March 17, 2009

துருவங்களின் திருப்புமுனை ஆண்டு – 1954

எம் ஜி ராமச்சந்திரன் தன்னுடைய 19 ஆவது வயதில் சிறு கதாபாத்திரத்தில் 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி படத்தின் மூலம் அறிமுகமானார். 11 ஆண்டுகால போராட்டத்துக்குப் பின் 1947ல் ராஜகுமாரி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனானார். அவர் அறிமுகமான காலகட்டத்தில் எம் கே தியாகராஜ பாகவதர், பி யு சின்னப்பா, டி ஆர் மகாலிங்கம் ஆகியோர் வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்தார்கள். அவர்களே தங்களுக்கான பாடல்களையும் பாடிக் கொள்வார்கள். அந்த பாடல்கள் எல்லாம் இன்றுவரை கேட்டாலும் சலிக்காத பாடல்கள். பாடத் தெரியாத ஒருவர் கதாநாயகனாக நடிப்பது ஆச்சரியமாக பார்க்கப் பட்ட நிலை. இந்நிலையில் அதைப் போராடி வெற்றிகண்டவர் எம் ஜி ராமச்சந்திரன். எம் எம் மாரியப்பன் என்பவர் பிண்ணனி பாட கதாநாயகனாக நடித்தார் எம் ஜி யார். இப்பொழுது நாயகர்கள் பாடுவது தலைப்பு செய்தியாகிறது.

ராஜகுமாரியைத் தொடர்ந்து மருத நாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மர்மயோகி (தமிழின் முதல் ஏ சர்டிபிகேட் படம்) ஆகிய படங்களில் நடித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். ஆனால் அதைத் தொடர்ந்து அவர் நடித்த சில படங்கள் (ஜெனோவா, என் தங்கை, நாம்) வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த ஆண்டில் அவர் நடித்த மலைக்கள்ளன் திரைப்படம் வெளி வந்து எம்ஜியாருக்கு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது. பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் ராபின் ஹூட் பாணியிலான கதாபாத்திரம் நல்ல இமேஜைக் கொடுத்தது. அதன்பின் 1977ஆம் ஆண்டு தமிழக முதல்வராகும் வரை திரையுலகில் அசைக்க முடியாத நட்சத்திரமாக விளங்கினார்.

சிவாஜி கணேசன் தன் 25 ஆம் வயதில் 1952ல் பராசக்தி மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 1953 ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையவில்லை சிவாஜிக்கு. ஆனால் 1954ல் வெளிவந்த மனோகரா, எதிர்பாரதது, அந்த நாள் ஆகிய திரைப்படங்களின் மூலம் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
எம் ஜி யார் அறிமுகமாகி 16 ஆண்டுகள் கழித்து அறிமுகமானாலும் இரண்டே வருடங்களில் அவருக்கு இணையான அந்தஸ்தை அடைந்தார்.

இருதுருவங்களுக்கும் திருப்புமுனை ஆண்டான 1954க்கு இன்னொரு விசேஷமும் உண்டு. இதே ஆண்டில்தான் பின்னாட்களில் தமிழ்சினிமா முன்னேற்றப் பாதையில் செல்ல முக்கிய பங்களிப்பை வழங்கிய கமல்ஹாசன் பிறந்தார். இனி இந்த ஆண்டின் முக்கிய திரைப்படங்களைப் பார்ப்போம்.

ரத்தக் கண்ணீர்

தமிழ்சினிமாவில் தனித்தன்மையுடன் விளங்கிய, நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இம்மாதிரி கலைஞன் தோன்றுவான் என வியக்கப்பட்ட எம் ஆர் ராதா நாயகனாக நடித்த படம். வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த நாயகன் நாகரீக மோகத்தில், தன் மனைவியை பத்தாம் பசலி என வெறுக்கிறான். விலைமகள் காந்தாவிடம் சரணடைகிறான். தொழு நோய் ஏற்படுகிறது. தன் மனைவியை நண்பனுக்கு மணம் முடித்து வைத்து விட்டு பிரிகிறான்.

