்பல நாயுடு என்னும் ஏட்டு கேரக்டரில் டி எஸ் துரைராஜ் நடித்திருந்தனர்.
மனோகரா
இந்தப் படத்திற்க்கும் வசனம் கருணாநிதி. மன்னர் தன் மனைவி கண்ணாம்பாவை மறந்துவிட்டு டி ஆர் ராஜகுமாரி மேல் மையல் கொள்கிறார். அவரது மகனான மனோகரனுக்கு குழந்தை பிறந்தும் அவர் திருந்தவில்லை. அந்த குழந்தையையும் கொல்கிறார்கள் டி ஆர் ராஜகுமாரி கூட்டத்தார். வெகுண்டெழுந்த மனோகரனை தூணில் கட்டி வைக்கிறார்கள். பொறுத்தது போதும் பொங்கியெழு என அன்னை கண்ணாம்பா ஆணையிட தூணுடன் பிணைத்திருந்த சங்கிலியை உடைத்து பகைவர் கூட்டத்தை வேரறுக்கிறான் மனோகரன். மனோகரனாக சிவாஜி சொல்ல வேண்டுமா?.
டி ஆர் ராஜகுமாரியின் வேடப் பெயர் வசந்த சேனை. அது இன்னும் உபயோகத்தில் இருக்கிறது. வசந்த சேனை, வட்டமிடும் கழுகு, வாய் பிளந்து நிற்கும் ஓநாய் எனத் தொடங்கும் வசனம் புகழ் பெற்றது. இந்தப் படத்திற்க்கு முன், தான் வசனம் எழுதிய பராசக்தி படத்தின் வசனங்களை புத்தகமாக போடுமாறு தயாரிப்பாளர் ஏவிஎம்மிடம் கருணாநிதி கேட்டாராம். ஆனால் ள் வசூல் பாதிக்கும் என்று அதற்க்கு அவர்கள் செவிசாய்க்க வில்லை. வேறொருவர் பராசக்தி பட வசனங்களை தியேட்டரில் ஆட்கள் மூலம் கேட்கவைத்து அதை புத்தகமாக வெளியிட்டாராம். பட வசூலுக்கும் பாதிப்ப்பில்லை, புத்தக விற்பனைக்கும் குறைவில்லை. எனவே மனோகரா படத்திற்க்கு தயாரிப்பாளரிடம் சொல்லி தானே வசன புத்தகததை வெளியிட்டராம் கருணாநிதி.
தூக்குத் தூக்கி
சிவாஜி கணேசன், பத்மினி, பாலையா நடித்த படம். கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கொண்டுவந்தாள் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் தோழன் ஆகிய பழமொழிகள் ஒரு அரச குமாரன் வாழ்வில் எப்படி உண்மையாகின்றான என அருமையான திரைக்கதை மூலம் சொல்லியிருப்பார்கள். இந்தப் படத்தின் ரீரிலீஸின் போது அச்சிடப்பட்ட சுவரொட்டிகளில் இந்த பழமொழிகளை அச்சிட்டே விளம்பரப் படுத்தினார்கள். பாலையா இதில் வட நாட்டு சேட் வேடத்தில் நடித்திருப்பார். நம்பள் நிம்பள் போன்ற வசனங்களை முதன் முதலில் திரையில் ஒலிக்க விட்டார். இன்னும் அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தப் படத்தில் தான் டி எம் சௌந்தரராஜன் முதன் முதலில் சிவாஜிக்குப் பாடினார். அது மிகப் பொருத்தமாய் அமைந்துவிட இந்த இணை காலத்தால் அழிக்க முடியாத பல பாடல்களை தந்தது.
எதிர்பாராதது
இந்தப் படத்தின் கதையும் யாரும் எதிர்பாராததுதான். ஒரு இளைஞன் அழகு பெண்ணைக் காதலிக்கிறான். விதி வசத்தால் அவள் அவன் தந்தையின் மனைவியாகிறாள். ஸ்ரீதரின் கதையில் சி எச் நாராயண மூர்த்தி இயக்கத்தில் வெளியான படம். இளைஞனாக சிவாஜி கணேசனும், காதலியாக பத்மினியும், சிவாஜியின் தந்தையாக பழம்பெரும் குணசித்திர நடிகர் சித்தூர் நாகைய்யாவும் நடித்திருந்தனர்.
கல்யாணம் பண்ணியும் பிரம்மாச்சாரி
சிவாஜிகணேசன், டி ஆர் ராமசந்திரன், பத்மினி, ராகினி, சந்திரபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த படம். இந்தப் படத்தின் இயக்குநர் ப. நீலகண்டன். இவர் பின்னாட்களில் எம் ஜியாரின் பல வெற்றிப்படங்களை இயக்கியவர். மிக திறமையான எடிட்டரும் கூட. இவர் உலக சினிமாக்களைப் பற்றி மூன்று தொகுதி கொண்ட புத்தகத்தையும் எழுதியவர். (இவரது முக்கிய படங்கள் பற்றி பின்னர் பார்ப்போம்).
காதல், கல்யாணம் அதன் பிரச்சினைகளை நகைச்சுவையாக விவாதித்த படம் இது. முழு நீள நகைச்சுவைப் படம் என்று சுவரொட்டிகளில் விளம்பரப் படுத்துவார்கள் இந்தப் படத்தை.
இந்தப் படத்தில் பி ஆர் பந்துலு வும் நடித்திருந்தார். பின்னாட்களில் இவர் வீர பாண்டிய கட்ட பொம்மன், கப்பலோட்டிய தமிழன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற மகத்தான படங்களை இயக்கினார்.
பெண்
1953 ஆம் ஆண்டு நாயகனாக நடிக்கத் துவங்கிய ஜெமினி கணேசனுக்கு இது இரண்டாவது படம். அஞ்சலி தேவி, வைஜெயந்தி மாலா, சித்தூர் வி நாகைய்யா ஆகியோரும் நடித்திருந்தனர். ஏ வி எம்மின் தயாரிப்பான இந்தப் படத்தை இயக்கி நாயகனின் நண்பனாகவும் நடித்திருந்தார் எஸ் பாலசந்தர். வீணை மேதையான இவர் வீணை பாலசந்தர் என்றே அழைக்கப் பட்டார். இதே ஆண்டு வெளியான இவரது அந்த நாள் படத்தில் பாடல்கள் இல்லை. ஆனால் இந்தப் படத்தில் ஆர் சுதர்சனம் இசையில் அருமையான பாடல்கள் இருந்தன. சந்திரபாபு பாடிய (இவர் இப்படத்தில் நடிக்கவில்லை) ”உல்லாசமாகவே உலகத்தில் வாழவே” என்னும் பாடல் அக்கால இளைஞர்களின் பேவரைட். படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.
கூண்டுக்கிளி
இரு துருவங்கள் இணைந்த இந்தப் படம் பெரிய வெற்றி பெறவில்லை. எம்ஜியார் படமாகவும் இல்லாமல், சிவாஜி படமாகவும் இல்லாமல் போனது என்று சொல்வார்கள். நாயகியாக பி எஸ் சரோஜா நடித்திருந்தார். டி ஆர் ராமண்ணா இயக்கத்தில், கே வி மகாதேவன் இசையில் இந்தப் படம் வெளியானது.
இந்தப்படங்கள் தவிர என் டி ராமாராவ் நடித்த பணம் படுத்தும் பாடு, சிவாஜியின் இல்லற ஜோதி ஆகியவையும் வெளிவந்தன. இந்த ஆண்டு வெளியான 34 படங்களில் ஏழு படங்கள் நல்ல வெற்றியைப் பெற்று வரலாற்றில் நின்று விட்டன.
விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால் தற்போது 18படங்கள் நல்ல கதையமைப்புடன் வந்து வெற்றி பெறவேண்டும்.
March 12, 2009
திருப்புமுனை ஆண்டு
முக்கிய நிகழ்வுகள்
சிந்தாமணி, அம்பிகாபதி ஆகிய படங்களின் வெற்றிகாரணமாக எம் கே தியாகராஜா பாகவதர் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்னும் அந்தஸ்தைப் பெற்றார்.
இங்கிலாந்தின் லீட்ஸில் துகிலியல் (டெக்ஸ்டைல் டெக்னாலஜி) படித்திருந்த டி ஆர் சுந்தரம் தனது மார்டன் தியேட்டர்ஸ் என்னும் திரைப்பட நிறுவனத்தைத் துவங்கினார். முதல் படமாக சதி அகல்யாவை தயாரித்தார். இந்த நிறுவனத்தின் மூலமாக பின்னர் 117 படங்களைத் தயாரித்தார்.
தமிழ் சினிமா இயக்குனர்களின் தந்தை எனப் போற்றப்படும் கே சுப்ரமணியம் குழைந்தகளுக்கான படமான பாலயோகினியை இயக்கினார். இதுவே தமிழின் முதல் குழந்தைகளுக்கான படம் எனலாம்.
தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சிக் கன்னி தவமணிதேவி இந்த ஆண்டு சதி அகல்யா மூலமாக அறிமுகமானார்.
முதன்முறையாக படத் தலைப்பு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டது. தஞ்சாவூர் ரவுடி என்னும் படத்தின் தலைப்பு தஞ்சைப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக பக்கா ரவுடி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
முதல் இருமொழி திரைப்படம் பக்த புரந்ததாஸ், தமிழிலும் கன்னடத்திலும் தயாரிக்கப் பட்டது.
முதன் முறையாக ஒரு திரைப்படம் 52 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது (சிந்தாமணி).
இனி இந்தப் படங்களைப் பார்ப்போம்.
சிந்தாமணி
சிந்தாமணி என்னும் தாசியின் மீது கொண்ட காதல் காரணமாக செல்வந்த வீட்டு இளைஞன் தன் மனைவியையும் மறந்து அவள் வீட்டிலேயே இருக்கிறான். இளைஞனின் தந்தை நோய் வாய்ப்பட, தன்னை கவனிக்கும் மருகமகளுக்கே அத்தனை சொத்தையும் எழுதிவைத்து விட்டு இறக்கிறார். ஆனால் மனைவியோ கணவனின் காலடியே சரணம் என மீண்டும் அவனிடமே செல்கிறாள். அப்படியும் கணவன் திருந்தவில்லை. மனைவி ஆற்று வெள்ளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். தாசியை தேடிச் செல்லும் கணவணோ இருளில் அவள் உடலையே படகாக வைத்து ஆற்ரைக் கடக்கிறான். உண்மை தெரிந்த பின் அந்த இளைஞனும், தாசி சிந்தாமனியும் மனம் திருந்தி கிருஷ்ண பக்தர்கள் ஆகிறார்கள்.
இளைஞன் பில்வமங்களனாக எம் கே தியாகராஜ பாகவதரும், சிந்தாமணியாக கன்னட நடிகை அஸ்வத்தம்மா நடித்த இந்தப் படம் மதுரை ராயல் பிக்சர்ஸ்சாரின் தயாரிப்பு. இயக்கம் ஒய் வி ராவ். இவர் நடிகை லட்சுமியின் தந்தை. இந்தப் படம் மதுரை நியு சினிமா தியேட்டரில் வெற்றிகரமாக ஓடி லாபத்தைக் குவித்தது. ராயல் பிக்சர்ஸார் இந்த லாபத்தைக் கொண்டு ஒரு திரையரங்கை மதுரையில் கட்டி அதற்க்கு சிந்தாமணி என்று பெயர் சூட்டினார்கள். பாடல்கள் இசைத்தட்டுக்களாக வந்து விற்பனையில் சாதனை படைத்தன.