திருவாரூர் தங்கராசு வசனம். நாத்திக கருத்துகள் பரவலாக படத்தின் வாயிலாக சொல்லப்பட்டன. இந்த படத்தில் எம் ஆர் ராதா பேசிய வசனங்கள் எல்லாமே பன்ச் டயலாக்குகள் தான். பின்னர் இந்தப் படத்தின் கதையை வாங்கி எம் ஆர் ராதா நாடகமாக நடித்தார். இது அவரின் பேரன் எம் ஆர் ஆர் வாசு விக்ரம் வரை தொடருகிறது. இதுவரை 3500 தடவைக்கு மேல் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமைக்குரியது இந்த நாடகம். எம் ஆர் ராதா இந்த நாடகத்துக்கான வசனங்களை அப்போதைய அரசியல், சமுதாய நிலைமைக்கேற்ப அப்டேட் செய்து பேசுவார். இம்ப்ரொவைசேஷன் அதிகம் இருக்கும். அதனால் பார்த்தவர்களே திரும்ப திரும்ப பார்ப்பர். அந்த அளவுக்கு கூரிய பார்வையும், அதை நகைச்சுவை ததும்பும் வசனமாக மாற்றக்கூடிய திறமையும் அவரிடம் இருந்தன.

நடிகர் விவேக் தன் படங்களில் உபயோகிப்பது எம் ஆர் ராதாவிடம் இருந்து பெறப்பட்ட நாத்திக, சமூக அகக்றையுள்ள கருத்துகளை நகைச்சுவையாக சொல்லும் பாணியையே. திருநெல்வேலி என்னும் படத்தில் விவேக் இதை முதன் முறை உபயோகித்தார். இதுவே அவரை பத்மஸ்ரீ வரை கொண்டு சென்றது.

அந்த நாள்

எஸ் பாலசந்தர் இயக்கத்தில், ஏவி எம் தயாரித்த படம். சிவாஜி எதிர் நாயகனாக நடித்த படம். தன் கண்டுபிடிப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை என்னும் கோபத்தில் இரண்டாம் உலகப் போரின் போது எதிரி நாட்டுக்கு துணைபோகிறான் விஞ்ஞானி. உண்மை தெரிந்த மனைவி பண்டரி பாய் அவனைக் கொன்று விடுகிறாள். அற்புதமான சஸ்பெண்ஸ் படமான இதில் பாடல்கள் இல்லை. அப்போது பாடல்கள் இல்லாமல் படம் வருவது மிக ஆச்சரியமான விஷயம். ரஷோமான் படத்தின் உத்தியும் இதில் உபயோகப் படுத்தப் பட்டிருக்கும். எஸ் பாலசந்தரின் திறமையான இயக்கமும், சிவாஜி கணேசனின் இமாலய நடிப்பும் படத்திற்க்கு வெற்றியைத் தேடித்தந்தது.

மலைக்கள்ளன்

நாமக்கல் கவிஞரின் கதைக்கு கருணாநிதி வசனம் எழுதி ஸ்ரீராமுலு நாயுடுவின் இயக்கத்தில் வெளிவந்த படம். எம்ஜியார்க்கு பெரிய திருப்புமுனையான இந்தப் படம் குடியரசுத் தலைவரின் சிறந்த மாநில மொழி திரைப்படத்துக்கான விருதைப் பெற்றது. பணம் படைத்தவர்களிடம் இருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவும் மலைக்கள்ளனாக எம்ஜியார், காதலியாக பானுமதி, மலைக்கள்ளனை பிடிக்க வரும் காவல்துறை அதிகாரியாக எம்ஜியாரின் அண்ணன் எம் ஜி சக்கரபாணி, அவருக்கு உதவியாக மாம்பல நாயுடு என்னும் ஏட்டு கேரக்டரில் டி எஸ் துரைராஜ் நடித்திருந்தனர்.

மனோகரா

இந்தப் படத்திற்க்கும் வசனம் கருணாநிதி. மன்னர் தன் மனைவி கண்ணாம்பாவை மறந்துவிட்டு டி ஆர் ராஜகுமாரி மேல் மையல் கொள்கிறார். அவரது மகனான மனோகரனுக்கு குழந்தை பிறந்தும் அவர் திருந்தவில்லை. அந்த குழந்தையையும் கொல்கிறார்கள் டி ஆர் ராஜகுமாரி கூட்டத்தார். வெகுண்டெழுந்த மனோகரனை தூணில் கட்டி வைக்கிறார்கள். பொறுத்தது போதும் பொங்கியெழு என அன்னை கண்ணாம்பா ஆணையிட தூணுடன் பிணைத்திருந்த சங்கிலியை உடைத்து பகைவர் கூட்டத்தை வேரறுக்கிறான் மனோகரன். மனோகரனாக சிவாஜி சொல்ல வேண்டுமா?.

டி ஆர் ராஜகுமாரியின் வேடப் பெயர் வசந்த சேனை. அது இன்னும் உபயோகத்தில் இருக்கிறது. வசந்த சேனை, வட்டமிடும் கழுகு, வாய் பிளந்து நிற்கும் ஓநாய் எனத் தொடங்கும் வசனம் புகழ் பெற்றது. இந்தப் படத்திற்க்கு முன், தான் வசனம் எழுதிய பராசக்தி படத்தின் வசனங்களை புத்தகமாக போடுமாறு தயாரிப்பாளர் ஏவிஎம்மிடம் கருணாநிதி கேட்டாராம். ஆனால் ள் வசூல் பாதிக்கும் என்று அதற்க்கு அவர்கள் செவிசாய்க்க வில்லை. வேறொருவர் பராசக்தி பட வசனங்களை தியேட்டரில் ஆட்கள் மூலம் கேட்கவைத்து அதை புத்தகமாக வெளியிட்டாராம். பட வசூலுக்கும் பாதிப்ப்பில்லை, புத்தக விற்பனைக்கும் குறைவில்லை. எனவே மனோகரா படத்திற்க்கு தயாரிப்பாளரிடம் சொல்லி தானே வசன புத்தகததை வெளியிட்டராம் கருணாநிதி.

தூக்குத் தூக்கி

சிவாஜி கணேசன், பத்மினி, பாலையா நடித்த படம். கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கொண்டுவந்தாள் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் தோழன் ஆகிய பழமொழிகள் ஒரு அரச குமாரன் வாழ்வில் எப்படி உண்மையாகின்றான என அருமையான திரைக்கதை மூலம் சொல்லியிருப்பார்கள். இந்தப் படத்தின் ரீரிலீஸின் போது அச்சிடப்பட்ட சுவரொட்டிகளில் இந்த பழமொழிகளை அச்சிட்டே விளம்பரப் படுத்தினார்கள். பாலையா இதில் வட நாட்டு சேட் வேடத்தில் நடித்திருப்பார். நம்பள் நிம்பள் போன்ற வசனங்களை முதன் முதலில் திரையில் ஒலிக்க விட்டார். இன்னும் அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தப் படத்தில் தான் டி எம் சௌந்தரராஜன் முதன் முதலில் சிவாஜிக்குப் பாடினார். அது மிகப் பொருத்தமாய் அமைந்துவிட இந்த இணை காலத்தால் அழிக்க முடியாத பல பாடல்களை தந்தது.


எதிர்பாராதது

இந்தப் படத்தின் கதையும் யாரும் எதிர்பாராததுதான். ஒரு இளைஞன் அழகு பெண்ணைக் காதலிக்கிறான். விதி வசத்தால் அவள் அவன் தந்தையின் மனைவியாகிறாள். ஸ்ரீதரின் கதையில் சி எச் நாராயண மூர்த்தி இயக்கத்தில் வெளியான படம். இளைஞனாக சிவாஜி கணேசனும், காதலியாக பத்மினியும், சிவாஜியின் தந்தையாக பழம்பெரும் குணசித்திர நடிகர் சித்தூர் நாகைய்யாவும் நடித்திருந்தனர்.

கல்யாணம் பண்ணியும் பிரம்மாச்சாரி

சிவாஜிகணேசன், டி ஆர் ராமசந்திரன், பத்மினி, ராகினி, சந்திரபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்த படம். இந்தப் படத்தின் இயக்குநர் ப. நீலகண்டன். இவர் பின்னாட்களில் எம் ஜியாரின் பல வெற்றிப்படங்களை இயக்கியவர். மிக திறமையான எடிட்டரும் கூட. இவர் உலக சினிமாக்களைப் பற்றி மூன்று தொகுதி கொண்ட புத்தகத்தையும் எழுதியவர். (இவரது முக்கிய படங்கள் பற்றி பின்னர் பார்ப்போம்).