அம்பிகாபதி
கம்பரின் மகனுக்கு இளவரசியின் மேல் காதல். காதல் இல்லாமல் தொடர்ந்து 100 பாடல்களைப் பாடினால் இளவரசியை மணம் முடித்து தருகிறேன் என மன்னர் நிபந்தனை விதிக்கிறார். அம்பிகாபதி பாட ஆரம்பிக்கிறார். முதல் பாடல் கடவுள் வாழ்த்து. ஆனால் இளவரசி அதையும் ஒரு பாடலாக கணக்கெடுத்துக் கொள்கிறாள். 99 பாடல் முடிய இளவரசி அமராவதியோ 100 முடிந்தது என சைகை காண்பிக்கிறார். 100 அடித்த பேட்ஸ்மேன் அடுத்த பந்தை சிக்ஸருக்கு அடிக்க நினைப்பது போல அம்பிகாபதி காதல் பாடலைப் பாட, மன்னர் மரண தண்டனை விதிக்கிறார். நமக்கும் அழியாக் காதலுக்கு எடுத்துக் காட்டு சொல்ல இன்னொரு ஜோடி கிடைத்தது.
முதலில் இந்த படத்தை இயக்க ஒய் வி ராவை அணுகினார்கள். ஆனால் அவர் கேட்ட சம்பளம் அதிகம் என தயாரிப்பாளர்கள் நினைத்தார்கள். எனவே அதற்க்கு முந்தைய ஆண்டு சதிலீலாவதி (எம் ஜி யார், பாலையா அறிமுகமான படம்) படத்தை இயக்கிய எல்லிஸ் ஆர் டங்கனை இயக்க அழைத்தார்கள். படம் நல்ல வெற்றி பெற்றது. எம் கே தியாகராஜ பாகவதர் அம்பிகாபதியாகவும், எம் எஸ் சந்தான லக்ஷ்மி அமராவதியாகவும் நடித்தனர். இசை பாபனாசம் சிவன். இந்தப்படத்தின் வசனங்களை இளங்கோவன் எழுதினார். பின்னர் இதே படம் சிவாஜிகணேசன் அம்பிகாபதியாக நடிக்க ரீமெக் ஆனது.
பாலயோகினி
ஆரம்ப காலத்தில் புராண,பக்திப் படங்களே பெரும்பாலும் வந்து கொண்டிருந்தன. சமூக கதைகள் மிகக் குறைவே. அதிலும் சிறுவர்களுக்கான படங்கள் இல்லையென்றே சொல்லலாம். இந்த கால கட்டத்தில் மேலை நாட்டு படங்கள் இங்கே இறக்குமதியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தன. அதில் குழந்தைகளுக்கான படங்களும் அடக்கம். ஷெர்லி டெம்பிள் அப்போது அங்கு பிரபலமான குழந்தை நட்சத்திரம். சமூக கதைகளை இயக்கி புகழடைந்த கே சுப்ரமணியம் குழந்தைகளைக் கவரும் படியான பாலயோகினி படத்தை பேபி சரோஜா என்னும் குழந்தையை வைத்து இயக்கினார்.
மனைவியை இழந்த வேலை இல்லா எம் ஏ பட்டதாரி (அந்தக்காலத்தில்) மகளைப் (சரஸா) படிக்க வைக்க கடன் படுகிறார். அந்தப் பிரச்சினையில் சிறை செல்கிறார். அவரது நண்பர் சப் கலெக்டர் கள்ளத் தொடர்பின் காரணமாக தன் மகள் பேபி சரோஜவை வெறுக்கிறார். இதனால் சப் கலெக்டரின் சகோதரி ஜானகி, சரஸா, பேபி சரோஜா ஆகியோர் முனுசாமி என்னும் தாழ்த்தப்பட்டவரின் வீட்டில் அடைக்கலம் ஆகிறார்கள். முனுசாமியும் இறந்துவிட அவரின் குழந்தைகளையும் ஜானகி அண்ட் கோ வளர்க்க ஆரம்பிக்கிறது. இதனை மேல்ஜாதியினர் எதிர்க்க பேபி சரோஜா தன் பேச்சால் எல்லோர் மனதையும் மாற்றுகிறாள்.
இந்தப் படத்தில் பேபி சரோஜாவின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப் பட்டது. தமிழ்நாட்டின் ஷெர்லி டெம்பிள் என்று பாராட்டப் பட்டார். அந்தக்காலத்தில் பிறந்த பல பெண்குழந்தைகளுக்கு சரோஜா என்று பெயர் சூட்டினார்களாம். இப்போது பிட் படம் பார்த்த எந்த தந்தையும் தன் மகளுக்கு ஷகிலா என்னும் பெயர் வைக்க அனுமதிப்பதில்லை.
மின்னல் கொடி [1]
ரம்னிக்லால், மோகன்லால் ஆகியோர் இந்தக் கால கட்டத்தில் தொடர்ந்து சமூக மற்றும் கமர்சியல் சண்டைப் படங்களை தயாரித்து வந்தனர். இவர்கள் சில நட்சத்திரங்களை தொடர்ந்து தங்கள் படங்களில் பயன்படுத்தி வந்தார்கள்.
பி எஸ் சீனிவாசராவ் – கதாநாயகன்
கே டி ருக்மணி, ஆர் பி லட்சுமி தேவி – கதாநாயகிகள்
எஸ் எஸ் கொக்கோ – நகைச்சுவை / ஸ்டண்ட் நடிகர்
சுலைமான் பாஷா – வில்லன்/குணசித்திர நடிகர்
இவர்களின் ஆஸ்தான இயக்குநர் கே அமர்நாத்.
மின்னல்கொடி என்னும் புரட்சியாளன் தான் சாகும் தருவாயில் மோகினி (கே டி ருக்மணி) என்னும் பெண்ணிடம் தன் லட்சியங்களைக் கூறி விட்டு இறக்கிறான். அவள் மின்னல்கொடி போலவே மாறு வேடம் தரித்து அவன் லட்சியங்களை நிறைவேற்றுகிறாள். மோகினியின் காதலனாக பி எஸ் சீனிவாசராவ் காவல்துறை அதிகாரியாகவும், பாஷா வில்லனாகவும், கொக்கோ நாயகனின் நண்பனாகவும் நடித்த இந்தப் படம் நல்ல் வெற்றியைப் பெற்றது.
பக்கா ரவுடி [1]
கே டி ருக்மணி நாயகியாகவும், சீனிவாசராவ் நாயகனாகவும் நடித்த படம். நாயகியின் தந்தை ராபின் ஹூட் போல கொள்ளையடித்து மக்களுக்கு உதவுகிறார். நிறைய செல்வங்களை ஒரு தீவில் புதைத்து, ஒரு படத்தில் குறித்து வைக்கிறார். கொள்ளையனின் ஆசைநாயகியும், அவளது காதலனும் அதை அபகரிக்க முயற்சிக்கிறார்கள். பின் எப்படி அவர்களை நாயகனும் நாயகியும் வெற்றி கொள்கிறார்கள் என்பதே கதை. இந்தப் படம் முதலில் தஞ்சாவூர் ரவுடி என்னும் பெயரில் வெளியானது. தஞ்சை மக்களின் எதிர்ப்பின் காரணமாக பக்கா ரவுடி என நீதி மன்றத்தின் மூலம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
டேஞ்சர் சிக்னல் [1]
குதிரை, நாய் போன்றவையும் மேற்கூறிய நாயகர்களுடன் நடித்த படம் இது. ஸ்டண்ட் காட்சிகள் சிறப்பாக அமைந்த படம். கொக்கோ நகைச்சுவை காட்சிகள் மட்டுமின்றி, வீர தீர சண்டைக் காட்சிகளில் நடிப்பதிலும் புகழ்பெற்றவர். இதிலும் அவர் தன் கைவண்ணத்தை காட்டியிருந்தார். பின்னட்களில் அவர் இது போன்ற சண்டைக்காட்சியில் நடிக்கும் போது விபத்துக்குள்ளாகி இறந்தார்.
சதி அகல்யா [2]
மார்டன் தியேட்டர்ஸாரின் முதல் படம். பின்னாட்களில் அவர்கள் ஆங்கிலப் படங்களின் இன்ஸ்பிரேசனில் பல படங்கள் தயாரித்தனர். இந்தப் படம் ராமாயான அகலிகை கதையை அடிப்படையாகக் கொண்டது. இந்திரன் மேல் ஆசை கொண்டதற்க்காக அகலிகையின் கணவர் அவளை கல்லாக மாறும்படி சபிக்கிறார். பின் ராமன் கால் பட்டதும் சாப விமோசனம் பெறுகிறாள். அகலிகையின் கேரக்டரில் நடித்தவர் தவமணி தேவி. இவர் தமிழ் சினிமாவின் முதல் கனவுக் கன்னி ஆவார். இந்தப் படத்திற்க்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கொடுக்கப்பட்ட தவமணியின் படங்களைப் பார்த்து அனைவரும் மெய்மறந்தனர். நீச்சல் உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்திருந்தார் தவமணி. இதுவே படத்துக்கு பெரும் விளம்பரமாக அமைந்தது. பட வெற்றிக்கு கேட்க வேண்டுமா?
இந்தக் கட்டுரைக்கான ஆதாரங்கள்
[1] பிரபல தமிழ் சினிமா ஆராய்ச்சியாளர் மற்றும் இலக்கியவாதியான திரு விட்டல் ராவ் எழுதிய “தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்” என்னும் நூல். 1930களில் தொடங்கி 1950 வரையிலான தமிழ் படங்களைப் பற்றி மிக நுட்பமாக இதில் விவரித்து எழுதியுள்ளார்.
[2] ராண்டார் கை ஒரு இணைய இதழில் எழுதிய கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது. ( சுட்டி கிடைத்தவுடன் இணைக்கிறேன்)
மேலும் சில இணைய தளங்களில் இருந்து கிடைக்கப் பெற்ற செய்திகளின் மூலமே இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. நான் இந்தப் படங்களின் சில காட்சிகளை மட்டுமே பர்த்துள்ளேன்.
March 10, 2009
1987ன் திரைப்படங்கள் – இரண்டாம் பகுதி
சின்னப்பூவே மெல்லப் பேசு
காதல் படங்களுக்கு எப்பொழுதுமே மவுசு குறையாது. காதல் படங்களின் முக்கிய தேவை, காதல் உருவாவதற்க்கான அபத்தமில்லாத அழுத்தக் காட்சிகள். அதிலும் இனிமையான பாடல்களும், ஒரளவு நல்ல நகைச்சுவைக் காட்சிகளும் அமைந்து விட்டால் படம் ஓடு ஓடு என ஓடித் தீர்த்துவிடும். ராபர்ட்- ராஜசேகரன் இயக்கத்தில் மேற்கொண்ட அம்சங்களுடன் வெளியான இப்படத்தின் மூலம் திரைப்படக் கல்லூரி மாணவர் ராம்கி நாயகனாகவும், பல்லவி நாயகியாகவும் அறிமுகமானார்கள். எஸ் ஏ ராஜ்குமாரும் இப்படத்தில் தான் அறிமுகமாகி சின்னப் பூவே மெல்லப் பேசு, ஏ புள்ள கருப்பாயி போன்ற இனிமையான பாடல்களைக் கொடுத்தார்.. கை கொடுக்கும் கையில் அறிமுகமான சின்னி ஜெயந்துக்கு இந்தப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் ஐந்து,ஆறு வருடங்களுக்கு கல்லூரி மாணவராகி காதலர்களை சேர்த்தார், தமிழாசிரியர்களை கலாய்த்தார். பின்னர் விவேக் அந்த ஜோதியை எடுத்துக் கொண்டு சில ஆண்டுகள் ஓடினார். இப்போது அது சந்தானம் கையில் வந்து சேர்ந்திருக்கிறது. அடுத்து யாரோ?. இந்தப் படத்தில் பிரபுவுக்கு சப்போர்டிங் ரோல். மாணவர்கள் மாறுவார்கள், ஆசிரியர்கள் மாறுவார்கள் ஆனால் கல்லூரியும் காதலும் தொடர்ந்து அங்கேயே இருக்கும் என்ற கருத்தில் வந்து நல்ல வெற்றியைப் பெற்ற படம்.