காதல், கல்யாணம் அதன் பிரச்சினைகளை நகைச்சுவையாக விவாதித்த படம் இது. முழு நீள நகைச்சுவைப் படம் என்று சுவரொட்டிகளில் விளம்பரப் படுத்துவார்கள் இந்தப் படத்தை.
இந்தப் படத்தில் பி ஆர் பந்துலு வும் நடித்திருந்தார். பின்னாட்களில் இவர் வீர பாண்டிய கட்ட பொம்மன், கப்பலோட்டிய தமிழன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற மகத்தான படங்களை இயக்கினார்.

பெண்

1953 ஆம் ஆண்டு நாயகனாக நடிக்கத் துவங்கிய ஜெமினி கணேசனுக்கு இது இரண்டாவது படம். அஞ்சலி தேவி, வைஜெயந்தி மாலா, சித்தூர் வி நாகைய்யா ஆகியோரும் நடித்திருந்தனர். ஏ வி எம்மின் தயாரிப்பான இந்தப் படத்தை இயக்கி நாயகனின் நண்பனாகவும் நடித்திருந்தார் எஸ் பாலசந்தர். வீணை மேதையான இவர் வீணை பாலசந்தர் என்றே அழைக்கப் பட்டார். இதே ஆண்டு வெளியான இவரது அந்த நாள் படத்தில் பாடல்கள் இல்லை. ஆனால் இந்தப் படத்தில் ஆர் சுதர்சனம் இசையில் அருமையான பாடல்கள் இருந்தன. சந்திரபாபு பாடிய (இவர் இப்படத்தில் நடிக்கவில்லை) ”உல்லாசமாகவே உலகத்தில் வாழவே” என்னும் பாடல் அக்கால இளைஞர்களின் பேவரைட். படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

கூண்டுக்கிளி

இரு துருவங்கள் இணைந்த இந்தப் படம் பெரிய வெற்றி பெறவில்லை. எம்ஜியார் படமாகவும் இல்லாமல், சிவாஜி படமாகவும் இல்லாமல் போனது என்று சொல்வார்கள். நாயகியாக பி எஸ் சரோஜா நடித்திருந்தார். டி ஆர் ராமண்ணா இயக்கத்தில், கே வி மகாதேவன் இசையில் இந்தப் படம் வெளியானது.

இந்தப்படங்கள் தவிர என் டி ராமாராவ் நடித்த பணம் படுத்தும் பாடு, சிவாஜியின் இல்லற ஜோதி ஆகியவையும் வெளிவந்தன. இந்த ஆண்டு வெளியான 34 படங்களில் ஏழு படங்கள் நல்ல வெற்றியைப் பெற்று வரலாற்றில் நின்று விட்டன.

விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால் தற்போது 18படங்கள் நல்ல கதையமைப்புடன் வந்து வெற்றி பெறவேண்டும்.

36 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மீத ஃபர்ஸ்டு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இரு துருவங்கள் இணைந்த இந்தப் படம் பெரிய வெற்றி பெறவில்லை. எம்ஜியார் படமாகவும் இல்லாமல், சிவாஜி படமாகவும் இல்லாமல் போனது என்று சொல்வார்கள்.//


சிவாஜி வில்லன், எம்ஜியார் சைடு ரோல், வாலி டைப் ஸ்டோரி யார் பாஸ் ஜீரணிப்பாங்க. கடைசியில் சிவாஜிக்கு கண் வேற அவுட் ஆயிடும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நடிகர் விவேக் தன் படங்களில் உபயோகிப்பது எம் ஆர் ராதாவிடம் இருந்து பெறப்பட்ட நாத்திக, சமூக அகக்றையுள்ள கருத்துகளை நகைச்சுவையாக சொல்லும் பாணியையே. திருநெல்வேலி என்னும் படத்தில் விவேக் இதை முதன் முறை உபயோகித்தார். இதுவே அவரை பத்மஸ்ரீ வரை கொண்டு சென்றது.//


???????????

T.V.ராதாகிருஷ்ணன் said...

nalla padhivu murali

முரளிகண்ணன் said...

சுரேஷ்

விவேக்குக்கு கொடுப்பதற்க்கு சொல்லப்பட்ட காரணங்களில் முக்கியமானது அதுதான்.

உடனே எதிர்க் கேள்வி வரலாம்.

நகலுக்கே கொடுக்கும் போது? அசலுக்கு?

விடை தெரியா வினாக்கள்.

டி வி ஆர் சார் வருகைக்கு நன்றி

மாதவராஜ் said...