ஆண்களை நம்பாதே
ஆனந்த விகடனில் ஸ்டெல்லா புரூஸ் எழுதிய தொடர்கதை அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் பாண்டியன் நடிப்பில் வெளியானது. இந்தத் தொடர் விகடனில் வந்த போது பலராலும் ரசிக்கப் பட்டது. ஆனால் படம்?. சென்னையில் ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும் சற்று குண்டான வைத்தியநாதன் என்பவனுக்கு தன் சக பெண் அதிகாரி மேல் காதல். அவனுக்கு காதலை சொல்ல தயக்கம். அவனது இமேஜை உயர்த்தி அதன் மூலம் காதல் வளர அவன் நண்பர்கள் முயற்சிக்கிறார்கள். முடிவு என்ன என்பதே? கதை. இந்தத் தொடருக்கு மணியம் செல்வன் அசத்தலான ஓவியங்கள் வரைந்திருந்தார். வைத்தி என்பவனின் தோற்றம் எல்லோர் மனதிலும் படிந்திருந்தது. பாண்டியன் அந்த கேரக்டருக்கு ஒட்டவேயில்லை. திரைப்படமாக்கும் போது சென்னையை ஊட்டியாக மாற்றியிருந்தார்கள். ஸ்டெல்லா புரூஸ் இயல்பான நகைச்சுவையை கதையில் கொடுத்திருந்தார். படத்தில் கதையோட்டத்திற்க்கு பொருத்தமில்லாத (செந்தில்) நகைச்சுவைக் காட்சிகள் கதையின் பீலைக் குலைத்துவிட்டன. பாடல்களும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
நன்கு காதலித்த பெண்ணை கல்யாணம் செய்தபின் அந்தக் காதலே வெறுப்பாய்த் தோன்றும். பேசாமல் நம் காதல் தோற்றிருக்கலாமே, இனிமையான நினைவுகளாவது மிஞ்சியிருக்கும் என்ற எண்ணம் தோன்றும். அது போல நல்ல கதையை படமாக எடுத்துக் கெடுக்காமல் இருந்தால் அந்தக்கதையின் உணர்வாவது மனதை சுகப்படுத்திக் கொண்டிருக்கும்.
இலங்கேஸ்வரன்
ராமாயனத்தின் இன்னொரு வடிவமான ஆனந்த ராமாயனத்தில் ராவணன் சீதைக்கு தந்தை என்றும், மகள் பாசத்தின் காரணமாகவே அவளை சிறையெடுத்து சென்றார் என்றும் கதை இருக்கும். இதை ஆர் எஸ் மனோகர் நாடகமாக நடத்திவந்தார். பின் அவரே ராஜேஷை நாயகனாக (ராவணனாக) வைத்து இந்தப் படத்தை தயாரித்தார். எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. மேலும் அப்போது ஆர் எஸ் எஸ் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் வளர்ந்து கொண்டிருந்தது. பஜ்ரங் தள், ராம சேனா போன்ற இயக்கங்கள் இங்கு இல்லை. பி ஜே பியோ இந்திராகாந்தி அனுதாப அலையில் சிக்கி இந்தியா முழுவதற்க்குமே இரண்டு எம் பிக்களை மட்டும் பெற்றிருந்தது. அப்ப்டியென்றால் தமிழ்நாட்டில்? அதனால் இந்தப் படத்திற்க்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ குரல் எழும்பி விளம்பரம் கிடைக்கவில்லை. எம் ஆர் ராதா படைத்த இன்னொரு வடிவமான கீமாயாணம் படமாக எடுக்கப்பட்டால் இப்போதுள்ள சூழ்நிலைக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும்.
அன்புள்ள அப்பா
அபியும் நானும் படத்தின் முன்னோடி என்று சொல்லலாமா? முடியாது நிறைய வித்தியாசங்கள். அபியில் தாய் இருக்கும் போதும் மகளிடம் ஏற்படும் பாசம், குழந்தைப் பருவம் முதல் காட்டப்பட்டிருக்கும். அன்புள்ள அப்பாவில் மனைவி இறந்துவிட்டதால் மகளின் மேல் காட்டும் அதீத பாசம். இள வயதில் இருந்துதான் கதை ஆரம்பிக்கும். முதல் மரியாதை, படிக்காதவன் படங்களில் மிக குண்டாக தோற்றமளித்த சிவாஜி, இப்படத்தில் உடல் இளைத்து ட்ரிம்மாக காணப்படுவார். மகள் திருமணம், பிரிவு ஆகியவற்றால் வருந்தி சிவாஜி அம்ம்ம்ம்மாமா என்று இழுத்து பேசும் வசனமே இன்றும் மிமிக்ரி கலைஞர்கள் வாய்க்கு அல்வாவாக இருந்து வருகிறது. நதியா போன்ற மகள் பிரிந்தால் சோகம் வராதா என்ன?
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
கமலின் விக்ரம் படத்தை இயக்கிக் கொண்டிருந்த ராஜசேகர் இடையில் ரஜினியின் மாவீரன் படத்தை இயக்க சென்றுவிட கமல் தன் நண்பர் சந்தான பாரதி உதவியுடன் படத்தை முடிக்க வேண்டியதாயிற்று. அந்த அன்பில் சந்தான பாரதிக்கு கொடுத்த படம் தான் இது. விக்ரமில் வில்லனாக நடித்த சத்யராஜே இதில் நாயகன். பாடல்கள் இல்லாத மிகச்சில தமிழ்படங்களில் (அந்தநாள், குருதிப்புனல்) ஒன்றாகவும் இந்தப்படம் விளங்குகிறது.
இந்தப்படத்தின் சிறப்பு காவல்துறை அதிகாரியை இயல்பாய் காட்டியது. தியாகராஜன் நடித்த காவல், ரஞ்சித் நடித்த பீஷ்மர், அமீரின் ராம், மிஷ்கினின் அஞ்சாதே ஆகிய சில படங்களில் தான் காவல்துறையை இயல்பாக சித்தரித்திருப்பார்கள். ஹீரோ காவல்துறை அதிகாரியாய் இருந்தால் சூப்பர் ஹீரோவாகவும், வில்லன் போலீஸாய் இருந்தால் கொடூரமானவனாகவும் காட்டுவதே நம் பண்பாடு.
இந்த ஆண்டு சத்யராஜுக்கு மிக மிக முக்கியமான ஆண்டு. வேதம் புதிதுவில் பாலுத்தேவர், மக்கள் என் பக்கத்தில் சாராய அதிபர் சாம்ராஜ், பூ விழி வாசலிலேவில் மண வாழ்க்கையில் தோல்வியுற்று, அனாதை ஊமைச் சிறுவனை வளர்க்கும் பாத்திரம், சின்னத்தம்பி பெரிய தம்பியில் இயல்பான கிராமத்தான், ஜல்லிக்கட்டில் கோபக்கார இளைஞன், முத்துக்கள் மூன்றில் எதிர் நாயகன் என ஒன்றுக் கொன்று வித்தியாச வேடங்கள்.
சத்யராஜ் சமீபத்திய பேட்டியொன்றில் விஜய் பூ விழி வாசலிலே பட ரீமேக்கில் நடித்தால் நன்றாக இருக்கும் என சொல்லியிருந்தார். நிச்ச்யம் விஜய்க்கு இந்த வேடம் பொருந்தாது. பல்வேறு உணர்ச்சிகளை சத்யராஜ் அனாயாசமாக இப்படத்தில் வெளிப்படுத்தியிருப்பார். விஜய்க்கு மனிதன், வேலைக்காரன் போன்ற ரஜினி படங்கள்தான் பொருத்தமாய் இருக்கும்.
காணிநிலம்
அருண் மொழி என்பவர் இயக்கத்தில் வெளியான படம். இதுதவிர இவர் ஏர்முனை என்னும் படத்தையும் இயக்கியிருந்தார். விவசாயிகளின் பிரச்சினையை பேசிய இந்தப் படம் வெற்றி பெறவில்லை.
ஆனந்த்
பிரபு, ராதா நடிப்பில் இளையராஜா இசையில் சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான படம். பணக்கார இளைஞனுடன் (பிரபு) முதலில் ஈகோ மோதல், அப்புறம் காதல், பின் தன்னை சந்தேகப் பட்டுவிட்டானே என்று காதலை தூக்கியெறிந்து விட்டு இன்னொருவனை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கும் வேடத்தில் ராதா அசத்தியிருப்பார். இந்தப்படத்திற்க்குப் பின் ராதா அழகாக ஆகிவிட்டார். ஆமாம் அதற்க்கு முன்னால் அவர் மிக அழகாக இருந்த கடைசி சில படங்களில் இதுவும் ஒன்று. படம் வெற்றி பெறாவிட்டாலும் இளைஞர்களை கவர்ந்தது.
கூட்டுப்புழுக்கள்
ரகுவரன், அமலா நடிக்க ஆர் சி சக்தி இயக்கிய படம். அமலா மங்கா என்னும் கேரக்டரில் நடித்திருந்தார். தற்கால மெகா சீரியலுக்கு கதைக்கருக்களை தரும் படங்களில் இதுவும் ஒன்று. (இன்னொன்று : அவள் ஒரு தொடர்கதை)
மனைவி ரெடி
ஆண்பாவத்தின் பெரு வெற்றிக்குப் பின் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளிவந்த படம். ரசிக்கும் படியான காட்சிகள் பல இருந்தாலும் பெரிய வெற்றி இல்லை.
பூக்கள் விடும் தூது
இளவயதிலேயெ மரணமடைந்த மோனிஷா அறிமுகமான படம். கவுண்டமணிக்கும் முக்கிய வேடம். டி ராஜேந்தர் இசையில் நல்ல பாடல்கள். இளவயது காதலை சொல்லிய படம். இதுதவிர கூலிக்காரன் படத்திற்க்கும் இந்த ஆண்டு டி ஆர் இசை அமைத்திருந்தார்.
இந்த ஆண்டில் எல்லாவகைப் படங்களும் வந்து அவற்றின் தரத்திற்க்கேற்ப வெற்றியும் பெற்றன.
March 08, 2009
சிறு நகரங்களைக் குஷிப்படுத்திய 1987 பகுதி -1
இந்த ஆண்டில் தான் ரிலையன்ஸ் உலக கோப்பை போட்டி இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நடைபெற்றது. 1986ல் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியும், இங்கு வந்த ஆஸ்திரேலியர்களை ஒரு நாள் தொடரில் வென்றும் எல்லோர் மனதிலும் நம்பிக்கையை வளர்த்திருந்தது இந்திய அணி. ஆண்டுத் தொடக்கத்தில் இருந்தே அதைப்பற்றிய பேச்சுகள் ஆரம்பித்திருந்தன. அரை இறுதிப் போட்டியில் நாம் தோற்றாலும் அந்த நேரடி ஒளிபரப்பு பட்டி தொட்டியெல்லாம் கிரிக்கெட்டை விதைத்து விட்டு சென்றது. இதன் பின்னர் சிறு நகரங்களின் தேசிய விளையாட்டாக மாறியது கிரிக்கெட்.
இந்த ஆண்டில் அரசியலிலும் சலசலப்புகள் தோன்றிக் கொண்டே இருந்தன. எம்ஜியார் மறைந்த இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதா, அதிமுக அமைச்சர்கள் ஆகியோரைப் பற்றி செய்திகள் புலனாய்வுப் பத்திக்கைகளில் வந்து கொண்டிருந்தன. ஜூனியர் விகடனின் வெற்றியைத் தொடர்ந்து பல புலனாய்வுப் பத்திக்கைகள் வந்த காலம் அது. ராஜீவ் காந்தி மேலிருந்த ஆரம்ப மோகம் குறைந்து பல குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருந்தன. இது போன்ற செய்திகள் படிக்க சுவராசியமாக இருக்கும். அதற்க்கு முன்னால் அரசியல் பத்திரிக்கை என்றால் அது துக்ளக் மட்டும்தான். ஆனால் ஜூவி,நக்கீரன்,தராசு ஆகியவற்றின் வருகை இளைஞர்களுக்குத் தேவையான அரசியலுடன், கவர்ச்சி, கிசுகிசுக்கள் என கலந்து கொடுக்க அந்த வகையிலும் கொஞ்சம் பொழுது போக ஆரம்பித்தது. இவற்றுக்கெல்லாம் உச்சமாக இந்த ஆண்டில் பல சுவராசியமான தமிழ் படங்கள் வெளிவந்து வாழ்க்கையை கலகலப்பாக்கின.
நாயகன்
தெருவிற்க்கு இரண்டோ மூன்றோ தொலைக்காட்சிப் பெட்டி இருந்த ஆண்டு. ஒலியும் ஒளியும் பார்த்துவிட்டு தெருமுனையில் நின்று அதைப் பற்றி விவாதிப்பது தான் வெள்ளிக்கிழமை அஜெண்டா. தீபாவளிக்கு படம் வெளியானபின் அடுத்து வந்த வெள்ளிக்கிழமையன்று முதலில் மனிதன் படப் பாடல் ஒளிபரப்பப்பட்டது. பின்னர் இப்படத்தின் நான் சிரித்தால் தீபாவளி பாடல் ஒளிபரப்பப்பட்டது. முதல் தடவை பார்க்கும் போது காதில் பாடல் நுழையவே இல்லை. நான் வேறு கமல் ரசிகனாக ஏரியாவில் பார்ம் ஆகி இருந்ததால் அன்று என்னை மக்கள் கலாய்த்து விட்டார்கள். சிரிச்சா தீபாவளி அழுதா பொங்கலாடா? என ஆரம்பித்தவுடன் அப்பீட் ஆனேன். எங்கள் ஊருக்கு எந்தப்படமும் 50 நாள் கழித்தே வரும் என்பதால் தெரு இளவட்டங்கள் திண்டுக்கல்லுக்கு சென்று படம் பார்த்து வந்து மனிதன் தான் சூப்பர் என்று செய்தியைப் பரப்பினர்.
ஆனந்த விகடன் இப்போது விழா நாட்களில் எத்தனைப் படங்கள் வந்தாலும் அடுத்த வாரத்திலேயே விமர்சனங்களை வைத்துவிடுகிறது. ஆனால் அப்போது இரண்டு வாரம் கழித்துத்தான் விமர்சனங்களை ஆரம்பிப்பார்கள். அதுவும் வாரத்துக்கு ஒன்றுதான். நாயகனுக்கு 60 மார்க் கொடுத்ததைப் பார்த்த பின்பு தான் எங்கள் ரசிகர் மன்றத்திற்க்கு மூச்சே வந்தது. அது இப்பொழுது டைம்ஸ் சிறந்த 100 வரை அலைகளை எழுப்பிக் கொண்டே இருக்கிறது. இந்த இரண்டு வாரத்தில் படமும் எல்லா சென்டர்களிலும் பிக் அப் ஆக ஆரம்பித்திருந்தது.
நாயகன் படம் பல வகைகளில் திருப்புமுனை படமாக அமைந்திருந்தது. அதற்க்கு முன் மங்கம்மா சபதம், காதல் பரிசு,பேர் சொல்லும் பிள்ளை என மொக்கைகளை வழங்கிய கமல்ஹாசன் இப்படத்திற்க்குப் பின் சாதாரண படங்களில் இருந்து தன்னை வலுக்கட்டாயமாக விலக்கிக் கொண்டார். சிங்கார வேலன், கலைஞன் என அவ்வப்போது ஏற்படும் விபத்துக்களைத் தவிர. நடிப்புக்காக கமலுக்கும், கலை இயக்கத்துக்காக தோட்டா தரணிக்கும், ஒளிப்பதிவிற்க்காக பி சி ஸ்ரீராமிற்க்கும் இப்படத்தின் மூலம் விருது கிடைத்தது இயக்குனர் மணிரத்னத்துக்கு நட்சத்திர அந்த்ஸ்து இப்படத்தின் மூலமே கிடைத்தது. இதற்கடுத்து இவர் இயக்கிய அக்னி நட்சத்திரம் படத்திற்க்கு இவர் பெயரை வைத்துத்தான் வியாபாரம் நடந்தது. பட போஸ்டர்களில் மணிரத்னம்,இளையராஜா, பி சி ஸ்ரீராம் என டெக்னீசியன்களின் பெயரும் பெரிய அளவில் இடம்பெற்றது. பாலகுமாரனின் வசனங்களும் பேசப்பட்டன.
எங்க சின்ன ராசா
பாக்யராஜ் இயக்கத்தில் கடைசியாக பெரிய வெற்றி பெற்ற படம் எனலாம். (இதற்கடுத்து வந்து வெற்றி பெற்ற இது நம்ம ஆளுவில் இயக்கம் பாலகுமாரன் என்று இருக்கும்). இதையடுத்து அவர் இயக்கியவற்றில் சுந்தரகாண்டம், ராசுகுட்டி ஆகியவை ஓடியிருந்தாலும் இந்தப் பட அளவுக்கு பெரிய வெற்றி இல்லை. இந்தப்படத்தில் ஆடிமாதம் – காண்டம் என ஒரு கிளுகிளுப்பு மேட்டரை வைத்திருந்தார். ஜோதியில ஐக்கியமாகிறது என்னும் தமிழர்களின் வாழ்வில் அழியா இடம் பெற்ற வசனம் இந்தப் படத்தில்தான் பிரபலமானது. சங்கர் கணேஷ் இசையில் பாடல்கள் கலக்கல்.
கேசட் விற்பனையில் பெரும் பணம் சம்பாதிக்க முடியும் என டி சீரிஸ் குல்ஷன் குமார் (ரூபாய் 20க்கு ஓரளவு தரமான கேசட்) காட்டியிருந்ததால் அவருக்கு இந்தி பட அதிபர்கள் பாடல் கேசட் உரிமை தராமல் டபாய்த்தனர். அதனாலென்ன நாமே படம் தயாரிப்போம் என களத்தில் இறங்கிய அவர் இந்தப் படத்தை ரீமேக் செய்தார். படமும் பாடல்களும் சூப்பர் ஹிட். (இசை அமைப்பாளர் : ஆனந்த் மிலிந்த்). இந்தப் படம் மாதுரி தீக்சித்தை அங்கே நம்பர் 1 ஆக்கியது. இந்தப் படத்தில் இடம் பெற்ற தக் தக் தர்ணே லகா பாடலுக்கு அவர் ஆடிய மூவ்மெண்டுகளின் மூலம் தக் தக் கேர்ள் என்று வட இந்திய பத்திரிக்கைகளால் அழைக்கப் பட்டார். தக் தக் பாடலின் மூலம் இளையராஜா. ஜெகதேக வீருடு அதிலோக சுந்தரி என்ற சிரஞ்சீவி,ஸ்ரீதேவி நடித்த படத்தில் இடம் பெற்ற பாடல் இது. (இந்தப்படம் காதல் தேவதை என தமிழிலும் டப்பானது). தற்போதைய சிவாஜி (தெலுங்கு) படத்தில் கூட அதிரடிக்காரன் பாடலுக்கு என் டி ஆர், சிரஞ்சீவி போல ரஜினி ஆடும் போது சிரஞ்சீவி வேடத்துக்கு இந்தப் பாடலைத்தான் பயன்படுத்தி இருந்தார்.
ஒரு தாயின் சபதம்
இந்தக் கால கட்டத்தில் தூர்தர்ஷன் ஒளியும் ஒலியுமில் பட பாடல்களை காட்ட வேண்டுமானால் ரூ 20,000 பணம் தயாரிப்பாளர் கட்ட வேண்டும் என்ற விதி இருந்தது. கஷ்டப்பட்டு படம் எடுத்து, அதை கொடுத்தால் அவர்கள் ஒளிபரப்பி விளம்பர வருவாய் பார்ப்பார்கள். அடிசனலாக இந்தப் பணம் வேறு. ஆனால் பட விளம்பரத்திற்க்காக எல்லா தயாரிப்பாளர்களும் இதற்க்கு உடன்பட்டிருந்தனர். சன் டிவி வந்த பின்னால் தான் இந்த நிலை மாறியது. டி ராஜேந்தர் தன் பாடல்களை முதல் பாடலாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தார். கிட்டத்தட்ட 10 வாரங்கள் இந்தப் படத்தின் பாடல்கள் முதல் பாடலாக ஒளிபரப்பப்பட்டு நல்ல விளம்பரம் கிடைத்தது. டீ ஆர் வக்கீல் வேடத்தில் நடித்திருந்தார். நன்கு ஓடிய படம்.
மனதில் உறுதி வேண்டும்
பெண்கள் தின சிறப்பு திரைப்படமாக ஒரு 10 ஆண்டுகள் இந்தப் படம் தொலைக்காட்சி சேனல்களில் கொலுவீற்றிருந்தது. சுஹாசினியின் தம்பியாக விவேக் இந்தப் படத்தில் தான் அறிமுகமானார். கிட்னி தானம் பற்றிய விழிப்புணர்வு, பெண் செவிலியர்களின் தியாகம் என சிறந்த கருத்துக்களைக் கொண்டிருந்த படம். எஸ் பி பி தலைமை மருத்துவராக அசத்தியிருப்பார்.
பருவராகம்
அப்பொதைய மிஸ் இந்தியா ஜூஹி சாவ்லா அறிமுகமான மியூசிகல் ஹிட் படம். அம்சலேகாவின் இசை அசத்தல். ரவிசந்திரன் (கன்னடம்) நாயகன். இவரின் தந்தை என் வீராச்சாமி தான் ரஜினி நடித்த படிக்காதவன் படத்தின் தயாரிப்பாளர். தமிழிலும் தன் மகனை நிறுத்த இப்படத்தை தயாரித்திருந்தார்.
ரெட்டை வால் குருவி
பாலு மகேந்திராவின் பேவரைட்டான இரண்டு பொண்டாட்டி கதைக் கரு. சாஃப்ட்வேர் எஞ்சினியர் என்ற வார்த்தை ஒலித்த முதல் தமிழ் படம். இளையராஜா இசையில் கே ஜே ஜேசுதாஸ் பாடிய ராஜ ராஜ சோழன் நான் பாடல் 30ஐ கடந்தவர்களின் ஐபாடில் டீபால்ட்.
எங்க ஊரு பாட்டுக்காரன்
ராமராஜனுக்கு ”டவுசர்” என்ற பெயரை வாங்கித் தந்த கங்கை அமரனின் படம். இந்தப் படத்தின் பல காட்சிகளில் அவர் அணிந்து வந்த கோடு போட்ட டவுசரே அவரது அடையாளங்களில் ஒன்றாகிப் போனது. ஆஷா போன்ஸ்லே பாடிய செண்பகமே செண்பகமே அப்போதைய ஆர்கெஸ்ட்ராக்களில் தவறாத ஒன்று.
தீர்த்தக் கரையினிலே
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நம்பர் 1 நாயகியாக திகழ்ந்த ரூபிணி அறிமுகமான படம். மோகன், சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரங்கள். இளையராஜாவின் இசையில் அருமையான பாடல்கள், ஓரளவு கதை என தப்பித்த படம்.