அருமையாகத் தொகுத்து இருக்கிறீர்கள்.

எம்.ஆர்.ராதா அவரது சினிமாக்களில் விமர்சனம் செய்ததெல்லாம் முக்கியமாக பெரும் தெய்வங்களைத்தான். விவேக் கிண்டல் செய்வதோ சிறுதெய்வங்களை. இரண்டிற்கும் பெரும் வித்தியாசங்கள் இருப்பதாக நினைக்கிறேன்.

அப்புறம் என் பதிவில் தவறாக தங்கள் பெயரைக் குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்.

முரளிகண்ணன் said...

மாதவராஜ் சார்

நீங்கள் குறிப்பிட்டுள்ளது முக்கியமான கருத்து.

சிறு தெய்வங்களை கிண்டல் செய்யும் விவேக் சிவன், விநாயகர், முருகன், விஷ்ணு ஆகிய தெய்வங்களை நேரடியாக கிண்டல் செய்வதில்லை.

எதிர்ப்பில்லாமல் இருக்க இப்படி செய்கிறாரா?

இல்லை

ஆதிக்க மனப்பான்மையா?

என தெரியவில்லை.


விவேக் தீவிர ஆத்திகர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துப் பகிர்தலுக்கு நன்றிகள்.


\\அப்புறம் என் பதிவில் தவறாக தங்கள் பெயரைக் குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும்.\\

சார், மிகப்பெரிய வார்த்தைகள் நமக்குள் வேண்டாமே.

Blogger said...

இந்த பதிவுகளை தொகுத்து புத்தகமாக போடலாமே? நான் மிகவும் விரும்பி பதிவுகள் இவை. அடுத்ததை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

narsim said...

முரளி.. மிக அரிய விவரங்கள்.. அதை சொன்ன விதம் இன்னும் அழகு.. அந்த நாள் மலைக்கள்ளன் எல்லாம் மறக்க முடியாத படங்கள்

நீங்கள் கூறியது போல் பாடத்தெரியாத ஒருவர் ஹீரோவாக வந்தது எவ்வளவு சோதனைகளைத் தாண்டி வந்திருக்கக்கூடும்..

தொடருங்கள் தங்கள் விபரவளத்தை..

முரளிகண்ணன் said...

பிளாக்கர் நன்றி. முயற்சிக்கிறேன்.

நர்சிம் வருகைகும் ஊக்கத்திற்க்கும் நன்றி

முரளிகண்ணன் said...

நண்பர்களே

தூக்குத் தூக்கி படத்தை முதலில் மறந்து விட்டேன். இப்போது இணைத்துள்ளேன்.

நன்றி

கார்க்கிபவா said...

யப்பா............

முரளிகண்ணன் said...

கார்கி நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

வழக்கம் போல் அருமையான பதிவு முரளி.. இதில் நான் ஐந்து படங்கள் பார்த்து இருக்கிறேன்.. குறிப்பாக மலைக்கள்ளனும் தூக்கு தூக்கும் எனக்கு மிகவும் பிடித்தவை..

anujanya said...

அப்பா ! அரிய தகவல்கள். நிச்சயமாக ஒரு புத்தகம் போட வேண்டும். உங்க புத்தகம், நரசிம் புத்தகம், பரிசல் புத்தகம் எல்லாம் வேலன் அண்ணாச்சியே பப்ளிஷ் செய்யப் போகிறாராம். இலவச இணைப்பாக ஒரு கவிதைத் தொகுதியுமாம் ...:)

அனுஜன்யா

முரளிகண்ணன் said...

கார்த்திகைப் பாண்டியன், வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.


அனுஜன்யா வருகைக்கு நன்றி. அந்தக் கவிதைத் தொகுதிக்கு நான் முன்பதிவு செய்கிறேன்.

கே.என்.சிவராமன் said...

பதிவை பார்க்கறப்ப சந்தோஷமா இருக்கு முரளி... தொடர்ந்து எழுதுங்க..

அப்புறம் சின்னதா மேல் விபரங்கள்.

'பராசக்தி' படத்த தயாரிச்ச வேலூர் நேஷனல் தியேட்டர் அதிபரான பெருமாள் முதலியார்தான் 'ரத்தக்கண்ணீர்' படத்தையும் தயாரிச்சாரு. இந்தப்படம் மாபெரும் வெற்றிப்படமா அமைஞ்சும் அண்ணன் எம்.ஆர். ராதாவுக்கு வேற படங்கள் எதுவும் கமிட்டாகலை. அதனால பெருமாள் முதலியாருக்கு தான் வித்த 'ரத்தக்கண்ணீர்' ஸ்கிரிப்டை, வித்ததை விட அதிக விலை கொடுத்து திரும்பவும் வாங்கி நாடகமா போட ஆரம்பிச்சாரு.

மூணு அல்லது நான்கு வருஷங்கள் கழிச்சுதான் திரும்பவும் படங்கள் அவருக்கு கமிட்டாச்சு.

சின்ன வேண்டுகோள் முரளி. முடிஞ்சா 'ராஜகுமாரி' படத்தை பத்தி தனியா ஒரு பதிவு எழுதுங்க. ஏன்னா, 1947ம் வருஷம் இந்தியா சுதந்திரம் வாங்கின வருஷம் மட்டுமில்ல. எம்.ஜி.ஆர். முதன்முறையா கதாநாயகனா நடிச்ச 'ராஜகுமாரி' வெளிவந்த வருஷமும் அதுவேதான். ஏப்ரல் மாசம் ரிலிஸாச்சு.

தமிழ் சினிமா வரலாற்றுல இந்தப் படம் முக்கியமானது. ஏன்னா, கலைஞர் முதல்முறையா சினிமாவுக்கு வசனம் எழுதின படமும் இதுதான். அப்ப அவரு பெரியார் அச்சகத்துல ('குடியரசு'னு நினைக்கறேன்) வேலை பார்த்துட்டு இருந்தாரு. பெரியார் அனுமதியோட சினிமாவுக்கு வந்தாரு. ஆனா, டைட்டில் கார்டுல 'வசன உதவி'னுதான் அவர் பேரு வந்தது. அதேமாதிரி எம்.ஜி.ராமச்சந்தர்னு எம்.ஜி.ஆர். பேரு வந்தது.

இயக்குநரா ஏ.எஸ்.ஏ. சாமிக்கும் இதுதான் முதல் படம். எல்லாரும், உன் முதல் படத்துக்கு ஹீரோவா டி.ஆர். ராமச்சந்திரனை போடுனு சொன்னப்ப, பிடிவாதமா எம்.ஜி.ஆர்.தான் ஹீரோ. இல்லைனா நான் படமே இயக்கலைனு சொன்னாரு.

இந்த 'ராஜகுமாரி'ல இன்னொரு சிறப்பும் இருக்கு. அதிகம் கவனிக்கப்படாத ஒரு சாதாரண ஸ்டண்ட் மேனை எம்.ஜி.ஆர்., ஏ.எஸ்.ஏ. சாமிகிட்ட கூட்டிட்டு போனாரு. 'இவரு ரொம்ப நல்ல ஸ்டண்ட் மேன். இவரை இந்தப் படத்துல ஸ்டண்ட் மாஸ்டரா அறிமுகப்படுத்தலாம்' அப்படீன்னு சொன்னாரு. சாமியும் ஓகே சொன்னாரு. அப்படி ஸ்டண்ட்மேனா பதவி உயர்வு பெற்றது யாரு தெரியுமா? சாண்டோ சின்னப்ப தேவர்.

அந்த நட்பு + நன்றிக்கு அடையாளமாதான் தேவர் 16 படங்களை பின்னாடி எம்.ஜி.ஆரை வச்சு தயாரிச்சாரு. எம்.ஜி.ஆரை வச்சு அதிகம் படங்களை எடுத்தவரு என்ற பெருமையும் தேவருக்கு மட்டுமே உண்டு. மட்டுமில்ல சிவாஜிய வச்சு ஒரு படமும் எடுக்கலை. மட்டுமில்ல மத்த நடிகர்களை வச்சு தேவர் தயாரிச்ச படங்களை 'தண்டாயுதபாணி' பேனர்ல கூட எடுத்தாரு. ஆனா, எம்.ஜி.ஆர். நடிப்புல இவர் தயாரிச்ச படங்கள் பூரா 'தேவர் பிலிம்ஸ்' பேனர் மட்டும்தான்.

தமிழ் சினிமா வரலாற்றுல 'ராஜகுமாரி' முக்கியமான படம்னு நினைக்கறேன் முரளி.