சங்கர் குரு
இளையராஜாவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் சந்திர போஸை ஆதரித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த வெற்றிப்படம். அர்ஜூனுக்கு நல்ல அந்தஸ்தைக் கொடுத்த படம். இப்பட இயக்குனர் ராஜா முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
சத்யராஜ்
1986ல் கதாநாயகனாக அரிதாரம் பூசத் தொடங்கிய சத்யராஜ் தன் காலை அழுத்தி ஊண்டியது இந்த ஆண்டில்தான். கடமை கண்ணியம் கட்டுப்பாடு, பூ விழி வாசலிலே, வேதம் புதிது, சின்ன தம்பி பெரியதம்பி, மக்கள் என் பக்கம், ஜல்லிக்கட்டு, முத்துக்கள் மூன்று, ஆளப்பிறந்தவன் என சத்யராஜின் நடிப்புக்கு சான்றாக சொல்லப்படும் படங்கள் எல்லாம் இந்த ஆண்டில் தான் வெளிவந்தன.
ரஜினிகாந்த்
மனிதன், ஊர்க்காவலன், வேலைக்காரன் என குடும்பத்தோடு போய் பார்க்கும் படியான இன்றும் ரீ ரிலிஸ் வேல்யு உள்ள ரஜினியின் படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்தன.
விஜயகாந்த்
உழவன் மகன், உள்ளம் கவர் கள்வன், வீரபாண்டியன், பூ மழை பொழியுது, நீதிக்கு தண்டனை, நினைவே ஒரு சங்கீதம், கூலிக்காரன், சிறைப் பறவை என கலவையான படங்கள்.
(தொடரும்)
March 07, 2009
பெண் வாசனை
அப்போது டிபார்ட் மெண்ட் பியூன் ஒருவனை அழைத்து வந்து,
“ சார், நியூ அப்பாயிண்ட்மெண்ட், ஹெச் ஓ டி உங்க கிட்ட அனுப்பி வைக்கச் சொன்னார்” என ஒப்படைத்தார்.
விசாரித்துக் கொண்டிருந்த மாணவனை அனுப்பிவிட்டு பியூனிடம் புலன் விசாரணையை தொடங்கினேன்.
என்னய்யா நடக்குது இங்க? அந்தப் பொண்ணு யாரு? எப்படி இருக்கும்? நான் கவனிச்சதே இல்லையே என பியூனிடம் கேட்டேன்.
அதற்க்கு பியூன் அது பீமி சார். இவன் எதப்பார்த்து லெட்டர கொடுத்தான்னு தெரியல என்றார்.
ஓ அதான் நம்ம கண்ல படல என்று சமாதானப் படுத்திக் கொண்டு நியூ அப்பாயிண்ட்மெண்ட்டிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினேன்.
செல்வம் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவன் அது என்ன சார் பீமி என கேட்டான். பீமனுக்கு பெண்பால் என நான் சொல்ல, சந்தேகமும் தயக்கமும் தீர்ந்து சகஜமாக பேசத் தொடங்கினான்.
வசதியான விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் அதிக முறைப் பெண்கள் உடையவன் என்றும் உரையாடலில் தெரியவந்தது. தொடர்ந்த பழக்கத்தில் என் அறைக்கு வந்தவன் நல்லா நீட்டா இருக்கே, நான் வேணும்னா உங்க ரூம் மேட்டா வரட்டுமா? எனக் கேட்டான். வாடகை குறையும் என்பதால் நானும் சம்மதிக்க, இரண்டு நாட்களில் நாலைந்து அட்டைப் பெட்டி சகிதம் வந்துவிட்டான்.
நல்லா கிளாஸ் எடுக்க ஏகப்பட்ட புக்கு ரெஃபர் பண்ணுவ போலிருக்கே என கேட்க, அப்படி யெல்லாம் என்னப் பத்தி தப்பா நினச்சுறாதீங்க என்று பெட்டியை பிரித்தான். பாதி பர்மா பஜார் அளவுக்கு அதில் வாசனைத் திரவியங்கள், டியோடரண்டுகள், பாடி ஸ்பிரே என குவிந்திருந்தன.
எங்க வீட்டில எல்லா ரூமும் கெட்ட வாசனைங்க. சமயக்கட்டுல எப்பவும் தூக்குச் சட்டியில கருவாடும், உப்புக் கண்டமும். மீதமான மீன்,கறி குழம்பு எல்லாம் ரெண்டு நாளைக்கு வச்சு சாப்பிடுவாங்க. வீட்டு ஹால்ல, அப்பா எப்பவும் குடிக்கிற கத்திரி சிகரட்டு வாசம். திண்ணையில உட்காரலாம்னா அங்க பாட்டி குடிக்கிற சுருட்டு வாசம். கக்கூஸ் வேற எடுப்பு கக்கூஸ். காலையில அவங்க வந்து எடுத்துப் போடுற வரைக்கும் நாறிக்கிட்டேயிருக்கும். மாடி ரூமில நெல்லு காயப்போட்டு ஒரு அவியல் வாசம் எப்பவும் இருக்கும். சின்ன வயசில இதெல்லாம் தெரியல. பதினொன்னாவதுக்கு ஹாஸ்டல்ல தங்கியிருந்துட்டு திரும்பும்போதுதான் இதெல்லாம் உறைச்சது. கறியா தின்னு தின்னு என் உடம்பில கூட வேர்வை வாடை அதிகமாயிருச்சு. அதான் இப்போ சைவத்துக்கு மாறிட்டேன். அப்படியும் ஒரு சேஃப்டிக்கு இதெல்லாம் என நீண்ட விளக்கமளித்தான்.
மேலும் இதற்க்கு முன் தங்கியிருந்த ரூமின் வாடை பிடிக்காமல்தான் இங்கு வந்ததாகவும் கூறினான்.
நாங்கள் வழக்கமாய் ரீ சார்ஜ் செய்யும் எஸ் டீ டி பூத்தில் மாலை வேளைகளில் ஒரு பெண் தென்படத் தோன்றினாள். ஏர் ஹோஸ்டஸ் ரேஞ்சில இருக்கா, எஸ் டீ டி பூத்தில போய் வேலை பார்க்கிறாளே என விசனப் பட்டேன். நாங்கள் செல்லும் சமயங்களில் கலகலப்பாக பேசுவாள். பின் ஒரு நாள் அவள் அந்த பூத் உரிமையாளரின் மகள்தான் என்றும், வசதி எனவும் தெரிய எனக்குள் காதல் துளிர்விட்டது. வீட்டில் இருந்த ஸ்பீட் பிரேக்கர்களை நினைத்து என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன். செல்வமோ பொண்ணுன்னா அடக்கமா இருக்கனுங்க இவ என்னா வள வளன்னு பேசுறா என அவளை ஏற்கனவே நிராகரித்திருந்தான்.
அவனது வீட்டில் எந்த ஸ்பீட் பிரேக்கரும் இல்லை. எனவே கல்யாணத்துக்கு வற்புறுத்த ஆரம்பித்தார்கள்.
ஒருத்தி தலையில் வேப்பெண்ணை வைக்கிறா, இன்னொருத்திக்கு பொடுகு, ஒரு அத்தை வீடு எங்க வீட்டை விட நாறும் என ஏற்கனவே எல்லா முறைப் பெண்களையும் ரிஜக்ட் செய்திருந்தான். இந்த ஊரிலும் சில ஜாதகங்கள் வர அங்கே பெண் பார்க்கப் போகும் போது என்னையும் சில சமயம் அழைத்துச் செல்ல ஆரம்பித்தான். பெண் காப்பி கொடுக்க வரும்போது பெண் முகத்தைப் பார்க்கிறானோ இல்லையோ அவள் வாசனையை நுகர்ந்தான். பெண்கள் பெரும்பாலும் இந்த வைபவத்தின் போது பவுடர், செண்ட் போட்டு மல்லிகையும் சூடிக் கொள்வதால் அவனால் பிரித்தறிய முடியவில்லை. பெண் ஓரளவு பிடித்திருந்தால் காப்பியை லேசாக சட்டையில் தட்டி விட்டு அதைக் கழுவப் போவது போல வீட்டுக்குள் புகுந்து நுகர ஆரம்பித்தான்.
தரகர் சந்தேகப்படுவாரே என்று ஒருமுறை என் சட்டையை கறைப்படுத்தினான். எனக்கு உதவி செய்வது போல வீட்டிற்க்குள் திக் விஜயம் செய்தான். ஆத்திரத்தில் நான் இதுக்கு ஒரு மோப்ப நாயை கூட்டிக்கிட்டு வர வேண்டியதுதானடா என்று கடுப்படித்தேன்.
செமெஸ்டர் ஆரம்பித்தவுடன் எல்லோருக்கும் எக்ஸாம் டியூட்டி போட ஆரம்பித்தார்கள். சிலருக்கு வரமாகவும், சிலருக்கு சாபமாகவும் அமையும் அது. முழுக்க முழுக்க பையன்களே உட்கார்ந்திருந்த ஹாலில் கடு கடுவென கடமையை ஆற்ற தொடங்கிய போது, சாபத்தை வரமாக்க வருகை தந்தாள் பிசிக்ஸ் டிபார்ட்மெண்டில் புதிதாக சேர்ந்திருந்த ஆனந்தி. ஏழாம் நம்பர் செருப்பு சரியாகப் பொருந்தும் உயரம், எக்செல் சுடிதார் இதமாக பொருந்தும் உடல்வாகு, ஐந்து ரூபாய் டிக்கெட்டுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தாலும் கண்டக்டர் கோபப் படாத முகம். வோட்டர் ஐடிக்கு போட்டோ எடுப்பவன் கூட நல்லா சிரிங்கம்மா என்று கேட்கும் படியான பல்வரிசை என அவளை ரசித்திக் கொண்டிருந்ததில் மூன்று மணி நேரம் முப்பது வினாடிகளாய் கழிந்தது.
கல்லூரி அலுவலகத்தில் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி அவள் பயோடேட்டாவை பார்த்த போது வேறு ஜாதி எனத் தெரிய வந்தது. எப்படிப் பார்த்தாலும் தந்தை சொத்தில் இருந்து என் பங்குக்கு 20 லட்சம் வரும். வைதீக குடுக்கையான என் தந்தையை பகைத்துக் கொள்வதா என யோசித்தேன். ஆனந்தி இல்லையின்னா ஒரு தமயந்தி. ஆனா 20 லட்சம்?.
செல்வத்துக்கு சூட் ஆகிப் போனது இந்த விஷயம். எப்படியும் இவளை மணந்து கொள்ள வேண்டுமென்ற வெறியே ஏற்பட்டது அவனுக்கு. அவள் அவ்வளவாக யாருடனும் பேசுவது இல்லை என்பதும் அவனுக்கு பிடித்துப் போனது. ரெண்டு சம்பளம் நீட்டா செட்டில் ஆயிரலாம்னு பொருளாதார அட்வாண்டேஜ் வேறு. என்னிடம் அவன் கெஞ்சவே, காதலை வளர்க்க உதவி செய்வதாய் வாக்களித்தேன்.
சீனியர் என்பதால் செல்வாக்கை பயன்படுத்தி அவள் இருக்கும் எல்லா கமிட்டியிலும் இவனையும் பங்கு பெற வைத்தேன். ஆண்டு விழா, தமிழ் மன்றம் என எது நடந்தாலும் இருவரும் அருகருகே நின்று கடமையாற்றுமாறு நான் பார்த்துக் கொண்டேன்.