அப்புறம், 'அந்தநாள்' படம் முழுக்க முழுக்க 'ரஷோமான்' பாதிப்புதான். ஏ.வி. மெய்யப்பன் ஜப்பான் போயிருந்தப்ப இந்தப் படத்தை பார்த்தாரு. உத்தி பிடிச்சுப் போச்சு. உடனே தமிழ்நாட்டுக்கு வந்ததும் 'அந்தநாள்' எடுத்தாரு.

ரொம்ப பேசிட்டேன்னு நினைக்கறேன். கோசுக்காத முரளி. வர வர மத்தவங்க வீட்ல போய் ரொம்ப சத்தமா பேசிட்டு இருக்கேன். ஆனா, என் வீட்டுப் பக்கம் போன ஜூலை மாசம் போனதோட சரி. ம்... ஆபீஸ்ல பிளாகரை மூடிட்டாங்க. என்ன செய்ய?

தொடர்ந்து எழுதுப்பா..

தோழமையுடன்
பைத்தியக்காரன்

முரளிகண்ணன் said...

\\ரொம்ப பேசிட்டேன்னு நினைக்கறேன்\\

சார்,

நீங்க எவ்வளவு பேசினாலும் எங்களுக்கு அலுக்காது சார்.

\\முடிஞ்சா 'ராஜகுமாரி' படத்தை பத்தி தனியா ஒரு பதிவு எழுதுங்க.\\

நிச்சயம் எழுதுகிறேன் சார்.

Cable சங்கர் said...

சிறப்பான தொகுப்பு, முரளி.. முதல் A சர்டிபிகேட் படம் போன்ற தகவல்கள் அருமை.. வாழ்த்துக்கள்..

ராஜ நடராஜன் said...

நீங்க என்ன விருந்துக்கு வர்றேன்னு சொல்லிட்டு இங்கே "பழங்கதை" பேசிகிட்டு இருக்கீங்க:)

முரளிகண்ணன் said...

நன்றி கேபிள் சங்கர்

ராஜ நடராஜன் said...

//இப்பொழுது நாயகர்கள் பாடுவது தலைப்பு செய்தியாகிறது.//

அது வேற ஒண்ணுமில்லீங்க!பாடிகிட்டு ஆடுவதென்பது கடினமென்று ஒரு தொலைக்காட்சியில் பார்த்தேன்.பாடி,ஆடி,சண்டை போட்டுன்னு தெம்பு வேணாமுங்க.பாடா ட்டியும் பரவாயில்லை நீ பேசக்கூட வேண்டாமுன்னு பாரதிராஜா டப்பிங் கலாச்சாரம் கொண்டு வந்துட்டார்:)

முரளிகண்ணன் said...

வாங்க ராஜ நடராஜன். விருந்துதான் பழங்கஞ்சி ஆயிரக் கூடாது.

இந்த விஷயங்கள் பழசா இருந்தாலும் சுவையா இருக்குதானே?

ராஜ நடராஜன் said...

//ஆனால் இந்த ஆண்டில் அவர் நடித்த மலைக்கள்ளன் திரைப்படம் வெளி வந்து எம்ஜியாருக்கு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்தது.//

இந்தப் படம் வால்பாறைக்கும் ஆழியாருக்கும் இடையில் உள்ள மலைப்பகுதியில் எடுத்ததாக கேள்வி.கோவை பட்சிராஜா ஸ்டுடியோதான் அப்போதைய கோடம்பாக்கமுன்னும் கேள்வி.

சரி நான் சொல்லவந்தது என்னன்னா இந்த வால்பாறை ஆழியாருக்கும் இடைப்பட்ட மலைப்பகுதியில் ஸ்விஸ் நாட்டுல இருக்குற மாதிரி ropeway அமைச்சு அந்தப் பகுதிய உல்லாச நகரமா மாற்றியிருக்கலாம்.வெள்ளைக்காரன் தேயிலை தோட்டங்களில் தூரமாக இருக்கும் ஒரு இடத்துலருந்து தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இப்படித்தான் தேயிலை நகர்த்தியதா கேள்வி.

ராஜ நடராஜன் said...