செல்வத்தின் வீட்டார் நாசூக்கு இல்லாதவர்களாய் இருந்தாலும் அவன் உடல் வளர்ச்சியில் நன்கு அக்கறை காடியிருந்தனர். வாட்ட சாட்டமாய் ஒருவன் சும்மா சும்மா சுற்றி வந்தால் ஒரு இரக்கம் வந்து காதலாய் மாற வாய்ப்பிருக்கிறதல்லவா? சில மாதங்களில் கண்ணால் பேசத் தொடங்கி காதலை வளர்க்க ஆரம்பித்தார்கள் இருவரும்.
எனக்கு திடீரென ஒரு நாள் சந்தேகம் வந்தது.
இந்த ஊர்ல நெறையா பொண்ணுககிட்ட கத்தாழை வாடை அடிக்குதின்னு பொலம்புவேயடா? இவகிட்ட ஏதும் பிரச்சினையில்லையேன்னு கேட்டேன்.
நீங்க வேற, இயற்கையான பொம்பளை வாசம் இவகிட்டதாங்க இருக்கு. அதிகமா பவுடர் போடுறதில்ல, செண்ட் அடிக்கிறதில்ல, பூகூட ரோஸ்தான். சாயங்காலம் கூட வேர்வை வாடை இல்லாம பிரெஷ்ஷா இருக்குறா. நான் சின்ன வயசில பட்ட கஷ்டத்துக்கு கடவுள் கண்ண தொறந்திட்டாரு என பதிலளித்தான்.
பின் ஏற்பட்ட முன்னேற்றங்களில் இருவருக்கும் திருமணம் முடிந்தது. வயிற்றெரிச்சலோடு வாழ்த்திவிட்டு இன்னும் எவ்வளோ வருசத்துக்கு தனியாவே போயி எல்லோரையும் வாழ்த்துறதுன்னு புலம்பிக்கொண்டே ரூமுக்கு வந்து சேர்ந்தேன். 15 நாள் லீவ் கழித்து சுரத்தே இல்லாமல் கல்லூரிக்கு திரும்பினான் செல்வம். தனியே கூட்டிச் சென்று விசாரித்தபோது சொன்னான் “ அவ வாய் ரொம்ப நாறுதுங்க. முத்தம் கொடுக்கப் போனா மூச்சே நின்னுறுது”.
March 04, 2009
ஐமேக்ஸ் தமிழ்சினிமாவுக்கு சாத்தியமா – பகுதி -3
ஐமேக்ஸ்க்கு முன்னாடியாக கருதப்படுவது சினிராமா என்னும் தொழில்நுட்பம். இது சினிமாஸ்கோப் வருவதற்க்கு முன் அகலத்திரையில் படம் காண்பிக்க உபயோகப் படுத்தப்படுத்தப் பட்டது. இந்த முறைப்படி ஒரு குறிப்பிட்ட காட்சியை மூன்று 35 எம் எம் பிலிம் உள்ள கேமிராக்கள் கொண்டு படம் எடுத்து பின் மூன்று புரஜெக்டர்களின் மூலம் அதை திரையில் காட்டுவது.
எடுத்துக்காட்டுக்கு வல்லவன் படத்தில் சிம்பு, நயன்தாரா மற்றும் ரீமா சென் ஆடும் அம்மாடி ஆத்தாடி என்னும் பாடலை எடுத்துக் கொள்வோம். இதில் ஒரு காட்சியில் சிம்பு நடுவிலும், நயன்தாரா அவருக்கு இடதுபுறத்திலும், ரீமா வலது புறத்திலும் ஆடுவார்கள். சினிராமா முறைப்படி மூன்று கேமராக்களில் நடு கேமிரா சிம்புவையும், வலப்பக்க கேமிரா இடதுபுறத்தில் ஆடும் நயனையும், இடப்பக்க கேமிரா வலது புறத்தில் ஆடும் ரீமாவையும் படமெடுக்கும். அவர்கள் ஆடும் செட் ஒன்பது அடி அகலம் என வைத்துக் கொள்வோம். இதை மூன்று, மூன்று அடியாக பிரித்துக் கொள்வார்கள். இடப்பக்க மூன்றடியை வலப்பக்க கேமிரா படமெடுக்கும். அதைப்போலவே வலப்பக்க மூன்றடியை இடப்பக்க கேமிரா படமெடுக்கும். திரையரங்கிலும் இடதுபக்க புரஜெக்டரில் இருந்து வலதுபக்கத்திற்க்கான படம் ஒளிபரப்பாகும். முதல் படத்தில் இந்த முறை காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு படமெடுக்கும் போது இடது மற்றும் வலப்புற காமிராக்களுக்கு இடையேயான கோணமானது 146டிகிரி இருக்குமாறு வைத்துக் கொள்வார்கள். புரஜெக்டர்களின் கோணமும் அவ்வாறே வைத்துக் கொள்ளப்படும். இதற்க்குக் காரணம் நம்மைச் சுற்றியுள்ள 360 டிகிரி யில் நம்மால் பார்க்க முடிவது 146 டிகிரி மட்டுமே. இரையாகும் விலங்குகளான மான், மாடு போன்றவை 180 டிகிரி பார்க்கும் சக்தி கொண்டவை. காரணம் பக்கவாட்டில் இருந்து தன்னைக் கொல்லவரும் விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள அதன் தகவமைப்பு அவ்வாறு உள்ளது. (வேட்டையாடும் விலங்குகளுக்கு கண்கள் முன்னால் மட்டுமே பார்க்கும் வகையில் அமைந்திருக்கும்). பச்சோந்தி 360 டிகிரி பார்க்கும் சக்தி கொண்டது. ஆனால் அவை நயன், ரீமாவை பார்க்க விரும்புவதில்லை. எனவே 146 டிகிரி யில் படமெடுத்தால் மட்டும் போதும்.
அடுத்து ஒலி. சினிராமா தொழில்நுட்பம் ஏழு டிராக்குகள் ஒலிஅமைப்பைக் கொண்டது. இதில் ஐந்து டிராக்குகள் திரைக்குப் பின் உள்ள ஒலிபெருக்கி மூலமும், இரண்டு டிராக்குகள் தியேட்டரின் பக்கச் சுவர்களில் அமைக்கப் பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மூலமும் ஒலிபரப்பப்படும். இந்த ஒலியானது தனியாக இன்னொரு 35 எம் எம் பிலிமில் பதிவு செய்யப்பட்டிருக்கும். படம் ஆரம்பிக்கும் போது இதுவும் சரியாக ஓட ஆரம்பிக்கும். இதுவே தற்கால டிடிஎஸ் தொழில் நுட்பத்திற்க்கு முன்னோடி எனலாம்.
இதன் குறைபாடுகள்
திரையும் 146 டிகிரி கோணத்தில் அமைக்கப்படும் எனவே திரையின் ஒருபக்கத்தில் இருந்து எதிரொளிக்கும் ஒளியானது திரையின் இன்னொரு பக்கத்தில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே திரை அமைப்பில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். திரையானது பல ஸ்ட்ரிப்களாக செய்யப்பட்டு ஒன்று சேர்க்கப்பட்டது. புரஜெக்டர்களையும் சரியான கோணத்தில் அமைக்க வேண்டும். எனவே திரையரங்கை நிர்மாணிப்பதே கடினமான பணியாக இருந்தது. மேலும் பிம்பங்கள் சேரும் இடத்தில் கோடுகள் தெரிந்தன. (சீம்லெஸ் ஆக இல்லை). எனவே படப்பிடிப்பு செலவு, திரையரங்கு கிடைக்காமை ஆகியவற்றால் இது வழக்கொழிந்து போனது. 1952 ல் நடை முறைக்கு வந்த இம்முறை பல மாற்றங்களை சந்தித்து 72 வரை இருந்தது.
ஐமேக்ஸ்
மூன்று கேமிராவில் பதிவு செய்வதற்குப் பதில் பெரிய பிலிமில் படமெடுத்து அதை திரையில் விரியச் செய்தால் எப்படி இருக்கும்? இதற்க்காக புதுசாவா பிலிம் தயாரிக்கணும்? புழக்கத்தில் இருக்கும் 70 எம் எம் பிலிமையே கிடைமட்டமாக உபயோகித்தால் என்ன? இந்த யோசனையில் உருவானதுதான் இப்பொதைய ஐமேக்ஸ் பிலிம் பார்மட். இம்முறைப்படி 70 எம் எம் அகலம் 48.5 எம் எம் உயரம் உடைய ஏரியாவில் படம் பதிவு செய்யப் படுகிறது. 70 எம் எம் படச்சுருளை கிடை மட்டமாக கற்பனை செய்து கொள்ளுங்கள். இரண்டாவது படத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு பிரேமுக்கு 15 துளைகள் இருக்கும். அதனால் இந்த பிலிம் 15/70 என்றும் அழைக்கப்படும். பிலிமின் மொத்த பகுதியிலும் படத்தை பதிவு செய்துவிடுவதால் ஆறு டிராக்குகள் கொண்ட ஒலியானது தனி 35 எம் எம் சுருளில் பதிவு செய்யப்படும். சரி படமெடுத்து விட்டோம். இதை அவ்வளவு பெரிய திரையில் தரமாக காட்ட வேண்டுமே?
ஐமேக்ஸ் திரையரங்கில் பயன்படுத்தப் படும் புரஜெக்டரானது 1.8 டன் எடை உள்ளது. பிலிமை வினாடிக்கு 24 பிரேம்கள் வீதம் ஓட்ட ஒரு மெக்கானிசம், பிலிமில் உள்ள காட்சியை புரஜெக்ட் செய்ய அதி நவீன விளக்குகள் (ஜெனான் ஆர்க்) என பிரமாண்டமாக இருக்கும்.
இந்த வினாடிக்கு 24 பிரேம் என்பது என்ன கணக்கு?. நம்முடைய பார்வை என்பது கண்ணை மட்டுமே சார்ந்தது இல்லை. மூளையையும் சார்ந்தது. பார்த்த காட்சியானது மூளைக்கு சென்று அதை நாம் உணர ஒரு குறிப்பிட்ட கால அளவு தேவைப்படுகிறது. இது ஒருவருக்கு ஒருவர் வேறுபட்டாலும் பெரிய வித்தியாசம் இருக்காது.
தியேட்டரில் இடைவேளையில் போடப்படும் விளம்பர ஸ்லைடுகளை பார்த்திருப்பீர்கள். முன் சீட்டில் காலை வைக்காதீர்கள், தினமும் நான்கு காட்சிகள், புகைக்கச் சிறந்தது சொக்கலால் பீடி என பல ஸ்லைடுகள் காட்டப்படும். இது ஒரு வினாடிக்கு மூன்று நான்கு காட்டப்படும். எனவே தொடர்ச்சியில்லாமல் தனித்தனியே தெரிகிறது. ஆனால் இதையே ஒரு வினாடிக்கு 20 அல்லது 24 முறை காட்டினால் நமக்கு அது தொடர்ச்சியாக தெரியும். ஸ்லைடை மாற்றுவதே தெரியாது. இதன் அடிப்படையில்தான் ஒரு வினாடிக்கு 24 பிரேம் மாறினாலும் நமக்கு அது மாறுவது தெரியாமல் காட்சி மட்டுமே தெரிகிறது.
இன்னொரு உதாரணம் பார்ப்போம். தொலைக்காட்சியில் ஆனது வினாடிக்கு 20 பிரேம்கள் வீதம் காட்டப்படுகிறது. செய்திகள் நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். நமக்கு செய்தி வாசிக்கும் பெண் ஒரு ப்ரேமாக மட்டுமே தெரியும். ஆனால் வினாடிக்கு 20 பிரேம் வீதம் அது ஓடிக்கொண்டு இருக்கும். 80-90 களில் வெளியான பல திரைப்படங்களில் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். திரையில் டிவியைக் காட்டும் போது டிவியின் காட்சிகளுக்கு இடையே கிடைமட்ட கோடு தெரியும். இரண்டு ஊடகங்களுக்கு இடையேயான பிரேம் ரேட் வித்தியாசத்தால் தான் இவ்வாறு தெரிகிறது. சார்லி சாப்ளின் படங்கள் 1வினாடிக்கு 18 பிரேம்களை உபயோகித்தது. தற்கால் வீடியோ கேம்களில் கம்பெனிக்கு தக்கவாறு பிரேம் ரேட் மாற்றுகிறார்கள். வினாடிக்கு 48 பிரேம்வரை நம் கண் சிறப்பாக செயலாற்றும். அதற்க்கு மேலான வேகத்தில் பிம்பங்களை உணராது. 24 பிரேம் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. இதற்க்கு மேல் என்றாலும் அதிக பிலிம் செலவாகும்.
ஐமேக்ஸ் பிலிமின் அகலம் அதிகம் என்பதால் வினாடிக்கு 24 என்ற அளவில் அதை வேகமாக இழுக்க 35 எம் எம் புரஜெக்டரில் உள்ள தொழில்நுட்பம் போதாது. எனவே வேக்யூம் உதவியுடன் அதை செயல் படுத்துகிறார்கள். இது ஒரு ஆஸ்திரேலியர் கண்டுபிடித்த தொழில்நுட்பம். முன்பு படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஆன படங்களைப் பார்த்தால் (இப்பல்லாம் அப்படி ஓடுதா என்ன?) ஒளி குன்றி தெரியும். அதைப் போலவே சில சராசரி திரையரங்குகளில் புது படம் கூட மங்கலாக தெரியும். இரண்டுக்கும் காரணம் ஒளிக்காக உபயோகப்படுத்தும் எலெக்ரோடுகளே. அவற்றில் இருந்து வரும் புகை பிலிமில் படிவதால் நாள்பட்ட உபயோகத்துக்குப் பின் படம் மங்கலாகிறது. சிலசமயம் சில கஞ்ச தியேட்டர் உரிமையாளர்கள் சரியான நேரத்தில் எலெக்ரோடை மாற்றாமல் பயன்படுத்துவதாலும் இது நேரிடுகிறது. ஐமேக்ஸ் புரஜெக்டர்களில் 12 முதல் 18 கிலோ வாட்ஸ் சக்தியுள்ள விளக்குகள் பயன்படுத்தப் படுகின்றன. பிலிமில் தூசு படியாமல் இருக்க கூட தொழில்நுட்பம் உபயோகிக்கப் படுகிறது.
ஐமேக்ஸில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்
ஐமேக்ஸ் டோம்
இம்முறையில் படமானது 1800 கோணத்துக்கு ஒளிபரப்பாகும். பார்வையாளருக்கு பிரேமுக்குள் தானே இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். மும்பையில் இருக்கும் ஐமேக்ஸ் தியேட்டர் இந்த வகையே. பிளானடோரியங்கள், அறிவியல் மையங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ற அமைப்பு இது. உணமையில் ஒரு அறிவியல் மையத்திற்க்காக உருவாக்கப்பட்ட அமைப்பு இது.
ஐமேக்ஸ் 3டி
மற்ற இரு பரிமாணங்கள் பிரமாணடம் என்பதால் மூன்றாவது பரிமாணம் எதிர்பார்க்கும் அளவுக்கு கிடைப்பதில்லை என்ற குற்ரச்சாட்டு இருக்கிறது.
ஐமேக்ஸ் டிஜிடல்
டிஜிடல் கேமிராவால் படம் எடுக்கப்படுவதல்ல. எடுக்கப்பட்ட ஐமேக்ஸ் படத்தை டிஜிடலுக்கு மாற்றி பிரத்யேக புரஜெக்டர் மூலம் திரையிடுவது. எதிர்பார்த்த தரம் இன்னும் கிடைக்கவில்லை.
தமிழ்சினிமாவிற்க்கு இது சாத்தியமா?
70 களின் மத்தியில் இந்த தொழில்நுட்பம் பயன் பாட்டுக்கு வந்தாலும் இதுவரை 300 திரையரங்குகளே உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் இன்னும் இரண்டாண்டு கழித்து பார்த்தாலும் மொத்தமாக 10 தியேட்டர் இருந்தால் ஆச்சரியம் தான். ஹாலிவுட்டில் கூட இப்பொது ஐமேக்ஸ் முறையில் படம் எடுப்பதில்லை. எடுத்த படத்தை ஐமேக்ஸ் பிலிமுக்கு மாற்றி திரையிடுகிறார்கள். ஏனெனில் ஆகும் செலவு அப்படி. இந்த வகையில் பார்த்தால் முதலில் இந்திப் படங்களை ஐமேக்ஸுக்கு மாற்றி திரையிடவே முதலில் முயற்சிப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு நம்மை விட பெரிய மார்க்கட். ஆனால் அதற்க்கே பெரிய தயக்கம் இருக்கிறது. போட்ட காசை எடுக்க் முடியுமா? என்று. ஷோலே,டைட்டானிக், பென்ஹர்,மம்மி, டென் கமான்மெண்ட்ஸ், டிராய் போன்ற படங்களை ஐமேக்ஸில் பார்க்க எனக்கு ஆசை.
வரும் ஐந்து ஆண்டுகளில் அதிகபட்சம் இரண்டு ஐமேக்ஸ் தியேட்டர்கள் தமிழ் நாட்டில் வரலாம். அதற்க்காக படத்தை மாற்றி வெளியிட்டால் முதலுக்கு மோசம் தான். எந்திரன் திரைப்படத்தை வேண்டுமானால் செலவோடு செலவாக சன் பிக்சர்ஸ் ஐமேக்ஸ் பிலிமுக்கு மாற்றலாம். இல்லையெனில் மர்மயோகியோ, மருதநாயகமோ ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டால் ஒரு வாய்ப்பு இருக்கிறது. நாளை நடப்பதை யார் அறிவார்?
March 02, 2009
ஐமேக்ஸ் தமிழ்சினிமாவுக்கு சாத்தியமா? பகுதி – 2
இதற்க்கு காரணங்கள்
கொடைக்கானலில் தொலைக்காட்சி சிக்னலை ஒளிபரப்பும் நிலையம் ஆரம்பிக்கப்பட்டதும் தான் தமிழகத்தில் பரவலாக தொலக்காட்சிப் பெட்டிகளை மக்கள் வாங்கத் துவங்கினர். பெரும்பாலோனோர் முதலில் பார்த்த நிகழ்ச்சியே இந்திராகாந்தி அம்மையாரின் (1984) இறுதிச்சடங்கு நிகழ்ச்சிதான். பின்னர் தமிழ் ஒளிபரப்பு துவங்கப்பட்டது (அமைச்சர் : அஜீத் பாஞ்சா). அப்போது வழங்கப்பட்ட நிகழ்ச்சிகள் மக்களின் திரைப்பட ஆர்வத்தை குலைக்கும் வகையில் இல்லை. தனியார் தொலைக்காட்சிகள் வருகையும், திருட்டி விசிடியும் தான் அந்த புண்ணியத்தை கட்டிக்கொண்டன.
தொலைக்காட்சியை கட்டிக் கொண்டு அழுத அமெரிக்கர்களை திரையரங்குக்கு அழைத்துவர அகலத்திரையை ஆயதமாக பயன்படுத்த தொடங்கினர். அவர்கள் கையில் அப்பொழுது இருந்தது 70 எம் எம். ஆனால் அதை அவர்கள் உபயோகிக்க வில்லை.
காரணங்கள்
70 எம் எம் பிலிம் விலை அதிகம். போடப்படும் பிரிண்டுகளின் எண்ணிக்கையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
படப்பிடிப்பில் அதற்க்குரிய கேமிரா, அது கூட பிரச்சினை இல்லை. எல்லாத் திரையரங்குளுக்கும் புரஜெக்டரை மாற்ற வேண்டும். அது மிகவும் செலவுபிடிக்கும்.
70 எம் எம் திரையை நிரப்ப நிறைய மெனக்கெட வேண்டும். திரையில் வெற்றிடம் இல்லாமல் அழகாய் நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பும் போது அது காட்சியின் தாக்கத்தை குறைத்துவிடக் கூடாது.
இது போன்ற காரணங்களால் பல இயக்குநர்கள் 35 எம் எம் முடன் திருப்திப் பட்டுக்கொண்டனர்.
ஆனால் தொலைக்காட்சி போட்டியை சமாளிக்க யோசித்ததன் விளைவாக 3 டி, 55 எம் எம் பிலிம், சினிராமா ஆகியவை கண்டுபிடிக்கப் பட்டன. ஆனால் அவையும் அதிக செலவு பிடித்தவையாகவும், எளிதில் எல்லோராலும் மாற்ற முடியாததாகவும் இருந்தன.
அவர்களுக்கு அருமருந்தாக வந்தது, பிரான்சு நாட்டு பேராசிரியர் ஹென்ரி கண்டுபிடித்திரிந்த அனமோர்போஸ்கோப் என்னும் தொழில்நுட்பம். இதை அவர் 1920லேயே கண்டுபிடித்து பேடண்ட் வாங்கியிருந்தலும் சீந்துவாரின்றி கிடந்தது. இந்த முறைப்படி ஒரு லென்ஸை கேமிராவின் முன்னால் வைத்து அகலமான படக்காட்சியை குறுக்கி 35 எம் எம் பிலிமில் பதிவு செய்வது. பின்னர் புரஜெக்டரின் முன் அதற்க்கு மற்றொரு (ஒளிப்பதிவுக்கு உபயோகிக்கப்பட்ட லென்ஸின் காம்ப்ளிமெண்ட்) லென்ஸை வைத்து விரியச்செய்வது. இதன் மூலம் அகலமான பிம்பம் நமக்கு கிடைக்கும். படமெடுக்கும் கேமிராவை மாற்றத் தேவையில்லை. புரஜெக்டரை மாற்றத் தேவையில்லை. பின்னர் கேமிராவிலேயெ இந்த அனமோர்போஸ்கோப் லென்ஸ் பொருத்தப்பட்டது. முதல் படத்தில் அது எவ்வாறு திரையில் விரிகிறது என காட்டப்பட்டுள்ளது. இரண்டாவது படத்தில் உள்ள நான்காவது பிலிமே அனமோர்ஸ்கோப் முறையில் பதிவு செய்யப்பட்ட பட்ட பிலிம்.
இன்னொரு வகையிலும் இந்த அகலத் திரை உணர்வை கொண்டுவரலாம். இது மேட் டெக்னிக் எனப்படும். 35 எம் எம் பிலிமின் மேலும் கீழும் சிறிது இடத்தை மறைத்துக் கொண்டு (அந்த பகுதியை எக்ஸ்போஸ் செய்யாமல்) படமெடுப்பது. இரண்டாவது படத்தில் உள்ள மூன்றாவது பிலிம் இதற்க்கு உதாரணம். ஜேம்ஸ் கேமரூன் தனது டெர்மினேட்டர் 2 மற்றும் டைட்டானிக் ஆகிய படங்களை இம்முறையிலேயே படமாக்கினார். ஆனால் இது பலரால் உபயோகப் படுத்தப் படுவதில்லை.