//எம் ஜி யார் அறிமுகமாகி 16 ஆண்டுகள் கழித்து அறிமுகமானாலும் இரண்டே வருடங்களில் அவருக்கு இணையான அந்தஸ்தை அடைந்தார்.//

அப்ப சிரமப்பட்டு முன்னுக்கு வந்தவர் எம்.ஜி.ஆர்ன்னு சொல்லுங்க.இருந்தாலும் நடிப்பழகன் சிவாஜிதானுங்க.

ராஜ நடராஜன் said...

//வசந்த சேனை, வட்டமிடும் கழுகு, வாய் பிளந்து நிற்கும் ஓநாய் எனத் தொடங்கும் வசனம் புகழ் பெற்றது.//

இப்படியெல்லாம் வசனம் எழுத எப்படி முடிந்ததுன்னு இப்பத்தானுங்க தெரியுது.

ராஜ நடராஜன் said...

பல தெரியாத விபரங்கள் கொண்ட நல்ல பதிவு.யாருங்க சொன்னது நீண்ட பதிவு,பைத்தியக்காரன் பின்னூட்டம் மாதிரி நீளமா போட்டா யாரும் படிக்க மாட்டாங்கன்னு.சொல்ற விசயத்தைப் பொறுத்து இருக்குது இல்லிங்கலாண்ணா உண்மைத்தமிழன்:)

(வந்ததுக்கு ஏதோ நம்மாலான பொடி)

முரளிகண்ணன் said...

ராஜ நடராஜன் தங்களின் விரிவான தகவல்களுக்கு நன்றி.

கோவை பட்ஷிராஜா, சேலம் மார்டன் தியேட்டர்ஸ், காரைக்குடி/தேவகோட்டையில் ஏவிஎம் என பல இடங்களில் அப்போது தயாரிப்புத் தளங்கள் இருந்தன.

சின்னப் பையன் said...

எக்கச்சக்க சூப்பர் படங்கள் வந்த வருடம் போலிருக்கே.... அருமை

முரளிகண்ணன் said...

வாங்க சின்னப்பையன். அப்போ எடுத்த மாதிரி கூட இப்போ துணிச்சலா யாரும் எடுக்க மாட்டேங்கிறாங்க

RV said...

முரளி அவர்களே,

1950-இலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு வருஷத்தையும் பற்றி சுருக்கமாகவும் ஒவ்வொரு வருஷத்துக்கும் ஒரு படத்தை தேர்ந்தெடுத்து அதை பற்றி விவரமான விமர்சனமும் எங்கள் அவார்டா கொடுக்கறாங்க ப்ளாகில் எழுதலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். இது வரை 50-க்கு மந்திரி குமாரி, 51-க்கு ஓரிரவு, 52-க்கு பராசக்தி பற்றி எழுதி விட்டேன். 53-க்கு திரும்பி பாறை தேர்ந்தெடுத்திருக்கிறேன். இந்த வருஷங்களை பற்றியோ, திரும்பிப் பார் பற்றியோ உங்கள் inputs ஏதாவாது உண்டா? அதையும் சுட்ட முடிந்தால் மகிழ்ச்சி அடைவேன். 54-க்கு அருமையான சுட்டி இங்கே கிடைத்திருக்கிறது.

53 பற்றிய பதிவு இங்கே.
http://awardakodukkaranga.wordpress.com/2009/03/21/1953-இல்-தமிழ்-சினிமா/

இந்த சீரிஸ் பற்றிய பக்கம் இங்கே.
http://awardakodukkaranga.wordpress.com/1950-இலிருந்து/

ராபின் ஹூட் said...

Hi,
Pls write a post on tamil child artists.

வல்லிசிம்ஹன் said...

மிக அருமையான பதிவு.

கமலஹாசன் 1956 என்று நினைத்தேன்...
இந்தத் தகவல்கள் மிக சுவாரஸ்யமானவை.
புத்தக வடிவில் வந்தால் வாங்கிப் படிப்பதற்கு சுலபமாக இருக்கும்

முரளிகண்ணன் said...

ஆர் வி தங்கள் வருகைக்கு நன்றி. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். என்னிடம் இருக்கும் அந்த கால படங்கள் பற்றிய தகவல்களை உங்களிடம் நான் பகிர்ந்து கொள்கிறேன்.

முரளிகண்ணன் said...

ராபின் ஹூட் மற்றும் வல்லி சிம்ஹன் வருகைக்கு நன்றி

RV said...

Murali,

aavaludan kaatthirukkiRen!