நீங்கள் கூட தமிழ்நாட்டில் பார்த்திருக்கலாம். முதல் சினிமாஸ்கோப் படம் 1973 ல் இங்கு எடுக்கப்பட்டிருந்தாலும், அதற்க்கு முன்னரே நன்கு அகலமான திரையே பெரும்பாலான திரையரங்குகளில் பயன்படுத்தப் பட்டு வந்தது. 1962 ல் ஜி. உமாபதி அவர்கள் ஆனந்த் 70 எம் எம் திரையரங்கை சென்னையில் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அது போலவே அமெரிக்காவிலும் பெரும்பாலான திரையரங்குகளில் அகலத் திரை இருந்தது. (80களுக்குப் பின் வந்த மல்டிபிளெக்ஸ் கலாச்சாரத்தால் தான் குறைவான இருக்கை, சிறிய திரை அமைப்பு ஏற்படுத்தப் பட்டது). எனவே சினிமாஸ்கோப் நுட்பத்தை பயன்படுத்துவது எளிதாகிப் போனது. தேவை புதிய லென்ஸுகள் மட்டுமே.
இதனால் உற்சாகமடைந்த டுவெண்டியத் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம் இந்த நுட்பத்தை உபயோகப் படுத்த துவங்கியது. கூடுதல் கவர்ச்சியாக நான்கு டிராக் ஸ்டீரியோ சப்தத்தையும் இணைத்தது. அதற்க்கு முன்னால் இருந்த 35 எம் எம் பிலிம்களில் இரண்டு டிராக்குகள் மட்டுமே (இடது,வலது) இருந்தன. பின்னர் மூன்று டிராக்குகளை உபயோகிக்க ஆரம்பித்திருந்தனர். நான்கு டிராக்குகள் (இடம், வலம், மையம், சுற்றுப்புறம்) கொண்ட சப்தமானது பார்வையாளருக்கு நல்ல கேட்டல் இன்பத்தை கொடுக்கக்கூடியது. இதில் மைய டிராக் வசனத்திற்க்காக்வும், இடம்,வலம் ஆகியவை வாத்தியங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டது. சிறப்பு சப்தம் நான்காவது டிராக்குக்கு. இந்த டிராக்குகளை இரண்டாம் படத்தின் நான்காவது பிலிமில் பார்க்கலாம்.
எனவே புரஜெக்டரில் இந்த ஒலியை மீட்டெக்கும் உபகரணத்தையும், சுவர்களில் ஸ்பீக்கர்களையும் பொருத்தி விட்டால் சுலபமாக ஸ்டீரியோ சப்தத்தைக் கேட்கலாம். இதை பொருத்தாவிட்டாலும் பரவாயில்லை, சப்தம் ஒற்றை டிராக்கில் (மோனோ) திரைக்குப் பின்னால் உள்ள ஸ்பீக்கர்களின் வழியாக கேட்கும். தமிழ்நாட்டில் பெரும்பாலான தியேட்டர்களில் திரைக்குப் பின்னால் இருக்கும் ஒரே ஸ்பீக்கரில் இருந்து தான் சப்தம் கேட்கும். 1990க்குப் பின்தான் இது மாறிவருகிறது. இந்த நான்கு டிராக்குகளையும் பிலிமில் நான்கு காந்த நாடா வடிவில் ஒட்டி விடுவார்கள். (டப்பிங், இசைக்கோர்ப்பு முடிந்தபின்). அதனால் எளிதில் இசையானது ஸ்பீக்கர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும்.
இந்த தொழில்நுட்பம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் சில குறைபாடுகளும் இருந்தன. நாள்பட்ட உபயோகத்துக்குப் பின் காந்த நாடா சேதமுற்று தரம் குறைந்த ஒலியையே வழங்கியது. இதன் அடுத்த கட்டமாக வந்தவையே டால்பி ஸ்டிரீயோ, டிடிஎஸ் ஆகியவை.
டால்பி ஸ்டீரியோ
70களின் பிற்பகுதியில் இருந்து இவர்கள் இந்த நுட்பத்தை வழங்கி வந்தாலும், 90களின் ஆரம்பத்தில் பல முன்னேற்றங்களைக் கொண்டு வந்தார்கள். அமெரிக்காவில் பெரும்பாலான திரையரங்குகள் டால்பி எஸ் ஆர் முறை ஒலி வழங்கியையே கொண்டுள்ளன. இந்த முறையில் பிலிமில் உள்ள துவாரங்களுக்கு இடையே ஒலி சேமிக்கப்படுகிறது. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தன் படங்களுக்கு இன்னும் மேம்பட்ட ஒலி வேண்டுமென்பதற்க்காக பண உதவி செய்து உருவாக்கப் பட்ட தொழில் நுட்பமே டிஜிடல் தியேட்டர் சவுண்ட் எனப்படும் டிடிஎஸ்.
டிடிஎஸ்
இந்த முறைப்படி ஒலியானது பிலிமில் பதியப்படாது. தனி சிடியில் பதியப்படும். படம் திரையிடப்படும்போது, இந்த சிடியும் ஆன் செய்யப்படும். இந்தக் குறியீட்டிற்க்கு ஏற்ற ஒலியே தியேட்டரில் ஒலிபரப்பாகும்.
இப்போது ஒரு சந்தேகம் வரலாம். ஆப்பரேட்டர் சில காட்சிகளை வெட்டிவிட்டால் என்ன ஆகும்?. உதாரணமாக ஒரு பாடலை வெட்டிவிடுவதாக கொள்வோம். அடுத்து வரும் வசனக் காட்சிக்கு பாடல் பாடினால் ரசிகர்கள் தியேட்டர் சீட்டை கிழித்து விடுவார்களே? இந்தக் கவலையே வேண்டாம். பிலிமில் டைம்கோட் என்ப்படும் குறியீடு இருக்கும். இந்தக் குறியீட்டிற்க்கு ஏற்ற ஒலியே தியேட்டரில் சிடி மூலம் ஒலிபரப்பாகும் எந்தக் குழப்பமும் நேராமல் காட்சிக்கு தகுந்த வசனமே நமக்கு கேட்கும்.
சில திரையரங்குகளில் காலை ஒரு படம், மற்ற மூன்று காட்சிகள் வேறு படம் என திரையிடுவார்கள். (அந்த காலைக்காட்சி டிடிஎஸ் ஸில் இருக்காது, அது வேறு விஷயம்). காலைக்காட்சி பிரிண்டுக்கான சிடியை தவறுதலாக மாலைக்காட்சிக்கு உபயோகப் படுத்திவிட்டால்?. அந்தக் கவலையும் வேண்டாம். அதற்க்கும் பிரத்தியேக குறியீடு இருக்கும். எனவே காட்சிக்குத் தகுந்த வசனம் மட்டுமே ஒலிபரப்பாகும்.
இரண்டாம் படத்தில் முதல் பிலிம் ஊமைப் படத்துக்கானது. இரண்டாவது அனலாக் ஒலி அமைப்புடைய எடிசன் தயாரித்த பிலிம். ஐந்தாவது பிலிமில் எல்லா ஒலி அமைப்புகளும் எவ்வாறு இடம் பெறும் என மொத்தமாக காட்டப்பட்டுள்ளது. பிங் நிறத்தில் இருப்பது சோனி சரவுண்ட் சவுண்ட், துளைகளுக்கு இடையே இருப்பது டால்பி ஸ்டிரீயோ, கரும்பச்சை நிறத்தில் இருக்கும் இரண்டு கோடுகள் அனலாக் டிராக்குகள். விட்டு விட்டுத் தெரியும் கறுப்பு நிற கோடு டிடிஎஸ் டைம் கோட்.
தற்போது உபயோகிக்கும் முறையான 5.1 ல் இடம்,வலம்,மையம், இடது சுற்றுப்புறம், வலது சுற்றுப்புறம் என ஐந்து மெயின் டிராக்குகளும், குறைந்த அலைவரிசை ஒலியை தரும் (LEF – low frequency effect ) என்னும் டிராக்கும் இதுவெ .1 என்று குறிக்கப்படுகிறது. (மூன்று முதல் 200 ஹெர்ட்ஸ் வரையிலான ஒலி). இதில் மைய டிராக் பெரும்பாலும் வசனத்துக்கே பயன்படுகிறது. நம் கண்களைப் போலல்லாமல் (146 டிகிரி பார்வை), காதுகள் 360 டிகிரியிலும் கேட்கும் சக்தி உள்ளதால் நல்ல கேட்டல் அனுபவம் கிடைக்கும். அதனாலேயே தற்போது 7.1 வரை வந்துவிட்டது.
நாம் டிராக் மாறி வந்து விட்டோம் என நினைக்கிறேன்.
நம் நோக்கம் ஏன் தமிழ் சினிமாவுக்கு சினிமாஸ்கோப் நுட்பம் வர 20 ஆண்டு தாமதம் ஏன்? என்பது.
1950களின் பிற்பகுதியில் எம்ஜியார், சிவாஜி ஆகிய நாயகர்கள் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்தார்கள். ஸ்ரீதர் போன்ற இயக்குநர்கள் ரசமான படங்களை கொடுத்தார்கள். 70 களின் பிற்பகுதியில் பாரதிராஜா,மகேந்திரன், ரஜினி,கமல் என திரைத்துறை தொய்வில்லாமல் சென்றது. டிவியோ 90 வரை சிறப்பாக இல்லை.
அன்றைய கால கட்ட மக்கள் ஒரு ஸ்பீக்கருடன், 35 எம் எம் திரையுடன் திருப்தியடைந்து கொண்டனர். தியேட்டர் அதிபர்களும் புது நுட்பங்களை, உபகரணங்களை வாங்குவதில் தயக்கம் காட்டினர். மேலும் அன்றைய காலகட்டத்தில் கேமிரா போன்ற உபகரணங்களை சில கம்பெனியினர் மட்டுமே வாடகைக்கு கொடுத்து வந்தார்கள். அவர்கள் புது முதலீடுகளில் தயக்கம் காட்டினர். தற்போது எந்த தொழில்நுட்பம் வந்தாலும் உடனே இங்கு வந்துவிடுகிறது.
தமிழ் சினிமாக்கும் செண்டிமெண்டுக்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்தது. ராஜ ராஜ சோழன் வெற்றி பெற்றிருந்தால் பலர் சினிமாஸ்கோப்புக்கு தாவியிருப்பார்கள். தோல்வி அடைந்ததால் பலரும் தயக்கம் காட்டினர். இன்னொன்று பட்ஜெட். 50களின் நடுவிலேயே கலர் படம் வந்திருந்தாலும் 80 வரை கறுப்பு வெள்ளையிலும் பல படங்கள் வந்தன்.
90 வரை பெரும்பாலான படங்கள் 35 எம் எம் மிலேயே வந்தன. 92ல் கூட சின்னக் கவுண்டர் படம் 35 எம் எம்தான். பாலு மகேந்திரா சதிலீலாவதி, ராமன் அப்துல்லா என 35 எம் எம் படங்களையே எடுத்து வந்தார்.
சினிமாஸ்கோப் எல்லாப் படங்களுக்கும் உபயோகப்பட்டதில் மிகவும் சந்தோஷ மடைந்தது நடனக் குழுவினர்தான். இருவர் மட்டுமே திரையில் ஆடினால் நிறைய வெற்றிடம் இருக்கும். நன்கு நடிப்பு, நடனம் தெரிந்தவர்கள் என்றால் குளோசப், நல்ல நடன அசைவு என்று ஒப்பேற்றிவிடலாம். மற்றவர்களை தனியாக திரையில் காட்டமுடியுமா?. எனவே இந்தப் பக்கம் 20 பேர் அந்தப் பக்கம் 20 பேர் என ஆட விட்டனர். மேலும் பில்டப் காட்சிகளுக்கு அதிகமான வாகனங்கள், ஆட்கள் தேவைப்பட ஆரம்பித்தனர். கலை இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கு நல்ல தீனியும் கிடைத்தது. ஆனால் மொக்கைப் படங்களை சினிமாஸ்கோப்பில் பார்ப்பது கொடூரமானது.
அடுத்த பகுதியில் சினிராமா, ஐமேக்ஸ்.